ATM Tamil Romantic Novels

காதல் பறவைகள்… !! – பாகம் 1: “உனக்காக நான்…!!” – 37

உனக்காக நான்…!! – அத்தியாயம் 37
-சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

குணமும் உண்டு
கோவமும் உண்டு

காதலுடன் சொன்னால்
கேட்டுக்கொள்ளும்
மனமும் உண்டு

காதல் எனும்
மாயக்கோல்
வைத்து

உன் கோபத்தை
மாற்றும்
வித்தை

இந்த
காரிகை
அறிவாளடா…!!

கொல்லும் கோவம்
விடுத்து
கண்களை

அள்ளும்
அன்புக்காதல்
கொள்வாயடா…!!

காதலால் கோவத்தை
வென்று
காவியமாய்
வாழ்வோமடா..!!

காலமெல்லாம் உன்னை
காக்கும் என்
கடைக்கண்ணின்
காதல் பார்வை…!!

#################

காதல் பார்வை…!!

ஆனந்தும் லேகாவும் கொடைக்கானல் வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன… இன்று அவன் தன் காரில் ஒரு வாடிக்கையாளரை படகு சவாரிக்கு கூட்டிச் செல்ல வேண்டியதாய் இருந்தது… காலையிலேயே அலுவலகம் சென்று வருகைப் பதிவு செய்துவிட்டு வாடிக்கையாளரின் விடுதி அறைக்கு சென்று அவர்களை படகு சவாரிக்கு அழைத்துக்கொண்டு சென்றான் அவன்…

அவர்களிடம் படகு சவாரி முடிந்து திரும்பிய பிறகு தன் கைப்பேசி எண்ணுக்கு அழைக்க சொல்லிவிட்டு அவர்களை அங்கே இறக்கிவிட்டு அவன் கார்களை நிறுத்துமிடம் சென்று வண்டியை நிறுத்தலாம் என்று நினைத்து அங்கு வண்டியை ஓட்டிச் சென்றான்…

ஆனால் அங்கு உள்ளே நுழையும்போதே அவனுக்கு அப்படியொரு அதிர்ச்சி காத்திருக்கும் என்று அவன் நினைக்கவில்லை… ஒரு பெண்ணை ஒருவன் அறைந்து கீழே தள்ளி இருந்தான்… அவனுக்கு அப்படியே கோவத்தில் அவனை கொன்று போட்டுவிட வேண்டும் என்று தோன்றியது…

ஒரு பெண்ணிடம் இவ்வளவு மோசமாக நடந்து கொள்பவன் மனிதனாகவே இருக்கமுடியாது… அரக்கனாக தான் இருக்க வேண்டும்… வந்த கோவத்தில் அப்படியே காரை நிறுத்திவிட்டு நேரே அவர்கள் இருந்த பக்கம் சென்றான்…

அதற்குள் அவன் அந்தப் பெண்ணை எழுப்பி இழுத்துச் செல்ல முனைந்தான்… அந்தப் பெண்ணின் முகத்தை அப்போது தான் பார்த்தான்… ஒரு நொடி அப்படியே ஆடிப்போனான் ஆனந்த்…

லேகாவின் தோழி திவ்யா….!! இவள் எங்கே இங்கே வந்தாள்? அதற்குமேல் யோசித்து கொண்டு நின்றிருந்தால் திவ்யாவை அந்த அரக்கன் இன்னும் என்னவெல்லாம் செய்திடுவானோ என்ற அச்சத்தில் நடையில் வேகம் கூட்டி நேரே சென்று அந்த கயவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்…

அவன் வலியில் அலறி திமிறுவதற்குள் அவனுடைய கன்னத்தில் இன்னும் ஒரு அடியை இடியாய் இறக்கினான்..

“ஏய்..!! என்னடா ஒருத்தன் என்னை அடிச்சிட்டே இருக்கான்… பார்த்துட்டே இருக்கீங்க..?” என்று அவனுடைய ஆட்களை கத்தி கூப்பிட்டான் அந்த ரௌடி…

அதற்குள் அங்கு மக்கள் கூட்டம் கூடத் தொடங்கவே அவனுடைய கூட்டாளி “டேய்.. மச்சான்.. ஜனங்க சேர்ந்துட்டாங்கடா.. இவங்களை அப்பறம் கவனிச்சிக்கலாம்… வாடா இங்கருந்து போயிடலாம்..” என்றான்.

அடி வாங்கிய ஆள் அவர்களை முறைத்துக் கொண்டே அவன் சட்டையை இறுக்கி பிடித்து கொண்டிருந்த ஆனந்தின் கைகளிலிருந்து திமிறி அவர்களுடைய வண்டியை நோக்கி ஓடினான்… ஆனந்த் அவன் பின்னே சென்று ஓடி பிடிப்பதற்குள் அவன் காரில் ஏறி தப்பித்துவிட்டு இருந்தான்…

ஆனந்த் திவ்யாவை நோக்கி திரும்பி, “உங்க வாயில இப்படி அடிப்பட்டிருக்கே.. கீழே விழுந்ததுல கையில கூட சின்ன சின்னதா அடிப்பட்டிருக்கு.. ஹாஸ்பிடல் போலாம் வாங்க திவ்யா சிஸ்டர்” என்றான்…

“நீங்க இந்த அடியை பத்தி கவலைப்படறீங்க… இந்த அடி மருந்து போட்டா ஆறிடும் ரெண்டு நாள்ல… ஆனா நீங்க நித்யாவுக்கு கொடுத்து இருக்கீங்களே ஒரு அடி மனசளவுல… அது காலம் முழுக்க ஆறாது.. ஒரு பொண்ணை நம்ப வெச்சு அவளுக்கு உங்க மேல ஆசையை வளர்த்து அதுக்கப்புறம் அவளை ஏமாத்தறதுங்கறதை விட பெரிய கொடூரம் வேறு எதுவுமே இருக்க முடியாது… இப்ப என்னை அடிச்சுட்டு கீழே தள்ளிட்டு போறாங்களே இவங்களாவது குடிச்சு இருந்தாங்க… அவங்க என்ன பண்றாங்கனு அவங்களுக்கே தெரியல… அதனால அவங்கள கூட மன்னிச்சுடலாம். ஆனா நீங்க பண்ண தப்பு இருக்கே… நல்லா தெளிவா சுயநினைவோட ஒரு பொண்ணை ஏமாத்தி இருக்கீங்க.. என்கிட்ட பொய் சொல்லி என்னையும் அந்த தப்புக்கு உடந்தையாக்கி இருக்கீங்க… ஒவ்வொரு நாளும் உங்களோட இந்த தப்புல எனக்கே தெரியாம பங்கெடுத்துக்கிட்டதுக்காக நான் என்ன வேதனை அனுபவிச்சுட்டு இருக்கேன்னு எனக்குதான் தெரியும்.. அர்ஜுன் ஒரு நல்ல மனுஷனா இருக்கவே என்னைன புரிஞ்சுகிட்டாரு. ஒருவேளை அவர் ஒரு கொடுமைக்காரரா இருந்திருந்தா என் நிலைமை என்னன்னு யோசிச்சு பாத்தீங்களா? இவ்வளவு பெரிய கொடுமை நடக்க காரணமா இருந்துட்டு, பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப இந்த சின்ன அடிக்காக வருத்தப்படுறீங்க வந்து… என்னை பாத்துக்க அர்ஜுன் இருக்காரு.. நீங்க போய் உருப்படியா வேற ஏதாவது வேலை இருந்தா பாருங்க.. இன்னொரு முறை இந்த மாதிரி யாருக்கும் துரோகம் பண்ணாதீங்க”, என்று பொரிந்து தள்ளினாள்…

“ஐயோ.. திவ்யா சிஸ்டர்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க..” என்று அவன் ஆரம்பிக்கும்போதே அவள் முகம் சிறிது மாறியது… அவள் பார்க்கும் திசையை நோக்கி அவனும் பார்த்தான்… வெகுதூரத்தில் அர்ஜுன் நின்று கொண்டிருந்தான் அவர்களை முறைத்துக்கொண்டு…

அர்ஜுனை பார்த்தவுடன் திவ்யா வேகமாக ஆனந்தை பார்த்து,”ஆனந்த்… என் ஃப்ரெண்ட் லேகாவை நீங்க கல்யாணம் பண்ணி இருக்கீங்க… அவ குழந்தைக்கு நீங்க அப்பா.. உங்களுக்கு எதுவும் ஆகாம அவளுக்காக காப்பாத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கு… அதனால தயவு செஞ்சு சொல்றேன். உடனே இங்கிருந்து போயிருங்க… அர்ஜுன் உங்க மேல ரொம்ப கோவத்துல இருக்காரு… நீங்க அவர் கைல மாட்டினீங்கன்னா அவர் உங்களை என்ன செய்வார்னு அவருக்கே தெரியாது… தயவு செஞ்சு இங்கிருந்து போயிடுங்க.. சீக்கிரம் போங்க..” என்று அவனைப் பிடித்து தள்ளாத குறையாக விரட்டினாள்…

அர்ஜுன் அப்படியே தான் வாங்கி வந்திருந்த பஞ்சுமிட்டாயை கீழே போட்டுவிட்டு அவர்கள் பக்கம் கோவமாக ஓடி வர ஆரம்பித்தான்… ஆனந்த் அவன் காரில் ஏறி வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியே போய்விட்டான்.. காரை துரத்திக்கொண்டு அர்ஜுன் சிறிது தூரம் பின்னாடியே சென்றான்… பிறகு திரும்பி திவ்யாவை நோக்கிக் கோபத்துடன் வந்தான்…

“இப்போ எதுக்கு அவனை தப்பிக்கவிட்ட.. ஏற்கனவே ஒருவாட்டி அவன் ஹாஸ்பிடல்ல என்னை பார்த்துட்டு ஓடுனான்.. இப்ப எனக்கு இருந்த கோபத்துல அவனை ஒரு வழி பண்ணியிருப்பேன்.. அவன் செஞ்சதுக்கெல்லாம் பதில் வாங்கிருப்பேன்.. நீ எதுக்கு அவனை காப்பாத்தி விட்டே? அவன் நித்யாக்கு என்ன என்ன செஞ்சான்? உனக்கு அவனால எவ்வளவு கஷ்டம் வந்தது? எல்லாம் உனக்கு மறந்து போச்சா?” என்று சரமாரியாக அவளை கேள்வி கேட்டான்…

“அர்ஜுன்.. இப்ப நீங்க அவர் மேல கோவப்படுறதனால நித்யாவோட வாழ்க்கை சரி ஆயிடுமா? நான் சொல்றதை கேளுங்க.. உங்க கோபத்தை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க.. அவர் ஏதோ காதல் மோகத்துல தப்பு பண்ணிட்டாரு.. இப்ப நம்ம நித்யா வாழ்க்கையை சரி பண்ண பார்க்கணுமே தவிர நடந்த பிரச்சனையை மேல மேல பெரிசாக்கி நம்ம வாழ்க்கைய இன்னும் சிரமமாக்கிக்க கூடாது”

அவனை சமாதான படுத்த முயன்று கொண்டு இருந்தாள் அவள்..

“நீ என்ன சொன்னாலும் சரி… இப்ப நீ அவனை தப்பிக்க வச்சதை என்னால மன்னிக்கவே முடியாது.. என் தங்கைக்கு அவன் செஞ்ச பாவத்துக்கு என்னிக்கு இருந்தாலும் நான் பதில் வாங்காம விட மாட்டேன்.‌. இப்ப அவன் போனா போகட்டும்.. அவன் வண்டியில அக்ஷயா ட்ராவல்ஸ்னு பேர் இருந்தது… இப்பவே அந்த கார் கம்பெனிக்கு போயிட்டு அவனோட அட்ரஸ் வாங்கி அவனை உண்டு இல்லன்னு பண்ணல.. என் பேரு அர்ஜுன் இல்ல” என்று கருவினான்…

“அர்ஜுன்.. நீங்க என்ன இவ்வளவு மனுஷ தன்மையே இல்லாம பேசுறீங்க.. உங்களுக்கு தெரியும் இல்ல.‌. ஆனந்தோட வைஃப் லேகா என் ஃப்ரெண்ட்.. இப்ப ப்ரெக்னெண்டா இருக்கா… அவங்களுக்கு குழந்தை பிறக்கபோகுது… உங்களால ஆனந்துக்கு ஏதாவது ஆச்சுன்னா நாளைக்கு அந்த குழந்தை வந்து கேக்குற கேள்விக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்க..? ஒரு துரோகம் இல்ல ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு தான் பதிலா? கொஞ்சம் மனசாட்சியோட யோசிச்சு பாருங்க… .நீங்க ஆனந்தை மன்னிக்கனும்னு நான் சொல்லல.. அதேசமயம் அவரை பார்க்காம இக்னோர் பண்ணிட்டு போலாமே.. அவரை நீங்க கஷ்டப்படுத்தறதுனால நித்யா சந்தோஷப்படுவான்னு நினைக்கிறீங்களா? இதனால நமக்கு என்ன கிடைக்கப் போகுது?”

அர்ஜுன் பேசாமல் கையை இறுக்கி கொஞ்சமும் கோவம் குறையாமல் நின்றுகொண்டிருந்தான்… திவ்யா அவன் முகத்தை தன் கையில் ஏந்தி,” அர்ஜுன்.. என்னை பாருங்க..” என்று தன்னை பார்க்க வைத்தாள்…

அவள் முகத்தை பார்த்ததும்,” ஐயோ.. திவ்யா..!! இது என்ன.?! உன் வாயில ரத்தம் வருது.. எப்படி அடிபட்டுது உனக்கு?” என்றான் மிகுந்த பதட்டத்துடன்.

“ஆமா.. உங்களுக்கு இருந்த கோவத்தில எனக்கு அடிபட்டதை கூட கவனிக்கல இல்ல? உங்க கோவம் எனக்கு அடிபட்டதை கூட கவனிக்கமுடியாதபடி கண்ண மறைச்சிடுச்சு..”

அவள் சிணுங்கியபடி சொல்ல. “சாரி திவ்யா…. எப்படி அடிபட்டிச்சு? என்ன நடந்தது சொல்லு..?” என்றான்.

நடந்தவை அனைத்தும் அவனிடம் சொன்னாள் திவ்யா…

“யார் அந்த ரவுடிங்க ? என் கையில் சிக்காம போய்ட்டானுங்க.. மாட்டியிருந்தாங்கன்னா உன் மேல கை வெச்சதுக்கு அவங்களை உண்டு இல்லனு பண்ணி இருப்பேன்… ஆமா அவங்களை உனக்கு அடையாளம் தெரியுமா?” என்று கேட்டான்.

“ஏன் ஆனந்தை அடிக்கிறதுக்கு அவரோட பின்னாடி அலையறது போறாதுன்னு அந்த ரவுடிகளை தேடி அவங்க பின்னாடியும் அலையப் போறீங்களா? ஏன் அர்ஜுன் இப்படி எல்லாரையும் அடிக்கிறதுக்கு துடிச்சுகிட்டு இருக்கீங்க?”

“இல்ல திவ்யா..போலீஸ்ல கையோட ஒரு கம்ப்ளெயின்ட் கொடுத்துட்டா அவங்க பாத்துப்பாங்க.. அதுக்குத்தான் கேட்டேன்” என்றான்.

“அப்படின்னா சரி.. எனக்கு அவங்கள மறுபடியும் பார்த்தா தெளிவா அடையாளம் காட்ட முடியும்”

“அப்ப சரி..அந்த ஆனந்த் நித்யாக்கு துரோகம் பண்ணி இருந்தாலும் உன்னை அந்த ரௌடிங்க கிட்டேயிருந்து காப்பாத்தி எனக்கு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கான்… ஆனாலும் நித்யாவுக்கு அவன் செஞ்ச கொடுமையை என்னால மன்னிக்க முடியாது.. சரி.. விடு.. அவனை ‌நான் அப்பறம் கவனிச்சுக்கறேன்… உனக்கு ரொம்ப அடி பட்டு இருக்கு… வா.. ஹாஸ்பிடல் போலாம்” என்றபடி அவள் கையை பிடித்து காரை நோக்கி இழுத்தான்…

“ஒரு நிமிஷம் அர்ஜுன்.. நான் ஹாஸ்பிடலுக்கு வரணும்னா நீங்க எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடுக்கணும்.. என்ன காரணத்தை கொண்டும் அந்த ஆனந்துக்கு உங்களால எந்த பாதிப்பும் வரக்கூடாது… அந்த ஆனந்தை நம்பி லேகாவும் அவ குழந்தையும் இருக்காங்க… அவங்களுக்காக அவர் நல்லபடியா இருக்கணும்.‌. அதுமட்டுமில்லாம நீங்க ஒரு பாவம் பண்றதை பார்த்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்… உங்களை ஒரு குற்றவாளியா பார்க்கிற சக்தி எனக்கு இல்லை.. அதனால எனக்கு சத்தியம் பண்ணி குடுங்க… அந்த ஆனந்தை நீங்களா தேடி போய் எதுவும் பண்ண மாட்டீங்க னு” அவனை நோக்கி கையை நீட்டிய படி சொன்னாள் திவ்யா..

“சரி… சத்தியம்.. நானா தேடிப் போய் அந்த ஆனந்தை எதுவும் பண்ண மாட்டேன். இப்ப ஹாஸ்பிடல் போலாமா மேடம்?” என்று கேட்டான் அர்ஜூன்…

“தாராளமா போகலாம்.. ஆனா ஒன்னு சொல்றேன் அர்ஜுன்.. இப்ப நீங்க எனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறினீங்கன்னா நான் உங்களை விட்டு நிரந்தரமா போயிருவேன்.. தினம் தினம் நீங்க அந்த ஆனந்தை என்ன பண்ணிட்டு வருவீங்களோன்னு டென்ஷனோட என்னால வாழ முடியாது… என் அர்ஜுனால தவறியும் கூட எந்த உயிருக்கும் ஆபத்து வந்துடக் கூடாதுங்கறதுல நான் ரொம்ப தெளிவா இருக்கேன்… அதனால திரும்பவும் சொல்றேன்.. நீங்க பண்ணின சத்தியத்தை மீறி அந்த ஆனந்தை பார்க்க போனீங்கன்னா நான் உங்களை விட்டு நிரந்தரமா போயிருவேன்.. நீங்க நல்லா இருக்கீங்கன்னு நினைச்சிக்கிட்டே நான் வாழ்ந்துடுவேன் தனியாவே… வாழ்நாள் முழுக்க ..”

அவள் உறுதியாய் சொல்ல அர்ஜுன் அவள் வாயை மூடி, “அப்படியே அரைஞ்சேன்னா தெரியுமா? உனக்கு எத்தனை வாட்டி சொல்றது? என்னை விட்டுப் போறேன்னு சொல்லாதனு.. நீ என்கூடயே இருந்து என்னை என்ன வேணா பண்ணிக்கோ.. என்னை கொலை கூட பண்ணு… ஆனால் என்னை விட்டு போயிடாத.. நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நீ என் கண்ணு முன்னாடி தான் இருக்கணும்.. நீ இல்லாம இருக்கிற வாழ்க்கை நரகம்டி எனக்கு..” என்று சொல்லி அவளை இறுக்கமாய் அணைத்துக்கொண்டான்…

அவன் கட்டை விரலால் அவள் வாயில் இருந்து ரத்தத்தை துடைத்தான்… ” சரி வா ஹாஸ்பிடல் போலாம்” என்று காரை கிளப்பினான்.

திவ்யாவுக்கு உதட்டில் மட்டும் இல்லாமல் கை கால்களிலும் கீழே விழுந்ததனால் சிராய்ப்புகள் ஏற்பட்டிருந்தன… நடக்கமுடியாமல் அர்ஜூன் தோளில் சாய்ந்தபடியே கஷ்டப்பட்டு நடந்து வந்தாள்… அவனோ அதற்கு மேல் அவளை நடக்இ விடாமல் அப்படியே தூக்கிச் சென்று காரில் அமர வைத்தான்.
திவ்யாவை மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போய் அவள் காயங்களுக்கு மருந்து போட்டுக்கொண்டு காவல்நிலையத்துக்கு சென்று ஒரு புகார் கொடுத்துவிட்டு மறுபடியும் தங்கள் அறைக்கு வந்தார்கள்… மறுபடியும் அவர்கள் சிற்றில்லின் வாசலுக்கு வந்தவுடன் அவளை தூக்கிக்கொண்டு போய் படுக்கையில் படுக்க வைத்தான்…

பிறகு பக்கத்தில் படுத்துக்கொண்டு அவள் தலையை கோதி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்… என்ன அமைதியான முகம்..!! தனக்கு தீங்கு நினைத்தவருக்கு கூட தீங்கு நினைக்காத மனம்..!! எனக்கு எப்படிப்பட்ட மனைவி கிடைத்திருக்கிறாள்..!! இவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டே நெற்றியில் ஒரு முத்தம் பதித்தான்…

அவள் அப்படியே தூங்கி போனாள். அவளை அணைத்தபடியே அவனும் உறங்கி போனான்…

பிறகு வெகு நேரம் கழித்து அவன் கைபேசி ஒலித்தது… திவ்யா எழுந்து விடப் போகிறாள் என்று அவசரமாக அதை எடுத்துக்கொண்டு முகப்பிற்கு சென்றான்… நேரம் 12 மணிக்கு மேல் ஆகியிருந்தது… கைப்பேசியில் திரையில் வந்த எண் புதிதாய் இருந்தது…

அழைப்பை ஏற்று “ஹலோ.. யாரு?” என்றான்… எதிர்முனையில்,” ஹலோ.. நீங்க.. அர்ஜுன்தானே பேசறது?” என்றது ஒரு பெண் குரல்…

“யெஸ்.. அர்ஜுன் ஸ்பீக்கிங்..” என்றான் பேசுவது யார் என்று புரியாமல்..

” நான் ஆனந்தோட வைஃப் லேகா பேசுறேன்.” என்றாள் அந்தப் பெண் மறுமுனையில் இருந்து…

தொடரும்..

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top