இரண்டு நாட்கள் பொது ட்ரைனிங் எடுக்கப்பட்ட போது இடையிடையே அவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள் என்று விளையாட்டுடன் கூடிய ஷெஷன்கள் தான் கொடுக்கப்பட்டன. பின்னே அவ்வளவு செலவு செய்வது ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்து வரவழைத்து இருப்பவர்கள், வெறும் பொழுது போக்கு அம்சத்தை மட்டுமே அவர்களுக்கு காட்டுவார்கள்??
முன்னே கம்பில் கேரட்டை கட்டி, அதை காட்டியே குதிரை மேல் பயணித்தவாறு அதை தன் வழிக்குக் கொண்டு வரும் வியாபார உத்தி உலகம்தான் இது!!
இரண்டாம் நாளான அன்று..
“ஹேய் இம்லி.. இன்னிக்கு எதுவும் கேம்ஸ் போல. நேத்து பேச்சுவாக்குல அந்தோணி சொல்லிக்கிட்டு இருந்தான். ஹெச் ஆரும் பேசிக்கிட்டு இருந்தாங்களே!!” என்று பேசிக்கொண்டே தன் சிகையை வாரி கொண்டிருந்தாள் நவி.
“ஆமாம்.. ஆமாம்.. ஒரே ஜாலியா இருக்கும்ல. டூ டேஸா எனக்கு போனே பண்ணல என் ஆளு நிம்மதியா இருக்கேன்!!” என்றாள் சிவா.
“அடிப்பாவி!! ஒரு கமிட்மென்ட் ஆன பொண்ணு பேசற பேச்சா இது? கொஞ்சமாச்சும் என் ப்ரோ பத்தி உனக்கு அக்கறை இருக்கா? அன்பு இருக்கா? பாசம் இருக்கா? நேசம் இருக்கா?”
“போதும்! போதும்!! நிறுத்துடி!! எல்லாம் நீ சிங்கிளா இருக்கிற கொழுப்பு டி!! மிங்கிளாகி பாரு.. அப்ப தெரியும் நான் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. எங்க இருக்க? சாப்டியா? என்ன பண்ணிட்டு இருக்க? பாத்ரூம் போனியா? குளிச்சியா? இப்படியே கேட்டுக் கிட்டே இருக்கான் ஒன் ஹவர் ஒன்ஸ். ஒரு பிரைவசியே இல்லை. கல்யாணம் பண்ணா இன்னும் என்னென்னவோ….!!!” என்று நொந்து கொண்டே பேசியவளை பார்த்து சிரித்தாள் நிவி.
‘மனதால் இருவரும் ஒன்றுடன் ஒன்று இணைந்து விட்டால் அங்கே பிரைவஸி என்று பேச்சிற்கு இடமேது?? ஆனால் அவரவர்களுக்கு என்று தனி ஸ்பேஸ் வேண்டுமானால் கேட்கலாம்!!
ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான்!! ஒவ்வொரு மணி நேரத்திற்கும் எங்க இருக்கிற? என்ன பண்ற? என்று கேட்டால், அதை சந்தேகமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.. கண அக்கறையாகவும் எடுத்துக் கொள்ளலாம்!! அது அவரவரின் இணையை பொறுத்தது!! நமக்கு ஏன் இந்த தலைவலி எல்லாம்?’ என்று தன் யோசனைக்கு எண்ட் கார்டு போட்டு தலைக்கு பேண்ட் போட்டவள், “சரி போகலாம்!!” என்று சிவாவோடு இணைந்து டைனிங் ரூமுக்குள் நுழைந்தாள். அவளை அறியாமலேயே அவளது கண்கள் அவனை தேடியது.
காலை உணவை வேக வேகமாக முழுங்கிவிட்டு இவர்கள் உள்ளே நுழைந்து இருக்கையில் அமரவும் ஹெச்ஆர் டிபார்ட்மெண்டில் இருந்து ஆட்கள் வரவும் சரியாக இருந்தது. ஹெட் அனுஜ்ஜோடு இன்னும் இருவர் வந்திருந்தனர். அனுஜ் அவர்கள் முன் நின்று மெல்லிய புன்னகையோடு பேச ஆரம்பித்தான்.
அக்மார்க் நார்த் இந்தியன் கலர் கூடவே. அந்த மீசை இல்லா மொழு மொழு கன்னங்கள். கண்களிலேயே கவர்ச்சி காட்டியவனை சிவா ஆவென்று பார்க்க.. நீவி அவள் தொடையில் நறுக்கென்று கிள்ளி “நீ ஏற்கனவே மிங்கிள் மா ஞாபகம் வச்சுக்கோ!! இங்கே சிங்கிள் நானே கம்முனு இருக்கேன். நீ சைட் அடிக்கிற? ம்ம்ம்.. சுப் கரோ!!” என்று கிசுகிசுத்தாள்.
“இந்த ஹெட் அனுஜ் செம ஹேண்ட்செம்மா இருக்கான் இல்ல ஸ்வீட் ஹார்ட்!!” என்று மெல்லிய குரலில் நவியின் காதில் ஜொள்ளினாள் சிவா.
“என் ப்ரோ அங்க என் ஸ்வீட் ஹார்ட் சாப்பிட்டாளா? தூங்குனாளா? என்று ஃபோனையே வச்ச கண் வாங்காம பார்த்துட்டு இருப்பாரு. நீ இங்க என்னன்னா இந்த ஹெச் ஆர் வச்ச கண் வாங்காம பாக்கற.. கால கொடும இம்லி!!”
“இந்த ட்ரெய்னிங் முடிக்கிற வரைக்கும் நான் சிங்கிள் தான்!! அவன பத்தி என்கிட்ட நீ பேசவே பேசாத… புரியுதா?” என்று கண்களை சுருக்கி மிரட்டினாள் சிவா.
“ஆமா.. சைட் அடிக்கிற மாதிரி இந்த வெள்ளைக் கொக்கு கிட்ட என்ன தான் இருக்கு?” என்று அசட்டையாக கேட்டாள் நவி.
அவளை அப்படியே அதிர்ச்சியாக திரும்பி பார்த்தாள் இம்லி.
“வாட் என்ன இருக்கா? என்ன இல்லைன்னு கேளு?”
“சரி.. என்ன இல்லனு நீயே சொல்லு பார்ப்போம்!!” என்று வம்பு இழுத்தவளை கோபமாக முறைத்த இம்லி, அனுஜை அணு அணுவாக விவரிக்க ஆரம்பித்தாள்.
“அவன் ஆம்ஸ் பார்த்தியா.. உருண்டு திரண்டு.. எவ்வளவு ஸ்டிராங்கு!! அவன் ச்செஸ்ட் பார்த்தியா ப்ளே கிரவுண்ட்டாட்டம் கிரிக்கெட்டே விளையாடலாம். அவன் கண்ண பாத்தியா ஸ்ஸஸ்ப்ப்பாஆஆ.. அதிலும் அவன் சிரிக்கும்போது அப்படியே அள்ளுது.. அவன் மொழு மொழு கன்னங்கள் பாரு…” என்று
இம்லி சொல்ல சொல்ல அவள் சொன்ன ஒவ்வொரு பார்ட்டையும் பார்த்த நவிக்கோ ஏனோ அந்த சிக்ஸ் பேக் கோதுமை நிற டெடி பியரை பிடிக்கவே இல்லை.
“போடி நல்ல மைதாமாவுல செஞ்சு வச்ச கொழுக்கட்டை மாதிரி இருக்கான். இவன போய் ரசிக்கிற?” என்று கூறியவள், “என்ன இருந்தாலும் இந்த ஊரு பீட்சா பர்கரை விட, எங்க ஊரு உளுந்தங்களிக்கு இருக்கிற கலரும் சுவையும் தனிதான்!!” என்று தமிழில் முணுமுணுத்துக் கொண்டாள்.
“அப்புறம் அவனோட அந்த லிப்ஸ் இருக்கு பாரு..” என்று சிவா கூற..
“அது லிப்ஸ்ஸாடி.. போட்டு வாயன்!!” என்றவளை இவள் கோபத்தோடு கிள்ள அவளும் மறுபடியும் கிள்ள..
“ஒரு சைட் கூட ஒழுங்கா அடிக்க தெரியல.. நீ எல்லாம் பேச வந்துட்ட!! பாரு டி பாரு.. இந்த ஜென்மம் மட்டுமில்ல. இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் நீ சிங்கிளா சிங்கி அடிக்க தான் போற” என்று வெடுக்கென்று கோபத்தோடு முகத்தைத் திருப்பிய இம்லியோ அனுஜை பார்த்து முதல் கண்களிலே கணைகளைத் தொடுத்தாள். இவளெல்லாம் தேறாத கேஸ் என்று மீண்டும் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போது..
“நவ்னீதா.. சார்” என்று பின்னால் கேட்ட குரலில் அவள் அதிர்ந்து திரும்பி பார்க்க, இவர்கள் பின்னால் அமர்ந்திருந்த விதுரன் தான் எதற்கோ இவளை கோர்த்து விட்டு இருந்தான் அந்த அனுஜூவிடம்!!
அந்த அனுஜூம் “நவ்னீதா..!!” என்று குழைந்து அழைக்க அசட்டு சிரிப்போடு எழுந்து நின்றாள் அவள்.
“கம் ஹியர்.. நவி!!” என்றான். அனைவரும் கைத்தட்ட “அய்யோ இவன் எதுக்கு கூப்பிடுறான் தெரியலையே?? இவ்ளோ நேரம் என்ன பேசினானு கூட நமக்கு தெரியாதே!! இந்த பக்கி வழக்கம்போல மாட்டிவிட்டுட்டான்!!” என்று விதுரனை முறைத்துக்கொண்டே அனுஜின் அருகில் நின்றாள் நவி.
“ம்ம்ம்.. கமான்!!” என்று அனுஜ் உந்த..
‘எதுக்கு இந்த சப்பாத்தி மாவு நம்மை கமான் கமான் சொல்றான்! ரெண்டு நிமிஷம் தான் அவ கிட்ட பேசினேன். அதுக்குள்ள என்ன பேசிட்டு இருந்தாங்க தெரியலையே?? என் கையில நீ மாட்டுவல அப்ப இருக்கு!’ என்று கண்களிலேயே விரதனை மிரட்டி செய்தி அனுப்பிவிட்டு மீண்டும் அவனிடமே ‘சமாளியேன் டா!’ என்று கெஞ்சினாள். அதுவும் கண்களில் தான்..
“வாட் ஹேப்பன்ட் நவ்னீதா?” என்று அனுஜின் அக்கறையான விசாரிப்பில் அதுவும் அவளருகே சற்று நெருங்கி நின்று விசாரித்ததில் கொஞ்சம் உள்ளுக்குள் எரிந்தது விதுரனுக்கு. சட்டென்று எழுந்தவன் “அவங்களுக்கு தமிழ் பாட்டு தான் தெரியும் போல சார்! அது தான்.. உங்களுக்கு எல்லாம் புரியுமா புரியாதா என்று பாடாமல் யோசிக்கிறாங்க!” என்று ஆங்கிலத்தில் பேசியவன், அவளிடம் “அவன் தான் அறிவில்லாமல் நெருக்கமான நின்னா.. நீயும் பல்ல காட்டிட்டு நிப்பியா? தள்ளி நில்லு டி!” என்று சிரித்துக் கொண்டே தமிழில் கூற.. அப்போதுதான் அவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் கவனித்தவள் சட்டென்று நகர்ந்து விதுரன் அருகில் வந்து விட்டாள்.
“என்னை விட இவர் நல்லா பாடுவார் அனுஜ். அதுவும் இவருக்கு ஹிந்தி கூட தெரியும். அதனால அனுஜ்.. இவரையே பாடச் சொல்லுங்க” என்று கிள்ளை மொழியில் மொழிந்து, அவன் போட்ட வலையில் அவனையே சிக்க வைத்துவிட்டு சிட்டாக பறந்து தன் இடத்திற்கு வந்து விட்டாள் நவி.
வந்து அமர்ந்தவள் “எப்படி??” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்து கேட்க.. உதட்டை மடித்து ‘எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்காமலா போகும்?’ என்று கண்களால் பதிலளித்தான் விதுரன்.
‘போடா போடா பார்த்துக்கலாம்!’ என்று அசட்டையாக விட்டாள்.
அவனும் ஏதோ சொல்லி மழுப்பிவிட்டு பாடாமலேயே வந்து அமர்ந்து விட்டான். ஆனால் அவனுக்கு தான் பாட தெரியுமே? ஏன் பாடவில்லை? என்று சிந்தனை கூறினாலும் அதனை செயல்படுத்தவில்லை. அவனைப் பற்றி அதிகம் நினைக்காத மனமே என்று உரு போட்டுக்கொண்டு மீண்டும் அனுஜ் பேச்சை கவனிக்கலானாள்.
சிறிது நேரத்தில் அவர்களுக்கான குழு போட்டி ஒன்றை நடத்த ஆரம்பித்தது ஹெச்.ஆர் டீம்.
அதன்படி ஐந்து பேர்கொண்ட பத்து குழுவாக பிரிக்கப்பட்டார்கள் அந்த ஐம்பது பேரும். ஒரு சிறு ஜாடியில் நம்பர்கள் எழுதி போட.. அதே நம்பர் எந்த 5 பேருக்கு வந்ததோ அவர்கள் அனைவரும் ஒரு குழுவாக சேர்க்கப்பட்டனர். இம்முறை இம்லியும் நவியும் வேற வேற குழு.
விதுரனும் தனி குழு.
குழுவாக செய்யக்கூடிய சில பல போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் நவி மற்றும் விதுரன் இன்னும் இரண்டு குழுக்கள் முதல் நான்கு இடத்திற்கு வந்து இருந்தன. அந்த நான்கு குழுவில் இருந்து மீண்டும் இரண்டு குழுவாக குறைக்கப்பட, நவி மற்றும் விதுரன் குழு இம்முறை எதிர் எதிராக…
இரண்டு அணியும் மோத விடும் சமயத்தில் அனுஜ் என்ன நினைத்தானோ இரு அணிகளுமே சிறந்த அணி என்று அறிவித்து விட சற்றே சுவாரசியம் அற்றுப்போனது நவிக்கு.
அடுத்து அந்த குழுவில் இருந்த அத்துணை நபரையும் அழைத்து போட்டி நடத்தப்பட்டது.
அவர்களுக்கான போட்டி சுற்றிலும் கலர் கலர் பேப்பரை போட்டு வைத்திருந்தார்கள். பாடல் ஒலிக்கப்படும், அது நிறுத்தப்படும் போது அவர்கள் குறிப்பிட்ட அந்த கலர் பேப்பரில் அவர்கள் நிற்க வேண்டும். அவர்கள் சொன்ன கலரில் நிற்காதவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அதிலும் ஒரு ரவுண்ட் முடித்து அடுத்த ரவுண்டில் அந்த கலர் பேப்பரின் எண்ணிக்கை குறைக்கப்படும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கலரை அவர்கள் கூறுவார்கள். கடைசியில் இதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதே போட்டி!!
முந்தைய போட்டிகள் குழுவாக செய்ததைவிட இதில் தனி நபர்களாக தங்கள் திறமையைக் காட்டி ஜெயிப்பது அத்தனை சுவாரசியம் தந்தது அங்குள்ளவர்களுக்கு. பெரும்பாலும் ஆண்கள் பெண்கள் பேதமற்று பழகிய நட்புக்காக இருப்பதால் எந்தவித அசௌகரியமும் இன்றி நன்றாகவே அந்த போட்டி நடந்து கொண்டிருந்தது.
ஒருவித சுவாரஸ்யத்துடன் அனைவரும் சிரித்தபடி அடித்துப் பிடித்து தள்ளி உருண்டு புரண்டு விளையாடி கொண்டிருந்தார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக கலர் பேப்பர் குறைக்கப்பட்டு வந்தது. மேலும் ஒவ்வொரு முறையும் கலர்கள் வேறு வேறு அறிவிக்கப்பட கடைசியாக மிஞ்சியது அந்தோணி நவி விதுரன். அடுத்த சுற்றில் அந்தோணியும் வெளியேற்றப்பட, மீதமிருந்தது நவியும் விரதனும்.
இப்போது அனைவருக்குள்ளும் ஒரு சுவாரசியம்!! யார் வெற்றி பெறுவார்கள் என்று!! பொதுவாக இரண்டு பெண்களாக இல்லை இரண்டு ஆண்களாக இருப்பதை விட, ஒரு பையனும் பொண்ணும் என்பது கூடுதல் சுவாரசியம் தர.. அங்கு உள்ளவர்களே இரு குழுவாக பிரிந்து ஒருவர் நவிக்கும், மற்றவர்கள் விரதனுக்கும் சப்போர்ட் செய்து குரலை எழுப்பி, கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினார்கள்.
முதல் ஆட்டத்திலேயே எதிராக இவர்கள் மோத இருந்த சமயம் அனுஜ் அத்தோடு கேமை நிறுத்திவிட.. இம்முறையாவது இவனை வெல்ல வேண்டும் என்று ஒரு வெறியே இருந்தது நவிக்குள்.
இவர்களுக்கான மியூசிக் இசைக்கப்பட்டது. மெல்லிய குரலில் கேட்டான் விதுரன் “விட்டுக்கொடுக்க வா நிதா?” என்று!!
Very nice epi sis
Excellent
நன்றி சிஸ் 💞