“விட்டுக்கொடுக்கவா நிதா?” என்று அவன் கேட்டதும் அவளுக்குள் பல நிகழ்வுகளின் தாக்கங்கள்!!
எதை விட்டு கொடுப்பானாம்? விளையாட்டை என்னிடமா? இல்லை என்னை விளையாட்டுக்காகவா? என்று விரிந்த அந்த நீள நயனங்களில் தொலைய தான் விரும்பினான் விதுரன். ஆனால்.. தொலையும் நாள் இன்னும் வரவில்லை போலும். சட்டென்று தன் பார்வையை அவளிடம் இருந்து மீட்டுக் கொண்டான். மீள முடியுமா என்று தெரியவில்லை ஆணவனுக்கு!! அதனால் திருப்பிக் கொண்டான்.
மீண்டும் இசை இசைக்கப்பட்டது இம்முறை பிளேயரில் மட்டும் இல்லை. விதுரனின் நெஞ்சத்திலும்!!
“ஸ்டார்ட் மியூசிக்!!” என்று அனுஜ் கூறியவுடன் வயலின் இசை ஓட.. இசைக்கேற்ப இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது! மீண்ட கண்கள் அவர்கள் முன்னால் இருந்த கலர் பேப்பரில்.. காதோ அந்த இசையை கவனித்துக்கொண்டே இருந்தது.
மீண்டும் ஒருவர் மட்டும் நிற்கும்படி கலர் பேப்பர்கள் அங்கே இருந்தது. இம்முறை எந்த கலர் என்று இருவருக்கும் தெரியவில்லை. மியூசிக் நின்று அடுத்த நொடி சட்டென்று அனுஜ் தான் கலரை
கூறுவான்.
அதனால் கண்களில் எவ்வளவு கவனமோ.. அதே கவனம் காதிலும். காதைத் தீட்டி வைத்துக் கொண்டுதான் இருவரும் அந்த கலர் பேப்பரை சுற்றி சுற்றி நடந்து கொண்டிருந்தார்கள்.
சட்டென்று மியூசிக் நிற்க.. அனுஜ் “பர்புள்..!!” என்று கத்த.. இருவர் புலன்களும் சட்டென்று செயல்பட்டு அந்த பர்புள் கலர் பேப்பரில் தங்கள் கவனத்தை குவிக்க.. விதுரன் தனது இடது காலையும், நவி தனது வலது காலையும் ஒரு சேர வைத்தனர். ஆனந்த அதிர்ச்சியோடு இருவரின் கண்களும் உராய்ந்து கொள்ள சட்டென்று மற்ற காலை மடித்து தூக்கி கொண்டனர். பிடிமானத்திற்கு தடுமாறியவளின் இடுப்பை விதுரனின் முரட்டுக் கைகள் வளைத்துப் பிடிக்க.. அவளோ தன் மென் கரங்களால் அவனது வலிமையான தோளை இறுக்க பற்றினாள்.
அனுஜ் மட்டுமல்ல அங்கிருந்த மற்றவர்களும் ஆவென்று தான் பார்த்தனர், இவர்களின் சமயோசித அறிவை. இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கவும் இல்லை!! தோற்கவும் இல்லை!!
“ஓஹ்ஹோ… வாட் அ ப்ரலியண்ட் மூவ் டியர்ஸ் போத் ஆர்!! கிரேட்!!” என்று பாராட்டினான் அனுஜ். அங்கிருந்த மற்றவர்களுமே இவ்வாறாக இருவரும் நிற்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
நவி அவனை விட்டு விலகி திரும்பி நின்றாலும் இவனின் கை பின்பக்கமாக அவள் இடுப்பில் இருக்க.. யாருமறியாமல் வேகமாக அதனை தட்டிவிட்டவளை பார்த்தான் ஏனென்று?
“போடா!! மட்டி!!” என்று முணுமுணுத்தாள்.
ஆனாலும் அந்த போட்டி இன்னும் முடியவில்லை. யாராவது ஒருத்தர் ஜெயித்தால் தானே போட்டி முடிவுக்கு வரும். இருவரும் இப்போதுமே சமநிலையே!!
“அதனால் மீண்டும் ஒருமுறை உங்களுக்கான போட்டி. ஆனால் இப்போது..” என்ற அனுஜ் இரு கால் வைத்து நிற்கும் அளவு இருந்த பேப்பரை கிழித்து ஒற்றைக்கால் மட்டுமே இருக்கும் அளவு வைத்தான்.
சுற்றி இருந்தவர்கள் “ஹோ..!!!” என்று இம்முறை கத்தினார்கள்.
“அமைதி.. அமைதி.. கைய்ஸ்!! இவர்களை நம்ப முடியாது. திரும்பவும் ஏதாவது செய்தால் நாம் என்ன செய்வது? ஓவர் பிர்லியண்ட் போத் ஆர்!! அதனால்தான் இப்போது ஒரு கால் மட்டும் வைக்கும் அளவு இந்த பேப்பர்ஸ் வைக்கப்பட்டிருக்கு. எந்த கலர் என்று நான் தான் சொல்வேன். கெட் ரெடி கைய்ஸ்!!” என்றவன் மீண்டும் மியூசிக்கை ஆன் செய்ய..
இப்போது டிரம்ஸ் மியூசிக்!! ப்ளேயரில் அல்ல நவியின் இதயத்தில்…
போன முறையை விட இந்த முறை அதிக ஆரவாரம் செய்தனர் அங்குள்ளவர்கள். இம்முறையும் இரு பிரிவாகப் பிரிந்து நவி.. நவி என்று ஒரு பிரிவினரும்.. தேவா… தேவா… என்று மற்றுமொரு பிரிவினரும் கத்தி, தங்கள் ஆதரவையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
நவிக்கு தான் இதயம் திக் திக்கு என்றும் லப் டப் டப் டப் என்றும் பல்வேறு மாடுலேஷன்களில் இசைத்துக் கொண்டிருந்தது. விதுரனோ மிக நிதானமாக அமைதியாக இருந்தான். அதே நேரம் கூர்மையான தனது பார்வையை நவியின் மீது தான் வைத்திருந்தான்.
“விதுரா.. அப்படி பாக்காத!! எனக்கு ஒரு மாதிரி அன்யீஸியா இருக்கு. பேப்பர்ஸ பாரு மேன். பேப்பர்ஸ பாரு!!” என்று சுற்றிக்கொண்டே இதழில் புன்னகை இருந்தாலும் பற்களை கடித்துக்கொண்டு நவி கூற..
“என் பார்வை உன்னை அவ்வளோ டிஸ்டப் செய்தா நிதா?” என்று கேட்டு மென்னகை புரிந்தான் விதுரன்.
அவனிடம் இருந்து பார்வையை விலக்கி பேப்பரில் கவனத்தை செலுத்தினாள் நவ்னீதா.
“திரும்பவும் கேட்கிறேன்.. விட்டு கொடுக்கவா நிதா?” என்றவனின் மென்வார்த்தைகள் அவளை ஏதோ செய்தது. வார்த்தை கொண்டு ஒருவரை இவ்வாறு உருக வைக்க முடியுமா என்று எண்ணும் அளவிற்கு இருந்தது அம்மென்மை!! சட்டென்று தலையை உதறி “வேண்டாம்.. வேண்டாம் இவனும் இவன் நினைவுகளும்!!” என்று தவிர்த்தவள், மீண்டும் கவனத்தை விளையாட்டில் வைக்க சட்டென்று இசை நிறுத்தப்பட “க்ரீன்..!!” என்று கத்தினான் அனுஜ்.
ஒற்றைக் காலை விதுரன் வைத்து விட.. இவள் சட்டென்று பின் வாங்க..
அவளை இடையை பற்றி இழுத்து தன் ஒற்றைக்காலின் மீது நிற்க வைத்தான். அப்போது இருவர் உதடுகளும் ஒற்றே ஒற்றை நொடி உரசி சென்றது மென்மையாக.. அதி மென்மையாக!!
இப்படி ஒரு அதிரடியை யாரும் விதுரனிடம் எதிர்பார்க்கவே இல்லை. யாரும் இதை விகற்பமாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் இவர்கள் மூவரும் நல்ல நண்பர்கள் என்று அங்குள்ளவர்களுக்கு தெரியும்!!
விதுரனை பாராட்டித் தள்ளி விட்டான் அனுஜ். ஃபீல்டில் தான் மட்டுமில்லாமல் தன் உடன் வேலை செய்பவர்களையும் வெற்றிபெற செய்வது ஒரு தலைவனுக்கான தகுதி என்றும்.. அது விதுரனுக்கு இருக்கிறது என்றும் கூடிய சீக்கிரம் அவர் அடுத்தடுத்த புரமோஷனில் உயர் பதவி போக அநேக வாய்ப்புகள் இருக்கிறது என்றும் பாராட்டி தள்ளி விட்டான்.
அதே நேரம் நவியையும் விட்டுக்கொடுக்காமல் இவ்வளவு தூரம் அவனுக்கு டஃப் காம்பெடிஷன் கொடுத்து, எந்தத் துறையிலும் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து விட்டார்கள் என்று கூறி பாராட்டி, இருவருக்குமே அங்கிருந்த ஒற்றை கப்பை கொடுத்தான். அதை அவளிடமே கொடுத்து விட்டு தன் நண்பர்களுடன் சென்று நின்று கொண்டான் விதுரன்.
அடுத்து மதிய உணவிற்கான இடைவேளை விட்ட பொழுது, எப்பொழுதும் விதுரன் நவி இம்லி மூவரும்தான் இணைந்து சாப்பிடுவது வழக்கம்!! இன்றும் அப்படித்தான். ஆனால் நவி சரியாகவும் சாப்பிடவில்லை, அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. வழக்கம்போல இம்லி தான் சலசலத்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நவி கொறித்துக் கொண்டே இருந்தாள். அவ்வப்போது இம்லியுடன் விதுரன் இணைந்து கொண்டாலும் பார்வை மொத்தமும் நவியின் மீதே!!
இயல்பாகவே விதுரன் கொஞ்சம் முரட்டுக் குணம் படைத்தவன். கொஞ்சம் கனல் பார்வை கொண்டவன். அதனாலே பெரும்பாலும் அவனைப் பெண்கள் நெருங்கவே கொஞ்சம் யோசிப்பார்கள். அது அவனுக்கும் கொஞ்சம் நிம்மதியாகவே இருந்ததால், வாழ்க்கையில் எந்த வித சலனமுமின்றித் தான் அது வரை சென்று கொண்டிருந்தது அவனுக்கு. மேலும் பெண்களின் ரசனை அவனின் ரசனையோடு அநேகமாக ஒத்து போவதும் கிடையாது. அதனால் பெண் நண்பிகள் கூட அரிது தான் அவனுக்கு. விரல் விட்டு எண்ணிவிடும் அளவிற்கு மட்டுமே!!
ஆனால் வாழ்க்கையில் முதல்முறையாக.. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான்,
இதே ட்ரைனிங்கில் தான் ஒரு பெண் அவனையும் மீறி அவனைக் கொஞ்சம் அசைத்து பார்த்தாள்..
கொஞ்சம் நெருங்கி வந்தாள்..
கொஞ்சம் சிரிக்க வைத்தாள்..
கொஞ்சம் ரசிக்க வைத்தாள்..
கொஞ்சம் கோபம் கொள்ள வைத்தாள்..
கொஞ்சம் கெஞ்ச கூட வைத்தாள்..
ஆனால் கொஞ்ச வைக்க முயலவில்லை. அதுவே அவனை ஈர்த்தது. ஆனால் அதை தாண்டி அடுத்த நகர்வுக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.
எப்படி? எப்படி? ஒருத்தி என்னுள் இவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தலாம்?
எப்படி என்னை சலனப்படுத்தலாம்?
எப்படி என்னை அவளை கவனிக்க வைக்கலாம்? என்று ஏக எரிச்சல் உண்டானது அவனுள்!!
இப்பொழுதோ… இன்றோ… அந்த மென் தீண்டலில் அவனை அப்படியே உறைய வைத்தாள். ஆனால் அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தன்னிலையிலேயே சிந்தித்துக் கொண்டிருந்தவனைப் பக்கவாட்டில் இடித்த இம்லி,
“என்ன தேவா.. ஆள் பிசிகல்லி பிரசெண்ட் மெண்டலி ஆப்சென்ட். ஏன் என் ஸ்வீட் ஹார்ட் இப்படி ஒரே மூடியா இருக்கா? நீ ஏதாவது அவள பண்ணிட்டியா.. ஐ மீன் டச்சிங்.. கிஸ்ஸிங்” என்று எதேர்ச்சியாக மெல்லதாக அவனிடம் கிசுகிசுத்தாள் இம்லி.
ஒரு நொடி சாப்பிட்டு கொண்டிருந்தவனுக்கு புறை ஏற, சமாளித்து தண்ணீர் பருகியவன், “ச்ச்ச அப்படி எல்லாம் இல்ல சிவா. வீ ஆர் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் ஒன்லி!! அது ஒன்னுமில்ல சிவா.. உன் பிரண்டுக்கு என்னை இன்னைக்கு ஜெயிக்க முடியல. அந்த வருத்தம் தான்!! அப்பவே கேட்டேன் விட்டுக் கொடுக்கவானு…” என்று முதலில் சிவாவுக்கு மட்டும் கேட்கும்படி மெல்ல பேசியவன், அடுத்தது சற்று உரத்த குரலில் கூற வெடுக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் நவி.
ஆனால் அவனின் ‘ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் ஒன்லி!!’ என்ற வார்த்தையைக் கேட்டு என்னவென்றே சொல்ல முடியாத ஒரு உணர்வில் உள்ளுக்குள் கடுப்பாகிப் போன நவ்னீதா அவனைத் திரும்பி முறைத்தாள்.
“ஹேய் நிதா.. நான் சத்தியமா நான் அந்த அர்த்தத்தில் சொல்லல. அது.. அது.. வந்து.. சிவா..” என்று தோழியின் குணமறிந்து தன்னிலை விளக்கம் கொடுக்க முன்வந்தான் விதுரன்.
அவளுக்கும் அவன் என்ன சொல்ல வந்தான் என்று புரிந்தது. ஆனாலும் இம்லி முன் அதை காட்டிக்கொள்ளாமல் “ஏன் விட்டுக் கொடுத்திட்டு, அதுக்கப்புறம் ‘நான் தான் விட்டுக் கொடுத்தேன்!’ ‘நான் தான் விட்டுக் கொடுத்தேனு!’ ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கவா.. ஒன்னும் வேண்டாம்!!” என்று கடுப்புடன் மொழிந்தாள்.
‘ஸ்ஸப்பா.. இதுக்காக இவ்வளவு பாடு. நான் கூட பயந்திட்டேன். என் பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான் இவளை கல்…’ என்று நினைத்தவன், எண்ணம் போகும் போக்கை நினைத்து திகைத்து தன் நினைவுக்கு எண்ட் கார்டு போட்டு அவளைப் பார்த்து முறுவலித்தான்.
அதுமட்டும் தானா என்பது போலப் புருவம் தூக்கிக் கேட்ட விதுரனை பார்த்தவள், ‘இவனைப் பார்க்காதவரை நல்லா தான் இருந்தேன். இப்போ எனக்குள் நானே குழம்பி தவிக்கிறேன்!’ என்று நினைத்து அதனை வெளிக்காட்டாமல்..
“நானா வந்து ஹெல்ப் கேட்டானா? இல்லை தானே.. இனிமேலும் உங்கிட்ட எதுவும் நானா கேட்க மாட்டேன்!” என்றாள் இரு பொருளில் மூச்சு வாங்க..
நவியின் பேச்சின் தன்மை புரியாமலும், அவள் முகத்தில் இருந்த தீவிரம் ஏன் என்று விளங்காமலும் விழித்தாள் சிவா.
பெரும்பாலும் அவர்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் தான்.
“டார்லீ.. இப்போ எதுக்கு இவ்ளோ சீரியஸ் ஆகுற?” என்று கேட்கவும் தான்.. தான் செய்த தவறை உணர்ந்தவளாகச் சிறிது அமைதி காத்தாள் நவி.
“நத்திங் ஸ்வீட் ஹார்ட்!!” என்று வரவழைக்கப்பட்ட முறுவலுடன் கூறியவள் “டைமாச்சு அடுத்த ஸ்ஷெஷன் ஆரம்பிச்சிடுவாங்க.. போகலாம்!!” என்று எழுந்து கொண்டாள். விதுரனும் சிவாவும் அவளோடு எழுந்து கொண்டார்கள்.
அதன்பின் மதியநேர ஸ்ஷெஷன், மதிய உணவுக்குப் பின் சற்று மந்தமாகத்தான் சென்றது. இடையிடையே அவர்களின் வியாபார தந்திரங்களையும் ஊட்ட மறக்கவில்லை ஹெச்ஆர் டீம். ஒருவழியாக அனைத்தும் முடிந்ததும் அன்று இரவும் தனக்கு பசிக்கவில்லை என்று கூறி அறையிலேயே இருந்து கொண்டாள் நவி.
தனியாக சாப்பிட வந்த சிவாவிடம் விதுரன் நவி பற்றி விசாரிக்க “அவளுக்குப் பசி இல்லையாம் தேவா” என்று இவள் சாப்பிட்டுக் கொண்டிருக்க.. சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் பாதியில் எழுந்து சென்றான் அவளை தேடி!!
அவள் எங்கே இருப்பாள் என்றுதான் அவனுக்கு தெரியுமே!! அதே மொட்டை மாடி!!
தனக்குள் பெண்ணவள் வருத்தத்தில் உழலும் போது பெண்ணவளின் ஆதரவு அந்த மொட்டை மாடியும்.. வானில் உலா வரும் வெண்ணிலவும் தான்!!
விதுரன் சென்று போது, கண்டது கோட்டோவியமாக நிலவை வெறித்துக்கொண்டு நின்ற நங்கையை தான்!!
Super sis
நன்றி நன்றி டியர் ❤️🤩