ATM Tamil Romantic Novels

கதைப்போமா காதலே‌.. 5

கதைப்போமா 5

 

நிழலோவியமாக நிற்கும் நிலவவளின் இளையவளை பார்த்தப்படி அந்த மாடியின் நுழைவு வாயிலில் சாய்ந்து நின்றிருந்தான் விதுரன் இரு கைகளையும் கட்டியப்படி!!

 

அன்றொரு நாள்..

இதே இரவில்..

இதே நிலவொளியில்..

நடந்தேறிய சம்பவங்கள் மெல்லியதாய் மிக மெல்லியதாக அவனின் நினைவு அலைகளில்!!

 

அவன் நினைத்துப் பார்க்க வேண்டாம் என்று நினைத்த ஒன்று!! நினைத்து பார்க்கவே பயந்த ஒன்று!! 

 

இன்று அவள் அருகில் சென்றால், அதைப் பற்றிய சம்பாஷனைகள் வந்துவிடுமோ? என்று ஒரு கணம் உள்ளம் நடுங்கினாலும், இந்நிலையில் அவளைத் தனியாக விட்டுச் செல்ல மனமில்லை அவனுக்கு. மூச்சு காற்றை வேகமாக ஊதி தன்னை ஒரு நிமிடம் சமன்படுத்தி கொண்டவன், மெல்ல அவளை நெருங்கினான்.

 

“என்ன மா? தனியா சோலோ சாங் பாடுற?” அவனின் முதல் சம்பாஷனை அவளோடு! அதையே இப்போது கையில் எடுத்தான் இடையில் நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும் என்று!!

 

ஆண்களின் மா என்ற அழைப்பும்..

பெண்களின் டா என்ற அழைப்பும்..

வெகு அழகு!! அதுவும் உரிமை உள்ளவரிடத்திலோ இன்னும் அழகு!!

 

மெல்ல அவனை திரும்பி பார்த்தவளின் கண்களில் மெல்லிய நீர் படலம். அதற்கே அவன் தவித்து போக, அதனோடு கூடிய அவள் நீள நயனங்களின் குற்றச்சாட்டில் சற்றே குற்றம் செய்தவனை போலானான். அவனுக்கும் தெரிந்து தான் இருந்தது. அது ஏன் என்று!!

 

“சாரி மா!! இட்ஸ் ரியலி அன் ஆக்சிடென்ட்!! அது.. அது.. உன்னை.. நீ தோற்பது பிடிக்காம.. அதனால.. உன்னை.. அப்படி.. சாரி..!!” என்றான் அவள் தன்னை புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்போடு! ஆனால் அவளின் அந்த வருத்தமே அவனை சரியாக புரிந்து கொண்டதால்தான்!!

 

அவனை தீர்க்கமாக பார்த்தாள் பாவை!! இருவர் பார்வையும் ஒன்றை ஒன்று வருடிக் கொள்ளவில்லை. ஆழ்ந்து நோக்கி கொண்டு இருந்தது. ஆழியின் ஆழத்தை காண துடிப்பது போல உள்ளே உள்ளே நுழைய.. அப்பார்வையின் வழியே அந்நாள்.. அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்னரான அவர்கள் சந்தித்த நாட்கள் விரிய தொடங்கின…

 

மூன்று‌ ஆண்டுகளுக்கு முன்னர்‌ செப்டம்பர் மாதம் இதே மும்பையை நோக்கி நிறைய கனவுகளோடு.. இளமையின் துள்ளலோடு.. முதன் முறையாக வெளியூரில் பல நாட்கள் தன்னந்தனியாக தங்க போகும் படப்படப்புடன் பட்டாம்பூச்சியாய் ரயிலில் பயணித்தாள் நவ்னீதா!!

 

அன்று தான் அறிமுகமானான் அந்தோணி. இவள் சென்னையில் ஏறியவுடன் அவனிடம் சின்னதாய் ஒரு‌ அறிமுகம்!! மெல்லிய புன்னகை!! சிறிதாய் ஒரு தலையாட்டல் அவ்வளவே!!

 

அதுவும் ஏசி கோச்சில் அவன் இருந்த பெர்த்தில் இருந்த குடும்பம் அவனை மேம்பர் செய்வதை பார்த்தவளுக்கு ஒரே சிரிப்பு தான். அன்று நாள் முழுவதும் அந்தோணி இத சாப்பிடு.. அத சாப்பிடு.. டீ வர்ற நேரம் தூங்குறானே புள்ள.. நைட் உனக்கும் நாங்களே ஆர்டர் பண்ணிட்டோம் என்று அந்த மாமி அவ்வளோ தாங்கினார்கள் அவனை. அவர்கள் மகனும் இதேபோல்தான் வெளிநாட்டில் எங்கோ தனியாக அவதிப்படுகிறான் என்று 

அவ்வப்போது கூறிக்கொண்டு. 

 

ஆனால் நவ்னீதா இருந்த சைட் பெர்த்தில் இருந்த பெரியவரோ அவர் பாட்டில் தூங்குவதும் முழிப்பதுமாக இருக்க.. இவளோ பொன்னியின் செல்வனில் ஐக்கியமாகிவிட்டாள். அவ்வப்போது யாரோ தன்னை கண்காணிப்பது போல தோன்றும் எண்பது பேர் இருக்கும் அந்த கோச்சில் யாரென்று அவள் தேட.. ஆனால் அவள் அறியாதது விதுரனும் அந்த கோச்சில் தான் அன்று வந்தான் என்று!!

 

இறங்கும் நேரம் தான் அந்தோணிக்கு நவியை கண்ணுக்கே தெரிந்தது. “எல்லாம் பேக் பண்ணியாச்சா நவ்னீதா? இறங்க போறோம்!” என்று அவன் வந்து கேட்கும்போது, “பரவாயில்லை.. இப்பவாது உனக்கு என்னை கண் தெரிந்ததே அந்தோணி…” என்று ராகம் இழுத்து நக்கலடித்தவளை பார்த்து சிரிப்போடு அவன் நகர்ந்துவிட, இவனுக்கும் சேர்த்து அந்த மாமிதான் கவலைப்பட்டார்.

 

“எப்படிடா அந்தோணி.. வயசு பொண்ண கூட்டிட்டு அதுவும் ராத்திரியில தனியாக போவ?” என்று அங்கலாய்த்துக் கொண்டே வந்தார் கூடவே மாமாவையும் சேர்த்துக் கொண்டார். ஒருவழியாக இவர்கள் ஸ்டேஷனில் இறங்கியதும் மாமாவும் மாமியும் கூடவே வந்து, அவர்களை அந்தேரியில் அவர்கள் ட்ரைனிங் போகும் இடத்தில் விட்டு விட்டு தான் சென்றார்கள். 

 

எதிர்பார்ப்பில்லாத அன்பு!!

மதங்கள் தாண்டிய பிரியம்!!

இப்படியும் சில நல்லவர்கள்!!

 

அன்றும் இவர்கள் டாக்சியில் பயணம் செய்யும்போது நவ்னீதா இம்லியை அழைத்து விட்டாள், “ஹாய்.. ஸ்வீட் ஹார்ட்.. ஐ அம் ஆன் தி வே!!” என்று!! 

 

மாமா மாமிக்கு நன்றி தெரிவித்துவிட்டு இவர்கள் ரிஜிஸ்டரில் பதிந்து விட்டு உள்ளே நுழையவும் இம்லி வந்து எதிர்கொள்ள.. லக்கேஜை போட்டு விட்டு இருவரும் கட்டிக்கொண்டு குதித்ததை பார்த்தவனுக்கு வியப்பு. 

 

“பரவாயில்லையே நவ்னீதா.. உனக்கு இங்கேயும் பிரண்ட்ஸ் இருக்காங்களா?” 

 

“ஏன் அந்தோணி? உனக்கு மட்டும் தான் மாமி போல பிரண்டு இருக்கணுமா?” என்று கூறி சிரித்தவளை,

 

“நீ இதை விடவே மாட்டியா??” என்றபடி அவன் உள்ளே சென்று விட்டான்.

 

இவர்கள் இருவரும் லிஃப்ட்டுக்குள் பேசி சிரித்தப்படி லக்கேஜை இழுத்துக் கொண்டு நுழைய ஏற்கனவே அந்த லிஃப்ட்டின் ஓரத்தில் நின்றிருந்த ஒருத்தனை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இருவரும் வாய் சலசலத்துக் கொண்டேயிருந்தது. ஆங்கிலத்தில்தான்!!

 

அன்றிரவும் அவளுக்காக உணவு எடுத்து வைத்திருந்தாள் இம்லி. ட்ரெயினில் சாப்பிட்டேன் என்ற நவியை விடவில்லை “இறங்குற‌ நேரத்துல எப்படியும் நீ ஒழுங்கா சாப்பிட்டு இருக்கமாட்ட.. ஒழுங்கா சாப்பிடு” என்றாள். 

 

இந்தப் பாசம்.. புரிதல்.. நட்பிற்கு அழகு!!

 

மறுநாள் இவர்கள் இருவருக்கும் தனித்தனியே தான் ட்ரெய்னிங். மொத்தம் மூன்று பிரிவுக்கான டிரெய்னிங் அங்கே நடந்து கொண்டிருந்தது. அந்தோணியும் நவியும் ஒரே பிரிவு. முதல் நாள் என்பதால் இருவரும் சற்று வேகமாகவே கிளம்பி உணவு உண்டு அவரவர் ட்ரெய்னிங் பகுதிக்கு சென்றுவிட்டனர்.

 

நவிக்கு கொஞ்சம் பக் பக் என்றுதான் இருந்தது. இம்லி பிரிவில் மொத்தமே 20 பேர் அதில் அவள் ஒருத்தி மட்டுமே பெண். ஆனால் நவியின் பிரிவில் மொத்தம் நாற்பது. அதிலும் இவள் மட்டுமே பெண். 

 

வெவ்வேறு மாநில தோரணைகள் வெவ்வேறு மொழிகள் என்று அந்த இடமே கலகலப்பாக இருக்க.. இவள் நுழையும் போது அனைவரின் பார்வை ஒரு நிமிடம் இவள் மீது பட்டு மீண்டது. அமைதியாக முன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

வழக்கம் போல முதல் நாள் ட்ரைனிங் ஹெச்ஆர் டிபார்ட்மெண்டில் இருந்து அவர்களுக்கு ட்ரெய்னிங் கொடுக்கும் ட்ரெயினர் வரை அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு இவர்களையும் அறிமுகப்படலம் கொடுத்து அந்த ட்ரெயினில் எடுக்கப்படும் தேவையான நோட்ஸ்களுக்கு கத்தை கத்தையாக புக் இவர்களிடம் கொடுக்க.. 

 

“அடப்பாவிகளா.. படிச்சு முடிச்சிட்டு நிம்மதியா இருந்தா, திரும்பவும் மா? அதிலும் எவ்வளவு பெரிய பெரிய புக்கை கொடுத்து… அவ்வ்வ்!” என்று முணுமுணுத்து கொண்டாள். அருகில் இருந்த சுக்கிந்தர் சிங் “வாட்?” என்று கேட்க ‘இவனுக்கு விளக்கம் சொல்லியே என் ஆயுள் போகப்போகுது இந்த இருபத்திஞ்சு நாளும்!’ என்று புலம்பிக்கொண்டே “நத்திங்!!” என்றாள் மென் நகையோடு!!

 

அதற்குள் முதல் டீ ப்ரக் விட.. “அப்பா சாமி..!!” என்று முதலாவதாக வெளியே வந்தவள் தனக்கான டீயை எடுத்துக்கொண்டு அங்கிருக்கும் இருக்கையில் ஓரமாக அமர்ந்து கொள்ள.. சற்று நேரம் கழித்து அவள் பின்னிருந்து “என்னமா சோலோ சாங் வாசிக்கிற?” என்று குரல்.. அதுவும் தமிழ் குரல்!! ஏக ஆனந்தமாய் அவள் திரும்பிப் பார்க்க புதிதாய் ஒருவன்!!

 

அவளுக்குத்தான் அவன் புதியவன்!!

அவனுக்கோ அவள் பழகியவள்!!

 

அதான் ட்ரெயினில் இருந்து இப்போது ட்ரெய்னிங் வரை அவளை அவதானித்துக் கொண்டே தானே இருக்கிறான்.

 

“நீங்க??” என்று அவள் கேட்க..

 

அவள் அருகே இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்தவன் 

“ஐ அம் தேவா.. தேவஜித் விதுரன்!! கோயம்புத்தூர் ப்ரான்ச்” என்றான்.

 

“நான்.. நவ்னீதா! சென்னை!!” என்றாள்.

 

அடுத்து என்ன பேசுவது என்று இருவருக்குமே தெரியவில்லை. மெதுவாக அவர்களது டீயை அருந்திக் கொண்டிருக்க.. வந்து சேர்ந்தாள் இம்லி. நவி அவளிடம் விதுரனை அறிமுகப்படுத்தினாள். மூவருக்குள்ளும் சின்னதாய் பேச்சு.. சிரிப்பு. அதற்குள் பிரேக்கிங் டைம் முடிந்துவிட, மீண்டும் வந்து அமர்ந்த நவியின் பின்புறத்திலிருந்து மீண்டும் அந்தக் குரல் “உனக்கு சொந்த ஊர் எது?” என்று!!

 

இவள் சட்டென்று திரும்பிப் பார்க்க “சென்னையில ஒர்க் பண்றேன்னு சொன்ன.. ஆனா உன்னோட சொந்த ஊர்?” கேட்டான் விதுரன்.

 

“தஞ்சாவூர்!!” என்றாள்.

 

“உங்க ஊரு பத்தி எல்லாம் நல்லா தெரிஞ்சுக்கணும்னா பொன்னியின் செல்வன் தான் படிக்கணும்!!” என்றான் கண்களில் சுவாரஸ்யத்தோடு.

 

சட்டென்று மகிழ்ச்சியோடு அவனைப் பார்த்தவள் “பொன்னியின் செல்வன் எல்லாம் படிச்சு இருக்கீங்களா நீங்க?” என்றாள்.

 

அவன் கல்கி முதல் ஓசோ வரை அனைத்தையும் கரைத்துக் குடித்து இருப்பவன் என்பதை அறியாமல்!!

 

“ம்ம்ம்!!” என்றான். அதன் பின் மதிய உணவின் போதும் இருவரும். கூடவே இம்லியும்.. இரவிலும் இவர்கள் படிக்கும் போது.. சற்று தள்ளி யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தவன் சம்பாசனை முடிந்தவுடன் இவர்களை நோக்கிதான் வந்தான். யாரிடம் என்றெல்லாம் நவி கேட்கவில்லை ஒரு சின்ன பார்வைதான், அதற்கே பதிலளித்தான் வீட்ல பேசிட்டு வந்தேன் என்று!!

 

அதன்பின் அவர்கள் வீடு பற்றி இவனும், இவர்கள் வீடு பற்றி அவளும், இடையில் இம்லியை பற்றி சற்று நேரம் பேசி விட்டு, பின்பே தங்கள் அறைக்கு சென்றனர்.

இதுவே வாடிக்கையானது!!

 

இவர்கள் மூவரும் ஒன்றாக சாப்பிடுவதும் ஒன்றாக படிப்பதும். ஏனோ அப்பிரிவில் உள்ள மற்ற நபர்களோடு விதுரனால் அவ்வளவு இயல்பாக பழக முடியவில்லை. ஆனாலும் அவனுக்கும் நண்பர்கள் இருந்தார்கள். வேறு இரு பிரிவில் உள்ளவர்கள்.

 

இப்படியாக ஒரு வாரம் சென்ற நிலையில், அன்று நல்ல மழை பிடித்து இருந்தது. மறுநாள் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தனர் நவியும் இம்லியும் அன்று அறையிலேயே..

 

“இம்லி.. எனக்கு ஒரு டீ குடித்தே ஆகணும்.. அதுவும் இந்த மழை.. ஜில்லுனு குளிர்.. சூடா ஒரு டீ.. செம காம்பினேஷன்!! நீயும் வரியா?” என்று கேட்டவளிடம் போர்வையை போர்த்திக்கொண்டு தூக்கத்தில் கண்கள் சொருக புக்கை விரித்து வைத்து வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவள் பெரிய கும்பிடு போட்டு அனுப்பி வைத்தாள்.

 

வேகமாக கீழே வந்தவள் டைனிங் ஹாலில் வைக்கப்பட்டிருக்கும் டீ டிரம்மில் அவளுக்குத் தேவையான டீயை பிடித்துக்கொண்டு வாசல் வந்து நின்றாள்.

 

ஆர்ப்பரித்துக் கொட்டிக்கொண்டிருந்தது அரபிக் கடலில் சீற்றம் கொண்டிருந்த காற்று வலுவடைந்தால்.. தஞ்சாவூரில் பார்க்காத மழையா? ஆனால் சிறிது நாளாக சென்னை வாசத்தில் இந்த குளுமை அவளுக்கு வேண்டியதாய் இருந்து. ரசித்து குடித்து இருந்தவள் அருகே “என்னமா இந்த நேரத்தில?” என்று குரலில்.. அதிர்ந்து திரும்பிப் பார்க்க அந்த வாசலில் மற்றொரு புறத்தில் டீயோடு நின்று இருந்தான் விதுரன்.

 

“சும்மா.. ஜஸ்ட் ஒன் கப் ஆஃப் டீ வித் ரெயின்!” என்று கண் சிமிட்டியவளை பார்த்தவன் தானும் அந்த மழையைப் பார்த்துக் கொண்டே டீ அருந்திக் கொண்டிருந்தவன், “ஏற்கனவே என்னென்னமோ பேசுறானுங்க.. இதை இப்படிப் பார்த்தானுங்க.. அவ்வளவுதான்!!” என்று முணுமுணுத்தான்.

 

“ம்ம்ம்.. என்ன பா?” என்றவளிடம், முதலில் தயங்கினாலும் “பசங்க எல்லாம் ஒரு மாதிரி பேசுறானுங்க மா!!” என்றான்.

 

புரியாமல் புருவத்தை உயர்த்தியவள் “என்ன மாதிரி?” என்றாள் அந்த டீயை ரசித்து ருசித்து கொண்டே..

 

“அது.. அது… உங்க ரெண்டு பேரையும் எப்படி கரெக்ட் பண்ணுனேனு கேட்கிறாங்க..” என்றான் தயங்கி தயங்கி மழையை வெறித்துக் கொண்டே… 

 

“எதே.. இரண்டு பேரையா??” என்று கலகலத்து சிரித்தாள் நவி!!

 

கண்டிப்பாக இப்படி ஒரு ரியாக்ஷனை அவளிடம் எதிர்பார்க்கவில்லை விதுரன்!!

1 thought on “கதைப்போமா காதலே‌.. 5”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top