ATM Tamil Romantic Novels

கதைப்போமா காதலே‌.. 7

கதைப்போமா 7

 

விதுரன் இலை தழையெல்லாம் சாப்பிடும் சைவ வாசி!! நவியோ பறப்பதில் ஃப்ளைட்டை தவிர்த்து, நீரில் மிதப்பதில் கப்பலையும் ரோட்டில் நடப்பதில் வாகனங்களையும் போனா போகுது என்று மனச பிறவியையும் விட்டுட்டு அனைத்தையும் உண்ணும் அசைவ வாசி!! 

 

இப்படியும் எதிரும் புதிருமாய் இருக்கும் இரண்டும் தான்.. சில பல விஷயங்களில் அவ்வளவு ஒற்றுமை!! ஆனால்.. காதல் வந்தால்??!!!

 

அன்று பத்து நாட்கள் ஓடியிருந்தது. இடையில் விதுரனுக்கு இவ்வுணவு பழக்கம் இல்லாமல் மிகச் சிரமப்பட்டான். அதிலும் வயிற்று உபாதையும் சேர்ந்து கொள்ள.. கொஞ்சமே கொஞ்சம் இல்லை ரொம்பவே தேடினான் வீட்டை.. அவனது அன்னையை.. அவர் வைக்கும் மிளகு ரசத்தை.. கூடவே சுட்ட அப்பளத்தை!!

 

இரண்டு நாட்களாக இவர்களோடு அவன் சாப்பிட வரவில்லை. அன்று உடல்நிலை சரியில்லை என்று ட்ரெய்னிங்க்கும் அவன் வரவில்லை. 

“என்னாச்சு? ஏன் வரல?” என்று அவள் மெசேஜ் செய்து பார்க்க.. அதற்கு பதில் அளிக்கவில்லை. பின்னர் ட்ரையினர் வரும் முன்பு ஒருமுறை போன் செய்து பார்த்தும் விட்டாள், அவன் எடுக்கவில்லை!! அன்று முதல் டீ ப்ரேக்கில் அவளுக்கு நிலை கொள்ளவில்லை. 

 

“ஏன் என்னாச்சு அவனுக்கு? ஏன் மெசேஜூக்கு ரிப்ளே பண்ணல? ஏன் போனும் எடுக்க மாட்டேங்குறான்? டிரெய்னிங்கும் வரல.. காலையில் சாப்பிடவும் வரல?” என்று அவனைப் பற்றிய எண்ண சூழல்களில் சிக்கிக் கொண்டு இருந்தாள்.

 

வேற பிரிவில் இருக்கும் கணேஷ் தான் அவனுக்கு நண்பன் இப்போது. அவ்வப்போது விதுரனுடன் அவனை பார்த்திருக்கிறாள். இன்று‌ அருகில் அமர்ந்திருந்த இம்லியின் எந்தவொரு பேச்சும் அவள் காதில் விழவே இல்லை!! ஏன் எட்டவே இல்லை!! கைகள் டீ கப்பை வைத்திருந்தாலும் அதை அருந்தவில்லை. மற்றொரு கையில் எடுத்து வைத்திருந்த பிஸ்கட்டை அந்த டீக்குள் ஆட்டி கொண்டிருந்தாள். அப்படி ஆட்டி ஆட்டியே ஒவ்வொரு பிஸ்கட்டாக கரைத்துக் கொண்டு இருந்தாளே ஒழிய சாப்பிடவில்லை!! அவளின் அந்த விசித்திரமான செயலை பார்த்த இம்லி என்ன என்று அத்தனை முறை கேட்டும் அவளிடம் பதிலில்லை.

 

அப்போதுதான் மூன்றாவது பிரிவில் இருக்கும் கணேஷ் டீ பிரேக்குக்காக வர பாய்ந்து சென்று அவன் முன்னே நின்றவளை கண்டு அவன் அரண்டே விட்டான். இம்லியோ ஒரு கணம் பயந்தே விட்டாள் ‘இவ எதுக்கு எப்படி பாஞ்சு போகிறாள்?’ என்று!!

 

“கணேஷ் என்னாச்சு? ஏன் விதுரன் ட்ரைனிங்க்கு வரவே இல்ல.. போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறாரு உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று கவலையோடு கேட்டாள்.

 

இதுவரை இவனுடன் மட்டுமில்ல மற்றவர்களுடனும் தேவைக்கு மட்டுமே பேச்சு.. கேள்வி கேட்டால் மட்டுமே பதில் சொல்லும் பெண் இன்று தன்னுடன் பேசியது அவனுக்குள் ஒரு குறுஞ்சிரிப்பு!!

 

“அவனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. ஸ்டொமக் ஆப்செட் சொல்லிட்டு ரெஸ்ட் எடுக்கிறான். தூங்கி இருப்பான் போல அதான் ஃபோன் எடுக்கல!! நான் ஈவ்னிங் அவன் கிட்ட சொல்றேன்” என்றவனிடம் சரி என்று தலையாட்டி விட்டு சென்று விட்டாள்.

 

என்ன என்று விசாரித்த இம்லியிடமும் அதை சொல்ல, இம்லியின் குறுகுறுப் பார்வை அவளை இன்னும் அதிகமாக துளைத்தது.

 

மதிய சாப்பாட்டின் போதும் விதுரனைப் பற்றிய பேச்சுக்கள் அவ்வப்போது வந்து கொண்டே இருந்தது இருவருக்கிடையே…

 

எப்பொழுதும் தனது பின்னால் அமர்ந்து ட்ரெய்னர் க்ளாஸ் எடுக்கும்போது எதையாவது சொல்லி நக்கல் செய்வான் அவளிடம் மென்குரலில்!! திடீரென்று டிரெய்னர் கேள்வி கேட்டால் அதற்கு தக்க பதில் சொல்வதோடு விளக்கமும் அருமையாக கொடுப்பதால், அவனிடம் அதிகமாக எந்த ட்ரெய்னரும் கேள்வி கேட்பதில்லை. இன்று அதை எல்லாம் ரொம்பவும் மிஸ் செய்வதாக உணர்ந்தாள். 

 

முதுகு பின்னால் கேட்கும் அந்த குசுகுசு பேச்சு!!

அலட்சிய பதில்கள்!!

ப்ரேக்கில் அமைதியாக அவள் பேசுவதை எல்லாம் கேட்கும் தோரணை!!

அவனின் அழுத்தமான அந்த கூர்விழிகள்!!

 

அனைத்தும்.. அனைத்துமே..!!

 

இதுவரை சாதாரணமாக நடந்த நிகழ்வுகள் எல்லாம் இன்று இத்துணை படுத்துமா என்ன? விதிர்விதித்தாள் பெண்!! 

 

ட்ரைனிங் மாலை முடிந்து அனைவரும் அவரவர் அறைக்கு சென்று சிறிது ஓய்வு எடுத்து பின் ஆறு மணி போல தான் ஈவினிங் டிபன் வித் காபிக்கு வருவார்கள்.

அங்கு வேலை பார்ப்பவர்களில் ஒரு நாயரும் உண்டு!! வந்தது முதல் அவரிடம் தமிழாயத்தில்.. அதாங்க தமிழ் ப்ளஸ் மலையாளம்… பேசி பேசி நட்பு பிடித்து வைத்திருந்தாள்.

 

இன்று அவரிடம் சென்று, “சேட்டா…!!” என்று நின்றவளை பார்த்தவர், “வா மொளே… என்ன வேணும்?” என்று கேட்டார் மாலை சிற்றுண்டி தயாரித்து கொண்டே!!

 

“எனக்கு சேட்டனிடம்.. ஒரு ஹெல்ப் வேண்டும்? சேட்டன் செய்யுமோ?” என்றாள் கண்களை சுருக்கி தலையை சாய்த்து, இவ்வளவு தூரம் தனியாக வந்திருக்கும் பெண், அதுவும் பிழைப்புக்காக.. செய்யும் வேலை வேறு வேறு என்றாலும்.. உழைப்பு ஒன்று தானே!! 

 

அந்து உழைப்பு அவரை கவர்ந்த ஒன்று!! அவர் அஞ்சாத ஒன்று!! அதனால் தப்பு தப்பாக மலையாளத்திலும் அங்காங்கே தமிழாயத்திலும் பேசும் இந்த பெண்ணை அவருக்கு மிகப் பிடித்தம்!!

 

“இம்மோளுக்கா.. சேட்டன் எதுவும் செய்யும்.. கேளு” என்றார் பாசத்துடன்.

 

“அது… அது… ப்ரண்டுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை சேட்டா!! மதியம் வைத்த சாதத்தோடு கொஞ்சம் மிளகு ரசம் வைத்து தர முடியுமா? பாவம் நேத்து ராத்திரி இருந்து ஒன்னும் சாப்பிடல போல…” என்று அவள் தயக்கமாக கூற, ஒரு முறை அவளை கூர்ந்து பார்த்தவர், “சரி மோளே.. ஒரு பத்து நிமிஷம்!!” என்றவர் அவள் கேட்டதை செய்து கொடுத்தார்.

 

கொடுக்கும்போது “மோளே.. வேலைக்காக தான் ஊரு விட்டு ஊரு வந்து இருக்க. பழகும்போது எல்லோரிடமும் எச்சரிக்கையும் கவனமும் அவசியம்!! நாம எல்லோரையும் நல்லவர்களாக பார்த்தாலும் நம்மை எல்லோரும் நல்லவர்களாக பார்ப்பது கிடையாது. என்னை ஒரு தகப்பனாக நினைத்துக்கோ… நான் சொல்வது உனக்கு புரியும்!!” என்றார் பூடகமாக… 

 

அவர் எதுக்கு சொல்லுகிறார் என்று முதலில் புரியாவிட்டாலும் கடைசியாக விதுரனுக்காக எடுத்துச் செல்வதை புரிந்து சொல்கிறார் என்று புரிந்தவள், “கண்டிப்பாக!! வேலைக்கு மட்டும்தான் வந்திருக்கேன். அதை மட்டும் தான் பார்ப்பேன் சேட்டா!!” என்று வாக்களித்தது போல கூறிவிட்டு சென்றவளை பார்த்து அவளது மனசாட்சி பரிகரிசித்து சிரித்தது… வெறும் வேலையை மட்டும் தான் பார்க்கிறாயா என்று!! 

 

“இதெல்லாம் காதல் கிடையாது. கஷ்டப்படும் நட்பிற்கு செய்யும் நட்பு அதிகாரம்!! உனக்கு சொன்னால் புரியாது!! ஓடிவிடு!!” என்று விரட்டி அடித்தாள் மனசாட்சியை!!

 

வாங்கி விட்டாள் தான். ஆனால் அதை எப்படி சென்று கொடுப்பது? அதுதான் பெரும் பிரச்சனை!! நேராக தன் அறைக்கு சென்று இம்லியையும் அழைத்துக்கொண்டு இன்டர்காம் வழியே அவனது அறை ப்ரண்டை அழைத்து இம்லியை விட்டு கொடுக்க செய்தாள்!!

 

விதுரனுக்கு முதலில் இம்மும்பை உணவு ஒத்துக் கொள்ளவில்லை. அன்று வெளியில் சாப்பிட்டது வேறு ஒவ்வாமையை ஏற்படுத்த, அது ஒரு‌நாளாக அவனுக்கு வயிற்று உபாதையை ஏற்படுத்தியது. மாலையாவது எதாவது சாப்பிடுவோம் என்று எண்ணி எழுந்தவன், குளியலறை சென்று குளித்து விட்டு வந்தவனை வரவேற்றது நவி கொடுத்து விட்ட உணவு!!

 

புருவங்கள் முடிச்சு விழ திறந்து பார்த்தவனின் கண்களில் ஆச்சரிய கலந்த ஆனந்தம்!! கேள்வியாக அவன் அறையில் இருந்த நண்பனை பார்க்க அவனோ “எல்லாம் உன் கேர்ள் ஃபிரண்டஸ் கொடுத்து விட்டார்கள்!!” என்று கண்ணடித்தான்.

 

“கேர்ள் ஃப்ரெண்ட்ஸா?” என்று விதுரன் அவனை கேள்வியாக முறைக்க…

 

“ஆமா… பாரு உனக்கு உடம்பு சரியில்லைன்னா சாப்பாடு எல்லாம் வருது. ஆனா எங்களுக்கு? அதுவும் ரெண்டு பேரும் கொண்டுவந்து கொடுத்தாங்க!!” என்று அவன் நக்கலாக பேச…

 

“சீ போடா!!” என்று திட்டியவன் சூடு ஆறு முன் உணவை வயிற்றுக்குள் தள்ளினான். அவ்வுணவை சாப்பிட்டு முடித்த உடன் தான் இறந்த உயிரை கிடைத்தது போன்ற ஒரு உணர்வு!! வடிந்த ஆற்றல் எல்லாம் திரும்ப கிடைத்த ஒரு புத்துணர்வு விதுரனுக்கு!!

 

மிளகு ரசம் அப்பளம் கண்டிப்பாக இது நவி தான் கொண்டு வந்து கொடுத்து இருப்பாள் என்பது அவனுக்கு அவ்வளவு நிச்சயம்.

உடனே கால்கள் பரபரத்தது அவளை காண… ஆனால் சற்று நேரம் ஆகட்டும் என்று அன்று ட்ரெய்னிங்கில் எடுத்தவற்றை நண்பர்களிடம் கேட்டு பார்வையை அதில் ஓட்டிக் கொண்டு இருந்தவன் மனமோ பத்து அறைகள் தாண்டி இருந்த பெண்ணிடமே இருந்தது.

 

வழக்கம்போல் இரவு உணவுக்கு அனைவரும் வர இவன் செல்லவில்லை. தான் கொடுத்து அனுப்பிய உணவை சாப்பிட்ட இருப்பான் என்று நவிக்கும் தெரிந்ததால் அவனைப் பற்றி பேசாமல் இவளும் உண்டுவிட்டு, வழக்கம்போல் மொட்டை மாடிக்கு சென்று விட்டனர் இருவரும்.

 

சிறிது நேரத்திலேயே இம்லி தூக்கம் வருவதாக சொல்லி கீழே சென்றுவிட… இவள் மட்டும் அமைதியாக காலையிலிருந்து அலைப்புற்ற தன் மனதை எண்ணியபடியே வெண்ணிலவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“தவமா? தூக்கமா?” என்ற குரலில் ஆனந்தம் அள்ளி செல்ல கண்களை விரித்து பார்த்தவள் அருகே நின்றிருந்தான் விதுரன்.

இமைக்க மறந்து அவளையே பார்த்தவாறே!!

 

ஒரு நாள்.. முழுதாக இருபத்துநான்கு மணிநேரம்.. கடந்து அவனை பார்க்கிறாள் நவி.

பெண்ணின் அகம் கொண்ட மகிழ்ச்சி முகத்தில் தெரிய.. மெல்லிய செர்ரி இதழ்கள் விரிந்து கொண்டன புன்னகையில்.. அவனையே விழிவிரிய பார்த்திருந்தாள், அதிலும் அவனது கண்கள் கருந்துளை போல அவளை அவனுள் காந்தமாய் இழுக்க.. பனியென குளிர்ந்தாள் பாவை.

 

அப்போதுதான் அவனது கேள்வி ஞாபகம் வர, “தூக்கம் எல்லாம் இல்லை விதுரன்! உங்களுக்கு இப்போ பரவாயில்லையா” என்றாள் சிரித்துக்கொண்டே..

 

“ம்ம்ம் ஓகே!! தூக்கம் இல்லைனா?? அப்போ தவமா?” என்றான் குறும்பு நகையுடன்..

 

“எதற்கு தவம் இருக்கப் போகிறேன்.. அதெல்லாம் ஒன்றுமில்லை… கொஞ்சம் மனசு டிஸ்டர்ப்பா இருந்திச்சு.அதான் கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்து இருந்தேன்.. நீங்க எப்படி இங்க?”

 

“மிளகு ரசம் மாயம் செய்தது!! எல்லாம் பறந்து போச்சு!! இட்ஸ் கான்!!” என்றான் பாவனையோடு!!

 

“ஆஹான்…‌” என்றாள்.

 

“ஒரு அசிரிரீ வந்து சொல்லுச்சு.. ஒரு பொண்ணு தவம் இருக்கான்னு.. அதான் வரம் கொடுக்கலாம்னு வந்தேன்” என்றான் மெல்ல அவள் கண்களை கூர்ந்து..

 

“ஆஹான் அந்த அசிரிரீ வேற என்ன சொன்னிச்சாம்???” என்றாள் கண்களில் சுவாரஸ்யத்தோடு..

 

“நிறைய சொன்னிச்சு..” என்றவன் திரும்பி நவியின் வதனத்தை ஆழ்ந்து பார்க்க.. அவனின் அப்பார்வையை உணர்ந்தவள் உள்ளம் நாணம் கொள்ள முகமும் அழகாக மின்னியது. அதுவரை எடுத்திருந்த மன உறுதி எல்லாம் மாயமாய் போனது அவனது ஒற்றை பார்வையில்!!

 

‘அப்பப்பா.. என்ன பார்வை இவனது!! கண்களில் ஊடுருவி இதயத்தில் நுழைந்து ரத்த நாளங்களில் பரவி உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் சிலிர்க்க வைக்கிறது’ என பாவையவள் பார்வையை திருப்பி கொள்ள.. ஆனால் அவனது பார்வை அவளை தான் துளைக்கிறது என்பதை அவளால் நன்கு உணர முடிந்தது.

 

அதில் இன்னும் நாணம் மேவுற.. தனது சிவந்த கீழுதடை கடித்து கன்னங்கள் குழைந்து செம்மையுற மென்னகை புரிந்தாள் மாது.

 

“என்ன டிஸ்டபன்ஸ் இப்போ உனக்கு?” ஒன்று அவன் கேட்க..

 

இனிமையாக இசைக்கப்பட்ட

இசை பாதியில் அறுந்த மாதிரி ஆக…

மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“எனக்கு என்ன டிஸ்டர்பன்ஸ்? ஒன்னும் இல்லையே!! நான் நல்லா தானே இருக்கேன்!!” என்றவள் முகத்தை வேற புறம் திருப்பிக் கொண்டாள்.

 

“என்கிட்ட உன்னால பொய் சொல்ல முடியுமா நிதா?” என்று கேட்டவன், அவளை கூர்ந்து பார்க்க… அவளும் உதட்டை கடித்து தனது அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு “பெரிய விஷயம் ஒன்றுமில்ல விதுரன்.. தம்பியும் ஸ்டடி முடிச்சுட்டு ஃபாரின் போறானாம். எனக்கு அது பிடிக்கல.. அப்பா சொல்லிட்டு இருந்தாங்க.. அதுதான் கொஞ்சம் டிஸ்டர்பன்ஸ்!!” என்றாள்.

 

 “ட்ஸ்டபர்ன்ஸூக்கு ட்ரீட்மெண்ட் ஒன்னு இருக்கு” என்றான் சிரிப்பை அடக்கியவாறே..

 

“என்ன ட்ரீட்மெண்ட்??” என்று அவள் புரியாமல் அவனை நோக்க..

 

நேருக்கு நேர் கூர்மையாக அவளது கண்களை பார்த்தபடி “உனக்கு தெரியாதா? எனக்கும் அந்த ட்ரீட்மென்ட் செய்யத்தான் ஆசை!! ஆனால் நீ தாங்குவியா?” என்றவனின் குரல் குழைந்து வர அதில் கட்டுண்டு தான் போனாள் மாது..

 

அவள் அப்போது தான் எதை சொல்லுகிறான் என்று புரிய, படப்படப்பானது நெஞ்சம், “எனக்கு.. எதுவும்.. வேண்டாம்..” என்று திக்கி திணறி கூறினாள். ஏற்கனவே அவன் பால் மனது சாய்ந்துவிட்டது என்பது நிதர்சனம். ஆனால் அதை வெளிப்படையாக கூற மனம் என்னவோ பல காரணிகளை எடுத்துரைக்க.. மேலும் இதை யோசிக்க வேண்டாம் என்று மதி எடுத்துரைத்தது அவளுக்கு.

 

ஆனால் அவள் அப்படி சொன்னவுடன் அவளை பார்த்தவனின் பார்வையின் தீட்சண்யம் தாங்காது, தன் பார்வையை விலக்கிக் கொண்டவள் அங்கிருந்து எழுந்தாள்!!

 

அமர்ந்த வாக்கிலேயே அவளது இடது கையை பற்றியவன்.. மெல்ல புறங்கையில் முத்தமிட்டு “தாங்க்ஸ்!! ஆல் இஸ் வெல் சூன்!!” என்று விலகி

சென்றான் எங்கே அங்கேயே இருந்தால் இன்னும் அத்துமீறி விடுவோமோ என்று!!

 

பெண்ணவள் தான் அவன் முத்தமிட்ட கையை பார்த்தவாறு நின்றிருந்தாள்.

2 thoughts on “கதைப்போமா காதலே‌.. 7”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top