கதைப்போமா 8
அன்று பிறகு…
இருவரும் காதல் என்று சொல்லவில்லை தான்!!
தினம் தினம் காதல் மொழி பேசவில்லை தான்!!
ஆனால்… அந்த அக்கறை.. அந்த அன்பு.. அந்த செயல்.. அது சொல்லியது அவர்கள் உள்ளிருந்த உள்ளார்ந்த அன்பை!!
அவர்களே அறியாத அவர்கள் நேசத்தை!!
காதலுக்கு மொழி தேவையில்லை…
பரிபாலனம் தேவையில்லை…
ஒற்றை விழி பாஷை பேசும்!!
காதலுக்கு வார்த்தைகள் தேவையில்லை!!
கொஞ்சி பேச தேவையில்லை…
ஒற்றை செயலே உணர்த்தும்!!
அதுபோல்தான் அவர்களிடையே காதலை அறியாமல்… காதலால் கட்டுண்டு இருந்தாலும் அதை வெளிக்காட்ட தெரியாமல் இருந்தனர் இருவரும்.
ட்ரெய்னிங்கும் முடியும் நேரம் வந்தது. எப்பொழுதும் அந்த ட்ரெயினிங் இன் முடிவில் ஒட்டுமொத்தமாக தேர்வு நடைபெறும் பல தலைப்புகளில். அதுவும் மூன்று பிரிவுகள் இருக்க… ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனியாக அவர்கள் திறனை பகுத்தாய்வு செய்து பல பிரிவுகளில் தேர்வு நடந்தது. அனைவரும் அதில் தங்கள் கவனத்தை மும்மரமாக செலுத்தி இருந்தனர்.
எப்பொழுதும் இவர்கள் மூவரும் படிக்கும் அந்த மொட்டைமாடி இப்பொழுது பலரும் கூட்டாக அமர்ந்து படிக்கத் தொடங்கினர். இடையிடையே இவர்களை நோட்டம் பார்த்துக்கொண்டு படிப்பவர்களை எல்லாம் “பார்க்கட்டும்.. நல்லா பார்க்கட்டுமே!! நாம் நம் வேலையில் கவனம் வைப்போம்!!” என்று விதுரன் நவி இம்லி மூவரும் தேர்வுக்கு பரபரப்பாக தயாராகினர்.
இம்லிக்கு சொல்லிக்கொடுப்பது விதுரனே இப்போதெல்லாம். சிறு சிரிப்போடு அதனைக் கடந்து விடுவாள் நவி.
ஒரு வழியாக அடுத்த வந்த ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் தேர்வுக்கான தயாரிப்பிலும் அடுத்த இரண்டு நாட்கள் தேர்வும் மும்முரமாக நடைபெற்று முடிய… மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தன. ஒட்டுமொத்தமாக எழுத்து தேர்வில் நவி முதல் பரிசையும் விதுரன் இரண்டாம் பரிசையும் வென்றிருந்தனர். இடையில் தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் இடையில் நடைபெற்ற தேர்வு ஒன்றை சரியாக எழுதவில்லை விதுரன்.
அடுத்து கஸ்டமர் கன்வெனியன்ஸ் என்ற பெயரில் நடத்தப்பட்ட தேர்வில் மற்றவர்களுக்கு பரிசு தரப்பட்டது. ஒருவருக்கே பரிசு கொடுக்காமல் வெவ்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தி, அனைவரையும் ஊக்கப்படுத்தி, தட்டிக்கொடுத்து.. பரிசுகள் வாங்க வைத்து, தங்களால் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தனர் இந்த ஹெச் ஆர் டீம்.
நம்பிக்கை அதுதானே எல்லாம்!!
தோல்வியில் தோய்ந்து விழுந்துவிடாமல் நம்மை எழும்பி ஓடவைக்கும் பூஸ்டர்!!
பாராட்டுகளும்!! பரிசுகளும்!! ஊக்கமிகு வார்தைகளும்!!
ஆக மொத்தம் திறமையானவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்காமல்… திறமை இல்லாதவர்களையும் அத்துறையில் திறம்பட செயல்பட வைக்கும் ஒரு முயற்சியாகவே அத்தேர்வு முடிவுகள் இருந்தது.
அதுதானே உண்மையும் கூட!! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமை உண்டு!! அந்த திறமையை வெளிக் கொணர்ந்து, அதற்கு உரிய பயிற்சி கொடுத்து, முயற்சி செய்தால் அவரவர் வாழ்க்கையில் அவர்களே வெற்றியாளன்!! சாதனையாளன்!!
இந்த தாரக மந்திரத்தை யார் ஞாபகம் வைத்திருக்கிறார்களோ இல்லையோ தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் இந்த மல்டி நேஷனல் கம்பெனிகள் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டனர்! !
வெறும் தேர்வு முடிவுகளோடு விட்டால் எப்படி??? அடுத்து அவர்களை மகிழ்விக்க ஒருநாள் சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தனர் மும்பையை சுற்றி உள்ள இடங்களுக்கு… வழக்கம்போல சித்திவிநாயகர் கோவிலில் ஆரம்பித்து ஜுகு பீச் வரை அவர்களது ஒரு நாள் பிக்னிக் நன்றாகவே முடிந்தது.
நண்பர்களோடு கூட்டமாக சென்றது நவிக்கும் இம்லிக்கும் நன்றாக இருந்தது. கூடவே தங்களோடு வந்தவர்களின் ஆட்டம் பாட்டத்தில் இவர்கள் கலந்து கொள்ளா விடினும் நன்றாகவே ரசித்தனர். கொஞ்சம் இவர்கள் அருகே யாரேனும் சென்றால் தான் விதுரனின் கனல் கக்கும் பார்வை அவர்களை எரிக்குமே!! அதனால் இவர்கள் தனியாக ஒரு சீட்டை பிடித்து அதில் அமர்ந்து கொண்டு மற்றவர்களின் ஆடல் பாடல்களை கண்டுகளித்தனர்.
நவிக்கு பிடித்த விநாயகர்!! எப்பொழுதும் போல இப்பொழுதும் தன் சங்கடங்களை தீர்க்கும் அந்த ஆனைமுகத்தனை மனமுருக வேண்டி நின்றாள். நவிக்கு விநாயகர் என்றால் விரதனுக்கோ முருகன்!! ஆனால் மும்பையில் முருகனைக் கார்த்திகேயன் ‘தி வார் காட்! ‘ என்றும்.. விநாயகனுக்கு அண்ணன் என்றும்.. அவர் பிரமச்சாரி என்பதையும் கேட்டு ஒத்துக் கொள்ள முடியவில்லை இந்த முருகன் பக்தனுக்கு!!
ஆனாலும் இம்லி சொல்ல சொல்ல அனைத்தையும் கேட்டுக் கொண்டானே ஒழிய பதில் பேசவில்லை. இம்லி கூறுவதற்கு பதில் பேச முடியாமல் வெறும் தலையசைப்போடு கேட்டுக் கொள்பவனை பார்த்த நவிக்கு தான் அப்படி ஒரு சிரிப்பு..அது அடக்கப்பட்ட சிரிப்பு!! அதை பார்த்தவன் ஒரு விரல் பத்திரம் காட்டி அவளை அமைதி படுத்த முயல இன்னும் வெடித்து சிரித்தாள்.
“நான் சொன்னா மட்டும் அவ்ளோ ஆர்கிவ்.. கமெண்ட் பண்ணுவீங்க என்கிட்ட? இப்ப இவ கிட்ட பண்ண வேண்டியதுதானே!! இல்ல விநாயகர் தான் முதல் கடவுள்!! முருகன் இரண்டாவது தான்!! அவருக்கு தான் வள்ளி தெய்வானை என்று இரண்டு மனைவிகள்!! அவர் பிரம்மச்சாரி இல்லனு சொல்ல வேண்டி தானே!! முருகன் பற்றி கதாகலாபிஷேகம் செய்ய உங்களுக்கு சொல்லியா தரணும்? ” என்று இவள் அவனை விடுவேனோ என்று கேள்விகள் கேட்க.. அவளை கூர்ந்து பார்த்தவாறு நின்றான்.
‘அடிக்கடி இப்படி பார்த்து தொலையாத டா!!’ என்று அவள் திரும்பி கொள்ள. ..
“இங்கே பாரு நிதா… எல்லார்கிட்டயும் நம்மளோட விளக்கத்தை சொல்லணும் அவசியம் கிடையாது. இப்ப நான் சொல்ற விளக்கத்தை அவ கேட்க போறது இல்ல!! அவங்க ஊர்ல என்ன அவங்க வழக்கமோ அதுலதான் அவ நிலையா இருப்பா.. அதே போல் தான் நாமும்!! நம்ம ஊர் வழக்கம் தான் நமக்கு முதலில். அவங்க ஊர்ல இப்படி செய்றாங்கன்னு ஜஸ்ட் தெரிஞ்சிக்கிட்டா மட்டும் போதும். அதற்கு விளக்கனும் ஆர்கிவ் பண்ணனும்னு அவசியம் இல்லை” என்று கூறி முன்னே அவன் செல்ல… ஓடி சென்று அவன் முன்னே நின்று இரு கைகளையும் இடுப்பில் வைத்து அவனை முறைத்தாள் நவி.
“அப்புறம் என்கிட்ட மட்டும் எதுக்கு அவ்வளவு அர்கிவ் பண்றீங்க நீங்க? ” என்று கேட்க. .
இன்னும் ஆழ்ந்த நோக்கியது அவனது கூரிய கண்கள். “அவளும் நீயும் ஒண்ணா நிதா?” என்று கேட்டவனின் குரலில் அத்தனை மென்மையா? இல்லை அந்த வார்த்தைகளில் அத்தனை மென்மையாக என்று பெண்ணவள் புரிந்துகொள்ளும் முன் அவன் அங்கிருந்து நகர்ந்து இருந்தான்.
அடுத்தடுத்து ஒவ்வொரு இடங்களாக பார்த்துக் கொண்டு கடைசியாக ஜூகு பீச்சுக்கு வந்து அவர்கள் நிற்க. . விநாயகர் சதுர்த்தி முடிந்து ஊர்வலமாய் வந்த விநாயகர் சிலைகளை எல்லாம் அவ்விடத்தில் தான் கரைத்து இருந்தனர். அங்கு கால் வைக்கவே மனது உறுத்தியது நவிக்கு.
என்னதான் சிலைகளை கரைத்து இருந்தாலும், ஆங்காங்கே அவைகள் உடைந்து தலைகள் கை கால்கள் என கிடந்தன. அவற்றைக் கடவுளாக கும்பிட்ட கைகளும் உள்ளமும் இப்பொழுது எப்படி அதே இடத்தை கால்களால் மிதிப்பது என்று பதற.. சற்று ஒதுங்கி நின்றாள். கூடவே இம்லியும்.
கொஞ்சம் இருட்டிய வேளை… அதற்கும் மற்றவர்களும் எங்கு சென்றார்கள் என்று தெரியாமல் நவியும் இம்லியும் இருக்க…முறைத்துக் கொண்டே வந்த விதுரன் “கிளம்புங்க… கிளம்புங்க… இங்க நிக்க வேணாம்!! நீங்க வண்டியில் உட்கார்ந்திருங்க” என்றவாறு வந்து நின்றான் விதுரன்.
“விதுரன் பேர் வச்சுட்டு நம்மை விரட்டுவதிலேயே குறியாக இருக்கிறான் இவன்!!”என்று முணுமுணுத்துக்கொண்டே முன்னே சென்றாள் நவி.
சட்டென்று அவள் கையை பிடித்து நிறுத்தியவன் “ஏன் சொல்றேனு எதுக்கு சொல்றேன்னு புரிஞ்சுக்கணும்!!” என்று சுற்றிலும் அவன் கண்களால் காட்ட அப்போதும் அவளுக்கு புரியவில்லை.
அதற்குள் இம்லி பசிக்குது என்று கூற எதிரில் இருந்த ஒரு வடாபாவ் கடையைக் காட்டி அங்கே சென்று வாங்கு என்று காட்டிய விதுரன், இவளுக்கு மீண்டும் கண்களை ஒரு இடத்தில் சுட்டிக்காட்ட பார்த்தவளின் முகம் குப்பென்று சிவந்து போனது சட்டென்று உதட்டை கடித்து கொண்டாள்.
அங்காங்கே அந்த இருட்டில் காதலர்கள் தங்கள் காதல் லீலா வினோதங்களை நடத்திக் கொண்டிருந்தனர். இவர்களோடு வந்த பசங்க எல்லாம் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. கண்கள் விரித்து அந்தக் காதலர்களை சற்று நேரம் பார்த்தவளை, நமட்டு சிரிப்போடு பார்த்தவன், ‘ம்க்கும்! ‘ என்று தொண்டையைக் கணைத்த அடுத்த நிமிடம் சிவந்த முகத்தை அவனிடம் காட்டாமல் திரும்பிக்கொண்டாள் நவி.
இருள் சூழ்ந்த நேரம்…
நெஞ்சின் ஓரம் நேசம்…
தனிமையான சூழல்…
மனதின் ஓசைகள்…
இதழில் மௌனங்கள்…
காதல் கொண்ட மனங்கள்…
ஆனாலும்… ஏதோ ஏதோ தயக்கங்கள்!!!
“நிதா…” என்று தயக்கங்கள் உடைத்து மெல்ல விதுரன் கூறி அவளின் பின்னால் நின்றான். அவள் மெல்ல திரும்பி அவனை பார்க்க…
“நிதா…!!” என்று மீண்டும் மென்மையாக அழைத்தவனின் விரல்கள் அவளது பட்டுக் கன்னங்களை உரச… விழிகள் மூடிக்கொண்டவளின் தேகம் சிலிர்த்தது. மீண்டும் அவனது ஒற்றை விரல் அவளது கன்னத்தை மெதுவாக வருட.. இம்முறை அவனது கைகளைப் பிடித்து தன் இரு கைகளை பொதித்துக் கொண்டாள்.
ஆழ்கடலைப் போல அமைதியே நிலவியது இருவருக்குள்ளும்!! அலைகளின் சத்தம் மட்டுமே அங்கே ஆர்ப்பரித்தது!!
நொடிகள் நிமிடங்களாக… வைத்த கண் வாங்காமல் மெல்லிய இருளில் பெண்ணவளை இமைக்காமல் பார்த்து இருந்தான் விதுரன். அவனின் பார்வை கூராய் அழுத்தமாய் படியாமல் மென்மையாய் அவளை ஆராய என்னவோ போல் ஆனது நவிக்குள்.
அவனின் அந்த பார்வை வீச்சை தாங்க முடியாமல் பார்வைகளை இங்கும் அங்கும் நகர்த்தினாள்… காற்றில் அலைந்த முடிக்கற்றைகளை காதோரம் ஒதுக்கினாள்…
படபடத்த ஷாலை இருகைகளால் இறுக்கிக்கொண்டாள்… ஏனோ மனம் தள்ளாடியது அவளுக்கு!! இப்பார்வையைத் தாங்க முடியாமல்…
மெல்ல அவளைப் பார்த்துக் கொண்டே அவளை நெருங்கினான் விதுரன். அவனை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை பெண். இம்முறை அவளது கற்றை கூந்தல் கன்னக் கதுப்புகள் விளையாட… அவனை மீறி ஆசையோடு அதனை பார்த்தவன் மெல்ல விரல்களால் அவற்றை ஒதுக்கி விட்டான், காது மடல்களுக்குப் பின்னால்… ஏனோ ஒரு நிமிட செயல் தான் அது!! அதுவோ ஐந்து நிமிடங்களாக ஆனது அந்த கற்றை முடிகளை ஒதுக்கி விட அவனுக்கு!!
“நிதா… என்னை பாரு.. என் கண்களை பாரு!!” என்று அவனை மெல்ல நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் அவன் கண்கள் கவ்வி கொண்டது.
கண்ணசைவிலே அவளை அருகே அழைத்தான். அவளோ இன்னும் அவன் பார்வை வீச்சிலேயே கட்டுண்டு இருக்க சிலையாய் நின்றவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள போன சமயம்…
“ஸ்வீட் ஹார்ட்… வடா பாவ்!!” என்ற சத்தத்தோடு ஓடிவந்தாள் இம்லி!! நிதர்சனம் புரிய இருவரும் விலகி திரும்பி நின்று கொண்டனர்.
“வடப் போச்சே!!!” என்ற மன நிலையில் விதுரன்!!
Super sis