மோகம் – 03
அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து விட்டாள் ஆதிரா. இது வழக்கம் தான் என்பதால் மெத்தையில் இருந்து இறங்கி வேகமாக பல் துலக்கி அவசரம அவசரமாக தலைக்கு குளித்தும் விட்டு இருந்தாள். தலையை துவட்டிக் கொண்டே வெளியே வந்தவள்… பாத்ரூமில் மீண்டும் சென்று ஒரு பக்கெட்டில் நீரை நிரப்பிக்கொண்டு கூடவே கோலமாவையும் எடுத்துக் கொண்டு வாசலை நோக்கி நடந்தவள்… கதவின் முன் ஆணியில் மாட்டப்பட்டு இருந்த சாவியை எடுத்து பூட்டைத் திறந்ததும்… துடைப்பத்தை எடுத்து வேகமாக கூட்டி விட்டு நீரை தெளித்து ஒரு அழகிய மயில் கோலம் ஒன்றையும் வரைந்தாள். இன்று வெள்ளிக் கிழமை என்பதால் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதில் ஒரு பூ ஒன்றையும் சொருக இப்போது அதைப் பார்க்க திருப்தியாக இருந்தது. அந்த திருப்தி அவள் முகத்திலும் ஒரு சிறு புன்னகையை வெளிப்படுத்தியது.
அவள் கோலம் போடுவதையே ஆசையாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மஹாலக்ஷ்மி. அவருக்கு என்னதான் வேறு மாநிலத்திற்கு வந்து தஞ்சம் புகுந்து கொண்டாலும் தன் கலச்சாரத்தை மறப்பது பிடிக்காது. அவ்வப்போது மகளுக்கும் தான் சிறுவயதில் இருந்து கடைப்பிடிப்பதை சொல்லித் தருவார்.
“என்னம்மா உள்ளே வீட்டை பெருக்கியாச்சா…?” என்று கேள்வியை கேட்டுக் கொண்டே எல்லாவற்றையும் உரிய இடத்தில் வைத்து விட்டு பூஜை அறை நோக்கி விரைந்தாள். மஹாலக்ஷ்மியும் தலைக்கு குளித்து விட்டு நின்று இருந்ததால் இருவருமாக சேர்ந்து விளக்கு ஏற்றி அம்மனுக்கு பூஜை செய்து வீடு முழுவதும் சாம்பிராணி போட்டுக் கொண்டு இருந்தனர். ஒரு வழியாக பிராத்தனையும் முடிந்தாயிற்று.
“ஆதிரா… நீ எல்லாக் காய்களையும் வெட்டி வை. அதற்குள் நான் இங்க தேவையான பாத்திரங்களை ஒரு தடவை சுடு தண்ணீரில் கழுவி வைத்து விடுகிறேன்.”
அவள் தலை மட்டும் ஆடியது. வேகமாக தக்காளியையும் வெங்காயத்தையும் வெட்ட ஆரம்பித்தவள். அப்போது கூடவே அவளுக்கு துணையாக இரண்டு பெண்கள் வந்து சேர்ந்து விட்டு இருந்தனர். அவர்கள் இவர்களிடம் வேலை செய்கிறவர்கள் போலும். ஆம் மகாலட்சுமி மாதுங்காவில் ஒரு பிரபலமான சிற்றுண்டி உணவகம் ஒன்றை இருபது வருடமாக நடத்திக் கொண்டு இருக்கிறாள். பெரும்பாலான மும்பை தமிழர்களுக்கு அந்த உணவகம் ஒரு வரப் பிரசாதமே. பாரம்பரிய தமிழ் நாட்டு முறை உணவுகள் இங்கு மட்டும் தான் சுவையுடன் தரமானதாகவும் கிடைக்கும். மற்ற இடங்களிலும் தமிழ் நாட்டு உணவகங்கள் இருந்தாலும் மஹாவின் கடையின் சுவையையும் விலையையும் அடித்துக் கொள்ள முடியாது. பெரும்பாலும் இந்த கடை காலை எட்டரை மணியில் இருந்து பதினொரு மணி வரை தான் இருக்கும் அதற்குள்ளாகவே ஆயிரத்திற்கு மேற்பட்ட இட்லிக்கள் விற்று போய்விடும். அவ்வளவு கூட்டம் இருக்கும். அவளின் கடை மாதுங்கா ரயில் நிலையம் அருகில் இருப்பதால் ரயில் பயணிகள் கூட வாங்கி உண்பது உண்டு.
கட கடவென்று எட்டரை மணிக்குள்ளாகவே அனைத்தையும் அந்த நால்வருமே செய்து முடித்து இருந்தனர். கூட்டம் வேகம் எடுக்கவும் ஆளுக்கு ஒரு பக்கம் என்று பிரித்து மும்முரமாக வேலையில் ஈடுபட சிறிது நேரம் கூட உக்கார அவகாசம் இல்லாமல் வேலை தலைக்கு மேல் இருந்தது. எல்லாம் முடித்து ஓய்ந்து போவதற்குள் மணி ஒன்றை நெருங்கிக் கொண்டு தான் இருந்தது. அக்காடா என்று நால்வரும் அமர்ந்தது விட்டு இன்றைய வசூலைப் பற்றி பேசினார்கள். மற்ற இரு வேலைக்கு வரும் பெண்களுக்கு தின சம்பளத்தையும் முதலில் கொடுத்து விட்டு மற்ற சாமான் கணக்கையும் எழுத ஆரம்பித்து விட்டார் மஹாலக்ஷ்மி.
அது வரை அடக்கி வைத்து இருந்த கேள்வியை இப்போது கேட்டாள் ஆதிரா…. “ம்மா இன்னைக்கு எதுக்கு என்னை லீவ் போட சொன்னே…?”
தாய் என்ன சொல்லப் போகிறாள் என்ற ஆர்வம் தாங்காமல் அவளின் முகத்தையே பார்த்த வண்ணம் அமர்ந்து இருந்தாள்..
“நீ தான் ஒரு கொலையை நேரில் பார்த்தே, அதில் எனக்கு பயம் அது இதுன்னு புலம்பினாயே அதான் இரண்டு நாள் லீவ் எடுத்து மனதை இலகுவாக்கத்தான் எடுக்கச் சொன்னேன்…” என்றதும் அவளுக்கு சப் என்று ஆகிவிட்டது.
“ம்மா… நான் தான் இன்னைக்கு லீவ் ஆச்சே…நம்ம ரெண்டு பெரும் எங்காவது வெளியே போகலாமா…? வெளியே ரெண்டும் பேரும் போய் ஒரு வருஷம் முடியப்போகுதே.”
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இப்போ சீசன் சரி இல்ல… எனக்கு ஆயிரத்து எட்டு வேலை இருக்கு. போ போய் எதாவது படி இல்லன்னா டீவியாவது பாரு.” என்று அவளை விரட்டினாள் தாய்.
“க்கும்… சும்மா வீட்டில் பொழுதை எப்படி நெட்டித் தள்ளுவது… சும்மா இருக்கும் மனம் சாத்தனின் உலைகளம் என்று சும்மாவா சொன்னார்கள்… அது போலவே அந்த பழுப்பு விழிகளின் சொந்தக்காரன் அவன் முன் வந்து ஏதேதோ மிரட்டுவது போல இவளுக்கு மனம் கற்பனைக் குதிரைப் போல் எங்கங்கோ அலைப் பாய்ந்து ஓட… ச்சை இதற்கு தான் வெட்டியாக இருக்க கூடாது போல… என்று தன்னையே கடிந்து கொண்டவள்… அவளுக்கு பிடித்த பொழுதுபோக்கில் ஒன்றான ஓவியம் தீட்டத் தொடங்கிவிட்டாள். முதலில் மனம் அதில் இழையாமல் முரண் காட்டினாலும் போக போக அதில் ஒன்றிப் போய்விட்டது.
சிறிது நேரம் கழித்து மஹாலக்ஷ்மி தன் வேலைகள் எல்லாம் முடிந்த பின்பு ஆதிராவின் அறைக்குள் நுழைய… அங்கு அவர் கண்டது அவளின் அழகான சந்திரனும் சூரியனும் நேர்கோட்டில் சந்தித்து கைக் கோர்த்துக் கொள்வது போன்ற ஒரு ஓவியம். ஒரு பக்கம் ஆரஞ்சும் சிகப்பும் கலந்த நிறமும் இன்னொரு பக்கம் நீலம் வெள்ளை நிறமுமாக பார்க்கவே கண்களை கவரும் படி இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தவர்…. “என்ன ஆதிரா…? திடிரென்று ரொம்ப நாள் கழித்து வரைந்து இருக்கிறாய் போல…? இதன் கருப்பொருள் என்ன…?” என்று ஓவியத்தைப் பார்த்துக் கொண்டே கேட்க…
“ஹான்… பே வ்வென்று விழித்தாள் ஆதிரா. அவள் ஏதோ ஒரு யோசனையில் தன் போக்கில் வரைந்தது. இதன் கருப்பொருள் என்னவாக இருக்கக் கூடும் என்று இப்போது தான் அந்த ஓவியத்தை வேறு கோணலில் சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.
அப்போது மஹாலக்ஷ்மியின் குரல் அவளின் சிந்தனையை கலைத்தது. “என்ன ஆதி…? எப்போதும் ஒரே யோசனை…? ஒரே விசித்திரமாகவே நடந்து கொள்கிறாயே…? ஏதும் பிரச்சனையாம்மா…?” என்று பரிவுடன் கேட்டார் தாய். ஆதிராவின் நடவடிக்கை இந்த கொலை சம்பவத்தில் விசித்திரமாக மாறிப் போவதை உணர்ந்ததால் அவளிடமே தெரிந்து கொள்ள நேரடியாக கேட்டார்.
மஹாலக்ஷ்மி எப்போதாவது தான் பரிவாக பேசுவார். அதை கேட்டவள்… “அதெல்லாம் ஒன்னும் இல்ல மஹா… சும்மாவே இருந்து ஒரே அலுப்பாக இருந்ததா… அதான் இதை வரைந்தேன். நான் எந்த கருப்பொருளும் வைத்து வரையல… மனசில் பட்டதைத் தான் வரைந்தேன்.” என்று சொல்லவும்… மகாவின் பார்வை ஆதிரா தீட்டிய ஓவியத்தின் மேல் படிந்தது.
அவர் அதை ஒரு நிமிடம் உற்று நோக்கி புருவம் நெறிய மனதிற்குள் சிந்தித்துக் கொண்டே சொன்னார்… “சூரியனும் சந்திரனும் எதிர் துருவங்கள் ஆதிரா… அதன் கவர்ச்சி விசை இருவரையும் காந்தம் போல் இழுக்கலாம் ஆனால் என்றுமே இரண்டும் ஒன்றாக பயணிக்க முடியாது ஆதிரா. “ இதன் கருப்பொருள் “இரு துருவங்கள்” என்று தன் எண்ணவோட்டங்களை வாக்கியத்தை முடித்தார்.
அவர் இன்று சொன்ன வாக்கியம் பசு மரத்தாணி போல் ஆதிராவின் மனதில் பதிந்து விட்டது. இது பின்னால் ஆதிராவின் வாழ்வில் பல குழப்பங்களையும் சிக்கல்களையும் உண்டு பண்ணப் போவதை முன்பே மஹாலக்ஷ்மி அறிந்து இருந்தால் இதை கூறி இருக்கமாட்டாரோ என்னவோ…?
“அப்போ ஒரே துருவங்கள் ஈர்க்குமாம்மா…?” என்று அடுத்த கேள்வியை கேட்டாள் மகள்.
“அதில் ஈர்ப்பு பெரிதாக இராது ஆனால் வாழ்வில் அதிகம் நிம்மதி, காதல், மகிழ்ச்சி எல்லாம் இருக்கும் ஆதி… மனம் ஒத்த தம்பதிகளுக்குள் சந்தோசம் இல்லாமல் ஏது? நீயும் அகரனையும் போல ” என அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினார்.
அகரனைப் பற்றி பேசும் போது இவள் முகம் புன்னகையில் மலர்ந்தது. “அம்மா, அகரன் லண்டன் போய் நான்கு வருடம் முடியப் போகுதே… இன்னவரைக்கும் இந்தியா வருவதாக அவன் ஒரு தடவை கூட சொல்லவே இல்லையே…?” என்றவளுக்கு முகத்தில் சோகம் படர்ந்தது.
“அவன் வருவான். கூடிய சீக்கிரம் வருவதாக சொல்லி இருக்கிறான். அநேகமாக அவனை நீ நாளைக் காலை எதிர்ப்பார்க்கலாம் ஆதிரா.” என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மஹா.
“ம்மா என்று வாயை பிளந்தவள்… ரியலி… ஏன்ம்மா…? என்கிட்டே முன்னாடியே சொல்லலை…?” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு துள்ளி குதித்தாள் மகள்.
“சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று தான் நினைத்தேன் ஆனால் அவன் வருவதற்காக சில ஏற்பாடுகள் பண்ணனும். ஒரே வீட்டில் உன்னிடம் மறைத்து வைத்து விட்டு செய்யமுடியாது இல்லையா…? அதான் போட்டு உடைத்து விட்டேன்.” என்று சொல்லிவிட்டு அவர் அறையை விட்டு சென்று விட… அப்படியே மெத்தையில் மல்லாக்க விழுந்தவள் அகரனைப் பற்றி சிந்திக்கலானாள்.
“இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாகத் தான் வளர்ந்தவர்கள். இருவருக்கும் அப்படி ஒரு அன்னியோன்யம் இருக்கும். ஆதிராவிற்கும் அவனுக்கும் இடையில் எந்த ஒளிவும் மறைவும் இருக்காது. ஒட்டுண்ணிகள் என்பார்களே அது போல தான் இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள். அவன் மும்பையில் பள்ளி படிப்பை முடித்து, ஐ.ஐ.டியில் இன்ஜினியரிங் முடித்து விட்டு மேலும் அகமதாபாத்தில் உள்ள ஐ ஐ எம்மில் எம்.பி.ஏ முடித்ததும் ஐந்து வருடம் ஒப்பந்தப் படி லண்டனில் இருக்கும் பிரபல பன்னாட்டு நிறுவனத்த்தில் பல லட்சங்களை எட்டும் வேலையில் இருக்கிறான்..
அவன் லண்டன் போய் நான்கு வருடம் ஆன போதும் அவ்வப்போது இருவரும் வீடியோ காலில் பேசிக் கொள்ளத் தான் செய்தார்கள். லாங் டிஸ்டன்ஸ் என்பார்களே அது போலத் தான் அவர்களின் உறவும் தொடர்ந்து வந்தது. அவன் அவளிடம் கூட இந்தியா வருவதாக சொல்லவே இல்லையே என்று கோபம் கூட வந்தது.
எப்படி இருந்தாலும் அவன் வருகிறான் என்ற போது அவளுக்கு மற்றற்ற மகிழ்ச்சியாகவே இருக்க… மற்றவை யாவும் மறந்து போயின.
அவள் அகரனின் வருகைக்காக வீட்டை இன்னும் நன்றாக் சுத்தம் செய்து அறையை நன்றாக அலங்காரம் செய்து வைத்தாள். ஆதிரா மாங்கு மாங்கு என்று சுத்தம் செய்வதைக் கண்ட மஹாலக்ஷ்மி நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
“ஒரு வேலை அகரன் நாளைக்கு நம்ம வீட்டுக்கு வரமாட்டான் என்று சொன்னால் நீ என்னப் பண்ணுவ ஆதி…?”
தாயின் கூற்றில் அதிர்ச்சியுடன் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் ஆதிரா.
“ம்மா…அவன்…வரலைய்யா…? அப்போ…எல்லாம் பொய்யா?” என்றவளுக்கு அந்த திடிர் ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையடி…சும்மா உன்னை சீண்டினேன். உனக்கு சர்ப்ரைஸாக இருக்கட்டும். என்று நானே எல்லா வேலையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யமுடியுமா…? பார் இப்போது எப்படி வேலை நடக்கிறதுன்னு…?” என்று ஹாலைக் சுற்றி கண்களை ஓடவிட…
சரியான ஆளு தான் மா நீ…? என்று சொல்லிவிட்டு அலங்காரப் பொருட்களை ரேக்கில் அடுக்கி வைத்தாள்.
“நடக்கட்டும் நடக்கட்டும்…” மஹா பீறீட்டு வந்த சிரிப்பை இதழுக்குள் அடக்கிவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்து டீ போட ஆரம்பித்துவிட்டார்.
“ம்மா…” என்று பூனைக் குட்டி போல் பின்னால் வந்த மகளைத் திரும்பி பாராமல்… “ம் சொல்லு…?” என்று குரல் மட்டும் வந்தது.
“அது…நாளைக்கு அகரனுக்காக என் கையால் கேக் பண்ணலாம்னு இருக்கேன்…ன்…ன்…” என்று வார்த்தையை ஜவ்வாக இலுக்க…
“பண்ணு.”
“அதுக்கு சில பொருள் வாங்கணும்மா.” நான் போய் வாங்கி வந்து விடட்டா…?” என்றாள் தாயின் அனுமதி வேண்டி ஆர்வமாக அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“ம்“ என்ற ஒற்றை வார்த்தை தான் மஹாவிடம் இருந்து வெளிப்பட்டது.
ஐ ஜாலி என்று மனதிற்குள் துள்ளிக் குதித்தவள்… அவசரமாக முகத்தை கழுவி, லேசாக ஒப்பனை செய்து கொண்டு, பிங்க் ஸ்கார்ப் தோளை சுற்றி அணிந்து கொண்டு தாயிடம் விடைப் பெற்று விட்டு வேகமாக கிளம்பினாள். எப்படியும் இப்போதே சூரியன் மறைந்து விட்டு இருந்தது. எல்லாப் பொருள்களையும் வாங்கி முடிக்கவே ஒரு மணி நேரம் ஆகும். முடிந்த அளவு சீக்கிரமே வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் அவசரமாக ஸ்கூட்டியை உயிர்ப்பித்து வேகமாக செலுத்தினாள்.
அப்போது யாரோ ஒருவன் அவள் வீட்டை விட்டு ஸ்கூட்டியில் வெளியே போவதை போனில் தகவல் சொல்லிக் கொண்டு இருந்தான்.
இரண்டு கிலோ மீட்டருக்குள் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டு தான்.
மும்பையில் மாலை நேரத்து டிராபிக் ஜாம் பற்றி சொல்ல வேண்டுமா என்ன…? இரண்டு கிலோ மீட்டர் செல்வதற்குள் அரை மணி நேரம் டிராபிக்கில் மாட்டி ஒரு வழியாக சூப்பர் மார்கெட்டும் வந்தாகி விட்டது.
நேராக கடைக்குள் சென்று கேக்கு தேவையான பொருட்களோடு அகரனுக்காகவும் சில பொருட்களை வாங்கினாள். அவள் ஏற்கனவே அவனுக்காக நிறைய வாங்கி வைத்து இருந்ததால் அதிகமாக வாங்காமல் மனதிற்கு பிடித்த கண்களை கவருகிற சிலவற்றை மட்டும் வாங்கிவிட்டு பில் கூட்ட வரிசையில் நின்று, ஒருவழியாக கடையை விட்டு வெளியே வருவதற்குள் மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டு இருந்தது.
எப்படியும் வீடு போய் சேர மணி பத்தை தாண்டும் என்பதை அறிந்தவள்… இங்கயே எதாவது கொறித்து விட்டுப் போகலாம் என்று எண்ணி… சூப்பர் மார்க்கெட்டுக்கு முன்னால் இருந்த ஈட்டரியில் சென்று ஒரு பன்னீர் சான்விட்ச் ஆர்டர் செய்து விட்டு அருகில் இருந்த கதிரையில் அமர்ந்து போனை நோண்ட ஆரம்பித்துவிட்டாள்.
பத்து நிமிடம் கழித்து அவள் ஆர்டர் செய்த பன்னிர் சான்விச்சோடு கூடவே சாக்லேட் மில்க் ஷேக்கும் மெக்ஸிகன் பாஸ்தாவும் அவள் டேபிளில் வைக்கப் பட்டு இருந்தது. அதை விழி உயர்த்திப் பார்த்தவள்… “இதை தான் ஆர்டர் செய்யவில்லை…?” என்பதை அந்த பணியாளிடம் சொல்ல… “உங்களிடம் கொடுக்கச் சொல்லி அந்த டேபிளில் இருப்பவர் தான் ஆர்டர் செய்தார்.” என்று கையை திசை நோக்கிக் காட்ட… பின்னால் திரும்பிப் பார்த்தவளுக்கு முதலில் சற்று தொலைவில் நின்றது அது யார் என்றே தெரியவில்லை. அப்போது தான் மூளையில் சற்று பொறித் தட்டியதுப் போல அதிர்ந்து விளித்தாள். அது வேறு யாரும் அல்ல…அன்று அந்த ஆட்டோவில் பாதியில் ஏறிய அந்த ராட்சசன் தான். இன்றும் அதே மாஸ்க் தான் அணிந்து இருந்தான். “மாஸ்க் டெவில்” என்ற வாசகம் கூட. கால் வேரோடிந்தது போல் அசையாமல் நின்றாள் ஆதிரா.
அவன் அவளை நோக்கி அருகில் வர, காலன் அவள் உயிரை பிடுங்க வேகமாக முன்னே வருவது போல் இருக்க கண்கள் இருட்டிக் கொண்டு காதுகள் பஞ்சடைத்துக் கொண்டது போல் அப்படியே மயங்கி சாய்ந்தாள்.
அவள் தன் இமைகளைப் பிரிக்கும் போது அவள் இருந்தது அவள் அறை அதுவும் அவளது பஞ்சணையில்.
ஒரு நொடியில் தான் போனது அவனை அவனை மீண்டும் சந்தித்தது எல்லாம் கனவோ என்று நினைத்து விட்டாள். அது இல்லை என்பதை உறுதி செய்வது போல் அவள் வாங்கி வைத்த பனீர் சான்விச்சே சான்று. ஆனால் எப்படி இது சாத்தியம்…? மயக்கத்தில் ஸ்கூட்டியை ஓட்டி வீடு வந்து சேர்வது நடக்குற காரியமா…? பின்னே வேறு என்னவாக இருக்கும்…? அந்த ராட்சசன் வேறு என் அருகில் வந்தானே…? என் கண்கள் இருட்டியது போல இருந்தது மட்டும் தான் நியாபகம் இருந்தது. அதற்கு மேல் வேறு எதுவும் நியாபகம் இல்லை பெண்ணவளுக்கு.
அப்போது சரியாக அறைக்குள் மஹாலக்ஷ்மியும் வந்தார் கையில் ஒரு தம்ளர் பாலோடு. “இந்தா குடி. பசிக்குதுன்னா அங்கேயே சாப்பிட்டு வரவேண்டியது தானே…? இப்படி தான் வீட்டு வாசல் முன் விழுந்துக் கிடப்பாயா…?” என்று கடிந்தார்.
“வ்வா…வ்வாசல் முன்பா…?” என்று திடிக்கிட்டு கேட்டாள்.
ஆமாம். ஒரு நொடியில் என் உயிர் என்னிடம் இல்லை… முகத்தில் நீரை அடித்தும் நீ கண் முழிக்கலைன்ன உடனே நான்…நா…என அதற்கு மேல் பேசவில்லை அவர்.
“அதான் இப்போது எல்லாம் சரியாகி விட்டதே அதை விடுங்க.” என்றவளுக்கு அதைப் பற்றி மேலும் பேச ஏனோ பிடிக்கவில்லை. அவள் வீடு வந்து சேர்ந்ததே பெரும் மாயமந்திரம் போல் தான் இருந்தது. அவள் அம்மா கொண்டு வந்த மஞ்சள் போட்டு காய்ச்சிய பாலை குடித்தவளுக்கு தான் கண்காணிக்கப் படுகிறோம் என்ற ஒன்று மட்டும் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
இவர்கள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்க சத்தியமாக வாய்ப்பே இல்லை…ஏனெனில் கடத்துபவர்கள் இப்படி வீட்டில் வந்து பத்திரமாக இரு முறை சேர்பித்து இருக்க மாட்டார்களே… ஆனால் அவர்கள் யார் என்று மட்டும் அவளுக்கு யூகிக்க முடியவில்லை. நிச்சயம் அவர்கள் நல்லவர்கள் கிடையாது அது நூறு சதவீதம் உறுதி அப்படி இருக்க இவர்களுக்கு இவளிடம் இருந்து எதை பெற முடியும் என்பதையும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இதை இதற்கு மேல் மறையாமல் தாயிடம் கூறிவிடுவது தான் நல்லது என்று அவள் மனம் சொன்னது.
நாளை காலை முதல் வேலையாக சொல்லி விடாலாம் இப்போது வேண்டாம் என்ற முடிவை எடுத்தவள் தனக்கு அருகில் இருந்த உணவு பொட்டலத்தைப் பார்த்தவளுக்கு சிரிப்பு கூட வந்தது.
அந்த ராட்சசன் உணவை பார்சலாக மாற்றி வாங்கி வீடு வரை கொடுத்திருகிறானே…? என்று தாடையில் கை வைத்து யோசித்தவள்…”இவன் கொஞ்சம் நல்லவன் தானோ…?” என்று பாஸ்தாவை உள்ளே தள்ளிக் கொண்டே யோசித்துக் கொண்டு இருந்தாள்.
அதற்கு நேர் மாறாக தான் முழு அரக்கன் என்பதை அவன் நிருபித்துக் கொண்டு இருந்தான் அவன்.
ஆதிரா அவனைக் கண்டு மயங்கிய நொடி… கீழே டேபிளில் விழுந்தவளைப் பிடிக்கக் கூட தோன்றாது புருவம் சுருக்கிப் பார்த்தான்.
கூட நின்ற அந்த ஈட்டரியில் வேலை செய்யும் பணியாள் தான் பதறி…மேடம் மேடம்… என்று கையைப் பிடித்து எழுப்ப… அதற்குள் அந்த ராட்சசனின் அடியாட்கள் இவளை நெருங்கி அலேக்காக தூக்கி காரில் போட்டுவிட அவள் வாங்கிய உணவையும் பார்சல் சொல்லி விட்டு…அவளின் உடைமைகளையும் ஸ்கூட்டியையும் எடுத்துக் கொண்டான் இன்னொரு அடியாள்.
அவன் காரில் அவனருகில் தான் மயங்கி சரிந்து கிடந்தாள். ஒரு பத்து நிமிடம் கழித்த பின்பு… அவளுக்கு மெல்ல மயக்கம் தெளிய.. அதை கடைக் கண்ணால் பார்த்தவனின் பார்வை சுருங்க…
“ டேவிட்” என்று குரல் கொடுத்தான்.
காரில் முன் சீட்டில் அமர்ந்து இருந்த அவன் தம்பி டேவிட் பின்னால் திரும்பி இவன் முகத்தைப் பார்த்தே அவன் என்னக் கேட்கிறான் என்பதை உணர்ந்தவன் சற்று தயங்கினான்.
“அண்ணா…சின்னப் பொண்ணுண்ணா…” என்று மனசு கேட்காமல் தயங்க..
“ம்…” என்று அவன் உறுத்து விழிக்கவும் தான் ஒரு பெருமூச்சுடன் அந்த ஊசியை அவனிடம் கொடுத்தான்.
அவன் அதை லாவகமாக மெல்ல அவள் உடலில் செலுத்த…அது முதல் முறை என்பதால் உடல் தூக்கிப் போட்டது. மெல்ல கண்கள் சொருக மீண்டும் மயக்க நிலைக்கே சென்றவள் அவன் மீதே சாய்ந்தாள்.
அப்போது தான் தீ சுட்டாற் போல் அவளைத் தன்னிடம் இருந்து உதறி தள்ள… காரின் அந்த மூலையில் போய் விழுந்தாள் ஆதிரா. மயக்க நிலையில் இருப்பதால் அவளுக்கு அதை உணர்ந்து இருக்க வாய்ப்பு இல்லையே.
மூலையில் போய் விழுந்து கிடந்தவளை இப்போது தான் நன்கு உற்றுப் பார்த்தான் டேவிட். தன் கண்களையே நம்ப முடியாமல் மீண்டும் கண்ணை நன்றாக் தேய்த்து விட்டுக் கொண்டு பார்க்க… அண்ணா இந்தப் பெண்…இவள் எப்படி? அது எப்படி சாத்தியம்…? என்று வெகுவாக அதிர்ந்து போனான்.
அவன் முகத்தில் அலட்சியமான தோரணை.
அந்த பெண்ணின் மேல் சிறு பரிதாபம் ஏற்பட… “பாவம் விட்டுவிடுங்களேன்…” என்றான் சற்று கெஞ்சிய குரலில்.
அவனின் சுட்டேரிக்கும் பார்வையில் இவன் தான் அடங்கிப் போக வேண்டியதாகப் போயிற்று.
“இதை வேறு யாராவது என்னிடம் சொன்னால் அவனை இந்த நேரம் பரலோகத்தில் பார்சல் பண்ணி இருப்பேன் என் தம்பி என்பதால் உனக்கு இந்த உயிர் சலுகை. எல்லா நேரமும் என்னிடம் எதிர்ப் பார்க்காதே. பிறகு தம்பி தானே என்றெல்லாம் யோசித்துக் கொண்டு இருக்கமாட்டேன்.” என்றான் கடுமையாக எச்சரிக்கும் குரலில்.
இதற்கு மேல் பேசி அவன் உயிரை பலியாக்க அவன் என்ன முட்டாளா…? அதற்கு மேல் அந்த காரில் அமைதி மட்டும் தான்
“மந்திரி வீட்டு விஷயம் என்ன ஆகிற்று டேவிட்…?”
அப்போது தான் நியாபகம் வந்தவனாக… “ஆ… வீட்டில் ஒப்படைத்தாகி விட்டதுண்ணா… அவர்கள் வீட்டில் மந்திரி மிஸ்ஸிங் என்று போலீஸிடம் இன்னும் புகார் கொடுக்கவில்லை. ஆனால் நீங்கள் காட்டிய லைவில் தான் இன்னும் சில பேர் காய்ச்சல் வராத குறையாக நடுநடுங்கிப் போய் இருக்கிறார்களே…? எங்கே புகார் கொடுத்தால் தன் தலை தான் அடுத்து மண்ணில் உருளுமோ…? என்று கமிஷனர் நடுங்கிப் போய் இருக்கிறாராம். மாற்றுதல் கூட வாங்கிப் போய் விடலாமா…? என்று ஒரே புலம்பல். இப்போ வரை யாரும் எப் பை ஆர் கூட பைல் பண்ணவில்லையண்ணா…” என்று கூடுதல் தகவல் வந்து இருக்கிறது.”
அதைக் கேட்ட அந்த அரக்கனின் கண்களில் வெற்றிக் களிப்பு. அந்த வீடியோ விஷயமும் நியாபகம் வந்தது. அதில் மந்திரியின் ஒரு வயது கூட நிரம்பாத பேரன் உட்பட அந்த மந்திரியின் முழு குடும்பத்தையும் ரகசியமாக பதுங்கி துப்பாக்கியால் உயிருக்கு குறி வைத்து இருக்க… அதை அறியாமல் அந்த மந்திரியின் குடும்பம் தோட்ட வீட்டில் ஒவ்வொருவரும் சந்தோசமாக பேசி சிரித்து மாறி மாறி நிலா சோறு ஊட்டிக் கொண்டு இருந்தனர். அதை வீடியோ வழியாக கண்டவர் ஆடிப் போய்விட்டார். அவர் வீட்டில் இருக்கும் பத்து பேரின் உயிர் போவதற்கு பதிலாக தன் உயிர் போவது மேல் என்று எண்ணி அவன் காலில் விழுந்து கதறினார் அந்த மந்திரி. ஆனால் அவனுக்கு இன்னும் கோபம் குறையவில்லை. அவரால் தானே தான் இவ்வளவு தூரம் பயணப்பட வேண்டிய அவசியம் நேர்ந்து இருக்கிறது. அதனாலே தண்டனையும் கொடுமையாகவே கொடுத்தான். இப்போது தான் வெறி சற்று அடங்கினாற் போல் தோன்றியது அந்த ராட்சனுக்கு.
ஆதிராவின் வீட்டை அவன் கார் வந்து அடைந்த பின்… பெண் என்றுக் கூட பாராமல் பிடித்து தள்ளாத குறையாக அவளை காரில் இருந்து வெளியே உதறி தள்ளி விட்டு ஓங்கி காரின் கதவை அறைந்து சாற்றி விட்டு சென்று விட்டான்.
டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இறங்கி வந்த அகரன், இண்டிகோ மும்பை விமானத்திற்காக தன் பொருட்களை செக்கிங் செய்துவிட்டு காத்து இருந்தான்.
மோகம் தொடரும்…
Very bad
Very interesting ud