ATM Tamil Romantic Novels

கதைப்போமா காதலே‌.. 11

கதைப்போமா 11

 

 

நேற்று போதையில் நடந்தது எதுவுமே அவனுக்கு தெரியவில்லை! சில சில காட்சிகள் மட்டும் நிழற்படங்களாய்!! 

இதழ்களின் தீண்டல்களும்… 

உடல்களின் உராய்வுகளும்…

மென்மைகளின் மென் ஸ்பரிசங்களும்…

ஈர இதழ்களின் எச்சில்களும்… 

மட்டுமே எச்சமாய் அவன் நினைவுகளில்!!

 

“ம்ப்ச்… ஏதோ தப்பா நடந்துகிட்டேன் போலேயே நிதா கிட்ட… கொஞ்சம் கூட நிதானம் இல்லாமல்.. ம்ப்ச்… இல்லைன்னாசொல்லாமல் போக மாட்டாளே. அவ அப்படியே பட்ட பொண்ணும் இல்லையே.. போடா டேய் தேவா!!” என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டு மெதுவாக அங்கிருந்து திரும்பி வந்துவிட்டான் தன் அறைக்கு. அதற்குள் கணேஷ் அவனது உடமைகளை எல்லாம் பேக் செய்து வைத்திருக்கு “கிளம்பலையா தேவா உனக்கும் டைம் ஆயிட்டு தானே டாக்ஸி புக் பண்ணி இருக்கேன். சீக்கிரம் ரெடியாகு!!” என்றான்.

 

கிளம்ப மனது இல்லை.. ஆனாலும் கிளம்பி தான் ஆகவேண்டும்!! வேகமாக தனது பொருட்களை அடுக்கலாம் இல்லை கிடைத்த இடத்தில் தூக்கி போட்டு இழுத்து மூடியவன் அவசரக் குளியல் ஒன்றை போட்டு வந்தான். இருவரும் சேர்ந்து உடைமைகளை கீழே கொண்டு வைத்தார்கள். காலை உணவு தயாராகத்தான் இருந்தது. ஆனால் சாப்பிட நேரமும் இல்லை மனமும் இல்லை!!

 

இன்னும் ஒரு தரம்.. ஒரே ஒரு தரம் அந்த மொட்டை மாடியை சென்று பார்க்க வேண்டும் போல ஆவல் பெருகியது விதுரனுக்கு. “கணேஷ் ஒரு நிமிஷம் இதோ வந்துடறேன்!!” என்று வேகவேகமாக போக, லிஃப்ட் அப்போதுதான் சென்றிருக்க படிகளின் வழியே வேகவேகமாக நாலாவது மாடியை சென்று அடைந்தான்.

 

மூச்சு இறைத்தது விதுரனுக்கு. வேக வேகமாக மூச்சு வாங்கினான். அந்த மொட்டை மாடியில் அவர்களின் சிரிப்பு.. கோபம்‌‌.. சண்டை.. கேலி கிண்டல் என்று நிகழ்ந்தவைகளை நினைத்தவனுக்கு கடைசியாய் நேற்று நடந்தவற்றை நினைத்துப் பார்க்க சங்கடம் கலந்த பயம்!! கண்களை இறுக்க மூடி தலையை ஒரு உலுக்கு உலுக்கி கொண்டவன், ஆழ்ந்து சுவாசித்தான் நவியின் வாசம் அவன் சுவாசத்தில் லேசாய் படர அவனுக்குள் ஒரு நிம்மதி.

 

கேப் வந்துவிட்டதாக கணேஷ் அவனுக்கு போன் செய்ய மனதே இல்லாமல் அம்மாடியை விட்டு சென்றான் விதுரன்.

 

பயணம் செய்த அந்த ஒன்றரை நாளும் அவனுக்குள் அவள் நினைவுதான்!! ‘என்ன நினைத்திருப்பாள் என்னை பற்றி? காம மிருகம் என்றா இல்லை பெண்ணை கண்டால் பாய்ந்து விடும் காம பித்தன் என்றா? கடைசியில் இப்படி பிடித்த பெண்ணிடமே வெறி பிடித்தவன் போல் நடந்து இருக்கிறேனே? குடித்தால் குடி குடி முழுகும் என்று சும்மாவா சொன்னார்கள்!! இல்லையே நான் ஒன்றும் மொடா குடி காரன் இல்லையே… அன்று குடிபோதையை மீறிய போதை என்னை ஆட்கொண்டு விட்டது. அது அவள் எச்சில் தந்த போதை. அதுதான் என்னை கீழிறக்கி அவளிடம் அப்படி நடக்க காரணமாகிவிட்டது’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டான். தனக்குத்தானே விவாதித்துக் கொண்டான்.

 

போனில் அவள் நம்பரை எடுத்து வைத்து பார்ப்பதும் பின்பு அவளுக்கு மெசேஜ் டைப் செய்வதும் பின் அழிப்பதும் ஆகவே இருந்தான். கையெட்டும் தூரத்தில்தான் அவள்!! ஒரே ஒரு போன் செய்தால் போதும் இல்லை ஒரே ஒரு மெசேஜ் செய்தால் போதும்… ஆனால் இது எதுவுமே அவன் செய்யவில்லை!! தன்னை நியாயப்படுத்த விரும்பவில்லை. அவளாக என் நியாயங்களை புரிந்து வரட்டும் என்று விட்டு விட்டான்!!

 

கதைத்திருந்தால் கதை மாறியிருக்கமோ??

 

அவளது நியாயம் என்னவாக இருக்கக்கூடும்?

 

அந்தோணி மற்றும் நண்பர்களோடு சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தவள் மனம் உலைக்களமாக கொதித்துக் கொண்டிருந்தது ஒரு புறம்… மறுபுறம் தன் மீது கோபம் கொண்டிருந்தது.

 

அவன் இவளைப் பார்த்ததும் செல்லத்தான் நினைத்தான். இவள் தான் அவன் கையை பிடித்து நிறுத்தி பேச்சை வளர்த்தது. இப்போது ஏனடா அப்படி செய்தோம் என்று நொந்து கொண்டிருந்தாள்.

 

காதல் கொண்டு தாபம் ஏறி மோகத்தில் குளித்து தன் இணையினை இழுத்தணைத்து முத்தம் கொடுத்திருந்தால் அது வேறு விதம்.. அவனோ முழு மப்பில் இருந்தான். அதிலும் வேண்டாம் வேண்டாம் என்று விலகி போனவனை வம்படியாக இழுத்து பேசி… ச்ச் இப்படி ஆகிவிட்டதே என்று அவ்வப்போது உதடு கடித்து தன் மன ரணத்தை ஆற்றிக் கொண்டிருந்தாள். ஏனென்றால் அவளை சுற்றி மற்றவர்களும் இருக்க.. இவளின் எந்த ஒரு செயலும் அவர்களது கவனத்தை ஈர்க்கும் என்பதால் தன்னையே அடக்கிக் கொண்டிருந்தாள்.

 

அந்த ஒருநாள் எப்படி நடந்தது.. எப்படி கடந்தது என்று தெரியவில்லை! எப்போது சாப்பிட்டாள்? என்ன மற்றவர்களோடு பேசினாள்? எப்பொழுது தூங்கினாள்? என்று எதுவுமே தெரியவில்லை!! விடியற்காலையில் அவள் செட் செய்து வைத்த அலாரம் எழுப்பியவுடன் மற்றவர்கள் இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, நண்பர்களையும் எழுப்பினாள்.

 

அதற்குள் சென்னை வந்துவிட இறங்கியவள் அனைவருக்கும் விடைகொடுத்து அவள் தங்கியிருந்த ஹாஸ்டலை நோக்கி சென்றாள்.

 

முதல் இரண்டு நாட்கள் தான் ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் அதையும் கடந்து வரவேண்டும் அல்லவா? அவளோட வாழ்க்கை காத்திருக்கிறது. அதன் பின்னே ஓட வேண்டுமே என்று!! அன்று விடியலோடு உலகத்தின் ஓட்டத்தோடு இவளும் கலந்து கொண்டாள்.

 

அதன்பின் நாட்கள் மாதங்கள் ஆனது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் மீட்டிங்கில் எங்கே இம்முறை அவனை பார்த்தால் என்ன பேசுவது என்று இவள் தட்டுத்தடுமாறி கொண்டிருந்தாள். அதற்கான வாய்ப்பை கம்பெனி அவர்களுக்கு வழங்க வில்லை. ஏனென்றால் சென்னை மக்களுக்கு மட்டும் தனியாக மீட்டிங்கும்… ரெஸ்ட் ஆஃப் சென்னை ஊழியர்களுக்கு தனியாக மீட்டிங் என்று வைத்துவிட, ஸ்ஸப்பாடா என்று சற்று ஆறுதல் மூச்சு வந்தது அவளுக்கு.

 

அன்று இரவு நடந்தது அவனுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் போதையின் கிறக்கத்தில்.. ஆனால் பாவையவளுக்கு தெரியுமே!! எந்த முகத்தோடு அவனைப் பார்ப்பது என்று மனதில் புழுங்கி கொண்டிருந்தவளுக்கு இந்த அறிவிப்பு ஆத்ம நிம்மதியை தந்தது.

 

அதன் பிறகு நாட்கள் வேகமாக செல்ல… அவளை அவனும்.. அவனை அவளும் மனதளவில் மட்டுமே நினைத்திருந்தனர். இதற்கும் ஒரு போன் காலோ.. ஒரு மெசேஜ் இருவரிடத்திலும் இல்லை.

 

ஆனால் தெளிந்த நீரோடை போல இருந்த மனதில் கல் எறிந்தது போல அவன் மீதான சின்ன சலனம் அவன் மீது ஈர்ப்பாய் மாறியிருக்க.. அது காதலாக மாறிவிடுமோ என்று பெரும் பயம் ஆட்டிப்படைத்தது நவிக்கு. 

 

அவளுக்கு மற்றவர்களை குறித்து பயம் ஒரு புறம் என்றால் அவளை குறித்தே பெரும் பயம்!! தன் மீது விருப்பம் இல்லாத ஆணை காதலிக்கச் சொல்லி தன்னால் எப்படி வற்பறுத்த முடியும்? அப்படியே கூறினாலும் அது அவளின் சுயமரியாதைக்கு இழுக்கு அல்லவா? வேண்டாம் இந்த நினைப்பு!! வேண்டவே வேண்டாம்!! என்று அவள் ஒதுங்கினாலும், பாசிபடர்ந்த குளத்தில் கல்லை விட்டு எறிந்தால் சிறிது நேரத்திலேயே மீண்டும் அப்பாசி அக்குளத்தை முழுவதுமாக நிரப்பிவிடுமே… அதுபோலதான் அவளது மனமும் அவனை மறக்க வேண்டும் என்று மனதளவில் முடிவு எடுத்திருந்தாலும், அது பாசி படர்ந்த குளத்தின் கதை போல்தான் ஆனது.

 

இப்படியாக நாட்கள் செல்ல.. இரண்டு வருடங்கள் ஓடி விட்டது வெறும் நினைவுகளோடு!!

 

ஆம் விதுரனின் நினைவுகளோடு!! தான் மறந்துவிட்டேன் என்று அவள் மனம் மறைத்து கள்ளம் கூறினாலும் இரவு முழுவதும் அவளின் மனதை ஆட்சி செய்யும் அந்த கள்ளமும் அந்த கள்ளத்தின் கள்வனும்!!

அது கூட தான் தனி சுகமாய் இருந்தது நவிக்கு!!

 

‘தான் மட்டுமே அவனை நேசிப்பத என்பது ஒரு தலைக்காதல்!!

அவனும் நேசித்தால் அது காதலாகி விடும். வேண்டாமே!! 

அதில் வலிகள் வரும்… 

எதிர்ப்புகள் வரும்… 

தடைகள் வரும்!! 

காதலாகி கசிந்திருகி 

அல்லல்பட்டு லோல்ப்பட்டு வீட்டில் சம்மதம் வாங்கி… அப்படி சம்மதம் எளிதில் வாங்கி விடத்தான் முடியுமா? அதனால் அப்பக்கமே போகவேண்டாமே!!

விட்டு தள்ளியே இருப்போம்!!

 

தான் மட்டும் மனதளவில் நேசிக்கும் 

அவனை.. 

அவனுக்கே தெரியாமல்… 

அவனுக்கே சொல்லாமல்…

அவனுக்கே தொந்தரவு செய்யாமல்.. 

தன் உள்ளேயே வைத்து பார்த்து.. பார்த்து..

அவன் நினைவுகளை ரசித்து ரசித்து..

அதில் தன்னை மறந்து லயித்து.. லயித்து…

அதில் எழும் உணர்வில் சிலிர்த்து சிலிர்த்து…

இப்படியாக.. நினைவுகளில் மட்டும் அவனுடன் நெருங்கி.. 

நிஜத்தில் தூர நின்று..  

இந்நிலை!! காதலை விட ஒரு படி மேலே தானே!! 

 

காதலை தூரமாய் நின்று ரசித்தல் கூட ஆகச் சிறந்த நன்மையே!!

அது மனதை காயப்படுத்தாது.

அது சொல்லால் வலிக்க விடாது.

அது செயலால் காயப்படுத்தாது. 

அது பேசி பேசி ரணப்படுத்தாது.

 

 

என்னை உனக்கு பிடித்திருக்கிறதா என்ற கேள்வியே இங்கில்லை!!

உன்னை எனக்கு பிடித்திருக்கிறது!! அது போதும்!! உன்னை பிடிக்கின்ற அளவுக்கு உன்னை ரசித்து மகிழ்வேன். துன்பமில்லை!! துயரமில்லை அந்நினைவுகள்!! அவ்வொரு தலைகாதல்!!

 

ஏனென்றால் அது என் நினைவுகள் மட்டுமே!!

அந்நினைவுகள்..

நான் நினைத்ததை தான் பேசும்!! 

நான் நினைத்ததை தான் செய்யும்!!

நான் நினைத்தால் என்னோடு கொஞ்சி குலாவும்!!

எனக்கு கோபம் வந்தால் கெஞ்சி கூத்தாடும்!!

மொத்தத்தில் என்னை கொண்டாடும்!!

அது போதுமே எனக்கு!!

 

சில நேரங்களில் காதலில் காட்சிப் பிழைகளும்… கானல்நீர்களுமே களிப்பூட்டும்!!’ 

 

என்று மனதளவில் அவன் எட்டாகனி என வாழ பழகிக் கொண்டாள் நவி!!

 

இப்படியாக இரண்டாம் வருட முடிவில் மீட்டிங் என்று இம்முறை அவர்கள் சென்றது கேரளாவின் ரெசார்ட் ஒன்றுக்கு!!

 

அங்கேயாவது கதைப்பார்களா?

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top