“இம்முறை ஆன்வெல் மீட்டிங் கேரளாவுக்கு!! அதுவும் ரெசார்ட்!!” என்று தன் அறை தோழி சத்யாவிடம் சந்தோஷத்தில் குதித்தாள் நவி.
அவள் ஐடியில் வேலை பார்ப்பவள் போனமுறை ஆஃபிஸ் டூர் என்று இரண்டு நாட்கள் கேரளா போட் ஹவுஸ் போய் வந்ததை பெருமை பேசிக் கொண்டிருந்தாள். அதனால் பதிலுக்கு பதில் பழி வாங்கிக் கொண்டிருந்தாள் நவி!!
அருகிலுள்ள கேரளாவிற்கு செய்வதெல்லாம் பெரிய விஷயமே இல்லை!! ஒவ்வொரு முறை அன்வெல் மீட்டிங்கும் ஒவ்வொரு பகுதியில் தான் போடுவார்கள் நவி கம்பெனியில். ஆனால் இது ஒரு பெரிய விஷயமாக சத்யா சொல்லிக்கொண்டு இருந்ததற்கு திரும்ப அவளிடம் சொல்லி சொல்லி வெறுப்பேற்றினாள்.
“நவி ஒரு கண்ணாடி மாதிரி!! நீங்க என்ன கொடுக்கிறீங்களோ அதையே தான் அவளிடம் இருந்து பெற முடியும்” என்று போகிற போக்கில் கூலிங் கிளாசை மாட்டியவள் அவள் முன்னால் ஏத்தி இறக்கி ஒரு கண்ணை சிமிட்டி விட்டு சென்றாள்.
இருவரும் ஒரே அறையில் இருந்தாலும் அவ்வளவு பெரிய நட்பெல்லாம் இல்லை. அவள் மனம் ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டி இருக்கும் இம்லியை நினைத்துக்கொள்ளும். வேறு வேறு மொழி… வேறு வேறு பழக்கவழக்கம்… அதை எல்லாம் தாண்டி அந்த அன்பு நட்பு அதை எல்லாம் இங்கே யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் அவளால் பெற முடியவில்லை என்று பெருமூச்சு விட்டபடியே அன்றைய வேலையை பார்த்து கொண்டிருந்தாள்.
இவளின் அந்தரங்க மனதில் ஒளிந்திருக்கும் மிக அந்தரங்கமான விதுரன் பற்றிய நினைவுகள் அனைத்தும் மிக மிக அந்தரங்கமே!!
இதுவரை அதை இம்லியிடம் கூட இவள் பகிர்ந்து கொண்டது கிடையாது!!
இம்முறையும் வழக்கம்போல அந்தோணி தான் இவளுக்கு சேர்த்து டிக்கெட் எடுத்தது. கிட்டத்தட்ட சென்னையில் இருந்து மட்டும் 6 பேர் கொண்ட குழு செல்ல… தமிழ்நாட்டிலிருந்து மற்ற குழுக்கள் அனைத்தும் திருவனந்தபுரத்தில் வந்து இவர்களோடு இணைந்து கொள்ள… விதுரன் வேலை செய்யும் கோயம்புத்தூர் டீம் மட்டும் வரவில்லை.
அன்று திருவனந்தபுரத்து அரண்மனை மற்றும் ஜூவை சுற்றி பார்த்து விட்டு போகும் வழியில் கொல்லம் பீச்சில் மாலை நன்றாக ஆடிவிட்டு மகிழ்ந்தனர். அதன் பின்னே அவர்களை ஏற்றிக் கொண்டு மீட்டிங் அரேஞ்ச் செய்து இருந்த ரெசார்ட்டை நோக்கி சென்றது அந்த பெரிய சொகுசு பேரூந்து. நவியோடு சேர்த்து மற்றொரு பெண்ணான சௌந்தர்யா உடனுயிருக்க… அந்த பெண்ணோடு பேசிக் கொண்டே வந்தவள் உறங்கி விட்டாள். இடையில் வண்டி நின்றதோ… கோயம்புத்தூர் டீம் இவர்களோடு அப்போது சேர்ந்து கொண்டதோ… அதில் விதுரன் இருந்ததோ அவளுக்கு தெரியாது. இவள் விதுரன் வரவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
இவர்கள் போய் சேரும் போது முன்னிரவு ஆகியிருந்தது. அனைவருக்கும் வெல்கம் டிரிங் கொடுக்க, இவள் மறுத்துவிட்டு தூக்க கலக்கத்தில் லக்கேஜை ஓரம் வைத்தவள் அருகில் யார் இருக்கிறார்கள் என்று பார்க்காமலே அமர்ந்திருந்த சோபாவின் கைப்பிடியில் தலையை வைத்து சாய்ந்திருந்தாள்.
கோயம்புத்தூரில் முன்னதாகவே கிளம்பி திருவனந்தபுரத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வேறொரு இடத்தில் ஜாகை செய்திருந்தத விதுரன் அண்ட் டீம்.. இவர்கள் பேருந்து வர இடையில் ஏறிக் கொண்டது. ஏறியதும் விதுரனின் கண்கள் முதலில் தேடியது நவியைத் தான்!! தோழியின் தோள் விளைவில் தூங்கிக் கொண்டிருந்தவளை பார்த்து சிரித்தவன், அவளுக்கு முன்னர் உள்ள சீட்டில் இடது பக்கமாக அமர்ந்தான். அவளை நன்றாக பார்க்குமாறு!! இப்போதும் தான் அருகில் இருப்பதை கவனிக்காமல் தூங்குபவளை தான் யாரும் அறியாமல் ரசித்துக் கொண்டிருந்தான்.
அதன் பின் இருவருக்கு ஒரு ரூம் என்று அலாட் செய்யப்பட்டது. ஒரே குடிலில் இரு அறைகள் என இருக்கும். வெகு கவனமாக நவியின் அறைக்கு பக்கத்து அறை சாவியை எடுத்துக் கொண்டான் விதுரன், அவனோடு அவனின் கோயம்புத்தூர் கோலீக்!!
அறைக்கு வந்தவுடன் தூங்க முற்பட்டவளை சௌந்தர்யா தான் எழுப்பி அழைத்து வந்தாள் சாப்பிட. இவர்கள் இருவர் மட்டும் சென்று உண்டுவிட்டு வந்து விட்டனர். வந்ததும் சௌந்தர்யா தூங்கி விட அவளுக்குத்தான் தூக்கம் எங்கோ பறந்து போனது. அந்தகார இருள் என்று கூற முடியாது. அங்காங்கே அழகுக்கு என்று குடிலுக்கு அருகில் இருந்த இரவு விளக்குகளின் மிக மெல்லிய ஒளியில் அந்த இடமே ரம்யமாக தோன்ற… அவர்கள் அறையில் இருந்த பால்கனியில் இருக்கையில் அமர்ந்து வண்ணம் வெட்டவெளியையும் விண்வெளியையும் வெறித்துக் கொண்டிருந்தாள்.
மனது முழுக்க ஏன் விதுரன் வரவில்லை என்று எண்ணம்!! அப்படி வந்தால் அவனை எப்படி எதிர்கொள்வது என்று மற்றொரு எண்ணம்!! இவ்விரண்டு வருட பிரிவில் பல மனவருத்தங்கள் ஆறியிருக்க… ஆறாமல் அவளை வாட்டியது என்னவோ அவன் மீது கொண்ட நேசம்!!
சாத்தியப்படாது என்று தெரிந்தும் மனதை மாற்றிக் கொள்ள வழியில்லை பேதைக்கு!! அதே நேரம் ஒரு பக்க காதல் என்பது துளையில்லா புல்லாங்குழலில் ஊதுவதற்கு சமம்!! காற்றை உள்வாங்கி அதன் துளைகளில் வெளியிடும் போது அதிலிருந்த வெளிவரும் ஓசை இசையாக மனதினை நிறைக்கும்!! சிந்தையை மயக்கும்!!
அதே போலத்தான் நமது அன்பும்!! வெளியிடப்படாத அன்பும்… வெளிப்படுத்தினாலும் பிரதிபலிக்காத அன்பும் துளையில்லாத புல்லாங்குழல் போன்றது!!
எதனாலும் நாளை அவன் வந்தால் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் நாமாக எதுவுமே வெளிப்படுத்தக் கூடாது என்று மனதை இறுக்கிக்கொண்டு மெத்தையில் சரிந்தாள்.
இவள் அமர்ந்திருந்த பால்கனிக்கு வெகு அருகில் தான் அவனும் அமர்ந்திருந்தான். தூங்காமல் இவள் வெண்ணிலவை வெறித்தாள் என்றால் அவனோ அவன் பெண்ணிலவை தான் ரசித்தான். எப்பொழுது அவனது மனதுக்குள் வந்தாள் என்றால் அவனுக்கு தெரியாது!!
மெல்ல மெல்ல அவளிடம் சலனப்பட்ட மனது… எப்போது ஈர்ப்பானது, அது எப்போது நேயமாக மலர்ந்தது என்று அவனுக்கு தெரியாது!! அவளை பிடித்திருந்தது!! அவளை மட்டுமே பிடித்து இருந்தது!!
ஆனால் அதை வெளிப்படுத்தவும் வெளிக் கொணரவும் அவனுக்கும் சில நிகழ்வுகள் தேவைப்பட்டன!! அதில் அவள் இதழில் முத்தெடுத்த
நிகழ்வும் ஒன்று!!
பள்ளி கல்லூரி காலம் தொட்டு பல பெண்களுடன் கலந்து பேசி பழகி வருகிறான். அதில் பல மொழி பல கலாச்சாரங்களில் உள்ள பெண்களும் அடக்கம்!! அவர்களையெல்லாம் அலட்சிய பாவனையோடு கர்வமான உடல் மொழியோடு கடக்க முடிந்தவனால்..
ஏன் இந்த பெண்ணை தள்ளி நிறுத்த முடியவில்லை ஒரு எல்லைக்கு அப்பால்!!
ஏன் இந்தப் பெண் தன்னை எத்தனை தூரம் பாதிக்கிறாள்!!
ஏன் இந்தப் பெண் தன்னுள் இத்தனை தூரம் பயணிக்கிறாள்!!
ஏன்? ஏன்?? ஏன்??? என்ற கேள்வி மட்டுமே அவனுள் பூதாகரமாக!!
அதில் அவனுக்கு புரிந்த விஷயம் முற்றும் முதலாக அவள் தன்னுள் நிறைந்து விட்டாள் என்பது!!
இனி அவளை அத்தனை சுலபமாக தன்னில் இருந்தோ தன் வாழ்க்கையில் இருந்தோ பிரித்து தனியே எடுக்க முடியாது என்பது!!
அவ்வளவு சுலபமாக யாரிடமும் அவளை தூக்கி கொடுக்க முடியாது என்பது!!
என்று வந்தாள் அந்த குறும்புக்காரி தன்னுள்?
அன்று நீங்காத ரீங்காரமாக அவளுக்கு கொடுத்த முத்தச் சத்தம் கேட்ட நொடியில் இருந்தா?
சாப்பிடும் போது அவள் அருகில் செல்ல ஆசை தான் அவனுக்கு. ஆனால் அவ்வப்போது அந்த நீள நயனங்கள் சுற்றி சுழன்று தன்னை தேடுகையில்… அதை ரசிக்க.. அதன் அழகில் மயங்க.. மறைந்திருந்து பார்க்க மட்டுமே மனம் விரும்பியது. நாளை திடீரென்று அவள் முன்னால் நின்றால் கோலி குண்டு போல கண்களை விரித்து பார்ப்பாளே… அதனை அனுபவிக்கத் தான் இப்பொழுது அவளுக்கு நேராக செல்லவில்லை என்று தன்னுள் சிரித்துக் கொண்டவன் சிகையை கோதி கோதையின் நினைவை விரட்ட முயன்றான்.
மறுநாள் மீட்டிங்கிற்கு அனைவரும் காலை உணவு முடித்து விட்டு அருகில் இருக்கும் மீட்டிங் ஹாலில்
அமர்ந்திருக்க… “ஹாய் தேவா!!” என்ற அந்தோணியின் அழைப்பில் அந்தோணி அருகில் ஏதோ எழுதிக் கொண்டிருந்த நவி நிமிர்ந்து பார்த்தாள் அவனை!!
அவன் எதிர்பார்த்த அதே கோழிக்கூண்டு கண்கள் விரிந்து வியந்து சந்தோஷத்தை வெளிப்படுத்தின ஒரு சில நிமிடங்கள்தான்… ஆனாலுமே அது அத்தனை பிடித்தது அவனுக்கு.
மெல்ல அந்தோணிக்கு தலையசைப்பு கொடுத்து விட்டு அவளை கண்களாலே வருடி விட்டு தன் டீமோடு அமர்ந்து கொண்டான்.
அதன்பின் மார்க்கெட்டின் டீமில் வந்து பேசியவர்களும் ஹெச் ஆர் டீமில் இருந்த வந்த பேசியவர்களும் என்ன பேசினார்கள் என்று எதுவுமே சிந்தையில் இல்லை நவிக்கு. எப்படி எப்படி அவனுடன் பேசுவது? அந்த நிகழ்வு அவனுக்கு தெரியுமா? தெரியாதா? ஞாபகத்தில் இருக்குமா? இருக்காதா? என்று படபடப்பு குறுகுறுக்க அவன் கண்களை நேராக பார்க்க முடியாத தவிப்பு அவளிடம்!!
இத்தனைக்கும் தவறு செய்தது அவனாக இருக்க தவித்து தவித்து அடங்கினாள் இவள்!!
டீ ப்ரேக் கூட போகாமல் அந்தோணியை எடுத்து வரச் சொன்னாள். இவள் இருக்கையை விட்டு எழவில்லை. அவள் நிலை அறிந்துதான் இருந்தான் அவளவன். மெல்ல இதழ்களில் முகிழ்த்த அவனது சிரிப்பை கற்றை மீசைக்கு அடியில் ஒளித்துக் கொண்டவன், அவளை பார்த்தவண்ணமே தேனீரை அருந்திக் கொண்டிருந்தான்.
தேநீரே..
தேனாய் மாறிய விந்தை
என்னடி என்னவளே?
உன் இதழ் பருகியதாலா? இல்லை
உன் இதழை நான் பருகியதாலா?
என்ற கவி அவனுக்கு கணநேரத்தில் உதிக்க… அதை ஃபோனில் அவளுக்கு அனுப்பும் எண்ணம் இருந்தும் அனுப்பவில்லை!!
மதிய உணவின் போதும் ஒரு ஹாயோடு தங்கள் உணவை உண்டாலும் அதற்குமேல் பேச்சுவார்த்தை இல்லை அவர்களிடம்!!
மௌனமே மட்டுமே பெரும் இரைச்சலாய் அங்கே!!
மாலை போல அனைவரும் அருகில் உள்ள பீச்சுக்கு சென்றனர். முதல் நாள் கொல்லம் பீச்சில் அடித்த கொண்டாட்டத்தில் சிறிது கூட அவளால் இங்கே ஆட முடியவில்லை அலைகளோடு… ஏனென்றால் அவனது எண்ண அலைகள் முழுவதும் அவனோடு அல்லவா பிணைத்திருந்தது!! பெண்கள் இருவரும் மற்றவர்களிடம் இருந்து சற்று தள்ளி தூர இருந்தாலும் அவனின் பார்வை அவ்வப்போது அவளின் பத்திரத்தை உறுதி செய்வதை அவள் அறிந்திருந்தாள்.
“போதும் சவுண்டு போகலாம்!” என்று இவள் வம்படியாக சௌந்தர்யாவை அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.
இரவு உணவின் போது இவள் தும்மிக் கொண்டே சாப்பிட அவளை ஒரு முறை முறைத்தவன், “அப்படி என்ன சின்னப்புள்ளத்தனமா உனக்கு ஆட்டம் வேண்டி கிடக்கு? ஒத்துக்காதுனு தெரிய வேண்டாம்!! ஓவர் ஆட்டம்!! ரூமுக்கு போன முதல்ல ஹாட் வாட்டரில் குளிச்சிட்டு ஆவி புடி!!” என்று கடித்தான். அவனுக்குத தான் கொல்லம் பீச்சில் ஆடியது தெரிந்திருக்கிறது என்று இவள் மௌனமாக சரி என்று கூறினாள்.
பின் அவரவர் அறைக்கு செல்ல இவளும் அவன் சொன்னது போல பாத்டப்பில் சுடுநீர் நிறைய பிடித்து நன்றாக குளித்துவிட்டு, ஆவி பிடிக்க க்ரீசரை போட்டு விட்டு இவள் காத்திருக்க அழைப்பு மணி அடித்தது.
“இந்த சவுண்டுக்கு வேற வேலை இல்லை. இங்க உள்ள காபி பவுடர் பால் பவுடர் எல்லாம் எடுத்து வைத்துவிட்டு.. தீர்ந்து போச்சுன்னு சொல்லி கொண்டு வர சொல்ல வேண்டியது!! அல்பம்… அல்பம்!!” என்று திட்டி கொண்டே கதவை திறக்க அங்கு நின்றது விதுரன்.
டி-ஷர்ட் த்ரீப்போர்த்துமாக இவள் நின்றதை பார்த்ததும் கண்கள் ரசனையாய் அவளை ரசித்தது. அடுத்த நிமிடம் கனாலாய் தகித்தது.
“எத்தனை முறை சொன்னாலும் கேட்கமாட்ட… இந்த மாதிரி டிரஸ் போடாதேனு!!” என்று பற்களை நறநறவென கடித்தவன் அவள் கையில் ஆவிப் பிடிப்பதற்கான இன்ஹலேஷன் டாப்ளெட்டை கொடுத்து விட்டு திரும்பியவன் அவள் மிக அருகில் சென்று, “அடுத்த முறையும் இம்மாதிரி உடை போட்டு பார்த்தேன்.. கிழித்து விடுவேன்!!” என்று கிசுகிசுத்து சென்று விட்டான்.
அவளோ ஆவென்று வாயை பிளக்க… அவன் கதவு அருகே சென்றவனின் விழிகள் திரும்பி அவளை ஆழ்ந்து பார்த்தது. அதன் பின் அன்றைய இரவை எப்படி கழித்தாள் என்றால் தெரியவே தெரியாது!!
மறுநாள் சற்று அவளது தும்மல் நிற்க காலையில் மீண்டும் மாத்திரை கொண்டு வந்து கொடுத்தான். என்ன இது என்று கேள்வி எல்லாம் கேட்கவில்லை. எடுத்து போட்டு கொண்டாள்.
அதன் பின் அன்றைய மீட்டிங் முடிந்ததும் வழக்கம்போல குரூப் போட்டோ எடுத்து அன்று இரவே பாதிக்கு மேல் கிளம்பிவிட நினைக்க… அன்றிரவு ஹாட் ட்ரிங்க்ஸ் பார்ட்டி!! அதனால் பெரும்பாலானோர் தங்கி விட, சிலர் மட்டுமே சென்றனர். சௌந்தர்யா அன்று இரவே சென்றுவிட்டாள். நவியோடு வந்த சென்னை டீம் ஹாட்ரிங்ஸ் பாரட்டியில் கலந்து விட இவளும் தங்க நேர்ந்தது.
நவிக்கு தூக்கம் வராமல்… இவள் வெளியே நடை பயின்றுக் கொண்டிருந்தாள்.
விதுரன் சென்றானா இல்லையா என்று தெரியவில்லையே? எதுவும் பேசவில்லை!! அன்னைக்கு நடந்தது அவனுக்கு தெரியுமா தெரியாதா என்று யோசித்துக் கொண்டே வந்தவள் எதிலோ முட்டி நிற்க.. எதிரி டி-ஷர்ட்டும் ஷார்ட்சுமாய் அவளைத்தான் பார்த்தபடி நின்றிருந்தான் விதுரன்.
“லேட் நைட் இங்க என்ன பண்ணிட்டு இருக்க நிதா? வா போகலாம்!!” என்று அவன் நடக்க, கூடவே நடந்தாள். மீண்டும் இருவரிடமும் மௌனம் ஆட்சி செய்ய… குளிர்ந்த காற்று இருவரையும் தழுவி செல்ல.. மனதுக்குள் சொல்ல ஆயிரம் விஷயங்கள் போட்டி போட்டாலும் இதழ்கள் என்னவோ இறுக்க மூடியிருந்தன.
அவர்கள் சென்ற வழியில் மற்றொருவர்கள் கேங்காக பார்ட்டி கொண்டு கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
“இப்படியே போக முடியாது இந்த குடில்களுக்கு இடையே நடந்து போகலாம் வா!!” என்று அவள் கையை பிடித்து இவன் அழைத்துச் செல்ல… பிணைந்திருந்த கைகளைப் பார்த்து பின்னே சென்றாள்.
முன்னே சென்றவன் திடீரென்று நிற்க பின்னே வந்தவள் அவன் முதுகுகினில் முட்டி நிற்க.. அதில் அவளது இதழ்கள் அவனது முதுகில் அழுத்தமான தடம் பதிக்க.. அதை விட அழுத்தமாக.. சத்தமாக இச் இச்சென்று சத்தங்கள் கேட்க… அதிர்ந்து எட்டி பார்த்தவள் வெட்கத்தோடு அவன் முதுகினில் முகம் புதைத்தாள்.
Super sis