கொங்குநாடு.. இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு மண்டலம்!! இதை கொங்கு மண்டலம் என்றும் அழைப்பர்!!
குறிஞ்சி நிலமும்.. முல்லை வளமும்.. மருத மணமும்.. கொண்டது கொங்கு நாடு!!
மலையும் காடும் நிறைந்த நாட்டில் தேன்மிகுதியும் கிடைக்க..தேன் நிறைந்த நாடு கொங்கு நாடு எனப்பட்டது!! தேன்கூடுகள் நிறைந்த மலைச்சாரல்களை கொண்டது!! குன்று செழுநாடு என்றே சங்கப் புலவர்கள் பாடினார். “குன்றும், மலையும் பல பின்னொழிய வந்தனன்” என்றனர்.
கொங்கு நிலம் மட்டுமா அழகு? அங்கு பேசும் தமிழும் அழகோ அழகு!! கொங்குத் தமிழ் (கொங்கலம் அல்லது கொங்கப் பேச்சு) என்பது கொங்கு நாட்டில் பேசப்படும் தமிழ்!
அந்த கொங்கு நாட்டின் பிரதான ஊராக சொல்லப்படும் கோயம்புத்தூரில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவு தள்ளி இருக்கும் ஊர் தான்.. கருமத்தம்பட்டி!! இதுதான் நம் கதாநாயகி மணிமேகலையின் வசிப்பிடம்!! நம் நாயகனின் மாமனார் ஊர்!!
பட்டினு ஆரம்பிச்சாலே அங்க ஒரு நாட்டாமையும் நாலு பெரிய தலைகளும் நானூறு பிரிச்சனைகளும் ‘ஐ அம் அட் யுவர் சர்வீஸ்.. ஆல்வேஸ்!’ என்றிருக்கும்.
அதுக்கு இந்த கருமத்தம்பட்டி மட்டும் விதிவிலக்கு இல்ல!
நாட்டாமை என்போர் நாலு போகம் வெல்லாமை செய்கிறாரோ இல்லையோ.. நாலு நாளைக்கு ஒரு தடவை பஞ்சாயத்து பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்!!
நாட்டாமை என்பதை காலப்போக்கில் ‘பெரிய ஐயன்’ என்று சற்றே நாகரிகமாக மாற்றி அழைக்க ஆரம்பித்தனர்!
கருமத்தம்பட்டியின் தற்போதைய பெரிய ஐயன் பசுபதி கவுண்டர்.. அவரின் மனைவி ஜோதி! ஜோதி ஒற்றை மகளை பெற்றுக் கொடுத்து தன் கடமை முடிந்ததென அந்த ஜோதியோடு ஜோதியாய் ஐக்கியமாகி விட்டார்.
என்னதான் மனைவி செத்தால் கணவன் புது மாப்பிள்ளை என்று ஊர் வழக்கில் சொன்னாலும், பசுபதி இன்னும் ஜோதியின் கணவனாகவே வாழ்கிறார். அடுத்தவள் கணவனாக அப்டேட் ஆகாமல்!!
யார் யாரோ சொல்லிப் பார்த்தார்கள்!! ஏன் ஜோதியின் பெற்றோர் கூட ‘குழந்தையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் வேறு கல்யாணம் செய்து கொள்ளுங்க மாப்பிள்ளை!” என்று கூறியும் மறுத்துவிட்டார், தன் அன்னை நாகவள்ளியை வைத்து பிள்ளையை பார்த்துக் கொள்ளவதாக கூறி..
உறவு என்று பெண் கொடுக்க வந்தோரையும்.. பெண் துணையில்லாமல் வாழ முடியாது என்று அறிவுரை கூறியவரையும் தன் துண்டால் அடித்து விரட்டி விட்டார் பசுபதி!!
“பொழைக்க தெரியாதவன்..!”
“இன்னைக்கு பகுமானமாக பொண்டியாட்டிய கட்டிக் குடும்ப நடத்த சொன்ன.. வேணாம்றான்.. நாளைக்கு எவளையாவது இழுத்திட்டு வருவான் பாரு”
“ஆம்பள வளர்க்குற பொட்ட புள்ள ஊக்கோலியா தான் வளரும்.. வேணா எழுதி வைச்சிகோங்க!”
என்று ஊரும் உறவும் சாபம் விட்டாலும், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாது தன் மகளை சர்வ சுதந்திரத்தோடு தான் வளர விட்டார், தன் முழு அன்பையும் கொட்டி பசுபதி!!
ஒரு வார்த்தை அதிர்ந்து திட்ட மாட்டார் பசுபதி. அவள் சேட்டை செய்தால் கூட.. தன் வருத்தத்தை தான் பதிவு செய்வாரே ஒழிய.. அங்கே கோபமே இருக்காது!!
“என்னங்க பாப்பா??” என்று அவர் வருத்தமாக கேட்ட அடுத்த நொடி தன் குறும்புத்தனத்தை உடனே நிறுத்தி விடுவாள் அவரது மகள்! அதற்கு மேல் கோபப்பட என்ன இருக்கிறது?
ஆனால் அதற்கு நேர் மாறாக தன் அப்பத்தாவிடம் தான் அத்தனை லூட்டி.. அத்தனை பேச்சு.. அத்தனை சண்டை.. என்று தன் வாலை ஒட்டு மொத்தமாக அவிழ்த்து விட்டு ஆட்டம் காட்டுவாள்!!
“பாம்பு இன்னைக்கு என்ன சமையல்?” என்று தான் பள்ளியில் இருந்தே உள்ளே நுழைவாள்!!
“அடியே.. என்ற அப்பாரு எம்புட்டு ஆசையா நாகவள்ளினு பேரு வைச்சாக.. நீ என்னடி இப்படி பாம்புங்குறவ!” என்று பெரு மூச்சு விட்டப்படி அங்கலாய்ப்பார்!!
“சரி.. சரி… புஷ் புஷ்னு மூச்சு விடாம வந்து சோத்த போடு! சோறு முக்கியம் சர்பம்!” என்று சொல்லி செல்பவளை குமட்டில் இரண்டு குத்து குத்தியே சாப்பாட்டை போடுவார் நாகவள்ளி!!
“ஒணத்தியா(சுவையா) சப்புக்கொட்டி சாப்பிட்டா பத்தாது அம்மிணி.. சமைக்கவும் தெரியனும் டி!” என்று எத்தனை குறை சொன்னாலும் காதில் வாங்கவே மாட்டாள்!!
அவளுக்கு விடுமுறை என்றால் வீடு களைக்கட்டும்!! மாமியார் மருமகள் சண்டை என்ன.. அண்ணி நாத்தனார் பிரச்சனை என்ன.. அனைத்தையும் அள்ளி சாப்பிட்டு விடும் இந்த அப்பத்தா பேத்தியின் சண்டை!!
பசுபதியின் தலையை கண்டால் இரண்டு பேருமே பம்மி விடுவர்! அவருக்கும் தெரியும் தான் அம்மா மகளின் இந்த ஆர்ப்பாட்டங்கள்!! ஆனாலும் கண்டு காணாதது போல் கடந்து விடுவார். அவர் கண்டு கொள்ளாமல் இருப்பதால்தான் இவர்களுக்கும் பயம் இருக்கிறது. அவருக்கு தெரிந்து விட்டது என்று தெரிந்தால்.. இவர்களின் ஆட்டம் சொல்லி மாளாது!!
அன்று ப்ளஸ் டூ ரிசல்ட்… அனைவரும் பதட்டத்தோடு இருந்தனர் கணினி முன்பு!!
வேறு யார் பசுபதி மகளும் அவளது பட்டாளமும் தான்!! நகத்தை கடித்துக் கொண்டு அவள் ரிசல்ட் வெப் பேஜை திறந்து வைத்து காத்திருக்க.. அதற்குள் வாசலில் வேட்டு சத்தம் வானை பிளந்தது!!
“ஏய்.. நீ பாஸிட்ட கா.. அங்க பாரு நம்ம ஐயன் வேட்டு போடுறாங்க!” என்று அங்குள்ள பட்டாளங்கள் மகிழ்ந்து குதிக்க.. அந்த தெருவுக்குள் போவோர் வருவோர் எல்லோருக்கும் லட்டுவை வாரி வழங்கிக் கொடுத்துக் கொண்டு இருந்தார் பசுபதி கவுண்டர்!!
பொண்ணு பயங்கரமா மார்க் எடுத்து பாஸிட்ட போல.. என்று அனைவரும் மகிழ்ந்து “ஏனுங் ஐயா.. ஒன்னு தானுங்களா? இரண்டா கொடுக்க கூடாதுங்களா?” என்று ஒருவர் கேட்க…
“இரண்டு என்ன யா.. இந்தாரும் ஒரு டப்பாவே தாரேன். எடுத்துட்டு போய் வீடேல பொண்டு புள்ளைக கிட்டு கொடும்!” என்று அவரே ஒரு டப்பாவை தூக்கிக் கொடுக்க..
ஒரு டப்பா லட்டை வாங்கியவரோ.. வாயில் ஒன்றை போட்டு குதப்பிக் கொண்டே… “பாப்பா.. எவ்வளோ வாங்கி இருக்காங்க ஐயா?” என்றார், பசுபதியை தொடர்ந்து அந்த ஊரில் பெரும்பாலும் அவர் மகளை மரியாதை பன்மையாக தான் விளிப்பார்கள்!!
ஒரு பெண்ணுக்கான மரியாதை அவள் வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பது பசுபதியின் ஆழமான கருத்து!! அதில் அனைவருக்கும் முன் மாதிரியாக திகழ்ந்தார்!!
“என் பொண்ணு எனக்கு பெருமையை தேடி கொடுத்திட்டா! இத விட என்னங்க வேணும் எனக்கு!” என்று துண்டால் கண்களை துடைத்துக் கொண்டவரை பார்த்த அங்குள்ள ஜன கட்டுகள் கண்களில் கண்ணீர வர.. ஒரு செண்டிமெண்டுக்கு ரொம்ப ரொம்ப பொருத்தமான சுட்சூவேஷன்!!
ஆனால்.. அவர் அடுத்த சொன்னதில் கந்தர்வகோட்டை சமஸ்தானமே.. ச்ச.. கருமத்தம்பட்டியே அதிர்ச்சியில் ஸ்தம்பித்தது!!
ஊரே இதற்கு என்ன வினையாற்றுவது என்று தெரியாமல் முழிக்க.. அந்த லட்டை குதப்பியவர் வாயிலிருந்த லட்டு கீழே விழுவது தெரியாமல் ஆவென்று நின்றிருந்தார். பசுபதியோ யாரையும் கண்டு கொள்ளாமல் அன்று முழுவதும் ஆளை போட்டு “ஏனுங் லட்டு எடுத்துங்கோங்க.. எங்க பாப்பா பெயில் ஆகிட்டாங்க..” என்று சொல்லி சொல்லி லட்டை கொடுக்க சொன்னார்.
அவரது மகளோ சோகமாக இருப்பாள் என்று நீங்க நினைத்தால் அது தப்புங்க… ரொம்ப தப்புங்க… ஏன்னா அவங்க அப்பத்தா வைத்த வெள்ளாட்டு கறி கோலா உருண்டை குழம்பை தன் படையோடு வெட்டிக் கொண்டிருந்தாள்!!
மகளும் தந்தையை புரிந்துக் கொண்டவளாக ப்ளஸ் டூ வில் தோற்று விட்டாள்!!
பசுபதிக்கு அப்போது தான் திருப்தி!! கூட பயமும் அகன்றது!!
நாட்டாமைக்கே பயமா? இல்லை மகளை பெற்ற அப்பனாக கவலை!! இந்நாளிலுள்ள ரோமியர்கள் பற்றிய பயம்!!
பசுபதியின் வெகு நாளையே கனவு ஏன் சங்கல்பமே மகளை எப்படியாவது நல்ல குடும்பத்தில் கட்டி வைத்து விட வேண்டும் என்பதுதான்!!
பெரிய படிப்பு எல்லாம் படிக்க வைக்க ஆசையும் இருக்கு.. அதற்கான செல்வமும் இருக்கு.. ஆனால் அவருக்கு பயம்!!
இந்த பயத்தின் காரண கர்த்தாவின் உருவம் அந்த ஊரின் மாணிக்கவேலு! அதே ஊரின் பெரிய கட்டு குடும்பத்தின் ஒற்றை வாரிசு! நான்கு பெண்களுக்கு பிறகு பிறந்தவன் என்பதால் கட்டுக்கடுங்காத காளையாக திரிகிறான்!!
ஆம்.. ராயல் புல்லட்டில் இளவரசனாய் பவனி வரும் இவனின் பார்வை பசுபதி பெண் மீது பட.. அவ்வளோ தான் கொதித்து விட்டார் பசுபதி!!
ஒரு வேளை முறையாக பெண் கேட்டு வந்திருந்தால் யோசித்திருப்பாரோ என்னவோ, அவனோ அவள் பள்ளி செல்லும் போகும் போது.. வரும் போது.. அவள் செட்டு பிள்ளைகளோடு வெளியில் போய் வரும் போது என்று அவளை ஆவலாக பார்ப்பது.. பகடி பேசுவது.. உரிமையுள்ளவனாக சீண்டுவது.. என்று மைனர் குஞ்சாய் அவன் தொந்தரவு செய்ய.. அவள் திருப்பிக் கொடுத்திடுவாள் தான்!!
ஆனால் அவளோ நல்ல பிள்ளையாய் தந்தையிடம் போட்டு கொடுத்து விட.. அவ்வளோ தான் நாட்டாமை.. துண்டை உதறி தோளில் போட்டு கொண்டு பஞ்சாயத்து வைத்து விட, அதுவரை சும்மா வீம்புக்காக அவளிடம் “நான் தான் உனக்கு ராஜா… இனி தான் எனக்கு ரோஜா” என்று திரிந்தவன், தீவிரமாக இறங்கி விட்டான் அவளை திருமணம் செய்ய!!
அது முதல் ப்ளஸ் டூ அவள் முடிக்கும் வரை பசுபதிக்கு தான் அவ்வளோ பயம்!! எங்க பெண் நல்ல மார்க் எடுத்து மேல படிக்க கேட்டால் என்ன செய்வது என்று!!
ஒன்று மாணிக்கவேல் மீதான பயம், மற்றொன்று பெண்ணை பிரிந்து இருக்க முடியாது!!
அதற்கெல்லாம் அவருக்கு அந்த பயத்தை கொடுக்கவில்லை அவரது செல்ல மகள்!!
காலையில் அப்பத்தாவுக்கு சிறிது உதவி செய்வாள் வீட்டு வேலைகளில்.. அதற்குப் பின் தென்னந்தோப்பு அவர்களது வயல் வரப்பு என்று ஒரு ரவுண்டு வந்துவிட்டு மதியம் உண்டு விட்டு, பள்ளி முடித்து வரும் படைகளோடு சேர்ந்து கொள்வாள்.
ஆறு மணி வரை ஆட்டம் பாட்டம்!! அதற்குப்பின் அவரவர் அவரவர் வீட்டுக்கு!! சனி ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம்.. முழுக்க முழுக்க அவர்கள் வீட்டு பின்கட்டில் தான் மொத்த வாலும், அங்கே இங்கே என்று தொங்கிக் கொண்டிருக்கும்!!
இப்படியாக மூன்று வருடம் ஓடியே போனது!!
இதில் மாறாதது என்னவென்றால்.. ஒன்று இவள் அடிக்கும் லூட்டி.. மற்றொன்று இவளை தொடரும் மாணிக்கவேல்!!
மாணிக்கவேலிடமிருந்து பெண்ணை காப்பாற்றவே இவர் அவளுக்கு வரன் பார்க்க.. வர வரனை எல்லாம் தட்டி விட்டுக் கொண்டிருந்தான் மாணிக்கவேல்!!
“கார்த்திக் மாமோய் நீங்க எங்க இருக்கீங்க… ??
டேய் கார்த்திக் நீ எங்க தாண்டா இருக்க??”
என்று ரீசன்டாக டிக் டாக்கில் செய்த பெண்ணை போலவே நடித்துக் கொண்டிருந்தவளை சுற்றி நின்று ஆர்ப்பரித்தது அவளது நண்பர்கள் கூட்டம்.. எல்லாம் ஏழிலிருந்து பதினைந்து வரை உள்ள சிறுசுகள் பொடுசுகள்!! கூடவே அவளின் உயிர்த்தோழியான கனகம், கண்ணில் இருந்த கண்ணாடியை மூக்கு வரை இறக்கி.. அவளை மேலும் கீழும் பார்த்து… “எமோஷன் பத்தல.. இன்னும் கொஞ்சம் ஏத்து!!” என்று அவளை ஏத்தி விட…
“ஏண்டி அதே ரீல்ஸ்தான் உங்களுக்கெல்லாம் செய்து காட்டணுமா? எனக்கு என்னமோ அந்த பேரே புடிக்கல டி!” என்று மூக்கை சுளித்தாலும், அவளும் எமோஷனலாம் ஏத்தி ரெடியாக இருக்கும் தருணத்தில்…
“அம்முணி….” என்ற அழைப்பு..
“இதோ வந்தேட்டேனுங்க பா…” என்று அனைத்தையும் மறந்து குரல் வந்த திசையில் ஓடினாள்.
மூச்சு இறைக்க இறைக்க வந்து நின்ற மகளை ஆதூரமாக பார்த்த பசுபதி “ஏனுங்கம்மணி.. எதுக்குங்க இவ்வளோ வெரசா ஓடி வரணும். மெதுவா வர வேண்டியது தானுங்களே!” என்று செல்லமாக கடிந்தவர், அவள் கையில் ஒரு போட்டோவை திணித்து “இதுதானுங்க.. நான் உங்களுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை. நம்ம கிருஷ்ணமூர்த்தி இருக்கிறார் இல்லையா.. அவரோட மகன்! பெங்களூரில் வேலையில இருக்கிறாராம்…” என்று மாப்பிள்ளை பற்றி அவருக்கு தெரிந்ததை எல்லாம் அவர் விளக்கினார்.
“எனக்கு ரொம்ப சந்தோசமுங்க!! அவரே கேட்டு வந்தாருங்க நம்ம வீட்டுக்கு, உங்களை மருமகளாக்கிக்க..” அப்பவும் மகளின் முகம் தெரியாததை கண்டு..
“இந்தா இருக்குற பெங்களூர் தானுங்களே.. கோயம்புத்தூரில் இருந்து பிளைட் புடிச்சா ஒரு மணி நேரத்துல வந்துட மாட்டேனுங்களா..!” என்று சிரித்தபடி சென்ற தந்தையை பார்த்தவள் அப்போதுதான் போட்டோவை பார்த்தாள்.. “அப்பா… பேரு சொல்லலையே?” என்று அவள் யோசிக்க…
அப்பா சொல்லுற வரனை மணந்து கொள்ள அவளுக்கு பிரியமே!! ஆனால் அவ்வளவோ தூரம் செல்ல பிரியமில்லை! பக்கத்தில் இருக்குற ஏதாவது ஒரு பட்டியில் வாழ்க்கை பட்டு.. புள்ளக்குட்டியை பெத்துப் போட்டு.. அப்பாவிடம் செல்லம் கொஞ்சியே வாழ்ந்து விட்டு போக ஆசை.. அவா.. விருப்பம்.. அனைத்தும்!!
“அப்பத்தா.. என் கல்யாணத்துக்கு நம்ம ஊரு பலகாராமா தான் போடனும். சொல்லிபுட்டேன்…” என்று சமையலறையில் தன் அம்மாவிடம் வம்பு செய்து கொண்டிருந்த பெண்ணை தான் கண்களில் வாஞ்சையோடு பார்த்தார் பசுபதி!!
“அப்படி என்ன அம்முணி வேணும்?”
“நம்ம கொங்குநாடு உணவு ஸ்பெஷல் இடியாப்பம்.. ஒப்புட்டு (இனிப்பு திணிப்புடன் வெளியே உலர்ந்த ஒரு பீட்சா போன்ற உணவு), கோலா உருண்டை, தேங்காய் பால் (தேங்காய், வெல்லத்தால் செய்யப்பட்ட இனிப்பு சூடான பால்) உளுந்து களி (வெல்லம், இஞ்சி எண்ணெய் உளுந்து ஆகியவற்றால் ஆன இனிப்பு), கச்சாயம் (வெல்லம் மற்றும் அரிசியால் செய்யப்பட்ட இனிப்பு), அரிசிப்பருப்பு சாதம், ராகி புட்டுமாவு, அரிசிப் புட்டுமாவு, கம்பு பணியாரம், ராகி பகோடா, தேங்காய் பார்பி, கடலை உருண்டை, எள்ளு உருண்டை.. பொரி உருண்டை… மைதா இல்லாம செய்யற பரோட்டா.. ஏன்னா மைதா மாவு ஆவது உடம்புக்கு அதனால.. அப்புறம் அரிசிபருப்பு சாதத்துல நாலு வகை.. அம்புடுதேன்!” என்று சொல்லி முடிக்கும் முன் அவளுக்கு மூச்சு வாங்கியதோ இல்லையோ அப்பத்தாவுக்கு மூச்சு வாங்கியது!!
எங்கே பொண்ணு திருமணத்தை மறுத்து திரும்பவும் படிப்பு என்று இறங்குவாளோ என்று பயந்து இருந்த பசுபதிக்கு இப்போது தான் மனம் நிறைந்தது.
அவருக்கு எங்கே தெரிந்திருக்க போகுது.. தந்தைக்காகத்தான் வேண்டும் என்றே அவள் ப்ளஸ் டூவில் ஃபெயிலானாள் என்று!!
“ஏண்டி.. தட்டி புத்தி படிக்கிற நானே பிளஸ் டூல பாஸ் ஆயிட்டேன்!! எனக்கு தான் காலேஜ் போக பிடிக்காம உன் கூட சுத்திகிட்டு இருக்கேன்.. உனக்கு என்னடி நீ ஏன் ஃபெயிலான?” என்று கேட்டாள் கனகம்.
இருவரும் சம வயது தான். ஆனால் ஜோதி இறந்த போது, ஒரு வருடம் படிப்பு தங்கி போனது மணிமேகலைக்கு. கனகம் போன வருடம் தான் பிளஸ் டூ முடித்தாள்.
“இப்ப நான் படிச்சு என்ன பண்ண போறேன் சொல்லு?”
“உன்ற அறிவுக்கு படிச்சா நல்ல நெலமைக்கு வருவ டி!”
“சரி.. வந்து..??”
“வந்து.. ஒரு டாக்டரவோ.. வக்கீலாவோ.. ப்ரபோஷராவோ.. ஐடியில வேலையோ பார்ப!”
“சரி.. பாத்து..??”
“பாத்து.. உன்ற அப்பாருக்கு பெருமையல்லோ? நல்ல வேலைக்கு போவ!”
“சரி.. போய்…??”
“அப்புறம் நல்ல சம்பந்தமா வரும்.. கட்டிக்க வேண்டியதான!”
“சரி.. கட்டிகிட்டு..??”
“கட்டிகிட்டி.. புள்ள குட்டி பெத்து போட்டு சந்தோஷமா வாழ வேண்டியது தான்!”
Super sis
Supper
Aha superappu… waiting for mappillai