வந்தாரை வாழ வைக்கும் சென்னை!! கோயம்புத்தூரில் இருந்து வந்த கிருஷ்ணகுமாரையும் நன்றாக வாழ வைத்தது பெரும் செல்வந்தராய்.. டெக்ஸ்டைல் உலகில் கொடி கட்டி பறக்கும் ஒருவராய்!!
முதலில் பனியன் வேட்டி என்று மட்டுமே ஆரம்பித்த அவரின் அப்பா பழனிச்சாமியை தொடர்ந்து, சென்னை வந்த கிருஷ்ணகுமார் கொஞ்சமாக கொஞ்சமாக தன் திருப்பூரில் இருக்கும் நண்பர்களிடமிருந்து துணிகளை வாங்கி நேரடி வியாபாரத்தில் இறங்க… நியாயமான விலை, தரமான பொருள்.. இரண்டே வருடத்தில் சென்னையில் முதன்மையான இடத்திற்கு வந்து விட்டார் கிருஷ்ணகுமார்!!
அவரின் வெற்றியின் காரணம் நியாயமான குணம்.. தரமான பொருள்.. வேலை ஆட்களை மனிதனாக நினைத்து வேலை வாங்கும் பாங்கு!! ஏனென்றால் இப்போது உள்ள பெரும்பாலான துணி பெரும் சந்தையில் தங்கள் கிராமத்தில் இருந்து அழைத்து வரும் வேலையில்லா பட்டதாரிகளான பெண்களையும் ஆண்களையும் கடுமையாக வேலை மட்டும் வாங்கி.. உட்கார கூட அனுமதிக்காத.. கார்ப்பரேட் உலகமாக மாறிவிட்ட உலகில் கண்ணியமும் நியாயமும் கொண்ட கிருஷ்ணகுமாருக்கு வேலையாட்களின் ஆதரவு அமோகம்!!
உழைக்கும் வர்க்கத்திடம் இருக்கும் ஒரு குணம் என்னவென்றால், நாம் அன்பாய் ஒன்று கொடுத்தால்.. அவர்கள் அதை பத்தாய் திரும்பி தருவார்கள் தனது உழைப்பில்.. விசுவாசத்தில்.. உண்மையில்!!
இதுவும் கிருஷ்ணகுமாரின் வளர்ச்சிக்கு அடிக் கல்லாய் அமைய.. அதன் மீது மேலும் மேலும் வளர்ந்து சென்னையில் மூன்று கடைகளை திறக்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார் கிருஷ்ணகுமார்!!
போட்டி நிறைந்த உலகில் இத்தனை தூரம் வளர்ந்தது சாதாரணம் அல்ல!! அதன் பின்னே அவர் இளமையின் அலாபனைகளை துறந்த உழைப்பு அதிகம்!! பெற்ற மக்களிடம் சரியாக பாசம் காட்ட முடியாத அர்ப்பணிப்பு அதிகம்!! குறைந்த தூக்கம் நிறைந்த உழைப்பு அவரது!!
முதலில் ஒரு பெண் அனித்ரா, ஆடிட்டர் பூபாலனுக்கு திருமணம் செய்து கொடுக்க.. இரு மக்களுடன் மகள் தனியாக அதே சென்னையின் மற்றொரு மூலையில் இருக்கிறாள்.
அடுத்து ஒரு மகன் கார்த்திக் கிருஷ்ணா!!
இவருக்கும் பூர்வீகம் கருமத்தம்பட்டி தான்!! அதாவது நம் நாயகன்.. கார்த்திக் கிருஷ்ணாவின் மாமனார் ஊர்!!
கார்த்திக் கிருஷ்ணா பற்றி தானே.. அவனே இன்ட்ரோ கொடுப்பான் பாருங்க..
“அட..இன்ட்ரோ கொடுக்கனுமா?? ம்ம்ம்.. நான் உங்க கார்த்திக் கிருஷ்ணா!! டிவண்டி செவன் கோயிங் டூ கம்ப்ளீட்!! படிப்பு… அப்பாக்கு தெரிஞ்சு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்.. எம்பிஏ!! அவருக்கு தெரியாம ஜேர்னலிசம் ரேடியோ ஜாக்கினு பல டிப்ளமோ கைவசம் வச்சிருக்கேன்.. உஷ்ஷ்!! அவர் கிட்ட போட்டு கொடுக்க கூடாது!! வேலை.. அப்புறம் சொந்தமா என் ஃப்ரெண்ட் கண்ணனோட சேர்ந்து ‘ஆள் சொல்யூஷன்!’ ஒரு ஐடி கம்பெனி நடத்திட்டு வரேன்! இதுதான் அப்பாவுக்கு தெரியும். ஆனா.. நான் ஒரு ஆர்ஜே.. அது அப்பாவுக்கு தெரியாது. ஏன்னா அவருக்கு பிடிக்காது!
“உனக்காக மூணு டெக்ஸ்டைல்ஸ் கடை உருவாக்கி இவ்வளவு தூரம் வளர்த்து வச்சிருக்கேன்! எது பிடிக்குதோ அதை பார்த்துக்க வேண்டியது தானே? அதையெல்லாம் விட்டுட்டு பெங்களூர்ல போய் உட்கார்ந்து இருக்க, அந்த பொட்டியை தட்டிக்கிட்டு.. அதுல என்ன அப்படி வருமானம் கொட்டி கிழிச்சுட போகுது?’ இதுதான் எங்க அப்பாவுடைய நெடு நாளைய சுப்ரபாதம்!!
ஆனா அதை எல்லாம் கண்டுக்கிட்டது கிடையாது மீ!! அந்த காதுல வாங்கி இந்த காதுல விட்டுடுவேன்!! இப்ப கூட இந்த காலைல உங்களுக்கு என்னை இன்ட்ரோ கொடுத்துட்டே எங்க பஸ்ல போறேன்னு தெரியுமா? எங்கேன்னா ரெயின்போ எஃப்எம்க்கு! எஸ்.. அங்கதான் ஆர்ஜேவா இருக்கேன்!” என்று கண்ணடித்தவன், “பை த வே… ஐ அம் கேகே!!” என்றான் கன்னங்களில் குழி விழ சிரித்து!!
“நான்.. ஆளு பார்க்க வா? ம்ம்ம்… நானே என் அழகை பத்தி சொன்னா நல்லா இருக்காது தானே!! கதை போகுற போக்குல ஜியா சொல்லுவாங்க! நான் அப்பீட்டுங்கோ! நீங்க ஸ்டே டியூனுங்கோ!” என்றப்படி தனது சோல்டர் பேக்கை மாட்டிக் கொண்டு பஸ்ஸிலிருந்து குதித்து இறங்கியவன், ரேடியோ எப்எம் இருக்கும் அந்த எட்டு மாடி கட்டிடத்தை நோக்கி துள்ளல் நடையோடு சென்றான்!!
“ஹாய் பெங்களூர்… நான் உங்க கேகே.. இது உங்க காலைத் தென்றல்! சங்கீத ஸ்வரங்களோடு காலை நேர தென்றலாய் உங்கள் இதயங்களை வருட.. நான் ரெடி! நீங்க ரெடியா?” என்று ஆர்ப்பாட்டமான குரலில் தனது நிகழ்ச்சியை தொடங்கினான் கேகே!!
“இளையராஜா என்பதை விட.. ராஜா என்ற பெயர்… இசையுடன் ஒரு நெருக்கத்தை உணர்வதோடு, ரசிகர்கள் மனதில் அவருக்கு சூட்டப்பட்டுள்ள மகுடமாகவும் அது அமைந்திருப்பதை உணரலாம். ஆம், அவர் என்றென்றும் ராஜா தான்… அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை ரசிகர்கள் மனதில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இசை ராஜாவின் மெல்லிசைகள் தான் இன்று!!”
//வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது..
சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது..
சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்…
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்….//
என்று முதல் பாட்டு மூலம் அன்றைய நாளை துவக்கினான் என்றால்…
இரவின் மடியில் என்ற இரவு நிகழ்ச்சியின் மூலம்..
//தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது
தார்மீகக் கல்யாணம்
இது கார்கால சங்கீதம்
தாலாட்டுதே வானம்… //
என்று பெங்களூர் தமிழர்களை மட்டுமல்ல இசைபிரியர்கள் எங்கு இருப்பினும் அனைவரையும் தன் ஆழ்ந்த குரலாலும்.. அழகிய கவிதை நடை பேச்சாலும்.. தேர்ந்தெடுத்து போடும் பாடல்களாலேயும் கவர்ந்தான் கேகே!!
அட.. இந்த பாட்டா? ம்ச்.. செம..!!
இப்படியொரு கோணமா இந்த பாட்டுக்கு??
என்று வியக்கவும் சிலாகிக்கவும் வைத்தான், தன் வசீகர குரலால் மாயம் செய்தான்!! நேயர் விருப்பத்தின் போது நேயர்கள் அவனிடம் தன் மனபாரத்தை கொட்ட சந்தர்ப்பம் அமைந்தாலும் லாவகமாக கழன்று கொள்வான்!!
“இசை ஒன்றே போதும்!
எப்பேர்பட்ட காயத்தையும் ஆற்றும்!! வலியை மறக்கடிக்கும்!!” என்று தீர்மானமாக இருப்பவனின் தீர்மானம் நிலைக்குமா வருங்காலத்தில்.. அவனது வருங்காலத்தால்??
“டேய் கண்ணா இந்த வாரம் எப்படியாவது வீட்டுக்கு வந்துவிடுடா! உங்க அப்பா நை நைனு கத்திகிட்டே இருக்காரு!” என்றார் பாமா அன்று இரவு பேசிய மகனிடம்!!
எப்பொழுதும் சனி இரவு கிளம்பி சென்னை சென்று குடும்பத்தோடு அளவலாவி விட்டு திங்கட்கிழமை காலை பெங்களுர் வந்திடுவான் கார்த்திக்!!
ஆனால் இந்த வாரம் ஏன் சீக்கிரமே வர சொல்கிறார். அதுவும் வெள்ளிக்கிழமையே கிளம்பி வா என்கிறார் என்று அவன் புரியாமல் யோசித்துக் கொண்டே.. “என்னமா திடீர்னு என்ற ஐயனுக்கு என்ற மேல பாசம் பொங்கிடுச்சு!” என்றவன் நக்கலாக அவர்கள் வட்டார வழக்கில் பேச…
“குசும்பு பாத்தியா. உங்க அப்பாவுக்கு குறைவில்லாமல் உனக்கு இருக்கு!! உங்க ரெண்டு பேர்கிட்டயும் நடுவுல கிடந்து அல்லாடுறதே எனக்கு வேலையா போச்சு! சீக்கிரம் வாடா… டேய் கண்ணா… வரும்போது நான் போன வாரம் கொடுத்து விட்டேன் இல்லையா.. ஒரு பேட்ச் டிசைன் ஆரி ஒர்க் பிளவுஸ்க்கு! அதை மறக்காம வாங்கிட்டு வாடா” என்று அறிவுறுத்தினார்!!
அம்மாவின் இந்த பழக்கம் அவனுக்கு சில நேரம் சிரிப்பாய் இருக்கும்.. பல நேரம் எரிச்சலா இருக்கும். “வீடே பத்தி எரிஞ்சாலும் உனக்கு உன் பிளவுஸ் வந்துடனும்!!” என்று அந்நேரம் கடித்து துப்புவான்.
இன்று ஏதோ நல்ல மூடில் இருந்திருப்பான் போல.. சரிம்மா என்றதோடு முடித்துக் கொண்டான்.
கிஞ்சித்தும் தனக்குப் பெண் பார்த்திருப்பார் அப்பா என்ற எண்ணம் கார்த்திக்கு இல்லவே இல்லை!! மனைவிடம் கூட கிருஷ்ணகுமார் கூறவில்லை. பாமா மகனிடம் அப்படியே ஒப்பித்து விடுவார் என்று அவருக்கு தான் தெரியுமே! பாமாவிடம் ஈசியாக எதையும் போட்டு வாங்க முடியும் என்று!!
ஆனால் மறக்காமல் சம்பந்தி வீட்டாரிடமும் மருமகனிடமும் கூறிவிட்டு, மகளிடம் ‘அம்மாவிடம் கூறாதே!’ என்று அறிவுறுத்தவும் மறக்கவில்லை.
சொன்னது போல வெள்ளிக்கிழமை இரவே கிளம்பி வந்து விட்டான் கார்த்திக்.. சனிக்கிழமை காலை, நன்கு உறங்கி எழுந்து அம்மாவிடம் செல்லம் கொஞ்சி சாப்பிட்டு முடித்து இலகுவாக டி-ஷர்ட் ஷார்ட்ஸோடு வீட்டில் சுற்றிக் கொண்டிருந்தான் கார்த்திக்!!
‘வந்ததும் வராததுமாக கல்யாணம் பேச்சை எடுத்தால்.. எப்படியும் வேண்டாம் என்று குதிப்பான்! அதற்கு அவன் அம்மாவும் சப்போர்ட் செய்வாள்!’ என்று மகனையும் மனைவியையும் அறிந்தே இருவரும் கொஞ்சி பேசி நார்மல் ஆகட்டும் என்று இவர் காலையில் கடைக்கு கிளம்பி விட்டு, மதியம் போல் உணவுக்கு வந்தார்.
டைனிங் டேபிளில் ஊர்வன பறப்பன நீந்துவன அனைத்தும் இருக்க.. “கோடி கோடியா நாம சம்பாதிச்சாலும் நமக்கெல்லாம் இப்படிப்பட்ட கவனிப்பு இருக்கா? இல்ல! தொப்புள் கொடி பாசம்னா ஸ்பெஷல் தான்!” கொஞ்சம் சத்தமாக முணுமுணுத்தப்படி மதிய உணவு உண்டு விட்டு ஓய்வெடுக்க சென்று விட்டார்.
பெரும்பாலும் வார இறுதியில் இம்மாதிரி அவர் மதியம் ஓய்வெடுத்து விட்டு மாலை போல் தான் செல்வார். அதனால் பெரிதாக எதுவும் கண்டு கொள்ளாமல் அம்மாவும் மகனும் தங்கள் உலகத்தில் சஞ்சரித்தனர்.
மாலை தேநீர் அருந்தும் போது தான் “நாளைக்கு நாம கோயம்புத்தூர் போறோம்!” என்றார் கிருஷ்ணாகுமார்.
அவர்களுக்கு கோயம்புத்தூரில் சொந்த வீடு இருப்பதால்.. ஏதேனும் குலதெய்வ பூஜை இல்லை உறவினர் வீட்டு விசேஷம் என்றால் கோயம்புத்தூர் வீட்டில் தங்குவது தான் வழக்கம்.. அதுபோல என்று நினைத்தனர் பாமாவும் கார்த்திக்கும்!!
“நாளை கார்த்திக்கு பொண்ணு பாக்க போறோம்..” என்று அசால்டாக கூறியவரை குடித்துக்கொண்டிருந்த டீ புரையேற கார்த்திக் பார்த்தான் என்றால்.. வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருந்த வெங்காய பக்கோடா கீழே விழுவது தெரியாமல் பார்த்தார் பாமா!!
“பொண்ணு எங்க ஊர் பெரிய ஐயா பசுபதி கவுண்டரோட ஒரே பொண்ணு!!”
“ம்ம்ம்.. போன வாரம்!! திருப்பூரில் நடந்த என் பங்காளி பொண்ணு கல்யாணத்துல பார்த்தபோது நான் சொல்லிட்டு வந்துட்டேன் ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டுக்கு பொண்ணு பாக்க வரோம்னு!! அன்னைக்கு தான் இல்லாத வயித்து வலிய இருக்கிறதா சொல்லி நீ என் சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டியே!!” என்று நக்கலாக சொல்லி ஒரு குட்டும் வைத்தார் மனைவிக்கு கிருஷ்ணகுமார்.
அன்று போகாத தன் மடத்தனத்தை எண்ணி இன்று நொந்து கொண்டார் பாமா!! அதுக்காக எல்லாம் பெரிய வில்லி என்று அவரை கற்பனை செய்து கொள்ள வேண்டாம்!! கொஞ்சம் கிருஷ்ணகுமாரின் பக்க சொந்தங்கள் என்றால் இவருக்கு அலர்ஜியே!! மற்றப்படி பந்தா பாமா அவர்!!
பாமா கோயம்புத்தூரை சொந்த ஊராகக் கொண்டாலும் கருமத்தம்பட்டி சுற்றியுள்ள ஏதோ ஒரு பட்டி தான் அவருக்கும் பூர்வீகம்!! அதனால் பெரிய ஐயா வீட்டு சம்பந்தம் என்றால் கண்டிப்பாக பெரிய இடம் என்று அவருக்கு புரிய.. மகனை சமாதானப்படுத்தும் எண்ணத்தோடு பார்க்க.. அவனோ அம்மாவை எரித்து விடுவது போல பார்த்தான்.
“சீக்கிரம் கிளம்புங்க நைட் ஃபிளைட்டுக்கு கிளம்புறோம்!” என்றதும், அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு கடைசியில் கூறும் அப்பாவை ஒன்றும் சொல்ல முடியாமல் அவன் பார்க்க.. பாமாவோ மகனின் காதில் “மை சன்.. டோண்ட் ஃபீல்!! பொண்ணு தாண்டா பாக்குறாங்க! விடு பாத்துக்கலாம்!” என்று சமாதானம் செய்தார்.
அவர்களுக்கு தெரியவில்லை இந்த பெண் பாரக்கும் படலம் சம்பிரதாயத்துக்கு மட்டுமே.. உண்மையில் இந்த கல்யாணம் நடப்பது உறுதி என்று!!
அன்று இரவே கிளம்பி கோயம்புத்தூரில் அவர்களின் பூர்வீக வீட்டுக்கு வந்து விட்டனர்.
மகளின் குடும்பம் மறுநாள் வந்து விடுவதாக கூறியிருந்தனர்.
அன்று காலையிலேயே கிருஷ்ணமூர்த்தி மனைவியை போட்டு பாடாய்ப் படுத்தி எடுத்து விட்டார்.
ச்சசே… நோ இஸ்க்.. இஸ்க்!! அதெலல்லாம் அவருக்கு ரிஸ்க்… ரிஸ்க்!!
பாமா பத்தாமல் போன.. அதுவும் 5000 ரூபாய் கொடுத்து தைத்த ஜாக்கெட்டை தான் கடுப்போடு பார்த்துக் கொண்டிருந்தார். “ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் தச்சது.. அதுக்குள்ள இப்ப பத்த மாட்டேங்குது!! வர வர நம்ம உடம்பு பலூன் ஆட்டம் போய்கிட்டே இருக்கு.. இதுக்கு ஒரு எண்ட் கார்டு போட்டு ஆகணும்!!” என்று ஆயிரமாவது முறையாக சபதம் எடுத்தவர்,
போன வாரம் ஆரி ஒர்க் செய்து வந்திருந்த வேறொரு ஜாக்கெட்டை எடுத்தார்.
“வெறும் ஆரி வொரக்கு மட்டும் மூவாயிரம் ரூபாய் வாங்கினான் பாவி… ஒழுங்காவே ஆரி ஒர்க் பண்ணல!! அடுத்த முறை வேற ஆள தான் பாக்கணும்” என்றவர் தன் உடலை அதுக்குள் திணித்துவிட்டு அலங்காரங்கள் முடித்து வெளியே வந்தார்.
அவரை ஏற இறங்க பார்த்த கிருஷ்ணமூர்த்தி “ஏன்டி நாழி ஆயிடுச்சுனு எவ்வளவு நேரமா நானும் கத்துறேன்.. இப்படி லேட் பண்ற.. ஐயா என்ன நினைச்சிப்பாரு நம்மை பத்தி! நல்ல வேளை முதல நாளே கோயம்புத்தூர் வந்து நம்ம வீட்டுல தங்கினோம். உங்களையெல்லாம் டைரக்டா சென்னையில் இருந்து அழைச்சிட்டு வந்து இருந்தா… என் பெயரை நார அடிச்சு இருப்பீங்க.. அம்மாவும் பிள்ளையும்” என்று அங்கு ஓரமாக முறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்த மகனையும் சேர்த்து திட்ட..
“நான் என்ன சாதாரண ஆளோட பொண்டாட்டியா? டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரீஸ் ஓனரோட பொண்டாட்டியாக்கும்!! நானே சாதாரணமாக வந்தா.. நல்லா இருக்குமா? கூட பார்க்க போற என் மருமக.. மாமியார் ட்ரெண்டா இல்லைனு தப்பா நினைச்சிட கூடாது பாருங்க!!” என்று அலங்காரங்களை சரி செய்து கொண்டே சிரித்தவரை.. முறைத்துக் கொண்டே முதலாக ஏறி அவர்களது காரில் அமர்ந்து கொண்டார்.
அதன் பின்னால் மகனும் மனைவியும் வந்தனர் கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் இருந்து வந்து அனித்ரா குடும்பமும் இவர்களோடு சேர்ந்து கொண்டது!!
“ஐயா வணக்கம்ங்க!!” என்று அத்துணை ஆளுமையாக பேசும் தந்தை.. இன்று இந்த மனிதரிடம் அடிபணிந்து பேசுவதை விசித்திரமாய் பார்த்தான் கார்த்திக்!!
பெயரில் கூட ஸ்டைலிஷ் பார்ப்பவன் கோயம்புத்தூரில் இருந்து இருபது கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இந்த கிராமத்தில் உள்ள பெண்ணை பார்க்க வந்ததை கடுமையாக எதிர்த்தாலும் எந்த பலனும் இல்லை.
கார்த்திக் அருகில் இருந்த அவனது அக்காவின் கணவன் பூபாலன் “மச்சான்.. இடம் ரொம்ப பெரிய இடம் போல.. வீடே ரொம்ப பெருசா ட்ரெடிஷனலா இருக்கு! ஆனா என்ன ஊரு தான் கொஞ்சம் பட்டிகாடு மாதிரி இருக்கு!” என்று சற்று நக்கலாக மச்சானை பார்த்து கேட்க.. அவனோ “சும்மா இருங்க மாமா.. என்னை பேச வைக்காதீங்க!” என்று அடிக்குரலில் கடித்து துப்ப.. கணவனின் இந்த பக்கம் இருந்த அவனது அக்காவோ “நீங்க வாய வைச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா? அவனே கடுப்புல இருக்கான்!” கணவனை கண்டித்தாள்.
வெகு பவ்யமாக அந்த ஐயாவிடம் பேசிக் கொண்டிருந்த அப்பாவை பார்த்த கார்த்திக்,
‘அருக்காணியோ இல்ல திருகாணியோ எதையோ ஒன்ன நிறுத்த போறார் அந்த ஐயா.. இந்த அப்பாவும் அந்த ஐயா மேல உள்ள பக்தில அதை என் தலையில் கட்டி வைக்க போறார்!! கோபுரங்கள் சாய்வதில்லை ரீசென்ட் வெர்ஷன் மாதிரி இருக்க போகுது எங்க லைஃப்” என்று அவன் புலம்பிக் கொண்டிருக்க… எல்லாம் மனதோடு மட்டும் தான்!!
அதற்குள் வழக்கம் போல ஒரு பெரிசு பெண்ணை அழைத்து வர சொல்ல.. வந்த நின்றவளின் அழகை விட அவள் ஜாக்கெட்டை டிசைனில் சொக்கி போனார் பாமா!!
அவள் போட்டிருந்த பிளவுஸில் தான் இவரது நாட்டம் எல்லாம்.. “இவளை விட நான் ட்ரெண்டா இருக்கணும்னு பார்த்து.. பார்த்து போட்டுட்டு வந்தா… என்னை விட இவ இன்னும் ட்ரண்டியா இருக்காளே!!” என்று தன்னுடையதையும் அவளுடையதையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தவர், அருகில் இருந்த மகனை முழங்கையால் இடித்து “மை சன்!! மருமக.. என்னை விட ட்ரெண்டியா இருக்காடா” என்றார்.
“அம்மா.. நீ வேற!!” என்று அவன் பல்லை கடித்துக் கொண்டு அம்மாவிடம் கடிய…. அவனின் அந்த புறம் அமர்ந்திருந்த அவனது அப்பா கிருஷ்ணமூர்த்தி “பாருடா பாப்பா வந்திருக்காங்க… மணிமேகலை பாப்பாவ பாருடா!” என்றார். குரலில் அவ்வளவு ஒரு அடக்கம் மரியாதை அவரிடம்!!
அவனுக்கு அப்படியே வடிவேல் மைண்ட் வாய்ஸில் வந்து “பொத்தி பொத்தி வளர்த்த புள்ள மேகல.. அதனால அதுக்கு வெட்கம் விட்டு போகல…” என்ற காட்சிகள் கண்முன்னே எய்ட்டி எம்மம் திரையில் டிஜிட்டல் எஃபெக்ட்டோடு ஓட… “அய்யோ…!!” என்று சத்தமாக அலறியே விட்டான் அவன்!!
Super and interesting sis
😂😂🤣🤣🤣sama sis waiting for next round of ranagalam illa kuthukalam🤪🤪🤪
Super super ❤️