ATM Tamil Romantic Novels

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 5

இஷ்டம் – 5

 

“எதுக்கு மா.. அப்பா உடனே வான்னு சொன்னார். போன வாரம் தானே வந்துட்டு போனேன்.. ம்ப்ச் என் வேலையே கெடுது!” என்று வந்ததும் வராததுமாக அம்மாவிடம் சண்டை பிடித்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

 

“நீ ஒரு உம்ணாமூஞ்சி.. உங்க அப்பா ஒரு சிடுமூஞ்சி.. உங்க ரெண்டு பேரோட மல்லுக்கட்டுற நான் ஒரு அம்மாஞ்சி!!” என்று பாமா புலம்பித் தள்ளினார்.

 

“எதே நான் உம்னாமூஞ்சியா? வந்து ரெயின்போ எஃப்எம்மில் கேட்டுப்பாரு..” என்று உளறிக்கொட்டினான்.

 

“எனக்கு இருக்குற வேலையில எஃப்எம் எல்லாம் கேட்க நேரம் எங்க இருக்கு?” என்று அங்கலாயத்தார் பாமா. அவன் சொன்னதை சரியாக காது வாங்காமல்.. 

 

அவர் சொன்னதும் தான் இவனுக்கு ‘மண்டை மேலுள்ள கொண்டையை மறந்திட்டே முருகேஸானு’ மைண்ட் வாய்ஸோட.. கார்த்திக் கப்சிப்!!

 

ஆனாலும் அப்பா ஏன் வரச் சொன்னார் என்று தெரிய வேண்டி இருந்தது. ‘இப்ப ஏதாவது வாய் கொடுத்து அம்மாவிடம் உளறி கொட்ட வேண்டாம்!’ என்று மெதுவாக தன் அறைக்கு நழுவி விட்டான்.

 

அவன் சென்றதும் தான் “ஆமா.. எதுக்கு இவன் இப்ப என்னை எஃப்எம் கேட்க சொன்னான்? அதுக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்? இவனை தானே உம்னாமூஞ்சினு சொன்னேன்?” என்று தீவிர சிந்தனையில் பாமா!!

 

மதியம் சாப்பிட வந்த மகனிடம் “மை சன்… ஏன் என்னை எஃப்எம் கேட்க சொன்ன?” என்று போட்டு வாங்க பார்க்க.. 

 

“நான் எப்ப சொன்னேன்?” என்று அம்மாவின் பேச்சை மடை மாற்றி உணவில் கவனம் பதித்தான் கார்த்திக்.. 

 

“நான் உன்ன உம்னாமூஞ்சி சொன்னதுக்கு நீ என்னை எஃப்எம் கேக்க சொன்னியே? எதுக்கு மை சன்.. என்னை எதுவும் இண்டர்வியோ எடுக்க போறாங்களா மை சன்?” என்று திரும்பவும் நோன்டி நொங்கு எடுத்தார் பாமா.

 

“ஓ.. அதுவா… என் ப்ரண்ட் அதுல சேரந்திருக்கான். அவன் கிட்ட கேளு நான் உம்னாமூஞ்சி இல்ல சொல்வான்” என்று சாதாரணம் போல பேச்சை மாற்றி விட்டான்.

 

“நீ எஃப்எம் கேட்க சொன்னதும் என்னைத்தான் எதுவும் இன்டர்வியூ எடுக்க கேட்டு இருக்களோனு நினைத்தேன்” என்று முகத்தை சிலுப்பிக் கொண்டார் பாமா.

 

“ஆமா மா.. நீ என்ன சாதனை பண்னேன்னு உன்னை இன்டர்வியூ எடுக்க இவ்வளவு ஆசை படுற மா?” என்று நக்கலாக கேட்டான் கார்த்திக்.

 

“என்னது? என்ன சாதனையா? என்ன டா இப்படி கேட்டுட்ட? கேட்டுக்கோ என் சாதனைகளை மை சன்!” என்று அதுவரை அருகில் இருந்து மகனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தவர், வாகாக அவன் புறம் உட்கார்ந்து தன் சாதனைகளை பட்டியலிட ஆரம்பித்தார்.

 

“உங்க அப்பாவ கட்டிக்கிட்டதே நான் செய்த சாதனையின் உச்சம் தெரியுமா? அதை விட.. உன் அப்பா சொந்தக்காரங்களை எல்லாம் கட்டி சமாளிக்கிறது எல்லாம் சாதாரண விஷயமா? உங்க அப்பா காலைல ஆபீஸ் போனாரா நைட்டு தான் வருவாரு.. அதுவரைக்கும் இடையில மதனி.. அக்கா.. நாத்தி.. மருமகளே.. வருகிற உங்க அப்பா சொந்தக்காரர்கள எல்லாம் தரம் பிரிச்சி யாரு உண்மையான பாசத்தோடு வராங்க யாரு பணத்துக்காக வராங்கன்னு கண்டுபிடிச்சி.‌. யார் யாருக்கு உதவி செய்யலாம்னு நான் லிஸ்ட் போட்டு எடுக்கிறது சாதனையா தெரியலையா உனக்கு?” என்று பெரு மூச்சு எடுத்து மகனை பார்த்தார் பாமா.. அவனும் சாப்பாடு வாயில் இருந்து விழுவது தெரியாமல் அம்மாவை ஆவென்று பார்த்தான்.

 

“அது மட்டுமா.. எங்க உன் அப்பா உன்னை ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டு கூட்டிட்டு வந்தார்? அவர் தொழிலை தான் கட்டிக்கிட்டு கிடந்தார்! உழைக்கிறார் தான் இல்லைன்னு சொல்லல.. அதுக்குன்னு நான் செய்ததெல்லாம் சாதனை இல்லைன்னு ஆகாது!!

 

காலையில் உன்னை ஸ்கூலில் விடுவதில் இருந்து.. வீட்டுக்குள்ள வேலைக்கு ஆள் இருந்தாலும் அவர்களையும் வைத்து இடை இடையே உங்க அப்பாவுக்கும் மதிய சமையல் அனுப்பி.. ஈவினிங் உன்னையும் பிக்கப் செய்து.. இந்த வீட்டையும் மெயின்டன் செய்து.. புதுசா கட்டிட்டு இருந்த நம்ம வீட்டுக்கும் அப்பப்போ விசிட் அடித்து.. நீ காம்பெடிஷன் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டீஸ் என்று வெளியூருக்கு போனால் உன் கூடவே வால் புடிச்சிட்டு வந்து.. இதுல சொந்தக்காரவங்க காதுகுத்து கல்யாணம் அப்படின்னு வந்தா அவங்களுக்கு பார்த்து பார்த்து சீர்வரிசை செஞ்சி.. உங்க அப்பா வர முடியாததுக்கு சேர்த்து நானே தலைய காட்டிட்டு வந்து.. குடும்ப தலைவர்னு அவரையும் எங்கேயும் விட்டு கொடுக்காம சமாளிச்சு..” இன்று அவர் மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருக்க பயந்து பார்த்தான் அம்மாவை கார்த்திக்!! 

 

கூடவே அருகில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொடுக்க.. அதை கட கட கட வென்று குடித்தவர், அடுத்த ஒரு பேச்சுக்கு ஆயத்தமாக “போதும் மா!!” என்று கையெடுத்து கும்பிட்டான்.

 

“உங்களுக்கெல்லாம் நக்கலா இருக்கு இல்ல நான் பேசுறது.. இந்த பொம்பளைங்க வீட்ல மட்டும் தானே இருக்காங்க.. பெரிய என்ன சாதனை செஞ்சி கிழிச்சிட்டாங்க? இதெல்லாம் என்ன பெரிய சாதனையா?

வெளியில் போய் நீங்க சம்பாதிக்கிறதும் அதில் உயர்வது மட்டும் தான் சாதனைனா.. அந்த சாதனையை நீங்கள் நிம்மதியாக செய்வதற்கு காரணமே உங்க பின்னால இருக்குற நாங்க தான்டா!! இப்படி குடும்பத்தை நாங்க பார்த்துக்கிறோம் என்ற அந்த தெம்புலையும்.. நாங்க கொடுக்கிற நிம்மதியும்.. இல்லைன்னா.. நீங்க வெளியில போய் ஜெயிக்க முடியுது!! ஏன் ஒரே ஒரு நாள் வேலை பார்க்க முடியுமா? இப்ப சொல்லு நாங்க செஞ்சது எல்லாம் சாதனை இல்லையா?” என்று கெத்தாக ஒன்றே புருவத்தை உயர்த்தி பார்த்தவரை.. 

 

எப்படி மறுப்பான்?

எப்படி இல்லை என்பான்?

 

உண்மையிலேயே அம்மா சொன்னவற்றை நினைத்துப் பார்த்தவனுக்கு.. தன் வாழ்நாளில் பெரும் பகுதியை அவன் அம்மாவுடன் தான் கழித்திருப்பது புரிந்தது.

 

அவர் சொல்வது போல் பள்ளி கல்லூரி என்று அனைத்திற்கும் முன்னே நிற்பது அவன் அம்மாதான்!! அதுக்காக அப்பாவுக்கு அவன் மீது பாசம் இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அவர் தொழில் என்று கையில் எடுக்க.. இவர் குடும்பத்தை தாங்கிக் கொண்டார்.

 

அப்போ அவர் தொழிலை ஜெயித்தது உண்மைனா.. நம் குடும்பத்தையும் இந்த அளவு கொண்டு வந்து இருக்குற அம்மா செய்ததும் சாதனை தானே!! என்று உளமாற உணர்ந்தவன் “நீ கவலைப்படாதமா.. வர மார்ச் எட்டு பெண்கள் தினத்தன்று உனக்கு ஒரு இன்டர்வியூ கொடுக்க சொல்றேன்” என்றதும் அவர் கண்கள் மகிழ்ச்சி மத்தாப்பை காட்டின..

 

ஆனாலும் “நோ.. மை சன்! இதெல்லாம் நாங்க சாதனைனு சொல்லிக்கிட்டு உங்க ஆண்கள மாதிரி ஜெம்பம் அடிச்சிகிறது கிடையாது. எங்களுக்கெல்லாம் தன்னடக்கம் ஜாஸ்தி” என்று அவனை வாரியும் விட்டார்.

 

“ஏம்மா..!!” என்று கார்த்திக் முறைக்க..

 

“அம்மா என்பது வார்த்தை..

ஏம்மா என்பது எமோஷன்.. நல்லா இருக்குல? அம்மா புதுசா கவிதாயிணி அவதாரம் எடுக்கலாம்னு இருக்கேன் மை சன்!!” என்று அவர் சிரிக்காமல் சீரியஸாக சொல்ல..

 

கார்த்திக்கோ மீண்டும் சாப்பாடு புரையேற தலையில் தட்டிக் கொண்டவன், “அம்மா.. ஏம்மா? ஏன்? உன் கவிதாயினி அவதாரம் அப்பாவுக்கு தெரிஞ்சுதுனா?”

 

“போடா.. போடா.. உன்னையும் பார்த்தாச்சு.. உங்க அப்பனையும் பார்த்தாச்சு” என்று அவர் உதட்டை சுழிக்க…

 

“அச்சோ இவரையே.. சமாளிக்க முடியலையே.. எங்கணம் அவளை சமாளிக்க..” என்று விழி பிதுங்கினவன் மைண்ட் வாய்ஸில் வடிவேலு வந்து.. “மேகலை.. மணிமேகலை..” என்று பாசத்தில் உருகி பேச.. இவன் தலையை உலுக்கிக் கொண்டான், அவள் நினைவை விரட்ட..

 

விரட்டினால் ஓடிவிடும் பந்தமா அது?

மிரட்டி உருட்டி ஒட்டிக் கொள்ளும்‌ பந்தம் அது!!

 

‘அப்பா எதற்கு இன்று வர சொன்னார்?’ என்று கேள்வியும் அவனை பெரிதாக தாக்க.. எத்தனை முறை சுற்றி வளைத்து கேட்டும் பாமாவிடமிருந்து அவனால் பதிலை வரவழைக்க முடியவில்லை.

 

பாமாவுக்கு தெரியும் எதற்கு வர சொன்னார் என்று!! ‘வந்ததும் அப்பாவாச்சு பிள்ளையாச்சு நம்ம மண்டையை இடையில் கொடுத்து பல்பு வாங்கிப்பானேன்?’ என்று புத்திசாலி இல்லத்தரசியாக யோசித்து அமைதியாகவே இருந்தார்.

 

அதிலும் கிருஷ்ணகுமார் காலையில் கிளம்பும்போது “நானே அவனிட்ட பேசிகிறேன் பாமா.‌. நீ எதையாவது பேசி வைச்சு அவன குழப்பி விட்டுடாத!” என்று சொல்லி சென்றிருக்க.. அதில் சிறு கோபமும் முகிழ்த்திருக்க.. சரிதான் என்று விட்டார்.

 

அவரும் காலையில் கணவன் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்ததால்.. மேற்படி கார்த்திக்கிடம் இதைப்பற்றி விவாதிக்கவில்லை. அம்மாவும் மகனும் உண்டு கொண்டிருக்கும் போது தான் கிருஷ்ணகுமார் வந்தார்.

 

எழுந்து கணவனுக்கு பரிமாறப் போக “இரு.. இரு நானே போட்டுக்கிறேன்.. நீ சாப்பிடு!” என்றபடி அவரும் அமர்ந்து கொள்ள, அதிசயமாக மதிய வேளையில் வீட்டிற்கு வந்து சாப்பிடும் அப்பாவை கவனித்தான் மகன். தந்தையோ கவனமாக பேச்சை தவிர்த்து சாப்பாட்டில் கவனம் கொள்ள..

 

‘ஏதோ பெரிய விஷயமாக இருக்கும் போலையே?? பில்டப் எல்லாம் பயங்கரமா இருக்கே கார்த்திக்!’ என்று இவன் அதி கவனமாக இருந்தான்.

 

சாப்பிட்டு முடித்ததும் ஆசுவாசமாக அமர்ந்தவர் மகனை அழைக்க.. 

 

‘அய்யே.. புலி வருது புலி வருதுனு.. புலி வந்துடுச்சே!’ என்றப்படி அமர்ந்து அப்பாவை பார்த்து சிரித்தான்.

 

“தம்பி.. உனக்கு ஒரு 200 பத்திரிக்கை போதுமா?” என்றதும் அப்பாவின் இந்த தாடலடியை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மருமகள பிடித்திருக்கிறதா? மேற்கொண்டு பேசலாமா? இப்படி எதையாவது கேட்பார் என்று அவன் எதிர்பார்த்திருந்தான்.

 

‘இன்னும் நான் கொஞ்சம் நாள் யோசிக்கனும்’ என்று இப்படியே ஓட்டி விடுவோம். அதற்குள் எப்படியும் அந்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து விடுவார்கள் நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று ஏக கனவில் இருந்தவன் எண்ணத்துக்கு எண்ட் கார்டு போட்டார் பத்திரிகையை சொல்லி கிருஷ்ணகுமார்.

 

“அது.. அது.. வந்து..” என்று அவன் இழுக்க..

 

“இங்கே பார் தம்பி.. வர தையிலேயே முகூர்த்தம் வச்சிருக்கோம்..!!”

என்றதும் திகைத்தே விட்டான் கார்த்திக்.

 

அப்பாவை எதிர்த்து பேசி ரசபாசம் செய்யும் மகனில்லை அவன். பெற்றோருக்கு மிக கட்டுப்பட்டவன். அதிலும் இதுவரை மகனுக்கு எதுவும் மறுத்ததில்லை கிருஷ்ணகுமார். அந்த தைரியத்தில் தான் இவன் வேலை பார்க்க அனுமதி கேட்க.. முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார். அதுவும் பார்ட் டைம் என்று எவ்வளவு சொல்லிப் பார்த்தும் கிருஷ்ணகுமார் மசியவே இல்லை.

 

“நமக்கென்று ஒரு தொழில் இருக்கிறது கண்ணா.. இல்லை நீ ஏதாவது புதுசா ஆரம்பி அதுக்கும் நான் உதவி செய்கிறேன். அதை விட்டுட்டு ஏதோ கூத்தாடி மாதிரி போய் ரேடியோ டிவில வேலை பார்க்கிறது இதெல்லாம் நம் குடும்பத்துக்கும் பாரம்பரியத்திற்கும் சுத்தமா சரிவராது!!” என்று மறுத்துவிட்டதால் தான் பெங்களூருக்கு தொழில் தொடங்க என்று சென்றவன் தனது விருப்பத்தையும் பெற்றோருக்கு தெரியாமல் நிறைவேற்றிக் கொள்கிறான்.

 

அதைப்போல இதில் எதுவும் அவனால் செய்ய முடியாதே! வேற பெண் மனதில் இருந்தாலோ அல்லது இவன் விருப்பமாக யாரையாவது சொல்லி இருந்தால் கூட கிருஷ்ணகுமார் கண்டிப்பாக மகனுக்கு செவி சாய்த்து இருப்பார்.

 

மகனின் மனது தெளிந்த நீரோடை என்பது அவருக்கு திண்ணம்.

 

அதனால்தான் இந்த அவசர முடிவு. ஆனால் அவசர முடிவு எடுக்க காரண கர்த்தா.. வேறு ஒருவன்.

ஆம்.. மாணிக்கவேல்!!

 

மேகலையை ஒரு தலையாக காதலிக்கிறேன் என்று சுற்றிக் கொண்டிருந்தவன், திடீரென்று ஒரு நாள் கோயிலில் அனைவருக்கும் முன்னிலையில் அவளை வழி மறைத்து வம்பு செய்தான்!!

 

“ஏங் கண்ணு.. நான் தான் உன்னைய மகாராணி போல வைச்சிக்கிறேனு உங்க ஐயன் கிட்ட சொன்னேன் தானுங்க.. அப்புறம் எதுக்கு உங்க ஐயன் மாப்பிள்ளைய சென்னை பட்டணத்தில் இருந்து இறக்கி இருக்காரு.. ஏனுங்.. உள்ளூரில இருக்கிறவனெல்லாம் பார்த்தா மாப்பிள்ளையா தெரியலையாக்கும் உங்க ஐயனுக்கு.. இல்ல எங்களை எல்லாம் பார்த்தா ஆம்பளையா தெரியலையா?” என்று வேட்டியை மடித்துக் கொண்டு அவன் கேட்ட திணுசில் அதிர்ந்து பார்த்தாள் அவனை மேகலை.

 

இதுவரை வயசு கோளாறில்.. பணத்திமிரில்.. விடலை பருவத்தால் தான் பேசுகிறான், தவிர்த்து போனால் புரிந்து கொள்வான் என்று அமைதியாக அவனிடம் பேச்சை தவிர்த்து தான் வந்தாள். 

 

ஆனால் இன்று பேச்சு செல்லும் திசையோ வேறு மாதிரி இருந்தது. இதற்கு என்ன பதில் கூற முடியும்? நீ ஆம்பிளை இல்லை என்றா? அப்படி தன் வாயிலிருந்து வர வைக்க வேண்டும் என்று இப்படி பேசுகிறானா? அப்படி ஒரு வார்த்தை இத்தனை பேர் மத்தியில் அவனை பார்த்து சொன்னால்.. அவனின் மானம் போவதோடு மட்டுமல்லாமல் என் பேரையும் சேர்த்து நாறடைத்து விடுவான்! அதற்குத்தான் இப்படி என்னிடம் விளையாடுகிறானோ? நாம் வாய் விட கூடாது!’ என்று எச்சரிக்கையோடு தன் வாயை அழுத்த மூடிக்கொண்டாள் மேகலை.

 

மேகலை.. எப்பொழுதும் டக்கு என்று பேசிவிடும் குணம் தான். ஆனால் எடுத்தெறிந்து யாரையும் பேசியது கிடையாது!!

 

யோசிக்காமல் பேசினாலும் மரியாதை இன்றி பேசி விட மாட்டாள் யாரையும்!!

 

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் அவள் அப்பாவின் கௌரவத்தை சார்ந்தது. அதை முக்கியமாக பார்ப்பாள் அவள்!! அதனால் இப்பொழுது பேசுவதை விட அமைதி காப்பதே சிறந்தது என்று நினைத்தாள்.

 

“எப்பொழுதும் திருப்பி திருப்பி பேசனும் இல்லிங்.. கொஞ்சம் வார்த்தையை மிச்சம் வச்சுக்கலாமுங்க.. தப்பு இல்லிங் அம்மணி!” என்று அடிக்கடி கூறும் தந்தையை நினைவுப்படுத்திக் கொண்டு, இருக்க மூடி வாயை மூடிக்கொண்டு அமைதியாக தான் நின்றாள்.

 

பின்னே அவளது படை மற்றும் அவளின் உற்ற தோழி கனகமும் நின்றிருந்தனர். இவளின் இந்த அசாத்திய அமைதியை புரியாமல் அவர்களும் பார்த்திருந்தனர். எதுவா இருந்தாலும் அவளே பேசட்டும் என்று கனகமும் அமைதியாகி விட்டு, அங்கிருந்த பிள்ளைகளையும் கண்காட்டி அமைதிப்படுத்தி இருந்தாள்.

 

“ஏங் கண்ணு.. அப்போ நான் ஆம்பள இல்லிங்களா?” என்று அவளை இன்னும் நெருங்க.. அவள் அனிச்சை செயலாய் பின்னால் இரண்டடி எடுத்து வைத்தாள்.

 

அவளின் அமைதி அவனை இன்னும் சீண்ட தூண்டியது. “நான் வேணா ஆம்பள தான் காட்டடுங்களா.. உங்க ஐயன பத்தே மாசத்துக்குள்ள தாத்தனாக்கி!” என்று விஷம புன்னகையோடு அவன் கூறினான்.

 

அவனின் வரைமுறைற்ற பேச்சில் உள்ளம் கொதித்து கண்களை அவள் கனலை கக்க.. அதில் இன்னும் சொக்கித்தான் போனான் இந்த மாணிக்கவேல் பித்தனாய்!

 

“ஏங் கண்ணு.. பதில் சொல்லு?” என்று விடாப்பிடியாய் அவளை வழியை மறைத்து நின்றான்.

 

“மௌனம் சம்மதத்துக்கு அறிகுறினு இத்தன நாள் அது எனக்கு புரியவே இல்ல கண்ணு.. நீ மௌனமாய் இருந்ததை பார்த்து பிடிக்கலையோனு நெனச்சேன். இல்லடா மடையானு.. இப்பதான் தெரியுது கண்ணு, உனக்கு என்ன புடிச்சிருக்குன்னு!! பாரு கண்ணு.. இந்த மாமனோட பவுசை எப்படி சீர தூக்கிட்டு வந்து உன்னை கொத்திட்டு போறேன் பாரு..” என்று அவனாய் கற்பனையை தறிகெட்டு ஓட விட்டான்.

 

‘இனிமேலும் அமைதியாக இருந்தால்.. நான் இவனை காதலிக்கிறேனு ஊரு முழுக்க பரப்பி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!’ என்று உணர்ந்தாள் பெண்.

 

“ஏனுங்க அண்ணா..” என்றதும் மாணிக்கவேல் திடுக்கிட்டு சுற்றும் மற்றும் பார்க்க.. அவளோ கண்களால் மற்றவர் இல்லை உன்னை தான் என்று விரலால் சுட்டிக்காட்டினாள்.

 

“நான் உனக்கு மாமன் முறை வருவேன் கண்ணு!” என்று பல்லை நரநர வென்று கிடைத்தால் மாணிக்கவேல்.

 

“அது கெடக்குட்டுமுங்க ஒரு ஓரமா.. நமக்கு இது தான் வசதிங் ணா.. நீங்க சொன்ன மாதிரி பத்தாவது மாசத்துல புள்ளைய பெத்து கொடுக்கறது மட்டும் ஆம்பளத்தனம் இல்லிங்க… அதை தாண்டி உங்க சிற்றறிவுக்கு எட்டாத பல விஷயம் இருங்குங்க ணா.. அந்த பொண்ணு மனசு ஒழுங்கா புரிஞ்சு.. அவளை அன்பால தாங்கி.. அங்கீகாரத்தால் அரவணைச்சு.. பாசத்தை நேசத்தை முழுசா கொட்டி.. அதில் அவளை முழுமையா உணரச் செய்கிறவன் தான் உண்மையான ஆம்பளைங்க ணா.. நீங்க ரோசன செஞ்சு பாருங்.. இதுல ஏதாவது ஒரு பாயிண்ட் உங்களுக்கு இருக்கு தானானுங்.. அப்படி இல்லிங்னா கூட பரவா இல்லிங்.. இதெல்லாம் வளத்துக்கிட்டு நீங்க வேற ஒரு பொண்ண போய் நேசிங்.. எனக்கு கல்யாணம் முடிவாகிடுச்சிங் ணா!” என்று ஆயிரெத்தெட்டு அண்ணாவை போட்டு, அவள் அழுத்தம் திருத்தமாக உரைத்து விட்டு சென்றாள், ‘நீ என்ன முட்டி மோதினாலும் உனக்கு நான் இல்லை!’ என்று தெளிவாக!!

 

ஆனால் அதெல்லாம் மாணிக்கவேலின் பைத்தியம் பிடித்த மண்டையில் ஏறவில்லை. மறுநாளே சொந்த பந்தத்தோட வந்து இறங்கி விட்டான் அவர்கள் வீட்டில்.. பரிசம் போட!!

 

அதே நேரம் சொந்த ஊருக்கு ஒரு வேலையாக சென்ற கிருஷ்ணகுமார் பசுபதி கவுண்டர் வீட்டுக்கு சென்றார்.

1 thought on “நீ நீ நீ என்னோட இஷ்டம்… 5”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top