என்ற பாடல் முன்னால் சென்று கொண்டிருந்த குட்டி யானையில் ஒலித்துக் கொண்டு செல்ல..
“ஏலே.. பாட்ட நிப்பாட்டுடா.. என்றா பாட்டு இது? நான் பரிசம் போட போறேனாக்கும்! என்னமோ என்ற அக்கா புள்ள பெத்துதுக்கு சீர் எடுத்துட்டு போற மாதிரி பாட்ட ஓட விடுற.. வகுந்துடுவேன்! வேற பாட்ட மாத்துடா!” என்று சீர் சுமந்து கொண்டு வந்தவர்களுக்கு முன்னே யானை போல அசைந்து அசைந்து சென்ற குட்டி யானையில் பாடல் ஒலிக்க வைத்துக் கொண்டிருந்தவனை திட்டிக் கொண்டிருந்தான் மாணிக்கவேல்!!
ஆம்.. சொன்னது போல தன் சொந்த பந்தங்களை அழைத்துக் கொண்டு மேகலையை பரிசம் போட சென்று கொண்டிருககிறான்.
இந்த விஷயம் காற்றாய் ஷன நேரத்தில் பசுபதி கவுண்டருக்கும் வந்து சேர்ந்தது.
அவரை சுற்றி அவரது அங்காளி பங்காளிகள் எல்லாம் அமர்ந்திருந்தனர். ஏற்கனவே அவர்கள் முன்னால் தான் கார்த்திக்கும் மேகலைக்கும் திருமணம் என்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இப்படி இவன் வருகையில் அதுவரை இருந்த பொறுமை எல்லாம் பறந்து விட்டது பசுபதிக்கு.
“என்றா நெனைச்சுகிட்டு இருக்கான் அந்த எடுபட்ட பய.. அப்பவே அவன் என்ற பொண்ணு பின்னால சுத்தும்போதே கைகால உடைச்சு போட்டு இருக்கோணும்! போட்டு இருந்தேன்னா.. இன்னைக்கு இந்த தைரியம் எங்கிருந்து வரும்? ஏற்கனவே கல்யாணம் பேசின பொண்ணுனு தெரிஞ்சும் பரிசம் போட வரான்னா இவன் என்ன மாதிரியான குடும்பம்?” என்று 50 வயதிலும் வேட்டியை மடித்துக் கொண்டு வீச்சருவாளை கையில் பிடித்துக் கொண்டு, ஐய்யனார் கணக்காக கோபமாக நின்றார் பசுபதி.
அதற்கு சற்றும் குறையாத கோபத்தோடு அவரது அங்காளி பங்காளிகளும் அவர்களது பிள்ளைகளும் நிற்க..
“இன்னைக்கு நம்ம தெருவுல மட்டும் கால வைக்கட்டுமுங்க ஐயா.. அவன் கால வெட்டி போடுறேனுங்க வெட்டி!” என்று ஒருத்தன் துள்ளி குதிக்க.. மற்றவர்களும் அதை ஆமோதிக்க.. விஷயம் விவகாரமாய் மாறிக் கொண்டிருந்தது.
அந்த சமயம் பார்த்து கிருஷ்ணகுமார் பசுபதிக்கு போன் செய்தார்.
“இவரு ஏன் இப்பங்க போன் பண்றாரு? விஷயம் தெரிஞ்சு பண்றாரா? இல்லை தெரியாம பண்றாரா தெரியலையே!” என்று யோசனையோடு எடுத்து ஹலோ என்றார் பசுபதி.
அந்த பக்கத்தில் கிருஷ்ணகுமார் வெகு பவ்யமாக “ஐயா வீட்ல இருக்கீங்களா? இப்ப வந்து உங்களை பார்க்கலாமுங்களா?” என்று மரியாதையாக கேட்டார்.
அத்தனை பெரிய தொழிலை நடத்துபவர், ஆரம்பத்தில் கிருஷ்ணகுமார் குடும்பத்திற்கு உதவி செய்தார்கள் தான் பசுபதியின் குடும்பத்தார். ஆனால் செய்கிற உதவியை சொல்லிக் காட்டும் பரம்பரையில் வந்தவர்கள் இல்லை. அதை கொண்டு இத்தனை மரியாதையும் பவ்யமுமாக பேசும் கிருஷ்ணகுமாரை அத்தனை பிடித்தது.
இந்த காலத்தில் எத்தனை பேர் இத்தனை தூரம் நன்றியை காட்டுகிறார்கள். முதுகில் தானே குத்துகிறார்கள்? என்று கசப்போடு எண்ணிக் கொண்டவருக்கு கிருஷ்ணகுமாரின் குரல் மீண்டும் ஒலிக்க…
“எங்க இருக்கீங்க நீங்க?” என்றார்.
“நான் கோவைக்கு ஒரு வேலை விஷயமா வந்தேனுங்க.. அப்படியே பாப்பாவ பார்த்துட்டு போலாம்னு எண்ணமுங்க.. என்ற பொண்ணு வர போற தம்பி பொண்டாட்டிக்குனு ஒரு பெரிய பார்சல் கொடுத்துவிட்டு இருக்குங்க.. அதான் ஐயா இருந்தீங்கனா.. பார்த்துட்டு பாப்பா கிட்ட பார்சல் கொடுத்துட்டு போலாம்னு கேட்டமுங்க” என்றார்.
மகள் அந்த வீட்டுக்கு செல்லும் முன்னே மகளின் மீது பாசமாக இருக்கும் அவளின் வருங்கால நாத்தனாரின் மீது மிகுந்த நல்ல எண்ணம் உருவாகிற்று பசுபதிக்கு. கார்த்திக் குடும்பத்தார் பெண்ணை நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணம் வலுப்பெற்றது அவருக்கு.
எப்படியும் இந்த விஷயம் கிருஷ்ணகுமாருக்கு காதுக்கு சென்றால்.. பின்னால் பிரச்சனைகள் வரலாம். அதனால் அவரையும் வரச் சொல்லியே பிரச்சினையை சுகமாக முடித்தால் என்ன என்று எண்ணம் தோன்றியது பசுபதிக்கு.
நாட்டாமை இல்லையா.. நாலும் யோசித்தார்!
“நான் இப்ப வீட்லதான் இருக்கேனுங்க.. நீங்க உடனே வரிகளா? நான் பொழுதாப்புல வேற ஒரு பஞ்சாயத்துக்கு போகோணும்” என்றதும்..
“இந்தக் காரை கொஞ்சம் வேகமாக மிதிச்சோம்னா பத்து பதினைஞ்சு நிமிசத்துல அங்க வந்துருவேனுங்க” என்றார் கிருஷ்ணகுமார்.
கிருஷ்ணகுமாரின் இந்த வட்டார வழக்கு அவர் ஊர்காரர்களிடம் மட்டுமே!! மற்றபடி வெளியில் சாதாரணமாகத்தான் பேசுவார்.
“ஆத்தா… சம்பந்தி வராங்களாம் மதியத்துக்கு சாப்பாடு எல்லாம் அசத்திடுங்க” என்று உள்ளே குரல் கொடுத்தார் பசுபதி.
அன்னையும் சரி என்று தலையாட்டி உள்ளே சென்றார். அவருக்கும் காலையிலிருந்து மனது படபடப்பாகவே இருந்தது.
அதுவும் நேற்று பேத்தி கோயில் சென்று வந்து மாணிக்கவேல் இந்த மாதிரி சொன்னான் என்று கூற.. “இவன் என்ன அடுத்த பிரச்சினை கிளப்புறான்?” என்று அத்தனை அலைப்புறுதல். அதற்கு சரியாக இன்று காலையிலேயே அவன் சொந்த பந்தத்துடன் பரிசம் போட வருகிறான் என்று தெரிந்ததும் இன்னும் கவலையில் ஆழ்ந்தது அவரது மனம்.
இருப்பது ஒற்றைப் பேத்தி அவளை நல்லபடியாக திருமணம் செய்து கொடுக்கத்தான் எத்தனை தடங்கல்கள்!! எத்தனை போராட்டாங்கள்!! என்று பெருமூச்சு விட்டவாறு அடுக்களைக்குள் நுழைந்தார்.
சமையலுக்கு ஆட்கள் இருந்தாலும் பக்குவம் எல்லாம் இவர் சொல்லித்தான். கூடவே மாமனார் வருவதாக சொல்லி மேகலையையும் அழைத்தார். இங்கே நடப்பது எதையும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல தன் படைகளோடு அடுத்த ரீல்ஸ்க்கு கண்டெண்ட் ரெடி செய்து கொண்டு இருந்தாள்.
ஒரு பக்கம் பசுபதி சம்பந்திக்கு விருந்து தடபுடலாக செய்து கொண்டிருக்க.. வீட்டின் மாடியில் அமர்ந்து தன் பரிவாரங்களோடு அவள் ரீல்ஸ் செய்து கொண்டிருக்க.. வீட்டு வாசலை நோக்கி மாணிக்கவேல் தன் சொந்த பந்தங்களோடு சீர்சனத்தோடு பரிசம் போட வந்து கொண்டிருக்க.. மற்றொரு வழியில் தன் பெண் அனித்ரா கொடுத்த பார்சலை மருமகளுக்கு கொடுக்க வேண்டும் என்று சந்தோஷமாக காரில் கிருஷ்ணகுமார் வந்து கொண்டிருக்க.. இங்கே பசுபதி வீட்டில் அத்தனை பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்க.. எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலைமை!!
சீர்செனத்தோடு வந்தவர்களை ஒன்றும் சொல்லாமல் அமைதியாக முறைத்து பார்த்தார் பசுபதி. ஆனால் அதை கண்டுகொள்ளும் நிலைமையில் மாணிக்கவேலும் இல்லை அவனது அப்பா சுந்தரவேலுவும் இல்லை.
நாலு பெண் பிள்ளைகளுக்கு பிறந்த மகன்.. ஒற்றை வாரிசு என்று ஏக செல்லம் அவன். அவனின் நான்கு அக்காக்கள் அவர்களது கணவன்மார்கள் அவர்களது பிள்ளை குட்டிகள்.. சுந்தரவேலுடன் உடன் பிறந்தோர்.. அவரது மனைவி அல்லிமலரின் உடன் பிறந்தவர்கள்.. அங்காளி பங்காளிகள் என்று அத்தனை பேர் வந்திருந்தனர்.
அதுவும் மாணிக்கவேலின் ஒற்றை பேச்சை கேட்டுக்கொண்டு இதில் பெண்ணுக்கு பிடித்தமா இல்லையா என்றெல்லாம் அவர்களுக்கு கேள்வி எழவில்லை.
ஏனென்றால் “இத்தனை வவுசு எத்தனை சொத்து இருக்கிற என்ற புள்ளையை புடிக்காம போயிடுமா என்ன?” என்று அல்லிமலர் அத்தனை ஆர்ப்பாட்டம் வரும் வழியில் எல்லாம்..
“ஏனுங்க மாமி.. ஏற்கனவே அந்த பொண்ணுக்கு வேற யாரு கூடவோ பேசி முடிச்சிட்டாங்கன்னு கேள்விப்பட்டேனுங்க” என்று மூன்றாவது மாப்பிள்ளை ஒருவர் அவரிடம் கேட்க..
“பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு கேட்க தான் செய்வாங்க மாப்பிள்ள.. அதுக்கெல்லாம் நாம பாத்துட்டு இருக்க முடியுங்களா? இன்னார்க்கு இன்னாரென்று இருக்குது இல்லிங்.. அப்படி பார்த்தா என்ற மவன் ராசாவுக்கு ஏத்த ராணி அந்த பொண்ணு தான்!! எப்படி வேணாம்னு சொல்லுவாங்க என்ற பிள்ளையை பார்த்து? ராசா கணக்கா இருக்கான். என்ன.. அந்த படிப்பு தான் கொஞ்சம் வரலிங்.. மத்தபடி சொத்து சுகத்துல குறை இருக்கா? சொந்த பந்தத்துல குறை இருக்கா? இல்ல அந்தஸ்துக்கு தான் குறை இருக்கா? என்ற மவன் ராசா!!” என்று மகனின் பெருமைகளை எல்லாம் தன் வெண்கல குரலில் டமாரம் அடித்தவாரே வந்து கொண்டிருந்தார் வரும் வழியில் எல்லாம்…
அதில் ஒத்த வார்த்தை கூட மாத்தி போடாமல் உள்ளே வந்து அமர்ந்ததும் பசுபதியையும் அங்கிருந்த சொந்தக்காரர்களையும் பார்த்து வரிசையாக பேச ஆரம்பித்தார் அல்லிமலர்.
வீடு தேடி வந்தவர்கள் விரோதி என்றாலும் வா என்று கூப்பிடும் வழக்கம் உள்ள தமிழ் மரபில் வந்தவர் எப்படி அவர்களை வரவேண்டாம் என்று சொல்வார்? அதுவும் இன்று பேசி தீர்த்துவிட வேண்டும் என்று அமைதியாக தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தார் பசுபதி.
சீர் அடுக்கியதை எல்லாம் பார்த்து வாயை பிளப்பார் என்று அல்லிமலரும் அவரது மகள்களும் எதிர்பார்த்திருக்க.. ஒன்றைக் கூட கண்ணால் தீண்டவே இல்லை பசுபதி. அதைவிட அவர்களின் பவுசை பார்த்து எந்த மவுசும் அவரிடம் இல்லை..
அதுவே அவர்களுக்கு பெரிய அடியாகத்தான் இருந்தது. “ஏனுங்க மதினி.. பொண்ணு பாக்கறதுக்கே நாம இவ்வளவு சீர தூக்கிட்டு வந்து இருக்கோம்.. இது எதுவுமே அப்பாரு மதிச்சு மாதிரியே தெரியலைங்களே?” என்று உறவுக்கார பெண்மணக கூற..
“ஆமாங் மா.. அப்படி என்ன இந்த வீட்ல நம்ம பொண்ண கட்டோணும்? ஊருல்ல இல்லாத சீமை சித்தராங்கியா அவ?” என்று மூன்றாவது மகள் அங்கலாய்த்தார் அல்லிமலரிடம். அவருக்கு தன் நாத்தனாரை இங்கே தம்பிக்கு கொடுத்து தன் உறவை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வெகு நாளைய ஆசை.
“என்ன பண்றது எல்லாம் என்ற மவன் அந்த பொண்ணு மேல ஆசை வச்சிட்டானே.. என்ற ராசா ஆசைப்பட்டதுல எத மறுத்து இருக்கேன் நான்.. இத மறுக்க?” என்று பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்.
“அப்புறம் சொல்லுங்க சுந்தரவேலு.. என்ன இவ்வளவு தூரம்?” என்று நயமாகத்தான் பேச்சை ஆரம்பித்தார் நாட்டாமை..
“நாலு ஊருக்கு பஞ்சாயத்து பண்ற நாட்டாமைக்கு நாங்க எதுக்கு வந்திருக்கோம்னு தெரியாதாக்கும்? எல்லாம் என்ற மவன் மாணிக்கவேலுக்கு உங்க மக மணிமேகலைய பரிசம் போடத்தான்” என்றார் கூடவே ஏதோ நகைச்சுவை சொன்ன மாதிரி கடகடவென்று சிரித்துக் கொண்டார்.
“நான் உங்கள பரிசம் போட வர சொல்லலைங்களே… கூட புருஷன் யாருன்னு என்ற அம்மிணிக்கு நான் தேரந்தெடுத்துட்டேனுங்க..!” என்றார் நெத்தியடியாய் பசுபதி.
அதில் சற்று முகம் கருத்தாலும் உடனே அதை மாற்றிக் கொண்டு “எங்க பிள்ளைக்கு பிடிச்சிருக்கு நாங்க பரிசம் போட வந்திருக்கோமுங்க! நீங்க இன்னும் நிச்சயம் பண்ணலீங்களே.. வெறும் பேச்சி வார்த்தை தானுங்களே? பொண்ணுனு இருந்தா பார்க்க வரது எல்லாம் சகஜம்தானுங்களே! இதில் ஏதும் தப்புங்களா?” என்றார் அங்கிருந்தவர்களை திரும்பி…
அதில் சிலர் பொதுவானவர்களும் இருக்க, அவர்கள் யாருக்கென்று பேச என்று அமைதியாக இரண்டு பேருக்குமே தலையாட்டிக் கொண்டிருந்தார்கள்.
மற்றபடி பசுபதி சொந்தங்கள் பசுபதிக்கும்.. சுந்தரவேலுவின் சொந்தங்கள் அவருக்கும் தான் தங்கள் பெருத்த ஆதரவை கொடுத்துக் கொண்டிருந்தனர்.
“தப்பில்லைங்க.. வீட்ல வயசு பொண்ணு இருந்தா நாலு பேரு பொண்ணு கேட்டு வருவதும், பரிசம் போட நெனைக்ககறதும் தப்பு இல்லிங்.. ஆனா அந்த பொண்ணுக்கு ஏற்கனவே வேற இடத்துல உறுதி செய்து பூ வைச்சிட்டு போயிருக்காங்க! அப்படிங்குற போது எப்படிங்க நீங்க பரிசம் போடறேன்னு சொல்லிட்டு வரலாமுங்க.. கிட்டத்தட்ட என்ற பொண்ணு அந்த வீட்டு மருமக!” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
“பாப்பாங்க.. சம்பந்திங்க..” என்றவாறு பெரிய பார்சலை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார் கிருஷ்ணகுமார்.
அங்கிருந்தவர்களை பார்த்து சற்று யோசனையோடு புருவம் நெரிந்தாலும் பசுபதி மேல் நம்பிக்கை கொண்டு அவரை பார்த்து பவ்யமாய் வணக்கம் வைக்க.. “வாங்க சம்பந்தி… உட்காருங்க!” என்றார் அத்தனை பேரும் முன்னிலையிலும் எழுந்து நின்று வரவேற்றார் பசுபதி.
புன்னகை முகமாக அங்குள்ள பசுபதி சொந்தக்காரர்களை எல்லாம் பார்த்து நலம் விசாரித்துவிட்டு அருகே அமர்ந்த கிருஷ்ணக்குமார் “எங்க பாப்பாவ.. ஐத்தைய கண்ணுல காணலங்க?” என்று கேட்க அதே நேரம் கையில் பெரிய வெள்ளி லோட்டாவில் கெட்டி தயிரில் நீர் விட்டு கரைத்து.. சிறிது இஞ்சி சீவி போட்டு.. கடுகு தாளித்து கொத்தமல்லி தூவி அதில் ஒரு சிட்டிகை பெருங்காயம் போட்டு கொண்டு வந்து கொடுத்தார் பசுபதியின் அன்னை.
“வாங்க மாப்ள… நல்லா இருக்கீகளா?” என்று விசாரித்தலோடு!! அதுவரை இவ்வளவு பேச்சுக்கும் உள்ளிருந்து வெளியே வராதவர், யாரையும் வரவேற்காதவர், இவரை வரவேற்க கண்டு சுந்தரவேலின் முகம் நொடியில் கருத்து போனது உடனே மகனை திரும்பி முறைத்தார்.
“ஐயா.. நான் என்ன அவுக அப்பத்தாவையா கட்டிக்க போறேனுங்க.. ஏங் கண்ணு தானுங்க பா முக்கியம். இந்த கிழவி எல்லாம முக்கியம்?” என்று பேச மகனின் ஆசைக்கு குறுக்க நினைக்க பிடிக்காமல் கஷ்டப்பட்டு அமர்ந்திருந்தார்.
மணிமேகலைக்கு அப்பா யார் சொல்கிறார்களோ அவர்களை திருமணம் செய்து கொள்ள பிடித்தம் தான். ஆனால் பெங்களூர் செல்ல வேண்டுமா? என்பது மட்டும்தான் யோசனையாக இருந்ததே தவிர மற்றபடி விருப்பத்திற்கு மறுப்பு சொல்லவே இல்லை.
அதிலும் நேற்று கல்யாணம் முடிவாகிவிட்டது என்று தெரிந்தும் வம்பு செய்த மாணிக்கவேலை கண்டு அத்தனை எரிச்சல் பெண்ணிற்கு!! அவனின் வார்த்தைகள் யாவும் வேறு விதமாய் வந்து இறங்க.. அனைத்தையும் அப்பத்தா விடவும் சொல்லி விட்டாள், தந்தையிடம் கூறமாறு..
நேற்றே ‘என் பெண்ணிடமே ஒருத்தன் வம்பு செய்து இருக்கிறான் என்றால் அவனை அப்படியே விட்டு விடுவதா?’ என்று வேட்டியை மடித்துக் கொண்டு கிளம்பிய பசுபதி அடக்கினார் அவரது அன்னை.
“முள்ளு மேல சேல விழுந்தாலும் சேல மேல முள்ளு விழுந்தாலும் பாதகம் என்னவோ சேலைக்கு தான் என்பது போல.. இது பொண்ணு விஷயம் ராசா.. பார்த்து பக்குவமா தான் கையாளனும். உன் இஷ்டத்துக்கு எடுத்தோம் கவிழத்தோம்னு பண்ண முடியாது ராசா!” என்று அவர் அதட்ட அதன்பின் சற்று யோசித்து காலையில் தன் சொந்தங்களை எல்லாம் வர வைத்திருந்தார் பேசி முடிவெடுக்கலாம் என்று!! அப்போதுதான் மாணிக்கவேல் பரிசம் போட வருவதாய் செய்தி வர இன்னும் கொதிநிலைக்கே சென்றுவிட்டார் பசுபதி.
கீழே நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்தவாறு மாடியில் நின்று இருந்தாள் மேகலை.
“அம்மணி.. உங்க மாமனாரு வந்திருக்காரு வாங்க அம்மணி” என்று வாய்க்கு வலிக்குமோ தொண்டைக்கு வலிக்குமோ என்று அத்தனை மென்மையாக மிருதுவாக அழைத்தார் தன் பெண்ணை பசுபதி.
“இதோ வந்துட்டேனுங்கப்பா…” என்று பதிலுக்கு அதவிட மெல்லிய கூறியவளை அத்தனை பேரும் மேலே பார்த்தனர்.
அவளின் அப்பத்தா தான் வாயை பிளந்து பார்த்தார். தூக்கி சொரிகிய பாவாடையும் அவள் அப்பாவின் சட்டையும் போட்டு ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தவள், அடுத்த பத்தாவது நிமிடத்தில் அழகிய பட்டு புடவையில் மெல்லிய நகைகளை அணிந்து.. மிதமான ஒப்பனையோடு ஓவியமாய் கீழே வந்தாள் மேகலை!!
ஒயிலாய் வந்த மேகலை மீது தான் அத்தனை பேரும் கண்ணும்!! ஆனால் அவள் யாரையும் திரும்பி ஒற்றை பார்வை பார்க்கவில்லை!
நேராக அப்பாவின் முன் நின்றவள், கிருஷ்ணகுமாரை பார்த்து “வாங்க மாமா.. ஐயத்த சுகமுங்களா? அண்ணி வீட்டுல அல்லாரும் நலந்தானுங்களே?” என்று அன்பாக விசாரிக்க…
“அல்லாரும் சுகமுங்க பாப்பா… நீங்க தான் மெலிஞ்ச மாதிரி தெரியுறிங்க! எதையும் நினைக்கமா சந்தோஷமா இருங்க.. நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோமுங்க?” என்று வார்த்தைகள் அவளிடம் இருந்தாலும், கண்களால் மாணிக்கவேல் குடும்பத்தாரை பொசுக்கினார். அவர்களை பார்த்தே அனுமானித்து விட்டார் எதுக்கு வந்திருக்கிறார்கள் என்று!!
அவள் கையில் பெரிய பார்சலை ஒன்றை கொடுத்தார் கிருஷ்ணகுமார். அவளோ எப்படி வாங்குவது என்று தயங்கி தந்தையை பார்க்க.. வாங்கிக்கோ என்று அவர் கண்ணை காட்ட.. அதன் பின்னே வாங்கிக் கொண்டாள்.
“பாப்பா.. இனிமே நீங்க எங்க வீட்டு பொண்ணுங்க.. இந்த மாதிரி ஒவ்வொன்னு நான் கொடுக்குறதுக்கும் நீங்க உங்க அப்பார எல்லாம் பார்க்க கூடாதுங்க! சரிங்களா?” என்று அத்தனை மரியாதையாக பாசமாக வந்து விழுந்தது கிருஷ்ணகுமாரின் வார்த்தைகள்.
அப்பவும் அப்பாவை பார்த்துக் கொண்டே “சரிங்… மாமா” என்றவளை பார்த்து சிரித்தவர் “இது உங்க அண்ணி கொடுத்தது.. என்னன்னு எனக்கு தெரியலங்க பாப்பா.. நீங்க பார்த்திட்டு ஃபோன் போட்டு ஒரு வார்த்தை பேசுங்க.. என்ற பொண்ணும் ரொம்ப சந்தோஷபடுமுங்க” என்றார். கூடவே அனித்ரா நம்பரையும் கொடுத்தார்.
அப்போதும் கார்த்திக் தாமரை கொடுக்கவில்லை. மகனைப் பற்றி தான் அவருக்கு தெரியுமே!!
எதற்கு வேலியில் போகிற ஓணானை எடுத்து தன் காதில் விடுவானேன்? அது குத்துது குடையுது என்பானேன்? என்ற நல்ல எண்ணத்தில் அமைதியாக இருந்து விட்டார்.
இவர்கள் சம்பாஷணைகள் எல்லாம் மாணிக்கவேலு குடும்பம் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.
மகன் பெண்ணை விரும்புகிறான் அதுவும் அந்த பெண் மேல் பைத்தியமாகவே இருக்கிறான்.. வேற இடத்திலிருந்து ஏதோ பேசி தானே வைத்திருக்கிறார்கள், நாம் நம் பவுசையும் பணத்தையும் சொந்தத்தையும் காட்டி ஒரு மிரட்டு மிரட்டலாம்!!
அதிலேயே நாட்டாமை வழிக்கு வந்து விடுவார் என்று நினைத்த சுந்தரவேலுக்கு இப்போது பெருத்த அவமானமாக இருந்தது, இவர்களை கண்டு கொள்ளாமல் அவர்கள் குடும்பம் மட்டும் சம்பாஷனை செய்து கொண்டிருக்க… ஏதோ அழையா விருந்தாளியாக பந்தியில் அமர்ந்தவனுக்கு இலை போடாமல் எதிரே இருப்பவன் பத்து வகை பதார்த்தங்களை ரசித்து ருசித்து சாப்பிடுவதை பார்த்தால் வருமே ஒரு அவமானம்.. அது போல தான் மாணிக்கவேலுவின் குடும்பத்தின் நிலை!!
கூடவே வந்திருந்தவர்களை பற்றி லேசான கணிப்பு இருந்தது கிருஷ்ணகுமாருக்கு. அதனால் அனைவருக்கும் முன்னால் “ஐயா.. பையனுக்கு சகட யோகம் இன்னும் இரண்டு மாசத்துல முடியுதுன்னு நம்ம சோசியர் சொன்னாருங்க… சட்டு புட்டுன்னு பிள்ளைங்க கண்ணாலத்த தை பொறந்தவுடன் முடிச்சிடலாமுங்களா? உங்க வசதி எப்படிங்?” என்று கேட்டவரை பெருமிதத்தோடு ஒரு பார்வை பார்த்து, மாணிக்கவேலின் குடும்பத்தையும் ஒரு பார்வை பார்த்த.. “அதுக்கென்ன சம்பந்தி.. வைச்சிடலாமுங்க!” என்றார்.
“நாள் கிட்டக்க இருக்குன்னு உங்களுக்கு ஒன்னும் கஷ்டம் இல்லிங்களே?” என்று சங்கடத்தோடு கிருஷ்ணகுமார் கேட்க.. அதற்குள் அவர் உறவுக்காரர்கள் எல்லாம் “அப்புறம் சொந்தமுனு நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோமுங்க.. நீங்க கவலையை விடுங்க! கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்திடலாமுங்க!” என்றவர்கள் கிருஷ்ணகுமாரை பார்க்க.. என்ன இருந்தாலும் கல்யாணம் பையன் வீட்டில் அல்லவா செய்ய வேண்டும் என்று அவரை பார்த்தார்கள்.
“எனக்கும் சொந்த ஊர் இதுதானுங்களே.. அதனால கல்யாணத்தை இங்க வச்சுடுவோமுங்க.. தொழில் வட்டாரத்துக்காக சென்னையில் ஒரு ரிசப்ஷன் மட்டும் வச்சுக்கலாமுங்க!” என்றதும் இப்பொழுது நிறைவான புன்னகை பசுபதியிடம்!!
வந்தவர்களிடம் வார்த்தைகளாக சொல்லாமல் செய்கையாலே தனது வேலையை முடித்து அவர்கள் முகத்தில் கரியை பூசி அனுப்பினார். அதற்கு தோதாக பேசிய சம்மந்தியை ஒரு நன்றி பார்வை பார்க்க.. அவரோ கண்மூடி திறந்தார்.
பிறகு என்ன மாணிக்கவேல் குடும்பம் மொத்தமாக கொண்டு வந்த சீரை எடுத்துக்கொண்டு கிளம்பியது. ஆனால் மாணிக்கவேலின் பார்வையில் மாடியை விட்டு அகலவே இல்லை!
அங்கே அமைதியாக நின்று கொண்டு இருந்து பெண்ணவள் மீதே அவளின் மொத்த பார்வையும்!!
வீட்டை விட்டு
செல்லும் வரை அங்கே பார்த்தபடி தான் சென்றான். இறையை குறி வைத்து தாக்கும் வேங்கையின் குறி அதில் தோணிக்க.. பசுபதிக்கு உள்ளுக்குள் சற்று நடுக்கம் தான்.
Super sis ❤️
Superb
Sama super 👌