ATM Tamil Romantic Novels

பாவையிடம் மையல் கூடுதே 01

அத்தியாயம் 1

 

“சீக்கிரம் அஞ்சலி.. அதோ அதையும் எடுத்து வை.. இந்த கிழவனும் கிழவியும் முழிச்சுட்டாங்கன்னா.. அப்புறம் என்னோட கனவு.. கனவாகவே போயிடும்..”

 

“இருடி.. வர்றேன்.. இந்த கிழவிய.. ஒரு வழி பண்ணிட்டு வர்றேன்..” 

 

“சொன்னா கேளுடி.. விடியறதுக்குள்ள.. வண்டி ஏறணும்.. இல்லேன்னா கடைசி வருஷ படிப்பு கோவிந்தா.. கோவிந்தா.. தான்.. அப்புறம் உன்னைய அந்த கோண மூக்கனுக்கு கட்டி வைச்சுடுவாங்க.. காலம்புறா இங்க தான் இருந்தாகணும்..”

 

“இருடி..  அவ்வளவு தான் முடிஞ்சது.. வா.. போலாம்..”

 

“என்னடி பண்ணி வைச்சுருக்க?” 

 

“அது நாளைக்கு காலைல தெரிஞ்சுடும்..” என்ற கவிதாஞ்சலி, தன் தோழியான சஹானவை இழுத்துக் கொண்டு, வீட்டின் கொள்ளைப்புறமாக ஓடினாள். 

அதிகாலையில் அழகாக விடிந்தது. 

“ஏலேய்.. இங்க வந்து பாருங்கலே.. இந்த அநியாயத்தை.. யாருலே.. பெரியாத்தாவை இப்படி பண்ணது?” என்று சமையல்காரன் பெருமாள் கத்த, “ஏஏ…ஏ..ஏஏலேய்.. இதை பார்க்கவா? வெள்ளனே வந்து நிக்குதே.. யாரு இந்த வேலையத்த வேலையை பார்த்தது?” என்று பக்கத்து வீட்டு கோமளவள்ளி கதற, முகத்தை மூடி முக்காடிட்டு அமர்ந்திருந்த பெரியாத்தாவின் முகத்தை வந்து பார்த்தார் சக்ரவர்த்தி பாண்டியன். தன் தாயாரான அங்காளம்மாளின் நெற்றியில் பெரிய அளவில் எழுதப்பட்டிருந்த நம்பரைப் பார்த்ததும், அவருக்கு அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை. பெரியாத்தாவின் நெற்றியில் பத்தை பெரிதாக எழுதி, அங்கிருந்து ஓடியிருந்தாள் கவிதாஞ்சலி. 

 

“டேய் சக்ரவர்த்தி.. உன் பேத்தி பண்ணதை பாருயா.. தெரியாத்தனமா.. தலைவலிக்குது பத்துப் போட்டு விடுன்னு சொல்லிட்டேன்.. அவளை இத்தனை நாளா.. வீட்டை விட்டு வெளியே போகவிடாம.. உள்ளே கட்டி வைச்சுருந்ததுக்கு.. பழி வாங்கிட்டு போயிட்டா.. எதை போட்டு அழிச்சாலும் போக மாட்டேங்குது..”

 

“சும்மா புலம்பாத ஆத்தா.. நீ ஏதாவது என் செல்லத்தை சொல்லிருப்ப.. அதை மனசுல வைச்சுக்கிட்டு தான்.. அவ இந்த மாதிரி பண்ணிருப்பா.. நீ எப்பவும் அவளை திட்டுறதையே புழப்பா வைச்சுக்கிட்டு திரிஞ்சா.. அவளுந்தான் என்ன செய்வா?”

 

“இப்படியே செல்லங்கொடுத்து.. செல்லங்கொடுத்து.. அவளை கெடுத்து வைச்சுருக்க.. இப்ப கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு ஓடி போயிட்டா.. இப்ப மாப்ளை வீட்டுக்காரங்க தட்டுமாத்த வருவாங்களே.. என்ன பண்ணப் போற?” என்று பெரியாத்தாவின் குரல் ஓங்கி ஒலிக்க,  வாசலில் நிச்சயம் செய்ய மணமகன் நின்று கொண்டிருக்க, தான் தூக்கி வளர்த்த தன் ஒரே பேத்தியோ, தன்னை ஏமாற்றி விட்டு ஓடியிருப்பதை நினைத்துப் பார்த்தவருக்கு அவள் மீது கோபம் தான் வர மறுத்தது. மணமகனிடம் ஏதோ சொல்லி சமாளித்தவரின் மனதில் தனது மகனின் முகம் வந்து போனது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு அழகிய மலைவாழ் கிராமம் தான் மாஞ்சோலை. தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், அணைக்கட்டுகள் மற்றும் பசுமை மாறா மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ள கிராமம். கிராமத்தில் நிலவும் மிதமான காலநிலை, தொட்டுச் செல்லும் மேகங்கள், எங்கு பார்த்தாலும் உலவும் மயில்கள், லேசான சாரல் துளிகள் என  மனதும் உடலும் புத்துணர்ச்சி பெறும்.. அப்படிப்பட்ட கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் தான் சக்ரவர்த்தி பாண்டியன். சுத்தியிருக்கும் அனைத்து கிராமத்திற்கும் சிம்ம சொப்பனம். தன் பேத்தி கவிதாஞ்சலி என்றால் உயிர். யாருக்கும் அடங்காத சிங்கமானவர், தன் பேத்தியை பார்த்து விட்டால் பூனையாகிவிடுவார். சக்ரவர்த்தி பாண்டியனின் ஒரே மகன் அவரது விருப்பத்திற்கு விரோதமாக, தனக்கு பிடித்தமான வடநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு வர, கோபத்தில் தனது மகனை வீட்டை விட்டு அனுப்பியவர், சில வருடங்களுக்கு முன்னால் தனது மருமகள் இறந்து விடவே, தனது மகனைத் தேடி சென்றிருந்தார். கையில் பத்து வயது சிறுமியோடு, என்ன செய்வதென்று அறியாமல் நின்றிருந்தவரை  தன்னோடு அழைத்து வந்தார் சக்ரவர்த்தி பாண்டியன். தன் பேத்தியை தனது மகளைப் போல் பார்த்துக் கொண்டார். தனது மகளை பார்க்கும் போதெல்லாம் எழுந்த தனது மனைவியின் நினைவை தாங்க முடியாத அவரது மகன் தேவராஜ், சக்ரவர்த்தி பாண்டியனிடம் சொல்லிக் கொள்ளாது, எங்கோ சென்றுவிட்டார். அவளது ஒவ்வொரு பிறந்த நாளின் போது மட்டும், அவர் சார்பில் அவளது பெயருக்கு ஏதாவது ஒரு பரிசு பொருள், முகவரியில்லாது வந்துவிடும்.. அதை அவளிடம் சக்ரவர்த்தி பாண்டியன் ஒரு போதும் கூறமாட்டார்.. தாயை இழந்து, தந்தையை தொலைத்து, அனாதையாக தவிக்கும் தனது பேத்தியை கண்ணுக்குள் வைத்துப் பார்த்து கொள்கிறார். அப்படிப்பட்ட தனது தாத்தாவிற்கு தெரியாமல் ஊரை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறாள் கவிதாஞ்சலி. 

*****************************************************

தடதடக்கும் ரயிலில், படியின் முனையில், இரு கம்பிகளையும் பிடித்தபடி, ஜில்லென்று தன் முகத்தில் மோதிக் கொண்டிருக்கும் காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தாள் கவிதாஞ்சலி. 

 

“ப்ச்.. மனசுக்குள்ள அமலான்னு நினைப்பு.. வளையோசை கலகலகலவெனன்னு பாட்டு பாடப் போறவ மாதிரி.. படியில நிக்குற..  கீழ் விழுந்தா.. அய்யோன்ற ஓசை கலகலகலவெனன்னு கேட்டு பொலபொலன்னு ரத்தம் ஊத்தும்.. தெரியுமா? அங்க பெரியாத்தா நெத்தியில ஹைவேஸ் ரோட்டுல இருக்குற மரத்துக்கு நம்பர் போடுற மாதிரி பத்து போட்டு விட்டு.. இங்க அமலா மாதிரி குதிச்சுட்டுருக்க?”

 

“ப்ச்.. நான் அமலா மாதிரி குதிக்குறேன்.. இல்ல, அமலாபாலா குதிக்குறேன்.. உனக்கென்னடி பொறாமை? அவங்க தானே.. தலைவலிக்குது.. எனக்கு ஒரு பத்து போட்டு விடக்கூட.. ஆளில்ல.. இவளை வளர்த்ததுக்கு ஒரு எருமக்குட்டியை வளர்த்திருந்தா.. இந்நேரம் ஏதாவது ப்ரயோஜனம் இருந்திருக்கும்.. அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க சஹா..”

 

“அதுக்குன்னு  இப்படியா பண்ணுவ?”

 

“அது ஒன்னும் பண்ணாது.. கொஞ்சம் கரெஸின் ஊத்தி கழுவினா.. மொத்தமும் போயிரும்..”

 

“ஏது உயிரா?”

 

“அட போடி.. நீரடிச்சு நீர் விலகுமா? இல்ல.. குஞ்சு மிதிச்சு.. கோழிக்கு வலிக்கப் போகுதா? நான் போட்ட பத்துல தான்  பெரியாத்தாக்கு ஏதாவது ஆகப் போகுதாக்கும்? போலே.. வேற யாரையும் ஆத்தா.. எதுவும் பண்ணாம இருந்தா போதாது? அதுக்கு நீயேன்டி அழுகுற?”

 

“இப்போ நீவாட்டுக்கு  உன் மேரேஜை நிறுத்திட்டு அங்கிருந்து தப்பிச்சு வந்துட்ட.. ஆனா, அதுக்கு நான் தான் ஹெல்ப் பண்ணேன்னு என்னோட ஆத்தாக்கு தெரிஞ்சது.. என்னைய பழி போட்டுடும்..”

 

“விடுடி.. அடுத்த லீவுக்கு ஊருக்கு போகும் போது சமாதானப்படுத்திக்கலாம்..”

 

“ஏது.. அடுத்த லீவா? அதுவும் உன் கூட ஊருக்கு போகணுமா? அம்மாத் தாயே.. உனக்கு ஒரு கும்பிடு.. நீ இருக்கும் திசைக்கு ஒரு கும்பிடு.. என்னைய ஆள விடு ஆத்தா.. உன்னோட ஆம்பிசஷனுக்காக யு ரன் டி.. யு ரன்.. வொய் மீ..”

 

“வொய்னா.. நீ என்னோட பெஸ்டீ டி..”

 

“பொல்லாத பெஸ்டீ.. உன்கூட இருக்குறதும்.. இந்த தண்டவாளத்தோடு குடும்பம் நடத்துறதும் ஒன்னு.. எப்ப சோலிய முடிப்பீங்கன்னே தெரியாது.. ஆனா, உன்னைய போய் எப்படி டி அந்த மாடர்ன் காலேஜ்ல பெஸ்ட் டிசைனரா செலக்ட் பண்ணாங்கன்னு தான் புரியமாட்டேங்குது..”

 

“அத்தனையும் டேலண்ட் டி.. டேலண்ட்..”

 

“அது உண்மை தான்.. ஆனா நீ செலக்ட்டானது தான் டவுட்டா இருக்கு..”

 

“என்னைய மாதிரி எத்தனை பேர் அறிவா.. அழகா.. டேலண்ட்டா இருக்காங்க?”

 

“ம்ம்ம்..”

 

“ரொம்ப யோசிக்காத.. என்னைய மாதிரி நான் மட்டும் தான்.. எனக்கு க்ளோனிங்கெல்லாம் யாருமில்ல..”

 

“கவி.. இப்படி யோசிச்சு பாரேன்.. உன்னைய மாதிரியே ஒரு பொண்ணு.. நம்ம காலேஜ்ல படிச்சு.. அவளுக்கு கொடுக்க வேண்டிய அவார்டை உனக்கு கொடுக்குறேன்னு.. தப்பா மாத்தி மெஸேஜ் அனுப்பிருப்பாங்களோ?”

 

“நீ இப்போ என் கையால அடிவாங்கியே சாகப் போற.. வாய் ரொம்ப பேசுற.. டோன்ட் அண்டர் அரெஸ்ட் கவிதாஞ்சலி..”

 

“அப்படினா.. இண்டர்நேஷனல் காம்பெடிஷன்ல நீ என்ன வரைஞ்சேன்னு சொல்லு..”

 

“சொல்றதென்ன? காண்பிக்குறேன் பாரு..” என்ற கவிதாஞ்சலி, போட்டியில் தான் வரைந்ததைப் போன்று மீண்டும் ஒரு படத்தை வரைந்து வைத்திருக்க, அதனை எடுத்து சஹானாவிடம் காண்பித்தாள். அதில் இரு மலர்கள் ஒரு கொடியில் ஒன்றை ஒன்று விட்டு நீங்காது பின்னி பிணைந்து இருப்பதை போல் இருந்தது. அதனை பார்த்த சஹானா, 

 

“உனக்கு இருமலர்கள் கதை தெரியுமா?” என்று கேட்க,

 

“ஜெமினி கணேசன் சௌகார் ஜானகி படம் தானே?”

 

“அட பக்கி.. அது இருகோடுகள்.. இது இருமலர்கள்..”

 

“ம்ஹூம்.. எனக்கு தெரியாது..”

 

“அதாவது.. கடவுள் ஒவ்வொரு மனுஷனையும் படைக்கும் போதும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து மண்ணெடுப்பாராம்.. அப்படி எடுக்கும்போது கொஞ்சம் அதிகமா எடுத்துட்டார்னா அவங்க உடம்புல ஏதாவது ஒரு பார்ட்டா,  கொஞ்சம் அதிகமா விரலோ, கையோ,  காலோ,  ஏதோ ஒன்னுன்னு சேர்த்துடுவாராம்..  ரொம்ப அதிகமா மண் எடுத்துட்டார்னா அது அவங்களை மாதிரியே இன்னொரு உருவம் செஞ்சு வைச்சிருவாராம்.. அவங்களை தான் இருமலர்கள்னு சொல்லுவாங்க.. அப்படி ஒரே மண்ணுல ஒரே உருவமா.. செஞ்ச ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டாங்கன்னா,  அதுக்கப்புறம் அவங்க ரெண்டு பேர்ல, யாராவது ஒருத்தர் தான் உயிர் வாழ முடியுமாம்.. நீ வரைஞ்சுருக்குற இந்த படத்தை பார்த்த உடனே,  எனக்கு அது தான் ஞாபகத்துக்கு வருது.. ஒருவேளை நீயும் அதே மாதிரி கடவுள் படைச்ச.. ரெண்டு பேர்ல,  ஒரே மாதிரி இருந்து, உன்னைய மாதிரியே, இருக்குற இன்னொரு பொண்ணை, நீ சந்திச்சா?  உங்க ரெண்டு பேர்ல யாரு உயிரோட இருப்பாங்க?” என்று கேட்ட சஹானாவின் தலையில் நறுக்கின்று கொட்டினாள் கவிதாஞ்சலி. 

 

“ஸ்ஸ்.. ஆஆஆ.. வலிக்குதுடி.. ஏன்டி இப்படி கொட்ற பக்கி?”

 

“பின்ன லூசுத்தனமா பேசுனா.. கொட்டாம.. கொஞ்சுவாங்களா? ஆமா.. உனக்கு இந்த மாதிரி கதையெல்லாம் யார் சொல்றாங்க?”

 

“இதை நான் ஏதோ ஒரு புக்குல படிச்சேன்பா.. அது சட்டுனு ஞாபகம் வந்துடுச்சு.. அதான் சொன்னேன்..”

 

“நீ சொல்ற மாதிரி எல்லாம்.. நடக்கிறது கதையிலேயோ.. படத்திலேயோ.. தான் இருக்கும்.. நிஜத்துல இப்படி நடக்க வாய்ப்பே இல்ல.. அதனால இப்படி லூசுத்தனமா பேசுறதை விட்டுட்டு உருப்படியா அடுத்து என்ன பண்ணலாம்னு யோசி..”

 

“அடுத்து என்ன பண்ணலாம்? அடுத்த ஸ்டேஷன்ல புளியோதரையும் கத்திரிக்காய் கொத்தும்..  சூப்பரா இருக்கும்.. அதை வாங்கப்போறேன்.. உனக்கு புளியோதரை வேணுமா? இல்ல தயிர் சாதம் வேணுமா?”

 

“போடி.. சாப்பாட்டு ராமி.. நீ எதை வாங்குறியோ.. எனக்கும் அதையே வாங்கு..” என்ற கவிதாஞ்சலி, தனது இருப்பிடத்திற்கு செல்ல, அவளைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றாள் சஹானா. அவர்கள் உள்ளே சென்ற அடுத்த நொடி கவிதாஞ்சலியைப் போலவே உருவம் கொண்ட பெண் ஒருத்தி, படிநிலையில் உள்ள கம்பிகளை பிடித்தவாறு, அவ்விரவு நேரத்தில் தெரியும் முழுநிலவை வெறித்துப் பார்த்தவாறு சிற்பமாக நின்று கொண்டிருக்க, விதியோ அவர்களைப் பார்த்து சிரிக்கக் தொடங்கியது. சில நேரங்களில்.. நாம் பேசும் வார்த்தைகளும் கடவுளால் ஆசிர்வதிக்கப்படுகிறதோ? அப்படியே நடக்க ஆரம்பித்துவிடுகிறது.. இவர்கள் இருவரும் இருமலர்கள் என்றால்.. இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டால்.. உயிர் பிரியப் போவது யாருக்கு? 

 

5 thoughts on “பாவையிடம் மையல் கூடுதே 01”

  1. Marry dangerous CEO episode -1, same dialogue , same story🤨🧐😜😝😛🤪👅👀
    Nan kandupichitten illa 😇

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top