ATM Tamil Romantic Novels

பாவையிடம் மையல் கூடுதே5

அத்தியாயம் 5

இரண்டு வாரங்களுக்கு பிறகு..

 

“இங்கப்பாருமா.. ஸ்லோவா.. கண்ணை திறந்து பாருங்க.. மெதுவா.. ரொம்ப சிரமப்படாம.. கண்ணை திறந்து பாருங்க..” என்று மருத்துவர் கூற, மெல்ல கண்களை சிமிட்டி திறந்து பார்த்தவள், கண்கள் கூச மீண்டும் கண்களை மூடி திறந்தாள். கண்களை சுழற்றி அவ்வறையை நோட்டமிட்டவளின் கண்ணில், ஜன்னலின் ஓரமாக முதுகை காட்டியபடி நின்றிருந்த தேவ்வின் உருவம் விழ, புருவம் சுருக்கி பார்த்தவளுக்கு, அவன் யார் என்ற எண்ணம் தோன்றியது. அவளுக்கு நினைவு திரும்பிய போதிலிருந்து இப்போது வரை யாரும் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என்பதறியாது, கண் தெரியாது இருட்டுக்குள் சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு கடைசியாக பார்த்த அனிதா ஷெரஜின் முகம் தான் தெரிந்தது. தன் மேல் விழுந்து தன்னை காப்பாற்றியவளை காண துடித்தாள். இதுவரை அவள் கேட்ட கேள்விகள் எதற்கும் யாரும் பதிலளிக்கவில்லை. இன்று கண் திறந்த பிறகு, தனது கேள்விகளுக்கான விடையாக அனிதா ஷெரஜைத் தான் தேடினாள். ஆனால், அவன் முன்னே, கல்லில் செய்த உருவமாக திரும்பி நின்று கொண்டிருப்பவனை கண்டு மீண்டும் நடந்தவற்றை கண்முன்னே கொண்டு வந்தவளுக்கு தலை வலிப்பது போல் இருந்தது. அவள் கண் திறந்து பார்ப்பதை உணர்ந்த தேவ், அவளை நோக்கி வர, அவனை புரியாது பார்த்தாள் கவிதாஞ்சலி. அவன் அவளருகே வருவதை பார்த்ததும், அங்கிருந்த அனைவரும் வெளியே செல்ல, அவனை புரியாது பார்த்த பார்வை, இப்போது பயமாக மாறியது. 

 

“இப்போ எப்படி இருக்கு?” என்றவாறே வந்த தேவ் மல்கோத்ரா, அவளது நெற்றியில் கைவைக்க முயல, அதனை தட்டிவிட்டவாறே பின்னால் நகன்ற கவிதாஞ்சலி,

 

“பக்கத்துல வராதீங்க.. யார் நீங்க? நீங்க எதுக்கு இங்க இருக்கீங்க? சஹு.. சஹு.. எங்க? தாத்தா.. பெரியாத்தா.. எல்லோரும் எங்க போனீங்க?” என்றவள் கத்த, அவளருகே வந்தவன், தனது உதட்டில் ஒற்றை விரலை வைத்து,

 

“ஸ்ஸ்ஸ்ஸ்.. சத்தம் போடாத.. இப்போ தான் ஆப்ரேஷன் முடிஞ்சுருக்கு.. இப்படி சத்தம் போட்டா உடம்பு என்னாகுறது? அப்புறம் நான் யாருன்னு வேற கேட்குற.. நாம ரெண்டு பேரும் லவ் பண்ணதெல்லாம் மறந்து போச்சா? நாம் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போனது கூட.. உனக்கு ஞாபகமில்ல..” என்றவனை கூர்ந்து பார்த்தவள்,

 

“நாம ரெண்டு பேருக்கும் கல்யாணமாகப் போகுதா? இல்ல.. இல்ல.. நான் யாரையும் லவ் பண்ணல.. நான் எதையும் மறக்கல.. எனக்கு எல்லாமே நல்லா ஞாபகம் இருக்கு.. நீங்க யாருன்னே எனக்கு தெரியாது..” என்று யோசனையாக அவனை பார்த்தவள், பின் முகம் மலர்ந்து,

 

“சார்.. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.. என்னைய மாதிரியே ஒரு பொண்ணு இருக்கா.. என்னைய அந்த பொண்ணுன்னு நினைச்சுட்டு பேசிட்டுருக்கீங்க..” என்று வேகமாக பேசியவள், தன் தாடையில் ஒற்றை விரலை வைத்து தட்டிக் கொண்டே, 

 

“ம்ம்.. அந்த பொண்ணு பெயரு.. அனிதா ஷெரஜ்.. ஆமா.. அனிதா ஷெரஜ்.. நான்.. என் பெயரு.. கவிதாஞ்சலி.. நீங்க அனிதான்னு நினைச்சு என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க.. நான் கவிதாஞ்சலி.. கவிதா.. அஞ்சலி..” என்று சத்தமாக கூறியவளின் கழுத்தை பிடித்து நெறித்தவன்,

 

“நான் சொல்றேன்ல.. நீ தான் அனிதா ஷெரஜ்.. கவிதாஞ்சலி செத்துப் போயிட்டா.. புரியுதா? கவிதா.. அஞ்சலி.. செத்துப்போயிட்டா.. இப்ப இருக்குறது அனிதா ஷெரஜ் மட்டும் தான்.. புரியுதா?” என்று கண்களை உருட்டி கர்ஜித்தவனை பார்க்கவே பயமாக இருந்தது. தன் கழுத்தை பிடித்து நெறிப்பவனிடம் போராடியவளின் கழுத்திலிருந்து கையை எடுத்தவன்,

 

“கடைசியா சொல்றேன்.. நீ அனிதா ஷெரஜ்.. கவிதாஞ்சலி செத்துட்டா..” என்றவனை பார்த்தவளுக்கு மூச்சுவிட மறந்து போனது. மீண்டும் எச்சில் கூட்டி விழுங்கியவாறே அவனைப் பார்த்து சிறு புன்னகை புரிந்தவள்,

 

“சார்.. நான் கவிதாஞ்சலி.. நீங்க வேணா மெடிக்கல் ரிப்போர்ட் பாருங்களேன்..” என்றவள் தனது பெட்டில் தொங்கவிட்டிருந்த மருத்துவகோப்பை அவனிடம் காண்பிப்பதற்காக எடுத்தவளின் கண்ணில் அனிதா ஷெரஜ் என்ற பெயர் பட, தன் கண்களை தெறித்து கீழே விழுந்துவிடும் அளவிற்கு விரித்தாள். 

 

“நான்.. நான் கவிதாஞ்சலி.. நீங்க.. நீங்க.. நீங்க.. பொய் சொல்றீங்க..” என்றவாறே தட்டுத்தடுமாறி எழுந்தவள், அங்கிருந்து ஓட, அவளை தடுக்காது தன் இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டிற்குள் விட்டவாறே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் தேவ் மல்கோத்ரா. ஹாஸ்பிடலை விட்டு வெளியே ஓடி முயன்றவளை அங்கிருந்த செவிலியர்கள் வழிமறிக்க, வேகமாக மொட்டை மாடியை நோக்கி ஓடினாள் கவிதாஞ்சலி. அதற்கு மேல் ஓடுவதற்கு இடமில்லை என்பதை அறிந்தவள், தன்னை பின் தொடர்ந்து வந்த செவிலியர்களைப் பார்த்து,

 

“தயவு செஞ்சு.. என்னைய போக விடுங்க.. இல்லேனா.. இல்லேனா..” என்றவள், அங்கிருந்த சுவற்றின் மீது ஏறி நின்று கொண்டாள். அதனைப் பார்த்த அனைவரும் பதறிப் போய், அவளை கீழே இறங்குமாறு கெஞ்ச,

 

“எல்லோரும் இங்க இருந்து போங்க.. இல்லேனா குதிச்சுடுவேன்..” என்று மிரட்டியவளுக்கு பயந்து அனைவரும் பின்னால் நகர்ந்து செல்ல, தேவ் மல்கோத்ரா மட்டும் தனது அழுத்தமாக கால்தடங்களை பதித்து முன்னால் நடந்து வந்தான். கவிதாஞ்சலியை தாங்கள் பார்த்து கொள்வதாக கூறி, செவிலியர்களை எல்லாம் அங்கிருந்து அப்புறப்படுத்தினான் ஆர்யா. தன்னை நோக்கி கூரிய பார்வையுடன் வரும் தேவ் மல்கோத்ராவை பார்த்தவள்,

 

“பக்கத்துல வராதீங்கன்னு சொல்றேன்ல.. வந்தா குதிச்சுடுவேன்.. நான் கவிதாஞ்சலி.. அனிதா ஷெரஜ் இல்ல.. நான் சொல்றதை நம்புங்க..” என்றவளின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, அதனை தனது புறங்கையால் துடைக்க முயன்றவளை பார்த்து,

 

“டோண்ட் ஹர் ஐஸ்..” என்று கத்தினான் தேவ் மல்கோத்ரா.  

 

“உனக்காக ஒருத்தி உயிரையும் கொடுத்து.. கண்ணையும் கொடுத்துருக்கா.. ஆனா, நீ.. அவளோட தியாகத்தை கொஞ்சம் கூட மதிக்காம.. சாகப் போறேன்னு சொல்லி.. சுவற்று மேல ஏறி நின்னு.. சீன் போட்டுட்டு இருக்க..”

 

“என்னது? எனக்காக உயிரை விட்டார்களா?”

 

“நீங்க போன கார்ல.. நீங்க ரெண்டு பேர் மட்டுந்தான் இருந்தீங்க?”

 

“ஆ.. ஆமா..”

 

“அதுல நீ உயிரோட இருக்கேனா.. வேற யார் செத்து போயிருப்பா?” என்றவன் கேட்க, மீண்டும் அவள் கண்முன்னே நடந்தவை அனைத்தும் வந்து போயின. தன்னை காக்கவென தன்னை மறைத்தாள் போல், தன் மேல் விழுந்து அனிதா ஷெரஜின் முகம் கண்முன்னே வந்தது. 

 

“உனக்காக உயிரை விட்டவளுக்கு கைமாறா நீ என்ன போற? உன்னோட தலையெழுத்துல.. அவளோட விதியும் சேர்ந்திருக்கே.. அதுக்கு என்ன பதில் சொல்ல போற? எப்ப தான் செத்தாலும் பரவாயில்ல.. நீ உயிரோட இருக்கணும்னு நினைச்சு.. தன் உயிரை தியாகம் பண்ணாளோ.. அப்பவே, நீ வாழ்ந்துட்டுருக்குறது அவளுக்காக தான்னு ஆகிருச்சு.. அவளுக்காக.. அவளாகவே நீ வாழணும்.. அது‌தான் நீ அவளுக்கு செய்யுற கைமாறு.. இப்படி சுழன்று மேல ஏறி நின்னு மிரட்டுறதுக்கு.. இந்த உயிர் ஒன்னும் உன்னோடது இல்ல..” என்றவன் கூற கேட்டவளின் கண்களில் இருந்து நீர் அருவியாக கொட்டியது. செஞ்சோற்று கடன் தீர்க்க, தன் உயிர், ஆன்மா அனைத்தையும் தியாகம் செய்த கர்ணனை போல, தனக்காக உயிர்நீத்த அனிதா ஷெரஜிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடித்தாள் கவிதாஞ்சலி. 

 

“நீ தான் அனிதா ஷெரஜ்.. நீ மட்டும் தான் அனிதா ஷெரஜ்..” என்றவாறே அவளை நெருங்கியவனை பார்த்தவன் பின்னோக்கி செல்ல காலை எடுத்க, நிலை தடுமாறி கீழே விழ முயன்றவளை தாவிப் பிடித்து இழுத்தவன், அவளோடு சேர்ந்து பொத்தென தரையில் விழுந்தான். தன் கைகளுக்குள் கோழிக்குஞ்சை போல் நடுங்கிக் கிடந்தவளை தன் கையில் ஏந்திக் கொண்டு, அங்கிருந்து சென்றவன், அவளுக்கு மருத்துவ அறையில், கட்டிலில் படுக்க வைத்தான். 

 

“நான் சொன்னது எப்பவும் ஞாபகம் இருக்கணும்..” என்றவன் அங்கிருந்து வெளியேறி செல்ல, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? தான் காண்பது கனவா? இல்லை நிகழ்வா? என்று யோசித்தவாறே கண்மூடியிருந்தவளின் காதில் அனிதா ஷெரஜின் குரல் கேட்டது. 

 

“நான்.. நான்.. நீ எனக்காக என்னோட வீட்டு போகணும்.. மல்கோத்ரா குரூப்ஸ்.. காப்பாத்தணும்.. என் தாத்தாவோட கனவை நிஜமாக்கணும்.. இது.. இது.. இதை எப்பவும் பத்திரமா வைச்சுரு.. தேவ்.. தேவ் கிட்ட என்னைய மன்னிச்சிட சொல்லு.. நீ.. நீ.. நல்லாருக்கணும்.. யு வில் லிவ் லாங்..” என்ற அனிதா வெர்ஜின் குரலை கேட்டதும், தூக்கத்தில் இருந்து பதறி எழுந்து அமர்ந்தாள் கவிதாஞ்சலி. தன்னை காப்பாற்றிய அனிதா, இறக்கும் தருவாயில் தன்னிடம் கூறியதை, இரவு பகலாக யோசித்துப் பார்த்த கவிதாஞ்சலிக்கு, கண்டிப்பாக அனிதா ஷெரஜிற்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க, தனக்கு காவலாக இருந்த பீமிடம் தேவ் மல்கோத்ராவை பார்க்க அழைத்துச் செல்லுமாறு கூறினாள். ஆனால் இதனை பீம் தேவ்விடம் கூற, அவளைப் பார்க்கவென மருத்துவமனை வந்திருந்தான் தேவ் மல்கோத்ரா. அவனைப் பார்த்ததும் எழுந்து ஜன்னல் புறமாக சென்று நின்று கொண்டவள்,

 

“உன்.. உன்.. உங்க பெயர் தேவ் தானே?”

 

“ம்ம்..”

 

“இந்த உயிர்.. கண்.. எல்லாமே அனிதா எனக்கு கொடுத்தது.. அவளுக்காக.. நான் உங்கக்கூட வர்றேன்.. அவளோட தாத்தாவோட கனவு.. மல்கோத்ரா குரூப்ஸை காப்பத்தணும்.. அவளுக்காக மட்டும் உங்கக்கூட வர்றேன்.. ஆனா.. எத்தனை நாளா நான் அங்க தங்கணும்.. ஒரு வருஷம் போதுமா? அதுக்கப்புறம் நான் கவிதாஞ்சலியா.. என்னோட தாத்தாக்கிட்ட போகணும்.. இதுக்கு நீங்க ஒத்துக்குவீங்களா?” 

 

“டீல் அக்செப்ட்டட்..” என்றவன் அவள் முன்னே வந்து நின்று, 

 

“பீ ரெடி..” என்று விட்டுச் சென்றான். 

 

ஒருவரைப் போன்று நடிக்க முடியும்.. ஆனால், அவராகவே வாழ முடியுமா? கவிதாஞ்சலியால் அனிதா ஷெரஜாக மாற முடியுமா?

 

 

2 thoughts on “பாவையிடம் மையல் கூடுதே5”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top