ATM Tamil Romantic Novels

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 13

இஷ்டம்-13

 

மறுநாள் காலையில் விழித்த போது மேகலை அவர்கள் படுக்கையறையில் இருந்தாள். எப்படி இங்கு வந்தோம் என்றெல்லாம் யோசிக்கவில்லை!! அவளுக்கு தான் தெரியுமே கணவனின் பராக்கிரமத்தை!! 

 

‘பாக்கத்தான் இஞ்சி தின்ன மங்கியாட்டம் விறைப்பா இருக்காக.. ஆனால் உள்ளுக்குள்ள ஒரு ரோமியோ தூங்குறான் பாருங்…’ என்று கலாய்த்தவாறே எழுந்தவள் முகத்தில் நீர்த்து திவளைகள் விழ..

நிமிர்ந்து பார்த்தால்.. அங்கே ஒற்றைத் துண்டுடன் நின்று கொண்டிருந்தான் அவளின் எண்ணங்களின் நாயகன்!! மேகலையின் நாயகன்!!

 

“என்ன பெல்லு.. காலையிலேயே ட்ரீமா மாமன நினைச்சு… நீ இப்படி பார்க்கும் போது எனக்கு ஆபீஸ் போக மனம் வரமாட்டேங்குது… ஆனால் என்ன செய்றது? தொழில் முக்கியம் இல்லையா? அதுவும் உன் மாமனார்கிட்ட சண்டை போட்டு நான் ஆரம்பிச்ச தொழில்!! அதுல ஒரு அடி சரிக்குனாலும் மனுசன் நான் பத்தடி சரிக்குனதா ஃபிலிம் காட்டுவார்!! அவருக்காகவே தான் இவ்வளவு ஓடுறது.. என்னை நிரூபிக்க…” என்று கதை பேசியவனின் கண்கள் மனைவியை பார்த்ததும் மாறியே போனது கணவனாய்!

 

“மேகி…!!” என்று குழைவாக அழைத்தான். அது என்னவோ அவளை சீண்டும் போது பெல்லு.. பில்லு என்பதும்.. மோகம் முகிழ்க்கும்போது மேகி என்பதும் அவனது வழக்கமாயிற்று!!

 

தூங்கி எழுந்ததில் நலுங்கி இருந்த உடைகளும்… அதில் வெளிப்பட்ட இளமையின் செழுமைகளும்… இரவின் அந்தரங்கத்தை வெளிக்காட்டும் சோர்ந்த கண்களும்… கலைந்த தலையும்… அத்தனை சோர்விலும் மிளிர்ந்த அவளது அழகில் மோகம் முகிழ்த்தது அவனுக்கு!!

 

அதென்ன காதல் இல்லாமல் மோகம் மட்டுமா? என்ற கேள்விக்கு… 

பெரும்பான்மையான இந்திய திருமணங்களில் காதல் என்று உணர்வு கட்டியவுடன் வருவதில்லை!! அது என்னவோ முதலிரவில் மோகத்தில் திளைத்து.. தாபத்தில் கரைந்து… அதன் பின்னே அவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் பயணிக்கும் போது வருவதே ஆத்மார்த்த காதல்!!

 

“வேண்டாம்.. வேண்டாம்.. திருமணம் வேண்டாம்!! அதுவும் கிராமத்து பொண்ணு வேண்டவே வேண்டாம்!!” என்றவனை வம்படியாக திருமணம் செய்து வைத்துவிட்டு இப்பொழுது காதல் இல்லையா கத்திரிக்காய் இல்லையா என்று கேட்டால்.. அவனும் என்னதான் செய்வான்? 

 

முதலில் அவளுடன் திருமணம் என்பதை முடிந்த மட்டும் தவிர்க்க பார்த்தவன், அது முடியாத நிலையில் அவளோட தான் வாழ்க்கை என்று நிலையில்.. முதலில் அவளை பழகிக்க நினைத்தானே ஒழிய இன்னும் புரிந்து கொள்ள நினைக்கவில்லை!! பெரும்பாலான ஆண்கள் தவறும் இடம் இது!!

 

“என் மனைவி தானே எங்க போயிட போகிறாள்?”

 

“காலம் நமக்காக விரிந்து கிடக்கிறது.. புரிந்துகொள்ள காதல் செய்ய??” என்று பூமர் அங்கிளாய் பேசும் ஆண்களே அதிகம்!!

 

அதிலும் இந்த வேகமாக ஓடும் உலகத்தில் நாமும் அதனோடு சேர்ந்து பயணிக்க.. நிம்மதியாக வாழ.. பணம் என்னும் அச்சடித்த தாள் அத்தியாவசியம் என்ற நிலையில், காதல் எல்லாம் கற்பூரமாய் கரைந்து போகிறது பலருக்கு!!

 

ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை காதல் என்னவென்று!!

 

ஓடும் ஓட்டத்திற்கு ஏற்றவாறு.. 

சிறு சிறு அக்கறையும்… 

இணை மீதான கவனிப்பும்… அன்பான சொல்லும் தான் காதல் என்று!!

 

“ஏம்மா.. நீயும் எங்களோடு சாப்பிடு.. சேர்ந்தே சாப்பிடுவோமே.. நெரச்செண்டு சாப்பிடாத உடம்புக்கு ஆகாது!” என்ற கணவனின் அன்பும்..

 

“ஏங்க… சின்ன புள்ள மாதிரி அடம் பிடிக்காமல் ஒழுங்காக உட்கார்ந்து எண்ணெயை தேய்ச்சுக்கோங்க.. வெயில் அலையுறதற்கு கொஞ்சமாவது உடம்புக்கு குளிர்ச்சி வேண்டாம்?” என்று மனைவியின் கண்டிப்பும்..

 

காதலின்றி வேறேது???

 

அதே தான் கார்த்திக்கும்!!

தானாக ஆரம்பித்த தொழிலில் நன்றாக முன்னேற வேண்டும்.. அப்பாவிடம் நற்பெயர் வாங்க வேண்டும்.. தன்னுடைய 2கே கன்சல்டன்சியை முன்னணி நிறுவனமாக கொண்டு வர வேண்டும்… என்று பல கனவுகளுக்கு மத்தியில், காரிகையின் கண்களில் தெரியும் கலக்கத்தை தெளிய வைக்க வேண்டும் என்று மறந்தான்!!

 

மறந்தான் என்பதை விட தெரியவில்லை அவனுக்கு. புது மண கணவனுக்கே உரித்தான தாபத்திலும் மனைவியின் மீதான மோகத்திலும் நாட்கள் போனது அவனுக்கு!!

 

மேகலை.. எப்போதும் படை சூழ இருந்தவளுக்கு இந்த நான்கு சுவற்றுக்குள் இருக்க பிடிக்கவில்லை!! கைதியாய் தன்னை உருவகப்படுத்திக் கொண்டாள்!!

 

பரப்பரவென்று ஓடும் கால்களும்… 

துருதுருவென்று எதையாவது செய்யும் கைகளும்…

சடசடவென்று பேசும் வாயும்..

கலகலவென்று சிரிப்புமாய் இருந்தவளை கைக்கால்களை கட்டி வைத்தது போல இருந்தது!!

 

வந்த போதே ‘தனியா இங்க இருக்கனுமா?’ அவள் பயந்து கேட்க.. அவர்கள் அப்பார்ட்மெண்ட் அருகிலேயே இருக்கும் பார்க்குக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கும் அழைத்துச் சென்று காட்டிக் கொடுத்தான்.

 

மேலும் ஸ்கூட்டி ஒன்றை வாங்கி கொடுத்து அப்பார்ட்மெண்டில் அருகில் இருக்கும் சிறு சிறு கடைகளையும் அப்பார்ட்மெண்ட் உள்ளேவும் ஓட்டவும் சொன்னான்.

ஏற்கனவே அவளுக்கு பயிற்சி இருப்பதால் பிரச்சனை இல்லை!

 

இவளும் மாலை போல பார்க்கில் சிறிது நேரம் அமருவாள். ஆனால்… அப்பிள்ளைகளின் விளையாட்டில் மனம் அவளின் குட்டி சுட்டி நண்பர்களை தேடும்!! அதில் இன்னும் மனது சுணங்கும். 

 

பிள்ளைகள் வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருக்க.. தனியாய் இருக்கும் முதியவர்கள் சிலர் அங்கே வருவதுண்டு!! அவர்களிடம் சிநேகமாய் புன்னகைப்பதோடு சரி. 

 

“ஹாய்… யங் ப்யூட்டி!!” என்று உற்சாகமாக ஒரு முதிய ஆண் எப்போதும் அவளை அழைப்பார். இவளும் மெல்லிய தலையாட்டலோடு கடந்து விடுவாள்!!

காரணம்.. அப்பெரியவர் பசுபதியை நினைவு படுத்துவார்.

 

இப்படி காணும் ஒவ்வொன்றிலும் தன்னுடைய ஊரையும் உறவையும் இவள் மனம் ஒப்பீடு செய்து செய்து சோர்ந்து போகும். மனம் சவலை குழந்தையாய் சோம்பி நிற்கும்!!

 

அப்பாவிடம் அப்பத்தாவிடம் பேசினால் மனது மாறுமோ? என்று நினைத்து பேசும் அந்த வேளையில் உற்சாகம் கொள்ளும் உள்ளமோ… பேசி முடித்தவுடன் அவர்களை காண வேண்டும் என்று துடியாய் துடிக்கும்!!

 

கணவன் அருகில் இருக்கும் நேரம் மட்டுமே… மனம் மற்றதை மறந்து குதூகலிக்கும்!! சிறகை விரித்து பறக்கும்!!

 

இன்று காலையிலே கணவனின் கண் பார்வையில் கட்டுண்டு கிடந்தாள் பேதை!!

 

எழுந்தவளை தன் ஈர உடலோடு உறவாட விட்டவன்… அவள் அங்கங்கள் செழுமையை நன்றாக உணர… அவளையும் அவனது வெம்மை தகிக்க… அவள் உடலில் 1000 வோல்ட் மின்சாரம் பாய்ந்தது போன்று ஒரு அதிர்ச்சி. பெங்களூர் குளிரிலும் வியர்த்தது பெண்ணவளுக்கு கணவனின் அருகாமையில்!!

 

அவள் கைகளை முகத்தில் இருந்து விலக்கியன்.. அவளின் மாதுளை உதடுகளை மெல்ல பெரு விரலால் நீவினான். அவன் கைகள் அவளுடைய அனுமதியின்றி தன்னிச்சையாக மெல்ல மெல்ல உதட்டில் இருந்து கீழே பயணித்தது!! 

 

உதட்டை பிடித்து இழுத்தவன் பின் மெல்ல அவளது தாடை வழியே பயணித்து.. வெண் சங்கு கழுத்தில் நடமாடி.. அவன் கட்டிய தாலியை உரிமையாய் எடுத்து உறவாடி… பிறை நிலவுகளிடம் சரசமாடி… முழு நிலவையும் காண விரைந்தோட.. சட்டென்று தடா விதித்தாள் அவனது விரல்களுக்கு!!

 

அவள் அவன் தோளில் தலையை புதைக்க.. அவனோ அவள் முகத்தோடு தன் முகத்தை ஒட்டினான். அவனுடைய வெப்பமான மூச்சு காற்று அவள் கன்னத்தில் பட்டதுடன்.. அவனுடைய மீசை அவளின் பட்டுக் கன்னத்தில் குறுகுறுத்தது!! அவள் விலக முற்பட…

 

*ம்ஹூம்..” என்றவன் அவளது தடைகளை உடைத்து களவாடினான் கள்ளியவளை கள்வனாய்!!

 

அவனின் உதடுகள் அவள் கன்னத்திலும் கழுத்திலும் தங்கள் முத்திரையைப் பதித்து விளையாட.. பெண்ணவளோ அவன் அணைப்பில் துவண்டு கிடக்க..

தேன் சிந்தும் இதழ்களை மொய்க்கும் வண்டானான் கார்த்திக்!!

 

இனிய மெல்லிசையாய் இல்லறம் நல்லறமாய் துவங்கும் நேரம்… கரடியாய் கத்தியது கார்த்திக்கின் ஃபோன்!!

 

வேறு யார் கண்ணன் தான்!!

 

“மச்சான் கிளம்பிட்டியா டா? இன்னைக்கு ஃபாரினர்ஸோட ஒரு மீட்டிங் இருக்கு தெரியும் தானே? அதுவும் பெரிய ப்ராஜெக்ட்!! அந்த ப்ராஜெக்ட் மட்டும் நமக்கு கிடைச்சது.. ஐயோ நம்ம வேற லெவல் டா!! எனக்கு தெரியும் நீ இந்நேரம் கிளம்பி இருப்பேனு… என்னைவிட நீ பஞ்சுவாலிட்டியை மெயின்டன் பண்றதுல நீ ஒரு லெஜண்ட்… இப்படியே ஒரு வீடியோ கால் மீட்டிங் போடுற அளவு பக்காவா பிரிப்பாரா இருப்பனு எனக்கு தெரியும்..” என்று கண்ணன் அவனை துதிப் பாட…

தன்னை குனிந்து பார்த்தான் கார்த்திக்..

 

ஒற்றைத் துண்டு அப்போ இப்போ என்று அபாயகரத்தில் அந்தரத்தில் அவன் இடுப்பில் இருக்க.. அவன் கை அணைப்பில் காரிகையோ மோகன சித்திரமாக ஆடை நெகிழ்ந்து கிறங்கி இருக்க… இந்த நிலையில் வீடியோ காலா??  

 

அதிர்ந்து தலையை உலுக்கி கொண்டவனை.. மேகலை கேள்வியாய் பார்க்க.. ஒன்றும் இல்லை என்று தலையாட்டியவன், அவள் வினா தொடுக்கும் விழிகளில் இதமாக இதழ்களை பதித்தான்.

 

“நீ போய் ரெப்ரஷ் பண்ணிட்டு வா!” என்று மெல்லிய குரலில் அவளிடம் கூற… அவள் சரியென்று பிரிந்து செல்கையில் அவள் உடையோடு உடன் செல்ல விழைந்த. அவனது ஒற்றைத் துண்டை.. விடை பெறும் கடைசி நிமிடத்தில் கைப்பற்றி தன்னை காத்துக் கொண்டான் கார்த்திக்!!

 

மேகலையோ வெட்கி நாணி சன்ன சிரிப்போடு குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

 

“நல்ல வேளை காப்பாத்திட்டேன்.. இல்லேன்னா என்ன ஆகியிருக்கும்” என்று இவன் மென் குரலில் கூறியது அங்கே காதை தீட்டி வைத்து காத்திருந்த கண்ணனின் காதுகளில் கனக்கச்சிதமாய் விழுந்தது.

 

“ஆமா மச்சான்… நீ வந்து தான் காப்பாத்தணும் இல்லனா… அவிழ்ந்திடும்…”

 

“எதே..!!” என்று கார்த்திக் இந்த பக்கம் திகைக்க..

 

“சேச்சே.. டங் ஸ்லிப்புடா.. கவிழ்ந்திடும் நம் கம்பெனி! சீக்கிரம் வா மச்சான்” என்று ஃபோனை துண்டித்து விட்டான்.

 

“நேரம் கெட்ட நேரத்துல போன போட்டு மூடை ஸ்பாயில் பண்ணிட்டான்.. எருமை” என்றவனின் மனது நண்பனை கெட்ட வார்த்தையில் அர்ச்சனை செய்ய..

 

அறிவோ ‘அவன் உனக்கு நல்லது தான் செய்திருக்கிறான் கார்த்திக்! எத்தனை வருடங்களில் முக்கியமான ப்ராஜெக்ட் இது!! இவ்வளவு முக்கியமான ப்ராஜெக்டை

வேண்டாம் என்று பெண்ணுடனான உடல் சுகத்தில் திளைத்து மறந்து போவியா?’ என்று கண்டிக்க.. 

 

“ஆமாம் இப்போதைக்கு கம்பெனி தான் முக்கியம்!! கட்டியவள் இல்லை!” என்று சடுதியில் முடிவு எடுத்து சீக்கிரம் தன்னை தயார் படுத்திக் கொண்டவன் கண்ணாடி முன் என்று டையை கட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் குளித்து புது மலராய் வெளியே வந்தாள் மேகலை.

 

கண்கள் அவளது அழகை நோக்கி பாய… காது அவளது மெல்லிய கொலுசுடைய சிணுங்கலை கேட்க.. மூக்கு அவ்வளவு மணத்தையும் அதோடு கலந்து வரும் கஸ்தூரி மஞ்சளையும் நுகர… உடலும் அவளது ஈர ஸ்பரிசத்தை வேண்டி விறைத்து நிற்க.. நாவோ அவளது பளீரிடும் இதழ்களின் சுவையை உணர துடிக்க… என்று ஐம்புலன்களும் அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல் நொடியில் பறந்து சென்று மேகலையை தான் சுற்றி வட்டமிட்டது.

 

இவ்வளவு நேரம் எடுத்திருந்த உறுதி குறைந்து விடுமோ என்று எண்ணத்தில் “ஸ்டடி!! ஸ்டடி!! கார்த்திக்!!” என்று தனக்குத்தானே உரு போட்டுக் கொண்டவன், “பெல்லு..‌ எனக்கு.. எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. நைட் வர லேட் ஆனாலும் ஆகலாம். சும்மா சும்மா போன் பண்ணி கூப்பிட்டு என்னை நச்சரிக்காதே!! ஏதாவது இம்போர்ட்டனா இருந்தா மட்டும் போன் பண்ணு! சரியா?” என்றவன் அதன்பின் அவள் பக்கம் கூட திரும்பி பார்க்கவில்லை.

 

அவனுக்கே அவன் மீது நம்பிக்கை இல்லை!! திரும்பிப் பார்த்தால் மொத்தமாக அவளுள் விழுந்து அமிழ்ந்து விடுவான் என்பது நிச்சயம்!! அவனின் பாரா முகத்தில் இதமான மனநிலை மாறி வெறுமை சூழ்ந்தது மேகலைக்கு!!

 

“ஹாய் கைய்ஸ்… குட் மார்னிங்!!” என்று ஆழ்ந்த குரலோடு… கிரே கலர் சூட்டில் ஆளை அடிக்கும் அசாத்திய உயரத்தோடு… ஜெல் போட்டு படிய வாரிய சிகையோடு… அழுத்தமான வேக நடையோடு தங்களை கடந்து செல்லும் கார்த்திகைத் தான் ரசித்துப் பார்த்தது 2கே கன்சல்டன்சி கன்னிகளின் தலைகள் எல்லாம் கணினியில் இருந்து ஒரு நிமிடம் விடை பெற்று…

 

எப்பொழுதும் இது மாதிரி ப்ராஜெக்ட் மீட்டிங்கெல்லாம் உயர்தர ஹோட்டலில் தான் நடக்கும். ஆனால் இன்று இவனின் கம்பெனியை பார்வை இட்டபடி இருக்கும்.. மீட்டிங்கை நடத்தியது மாதிரி இருக்கும்.. என்று ஜப்பானிய கம்பெனி ஒன்று வந்தது.

 

முகமன்கள் கூறி அவர்களை தன்னோடு அழைத்து 200 பேர் வேலை செய்யும் தனது 2கே கன்சல்டன்சியை கம்பீரமாக காட்டினான் கார்த்திக். துளி கர்வத்தோடு தான்!! 

 

தானாக முட்டி மோதி முன்னே வரும் இளைஞர்களுக்கு இந்த கர்வம் கூட இல்லை என்றால் எப்படி??

 

அதன் பின் இவர்களது மீட்டிங் ஹாலுக்கு அழைத்து சென்று அமர வைத்தான். தங்களது ப்ராஜெக்ட் பற்றிய சிறிய ஃபைல் மற்றும் மீட்டிங் அஜெண்டா என்று அனைத்தையும் அவர்கள் முன் ஜம்பமாய் வீற்றிருக்க.. அதனைப் பற்றி சிறியோ இன்ட்ரோ ஒன்றை கண்ணன் கொடுத்தான்.

 

ஏனென்றால் அதுக்கு அடுத்த வரும் ப்ராஜெக்ட் முழுவதையும் கார்த்திக் தான் ஏற்று நடத்தப் போகிறான் என்பதால்.. அந்த கம்பெனியின் இன்னொரு பங்குதாரராக அனைவரையும் வரவேற்று சிறு முகமன் கூறி அமர்ந்தான்.

 

தன்னுடைய ப்ராஜெக்டை மிகத் தெளிவான உச்சரிப்பில் அழகான ஆங்கிலத்தில் விவரித்துக் கொண்டிருந்தான் கார்த்தி கிருஷ்ணா.. எதிரில் கண்ணன் அமர்ந்திருந்தான், நண்பனை பெருமையோடு பார்த்தபடி!!

 

“இந்த ப்ராஜெக்ட் மட்டும் முடிஞ்சிருச்சு.. ஐயோ… நம்ம கம்பெனி வேற லெவல்!!” என்று மனதுக்குள் குத்தாட்டம் போட்டபடி வந்திருந்த கிளைண்டுகளை அவ்வப்போது உபசரித்தபடி இருந்தான்.

 

வந்திருந்த கிளைண்டுக்குமே மிகவும் திருப்தியான மனநிலை தான்!! அவர்களின் ப்ராஜெக்ட் பற்றிய விளக்கமும் இடையிடையே அவர்கள் கேட்கும் கேள்விக்கும் தெளிவான பதிலை அழகான உச்சரிப்பில் புன்னகை கலந்த மிடுக்கோடு கூறிய கார்த்திகை தான் அனைவரும் ஆவலாக பார்த்திருந்தனர்.

 

அப்பொழுது கார்த்திக்கு போன் வர அதுவும் அவன் ஃபோனில் தான் தன்னோட ப்ராஜெக்ட்டை ப்ரொஜெக்டரில் கனெக்ட் செய்து விளக்கிக் கொண்டிருந்தான். அதுவும் மனைவியின் பெயரை பார்த்ததும்.. மற்றதெல்லாம் மறந்த போக.. தாவி எடுத்து அழைப்பை ஏற்றான்.

 

ஏற்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பது அவனின் அனுபவம் கூறுமே…

 

“மாமா… நான் பத்திரமா தானுங் இருக்கேன்! இந்த போலீஸ்கார் நம்ம ஊரு பக்கம் தானுங்களாம்! நீங்க ஒன்னும் வெசனப்படாதிங் மாமா! அந்த மண்ட மேலுள்ள கொண்டயை மறந்துட்டேனுங்.. அதுக்கு தான் புடிச்சு வச்சிறுக்காக! ஒன்னும் அவசரமில்ல மாமா… நீங்க வேலையை முடிச்சிட்டு நிதானமாவே வாங்!! நான் அதுவர அவக கூட பேச்சிட்டு இருக்கேனுங்!” என்று அவள் முடிக்கும் முன்..

 

‘மண்டை மேலுள்ள கொண்டையா? என்னது?’ என்று யோசித்தவனுக்கு பின்னரே புரிந்தது அது ஹெல்மெட் என்று!!

 

பதறி எழுந்து ப்ராஜெக்ட்டாவது ப்ரொஜெக்டாராவது என்று வெளியே ஓடி இருந்தான் கார்த்திக் கிருஷ்ணா.

 

மனைவியை காப்பாத்த இல்லிங்..

மனைவியிடம் இருந்து அந்த காவலர்களை காப்பாத்தங்!!

 

“ஜோலி முடிஞ்சிங்!” என்று கவலையில் கண்ணன்!!

 

“வாட்.. கார்த்திக்கு மேரேஜ் ஆகிட்டா??” என்ற அதிர்ச்சியோடு

அவனின் ரசிகைகள்!! 

 

அடுத்த ஒரு நிமிடத்தில் காட்டுத் தீயாய் பரவியது கார்த்திக்கின் திருமணம் அந்த கம்பெனி முழுக்க!!

 

கோபத்தில் கைமுட்டிகள் இறுக.. அதை ஸ்டியரிங்கில் குத்தியப்படி காரை விரைந்து ஓட்டிக் கொண்டிருந்தான் கார்த்திக்!!

 

ஏனென்றால் இவன் போன் எடுக்கவில்லை என்றால் அடுத்தது அவனது தந்தைக்கு தான் அழைப்பாள் மேகலை!!

 

அவள் என்னமோ பொதுவாக பேசி தான் வைப்பாள். ஆனால் கிருஷ்ணகுமாரோ “என்ற மருமகள தனியா விட்டுட்டு நீ அங்கன என்னடா பண்ற? ஒழுங்கு மரியாதையா பாப்பா கூட குடும்ப நடத்துற வழியை பாரு.. என்ற மருமகள விட உன்ற கம்பெனி ஒண்ணும் பெருசு இல்லையாக்கும்!! மீறி கம்பெனியில் உட்கார்ந்து இருந்தேனு வை.. வந்து காலை உடைச்சுபுடுவேன்.. ஆமா!!” என்று கொங்கு தமிழில் அவனை ஒரு மிரட்டு மிரட்டி விடுவார் அவர்.

 

எல்லாம் சகவாச தோஷம்!! மருமகளோடு பேசினால் அன்றைய நாள் முழுக்க.. அவரின் பேச்சு வழக்கு அப்படியே தான் இருக்கும்!!

 

ப்ராஜெக்ட் போனால் போகிறது அட்லீஸ்ட் கம்பெனியாவது நிலைக்க வேண்டும்!! அதற்கு கிருஷ்ணகுமாருக்கு விஷயம் தெரியும் முன், சென்று அவளை காப்பாற்ற வேண்டும்.. இல்லையில்லை அந்த காவலர்களை காபந்து பண்ண வேண்டும்.‌ அதற்கு தான் இந்த வேகம்.. வேகம்.. வேகம்!!

 

“இவள தான் வீட்டுக்குள்ளேயே இருக்க சொன்னேனே.. எதற்கு வெளிய வந்து தொலைந்தா! பெல்லு… உன்னோட…!!” என்று சற்று இணங்கி வந்தவனின் இணக்கம் சுணக்கமானது!!

 

கணவனின் அருகாமையில் கவலைகளை மறக்கலாம் என்று அவள் நினைத்திருக்க.. அவனோ வேலையை கட்டிக்கொண்டு அழுதான். சுணங்கி முடங்கி இருந்ததெல்லாம் சிறிது நேரம் தான் பிறகு இயற்கை குணம் வெளிப்பட்டது அவனை ஆட்டி வைக்க!!

 

அவன் சொன்னதை அப்படியே கேட்டு விட்டால் அவள் மேகலை இல்லையே!! போதாத குறைக்கு காலையில் கணவன் முகம் கொடுத்து கூட பேசாமல் சென்று‌ விட… வேண்டும் என்றே தான் ஹெல்மெட் இல்லாமல் வண்டியை ஓட்டி.. போலீசிடம் மாட்டி.. இப்பொழுது அவனைக் கதற வைத்து வரவழைத்து இருந்தாள்!!

 

“ஏதோ கொஞ்சம் விட்டு புடிக்கலான்னு பார்த்தேனுங் மாமா..‌ நீங்க சரி வர மாட்டிங் போல.. இனி மேகலை யாருன்னு பார்க்க போறிங்!” என்று ரகசிய சிரிப்போடு காவலர்கள் அருகே இருந்த மைல் கல்லில் அப்பாவியாய் அமர்ந்திருந்தாள் மேகலை.. கார்த்திக்கின் மணிமேகலை!!

 

 

இஷ்டமாகுமா??

3 thoughts on “நீ நீ நீ என்னோட இஷ்டம்… 13”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top