ATM Tamil Romantic Novels

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 14

இஷ்டம் -14

 

வேகமாக வீட்டுக்குள் நுழைந்தவன் கையில் இருந்த ஃபோனை.. அதை விட வேகமாக தூக்கி சோபாவில் எறிந்தான்!! அத்தனை கோபம்.. அத்தனை ஆத்திரம்.. ஆனால் எதுவும் அப்பொழுது அவனால் அங்கேயும் காண்பிக்க முடியவில்லை!! இவளிடமும் காட்ட இயலவில்லை!!

 

அவன் பின்னே அமைதி பூங்காவாக உள்ளே நுழைந்த மணிமேகலையோ “மாமா…” என்று மெதுவாக அழைக்க.. தன் சுட்டு விரலை உதட்டில் வைத்து அமைதியாக இருக்க சொன்னவன், மீண்டும் அவள் ஏதோ பேச எத்தனிக்க.. மீண்டும் மீண்டும் அதே மாதிரி சைகை செய்து அவளிடம் தன் கோபத்தை காட்டாது கட்டுப்படுத்திக் கொண்டவன், சோபாவிலேயே தளர்ந்து அமர்ந்தான்!!

 

அவனின் முகம் கோபத்தில் செங்காந்தளாய் சிவந்து இருந்தது. காதின் நுனி கூட அத்தனை சிவப்பு!!

 

‘பொதுவா கோபம் வந்தா மூக்கு நுனி சிவக்கும்பாங்க.. இவருக்கு என்ன காது நுனி கூட சிவக்குதே? மூக்கிலிருந்து தலைக்கேறிட்டோ கோபம்!! அதுதான் காது எல்லாம் சிவந்திருக்கு? ஆனா அந்த கோபம் எப்படி தலைக்கு ஏறும்?’ என்று தீவிர ஆராய்ச்சியில் மேகலை!!

 

‘என்ன விஷயம் நடந்திருக்கு? இவ என்னவோ மண்டைய தட்டி தட்டி ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்காளே!’ ஏற்கனவே கோபத்தில் கொந்தளித்தவன் இப்போது பெரும் கோபத்தில் பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

 

ஜப்பானியர்களுக்கு டைம் மேனேஜ்மென்ட் அண்ட் பஞ்சுவாலிட்டி ரொம்ப ரொம்ப முக்கியம்! அதுவும் ப்ராஜெக்ட் பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டாலும் இப்படி விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கும் வேளையில் ஓடி சென்றால்.. அவர்கள் என்ன நினைப்பார்கள்? பாவம் அத்தனை பேரிடமும் தனியாய் மாட்டிக் கொண்டு அங்கு கண்ணன் அவஸ்தைப்பட்டு கொண்டிருக்கிறானோ? இவன் அதை கண்டுக்காமல் மனைவியை தேடி சென்று விட்டான்.

 

அங்கிருந்த டிராஃபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழர்.. கர்நாடகாவில் செட்டிலான தமிழர் போல.. அதுவும் அவரது பூர்வீகம் கோயம்புத்தூர் என்று இவளது வட்டார மொழியில் கண்டு மகிழ்ந்தவர் கூற… அவ்வளவுதான் அந்த மைல் கல்லிலேயே அமர்ந்து அவரிடம் ஊர்.. உலக நடப்பு என்று பேசிக் கொண்டே இருந்தாள். 

 

அந்த மனிதருக்கும் வெகு நாள் கழித்து ஊர் பக்கம்.. அதுவும் சொந்த ஊர் பக்கம் இருந்து பேச ஆள் கிடைத்துவிட, அங்கிருந்து கான்ஸ்டபில்களை சாலைகளை பார்க்க சொல்லிவிட்டு அவரும் அவளோடு பேச்சில் ஐக்கியமாகிவிட்டார்.

 

ஒவ்வொரு வார்த்தைக்கு அவள் மரியாதை பன்மை விகுதி அவரை அப்படியே ஆகர்ஷித்தது. ‘இந்த காலத்திலும் இவ்வளவு மரியாதை தெரிந்த பெண்ணா?’ என்று தான் அவருக்கு ஆச்சரியம்!! அதுவும் கணவனிடம் பேசும்போது கூட இவ்வளவு பவ்யமாக பொறுமையாக பேசும் பெண்ணை பார்த்தவருக்கு ‘என்ன இருந்தாலும் நம்ம ஊரு பொண்ணுங்க.. நம்ம ஊரு பொண்ணுங்க தான்!’ என்று மெச்சிக்கொண்டவருக்கு மணிமேகலையை அவ்வளவு பிடித்தது!!

 

“நம்ம பையன் மட்டும் பெரியவனா இருந்திருக்கலாம்? இருந்திருந்தா.. ம்ஹூம்! வருங்காலத்தில இப்படிப்பட்ட பொண்ணை தான் கட்டி வைக்கணும்!” என்று காலேஜ் மூன்றாம் வருடத்திலும் முதல் வருடத்திலும் படிக்கும் இரு மகன்களையும் நினைத்து வருத்தம் கொண்டார்!! அவர் ராமதாஸ்!!

 

மிக வேகமாக காரில் பாய்ந்து வந்தவன் அவரிடம் பல விதங்களில்.. பல மொழிகளில்.. மன்னிப்பு கேட்க..

 

“என்ன சார் எதுக்கு இவ்வளோ எக்ஸ்க்யூஸ்? ஹெல்மெட் தானே மறந்து வச்சுட்டு வந்தாங்க! பரவால்ல.. என்ன பவ்யமாக பேசுறாங்க?? என்னமா மரியாதை கொடுக்குறாங்க?? இந்த மாதிரி பொண்ணு எல்லாம் இப்ப எல்லாம் உலகத்திலேயே இல்ல சார்!! தேடி கண்டுபிடிக்க கூட முடியாது!! அந்த வகையில் நீங்க ரொம்ப லக்கி சார்” என்று அவர் ஒரு பாராட்டு பத்திரம் வாசிக்க.. முகிழ்த்த கடுப்பை எல்லாம் கண்களில் கனலாக கக்கிக் கொண்டே தலையாட்டியவன் பைனையும் கட்டிவிட்டு, தெரிந்த நண்பர் மூலம் வண்டியை எடுக்க சொல்லிவிட்டு காரில் மனைவியை ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான்.

 

வந்தது முதல் தன்னை கேட்காமல் இவ்வளவு தூரம் வெளியில் சென்றதற்கு ஒரு சாரியோ…

போலீசில் மாட்டிக் கொண்டதற்கு வருத்தமோ தெரிவிக்காமல், ஐன்ஸ்டீன் பேத்தி என்று நினைப்பில் தலையை தட்டி தட்டி ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவளை தான் அத்தனை கோபத்தோடு பார்த்தான்.

 

அமர்ந்திருந்த சோபாவிலேயே இன்னும் அமர்த்தலாக அமர்ந்து கால் மேல் கால் போட்டபடி.. இரு விரல்களால் சொடுக்கிட்டு அவளை கூப்பிட.. அவள் அந்த சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க.. இங்கே வா என்று இரு விரல்களால் அழைத்தான்.

 

கணக்கு பாடம் சரியாக செய்யாமல் மாட்டிக் கொண்டு விழிக்கும் மாணவி போலவே அவள் நின்று இருக்க.. அவள் அவ்வளவு பவ்யமாக நின்றதில் இன்னும் மசக்கடுப்பு அவனுக்கு!!

 

“உன்கிட்ட ஆபீஸ் போகும் போது நான் என்ன சொன்னேன்?” என்று அவன் கவுண்டமணி கணக்கில் ஆரம்பிக்க…

 

“லேட்டா வருவேன்னு சொன்னிங்.. மாமா!!” என்றாள், இவளும் செந்தில் போல மிக பவ்யமாய்…

 

“வேற என்ன சொன்னேன்?” என்று ஆத்திரத்தை அடக்கிய குரலில் கார்த்திக்..

 

“வேற என்ன சொன்னீங்க??” என்று மோட்டுவலையை பார்த்து யோசித்தவள் “ம்ம்ம்.. அடிக்கடி போன் செய்து நச்சரிக்க கூடாதுன்னு சொன்னீங்.. மாமா!” என்றாள் சரியான விடை கண்டுபிடித்த மாணவியின் உற்சாகத்தில் மேகலை!!

 

“இன்னும் ஒன்னு சொன்னேன்! என்ன சொன்னேன்?” என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டான் கார்த்திக்..

 

“இன்னுமா… ஐய்யோ அப்ப அவர் மேல இருந்த கோபத்துல சரியா கவனிக்கலையே நானு? என்ன சொன்னார்? மணி.. மணி.. சீக்கிரம் கொஞ்சம் ரீப்ளே பண்ணி பாருடி!” என்று அவளுக்கு அவளே பேசிக்கொண்டு ஃப்ளாஷ் பேக்கை ரீவைண்ட் செய்து பார்த்ததில்… ‘இன்று முக்கியமான மீட்டிங் இருக்கு!’ என்று லேசுபாசாக கார்த்திக் குரல் அவள் காதில் விழ.. மண்டையில் பல்பு எரிய.. 

 

“ஹாங்.. அது இன்னைக்கு உங்களுக்கு முக்கியமான மீட்டிங்..” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்..

 

“சொன்னேனா…?” என்று அவளை முறைத்த வண்ணம் கேட்டான்.

 

“சொன்னிங்.. சொன்னிங்.. மாமா…!!” என்றாள் நல்ல பிள்ளையாய் தலையை தலையை ஆட்டி ஆட்டி…

 

“அப்புறம் எதுக்குடி வெளியில போய் போலீஸ்கிட்ட மாட்டிகிட்டு.. எனக்கு ஃபோன் பண்ணி.. என்னையும் நடு ப்ராஜெக்ட்ல அங்கிருந்து அலறி அடிச்சிட்டு வர சொல்லி.. அந்த போலீஸ் கிட்ட ஒன்ற மணி நேரம் லெக்சர் அடித்து.. கூடாததுக்கு நீ ஹெல்மெட் போடாமால் போனதுக்கு பைனகட்டி.. எப்எம்ல இருக்குறவன கெஞ்சி கூத்தாடி வந்து வண்டியை எடுத்துட்டு போக சொல்லி.. ப்ராஜெக்ட்டும் போச்சு!! மீட்டிங் போச்சு!! சரின்னு வீட்டுக்கு வந்தா.. நடந்ததுக்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்காம.. எதுக்குடி நீ மண்டையை தட்டி தட்டி யோசனை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க?” என்று இதுவரை இருந்த ஆத்திரத்தில் மூச்சு விடாமல் கடகடவென ஆத்திரத்தில் பேசினான் கார்த்திக்!!

 

அவளோ ஆவென்று வாயை பிளந்து பார்த்தபடி நின்று இருந்தாள்.

 

அதில் இன்னும் ஆத்திரம் மிக “என்னடி??” என்று இரண்டடி முன்னால் மோதுவது போல வந்து வேகமாக கேட்டவனின் அந்த ரௌத்திரத்தில் பயந்து பின்னால் இரண்டடி சென்றாள் மேகலை!! அதற்குள் கண்ணெல்லாம் கலங்கியே விட்டது அவளுக்கு.

 

இதுவரை அப்பத்தா மட்டுமே அவ்வப்போது திட்டுவார்.. சீண்டுவார்!! அதற்கெல்லாம் கவலைப்படாமல் திருப்பிக் கொடுத்து விடுவாள். பசுபதி ஒரு வார்த்தை சொன்னதில்லை! அத்தனை மரியாதையாக தான் பேசுவார்.. நடத்துவார் மகளை!! அவரின் பாதையில் தான் ஊரார்களும் இவளிடம் நடப்பது!!

 

இன்று கணவனே ஆனாலும் டீ போட்டு இத்தனை ரௌத்திரத்தோடு தன்னை பேசுவதை கண்டளுக்கு கண்ணீர் முட்டி நின்றது!! அதே சமயம் “அம்மிணி…!!” என்ற குரலோடு பசுபதி உள்ளே நுழைய… 

 

ஆத்திரத்தில் நின்ற மருமகனும் அவர் முன்னே பயந்து மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல நடுங்கியபடி நின்று மகளும் கண்ணில் பட.. நாட்டாமைக்கு நாலும் யோசிக்கும் புத்தி பறந்து போக.. அத்தனை பதட்டத்தோடும் பயத்தோடு.. “என்ன.. என்னங்க அம்மிணி… என்னங்க.. என்ன ஆச்சு? என்ன ஆச்சு மாப்பிள்ளைங்?” என்று மாறி மாறி இருவரிடம் கேட்டார்.

 

அவளோ அதுவரை பயத்தில் இருந்தவள் அப்பாவை கண்டதும் அரவணைப்பாக அவர் புஜத்தைக் கட்டிக் கொண்டு விம்ம ஆரம்பித்தாள். 

 

சிறிது நேரம் அவளை அழவிட்டான். 

ஆரம்ப அதிர்ச்சி நீங்கட்டும் என்று!!

அது சரி… யாருக்கு அதிர்ச்சி??

 

“மேகலை…!!” என்று இவன் அழுத்தமாக அழைக்க சடாரென்று அவள் திரும்ப.. “உங்க அப்பா நம்ம வீட்டுக்கு ஃபர்ஸ்ட் டைம் வந்திருக்காங்க.. வந்தவங்கள வாங்கன்னு சொல்லி தண்ணி கொடு!! அதுக்கு மொதல உள்ள போய் நீ மூஞ்ச கழுவிட்டு தண்ணி குடிச்சிட்டு, அவங்களுக்கும் எடுத்துட்டு வா” என்று சற்று அதட்டலான குரலோடு கார்த்திக் கூற…

 

அவளோ பெற்றோரை பிரிந்து ஹாஸ்டலுக்கு செல்லும் மாணவி போலவே அப்பாவை பார்த்து மழங்க.. மழங்க.. பார்த்தபடி சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

 

கிருஷ்ணகுமாரோ அவரது குடும்பத்தில் உள்ளவர்களோ இத்தனை கோபமாக ஆத்திரமாக பேசி அவர் கண்டதே இல்லை!! அதுவும் தன் மகளிடமே இவ்வளவு ஆத்திரமாக பேசும் மருமகனை அவர் முறைத்துக் கொண்டே நிற்க.. “ஐயோ அடுத்தது இவரா?” என்று பின் கழுத்தை இடது கையால் தேய்த்துக் கொண்டவன், “வாங்க மாமா!!” என்றான் சோபாவில் அமர.. 

 

அவர் அப்பொழுதும் அசையாமல் பேசாமல் ‘நீ எப்படி என் மகளை திட்டலாம்? அதுவும் அவள் கண்கலங்கி அழுகும் அளவிற்கு? அதற்கு பதில் சொல் முதலில்!’ என்று வீம்பு பிடித்து நிற்க…

 

‘இப்ப புரியுது ஏன் இவ இவ்வளவு வீம்பு பண்றானு!! எல்லாம் குடும்ப ஜீன்!! இன்னிக்கு நாள் இதைவிட கொடுமையா எனக்கு போகவே போகாது!!’ என்று அத்தனை சமாதானப்படுத்தி மாமனாரை அழைத்து சோபாவில் அமர வைத்தான்.

 

கூடவே இந்த விஷயம் சென்னைக்கு கிருஷ்ணகுமாரின் காதுக்கு போக கூடாது என்று மருதமலை முருகனுக்கு அவசர வேண்டுதல் ஒன்றை வைத்தான்..

 

முருகன் கைவிடுவாரா காப்பாற்றுவார் யாமறியன் பராபரமே!!

 

“ஒன்னும் இல்ல மாமா.. ரொம்ப எல்லாம் திட்டல! இன்னைக்கு நான் ஆபீஸ் மீட்டிங் போயிட்டேன்.. இவ பாட்டுக்கு வண்டிய எடுத்துட்டு வெளியில போயிட்டா… அதுவும் ஹெல்மெட்டும் எடுத்துட்டு போகல! போலீஸ் புடிச்சிட்டாங்க மாமா..”என்று அவன் முடிக்க கூட இல்லை.

 

“என்ற பொண்ணையா? என்ன தைரியம் இருக்கோணும் அவனுக்கு.. அவனை…” என்று ஏதோ தன்னூர் போல வேட்டியை மடித்துக் கொண்டு எழுந்து நின்றவரை ஆவேசத்துடன் பேசுபவரை கண்டவனுக்கு ‘ஐயோ.. ராமா! என்னை ஏன் இப்படி குசும்பு பிடித்த குடும்பத்தோட கோர்த்து விட்ட..!” என்று புலம்ப மட்டும் தான் முடிந்தது கார்த்திக்கால்.

 

“அதில்லைங்க மாமா…” என்று இவன் விளக்க ஆரம்பிக்கும் முன்னே.. 

 

“அவன் எப்படி மாப்பிள்ளைங் என் பொண்ண புடிச்சி வைக்கலாம்? அந்த அளவுக்கு அவனுக்கு வீரம் இருக்கா? நான் யாரு தெரியுமுல… என்னோட பவுசு என்ன தெரியுமா? அந்த போலீஸ் யாருன்னு இப்ப எனக்கு காட்டுங் மாப்பிள்ளைங்… அவன உண்டு இல்லைன்னு நான் பண்ணி போடுறேனுங்க!” என்று அருவாள் கையில் இல்லாத அய்யனாராய் குதித்தார்.

 

“அடக்கிரகம் புடிச்சவனே.. தேவையாடா உனக்கு? வேற ஏதாவது கூட சொல்லி சமாளிச்சு இருக்கலாம் போலையே?” என்று சுட்டு விரலை தனக்கு முன்னே நீட்டி தன்னை தானே திட்டிக் கொண்டான்

கார்த்திக்!!

 

ஆனாலும் பசுபதி நிறுத்தினால் தானே? படப்பட பட்டாசாம் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார் அவர்! அவனோ சோர்ந்து சோபாவில் சாய்ந்து விட்டான்!!

 

காலையில் இருந்து பேசிப்பேசி காய்ந்து போன தன் தொண்டைக்கு இதமாக ஏதும் கிடைக்காதா? என்று பார்க்க…

 

சமையலறை இருந்து வந்தவளோ கரெக்டாக அப்பாக்கு மட்டும் தண்ணீரோடு தர்பூசணி ஜூஸ் போட்டு எடுத்து வந்து கொடுக்க.. ‘பழி வாங்கிட்டா பாதகத்தி!’ என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அவளை பசுபதிக்கு நேர திட்ட முடியாமல் அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

 

“அப்பா.. முதல்ல இது குடிங்! எதுக்குங்க இவ்வளவு ஆத்திரமுங்க உங்களுக்கு?” என்று அவள் சமாதானம் செய்ய..

 

“அதில்லிங் அம்மணி.. உங்கள புடிச்சி எப்படிங்க அவன் உட்காரவச்சானுங்க… என்ன தெனாவட்டு இருக்கோணும்? என்ன நெஞ்சு அழுத்தம் இருக்கோணும் அவனுக்கு? நான் எப்பவே அடுத்த பிளைட்ல கோயம்புத்தூர் போறேனுங்க.. போய் ஆளுங்கள லாரியில தூக்கி போட்டு வாரேனுங்க” என்று அவர் திமிற..

 

“அட.. அவர் நம்மூர்காரர் தானுங்க பா!” என்றதும், “என்னது? நம்மூர்காரனா இருந்திட்டு உங்கள உட்கார வச்சு இருக்கானுங்களா? அப்ப இதுக்காகவே அவனுக்கு ரெண்டு லாரி எக்ஸ்ட்ரா ஆளுங்கள தூக்கி போட்டு வரனும் அம்மணி” என்று குதித்தார் பசுபதி.

 

இவளோ “நீங்க முதல்ல உட்காருங்கப்பா!!” என்று கார்த்திக்கு அமர்ந்திருந்த அதே பெரிய நீண்ட சோபாவில் அப்பாவை அமர வைத்து இருவருக்கும் நடுவில் அமர்ந்தவள், “முதல் இந்த ஜூஸ் குடிங்க பா.. செத்த ஆறுதலா இருக்குமுங்க!” என்று அவருக்கு கொடுக்க..

 

என்ன நினைத்தாரோ “நீங்களும் தானே அவ்வளவு நேரம் அந்த போலீஸ்காரோட வெயில் உட்கார்ந்து இருந்திருப்பீங்க அம்மணி! நீங்க குடிங்க…” என்று இவர் பாசமாக மகளுக்கு ஊட்ட..

 

“அட.. நீங்க தான் ரொம்ப தூரம் பயணம் பண்ணி வந்து இருக்கீங்க பா.. களைச்சு போயிருப்பீங்க நீங்க குடிங்க மொதல்ல..” என்று ஜூஸ் கிளாஸை பாசமாக பெண் அவர் பக்கம் நீட்ட..

 

“இல்லிங் அம்மணி.. பாதியாவது நீங்க குடிச்சிட்டு குடுங்க!” என்று அவர் மறுபடியும் அவளுக்கு ஊட்ட..

இவர்களின் பாச போராட்டத்தில் நொந்த நூடுல்ஸ் இல்லை வெந்து நூடுல்ஸ் ஆனான் கார்த்திக்!!

 

அன்று முழுவதும் பெண்ணுடன் தங்கி விட்டு விடியற்காலையில் தான் விமானத்தின் மூலம் கோயம்புத்தூருக்கு திரும்பினார். பசுபதி இருந்த ஒரு நாளும் கார்த்திக் என்ற மனிதன் அங்கே இருப்பதையே மகளும் அப்பாவும் மறந்திருந்தனர். இருவரும் பாசத்தில் முக்குளிக்க.. அவ்வப்போது ஊறுகாய் போலவே தட்டு பட்டான் கார்த்திக் அவர்களுக்கு.

 

ஆனால் போகும்போது நல்ல அப்பாவாக “உங்களை பத்தி எனக்கு தெரியுமுங்க அம்மணி. ஆனா மாப்பிள்ளை பாவம் பயந்துட்டாருங்க.. அதுபோல அவருக்கு இந்த போலீஸ் சச்சரவு வழக்கு இதெல்லாம் தெரியாதுங்களே! நம்மள மாதிரி கட்டு சட்டமெல்லாம் இல்லை அவரு. அவர் உண்டு அவர் கம்பெனி உண்டுனு இருக்கும் சாதுங்க அவரு!! நீங்க போலீஸ் கிட்ட இருந்தத பார்த்ததும் பாவம் மாப்பிள்ளைக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? அதுதான் ஆத்திரத்துல ரெண்டு வார்த்தை பேசி போட்டார் போல.. என்கிட்ட அவ்வளவு சமாதானம் பேசினாருங்க.. இந்த மாதிரி எல்லாம் இனிமே பண்ண கூடாதுங்க அம்மணி!! பாவமும் இல்ல என் மாப்பிள்ளை!” என்றதும்..

 

“சரிங்கப்பா! சரிங்கப்பா!! சரிங்கப்பா!!” என்று அனைத்திற்கும் அவள் தலையாட்டிக் கொண்டே இருந்தாள்.

 

அத்தனையையும் அவர்கள் அறையின் வாயில் கதவில் கையை கட்டிக்கொண்டு சாய்ந்த வண்ணம் பார்த்து இருந்தான் கார்த்திக்!!

 

நேற்று இருந்த கோபம் எல்லாம் அழிந்து நார்மல் மூடுக்கு மாறிவிட்டான். கோபத்தில் இருக்கும் போது அப்பா பெண்ணின் பாசம் ஏதோ வேஷம் நாடகம் போல இருந்தது அவனுக்கு!

 

இப்பொழுது கொஞ்சம் ரசித்தான் அவர்களை!! இதே போல் தான் தன் பெண்ணும் தன்னிடம் பாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பு நெஞ்சின் ஓரத்தில் நிழலாடியது!!

2 thoughts on “நீ நீ நீ என்னோட இஷ்டம்… 14”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top