ATM Tamil Romantic Novels

காதல் தருவாயா!!!

அத்தியாயம் 2

 

“அம்மாடி.. இன்னுமா நீ ரெடியாகல.. அங்க ஐயர் உன்னைக் கூட்டிட்டு வரச் சொல்லிட்டிருக்கார்.. போலாமா?” என ஆர்த்தியின் கைப்பிடித்து எழுப்பியபோது ஜோதி ஒருகணம் நின்றுவிட்டார். ஏனெனில் ஆர்த்தியின் விரல்கள் பயத்தில் ஜில்லிட்டு போய் இருந்தது.

 

கலவரத்துடன் தன் மகளிடம் திரும்பி, “என்னடா.. என்னாச்சு.. ஏன் இப்டி உடம்பு விறைச்சு போயிருக்கு?!” என பரிவுடன் ஆர்த்தியின் கன்னத்தில் கைவைத்து அழுத்த, அவரது கையை அழுந்தப் பற்றியவாறு,

 

“ம்மா.. ம்மா.. எனக்கு..எனக்கு ரொம்ப பயம்மா இருக்கும்மா..” என உண்மையை உளற முயன்றவளின் தோளை இறுக்கப் பிடித்து அணைத்தபடி, “இந்த நேரத்துல அப்டி தான்டா இருக்கும். எல்லாத்தையும் ஆண்டவன் மேல போட்டுட்டு அம்மாக் கூட வா..” என ஆர்த்தியை சமாதானப்படுத்தி மணமேடைக்கு அழைத்துச் சென்றார் ஜோதி.

 

‘ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ?!’ என்று மனம் முழுவதும் பயத்தில் உறைய மணமேடையில் சென்றமர்ந்தபோது அருகிலிருப்பவனை கண்ணோரமாகக் கூட திரும்பிப் பார்ப்பதற்கு பயந்தாள் ஆர்த்தி. 

 

கற்சிலைக்கு வேஷ்டி சட்டை அணிவித்திருப்பதுப் போல கௌதம் அமர்ந்திருக்க, மந்திரம் ஓதியபடி மங்களநாணை எடுத்து நீட்டிய ஐயரை வெறித்துப் பார்த்தபடியே வாங்கி ஆர்த்தியின் கழுத்தில் அணித்தான்.

 

அப்போது, “என் பேச்சையும் மீறி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீல்ல.. இனிமே தான் இருக்கு உனக்கு.” எனப் பல்லைக் கடித்தவாறு ஆர்த்தியின் காதில் மந்திரம் ஓதியவன் பிறகு நேராக அமர்ந்து கொண்டான்.

 

தாலி கழுத்தில் ஏறியதும் தன் மகளின் கலவர முகம் மாறிவிடும் என எண்ணியிருந்த ஜோதிக்கு இப்போது அவரது மகளின் வெளிறிப் போன முகத்தைக் கண்டு கவலையாக இருந்தது.

 

‘கல்யாணப் படபடப்புன்னு நெனச்சேனே. ஆனா.. ஏதும் பிரச்சனையா?! ஆர்த்தி முகமே சரியில்லயே..’ என நெஞ்சைப் பிடித்தபடி நின்றிருந்தவரை ஏதோ தோன்ற நிமிர்ந்து பார்த்தவள் பூவாக முகம் மலர்ந்து சிரித்தாள் ஆர்த்தி.

 

அவளது புன்சிரிப்பைப் பார்த்ததும் தான் அவளது வீட்டினருக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் அவளோ, ‘என் கஷ்டம் என்னோடு போகட்டும். இவங்களையும் ஏன் கஷ்டப்படுத்தணும்?!’ எனப் பெருமூச்சொன்றை வெளியிட்டவாறு ‘இனி வருவதை நாமே தனியாக சமாளித்தாக வேண்டும்.’ என உள்ளூர நினைத்துக் கொண்டு அனைத்து சடங்குகளுக்கும் வளைந்து கொடுத்தாள்.

 

இறுதியில் ஆர்த்தி பயந்த நேரமும் வந்தது. முதலிரவுக்காக அவளை அலங்கரித்து அழைத்துச் சென்றபோது தனது உடல், முகமென வியர்த்து கொட்டுவதை வேறுவிதமாக புரிந்து கொண்ட தோழிகளோ அதையும் கிண்டல் செய்தபடி அறையினுள்ளே அனுப்பி வைத்தனர்.

 

அங்கே ஆத்திரம் பொங்கும் விழிகளுடன் கைவிரல்களை பின்னோக்கி கட்டிக் கொண்டு கௌதம் நின்றிருந்த தோரணையே கூறியது அவன் கடுங்கோபத்தில் உள்ளான் என்பதை.

 

“வாங்க மஹாராணி.. வாங்க.. என்ன இவ்ளோ லேட்டா வர்றீங்க.. அந்தளவுக்கு பூரிப்போட இருக்கீங்களோ?” என ஏளனத்துடன் கௌதம் கேட்க, கையில் வைத்திருந்த பால் செம்பைப் பார்த்தபடி மௌனமாக நின்றிருந்தாள் ஆர்த்தி.

 

“திட்டம் போட்டு என்னை ஏமாத்திட்டீல்ல. உன்னால முடியாதுன்னு அப்பவே சொல்லிருந்தா நான் வேற ஏற்பாடு பண்ணிருப்பேன். ஆனா நீ நம்ப வச்சு கழுத்தறுத்துட்டீல்ல.” என அவள்மீது குற்றப்பத்திரிக்கை வாசித்த வண்ணம் நின்றிருந்தான்.

 

ஒருக்கட்டத்திற்கு மேல் அமைதியிழந்து, “சும்மா என்னையே குறை சொல்லாதீங்க. கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருக்குறப்போ எனக்கு கால் பண்ணி பேசுனவருக்கு இந்தக் கல்யாணத்துல முதல்லருந்தே விருப்பமில்லன்னு தெரியும் தானே.. அப்பவே ஏன் சொல்லல? அப்பல்லாம் விட்டுட்டு எங்கப்பா அம்மா கல்யாணத்துக்கு எல்லா செலவும் பண்ணி முடிச்சதுக்கப்புறம் கூப்பிட்டு இப்டி சொன்னா உடனே நடந்துரணுமா?! அதுக்கப்புறம் என் குடும்பம் எவ்ளோ நஷ்டத்த ஏத்துக்கணும்ன்னு தெரியுமா?” என எதிர்கேள்விகள் கேட்டதும், ஒருகணம் திகைத்து நின்றுவிட்டு பின் ஏளனத்துடன் உதடு பிதுக்கினான்.

 

“ஹும். இது தான் பிரச்சனைன்னா எவ்ளோ பணம் வேணும்ன்னு அப்பவே சேர்த்து பேரம் பேசிருக்க வேண்டியது தானே?!” என அலட்சியமாக தோளைக் குலுக்கியபடி நடந்து சென்று ஜன்னலினோரம் நின்று கொண்டான் கௌதம்.

 

கௌதமின் ஏளன வார்த்தைகள் தன்னை வந்து அடைந்ததன் அடையாளமாய் தன் கைவிரல்களை இறுக்க மூடி தனது ஆத்திரத்தை அடக்க முயன்றாள் ஆர்த்தி. அவளது மனம் முழுவதும் கொதித்துப் போய் இருக்க, ‘எங்கே கோபத்தில் கை ஓங்கி விடுவோமோ?!’ என்ற பயமும் சேர்ந்து தாக்கியிருந்தது அவளை.

 

அவன் அவ்வாறு கூறியதும் ஆத்திரம் தலைக்கேறியிருந்த ஆர்த்தி, “ஓஹோ.. உங்களுக்கெல்லாம் பணத்த வச்சு எல்லாம் சரி பண்ணிடலாம்ன்ற நெனப்பிருக்கோ?! கல்யாணம் நின்னா எங்கக் குடும்பத்தோட மானம் மரியாதைக் கூட தான் மொத்தமா போகும். அதையும் உங்கப் பணத்தால சரி பண்ண முடியுமோ?!” என காட்டுக்கத்து கத்தியவளை மீண்டும் பார்வையால் அலட்சியம் செய்து,

 

“பணத்துக்காக கல்யாணம் பண்ணிட்டு.. இப்டி நடிக்க எப்டி தான் மனசு வருதோ?! ஓஹோ.. நீ பண்ணத் தப்புக்கு காரணம் வேணும்முல்ல. அதான் வரிசையா அடுக்குறியா?! ஹீம்.. இப்ப நான் சொல்றத நல்லாக் கேட்டுக்கோ. வெளில மட்டும் தான் நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி. ஆனா இந்த ரூம்முக்குள்ள என் நிழலக் கூட நீ தொடக்கூடாது. இது இன்னிக்கு நாளைக்கு மட்டும் தான்னு தப்புக்கணக்கு போட்டுடாத. என்னைப் பொறுத்தவரைக்கும் ஆயுசுக்கும் நீ எனக்கு ரோட்டுல போற யாரோ ஒருத்தர். அவ்ளோ தான். மத்தபடி என்கிட்ட எந்த சலுகையையும் எதிர்பாக்கக் கூடாது. அப்டியே எதிர்பாத்தாலும் பிரயோஜனமில்ல. புரியுதா?! இனிமே இந்தக் கட்டில்ல உனக்கு இடமில்ல. கெட் அவுட்.” என தனக்கு சீதனமாக வந்தக் கட்டிலில் கௌதம் சவுகரியமாக படுத்துக் கொள்வதைக் கண்டு கண்கள் கலங்கத் தொடங்கின ஆர்த்திக்கு.

 

‘நான் வேணாமாம். ஆனா நான் கொண்டு வந்த பெட்ல படுத்துக்கலாமாம். எவ்ளோ பணமிருந்தும் என்ன பிரயோஜனம்?!’ எனப் பொருமியவாறு இருந்தவளுக்கு அப்போது தான் சற்று நிம்மதியாக இருந்தது.

 

ஏனெனில் தான் கற்பனை செய்து வந்தது போல ஏதும் விபரீதமாக நடக்கவில்லை என்ற ஆசுவாசம் தோன்றினாலும் தனக்கு கிடைத்த ஆயுள் தண்டனையை எண்ணி வேதனைப்படாமல் ஆர்த்தியால் இருக்க இயலவில்லை.

 

ஆர்த்தி நினைத்திருந்தால் இந்தக் கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாம் தான். ஆனால் அவளது மனம் முழுவதையும் கௌதம் நிறைத்துக் கொண்டு காதல் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தக் கதையைக் கூறினால் நம்புவானா என்ன?! 

 

கௌதம்மை எவருக்கும் விட்டுக் கொடுக்கும் தைரியம் இறுதி வரை ஆர்த்திக்கு வரவில்லை என்பதை ஒருப் பெண்ணாக இருந்து கொண்டு எவ்வாறு அவள் வாயால் கூறுவாள் என்பதை கௌதம் அறிய வாய்ப்பில்லை.

 

தூக்கமென்பது தொலைதூரம் சென்றுவிட்டக் காரணத்தால் விரக்தியுடன் நடுஇரவில் மெல்ல சமையலறை வந்தமர்ந்தாள் ஆர்த்தி. அப்போது இரு உருவங்கள் அங்கே வந்து மின்விளக்கைப் போட்டு நின்றன. 

 

‘யாரோ.. எவரோ..’ எனப் பயந்தபடி திடுக்கிட்டு நிமிர்ந்து அமர்ந்தவளைக் கண்டுகொள்ளாது தங்களது பேச்சில் கவனமாக இருந்தது வேறு யாருமல்ல. ஆர்த்தியின் அருமை மாமியார் மந்தாகினியும் அவரது அண்ணன் மனைவி லலிதாவும் தான்.

 

‘ஷ்ஷப்பா.. கொஞ்ச நேரமாவது என்னை நிம்மதியா இருக்க விடுறாங்களா?! இப்ப இவுங்க என்னை பாத்துட்டா கேள்வி கேப்பாங்களே.. என்ன பண்றது..?!’ என யோசித்து மெல்ல ஓசையில்லாமல் ஒரு மூலைக்கு நகன்று சென்று அமர்ந்து கொண்டாள் ஆர்த்தி.

 

ஆனால் அவர்களுடன் ஆர்த்தி இருப்பதை அறியாது மிகப் பெரியக் குண்டைத் தூக்கி அவளது தலையில் போட்ட இரகசியக் கதையைப் பற்றி பேசலானார்கள் இருவரும்.

 

“அண்ணி.. ஒருவழியா கல்யாணத்த முடிச்சுட்டீங்களே. பெரிய ஆளு தான் நீங்க..” என மாளவிகாவின் தோளில் தட்டி லலிதா கூற, வெற்றிக் களைப்புடன் “அய்யய்யோ.. இந்தக் கல்யாணத்த நடத்துறதுக்குள்ள நான் பட்டபாடு இருக்கே. அப்பப்பா..” என அயர்வுடன் அங்குள்ள டைனிங் டேபிளின் நாற்காலியில் அமர்ந்து கொண்டார் மந்தாகினி.

 

‘ஆமாமாம்.. இதுங்கள்லாம் சேர்ந்து என் தலைல சக்ஸஸ்ஃபுல்லா மண்ணள்ளி போட்ட சந்தோஷத்துல இருக்குதுங்க..’ என எரிச்சலுடன் நினைத்தவள் அங்கிருந்து எழுந்து செல்ல முற்பட்டபோது தான் அந்த கொடிய செய்தி அவளது செவிகளில் எட்டியது.

 

“ஏன் அண்ணி.. அப்போ இன்னைலருந்து ஒரு மாசத்துல அவ செத்துருவா தானே..” என லலிதா ஆர்வத்துடன் கேட்பதைக் கேட்ட ஆர்த்தி அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்து விட்டாள். ‘என்ன… என்ன சொல்கிறார்கள்?! நான் இறந்து விடுவேனா?’ என திகைத்தவாறு தன் காதினை நன்கு தீட்டிக் கொண்டு அவர்களது பேச்சைக் கூர்மையாகக் கவனித்துக் கேட்டாள்.

 

“ஆமாண்ணி.. இன்னிக்கு சாந்திமுகூர்த்தம் முடிஞ்சக் கையோட அவளுக்கு ஒரு மாசம் தான் டைம். அதுக்குள்ள அவ விதி முடிஞ்சிரும்.” என நிம்மதியுடன் மந்தாகினி கூறுவதைக் கேட்ட ஆர்த்திக்கு தலையே சுற்றியது.

 

‘அடப்பாவிங்களா! இந்தக் கூத்து வேற நடந்துருக்கா?! இதுக்காக தான் தேடித்தேடி பொண்ணு கேட்டு ஓடி வந்தீங்களாடா?! இது தெரியாம நாம இவ்ளோ பயந்தோமே.. நல்லது தான். இவுங்களுக்கு மத்தில இருந்து கஷ்டப்படுறதுக்கு ஒரேடியா போய் சேரலாம்.’ என விரக்தியுடன் நினைத்தவளின் கண்ணில் நீர் அருவியெனக் கொட்டத் தொடங்கியது.

 

என்னவெல்லாம் வண்ணக்கனவுகள் கண்ட இளம்பட்டாம்பூச்சியாய் சுற்றி வந்தாள்?! ஆனால் இப்போது…?? இன்னும் எத்தனை அதிர்ச்சிகளைத் தான் அவளது இதயமும் தாங்கிக் கொள்ளும்?! அப்போது மேலும் அவர்கள் பேசிக் கொள்வது ஆர்த்திக்கு கேட்டது. 

 

“அண்ணி.. இந்த ஆர்த்தி போனதும் கௌதம்க்கு எம்பொண்ணக் கட்டி வச்சுடுவீங்கள்ல..” என ஆர்வத்துடன் லலிதா கேட்க, “இல்லையா பின்ன.. அதுக்கு தானே இவ்ளோ ரிஸ்க்கும். கௌதம்க்கு இப்டி ஒரு கண்டமிருக்கிறது தெரிஞ்சனால தான் உங்கப் பொண்ண பலியாக்காம வேற ஒரு ஏற்பாடு பண்ணிருக்கேன்.” எனப் பெருமிதமாக மந்தாகினி கூறுவதைக் கேட்ட ஆர்த்திக்கு மேலும் உள்ளம் சோர்ந்தது.

 

‘ஆக.. எல்லாருமே ப்ளான் பண்ணி தான் செய்யுறாங்க. ஒரு மாசத்துல என் விதிய எழுதுறதுக்கு இவுங்கள்லாம் யாரு?! இதையெல்லாம் அந்தக் கடவுள் பாத்துட்டு சும்மாயிருப்பானா?!’ என ஆதங்கத்துடன் நினைத்தவள்,

 

‘இல்லையில்ல. கடவுள் இருக்கான்றனால தான் உனக்கு ஒரு மாசம் டைம் கொடுத்துருக்கான். அதுவரைக்கும் கௌதம்ம இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்ணலாமே.’ என தன் மனம் பரிதாபகரமாக நப்பாசையுடன் தன்னிடம் கேட்டக் கேள்வியில் சிரிப்பு தான் வந்தது ஆர்த்திக்கு.

 

“இந்த ரணகளத்துலயும் உனக்கு குதூகலம் கேட்குதுல்ல.. சரி.. உனக்காக முயற்சி பண்ணலாம்.” எனத் தனக்குத் தானே சாமாதானம் பேசியவள் அவர்கள் எழுந்து சென்றதும் மீண்டும் தனதறைக்கு சென்று தரையில் போர்வையை விரித்து படுத்துக் கொண்டாள்.

 

தன் பிரச்சனைகளுக்கு இன்னும் ஒரு மாதத்தில் விடிவு பிறந்து விடும் என்ற தெளிவு கிடைத்ததாலோ என்னவோ படுத்ததும் அயர்ந்து உறங்கி விட்டாள் ஆர்த்தி.

 

அவள் அவ்வாறு அயர்ந்து படுத்துறங்குவதைக் கண்திறந்து பார்த்தவனின் உதடுகள் ஏளனத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்தன. ‘இப்டில்லாம் டிராமா பண்ணுனா என் மனசு மாறிடும்ன்னு நெனப்பு. ச்சீ..ச்சீ.. என் ஸ்வப்னாவோட கால் தூசுக்கு ஈடாவாளா இவ?’ எனத் தரையில் படுத்திருக்கும் தங்கத்தைத் தகரத்தோடு ஒப்பிட்டு பார்த்து தகரத்தை மெச்சிக் கொண்டான் கௌதம்.

 

ஆனால் விதியின் உண்மையான விளையாட்டை இவர்கள் அனைவரும் எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டனர். கௌதம் எப்போது உண்மையில் ஆர்த்தியை தனது வாழ்க்கைத்துணையாக ஏற்கிறானோ, அப்போதிலிருந்து தான் ஆர்த்தியின் மரணம் நிச்சயிக்கப்படுமென்பதை இவர்கள் அனைவரும் அறியாது போனார்கள்.

2 thoughts on “காதல் தருவாயா!!!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top