அத்தியாயம் 3
மறுநாள் காலை எழுந்து குளித்து விட்டு வெளியே வந்தவளை மேலும் கீழுமாக பார்த்த மந்தாகினி, “என்னம்மா.. கண்ணெல்லாம் சிவந்திருக்கே.. நைட் சரியா தூங்கலியா?” என கிண்டல் செய்ய,
உண்மையறிந்தும் வாய்திறந்து ஒன்றும் பேசாமல் புன்னகைத்து விட்டு நகர முற்பட்டபோது, அவளது கைபிடித்து தன்னிடம் இழுத்து காதோரமாக சென்று, “முதலிரவு நல்லபடியா நடந்துச்சாம்மா?!” என தன் காரியத்திலேயே குறியாக இருந்த மாமியாரை எண்ணி மிகவும் ஆத்திரமாக வந்தது ஆர்த்திக்கு.
ஆகையால், “ஓ.. நேத்து ராத்திரி அவர் என்னை தூங்கவே விடல அத்தை. அந்தளவுக்கு ஜாம் ஜாம்முன்னு கொண்டாடியாச்சு..” என கொஞ்சம் சத்தமாக கூறவும் ‘ஏன்டா இவளிடம் கேட்டோம்?!’ என்பது போன்ற முகபாவனை தோன்றியிருந்தது மந்தாகினிக்கு.
‘நானா வம்பிழுத்தேன்?! சும்மாவே இங்க நொந்து வெந்து போய் இருக்கு. இதுல மேற்கொண்டு பெட்ரோல்ல ஊத்துனா சும்மாவா இருக்க முடியும்..?!’ என வாயெல்லாம் பல்லாக புன்னகைத்து விட்டு நகர்ந்து விட்டாள் ஆர்த்தி.
தான் நிர்வகித்து நடத்தும் லெதர் பேக்டரிக்கு கிளம்புவதற்காக தயாராகி வந்த கௌதம், ஆர்த்தியை கொஞ்சமும் சட்டை செய்யாமல் வந்தமர்ந்து சாப்பிட்டு விட்டு அவளிடம் பேசாமலேயே அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்.
இதனை பூரணத் திருப்தியுடன் அவனது குடும்ப அங்கத்தினர் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்த ஆர்த்திக்கு நெஞ்சே வெடித்து விடும் போல் அழுகை வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு வங்கிக்கு கிளம்பிச் சென்றாள்.
எளிமையாக நடக்க வேண்டிய திருமண சடங்குகள் அனைத்தையும் தவிர்த்து விட்டு இளம்தம்பதிகள் ஆளுக்கொரு திசையில் கிளம்பிச் செல்வதை கவனித்த சொந்தங்களோ அவர்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.
ஆர்த்திக்கோ தன் குடும்பத்தினர் எவருக்கும் இங்கு நடக்கும் கூத்துகள் அனைத்தும் தெரியக்கூடாது என எண்ணினாள். ஆகையால் சீர்வரிசையைக் கொண்டு வந்து வைத்தக் கையோடு அனைவரையும் கிளம்புமாறு வற்புறுத்தி அனுப்பி வைத்தாள்.
புகுந்த வீட்டில் அவளது ராஜாங்கத்தைக் கவனித்த ஜனார்த்தன் மற்றும் ஜோதிக்கு மனம் நிறைந்து போனாலும் மந்தாகினி முகம் கொடுத்து பேசாமல் இருந்தது உறுத்தத் தான் செய்தது.
இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க, மந்தாகினியும் அவரது அண்ணன் மனைவியும் மெதுமெதுவாக ஆர்த்தியை வேலை வாங்கத் தொடங்கினர். வீட்டில் சகல வசதிகள் இருந்தும் அவளது உடைமைகளை அவளேத் துவைத்துப் போட்டுக் கொள்வதைக் கவனித்தாலும் அலட்சியமாக உதடு பிதுக்கிவிட்டு சென்று விட்டான் கௌதம்.
அவனது ஆதரவு ஆர்த்திக்கு இல்லையென நன்கு தெரிந்து கொண்டபின் வீட்டிலுள்ள அனைவரின் உடைமைகளையும் ஆர்த்தியை துவைக்கச் சொல்லி உத்தரவிட்டனர். அதுபோக சமையலறையில் தினமும் சமைக்கும் வேலையையும் அவளையே செய்யச் சொல்லினர்.
வார இறுதியில் வீட்டில் இருந்தாலும் வீட்டை சுத்தம் செய்யும் வேலையையும் அவளையே ஏவினர். இவையனைத்தையும் கண்ணாரப் பார்த்தாலும், ‘செய்வதும் செய்யாமல் இருப்பதும் உன் விருப்பம்’ என கண்டும் காணாமல் விலகிச் சென்றான் கௌதம்.
தன் கணவனின் ஆதரவு இல்லாதக் காரணத்தாலும் பிறந்த வீட்டிற்கு தான் கஷ்டப்படுவது தெரியக்கூடாது என்றக் காரணத்தாலும் ஆர்த்தியால் எதிர்த்து பேசவே இயலவில்லை. இதன் நடுவில் கௌதமின் சகோதரிகளும் ஆர்த்தியிடம் வம்பிழுக்கத் தொடங்கினர்.
ஆர்த்தியின் அனுமதியின்றி அவளது அறைக்குள் நுழைந்து அவளது ஆடைகளை எடுத்து உடுத்தத் தொடங்கினர். அதையும் கௌதம் கண்டுகொள்ளவில்லை எனும்போது வேதனை மனதை வாட்டியது ஆர்த்திக்கு.
இவையனைத்தையும் அவளது மாமனார் கீர்த்திவர்மனிடம் சென்று முறையிட்டபோது, “அம்மாடி.. இதெல்லாம் தட்டிக் கேக்குறதுக்கு உன் புருஷனால மட்டும் தான் முடியும். நான் எப்டிம்மா தலையிட முடியும்??” என லாவகமாகப் பேசி நழுவத் தான் பார்த்தார் அவர்.
எங்கு மோதியும் பலனில்லை என நினைத்து சோர்ந்து போகும்போதெல்லாம் ஆர்த்திக்கு ஆதரவு தரும் ஒரு ஜீவனொன்று இருந்தது என்றால் அது கௌதம்மின் உடன்பிறந்த கடைசித் தம்பி அர்ஜூன் ஒருவனே.
பதினொன்றாம் வகுப்பு பயிலும் அவனுக்கு ஒன்றே ஒன்று மட்டும் நன்கு புரிந்தது ஆர்த்தியை அளவுக்கதிகமாக வேலை வாங்கி கஷ்டப்படுத்துகின்றனர் என்று. ஆகையால் அவனால் ஆன உதவிகளை அவ்வப்போது ஆர்த்திக்கு செய்து வந்தான்.
ஒரு மாத முடிவில் அனைவரும் எதையோ அவளிடம் மிகவும் தீவிரமாக எதிர்பார்ப்பதை உணர்ந்தவளுக்கும் விரக்தியில் ஆர்வம் மேலோங்கத் தொடங்கியது. ‘அவங்க நினைச்ச மாதிரியே நான் செத்துப் போயிட்டா பிரச்சனையே இருக்காதுல்ல..’ என நினைத்து தன் மரணத்தை எதிர்நோக்கி காத்திருந்தாள்.
சாலையில் நடந்து செல்லும் போது கூட வண்டிகள் மோத ஏதுவாக நடந்து சென்றாள். ஆனால் வண்டியில் சென்றவர்களோ, “ஏம்மா… வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?! ஓரமா போம்மா.. நீ சாவுறதுக்கு என் வண்டி தான் கெடச்சுதா?! சாவுகிராக்கி!!!” எனத் திட்டி விட்டு ஓரமாக செல்ல வைத்தனர்.
மாத சம்பளத்தை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தவளிடம் அவளது மொத்த சம்பளத்தையும் கேட்ட மந்தாகினியைக் கேள்வியுடன் பார்த்தாள் ஆர்த்தி. “இந்த வீட்டைப் பொறுத்த வரைக்கும் நிர்வாகம் நாந்தான். அந்தப் பணத்தை இப்டி கொடு.” என வலுக்கட்டாயமாக அவளிடமிருந்து சம்பளப்பணத்தை வாங்கிக் கொண்டு செல்ல முற்பட்டார் மந்தாகினி.
“அத்தை… ஒரு நிமிஷம்.” எனத் தயங்கியபடி ஆர்த்தி அவரை நிறுத்த, ‘என்ன’ என்பது போல திரும்பி நின்றவரிடம், “போக்குவரத்து செலவுக்கு காசு வேணும் அத்தை.” எனக் கேட்டதும், “ஓ… ஆமால்ல..” என சுதாரித்தது போல பாவனை செய்து அவளது கையில் ஐநூறு ரூபாயைத் திணித்தார்.
‘இது எப்படி போக்குவரத்து செலவுக்கு பத்தும்?!’ என வேதனையுடன் நிமிர்ந்து பார்த்தபோது, “என்னப் பாக்குற? வீட்டு செலவு எவ்ளோ ஆகுதுன்னு தெரியுமா?! முடிஞ்ச வரைக்கும் ஃப்ரீ டிக்கெட் பஸ்ல போ. அவசரத்துக்கு இந்தக் காசை வச்சுக்கோ. போ..போ.. சீக்கிரம் போய் துணியெல்லாம் துவைச்சு போட்டுட்டு அயர்ன் பண்ணி வையி.” எனக் கட்டளையிட்டு விட்டு உள்ளே நடந்து சென்று விட்டார்.
சோர்ந்த முகத்துடன் வீட்டினுள்ளே சென்றபோது தன்னை யாரோ உன்னிப்பாகப் பார்ப்பதைப் போல உணர்ந்த ஆர்த்தி சுற்றிலும் தன் பார்வையை ஓட விட்டாள். அப்போது கையில் காஃபிக் கப்புடன் சோஃபாவில் கௌதம் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்ததை ஏக்கத்துடன் பார்த்து விட்டு பெருமூச்சொன்றை வெளியிட்டு விட்டு சென்றாள்.
‘இது நீயாகத் தேடிக் கொண்டது!’ என கௌதம் ஏளனமாக நினைத்தாலும் அவனது ஆழ்மனமோ, ‘என்ன தான் இருந்தாலும் அவளை நடத்தும் முறை சரியல்ல..’ என இடித்துரைக்க, அதனை அதட்டி அடக்கிக் கொண்டான்.
அனைவரின் துணிகளையும் துவைத்துக் காயப்போட்டு விட்டு, தான் அடுத்த நாள் அணிந்து செல்வதற்காக எடுத்து வைத்த ஆடையை அயர்ன் செய்து கொண்டிருந்தபோது அங்கே வந்த கௌதமின் தங்கை, “வாவ்.. இந்த சேலை நல்லாருக்கே.” என்றுக் கூறிக் கொண்டே கையோடு எடுத்துச் செல்வதைக் கவனித்து பதறியவளாய்,
“கீதா.. அது என்னோடது. நாளைக்கு நான் அதைத் தான் போட்டுட்டு போகணும். கொடு..” எனக் கெஞ்சும் தோரணையில் ஆர்த்திக் கேட்க, அலட்சிய பாவனையுடன் திரும்பிப் பார்த்து,
“இதைப் போட்டுட்டு கலெக்டர் வேலைக்கா போகப் போறீங்க?! இல்லைல்ல.. இது எனக்கு பிடிச்சிருக்கு. நான் போடப்போறேன்.” எனத் தலையை சிலுப்பிக் கொண்டு எடுத்துச் சென்றாள் கீதா.
இதுவே அன்றாட வழக்கமாக மாறத் தொடங்கியிருந்தது கண்டு மேலும் மேலும் நொந்து போனாள் ஆர்த்தி. ஒருமுறை வங்கி முடிந்து கிளம்பியபோது அடைமழை பிடித்துக் கொண்டது. அப்போது பஸ் ஸ்டாண்டில் நனைந்தபடி நின்றிருந்த ஆர்த்தியைக் கண்ட கௌதம்,
இரக்கம் கொண்டு அவளினருகில் தன் காரின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு வந்தவன் சட்டென மனம் மாறி, “நனைஞ்சுட்டே வரட்டும். எனக்கென்ன?!” என சிறிதும் இரக்கப்படாமல் காரினை வேகமெடுத்து செலுத்திக் கொண்டு சென்றதில் ஆர்த்தியின் மேல் சேறுசகதி அள்ளித் தெளிக்கப்பட்டது.
தன் முகத்தில் இருந்த சேற்றை மழைநீரின் உதவி கொண்டு துடைத்து விட்டு, திருமணமாகி இத்தனை நாட்களில் தன் கணவனின் அன்பு சிறிதேனும் நமக்கு கிடைக்காதா என ஏங்கி நின்றவளுக்கு அப்போதும் ஏமாற்றமே கிடைத்தது.
கௌதம் மற்றும் அவனது தம்பி அர்ஜூன் தவிர்த்து அனைவருக்குமே ஆர்த்தி மரணிக்கப் போகிறாளென்ற உண்மை தெரிந்தக் காரணத்தால் ஒவ்வோர் நாளும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கத் தொடங்கினர்.
ஆனால் கௌதம் அவனது மனைவியை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதிருந்தபோது எவ்வாறு அவளது மரணம் நிகழும்?! ஒருநாள் வீட்டில் அனைவரும் வெளியே சென்றிருந்தத் தருணம், கால்கள் தள்ளாட நடந்து வந்து கொண்டிருந்தான் கௌதம்.
அப்போது கால் இடறிக் கீழே விழப் போனவனை முதன்முதலாகத் தொட்டுத் தாங்கினாள் ஆர்த்தி. அரைபோதையில் கௌதமின் கண்களுக்கு அவள் அவனது காதலி ஸ்வப்னாவாகத் தெரிய, அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.
தன் கணவனின் எதிர்பாராத அணைப்பில் திணறிப் போனவளுக்கு வெகுநாள் கழித்து பெண்மையின் உணர்வுகள் சுவாசம் பெற்று உயிர்த்தெழ, பின்வரும் அவமான வார்த்தைகளை அறியாது அவனது அணைப்பிற்கு வளைந்து கொடுத்தாள் ஆர்த்தி.
அவளது பூவிதழை தன் விரல்களால் பற்றியிழுத்து முத்தமிட்டபோது தன்னையே மறந்து அவனிடம் லயிக்கத் தொடங்கினாள் ஆர்த்தி. அதுவரை அவ்வீட்டில் பட்டத் துன்பம் அனைத்தும் மறந்து போக தன் கணவனின் மோகத்தனலுக்கு இணங்கிச் சென்றாள்.
ஆனால் அவ்வின்பம் கூட வெகுநேரம் நீடிக்கவில்லை. போதையில் அவளது முகம் தடவியபடியே, “நான் உன்னை ரொம்ப ஏங்க வச்சுட்டேனா ஸ்வப்னா.. மை டியர்..” என அழுத்தமாக அவன் பெயரை உச்சரிக்க உடலெங்கும் வெந்நீரை ஊற்றியது போல உணர்ந்து கௌதம்மை உதறிவிட்டு விலகி நின்றாள் ஆர்த்தி.
ஒருகணம் கௌதம்மின் காதலி தானாக இருந்திருக்கக்கூடாதா என்ற பச்சாதாபம் தன்மீதே எழ, திடுக்கிட்டுப் போனாள் அவள். ‘கடவளே.. கடைசில எப்டியெல்லாம் என் மனம் யோசிக்கத் தொடங்கி விட்டது??’ எனப் பதறிப் போனாள்.
அலையலையாக அடர்ந்தக் கேசத்துடன் கணக்கச்சிதமாக இருந்த உடற்கட்டுடன் போதையில் உலறிய செதுக்கிய உதடுகளின் மேல் படர்ந்து வளர்ந்திருந்த மீசைத் துடிக்க தன் காதலியின் பெயரை உச்சரித்தபடி விழுந்து கிடந்தான் கௌதம்.
நிதானமிழந்து சோஃபாவில் விழுந்து நித்திரையில் ஆழ்ந்து விட்ட கௌதம்மை சிலநொடிகள் வெறித்து நோக்கியவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. வீட்டின் பின்புறத் தோட்டத்திற்கு சென்று அங்கே கால்கள் மடிந்து விழுந்து ‘ஓ’வெனக் கதறியழுகலானாள்.
“கடவுளே.. நான் என்னப் பாவம் செஞ்சேன்?! எனக்கு ஏன் இந்த தண்டனை?!” என அழுதவளுக்கு புரிந்தது தான் அழுவதால் எதுவும் மாறப் போவதில்லையென.
அதன்பின் ஆர்த்திக்கு வேலைப்பளுவைக் கூட்டிக் கொண்டே போயினர் மந்தாகினியும் அவரது மகள்களும். ஆனால் எதிர்த்து எதுவும் பேசாமல் அமைதியாக அவையனைத்தையும் செய்து முடித்து விட்டு செல்லும் அவளைப் பார்த்து, “இவ மனுஷி தானா.. இல்ல ரோபோவா?!” என வியக்காமல் இருக்க இவர்களாலேயே முடியவில்லை.
ஆர்த்தி அத்தனை வேலைகளையும் மனம் கோணாமல் செய்வதற்கும் ஒரு முக்கியக் காரணம் இருந்தது. அதிக வேலை செய்யும் காரணத்தால் துக்கம் மறந்து படுத்தவுடன் உறங்குவது எளிதாக இருந்தது அவளுக்கு.
So sad