ATM Tamil Romantic Novels

காதல் கருவாயா!!!

அத்தியாயம் 5

 

“உன் சம்பளப் பணமெங்கே..?!” என முதன்முறையாக கேள்வி கேட்டவாறு கையை அவள்முன் நீட்டி கேட்டவனை வியந்து பார்த்தாள் ஆர்த்தி. தன் கைப்பையிலிருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டு விளக்கமளிக்க முன்வந்தவளை கைநீட்டித் தடுத்தவாறு பணத்தை விரல்களால் எண்ணினான்.

 

அதை விநோதமாக பார்த்தவளை கண்டுகொள்ளாமல் பணத்தை எண்ணிவிட்டு, “ஐநூறு ரூபா குறையுது. எங்க?” என இறுகியக் குரலில் கேட்டவனிடம் பயந்தவாறு, “அது எங்க ஆபிஸ்ல ஒருத்தரோட வீட்ல ஃபங்க்ஷன். அதுனால..” என தன் விளக்கத்தை கூற முன்வந்தவளை பேச விடாமல்,

 

“யூ ப்ளடி ச்சீட்..” என ஆர்த்தியை ஓங்கி அறைந்திருந்தான் கௌதம். தன்னைக் கைநீட்டி அடித்த வீரியம் தாங்காமல் அவளது பூவிதழினோரம் உதிரம் எட்டிப் பார்த்திருந்தது. அவன் அடித்ததில் பொறிகலங்கி தடுமாறி நின்றவளின் முன் ஆங்காரமாக வந்து நின்றனர் மந்தாகினியும் அவரது மகள்களும்.

 

“ஏன்டி.. நீ ஊர் மேய்ஞ்ச்சுட்டு வந்து மிச்சமீதியக் கொடுக்குறதுக்கு நாங்க என்ன பிச்சக்காரங்களா?! இல்ல.. உன்னை மாதிரி ஓடுகாலிக்கு இடங்கொடுக்குறதுக்கு சத்திரம் சாவடி ஏதும் நடத்துறோமா? இன்னும் நாலு சேர்த்துப் போடுடா” என தன் மகனை ஊக்குவித்தவாறு தூபம் போட்டார் மந்தாகினி.

 

அதனையேற்று, ஆர்த்தியின் கன்னத்தில் பளார் பளாரென அறைந்தபடி, “எவ்ளோ தைரியமிருந்தா எவனோ ஒருத்தன் கையப் புடிச்சுட்டு உக்காந்துருப்ப. அவ்ளோ திமிராகிடுச்சா..?” என சரமாரியாக அவளைத் தாக்கத் தொடங்கினான் கௌதம்.

 

பணம் செலவழித்ததற்காகத் தான் தன்னை கஷ்டப்படுத்துகின்றனர் எனப் பொறுமையாக இருந்தவளின் செவிகளில் கௌதமின் ‘எவனோ ஒருத்தன் கையப் புடிச்சுட்டு உக்காந்துருப்ப’ என்ற வார்த்தையில் கோபம் வந்தது.

 

“என்ன சொல்றீங்க?” என முதன்முறையாக உடல் விறைத்து நேர்ப்பார்வையூடன் நிமிர்ந்து நின்றவாறு கேள்வி கேட்டவளின் கம்பீரம் பிடிக்காது, ‘தப்பு செஞ்சுட்டு அதுல கெத்து வேறக் கேக்குதா?’ என்ற ஆத்திரத்தில் தன் சட்டைப்பையிலிருந்த ஃபோனிலிருந்த புகைப்படத்தை எடுத்துக் காட்டினான் கௌதம்.

 

அதில் ஆர்த்தி ஒருவனின் கையை ஆறுதலாக அழுத்திக் கொண்டு புன்னகைப்பது போல பதிவாகியிருந்தது. ஆனால் அதைக் கண்டதும் நொடியில் புரிந்து போனது ஆர்த்திக்கு அது யாரென.

 

“இது யார்ன்னு தெரியாம வீணா என்மேல பழிபோடாதீங்க..” என குரல் உயர்த்திப் பேசியவளை மேற்கொண்டு பேச விடாமல், “கையும் களவுமா மாட்டுனதுக்கப்புறமும் என்ன திண்ணக்கம் உனக்கு?!” என மீண்டும் அவளை அறையத் துவங்கினான் கௌதம்.

 

மேலும் மேலும் அவளைப் பற்றி அவதூறாகப் பேசி கௌதமை உசுப்பேற்றிக் கொண்டிருந்தனர் மந்தாகினியும் அவளது மகள்களும். நடந்தக் கொடுமைகளை எல்லாம் கண்ணிருந்தும் குருடனாகப் பார்த்தபடி அமைதியாக இருந்தார் கீர்த்திவர்மன்.

 

ஒருக்கட்டத்தில் அவனது அடிகளின் வேதனைத் தாங்காமல் மயங்கி சரிந்தாள் ஆர்த்தி. அவள் அவ்வாறு விழுந்ததைக் கூடக் கணக்கிலெடுக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்று விட்டான் கௌதம்.

 

தாங்கள் நினைத்ததை நடத்தி விட்ட பெருமிதத்தில் வெற்றிப் புன்னகையுடன் அவரவர் வேலையைப் பார்க்கப் போனார்கள் ஆர்த்தியின் அருமை மாமியாரும் நாத்தனார்களும்.

 

எத்தனை மணிநேரம் அவ்வாறு மயங்கிக் கிடந்தாளோ அவளே அறியவில்லை. எவரும் வந்து உதவி செய்யவுமில்லை. அவளுக்கு என்ன நேர்ந்தது என கண்டுகொள்ளவுமில்லை. 

 

அதிர்ஷீடவசமாக தானாகவே  மெல்ல சுயம் திரும்பியவளின் தள்ளாட்டம் நிறைந்தக் கால்கள் எப்போதும் அவளது துயரத்தைத் துடைக்குமிடத்திற்கு அழைத்துச் சென்றது.

 

ஆனால் ஏனோ அன்று அவளது ஆறாத ரணத்திற்கு மருந்திட முடியவில்லை அவள் நேசிக்கும் வாசனை மிகுந்த தோட்டப்பூக்களால். கருமேகம் சூழ, மழைநீர்த்துளிகள் அவளது பூமேனியை நனைக்கத் துவங்கியது.

 

அதில் தன் முகத்திலும் கைகளிலும் பட்ட அடிகளில் கசிந்த உதிரத்தில் மழைநீர்த்துளியின் சாரல் பட்டதும் எரியத் துவங்கியது. அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை வாய்விட்டு கதறி அழத் தொடங்கினாள் ஆர்த்தி.

 

வெகுநேரம் அழுதவளின் கண்ணீரும் ஒருவிதத் தேம்பலுடன் ஒருக்கட்டத்தில் வத்தியிருந்த தருணத்தில், “அண்ணி..” என்ற அர்ஜூனின் குரலில் மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.

 

“த..தயவுசெஞ்சு போயிடுப்பா. இனிமே என்னைப் பாக்க வராத. அப்புறம் உங்களையும் என்னையும் கூட சேர்த்து வச்சு வெக்கமேயில்லாம இந்த வீட்டுல பேசுவாங்க தம்பி. போயிடுங்க..” எனக் குரல் வந்தத் திசை நோக்கித் திரும்பிக்கூட பாராமல் ஆர்த்தி கூறிக் கொண்டிருந்தபோது அவளது பாதத்தில் ஏதோ ஒன்று பற்தடம் பதித்து கடித்தது போல உணர, என்னவென்று குனிந்துப் பார்த்தவேளை,

 

அங்கே நல்ல பாம்மொன்று ஊர்ந்து செல்வதைக் கவனித்தவள் சட்டென ஏதோத் தோன்ற தன்னை ஏதோ ஒன்று கடித்ததாக நினைத்த இடத்தைத் தேடிப் பார்த்தாள். அங்கே இருப்பற்கள் பதிந்த தடம் தெரியவும் முதலில் நிம்மதிப் பெருமூச்சொன்றை வெளியிட்டவள் பின் என்ன நினைத்தாளோ, தன் சேலைத் தலைப்பையிலிருந்து சிறுபகுதியைக் கிழித்து அங்கே இறுக்கமாகக் கட்டினாள்.

 

“அண்ணி.. நான் செல்றதக் கொஞ்சம் கேளுங்க.. அண்ணன்..” என ஏதோக் கூற வந்தவனை அலட்சியம் செய்து, “உங்கண்ணனுக்கு இப்போ என்ன அர்ஜூன்?! என்கூட என்கையப் பிடிச்சுட்டு இருந்தது யார்ன்னு தெரிஞ்சு என்ன பண்ணப் போறார்..?! யாரோ ரோட்டுல போற ஒருத்தர் யார்கூட பேசுனா உங்கண்ணனுக்கு என்ன வந்தது?! இருந்தாலும் உனக்காக சொல்றேன். அது என்னோட கூடப் பொறந்த பொறப்பு. என்னோட அண்ணன் மதுரன். அதைக் கூட கேவலமா ஃபோட்டோ எடுத்த ஜென்மம் நிச்சயமா நல்ல குடும்பத்துல பிறந்த பிறப்பா இருக்காது. அதை அப்படியே நம்புன உங்கண்ணனும்..” என பேச முனைந்தவளைத் தடுத்து, 

 

“அண்ணி.. அண்ணன் இங்க தான்..” என மீண்டும் ஆர்த்தியை எச்சரிக்க முயன்றான் அர்ஜூன். ஆனால் அதை எதையும் கண்டு கொள்ளும் நிலையில் ஆர்த்தி இருக்கவில்லை. “ஊர்மேயப் போனேன்னு சொன்னாரே உங்கண்ணன்.. நான் என்ன கிஃப்ட் வாங்குனேன் எதுக்காக வாங்குனேன்லாம் தெரிஞ்சுக்க விரும்பலைல்ல. என்னை அடிக்க அவர் யாரு..?! எந்த உரிமைல என்ன அடிச்சாரு..?! யாரோ ரோட்டுல போறவங்களோட பிச்சைக்காசு.. கூட இருந்தா என்ன.. குறைய இருந்தா உங்கண்ணனுக்கென்ன?! உங்க குடும்பத்துல யாருக்குமே…” எனக் கூறிக் கொண்டிருந்தவளின் நிலைத் தடுமாறுவதைக் கவனித்தவனோ,

 

அவளது அருகில் பாம்பொன்று ஓடுவதையும் அப்போது தான் கவனித்தான். “அய்யோ.. அண்ணா.. பாம்பு.. அண்ணி.. அண்ணி.. உங்களப் பாம்பு கடிச்சுருச்சா?” எனக் கூறியதும் அதுவரை அமைதியாக ஆர்த்தியின் வார்த்தை வீச்சுகளை கலங்கிய முகத்துடன் கவனித்துக் கொண்டிருந்தவன் பதறிக் கொண்டு ஓடிவந்து ஆர்த்தியைத் தாங்கிப் பிடிக்க முயன்றான் கௌதம்.

 

தன்னைத் தொட முயன்றவனின் கையை உதறி விட்டு, “ஏன்.. நான் செத்துட்டா உங்களுக்கு நல்லது தானே..?! ஜாதகப்படி உங்கள முதல்ல கல்யாணம் பண்ற பொண்ண பலி கொடுக்கத் தானே நீங்க என்னைக் கல்யாணம் பண்ணீங்க?! இப்போ என்னமோ நல்லவர் வேஷம் போடுறீங்க? ஒருவேளை போலீஸ் கேஸ்ஸாகிடும்ன்னு பயமோ?! கவலப்படாதீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல என் உயிர் போயிடும். அப்புறம் தான் நீங்க ஈஸியா உங்க லவ்வரக் கல்யாணம் பண்ணிக்க முடியும்” என நறுக்குத் தெறித்தாற் போலக் கேட்டு விட்டு விலகி நடக்க முற்பட்டாள்.

 

ஆனால் விஷத்தின் வீரியம் அவளை நடக்க விடாமல் தள்ளாட வைத்தது. ஓருக்கட்டத்தில் மயங்கி விழப் போனவளை ஆர்வத்துடன் பார்த்திருந்த மந்தாகினியையும் தன் தங்கைகளையும் உன்னிப்பாக கவனித்த கௌதமிற்கு அப்போது தான் ஆர்த்தி சொன்னது அனைத்தும் ஏதோப் புரிவது போல இருந்தது.

 

அந்த நிமிடத்தில் எதையும் ஆலோசிக்கத் தோன்றாது உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆர்த்தியை சிறப்பு நேர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தான் கௌதம்.

 

அவனது பின்னோடு ஓடிவந்தவர்கள் எரிச்சலுடன் முணங்கத் தொடங்கினர். “ச்சை.. நல்லதாப் போச்சுன்னு சாக விடுவானா… அதைவிட்டுட்டு இப்டி ஆஸ்பத்திரில சேர்த்து நம்ம உயிர வாங்குறான்..” என மந்தாகினி கூறுவதைக் கவனித்தவனோ, ஆர்த்தியின் சிகிச்சைத் தொடங்கும் வரை அமைதியாக இருந்து விட்டு,

 

நேராக அவர்களிடம் திரும்பி, “என் ஜாதகத்துல முதல் தாரம் இறந்துருவாங்கன்னு இருக்காம்மா?” என கூர்மையான விழிகளுடன் கேட்க, அவனது கேள்வியில் மந்தாகினி, கீதா மற்றும் ஸ்வப்னா என அனைவரும் திணறிப் போயினர்.

 

“அது.. அதுவந்துப்பா..” என மந்தாகினி திணறியபோது, “ஆமான்டாப்பா. உனக்கு அப்டி ஒரு பிரச்சனை இருக்குறனால தான் ஸ்வப்னாவ விட்டுட்டு உங்கம்மா ஆர்த்திய கல்யாணம் பண்ணி வைக்க என்னை ஃபோர்ஸ் பண்ணுனா.” என கீர்த்திவர்மன் பகிரங்கமாக உண்மையைப் போட்டு உடைத்தார்.

 

அவரது பதிலில் அதுவரையிருந்த கம்பீரமனைத்தும் தொலைந்து போனாலும் கடைசி நம்பிக்கையாக, “ஸ்வப்னா.. உனக்கு தெரியாதில்லையா?” எனக் கேட்டவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் ஸ்வப்னா.

 

தலைகுனிந்தவாறே, “எனக்குத் தெரியும்.” என கம்மியக் குரலில் அவள் பதிலளித்ததும், அவள் மீதிருந்த நம்பிக்கைக் குறையத் தொடங்கியவனாய், அவளது கைவிரல்களை எடுத்துத் தன் தலையில் வைத்து,

 

“என்மேல சத்தியம். ஆர்த்தி கூட கைகோர்த்து இருந்தது மதுரனா?!” என கலங்கிய விழிகளுடன் ஸ்வப்னாவைக் கேட்டான் கௌதம். அவனது பார்வையில் தெரிந்த வீரியம் தாளாமல் தலைகுனிந்தவாறு ‘ஆம்’ என பதிலளித்தாள் ஸ்வப்னா.

 

மறுகணமே தன்மீது வைத்திருந்த அவனது உள்ளங்கையை எடுத்து இறுக்கப் பிடித்தவாறு, “ஆனா கௌதம்.. நான் அப்டி சொல்ல காரணம் இருக்கு..” என அவசர அவசரமாக சமாதானம் பேசியவளிடமிருந்து கையை உதறியவாறு,

 

“யூ.. டேமிட்.. எல்லாம் தெரிஞ்சு தான் என்கிட்ட தெரியாத மாதிரி நடிச்சு ஆர்த்தியப் பத்தி தப்புத் தப்பா சொன்னியா?!” என கடுங்கோபத்துடன் கௌதம் கேட்கவும் பயத்தில் எச்சில் விழுங்கியவாறு மந்தாகினியைப் பார்த்து கண்ணாலேயே உதவிக்கு அழைத்தாள் ஸ்வப்னா.

 

“டேய் கௌதம்.. எவளோ ஒருத்திக்காக ஸ்வப்னாவ அடிக்கப் போறியா நீ?!” என மந்தாகினி பதறியபடி கேட்கவும், அவளை அடிப்பதற்காக உயர்த்தியக் கையை அருவருப்புடன் முகத்தை சுருக்கியவாறு கீழே வீசினான். 

 

கண்களை இறுக்க மூடி தன் கோபத்தை அடக்க முயன்றவன், “தயவுசெஞ்சு இங்கருந்து எல்லாரும் போயிடுங்க. இல்லைன்னா பெத்தவங்க.. பெரியவங்கன்னு கூட பாக்க மாட்டேன்.” என இறுகியக்குரலில் அவன் கூறியதைக் கேட்டவர்களோ வாயடைத்துப் போய் ஒன்றும் பேசாமல் சென்றபோது, மந்தாகினி மட்டும்,

 

“இதப்பாரு கண்ணா. எல்லாம் உன் நல்லதுக்காக தான் பண்ணுனோம். தனியா இருந்து யோசிச்சா உனக்கே புரியும். ஸ்வப்னா தான் உனக்கு ஏத்தவன்றத மறந்துறாத..” என மெல்லியக் குரலில் அவனிடம் கூறியபோது சீற்றத்துடன் நிமிர்ந்து நோக்கியவனைக் கண்டு சற்று அரண்டவாறு வேகநடையுடன் கிளம்பி விட்டார்.

 

இரண்டு நாட்களாக மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிய ஆர்த்தியை சிரமப்பட்டு மீட்டனர் மருத்துவர்கள். அவளை நார்மல் வார்டுக்கு மாற்றியபோது கௌதமை அழைத்து பேசிய மருத்துவர், 

 

“மிஸ்டர் கௌதம். உண்மையச் சொல்லுங்க. அவுங்கள யாராச்சும் அடிச்சு துன்புறுத்துனாங்களா? அவுங்கக்கிட்டருந்து தான் காப்பாத்தி கூட்டிட்டு வந்தீங்களா?” என தீவிரப் பாவனையுடன் வினவ,

ஒன்றும் சொல்ல இயலாமல் திணறியவாறு தலைகுனிந்தான் கௌதம்.

 

“ஆக்சுவலி பிழைக்கணும்ன்ற ஆசையே அவுங்களுக்கு இல்ல. ரொம்ப போராட வேண்டியிருந்தது. உடம்புல பட்டக் காயமும் யாரோ அவுங்கள அடிச்சு துன்புறுத்துன மாதிரி தான் இருக்கு. அதுனால தான் கேட்டேன்.” என மீண்டும் ஒருமுறை மருத்துவர் கேட்டபோதும் வாய்திறவா ஊமையானான்.

 

சிலநொடிகள் அவனைக் கூர்மையுடன் பார்த்தவர் ஏதோப் புரிந்தது போல தலையசைத்து விட்டு, “ஆல்ரைட். ஒருவேளை அவுங்க செத்துருந்தா தானே பிரச்சனையாகிருக்கும். உங்க அதிர்ஷ்டம்.. பொழச்சிட்டாங்க. இன்னும் டூ டேய்ஸ் அவுங்க இங்க தான் இருக்கணும். அதுக்கப்புறம் நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்.” எனக் கூறி அனுப்பி வைத்தபோது வெளியே பதைபதைப்புடன் ஜனார்த்தன் வருவதைக் கவனித்தவனுக்கு, ‘இவருக்கு யார் தகவல் சொன்னது.?!’ என ஒருகணம் சர்வமும் ஆடிப் போனது.

 

“என்னாச்சு மாப்ள எம்பொண்ணுக்கு.. வீட்டுக்கு போனப்போ பாப்பாவ பாம்பு கடிச்சிருச்சு. ஆஸ்பத்திரில சேர்த்து சீரியஸா இருக்கான்னு உங்கம்மா சொன்னாங்களே.. என்னாச்சு மாப்ள.. அய்யோ.. அவளுக்காக இன்னிக்கு பரிசெல்லாம் வாங்கிட்டு வந்தேனே..” எனத் தன் கையில் வைத்திருந்த பட்டுசேலையைக் காட்டினார்.

 

என்னவென்று கௌதம் கேட்காமலேயே புரிந்து கொண்டான் ஆர்த்திக்கு அன்று தான் ஜனனநாளென்று. இரு நாட்களாக மயக்கத்தில் இருந்தவளைப் பார்க்கத் துடித்த ஜனார்த்தனை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து சென்றான் கௌதம்.

 

உச்சி முதல் பாதம் வரை வாடியக் கொடியாக தளர்ந்து கிடந்தவளைப் பார்த்தவரோ அதிர்ந்து போனார். “அய்யய்யோ.. அம்மா.. அம்மாடி.. உனக்கு பாம்பு கடிச்ச மாதிரி தெரியலியேடா..” என அவளது கைகளையும் கழுத்துப்பட்டையில் அழுத்தமாக பதிந்திருந்த இரத்தக்கட்டுகளைக் கவனித்தவர்,

 

“இந்தக் கொடுமையெல்லாம் நாங்க யாரும் வந்து பார்க்கக் கூடாதுன்னு தான் உன் வீட்டுக்கு எங்கள வரக்கூடாதுன்னு சொன்னியாம்மா?! ஏன் மாப்ள.. ஏன் இப்டி பண்ணீங்க? இதுவரைக்கும் அவள நாங்களே அடிச்சதில்லையே.” என கௌதம்மைப் பார்த்து கண்ணீர் சிந்தியவாறு ஜனார்த்தன் தழுதழுத்தக் குரலில் கேட்டதைக் கண்டு துடித்துப் போனவனாய்,

 

“மாமா.. எல்லாமே.. எல்லாமே ஒரு அவசரத்துல நடந்த விபத்து தான் மாமா.” எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே, “அப்..பா..” என்ற மெலிதான பலவீனக்குரல் ஆர்த்தியிடமிருந்து வந்தது கண்டு இருவரும் அவசர அவசரமாக திரும்பிப் பார்த்தனர்.

 

அத்தியாயம் 6

 

பால்வண்ணம் மாறாத தன் மகளின் கன்னத்தில் விழுந்த அடிகளினால் சிவந்து போனக் கன்னத்தை நடுங்கிய விரல்களுடன் தொட்டவாறு, “அம்மாடி.. வாடாம்மா.. நம்ம வீட்டுக்கு போயிடலாமா? அம்மாவ வரச் சொல்றேன்.” எனக் கண்ணீர் சிந்தியவாறு கன்னங்களைத் தடவினார் ஜனார்த்தன்.

 

தன் தந்தையின் பாசத்தில் உருகிய மனம் கனக்க, “வே..ணா..ம்பா.. அம்..மா..  இதெ..ல்லாம் பா..த்தா.. தாங்.. தாங்க மாட்..டா..ங்க.. நா..ன்.. வர்..றே..ன்பா. ஆனா.. இப்ப்..ப இல்..ல..” என்று கூறியவளின் கூற்று ஒன்றும் புரியாமல், 

 

“இப்ப இல்லைன்னா டிஸ்ச்சார்ஜ் ஆனதும் போவோமா?” என மீண்டும் வினவியவரிடம் கூர்ந்து கவனிக்குமளவிற்கு மெல்லியப் புன்னகைக் கீற்றை பரிசாகத் தந்தவள்,

 

“ஆராதனாக்கும் அண்ணாக்கும் கல்யாணம் ஆகட்டும்பா. அப்புறமா நான் வர்றேன்.” என தன் தந்தையிடம் ஆர்த்தி பதில் கூறியதைக் கேட்ட கௌதமிற்கு சுரீரென இருந்தது. 

 

ஏனெனில் பலமுறை அவன் ஏளனத்துடன் அவள் பணத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் தான் அவனது வீட்டில் தங்கியிருப்பதாக நினைத்திருக்கிறான். ஆனால் இப்படி ஓரு கூற்றிற்காக மட்டுமே ஆர்த்தி எல்லாவித சித்திரவதைகளையும் தாங்கிக் கொள்ள முடிவெடுத்திருப்பாளென எண்ணத் தவறி விட்டான்.

 

பொதுவாகவே மூத்ததாய் பிறக்கும் பெண்கள் பலரின் எண்ணப்போக்கு இது. நமக்கு பிறகு தம்பி தங்கைகள் இருக்கின்றனரே என்ற எண்ணத்தில் புகுந்த வீட்டில் பல்லைக் கடித்துக் கொண்டு வாழ்ந்து விடுவர். இன்றும் இப்படி ஒரு எண்ணம் நம் சமூகத்தில் உலவி வருவது நடுத்தர வர்க்கத்தினரின் எழுதப்படாத விதி என்றே கூறலாம்.

 

இப்படியொரு பதில் தன் மகளிடமிருந்து வருமென யூகிக்காதவரும் நெஞ்சுருகிப் போனார் ஜனார்த்தன். தன் மகளின் பதிலில் சத்தமில்லாமல் கண்ணில் நீர் சிந்தியவரோ சிறுவயதிலிருந்து தன் மகள் வளர்ந்த விதம் நினைவுக்கு வந்தது. ‘எப்படி வளர்ந்தப் பெண்..! இன்று இப்படி சக்கையாக கிடக்கின்றாளே..’ என வேதனையுடன் கௌதமிடம் திரும்பாமல்,

 

“இன்னிக்கு என்ன நாள்ன்னு தெரியுமா மாப்ள.?! ஏம்பொண்ணுக்கு பிறந்தநாள். அவளுக்கு வாழ்த்து சொல்ல வந்த எனக்கு நீங்க கருமாதி செய்திய தான் சொல்லக் காத்திருந்தீங்களா?!” என நொந்து வினவியவரை நேருக்கு நேர் பார்க்கக் கௌதமிற்கு தயக்கமாக இருந்தது.

 

தன் குடும்ப அங்கத்தினர் செய்த தவறுகளுக்கு அவனும் என்னவென்று விளக்கமளிப்பான்?! அவன் செய்த தவறு ஒன்றே தான். தன் குடும்பத்தினர் கூறியது உண்மையென நம்பி ஆர்த்தியை அடித்தது மட்டும் தானென அவன் நம்பினான். ஆனால் ஆர்த்தியிடம் கேட்டாலல்லவோ உண்மையில் அவன் என்ன தவறிழைத்தானென தெரியும்!!

 

முகம் கன்ற நின்றவனை ஏறெடுத்துப் பார்த்த ஜனார்த்தனிடம், “மாமா. இது மாதிரி தவறு இனி நடக்காதுன்னு நான் உங்களுக்கு வாக்கு கொடுக்குறேன். தயவுசெஞ்சு வீட்ல யார்க்கிட்டயும் சொல்ல வேணாம். வீணாக் கவலைப்படுவாங்க. உங்கப் பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது.” என பலவாறு சமாதானம் செய்து வீட்டிற்கு செல்ல மாட்டேன் என அடம்பிடித்தவரை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தான் கௌதம்.

 

தளர்ந்த விழிகளுடன் படுத்திருந்த ஆர்த்தியிடம் ஏதோக் கூற வந்தவனைக் கண்டுகொள்ளாமல் கண்களை மெல்ல மூடிக் கொண்டாள். அவள் உறங்கவில்லையென அறிந்தவன், “சாரி ஆர்த்தி..” எனக் கூறிவிட்டு சிலநொடிகள் அவளது பதிலுக்காக காத்திருந்தான்.

 

தனது பதிலறியாமல் செல்ல மாட்டானென அறிந்தவளுக்கு கௌதம் அங்கு நிற்பது எரிச்சலைத் தந்தது. கண்களைத் திறவாமல், “அடிச்சுக் கொன்னதுக்கப்புறம் பிரேததுக்கிட்ட மன்னிப்பு கேட்டு என்ன புண்ணியம்?!” என உணர்ச்சியற்றக் குரலில் கூறிவிட்டு ஒருசாய்த்து படுத்துவிட்டாள் ஆர்த்தி.

 

அவளது பதில் இதுபோலத் தான் இருக்குமென அறிந்திருந்தாலும் வலிக்கத் தான் செய்தது அவனுக்கு. அன்றிரவு அர்ஜூனை மருத்துவமனையில் இருந்து பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு வீடு வந்தவனின் மனம் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது.

 

நேராக தன் தாயிடம் வந்து நின்று, “எனக்கு ஜாதகத்துல கண்டம்ன்னு சொல்லி ஏன் ஆர்த்திய கல்யாணம் பண்ணி வச்சீங்க?! இப்டி கொடுமைப்படுத்தி கொல்றதுக்காகவா?! ஒருவேளை கீதாக்கு இப்டி நடந்தா அதை ஒத்துக்குவீங்களா?” என கடுகடுவென எரிமலைச் சாரல்களை அள்ளி வீசத் தொடங்கினான் கௌதம்.

 

“அத்தான்.. எல்லாம் நம்ம நல்லதுக்காக தான் அத்தை அப்டி பண்ணுனாங்க. அவுங்கள ஏன் திட்றீங்க? எங்களப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லி விட்டாளாக்கும் அவ?!” என மந்தாகினியின் அருகில் வந்து துணையாக நின்றபடி கேட்டாள் ஸ்வப்னா.

 

“நம்ம நல்லதுக்காகவா….?” என ஒற்றைப் புருவத்தை ஏற்றியிறக்கி ஸ்வப்னாவை அருவெருப்புடன் ஒரு பார்வை பார்த்தான். அதில் கூனிக் குறுகிப் போனவளோ, “யாராயிருந்தாலும் தன்னோட உயிரப் பத்தியும் கொஞ்சம் யோசிக்கத் தானே செய்வாங்க..?! அதைத் தான் நானும் பண்ணேன்.” என அப்போதும் துடுக்காக பதிலளித்தவளைக் கண்டு வெறுத்து விட்டது அவனுக்கு.

 

கைமுஷ்டியை இறுக்க மூடி தன் ஆத்திரத்தை அடக்கியவன், “இதோப் பாரு. இத்தனை நாளா நான் நேசிச்ச பொண்ணா நீ இருந்தனால என் கை ஓங்காம இருக்கு. அதை ஓங்க வச்சிடாத. இனிமே என் லைஃப்ல நீ இல்ல.. வெளிய போ..” என கண்ணில் அனலுடன் கௌதம் கூறியதைக் கேட்ட ஸ்வப்னாவிற்கு மெய்பதறிப் போனது.

 

‘அய்யோ.. என்னோட ஆசையெல்லாம் அவ்ளோ தானா?! ஏதாவது செய்யணுமே… எவ்ளோ சொத்து…!! இதையெல்லாம் நான் இழக்கணுமா?! நோ…’ என அவசர அவசரமாக யோசித்தவள், தன் முகத்தைப் பரிதாபமாக மாற்றிக் கொண்டு,

 

“கௌதம்… நீங்களா இப்டி பேசுறீங்க? உங்கக் கூட வாழ்நாள் முழுக்க சந்தோஷமா வாழணும்ன்னு தானே நான் இருக்க வேண்டிய உரிமையான இடத்தைக் கூட விட்டுக் கொடுத்துட்டு உங்களுக்காக காத்திருந்தேன். நீங்களே இப்போ வெளியப் போக சொன்னா நான் எங்கப் போவேன்?!” என குரல் தழுதழுக்க அழ ஆரம்பித்தாள் ஸ்வப்னா.

 

அவள் அவ்வாறு அழுவதை கண்ணெடுக்காமல் கௌதம் பார்த்திருந்ததை அறியாமல், ‘தன்னைப் பார்க்கிறானா?’ என ஓரக்கண்ணால் கள்ளப்பார்வைப் பார்த்து சற்றே அதிர்ந்து போய் மீண்டும் முகபாவனைகளை சரிசெய்தபடி மந்தாகினியிடம் திரும்பி,

 

“பாருங்கத்தை.. அத்தான் என்கிட்ட எவ்ளோ ரஃப்பா பிஹேவ் பண்றாருன்னு.. நீங்க சொல்லுங்க நான் செஞ்சது தப்பா அத்தை?!” என சலுகையுடன் மந்தாகினியின் தோளில் சாய்ந்து கொண்டு கெஞ்ச ஆரம்பித்தாள் ஸ்வப்னா.

 

ஸ்வப்னாவிற்காக பரிந்து கொண்டு பேச தன் மகனிடம் திரும்பியவர் கௌதமின் முகத்தைப் பார்த்து கப்பென வாயை மூடிக் கொண்டார் மந்தாகினி. ஏனெனில் அப்போதும் கௌதமின் கண்பார்வை கழுகின் பார்வைவீச்சை விடத் தீவிரமாய் அங்கே நடக்கும் நிகழ்வுகளில் பதிந்திருந்தது.

 

இப்படிப்பட்ட மனநிலையில் தன் மகனை ஒருசில சமயங்களில் மட்டுமே மந்தாகினி கண்டிருக்கிறார். ஆகையால், “கௌதம்.. நீ  ஃப்ரஷ்ஷாகிட்டு ஆஸ்பிட்டல் போப்பா.” என்பதோடு அவனிடம் பேச்சை நிறுத்திக் கொண்டவர்,

 

தனது அண்ணன் மகளிடம் திரும்பி, “இதப் பாரு ஸ்வப்னா. நடந்ததை யாராலும் மாத்த முடியாது. இப்போதைக்கு இந்தப் பேச்சை விட்டுட்டு வீட்டுக்கு போ. எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.” என அப்போதைக்கு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முயன்று கொண்டிருந்தத் தருணம்,

 

“அதெப்டி மந்தாகினி.. உன் வீட்டு மருமகளப் பத்தி யார் என்ன சொன்னாலும் உனக்கு தப்பாத் தெரியாது. ஆனா உன் மகள்களோ, அண்ணன் மகளோ எந்தத் தப்பு பண்ணாலும் யாரும் எதுவும் சொல்லிடக் கூடாது. இது எந்த ஊரு நியாயம்.?!” என யாரையும் நகல விடாமல் கிடுக்குப் பிடி போட்டு நிறுத்தினார் கீர்த்திவர்மன்.

 

‘அப்பாடி.. தப்பிச்சா போதும்..’ என நினைத்து அனைவரும் நத்தைப் போல கழன்று கொள்ள முயற்சித்தபோது கீர்த்திவர்மனின் இந்தக் கேள்வி அனைவரையுமே கட்டிப் போட்டு நிறுத்தியது.

 

“எப்பவும் நியூஸ் பேப்பரும் கையுமா தானே இருப்பாரு.. இப்ப என்ன கேடு வந்ததோ தெரியல.. ச்சே..” என மெல்ல முணங்கியவாறே கண்ணாலேயே தன் கணவனை மிரட்டி அடக்க முயன்றார் மந்தாகினி.

 

எதற்கும் அஞ்சாமல் தன் மனைவியை எதிர்நோக்கி நின்றவரை அன்று எட்டாம் அதிசயமாக பார்த்தார் மந்தாகினி. அதன் காரணத்தையும் உடனே அவரால் யூகிக்க முடிந்தது. கீர்த்திவர்மனின் அருகில் வந்து நின்ற கௌதமைப் பார்த்ததும் அங்கிருந்த அனைவரும் எச்சில் கூட்டி விழுங்கினர்.

 

கணகம்பீரமாக தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்ற கௌதம், தன்னை அங்கே ஆர்த்தியின் முன் கூனிக் குறுகி நிற்க வைத்தவர்கள் இவர்கள் தானென்ற கோபக்கனல் எரிமலைக்கங்குத் துகள்களாக சிதறி வெடித்துக் கொண்டிருந்தது.

 

சில நிமிட மௌன இடைவெளிக்கு பிறகு, அங்கிருந்து மெல்ல தனதறைக்கு நகன்ற கௌதமைப் பார்த்து மெல்ல அனைவரும் ஆசுவாசமாவதற்குள், “இனிமே ஸ்வப்னாக்கும் எனக்கும் கல்யாணம்ன்னு யாராவது பேசுனா அது தான் என்னை இந்த வீட்டுல கடைசியா பாக்குற நாளா இருக்கும்.” என தன் கடினக்குரலில் கூறிவிட்டு அனைவரையும் திரும்பி முறைத்து விட்டு சென்று விட்டான் கௌதம்.

 

அவனது முடிவில் தன் ஆசைகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக சென்றத் துக்கத்தில் மந்தாகினியை ஆற்றாமையுடன் பார்த்து அழுத ஸ்வப்னாவை ஆறுதல் சொல்லி வீட்டிற்கு அனுப்பி வைத்தார் மந்தாகினி.

 

வேகமாகத் தன் கணவரிடம் வந்து, “என்ன நெனச்சுட்டிருக்கீங்க உங்க மனசுல? ஸ்வப்னாக்கு தான் கௌதம்முன்னு முன்னாடியே பேசி வச்சதெல்லாம் மறந்து போச்சா?! இப்டி என்னை எதிர்த்து பேசுனா நான் என்ன செய்வேன்னு தெரியும்ல?” எனக் கண்ணை உருட்டி மிரட்டிய தன் மனைவியை சாவதானமாக தன் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டியவாறு மென்மையாகப் புன்னகைத்தார் கீர்த்திவர்மன்.

 

“ஓ… நல்லாத் தெரியுமே. தற்கொலை தானே. முடிஞ்சா முயற்சி பண்ணு. கௌதம்க்கு எல்லாம் தெரியணும்ன்னு தான் நான் இவ்ளோ நாள் பொறுமையா இருந்தேன். இப்ப அவனே சொன்னதுக்கப்புறம் நீ எப்டி பல்டி அடிப்பன்னும் எனக்கு ரொம்ப நல்லாவேத் தெரியும் மந்தாகினி டார்லிங்.” என அதேப் புன்னகையுடன் கூறிவிட்டு திரும்பியவர் என்ன நினைத்தாரோ, 

 

மீண்டும் தன் மனைவியிடம் திரும்பிய வேகத்தில் மந்தாகினியின் கன்னம் பழுக்குமளவிற்கு இடி போன்ற அறை ஒன்று விழுந்தது கண்டு கீதா முதற்கொண்டு மந்தாகினியும் அரண்டு போய் நின்றனர்.

 

‘தன்னை அடித்தது தன் கணவர் தானா?!’ என்ற அதிர்ச்சியில் சிலை போல நின்றவரிடம் நடந்து வந்து, “இது என் மருமகள் ஆர்த்திக்காக..” எனக் கூறிவிட்டு விறுவிறுவென சென்று விட்டார் கீர்த்திவர்மன்.

 

ஆனால் கௌதம் மற்றும் அவனது குடும்பத்தாரின், எதைப் பற்றிய உணர்ச்சியலைகளின் தாக்கமும் இல்லாமல் அங்கே சலனமில்லாத நீரோடையாக உறங்கிக் கொண்டிருந்தாள் ஆர்த்தி. அதன் காரணம் தான் எவருக்கும் புரியாத புதிராக இருந்தது.

 

அக்காரணங்களின் நியாயப் பேராழியை எவ்வாறு சமாளித்து அவளின் மனதை வெல்வானோ கௌதம்?! தனதறையின் குளியலறையில் ஷவரின் முன் நின்றிருந்த கௌதமின் மனமோ முழுக்க முழுக்க ஆர்த்தியின் பக்கம் சாய்ந்திருந்தது.

3 thoughts on “காதல் கருவாயா!!!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top