அத்தியாயம் 4
அடுத்த சில மாதங்களில் கௌதம்மின் தங்கை கீதாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறத் துவங்கின. அங்கேயும் அதிக வேலைகள் வாங்கப்பட்டு துன்புறுத்தப்பட்டாள் ஆர்த்தி.
“என்ன மந்தாகினி.. ஏதாச்சும் உன் மருமகக் கிட்ட விஷேசம் உண்டா?!” என ஆர்த்தியைக் கண்ஜாடை செய்து சொந்தக்காரப் பெண்மணிக் கேட்க, இது தான் சாக்கென்று ஆர்த்தியை அவருக்கு குளிர்பானம் வழங்கச் சொல்லி அழைத்து விட்டு, அவளது முன்னிலையிலேயே,
“ஹூம்.. என்னப் பண்றது?! நாங்களும் பாத்துப் பாத்து தான் என் பையனுக்கு கட்டி வச்சோம். அது காய்க்காத பட்ட மரமா போகும்ன்னு நாங்க கனவா கண்டோம்..?!” என மந்தாகினி நறுக்கென கூறிவிட்டு விலகிச் சென்றதைக் கண்டவளுக்கு கண்ணீர் பீறிக் கொண்டு வந்தது.
சொந்தங்களின் ஏளனச்சிரிப்பிற்கு ஆளானவளைத் தன் கூர்மையான விழிகளால் கண்காணித்துக் கொண்டு அமைதியாகத் தான் இருந்தான் கௌதம். ‘இது அத்தனைக்கும் நீதான் காரணம்..’ என மீண்டும் தன் மனம் தன்னை குற்றம் சாட்ட,
‘எதற்கும் நான் பொறுப்பல்ல. தனக்காக போராடுற தைரியம் கூட அவளுக்கு இல்லாமப் போனதுக்கு நான் என்ன செய்ய முடியும்?!’ என வீண் வாக்குவாதம் செய்து தன் மனதை அடக்கினான் கௌதம்.
கீர்த்திவர்மன் மற்றும் மந்தாகினி தம்பதிகளிடம் இல்லாத செல்வமே இல்லையென்றாலும் ஆர்த்தியின் சீர்வரிசையில் கை வைத்தார் மந்தாகினி. மனம் பொறுக்காமல் நேராக கௌதமிடம் சென்று முறையிட்டாள் ஆர்த்தி.
“என் சீர்வரிசையத் தொட வேணாம்ன்னு கொஞ்சம் வந்து சொல்லுங்க.. ப்ளீஸ்..” எனக் கெஞ்சியவளிடம், சாவதானமாக நடந்து வந்து முன்னின்று, “அது உன்னோட பொருள். நீதான் கேக்கணும். யாரோ ரோட்டுல போறவங்களுக்காக நான் ஏன் கேக்கணும்?” என கேட்டு விட்டு சென்றவனின் மீதிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் கிட்டத்தட்ட குறைந்து போனது ஆர்த்திக்கு.
அதன்பின் முழுநேர மௌனியாக வலம் வந்தவளை எரிச்சலுடன் நோக்கிக் கொண்டிருந்த லலிதா, “என்ன மந்தாகினி?! இவ சாவேனாங்கிறாளே.. அப்போ ஜோசியர் சொன்னது பொய்யா?! என் பொண்ணு வாழ்க்கை அவ்ளோ தானா?” என கண்ணைக் கசக்கிக்கொண்டே கேட்க,
“அட இருங்கண்ணி.. நானும் எவ்வளவோ வேலை சொல்லி அவளை எதிர்த்து பேச வைக்கத் தான் பாக்குறேன். ஆனா வாயே திறக்க மாட்டேங்குறா. என்னிக்காவது சிக்காமலா போயிடுவா?! எதுக்கும் நாம ஜோசியரப் போயி பாத்துட்டு வருவோம்.” என சமாதானப்படுத்தி ஜோதிடரைப் பார்க்கச் சென்றனர் இருவரும்.
சோர்ந்து போய் தோட்டத்தில் அமர்ந்திருந்தவளிடம், “அண்ணி..” என்ற மென்மையான குரல் கேட்க, இவ்வீட்டிற்கு வந்த நாளிலிருந்து தன்னை இத்தனை மரியாதையாகக் கூப்பிடுவது அர்ஜூன் மாத்திரமே என்றறிந்திருந்தவளோ, தன் சோர்வையும் மீறிய புன்னகையை பரிசளித்தவாறு நிமிர்ந்து பார்த்தாள் ஆர்த்தி.
“இந்தாங்கண்ணி..” எனக் கையில் ஜூஸ்ஸுடன் வந்து நின்றவனைப் பார்த்து பதறியவாறு, “அய்யய்யோ.. நீ கொண்டு வந்ததை யாராவது பாத்தா தப்பாகிடும்பா. தயவுசெஞ்சு போயிடு..” என தயங்கித் தயங்கி சுற்றிலும் நோட்டமிட்டபடி கூறியவளைப் பரிதாபமாக பார்த்து விட்டு,
“முக்கியமான ஆளுங்கல்லாம் வெளிய போயிட்டாங்க அண்ணி. அதுனால தைரியமா சாப்பிடுங்க..” எனக் கூற ஜூஸ்ஸை ஆர்த்தியின் கையில் திணித்தபடி அங்கேயிருந்த கல்லில் அமர்ந்து கொண்டான்.
ஜூஸ் கிளாஸ்ஸை வாங்கித் தயங்கியபடி வாய் வைத்தவள் தான்!! பசி வேகத்தில் கடகடவென குடித்து விட்டு நிமிர்வதைப் பார்த்து சிரித்து விட்டான் அர்ஜூன். தன் கொழுந்தன் தன்னைப் பார்த்து சிரிப்பதை உணர்ந்தவளுக்கோ தன்னிலை எண்ணி முதலில் சிரிப்பு வந்தாலும் அதன்பின் வேதனையே முகத்தில் மிஞ்சியது.
“ஏன் அண்ணி.. நான் ஒன்னு கேக்கலாமா? நீங்க ஏன் இங்க இவ்ளோ கொடுமையையும் பொறுத்துட்டு இருக்கீங்கன்னு எனக்கு புரியவேயில்ல. அண்ணனும் உங்களுக்கு நடக்குற அநியாயத்தக் கேக்குற மாதிரி தெரியலியே.. அப்புறமும் ஏன்?” எனப் புரியாமல் கேட்டவனிடம் விரக்திப் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு,
“அதெல்லாம் தெரிஞ்சுக்க உனக்கு வயசு பத்தாதேம்மா. இப்பதைக்கு நீ படிக்குறதுல மட்டும் கவனம் செலுத்து. சரியா?!” எனக் கூறிவிட்டு கிளாஸ்ஸை அவனிடம் நீட்டி நன்றி தெரிவித்தாள் ஆர்த்தி.
“அய்யோ அண்ணி.. இதெல்லாம் நீங்க ஆர்டர் போட்டு என்கிட்ட கேக்க வேண்டிய விஷயம். இதுக்கெதுக்கு தேங்க்ஸ்லாம்..?! வர்றேன்ண்ணி..” எனக் கூறிவிட்டு எழுந்து சென்று விட்டான்.
இவையனைத்தையும் மாடியில் நின்று கௌதம் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். ‘அவள இவ்ளோ கொடுமைபடுத்தியும் வெளியப் போகாம இருக்காளே.. என்மேல அவ்ளோ அக்கறையா?!’ என யோசித்தவன் அவளது செயல்பாடுகளை ஆரம்பத்திலிருந்து எண்ணிப் பார்த்து வியந்தான்.
ஏனெனில் அவனுக்கு பிடித்தது என்ன.. பிடிக்காதது என்ன என்பது முதற்கொண்டு தன்விரல் நுனியில் வைத்திருந்தாள் ஆர்த்தி. அவனுக்காக பார்த்து பார்த்து சமைத்த உணவுகளைக் குறையும் சொல்லாமல் நிறையும் சொல்லாமல் சாப்பிட்டு விட்டு எழுந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தாலும் மாதத்தில் அந்த ‘மூன்று’ நாட்கள் ஆர்த்தி சமைப்பதில்லை என்பதை உணவின் மூலம் தெரிந்து கொள்ளுமளவிற்கு அவளது கைமணத்திற்கு வசமாகியிருந்தான் கௌதம்.
அவனது ஒவ்வொரு அசைவையும் உணர்ந்து அவனது பார்வைக்காக ஏங்கி பலநாட்கள் பார்த்து நின்றவளை ஒருநொடி கூட தான் சட்டை செய்ததில்லை என்பது நினைவுக்கு வந்தது.
அவனது மனமே அப்போது அவனிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்கத் தொடங்கியது. ‘இத்தனை நாட்கள்ல ஸ்வப்னாவ நீ எத்தனை தடவை நினைச்ச..?!’ எனக் கேட்டதற்கு மறுநொடியே அவனிடமிருந்து பதில் வந்தது ‘அவளை எண்ணாத நாளில்லையென.”
‘அதே போல் ஸ்வப்னாவும் உன்னை நினைத்திருப்பாளா?’ எனக் கேட்ட மனதிடம், ‘கண்டிப்பா.. என்னைப் பத்தி தான் நினைச்சுட்டு இருந்துருப்பா..’ என அவன் கூறிய பதிலில் சமாதானமடைய மறுத்து, ‘ஆர்த்தியைப் போல் ஸ்வப்னா உன்னை அறிந்து வைத்திருக்கிறாளா?’ என்றக் கேள்வியில் தடுமாறினான் கௌதம்.
பதில் சொல்ல முடியாமல் திணறியவன், ‘அதெல்லாம் அவளுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும்.’ என சப்பைக்கட்டு கட்டி ஆர்த்தி பற்றிய சிந்தனைக்கு அதோடு முற்றுப்புள்ளி வைத்தான்.
ஆனால் அவனது மனம் கேட்டக் கேள்விகளுக்கு விடை கிடைப்பது போன்ற நிகழ்வொன்று அடுத்து வந்த சில நாட்களில் நிகழ்ந்தது. அதுவரை அவ்வீட்டிற்கு தலைகாட்டாத ஸ்வப்னா திடீர் விஜயம் செய்தாள்.
மிகவும் பாங்கான புடவையொன்றை அணிந்து கொண்டு குடும்ப குத்து விளக்கு போல வந்தவளை எங்கோ பார்த்த நினைவு ஆர்த்திக்கு வந்தாலும் சட்டென நியாபகம் வர மறுத்தது.
ஸ்வப்னாவைக் கண்டதும் கௌதமின் விழிகளில் அதுநாள் வரை உணர்ச்சியற்ற விழிகளுடன் வலம் வந்த கௌதமின் பார்வையில் பளிச்சிடலைக் கவனித்த ஆர்த்திக்கு வேதனை எல்லை மீறிச் சென்றது.
அதேநேரத்தில் ஸ்வப்னாவைக் கண்டபோது அவளது கண்களில் கர்வமும் பெருமிதமும் நிறைந்திருந்ததைக் கண்டு தன்னிலை எண்ணி கூனிக்குறுகிப் போனாள்.
வராத விருந்தாளி வந்தது போல விருந்து ஏற்பாடுகள் தடபுடலென நடப்பதை வேடிக்கைப் பார்த்தவாறு தானும் உதவி செய்து கொண்டிருந்தாள் ஆர்த்தி. சாப்பிடும் நேரம் வர, அனைவருக்கும் பரிமாறும் போது கௌதமிற்கு பிடித்ததாக ஆர்த்தி எடுத்து வைப்பதைக் கவனித்த ஸ்வப்னா,
“நீங்க இருங்க ஆர்த்தி. எங்கத்தானுக்கு என்ன பிடிக்கும்ன்னு எனக்கு தான் நல்லாத் தெரியும்.” என தன் கை போன போக்கில் கௌதமிற்கு பரிமாறினாள் ஸ்வப்னா.
ஆனால் அங்கிருந்த அனைவருக்கும் தெரியுமோ தெரியாதோ.. கௌதமிற்கும் ஆர்த்திக்கும் புரிந்தது ஸ்வப்னா வீம்புக்கென்று பரிமாறினாளே தவிர அக்கறையோடு பரிமாறவில்லை என.
ஆர்த்தியின் முன் எதையும் வெளியே காட்டக் கூடாது என்ற வீம்பு வரவே, ஸ்வப்னா வைத்த உணவு வகைகளை வேறுவழியில்லாமல் சாப்பிட்டு முடித்தான் கௌதம்.
ஜாடைமாடையாக குத்திப் பேசினாலும் அனைத்து வேலைகளையும் முகம் கோணாமல் செய்யும் ஆர்த்தியைக் கண்டு ஸ்வப்னாவாலும் வியக்காமல் இருக்க முடியவில்லை.
ஒருநாள் அந்தப் பொறுமைக்கும் முடிவு வந்தது. மதிய வேளையில் தன்னை யாரோ பார்க்க வந்துள்ளதாக செக்யூரிட்டி வந்து கூறிவிட்டு செல்ல, யாரென்று பார்க்க சென்றாள் ஆர்த்தி.
அங்கே தர்மசங்கடமான முகபாவனையுடன் அமரந்திருந்தான் மதுரன். தனது அண்ணனைக் கண்ட சந்தோஷத்தில் பிரகாசமடைந்த ஆர்த்தி, “அடடா.. என்னப்பா.. காத்து எங்க பக்கமும் அடிக்குது போலயே..” எனக் கேலிக் குரலில் வரவேற்றாள்.
அதைக் கண்டுகொள்ளாமல், “நீ பேசாத. அப்பாக்கிட்ட சொன்னியாமே. உன் வீட்டுக்கு யாரும் வரக்கூடாதுன்னு. ஏன்.. எங்களை ஏதும் தரக்குறைவா பேசிடுவாங்கன்னு பயமா?” என பட்டென உண்மையை உடைக்க முயன்றவனை சமாளிக்கும் விதம் அறியாமல் சற்று அசட்டு புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு,
“அதெல்லாம் ஒன்னுமில்ல. நானும் அவரும் உங்க வீட்டுக்கு வராம யாரும் அங்க வர வேணாம்ன்னு சொல்லிருந்தேன். அது ஒன்னும் தப்பில்லயே.” என மழுப்பியவளைக் கண்டு சலித்தக் குரலில்,
“சரி விடு. உன் விருப்பத்த என்னிக்கு நாங்க மறுத்துருக்கோம்?! ஆனா.. ஆனா.. எனக்கு நீ இப்போ ஒரு ஹெல்ப் பண்ணணுமே ஆர்த்தி.” எனத் தயங்கியபடியே கேட்டவனைப் புரியாமல் பார்த்தாள் ஆர்த்தி.
“இந்தா.. இதப் பாரு..” என தனது கையில் வைத்திருந்த கவர் ஒன்றை அவளிடம் அளித்தான் மதுரன். அதை வாங்கி பிரித்து படித்தவளின் முகம் பூவாக மலர்ந்தது. “ஹேய்.. கங்கிராட்ஸ்ண்ணா.. உனக்கு யூஎஸ்ல ஆஃபர் வந்துருக்கு. இத சொல்றதுக்கா இவ்ளோ தயங்குன..?!” என தன் அண்ணனின் கைப்பிடித்து வாழ்த்து தெரிவித்தவள், அவனை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த காஃபி ஷாப்பில் ட்ரீட் வைத்தாள் ஆர்த்தி.
அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாலும், மதுரனின் முகத்தில் சிறு கவலைக் கலந்த வருத்தமிருப்பதை உணர்ந்தவள், “என்னண்ணா.. எதுவா இருந்தாலும் சொல்லு..” என ஆதரவுடன் அவனது கைவிரல் பற்றி அழுத்திக் கொண்டிருந்ததை மதுரனின் பின்னாலிருந்து ஒருக் கேமிரா அழகாக உள்வாங்கிக் கொண்டது.
“அதுவந்து ஆர்த்தி.. அப்பாக்கிட்ட ஊருக்கு போற அளவுக்கு ட்ரான்ஸ் போர்ட் செலவுக்கு பணமில்லன்னு சொன்னாரு. அதான் உன்கிட்ட ஹெல்ப் கேக்கலாம்ன்னு..” எனக் கூறிவிட்டு தயங்கியபடி தன் வார்த்தைகளை நிறுத்தினான் மதுரன்.
மதுரன் எதைக் குறிப்பிட்டு உதவி கோருகின்றான் என்பதைப் புரிந்தவளோ அமைதியானாள். சில நொடிகள் யோசித்து விட்டு, “எனக்கு இரண்டு நாள் டைம் கொடுண்ணா. நான் அவர்க்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்ண்ணா.. நீ கவலப்படாத.” என நம்பிக்கையூட்டி மதுரனை அனுப்பி வைத்தாள் ஆர்த்தி.
தனது அண்ணனின் பணப்பிரச்சனை யோசனையிலேயே இருந்தவளிடம் வளைகாப்பு பத்திரிக்கையை கொண்டு வந்து நீட்டினார் அவ்வங்கியில் பணிபுரியும் முத்துராமலிங்கம் சார்.
“அம்மா.. என் பொண்ணுக்கு வளைகாப்பு வச்சுருக்கோம். அவசியம் நீங்க வந்துடணும்.” எனக் கூறி இன்முகத்துடன் அழைத்தவளிடம், “கண்டிப்பா சார். நான் வந்துடுறேன்.” எனக் கூறியவள் பத்திரிகையைப் பிரித்து பார்த்து விட்டு,
“என்னங்க சார்.. இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கா?” என சலுகையுடன் முறைத்தவளை சமாதானம் செய்யும் பொருட்டு, “இல்லம்மா. ரொம்ப விமர்சையா நான் பண்ணலம்மா. இதுவே திடீர்னு ஏற்பாடான விஷயம் தான். தப்பா எடுத்துக்காதீங்கம்மா.” என த
பணிந்து போனவரிடம்,
“அய்யோ.. சும்மா தான் கேட்டேன் சார். கண்டிப்பா வந்துடுறேன்.” எனக் கூறியவளுக்கொரு யோசனை வந்தது. அன்று சம்பள நாள். ஆகையால் தன் பணமனைத்தையும் தனது மாமியாரிடம் கொடுத்து விட்டால் இந்த சுபநிகழ்ச்சிக்கு பரிசு வாங்க இயலாது என எண்ணி, முதலில் பரிசு வாங்கி விட்டு பின் வீட்டில் விளக்கம் அளித்துக் கொள்ளலாம் என எண்ணி அன்றே வங்கியிலிருந்த சகத் தோழர் தோழுகளுடன் கிஃப்ட் ஷாப்பிற்கு சென்றாள் ஆர்த்தி.
அங்கே தன் நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டே தன் பரிசுப் பொருளைத் தேர்வு செய்து வாங்கி விட்டு வீட்டிற்கு வந்தவளை அவளது அறைக்கு செல்ல விடாமல் நடுஹாலிலேயே நிறுத்தினான் கௌதம்.
தன்னையே வெறித்துப் பார்த்தவாறு கோபக்கனல் பொங்க விறைத்து நின்றவனை என்னவென்று புரியாமல் திகைத்துப் பார்த்தாள் ஆர்த்தி.
Super sis ❤️