ATM Tamil Romantic Novels

காதல் கருவாயா07

அத்தியாயம் 7

 

ஆஸ்பிட்டலில் இருந்தபோதும் சரி.. வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆகி வந்தபோதும் சரி.. அர்ஜூன் மற்றும் கீர்த்திவர்மனின் கேள்விகளுக்கும் உபசரனைகளுக்கும் மெல்லியக்கீற்று புன்னகையே ஆர்த்தியிடமிருந்து பதிலாக வந்தது.

 

கௌதம் முன்பை விட தன்னிடம் மிகவும் தணிந்து போவது புரிந்தாலும் அதைக் கண்டு கொள்ளும் மனநிலையில் அவள் அப்போது இல்லை. மாறாக ஏதோ யோசனையில் மட்டுமே அவளது புருவங்கள் சுருங்கியிருந்தன.

 

மாலைநேரத்தில் ஒருநாள் அவளது யோசனை முகத்தைக் கண்டு புன்சிரிப்புடன் அவளது அருகில் வந்தவன், மெல்ல ஒற்றை விரலால் ஆர்த்தியின் புருவத்தை மென்மையாக நீவி விட்டான்.

 

தன்னை யாரோத் தொடுவது கண்டு சுதாரித்து நிமிர்ந்து பார்த்தவளின் முகம் கடுத்தது கண்டு, “ரொம்ப போட்டு யோசிக்கக் கூடாதுன்னு டாக்டர் அட்வைஸ். சோ…” என தனது தோள்பட்டைகளை ஸ்டைலாகத் தூக்கி கண்கள் குளிர புன்னகைத்ததைக் கண்டவளுக்கு கனவுலகில் இருப்பது போல இருந்தது.

 

ஏனெனில் ‘இத்தனை இதமாக கௌதமால் பேச இயலுமா?’ என்று வியப்பு மிகுந்து குழம்பியவள் சட்டென சுதாரித்தாள். ‘இப்படி நடித்தால் நடந்தவை அனைத்தும் நடக்கவில்லை என ஆகிவிடுமோ?!’ என்ற வீராப்பு மேலோங்க, அவனது கைவிரல்களைத் தன்னிடமிருந்து தட்டி விட்டாள்.

 

“ரோட்டுல போறவங்க வர்றவங்கள எல்லாம்  என்னைத் தொட விட முடியாது.” என முகத்திலடித்தாற் போல பதிலளித்து விட்டு எழுந்து சென்று விட்டாள் ஆர்த்தி. சுருக்கென வலித்தாலும் தான் எய்த கத்தி தான் தன்னை வந்து தாக்கியுள்ளது என அறிந்து அதைத் தாங்கிக் கொண்டான் கௌதம்.

 

அர்ஜூன் மற்றும் கீர்த்திவர்மன் தவிர்த்து மற்ற எவரையும் ஒருபொருட்டாகக் கூட அவள் ஏறெடுத்து பார்த்து மதித்தாளில்லை. ஆர்த்தி வீடு வந்த ஒருவாரமாக அடக்கி வாசித்த மந்தாகினி மற்றும் அவரது பிள்ளைகள் மீண்டும் தங்களது வேலையை மெல்ல மெல்ல காட்டத் துவங்கினர்.

 

மீண்டும் அவளது அனுமதியில்லாமல் அவளது உடையை எடுக்க கீதாவும் அவளது சகோதரி மாலாவும் வந்தபோது, ஆர்த்தி தனது உடையை அயர்ன் செய்து கொண்டிருந்தாள்.

 

இவ்விருவரின் வருகைத் தெரிந்தும் அமைதியாக இருந்தவளை அலட்சியமாக பார்த்து விட்டு, அவள் அயர்ன் செய்து வைத்திருந்த துணியில் கை வைத்த கீதா, “அய்யோ… அம்மா…” என அலறி விட்டாள்.

 

என்னவென்று பார்த்தால் அவளது கையில் சூடு வைக்கப்பட்டிருந்தது. ஆம்.. ஆர்த்தியின் உடையில் கீதா கைவைக்க சென்றபோது தனது கையிலிருந்த அயர்ன் பாக்ஸ்ஸைக் கொண்டு அழுத்தமாக ஆர்த்தி கீதாவின் கைகளில் பதித்தெடுத்திருந்தாள்.

 

வலியில் துடித்த கீதா மேற்கொண்டு பேச முயன்றபோது, தன் கையில் வைத்திருந்த அயர்ன் பாக்ஸ்ஸைத் தூக்கிக் காட்டி ஆட்டியபடியே, “இன்னொரு தடவ நீ என் டிரஸ்ஸ எடுக்குறதப் பாத்தேன்னு வையி.. இப்போதைக்கு கையில தான் மார்க் வச்சுருக்கேன். அப்புறம் உன் மூஞ்சில கோலம் போட்ருவேன்.” என கீதாவின் முகத்தினருகே கொண்டு வந்து பயமுறுத்திக் கூறினாள் ஆர்த்தி.

 

அவளது இச்செயலை எதிர்பார்க்காதவர்களோ பேச்சிழந்து நின்றது ஒருசில கணங்களே. எனினும் கீதா ஆவேசமாக கத்தி அங்கிருந்து நடந்தபடியே, “உன்னை என்னப் பண்றேன்னு பாரு..” எனக் கொக்கரித்துக் கொண்டு நிற்கையில்,

 

“ஷட் அப் கீதா..” என்ற கௌதமின் குரல் கேட்டு விக்கித்துப் போனாள் கீதா. ‘அண்ணா இன்னும் ஆபிஸ் போலயா?! வெளிய வண்டி போறத பாத்துட்டு தானே வந்தோம்..’ என ஒன்றும் புரியாமல் கண்ணிமைகளை வேகமாக சிமிட்டியவாறே பயந்தத் தோரணையில் நின்றதைக் கண்ட ஆர்த்திக்கு பாவமாக இருந்தாலும் தன் வேலையை மீண்டும் கவனிக்கத் தொடங்கினாள்.

 

கௌதமின் அறையில் அலுவலக அறையும் இருந்தது. அந்த அறையின் கதவு டபுள் வியுவ் மிரர்ரால் செய்யப்பட்டது என்பது ஆர்த்தியும் அறியாத விஷயமே. நடந்த அனைத்து செயல்களையும் ஆர்த்தியறியாது கண்காணித்தவனுக்கு ஆர்த்தியின் செயல் அதிர்ச்சியாக இருந்தாலும், அச்செயல் பலநாட்களாக தொடர்ந்த செயலுக்கான தண்டனை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

 

தனதறையிலிருந்து வெளியே வந்தவனிடம் சட்டென கண்ணீர் மல்க ஓடிவந்து தன் சூடு பட்ட கையைக் காண்பித்தாள் கீதா. “பாருண்ணா.. இவ என் கைய எப்டி சுட்டு வச்சுருக்கான்னு.. அன்னிக்கு நீ அடிச்சது மறந்து போச்சு போல.. இன்னும் நாலு சேர்த்து வச்சா தான் இவள்லாம் சரிபட்டு வருவா..” என சலுகையாகக் கூறியபடி ஆர்த்தியை அடிக்க கௌதமை மறைமுகமாக தூண்டி விட்டாள் கீதா.

 

ஆனால் தனது தமயன் தன்னையே இமையகலாது பார்த்திருந்தது கண்டு சற்றே திகிலாக தோன்ற ஆரம்பித்தது அவளுக்கு. “நீங்க ரெண்டு பேரும் எதுக்கு வந்தீங்க இங்க?” என்று கேட்ட கௌதமின் கேள்வியில் பதிலளிக்க இயலாமல் திணறிப் போனார்கள் கீதாவும் மாலாவும்.

 

“அது.. அது.. வந்துண்ணா.. ஆ.. உன்னைப் பாக்க நான் வந்தோம். நீ எங்கன்னு கேட்டதுக்கு தான் இவ இப்டி பண்ணிட்டா..” என தன்னிடம் பொய்யுரைத்தவளை கண்கள் இடுங்கப் பார்த்தான் கௌதம்.

 

“ஒருநிமிஷம் என்கூட வர்றீங்களாடா?” என அவர்கள் இருவரையும் அழைத்தபோது கீதா மட்டும் உள்ளே வந்தாள். அவளை தனது அலுவலக அறையின் உட்புறம் அழைத்துச் சென்று நின்று பார்க்க சொன்னான். ஏனென்று புரியாமல் சென்று அங்கிருந்த கதவின் வழியாகப் பார்த்தவளுக்கு தூக்கி வாரி போட்டது.

 

வெளியில் நடந்த அனைத்தும் அப்பட்டமாக உள்ளேத் தெரியுமளவிற்கு அக்கண்ணாடிக் கதவு வடிவமைக்கப்பட்டிருந்தது. கௌதமின் அலுவலக மேஜையும் வெளியில் நடப்பதை தெள்ளத்தெளிவாக பார்க்கும் வண்ணமே அமைக்கப்பட்டிருந்தது. 

 

கீதாவின் அதிர்ந்த முகத்தைக் கண்டு கண்ணாலேயே என்னவென்று கேட்ட மாலாவிடம், “அய்யய்யோ.. போச்சு.. போச்சு.. அண்ணா எல்லாத்தையும் பாத்துட்டாரு. செத்தோம்..” என முணங்கியவாறு மெல்ல வெளியே வந்தாள் கீதா.

 

மெல்ல நமுட்டுப் புன்னகையை உதிர்த்தவாறு, “இந்தக் கதவு வழியா இப்டிப்பட்ட காட்சியையும் பாக்குற நாள் வரும்ன்னு நான் கனவுலயும் நெனச்சு பாக்கலப்பா..” என ஆர்த்தி காதுபடக் கூறிவிட்டு தன் தங்கைகளிடம் திரும்பும் அவனது முகம் கடுமையாக மாறியிருந்தது.

 

“சோ.. நான் இல்லாதப்போ நீங்க இவ்ளோ நாளா இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ணிருக்கீங்க.. அப்போ என் வளர்ப்பு தப்பா போச்சு. ரைட்..?” என தனது கைவிரல்களை லாவகமாக தன் பேன்ட் பாக்கெட்டில் விட்டவாறு கேட்டுக் கொண்டு நின்றவனை அடிபட்ட பார்வை பார்த்து நின்றனர் கீதாவும் மாலாவும்.

 

“அய்யோ.. அப்டில்லாம் ஒன்னுமில்லண்ணா. இப்டில்லாம் பண்ணுனா இவங்க வீட்ட விட்டு போயிடுவாங்கன்னு..” என மேற்கொண்டு சொல்ல முடியாமல் தயங்கியவளுக்கு எடுத்துக் கொடுக்கும் விதமாக,

 

அயர்ன் செய்தவாறே, “மந்தாகினி மேடமும் ஸ்வப்னா மேடமும் சொல்லிருப்பாங்க.” என யாரிடமோ கூறுவது போலக் கூறிய ஆர்த்தியை முறைத்துப் பார்த்தனர் கீதாவும் மாலாவும்.

 

ஆனாலும் அவள் கூறியதும் உண்மையே. ‘ஓரு மாதக் காலத்தில் சாகவில்லையென்றால்?!’ என்ற சந்தேகமும் இருந்தக் காரணத்தால் இவ்வாறு சித்திரவதை செய்தால் தொல்லைத் தாங்காமல் ஓடிவிடுவாள் என யூகித்து செய்யச் சொல்லியிருந்தார்கள் மந்தாகினி, ஸ்வப்னா மற்றும் லலிதா.

 

மாலா மெல்ல பயந்து கொண்டே, “உனக்கும் இவங்களப் பிடிக்காது. ஸ்வப்னா அண்ணியக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நீயும் ஹேப்பியா இருப்பன்னு நெனச்சு தான்..” எனக் கூறிக் கொண்டு வந்தவள் தன் சகோதரனின் முகம் மாறுவதைக் கண்டு மேற்கொண்டு கூறாமல் வாக்கியத்தை மென்று முழுங்கியவாறு தலைகுனிந்தாள்.

 

தன் மீதுள்ள கண்மூடித்தனமான பாசத்தினாலும் பெரியவர்களின் சொல் கேட்டு தவறு செய்தக் காரணத்தால் அவர்களைத் தண்டிக்க மனமில்லாமல், 

 

“இதப் பாருங்கடாமா. நீங்க ரெண்டு பேரும் ஓன்னும் சின்னக் குழந்தைங்க இல்ல. யார் சொன்னாலும் அப்டியே செய்யுறதுக்கு. ஒரு விஷயம் தப்புன்னு தெரிஞ்சா அதை செய்ய மாட்டோம்ன்னு சொல்ற தைரியம் கூட உங்கக்கிட்ட இல்லையா?” என கனிவுடன் கௌதம் தன் தங்கைகளிடம் கேட்டதும் கண்ணீர் மல்க தன் அண்ணனிடம் வேகமாக வந்து தஞ்சமடைந்தனர்.

 

“சாரிண்ணா. இனிமே இப்டி பண்ண மாட்டோம். சாரிண்ணா..” என அழுதபடியே கூறியவர்களைப் பார்த்து, “சாரி சொல்ல வேண்டியது என்கிட்ட இல்ல..” எனக் கூறியவனின் பார்வை வீச்சு சென்ற இடத்தை விழிகளால் தொடர்ந்தவர்களுக்கு புரிந்தது.

 

அதுவரை நடந்த பேச்சு வார்த்தைகளைக் கவனித்தவளுக்கு கௌதம் உதிர்த்த முதல் வார்த்தைகளே நெருடிக் கொண்டிருந்தது. ஆனால் அவளை மேற்கொண்டு யோசிக்க விடாமல் அவளது கைகளை உரிமையாகப் பற்றியபடி,

 

“அண்ணி.. சாரியண்ணி.. தெரியாம தப்பு பண்ணிட்டோம். ப்ளீஸ் அண்ணி.. சாரியண்ணி..” என இருவரும் மாறி மாறி கெஞ்சத் தொடங்கினர். ஆர்த்திக்கு அப்போதும் இருவரையும் நம்பத் தோன்றவில்லை என்றாலும் பொதுப்படையானக் குரலில்,

 

“தப்பு செய்யலைன்னா மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே நமக்கு வராது. ஆனா என் விஷயத்துல தலையிடாம இருக்குறது உங்களுக்கு தான் நல்லது.” என உணர்ச்சி மரத்த வார்த்தைகளை உதிர்த்து விட்டு அவ்விடம் விட்டு நீங்கி குளியலறையில் தஞ்சம் புகுந்தாள் ஆர்த்தி.

 

அப்போதும் கௌதமின் குறும்புப் புன்னகையை ஓரக்கண்ணால் கண்டவளுக்கு அப்போதும் ஒன்றும் புரியவில்லை. அவள் சென்றதும் கீதாவின் காதைப் பிடித்து செல்லமாகத் திருகியவாறு, 

 

“ஆமா.. உனக்கு கல்யாணமாகிருச்சு. நியாபகமிருக்கா?! இல்லையா?! அங்கருந்து மாப்பிள்ளையோட புலம்பல சமாளிக்க முடியாம இப்ப தான் உன் மாமியார் கூப்பிட்டு சொல்றாங்க. அம்மா வீட்டுல இருந்து ஓபி அடிச்ச வரைக்கும் போதும். முதல்ல உன் வீட்டப் பாத்து கிளம்பு..” என தன் தங்கையைக் கண்டித்து அனுப்பினான். 

 

அதோடு தனது இன்னோரு தங்கையான மாலாவிடமும் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்து விட்டு தன்னுடைய குளியலறை நோக்கி சென்று விட்டான் கௌதம். 

 

‘அவன் ஏன் அப்படி சொன்னான்.?!’ என்ற யோசனையிலேயே தன் குளியலை முடித்து, துணிகளைத் துவைத்து விட்டு வாளியைத் தூக்கிக் கொண்டு வந்தவள் துணி காயப்போடும் க்ளிப் டப்பாவை எடுத்தாள்.

 

அவளது கைகள் ஈரமாகவும் சோப்பு நுரை சரியாக கழுவப்படாமல் இருந்ததால் வழுவழுப்பாகவும் இருந்தது. ஆகையால் டப்பா நழுவி கீழே விழுந்து துணி காயப்போடும்போது அது நழுவாமல் இருக்க உதவியாக இருக்கும் க்ளிப்புகள் சிதறி அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்தது.

 

அதில் இரண்டு க்ளிப்புகள் கௌதமின் அலுவலக அறையின் கதவு அடிவாரயிடுக்கு வழியாக உள்ளே சென்றது. அதைக் கண்டவள் எரிச்சலுடன் துணிவாளியைக் கீழே வைத்து விட்டு க்ளிப்புகளை எடுக்கத் துவங்கினாள்.

 

பிறகு தயக்கத்துடன் கௌதமின் அலுவலக அறையை நோக்கி சென்றவள் தைரியத்தை வரவழைத்து கொண்டு உள்நுழைந்தாள். சுற்றிலும் தரையில் நோட்டமிட்டவள் அவனது டேபிளின் கீழே இரண்டு க்ளிப்புகள் கிடந்ததைக் கண்டு ஆசுவாசமாக அதை எடுக்க டேபிளின் அடியில் கால்கள் மடித்து அமர்ந்த வேளை,

 

அறைக் கதவு திறக்கும் ஓசைக் கேட்கவும் அவசர அவசரமாக க்ளிப்புகளை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள். அறைக்கதவைத் திறக்க முற்பட்ட கௌதமின் மொபைல் ரீங்காரமிட அதையெடுக்கச் சென்றவனின் கோலமோ குளியலறையிலிருந்து வெளிவந்தது போல இருந்தது.

 

அதுவும் அந்த அறைக்கதவின் ஊடாக பார்த்ததும் அவளது நிலையெண்ணி பேரதிர்ச்சியாக இருந்தது. அப்படி என்ன நடந்திருக்குமென்று அவள் திகைத்து நின்றாள்?!

2 thoughts on “காதல் கருவாயா07”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top