ATM Tamil Romantic Novels

காதல் கருவாயா!!!08

அத்தியாயம் 8

 

ஆர்த்திக்கு அதுநாள் வரை அக்கண்ணாடியை அவள் பயன்படுத்திய விதம் நினைவுக்கு வந்து அவளது வெண்ணிறமேனியை செக்கச்சிவந்த அந்தி வானமாக மாற்றிக் கொண்டிருந்தது.

 

அக்கண்ணாடியில் அவசர ஒப்பனை செய்தது, யாரையேனும் திட்டுவது என்றால் அக்காண்ணாடியைப் பார்த்து திட்டுவது என நினைவுக்கு அந்த அத்தனையும் இப்போது ‘இதெல்லாவற்றையும் கௌதம் பார்த்திருப்பானோ..?!’ என்ற ஐயமே மேலோங்கி இருந்தது.

 

‘ஆனால் இவையனைத்திற்கும் சற்று முன் அவன் கூறிய பதில் ஒப்பவில்லையே!’ என யோசித்தபோது தான் கௌதம் இடுப்பில் டவலுடன் நடந்து செல்வது நினைவுக்கு வந்தது.

 

கடந்த பலநாட்களில் மார்பில் டவலுடன் இக்கண்ணாடி முன் நின்றது நினைவுக்கு வந்ததும் ஆர்த்திக்கு தன் மூச்சே நின்றுவிடும் போல இருக்க, மேனியோ கூசிச் சிவந்திருந்தது. ‘ஆக… பயபுள்ள இதைத் தான் மீன் பண்ணி சொன்னானா?!’ என யூகித்தவளுக்கு மேற்கொண்டு அங்கே நிற்கும் தைரியமில்லாமல் போனது.

 

வேகமாக அவ்வறையை விட்டு வெளியே வந்தபோது சரியாக கௌதமின் மார்போடு மோதி நின்றாள் ஆர்த்தி. ஆண்மைக்கே உரிய வாசத்துடன் அவனது பிரத்தியேக வாசனைத் திரவியங்களின் வாசனையும் கலந்து ஆரத்தியின் பெண்மையையும் பொறுமையையும் வெகுவாக சோதித்தது.

 

அவனது அலுவலக அறைக் கதவின் இரகசியத்தை அவள் அறிந்து கொண்டாள் என்பதை உணர்ந்தவனின் வலிமையான உதடுகள் குறும்புப் புன்னகையுடன் விரிந்தன. மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு அவளையே இமையாமல் பார்த்திருக்க, ஆர்த்தியின் இமைகளோ தந்தியடித்தன. 

 

மெல்லியக் குரலில் கௌதம் சிரிப்பதைக் கேட்டவளுக்கு நெருப்புக் கோழி போல் தலையை பூமிக்குள் புதைத்துக் கொள்ளலாமா என்பது போன்ற இன்ப அவஸ்தை ஏற்பட்டது.

 

தன்னிடம் நெருக்கமாக நின்றிருந்த தன் மனைவியின் வதனத்தைத் தொட எழுந்த கௌதமின் கையைப் பார்த்தவளுக்கு ஏனோ மனம் அதை ஒப்பவில்லை. மெல்ல அவனிடமிருந்து விலகி,

 

“என் க்ளிப்ஸ் எடுக்க தான் உங்க ரூம்க்குள்ள போனேன். மத்தபடி ஒன்னுமில்ல.” என மெதுவாக முணங்கி விட்டு செல்ல முற்பட்டவளிடம், மெல்ல தன் வலக்கரம் நீட்டி தடுத்து,

 

“என்கிட்ட இனிமே நீ எதுக்கும் பர்மிஷன் கேட்க வேண்டிய அவசியமில்ல. தாராளமா நீ இந்த வீட்டுல எங்க வேணுன்னாலும் போகலாம். வரலாம்.” எனக் கூறிவிட்டு அவளுக்கு முன் அவன் விலகிச் செல்வதை வினோதமாகப் பார்த்தாள் ஆர்த்தி.

 

மெல்ல இளகிய மனதை அடக்கியவாறு தன் வேலைகளைப் பார்க்க சென்று விட்டாள். வெளியில் செல்லத் தயாராகி காலை உணவிற்காக சாப்பிட வந்தவளை கூர்ந்து கவனித்த மந்தாகினி, 

 

“நில்லு.. இன்னிக்குரிய வேலை எதுவும் செய்யாம மஹாராணிக்கு சோறு கேட்குதோ?! ஹும்.. சாப்பாடெல்லாம் வேலை செஞ்சா தான் கிடைக்கும்.” என மிடுக்காகக் கூறிவிட்டு சென்றவரை அமைதியாகப் பார்த்தவள், ஒன்றும் பேசாமல் சமையலறைக்குள் செல்வதைக் கர்வத்துடன் பார்த்தார் அவளது அருமை மாமியார்.

 

ஆர்த்தி உள்ளே சென்ற சிறிது நேரத்தில் வெளியே வந்தபோது பெரியத் தட்டில் காலை உணவு வகைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு சாப்பாட்டு மேஜையில் சாவதானமாக வந்து அமர்வதைக் கண்டவருக்கு கோபம் சுள்ளென வந்தது.

 

“உனக்கு என்னத் திமிர் இருந்தா நான் இவ்ளோ தூரம் சொல்லியும் சாப்புட உக்காருவ?! நல்லக் குடும்பத்துல பிறந்தப் பொண்ணுங்க செய்ற வேலையா இது?” என ஆங்காரமாகக் கத்தியபடி ஆர்த்தியின் அருகே வந்தவரிடம்,

 

நிதானமாகத் திரும்பி, “நல்லக் குடும்பத்துல பிறந்த பொண்ணுங்க, கூடப் பிறந்த அண்ணனோட சேர்த்து வச்சு அசிங்கமா பேசலாமாம். ஆனா என் புருஷன் வீட்டுல என்னோட சம்பாத்தியம் கலந்த சாப்பாட சாப்பிடுறது தப்பாமாம்..” என தலையை ஒருவாகாக சாய்த்து தீர்க்கமாகப் பார்த்தபடி கணீரெனப் பேசியவளின் வார்த்தைகளைக் கேட்டு விக்கித்துப் போய் நின்றார் மந்தாகினி.

 

அங்கே நின்றிருந்த வேலைக்காரப் பெண்களில் ஒருவரைப் பார்த்து, “நான் சாப்பிட்டுட்டு வர்றதுக்குள்ள சூடாப் பால் ரெடியாகிருக்கணும். புரியுதா?” எனக் கட்டளையிட்டு விட்டு மீண்டும் சாப்பிடத் தொடங்கினாள்.

 

‘இவளுக்கு இப்படியும் பேசத் தெரியுமா?!’ என்பது போல் அங்குள்ள வேலையாட்கள் முதற்கொண்டு ‘ஆ..’வெனப் பார்ப்பதை உணர்ந்த மந்தாகினி, 

 

“என்ன… வாய் ரொம்ப நீளுது?! மறுபடியும் என் மகன் கையால வெளுத்து வாங்குனா தான் அடங்குவ போல?” என எகத்தாளமாகக் கூறியவரை அலட்சியம் செய்து,

 

“குடும்பத்தோட கம்பி எண்ண ஆசைன்னா… உங்க நெஞ்சுல அவ்ளோ தில்லுருந்தா ட்ரைப் பண்ணி பாருங்க. எனக்கொன்னும் பிரச்சனையில்ல. முக்கிய அக்யூஸ்ட்டே நீங்க தான்னு கம்ப்ளைன்ட் பண்ணுவேன்.” என் ஆர்த்தி கூறியதும்,

 

 மந்தாகினியின் முகம் பயத்தில் வெளுப்பதைக் கண்டவளுக்கு குதூகலமாக இருந்தாலும் ‘இப்படியெல்லாம் என்னைப் பேச வைத்து விட்டார்களே!’ என்ற வருத்தமே மேலோங்கி இருந்தது.

 

ஹாலில் நடக்கும் பேச்சு வார்த்தைகளை கவனித்தவாறு இறங்கி வந்த மகனிடம், முதலைக் கண்ணீர் வடித்தவாறே, “பாருடா கௌதம்.. பெரியவங்கக் கிட்ட மரியாதையில்லாம எவ்ளோ அசிங்கமா திமிரா பேசுறான்னு. அன்னிக்கு அடிச்சது பத்தல போல.. இன்னும் நல்லா மண்டைல உறைக்கிற மாதிரி நாலு வச்சா தான் இவ திருந்துவா.” என முந்தானையால் மூக்கை சிந்தியபடி கூறியவரை நிமிர்ந்து பாராமல்,

 

“நாம எப்டி பேசுனோம். எப்டி நடந்துக்கிட்டோம்ன்றத வச்சு தான் நமக்கும் மரியாதைக் கிடைக்கும்மா. அவ சொன்ன மாதிரி அவ சம்பளத்தையும் வாங்குறீங்க தானே.?! அப்போ அவளுக்கும் சாப்பிட உரிமையிருக்கு. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். ஆளாளுக்கு அடிக்க சொல்றதுக்கு நான் ஒன்னும் அடியாள் இல்ல. புரியுதா?” என கடைசி வார்த்தைகளை உதிர்க்கும் போது தன் தாயை நிமிர்ந்து கண்டனப் பார்வை பார்த்தான் கௌதம்.

 

தன் மகனின் கோபத்தைக் காணப் பிடிக்காமல், “அதுசரி.. ஆஸ்பிட்டல்ல இருந்து வந்ததுமே சொக்குபொடி போட்டு முந்தானைல முடிஞ்சு வச்சுக்கிட்டாளாக்கும். இனிமே நான் சொல்றது எங்க எடுபடப் போகுது.. இதெல்லாம் எத்தனை நாளைக்குன்னு நானும் பாக்குறேன். ஹும்..” என நொடிநேரத்தில் தன் அழுகையை நிறுத்திவிட்டு கத்திக் கொண்டே சென்றார் மந்தாகினி.

 

அங்கு நடக்கும் விஷயத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது போல வேகமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவளைக் கவனித்தபடி அங்கு வந்து சாப்பிட அமர்ந்த கீர்த்திவர்மன் மற்றும் அர்ஜூன், மாலா என குடும்பத்தார் அனைவருக்கும் வியப்பாக இருந்தது. 

 

அதே நேரத்தில் ஆர்த்தியை நினைத்து பெருமையாகவும் நிம்மதியாகவும் இருந்ததை கீர்த்திவர்மன் மற்றும் அர்ஜூன் இருவரின் உற்சாகம் கலந்த முகங்களே சொல்லியதைக் கண்ட ஆர்த்தி குறும்புடன் கண்ணிமைகளை மட்டும் சிமிட்டிக் காட்டிப் புன்னகைத்தாள்.

 

“இதே மாதிரி தைரியமா இரும்மா. அப்ப தான் இங்க எல்லாருமே சரிபட்டு வருவாங்க.” என ஓரக்கண்ணால் தன் மனைவியைப் பார்த்தபடி கூறியவரிடம் தயங்கியபடியே, 

 

“மாமா.. என் ஃப்ரண்ட்ஸ் வீட்டுல ஃபங்க்ஷன்னு வந்தா போட்டுக்க என்கிட்ட ஜுவெல்ஸ் எதுவும் இல்ல. சோ எனக்கு என்னோட நகையெல்லாம் வேணும். கொஞ்சம் எடுத்து தர்றீங்களா?” எனக் கேட்டதும் அங்கேயே காதை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்த மந்தாகினி,

 

வேகமாக ஓடிவந்து “அதெல்லாம் தர முடியாது. அதெதுக்கு உனக்கு??” எனப் பதறியபடி கேட்டவரிடம், “எனக்குன்னு போட்ட நகை தானே. அதெதுக்கு உங்கக்கிட்ட இருக்கணும்?! எனக்கு என் நகை வேணும். கொடுக்கலைன்னா நான் முதல்ல உங்கக்கிட்ட சொன்னதை கண்டிப்பா செய்வேன்.” என பல்லைக் கடித்தவாறு கூறியவளை,

 

அடக்கியே ஆக வேண்டும் என்ற வெறியுடன், “உன்னால என்னப் பண்ண முடியுமோ பண்ணிக்கோ. நான் தர மாட்டேன்.” என அழுத்தந்திருத்தமாக கத்திக் கூறியதில் எரிச்சலடைந்த அனைவருமே ஒரே நேரத்தில் அவரைத் திரும்பி பார்த்து முறைத்தனர்.

 

அப்போது தான் மந்தாகினி ஒன்றைக் கவனித்தார். தன் மகனின் பார்வையில் தன்மீது வெறுப்பு உமிழும் அபாயம் தெரிய சட்டென அமைதியாகி அவ்விடம் விட்டு நகல முயன்றார்.

 

“அம்மா.. ஒரு நிமிஷம்.. அவளோட ஜீவெல்ஸ் இப்போ இங்க வரணும்.” என்ற கௌதமின் அமைதியான குரல் கண்டு சற்றுக் கலக்கம் உண்டானது மந்தாகினிக்கு. 

 

ஏனெனில் மிதமிஞ்சிய ஆத்திரம் வந்தாலொழிய அவன் அக்குரலில் தன்னிடம் பேசியது இல்லை என்ற நினைவு வந்ததும் ஆர்த்தியை முறைத்துக் கொண்டே சென்று அவளது நகைகளை எடுத்து வந்து உள்ளூரப் பொருமியபடி அவளிடம் கொடுத்தார்.

 

அதனைக் கொடுக்கும் போது வெற்றி கண்டப் பெருமிதத்துடன் ஆர்த்தி கர்வமாய் தன்னைப் பார்த்து சிரிப்பாளென எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நகைகளை வாங்கும்போது அவளது முகம் முழுவதும் யோசனையிலேயே தான் இருந்ததே தவிர சிறுமுறுவல் கூட இதழில் தவழவில்லை.

 

மீண்டும் அவள் சமையலறை சென்றபோது வேலைக்காரப் பெண் கையில் பூஸ்ட் கலந்த பாலுடன் பவ்யமாக நிற்பதைக் கண்டு சிரிப்பு வந்தாலும் அதேக் கணீர் குரலில்,

 

“பால் காய்ச்ச மட்டும் தான் சொன்னேன். சொன்ன வேலைய செஞ்சா போதும். இந்தக் காக்கா பிடிக்கிற வேலையெல்லாம் பண்ண வேண்டாம்.” என அப்பெண்ணிடம் ஆர்த்தி கடிந்து பேசக் காரணமும் இருந்தது. 

 

அவ்வேலைக்காரப் பெண் தான் தன்னிடம் அத்துமீறிய அதட்டல்களையும் வேலைகளையும் ஏவி ஏளனம் செய்தவள் என்பதால் அவளுக்கும் ஒரு எச்சரிக்கையளித்தாள்.

 

அதன்பின் அவள் வெளியே செல்லக் கிளம்பியபோது, வாசலில் கௌதம் பைக்கில் வந்து நின்றதையும் அங்குள்ள வேலையாட்கள் ஆச்சர்யமாகப் பார்த்தனர். ஏனெனில் கௌதமிற்கு பைக் ஓட்டுவதில் பிரியம் என்றாலும் அதை குடும்பத்தாரும் பணிபுரிபோரும் பார்த்து வெகுநாட்களாகி விட்டது.

 

“எங்கப் போகணும்ன்னு சொல்லு. நான் கூட்டிட்டு போறேன்.” என அக்கறையுடன் கூறியவனிடம், “ஏன்.. நான் எங்கப் போறேன்.. யாரப் பாக்குறேன்னு வேவு பாக்க சொன்னாங்களா உங்கம்மா?! தேவையில்ல. எனக்கு தெரியும் என் பாதையெதுன்னு. தேங்க்யூ..” என்று சுள்ளெனக் கூறிவிட்டு அவனைக் கடந்து சென்று விடுவிடுவென நடந்தாள் ஆர்த்தி.

 

கோபத்துடன் தன்னிடம் கடிந்து விட்டு செல்லும் தன் மனைவியை முதலில் வருத்தம் தோய்ந்த முகத்துடன் பார்த்தாலும் பின் மெல்ல அவளைப் புரிந்த பாவனையுடன் புன்னகைத்தவாறே அலுவலகம் சென்று விட்டான் கௌதம்.

 

அன்று மாலையே தன் நகைகளில் சிலவற்றை அடகு வைத்து தனது தமயனுக்கு பணவுதவி வழங்கி விட்ட திருப்தியில் வீடு வந்தும் சேர்ந்தாள். அன்றிலிருந்து சில தினங்கள் எப்போதும் போல அமைதியாக சென்றது. 

 

வீட்டிற்கு கொரியர் மூலமாக சிலப் புத்தகங்களை வாங்கிக் கொண்டு இருந்தவளை எரிச்சலுடன் மந்தாகினி கண்டாரென்றால் மறுபுறம் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர் கீர்த்திவர்மன், அர்ஜூன்.

 

ஆனால் கௌதமால் எளிதில் அறிந்து கொள்ள முடிந்தது ஆர்த்தி வாங்கி வந்த புத்தகங்களின் மூலம் தனது எம்பிஏ படிப்பை தொடர விரும்புகிறாளென. ஆகையால் அவளுக்கென வெளிச்சம் வரும்படியான மேஜையிலிருந்து புத்தகங்கள் அடுக்கும் ரேக் வரை அனைத்து வசதிகளையும் அவளுக்காக ஏற்பாடு செய்து கொடுத்தான்.

 

தனக்காக பார்த்துப் பார்த்து அவன் செய்யும் உதவிகளை எடுத்தெறிந்து பேசி உதாசினப்படுத்தியவளிடம், “இதப் பாரு. அன்னிக்கு நடந்தது ஒரு மிஸ்ஸன்டர்ஸ்டான்டிங் தானே தவிர உன்னை வேணும்ன்னு நான் காயப்படுத்த முயற்சி செய்யல. அதுக்காக இதையெல்லாம் நீ அவாய்டு பண்ணணும்ன்னு அவசியமில்ல.” என தணிவாகவே சமாதானப்படுத்த முயன்றவனிடம்,

 

“ஓ… அன்னிக்கு நடந்தது மட்டுந்தான் ஆக்ஸிடன்ட்லி நடந்த விஷயம்ன்னு சொல்றீங்க இல்ல.. மத்தபடி நீங்க என்கிட்ட நடந்துக்கிட்ட விதமெல்லாம் சரி.. அப்டித்தான் இதுவரைக்கும் நெனச்சுட்டிருந்தீங்களாக்கும்.” என நக்கலாக கேட்டாள் ஆர்த்தி.

 

தான் அவளை நடத்திய முறையை சுட்டிக்காட்டிப் பேசியவளை மேலும் சமாதானப்படுத்த முயல வழி தெரியாமல் திகைத்து நின்றவனை ஏறெடுத்துப் பார்த்து,

 

 “உங்களோட ஆத்திரத்தை என்னை அடிச்சு ஆத்திக்கிட்டீங்க. உங்க மேல எனக்கிருக்குற கோபத்தை நான் எந்த வழில ஆத்திக்க முடியும்?! சொல்லுங்க..” என நியாயமாக அவள் கேட்டக் கேள்விக்கு விடை அறியாதவனாய் ஒரு பெருமூச்சு விட்டவன்,

 

“இதப்பாரு ஆர்த்தி. நான் தப்பு பண்ணிட்டேன் தான். ஆனா அதெல்லாம் உன்னைப் பத்தி தெரியாம நான் பண்ணுன தப்பு. அதுக்கு நான் உன்கிட்ட மன்னிப்பும் கேட்டுட்டேன். ஆனா நீ இப்போ பண்றது தெரிஞ்சே பண்றத் தப்பு. அது உன்னோட குணத்துக்கு சரியில்ல. உனக்கு விருப்பம்ன்னா இதெல்லாம் யூஸ் பண்ணிக்கோ. நான் கம்ப்பல் பண்ணல.” என கலங்கிய முகத்துடன் கூறிவிட்டு அலுவலக அறைக்குள் சென்று விட்டான் கௌதம்.

 

என்ன தான் அவன் சமாதானம் சொன்னாலும் தன் ஆழ்மனம் விரும்பிய பதில் மட்டும் அவனிடமிருந்து வரவேயில்லை என்ற உணர்வு ஏனோ ஆர்த்தியை உறங்க விடாமல் இம்சித்தது.

 

மறுநாள் வேலை முடித்து வீடு வந்தபோது, “ஹாய் ஆர்த்தி….!!!!” என கோரசாகக் கத்தியபடி ஒரு கும்பல் வாசல் வந்து நின்று குதூகலமாய் கத்தியழைத்தது ஆர்த்தியை. அக்கூட்டத்தின் ஒலியை வைத்தே புரிந்துவிட்டது ஆர்த்திக்கு யார் வந்திருக்கிறார்களென.

2 thoughts on “காதல் கருவாயா!!!08”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top