2
வைகை சிரிச்சா தூங்காநகரம்..
வாண்டு மொரச்சா தூங்காநகரம்..
எதற்கும் துணிஞ்சா தூங்காநகரம்..
துக்கம் தொலைஞ்சா தூங்காநகரம்..
சங்கத்தமிழா தூங்காநகரம்..
லந்து தமிழா தூங்கா நகரம்..
எதிரி மிரண்டா தூங்காநகரம்..
நம்ம மதுர தாண்டா தூங்காநகரம்..
தூங்காநகரம் பாடல் உச்சஸ்தாயில் ஒலித்துக் கொண்டிருக்க.. அந்த சிவப்பு நிற ஜாகுவார் அந்த பாடலுக்கு ஏற்றவாறு மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் பறந்து கொண்டிருக்க.. உள்ளே டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்தவனோ கண்களை மூடி அந்த பாடலில் லயித்திருந்தான். டேஷ்போர்டில் வைத்திருந்த தன் இரு கால்களையும் ஆட்டிக்கொண்டே தலைக்கு பின்னால் கட்டி இருந்த கைகளை ஒன்றோடு ஒன்று தாளம் போட்டவாறு கேட்டுக் கொண்டிருந்தான் பாடலை..
அவன் கதிர் வேந்தன்!!
அவனுக்குப் பின் சீட்டுகளில் வழக்கம்போல அவனது நான்கு அடியாட்கள்.. அடியாட்கள் என்று பெயர்தான்.. இதுவரை ஒரு சந்தர்ப்பத்தில் கூட அவர்களுக்கு அடிக்கும் வாய்ப்பை இவன் வழங்கவே இல்லை.
எதிராளியிடம் இவன் வாயை விட கை பேசும் செய்திகளே அதிகம்.. இதில் எங்கே அவர்களுக்கு வேலை வழங்க.. பலமுறை அவர்களும் கெஞ்சி பார்த்து விட்டார்கள்.
“அண்ணே.. பாடிகார்டுனு தானே எங்களுக்கு பேரு. இதுவரைக்கும் ஒருத்தன கூட கைநீட்டி அடிச்சதில்ல.. ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க அண்ண” என்று ஆஜானுபாகுவாக கட்டுமஸ்தான உடம்போடு ஆறடிக்கும் குறையாமல் முறுக்கு மீசையுடன் இருக்கும் அவர்கள் குழந்தை போல கெஞ்ச, அவனோ அவர்களை பார்த்து சிரிப்பான்.
வெடவெடவென்று ஆறடிக்கும் சற்றே குறைவான உயரத்தோடு.. முறுக்கி விடப்பட்ட மீசை.. அலையென கேசம்.. கழுத்தில் இருக்கும் பெரிய தங்கசெயின், கைகளில் தங்கக் காப்பு இரண்டு விரல்களில் மோதிரம் என்று கனகச்சிதமாக ஊருக்கு பொருந்துமாறு போல் இருப்பவன் தான் கதிர். பேருக்கு ஏற்றார் போல் எப்பவும் கதர் வேஷ்டி தான்.
இப்போது சென்று கொண்டிருப்பது கூட அருகில் இருக்கும் கண்மாய் ஒன்றை இவர்கள் ஏலத்துக்கு எடுத்து இருக்க.. அது சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து ஒன்றுக்குத்தான்.
வழக்கமான அவனது எதிரி குடும்ப வாரிசு மருது அங்கே வந்திருந்தான்.
பஞ்சாயத்துக்கு என்று நடுவில் இரண்டு பெருசுகள் அமர்ந்திருக்க.. அவர்களைச் சுற்றிலும் சிறுசுகள் இரண்டு பக்கங்களும் அமர்ந்து, தங்களுக்குள்ளேயே கிண்டலும் கேலியுமாக பேசி கொண்டிருந்தனர். கதிர் வேந்தன் வந்து இறங்கியவுடன் அனைவருக்கும் பொதுவாக கைகளை உயரே தூக்கி ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு, அவனுக்கென நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கையசைத்து பேசுங்க என்றான்.
“தம்பீ.. நீங்க அந்த கண்மாய என்னமோ ஏலத்துக்கு எடுத்து இருக்கிறது நெசம்தாப்பு.. ஆனா அந்த கண்மாய அவிங்க பாட்டன் பூட்டன் காலத்துல கட்டுனதாகவும், அதனால அதுல உள்ள தண்ணி மீனுங்க எல்லாம் அவிங்களுக்கு தான் சொந்தம்னு அவிங்க உரிமை கொண்டாடுறாய்ங்க.. இதுக்கு நீங்க என்ன சொல்லுரீக” என்றார் பஞ்சாயத்து பெரியவர்.
“அவிங்க பாட்டன் பூட்டன் கட்டிட்டு பக்கத்திலேயே கல்வெட்டு நாட்டிட்டு போயிட்டாய்ங்களோ” என்று இவன் எள்ளலாக கேட்க..
மருதுவோ அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே “அதுக்கான எல்லா ஆதாரங்களும் இதுல இருக்கு.. தம்பிக்கு படிக்க தெரிஞ்சா படிச்சுகோங்க” என்று தன் கையில் வைத்திருந்த பத்திரங்களை ஆட்டியபடியே அவன் பேசினான்.
சட்டென்று எழுந்த கதிர் வேந்தனும் பஞ்சாயத்து பேசுபவர்களைப் பார்த்து, “இப்ப என்ன அந்த கண்மாயு அவிங்க பாட்டன் பூட்ட கட்டுனது.. அதனால தண்ணி எல்லாம் அவிங்களுக்கு தான் சொந்தம் அப்படித்தானே?” என்று கேட்க.
கர்வமும் வெற்றியும் முகத்தில் போட்டி போட ஆம் என்று தலை அசைத்தான் மருது.
“அய்யா சாமி.. எனக்கு அந்த தண்ணீ வேண்டவே வேண்டாம் சாமி. ஆனா நான் ஏலம் எடுத்த இடத்தில அவிங்க தண்ணி இருக்கக்கூடாது, அந்த தண்ணி எல்லாத்தையும் நாளைக்கே எடுத்து காலி பண்ணிட்டு கண்மாய மட்டும் தர சொல்லுக.. இல்ல அவிங்க தண்ணி இருக்கிறதுக்கு எனக்கு மாசாமாசம் வாடக கொடுக்க சொல்லுக.. நான் சொன்னது சரிதானே?” என்று தன் பக்கத்திலிருந்து இளசுகளை பார்த்த அவன் கேட்க..
அவன்களும் “கதிர் அண்ணே சொன்னா சரிதான்” என்று சத்தமாக கூறி விசில் அடிக்க.. மருதுவோ கடுப்புடன் கையிலிருந்த பத்திரங்களில் எறிந்து விட்டு சென்று விட்டான்.
பின் அங்கிருந்த பஞ்சாயத்து பெரியவர்களைப் பார்த்து “இங்கே பாருங்க பெருசுகளா.. சும்மா உங்களுக்கு வீட்ல வேலை இல்லைனு வெட்டி நியாயம் பேச இந்த மாதிரி எல்லாம் பஞ்சாயத்து கூட்டாதிங்கயா.. நானும் ஒரு நாளு போல ஒரு நாளு அமைதியா போகமாட்டேன்” என்றவன் வேட்டி நுனியை காலால் இடறி கையில் பிடித்துக் கொண்டு வேக நடையுடன் வண்டியை நோக்கி சென்றான்.
“குவாரிக்கு வண்டிய விடுடா” என்று அவன் கூற அடுத்த நிமிடம் அவர்களுக்கு சொந்தமான குவாரியை நோக்கி வண்டி வேகமாக சென்றது.
அங்கே தன்னோட அலுவலக அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன், தன் எதிரே அமர்ந்திருந்த அவர்கள் வீட்டு கணக்குப்பிள்ளை மாணிக்கத்தை கூர்மையாக பார்த்தான்.
“எத்தன நாளாச்சு?” என்று கடுமையுடன் கேட்க..
“ஒரு வாரம் ஆச்சுங்க தம்பி” என்று எச்சிலை விழுங்கி கொண்டு பயத்துடன் பதிலளித்தார் அவர்.
“ஒரு வாரம் ஆயிடுச்சி இல்ல.. சொந்த பந்தங்கள எல்லாம் பார்த்தாச்சு தானே!! இனிமே அங்கன இருக்க வேண்டிய அவசியமில்ல. தூக்கிடலாம்” என்று அவன் கண்கள் சிவக்க கைகள் இறுக கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கூறினான்.
இவனுக்கு கோபம் வந்தால் கண் முன் தெரியாது என்பது நன்கு அறிந்தவரோ “தம்பி வேண்டாமுங்க!! பெரியவர்..” என்று அவர் வாயை எடுக்கும் முன்னமே கைகளை உயர்த்தி காட்டியவன் “நான் சொன்னதை செய்ய தான் இருக்கீக கணக்கு” என்று அவன் அழுத்தமாக உரைக்க.. அதற்கு மேல் அவனிடம் பேச முடியாது என்று அமைதியாக சென்று விட்டார்.
கதிரின் அப்பா காலம்தொட்டு கணக்கராக பணியாற்றிவருகிறார் மாணிக்கம். பெரும்பாலும் மாமா என்று தான் அழைப்பான், இன்னும் சந்தோஷமான மூடில் இருந்தாலோ மேக்ஸ் என்று செல்லமாக கூப்பிடவும் செய்வான்.. ஆனால் கோபம் என்று வந்துவிட்டால் எதிராளி யாராக இருந்தாலும் தன்னிடம் நெருங்க விட மாட்டான். அப்போது மட்டுமே அவன் கண்களுக்கு அவர் கணக்காகத்தான் தெரிவார்!!
மதியம் உணவுக்கு கூட வீட்டுக்கு செல்லாமல்.. கிளியை பிடிக்கும் வேடனாக வலையை விரித்து காத்திருந்தான் கதிர் வேந்தன்..
இந்த வேடனிடம் அகப்படும் கிளி யாரு?
வேறு யார் நிவேதிதா தான்!!
ஆஸ்திரேலியாவில் உள்ள நிவேதாவிற்கும் மதுரையில் இருக்கும் கதிர்வேந்தனுக்கும் அப்படி என்ன விரோதம் இருக்க முடியும்.. கடத்தும் அளவிற்கு??
அன்று தந்தை பேசியவுடன் அவளுக்கு ஒரு புத்துணர்வு.. விருப்பமற்ற இந்த திருமண பந்தத்தில் சிக்கிக்கொள்ளாமல்.. சிட்டாகப் பறந்து விடுவது என முடிவு செய்தாள்..
அதன்படியே அன்னைக்கே தெரியாமல் இந்தியாவிற்கு செல்ல ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினாள். அவளுக்கு விசா கிடைத்தது. குறைந்தது ஆறு மாதத்திற்காவது அன்னையின் இந்த கட்டுக்கோப்புக்குள் இல்லாமல் சுதந்திர கிளியாக வானத்தில் உலா வர நினைத்தாள். அந்த சுதந்திரம் ஆஸ்திரேலியாவின் எந்த மூலைக்குச் சென்றாலும் இவளது அன்னையின் கண் பார்வையில் கிடைக்கவே கிடைக்காது என்று உறுதியாக புரிய, தன் தந்தையின் பிறந்த இடமான மதுரைக்கு செல்ல திட்டமிட்டாள்.
அதுவும் தந்தை அறியாமலே!!
அவருக்குத்தான் அங்கே இருக்கும் ஆபத்தை பற்றி தெரியுமல்லவா பின் எப்படி அவர் அனுமதி கொடுப்பார்? ஒருவேளை நிவேதிதா கூறியிருந்தால் கூட தன் பெண்ணிற்கு மதுரை கண்டிப்பாக பாதுகாப்பாக இருக்காது என்று கண்டித்திருப்பார். இங்கே தந்தைக்கும் சொல்லவில்லை. அன்னை தந்தையிடம் ஏதேனும் தூண்டி துருவினாலோ இல்லை அன்னையின் அழுகையை பார்த்து தந்தையே சொன்னாலும் சொல்லி விடுவாரோ என்று பயந்த நிவேதிதா.. இருவரிடமும் எதுவும் கூறாமல் திங்கட்கிழமை காலை அலுவலகம் செல்வது போலவே சென்று, ஒரு வாரமாக சிறிது சிறிதாக எடுத்து வைத்திருந்த உடைகளையும் அவளுக்கு தேவையான பொருட்களையும் அலுவலகத்திலிருந்து பேக் செய்து, அங்கிருந்து வண்டியை வரவழைத்து இரண்டு மூன்று வண்டிகள் மாறி விமான நிலையத்திற்குச் சென்று இந்தியாவிற்கு செல்ல விமானம் ஏறினாள்.
அன்று மெல்போர்னிலிருந்து சட்னி வரும்பொழுது மறைந்துபோன உற்சாகம் புத்துணர்வு இன்று இந்தியா செல்கையில் மீண்டிருந்தது. அதுவும் தன் தந்தை வழி சொந்தங்களை காணப்போகிறோம் என்ற ஆவலே அவளுக்கு புதுவித உத்வேகத்தை தந்தது. சென்னையில் இறங்கிய அடுத்த நிமிடம் தன் அன்னைக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தாள்., அன்று தொழில் துறையில் ஒரு ஒப்பந்தத்தையும் பார்ட்டியையும் முடித்துவிட்டு நள்ளிரவு சுவாதி வீட்டிற்கு வர.. மகளின் வாய்ஸ் மெசேஜை கேட்டு சோர்ந்து போனார்.
“மாம்.. நான் இப்போ இந்தியாவில் இருக்கேன். எனக்கு அங்க மூச்சு முட்டுது மாம்.. உங்க இஷ்டப்படி தான் உடுக்கிறேன் வேலை செய்றேன்.. ஆனா உங்க இஷ்டப்படி தான் வாழணும்னு சொன்னா எப்படி? உங்கப்பா உங்களுக்கு கொடுத்த சுதந்திரத்தை நீங்க ஏன் எனக்கு தரல? மற்ற விஷயம்ன்னா கண்டிப்பா உங்கள மீறி நடந்து இருக்க மாட்டேன். ஆனால் வாழ்க்கை ஒரே முறைதான். அதோட ஹரிஷ் கூட என்னால வாழ முடியாது. எப்போதும் டைமிங் சிஸ்டம் சொல்லிக்கிட்டு ஒரு வட்டத்துக்குள் வாழற வாழ்க்கை எனக்கு வேண்டாம். அதுக்காக நான் இங்கேயே செட்டில் ஆயிடுவேனு சொல்லல.. ஒரு ஆறு மாசம் எனக்கான ஸ்பேஸ் கொடுங்க அதுக்குள்ள அந்த லாகிரிதமை ஓட்டிட்டு, வேற நல்ல மாப்பிள்ளையா பாருங்க.. எங்க அப்பா மாதிரி” என்று நிவேதிதா கூறியதை கேட்ட மேகநாதனுக்கு எப்படி உணர்வது என்று சொல்ல வார்த்தை இல்லை.
ஒவ்வொரு மகளுக்கும் அவளது தந்தை தான் முதல் ஹீரோ. அதன்படி பார்த்தால் தன்னை போன்ற மாப்பிள்ளை வேண்டும் என்று மகள் சொன்னது அவருக்கு பெருமிதமே.. ஆனால் அங்கே காத்திருக்கும் ஆபத்துகளை அறியாமல் தன் பெண் சென்றது அவருக்கு மிகுந்த பயத்தை அளித்தது.
அடுத்த நிமிடம் தன் அண்ணனுக்கு அழைத்து அனைத்து விவரத்தையும் இவர் கூறிவிட.. அதேநேரம் மதுரைக்கான பிளைட்டில் ஏறி இருந்தாள் நிவேதிதா.
20 வருடங்களுக்குப் பின் காணப் போகும் தங்கள் வீட்டு வாரிசை எண்ணி நெகிழ்ந்து போயினர் அந்த குடும்பத்தினர்.. மேகநாதனின் அண்ணன் அழகுசுந்தரம் அக்கா தனபாக்கியம்.. அவர்கள் இருவருக்கும் ஒற்றை ஆண் வாரிசுகள் மட்டுமே. மருதுசுந்தரம் அழகுசுந்தரத்தின் மகன், தனபாக்கியத்திற்கு வசீகரன் என்ற மகன் தற்போது சென்னையில் ஐடியில் வேலை பார்த்து வருகிறான்.
இரு குடும்பங்களும் ஒன்றாக ஒரே வீட்டில் தான் வசித்து வருகின்றனர்.
இவர்களது எதிரி குடும்பம்தான் கதிர் வேந்தன் குடும்பம்!!
நிவேதிதாவை அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் அதேசமயம் உள்ளத்தில் ஆனந்தத்துடன் வரவேற்றனர் அவர்களது குடும்பம். இவள் மதுரையில் கால் பதித்த அடுத்த நிமிடமே அங்கே வந்த மருது அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான். இவள் வந்த செய்தி இதுவரைக்கும் கதிர் குடும்பத்திற்கு தெரியவில்லை. ஒரு வாரம் சென்று தான் மாணிக்கம் அந்த விஷயத்தைக் கூற..
அதற்கு பொங்கி எழுந்து விட்டான் கதிர்..
ஒரு வாரமும் இந்த புதிய சூழ்நிலையில் அவள் ஒட்டவே அவளுக்கு சரியாக இருந்தது அதன் பின், அப்பத்தாவின் பாசம்.. பெரியப்பா பெரியம்மாவின் அன்பு.. மருதுவின் சீண்டலும் விளையாட்டும்.. தனபாக்கியத்தின் உருக்கும் பேச்சுகள், வசீகரனின் ஆசையான பார்வை என்று இதுவரை இல்லாத புதுவித ஆனந்தத்தில் திளைத்துக்கொண்டிருந்தாள் நிவேதிதா. இதுவரை போனில் மட்டுமே பார்த்த உறவுகளின் பாசத்தை நேரில் உணரும் தருணம் திக்குமுக்காடி தான் போனாள்.
ஆஸ்திரேலியா போல் மினி டாப்பும் த்ரீஃபோர்த்மாக தன் அறையில் இருந்து கீழே வந்தவளை பார்த்து அப்பத்தா ராமாமிர்தம் “என்ன தாயி உடுப்பு இது.. சின்ன பொண்ணுல வாங்குனது பத்தலைனா தூக்கி கடசா வேண்டியது தானே!! உன் அப்பன்கிட்ட இல்லாத காசா.. இனிமே சைஸூ பெருசா வாங்கி போடு ஆத்தா” என்று வெள்ளந்தியாக கூற..
அதே நேரம் அங்கு வந்த மருதுவோ அப்பத்தாவின் பேச்சில் விழுந்து விழுந்து சிரித்தான். “அப்பத்தா நீ உன் பேத்தியை 10 வயசா இருக்கும்போது பாக்கல இல்ல.. அதனால தான் அந்த டிரஸ் எல்லாம் போட்டு காட்டிகிட்டு இருக்கா” என்று அவன் வார, “அண்ணா..” என்று கைகளை உதைத்து சிறுபிள்ளையாக அழுதவள் துணைக்கு தன் பெரியப்பாவை அழைத்தாள்.
அவருக்கோ மகள் போட்டு இருக்கும் உடுப்பு அருவெறுப்பாக எதுவும் தெரியவில்லை “நல்லா தானடா இருக்கு” என்று அவர் வாஞ்சையாக கூற..
“என்ன நல்லா இருக்கு? பொட்டபுள்ளையா புடவை, பாவாடை தாவணி, அந்த சுடிதாரு போட்டதானே நல்லா இருக்கும். அதவிட்டுட்டு இத்துனூண்டு போட்டுகிட்டு சுத்துறவ” என்று அப்பத்தா கூறினார்.
“இந்த ட்ரசுக்கு என்ன இப்போ?” என்ன என்று அவள் புரியாமல் கேட்டாள்.
“அம்மாடி.. கண்ணு ஒத்த பொம்பள பிள்ளைய இத்தனை வருஷமா எங்க கண்ணுல காட்டாம கூட அந்த பைய வளத்துட்டான். உனக்கு வகை வகையா உடுப்பு போட்டு, விதவிதமா நகைகள் போட்டு பார்க்கணும் எங்களுக்கும் ஆசை இருக்கும் இல்ல.. இங்கே இருக்கிற வரைக்கும் அப்பத்தா சொல்றபடி உடுப்பு போடு ஆத்தா” என்றவர் அவளது கன்னம் வருடி வாஞ்சையாக கேட்க..
இதுவரை உத்தரவுகளுக்கு மட்டுமே பழக்கப்பட்ட இருந்த அவளது மனம் இன்று அப்பத்தாவின் அன்பில் கட்டுண்டு போக அவளை அறியாமல் அவளது தலை சம்மதமாக அசைத்தது.
“டேய் மருது.. நீ என் பேத்தியை கூட்டிட்டு போயி அவளுக்கு பிடிச்ச கலர்ல பட்டுலிருந்து சுங்குடி புடவைனு எல்லாம் வாங்கி குவிச்சிட்டு வர” என்று கட்டளையிட.. முதலில் மருது அதற்கு தயங்கினான்.
ஆனால் கண்களில் ஆசையோடு தங்கை பார்க்க, நம்மை மீறி என்ன நடந்து விடும் என்ற நினைப்பில் தங்கையையும் அவளுக்கு பார்த்து எடுக்க தன் அன்னையையும் அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தான்.
அப்போது புனிதா மருதுவின் தாயார், மருதுவிடம் ” மருது முதன் முதலா புள்ளைய வெளில கூட்டிட்டு வந்தா கோவிலுக்கு தான் அழைச்சிட்டு போகணும். பக்கத்திலே ஏதாவது கோயில் இருந்தா பாருடா” என்று கூற..
“அதெல்லாம் வேண்டாம்மா” என்று முதலில் மறுத்தாலும் பின் அன்னையின் முறைப்புக்கு கட்டப்பட்டு, அருகில் உள்ள பாண்டி கோயிலுக்கு வண்டியை விட்டான் மருது.
கூடவே இன்னொரு வண்டியில் அவனது ஆட்களும் வந்துகொண்டிருந்தனர்.
பாண்டி கோவிலில் வண்டியை நிறுத்தி வெளியே ஒரு ஆளை காவலுக்கு வைத்து விட்டு மற்றவர்களுடன் சேர்ந்து கோயிலுக்குள் சென்றான் மருது. ஒரு பக்கம் அன்னை மறுபக்கம் அண்ணன் என பாதுகாப்பான வளையத்துடன் திருப்தியாக கடவுளை வணங்கிவிட்டு வெளியே வந்தனர். அப்போது மருதுக்கு தெரிந்த ஒருவர் பாண்டி கோவிலுக்கு வேண்டுதலுக்காக கிடாவெட்டி இருப்பதாக கூறி விடாப்படியாக சாப்பாட்டுக்கு அழைத்து சென்றார். பெரும்பாலும் தனியாக வரும் போது சென்று விடுபவன், இன்று குடும்பத்தோடு வந்து இருக்கும் போது சற்று யோசித்தான்.
“கைய நனைக்கலைனாலும் பரவால்ல மாப்பிள்ள.. வந்து எட்டிப் பார்த்துட்டு போய்யா” என்று அவர் விடாப்பிடியாக அழைக்க, சரி என்றவன் அந்த விருந்து நடக்கும் இடத்திற்கு நுழைய.. இவ்வளவு கூட்டத்தையும் இதுபோல விருந்தையும் இதுவரை காணாதவள் அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவும் அசராமல் நல்லியை கடித்துத் தின்று கொண்டிருந்த மதுரைக்காரர்களை வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருக்க.. மருது தங்கையின் இந்த நிலையை பார்த்து சிரித்துக்கொண்டே மற்றவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.
புனிதாவிடம் நிவேதிதா பற்றி அங்கிருந்த பெண்மணிகள் விசாரிக்க.. அவரும் அவர்களோடு ஒன்றிவிட, மெல்ல சுத்தி பார்த்த கொண்டே வந்தவள், வழி தவறி வேற ஒரு விருந்து நடக்கும் இடத்திற்கு சென்று விட்டாள். திருதிருவென்று விழித்தப்படி அண்ணனையும் பெரிய அன்னையையும் தேட, அங்கே இருந்தால் அல்லவா அவர்கள்?
அப்போது அவளது தோளை ஒரு விரல் சுரண்ட திரும்பி பார்த்தவள், வெகு அருகில் நின்றுயிருந்த கதிரை பார்த்து பயந்து இரண்டடி பின்னே எடுத்து வைக்க…
“நீ அழகுசுந்தரம் தம்பி மக தான?” என்று அவன் கேட்க..
இதுவரை அங்குள்ளவர்களை தெரியாமல் யாரிடம் வழி கேட்பது என்று புரியாமல் இருந்தவள், தன் பெரிய தந்தையின் பெயரை கேட்டவுடன் விழிகள் அப்பாடா என்று நிம்மதியை தர ஆம் என்று தலை அசைத்தாள்.
“மருதுவோட தங்கச்சி தான?” என்று அவன் திரும்பவும் கேட்க..
அழகுசுந்தரம் தம்பி மகளென்றால் மருதுவுக்கு தங்கச்சி தானே? இவன் ஏன் கேணத்தனமா கேள்வி கேட்கிறான்? என்று கோபம் வந்தாலும், இப்போது அவனை விட்டால் வேறு ஆள் இல்லை என்று மெல்ல சிரித்தபடி “ஆமா தங்கச்சி தான்” என்று அழுத்தமாகக் கூறினாள்.
“அப்பா கரெக்டான ஆளுதான்” என்று அவன் கூற..
“எதுக்கு கரெக்டா ஆளு?” என்று புரியாமல் இவள் விழிக்க..
இன்னும் அவள் அருகில் நெருங்கியவன்.. “அதாவது கடத்தும்போது கரெக்ட்டான ஆள இல்லாம ஆள மாத்தி கடத்திட்டா? அதனால விசாரிச்சிக்கிட்டேன்..” என்றவன் காலரை பின்னே தள்ளி மீசையை முறுக்கியவாறு அவளை கூர்ந்து பார்க்க..
அவளை கொள்ளை கொண்டு போகும் வேடனின் குறி அதில் தெரிய.. அடுத்த நொடி அந்த கூட்டத்தில் பெண்களுக்கிடையே நுழைந்தவள் இவன் கைக்கு அகப்படாமல் ஓடினாள்.
“அடியே.. அவ பேரு கேட்கலையே” அந்த நேரத்திலும் கவலை கொண்டவன், “ஏய் வெள்ள பணியாரம் நில்லு” அவள் பின்னே ஓடினான் கதிர்.
சிறு பெண் தானே நாமே சமாளித்து விடலாம் என்ற தைரியத்தில் அவனது அடியாட்களையும் வெளியே விட்டு வைத்திருக்க, அவளது சமயோசித புத்தியை கணிக்காமல் இப்போது பின்னால் ஓடிக் கொண்டே, தன் ஆட்களை அழைத்தான் போனில்..
தெரியாத ஊரில் எங்கே போவது என்று தெரியாமல், வழி வேறு புரியாத காரணத்தினால் இந்த இடத்தை விட்டு தப்பித்தால் போதும் என வேகமாக ஓடியவள், கிளை சாலை வழியாக பிரதான சாலைக்கு வந்த நின்று பார்த்தாள்.
அப்போது அந்த வழியாக வந்த வெண்ணிற கார் ஒன்றை பார்த்தவள், அவசரமாக அதன் முன்னே சென்று கையை ஆட்ட.. முதலில் அவளைத் தாண்டி சென்ற வண்டியோ பின்பு வேகம் குறைத்து பின்னுக்கு வந்து அவளிடம் நிற்க..
அதேநேரம் இவளை தேடி ஓடிவந்த கதிர்வேந்தனோ அந்த காரை பார்த்த நொடி ஸ்தம்பித்து போய் நின்று விட்டான். மெல்ல ஜன்னல் திறக்க.. உள்ளிருந்த ஆளை எல்லாம் அவள் சரியாக கவனிக்கவில்லை, எப்படியாவது இவர்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில்..
“சார் ப்ளீஸ்.. என்னை கடத்த பார்க்குறாங்க.. காப்பாத்துங்க” என்று கைகள் கூப்பி கெஞ்ச..
உள்ளிருந்தவனோ எதுவும் கூறாமல் சென்ட்ரல் லாக்கை ரிலீஸ் பண்ணி விட.. கதவை திறந்து வேகமாக உள்ளே அமர்ந்து கொண்டாள் நிவேதிதா..
“ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று அவள் கூற கார் வேகம் எடுத்து அவ்விடத்திலிருந்து பறந்தது.
அப்போது தான் அங்கே வந்த ஆட்கள் கதிர் நிற்பதையும், அவள் காரில் சென்றதையும் பார்த்து, “என்ன அண்ணே.. கிளி பறந்து போயிருச்சு” என்று ஒருவன் கூற..
“உங்க டக்கை கண்டு நான் வியக்கேன்” என்று அவர்களை முறைத்தவன், பின் கடகடவென்று சிரித்தான் கதிர்.
“டேய்களா.. அந்த கிளி வேடனுக்கு தப்பி பருந்து கிட்ட மாட்டி இருக்குடா!! அதுவும் சாதாரண பருந்து இல்லை ராஜாளி கிட்ட” என்றவனை புரியாமல் அருகில் இருந்தவர்கள் பார்க்க..
வேடனிடம் இருந்து தப்பித்த கிளி பருந்தின் கையில் அகப்பட்டது.. தங்கையை காப்பாற்ற மருது வருவானா?
காதலே.. காதலே..
Very nice 👍
செம செம😂🤣