இஷ்டம் -20
கணவன் வந்து விடுவான் என்று திரும்பிப் பார்க்காமல் ஓடியவள் அங்கே போய் தன் சேட்டு பிள்ளைகளுடன் இருக்க “பார்த்தியா டி.. இவ வெவரம் தான். இம்புட்டு நேரம் தனியா மாமன் கூட ரொமான்ஸ் பண்ணிட்டு வர்றத!” என்று அவர்களுக்கு கிண்டல் செய்ய போங்கடி என்றவள் நாணமே அவளை காட்டிக் கொடுத்தது.
மீண்டும் இப்படி தன் முன்னால் நிற்பவனை கண்டு புருவம் உயர்த்திய கார்த்திக்.. அவனுக்கு சற்று தான் குறைந்தவன் இல்லை என்று தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்று.. “என்ன?” என்றான். அதுவரை மனைவியிடம் பேசி இருந்த குரல் அப்படியே மாறுபட்டிருந்தது.
“பொம்பள பிள்ளை கிட்ட எப்படி நடந்துக்கோணும்னு உனக்கெல்லாம் தெரியாதா? புருஷனா என்ன வேணா பண்ணுவியா?” என்று கேட்டதும் “புரியல..!” என்று அவனிடம் கார்த்திக் கேட்க..
“கட்டுனவனே ஆனாலும்.. அவ சம்மதமில்லாமல் இப்படித்தான் பொது இடத்தில் நின்னு அவகிட்ட தப்பா நடக்க பாப்பியா? நீ எல்லாம் என்ன படிச்சவன்?” என்று இங்கே நடந்ததையும் ஆற்றுப் பக்கத்தில் நடந்ததையும் தவறாக எண்ணிக்கொண்டு பக்கம் பக்கமாக வசனம் பேசி கார்த்தியின் கோபத்தை 100 டிகிரி மேலே தூக்கினான் மாணிக்கவேல்.
“ஜஸ்ட் ஸ்டாப் இட் மேன்!!” என்று கார்த்திக் சீற..
“துறை இங்கிலீஷ்ல தான் பேசுவாரோ! நான் கொங்கு தமிழன்டா..!!” என்று மீசைய முறுக்க..
“அப்ப நாங்க மட்டும் யாருடா!” என்று கார்த்திக் அலட்சியமாக கேட்க..
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து பதறி பசுபதி அங்கே ஓடி வர... சுற்றும் மற்றும் உள்ளவர்களும் என்னவோ ஏதோ என்று பயந்து வந்தனர்.
“என்ன.. என்னங் மாப்பிள்ளைங் என்ன ஆச்சு?” என்று கேட்டதும் அவனும் மாணிக்கவேலை முறைத்தவாறு நின்று இருந்தான் பதிலளிக்காமல்…
“நாட்டாம அங்க என்ன கேக்குறீரு.. இங்க கேளுங்க!! நாலு ஊருக்கு நல்லது சொல்ற நாட்டாமையா இருந்தா பத்தாது வீட்டில் நடக்கிறது என்னன்னு தெரிந்து வைச்சிக்கொணும்! போயும் போயும் சரியான பொறுக்கி பயலா இருக்கான்.. பொது இடத்துல எப்படி நடந்துக்கோணும்னு கூட தெரியல..” என்றதும் கார்த்திக் சுறுசுறு என்று கோபம் ஏறியது.
அப்பா மாமா இருக்கையில் தான் பேசக்கூடாது என்று அவன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருக்க.. ஆனால் அந்த கட்டுப்பாடு மாணிக்கவேலிடம் இல்லை.
என்ன இருந்தாலும் மேகலை.. அவன் நேசித்த பெண். அந்தப் பெண்ணின் மீது புருஷனே ஆனாலும் வன்மையை பிரயோகித்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதைவிட அது ஊடல் என்றும் புரிந்து கொள்ள மனம் முரண்டியது மாணிக்கவேலுக்கு.
“இது எங்க குடும்ப பிரச்சினை!! நீ எதுக்குடா இதுக்குள்ள வர.. என் மாப்பிள்ளை பத்தி எனக்கு தெரியும்! உன் வேலையை பாரு..” என்று பசுபதி கூற.. அவரது பங்காளிகளும் சப்போர்ட்க்கு வர..
“நிறுத்துங்க.. மாப்பிள்ளையாம் பெரிய மாப்பிள்ளை!! கோட்டு சூட்டு போட்டு இங்கிலீஷ்ல பேசினா அவன் என்ன பெரிய ஆளா? இவனெல்லாம் என் கால் தூசிக்கு வர முடியாது”
கார்த்திக்கு உயர்த்தி பேசியதை மாணிக்கவேலால் தாங்க முடியவில்லை. ‘அப்படி என்ன என்னிடம் இல்லாதது இவனிடம் இருந்ததுனு கண்டுபிடித்து பொண்ணை கொடுத்தார்?’ என்ற கோபம் அவனுள் இருந்தது. அது இன்று வார்த்தையாய் வெடித்தது!!
மாணிக்கவேல் பேச இன்னும் இன்னும் கோபம் பெருகியது கார்த்திக்கு. அவன் கண்களில் கனலை கண்ட கிருஷ்ணகுமாரும் “தம்பி.. நீங்க பேசுறது சரி இல்ல! இது எங்க குடும்பத்துக்கான பூஜை நடக்கிற இடம். இதுல நான் உங்களை கூப்பிடவே இல்ல.. நீங்க போகலாம்!” என்று அவனை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றார்.
“அப்படி எல்லாம் உங்க இஷ்டத்துக்கு எல்லாம் போக முடியாதுங்க.. ஒரு தப்ப கண்டா அத நாங்க என்னன்னு கேட்க தான் செய்வோமுங்க..”
“என்னடா பெரிய தப்பு? என் பொண்டாட்டி கூட நான் இருந்ததா?” என்று அவனது சட்டையை இறுக்கி பிடித்து கோபத்தில் சீறினான் கார்த்திக்.
“உன் பொண்டாட்டி தான்.. அத வீட்டுக்குள்ள வச்சுக்கடா. அதுவும் அந்த பொண்ணுக்கு விருப்பம் இல்லாம.. ச்சீ.. நீ எல்லாம் ஒரு ஆம்பள? நீ எல்லாம் ஒரு புருஷன்?” என்றதும் கார்த்திக் கை இடியென இறங்கியது மாணிக்கவேலின் கன்னத்தில்.. அங்கிருந்தவர்கள் அதிர்ந்து பார்க்க..
“உண்மையதான சொன்னேன்! நீ செஞ்சத தானே சொன்னேன்!” என்று
மாணிக்கவேலும் கார்த்திக் மீது பாய முயல..
அதற்குள் மாணிக்கத்தையும் கார்த்தியையும் அங்குள்ளவர்கள் பிடித்துக் கொண்டு பிரித்து வைத்தார்கள்.
“யோவ்.. நாட்டாம.. பொண்ணு அரும பெருமையா வளர்த்து போய் இப்படி ஒருத்தனுக்கு கட்டி வச்சிருக்கியே? அதுக்கு நான் அன்னைக்கே கட்டியிருந்திருப்பேனே.. தூக்கிட்டு போயாவது கட்டி இருந்தா என்ற அன்ப நேசத்தைக் காட்டி காதல்ல என்ற கண்ணுவ திக்கு முக்கோட வச்சிருப்பேன்யா. இப்படி எங்கேயோ ஒருமூலைய கஷ்டப்பட வச்சுட்டியேயா என்ற கண்ண…??” என்று அவன் கத்தி கூற… அதுவரை திமிறி கொண்டிருந்தவன் உடல் தளர்ந்து போக தன் மாமனாரை வெட்டும் பார்வை பார்த்தான்.
கிராமத்தில் இது போல் மாமன் மகன் அத்தை பொண்ணு என்று வம்பிழுத்து பேசுவதும்.. அக்கா பெண்ணை உரிமையோடு கட்டிக்கொடு என்று தாய் மாமன் கேட்பதெல்லாம் அவர்களுக்கு வழக்கம்.
ஆனால் யார் என்று தெரியாத ஒருத்தன் இப்படி பேசுகிறான் என்றால்… அப்போது… அந்த நொடி நேரத்தில் கார்த்திக்கின் கபாலத்தின் உள்ளே உள்ளது காலியாக.. வார்த்தைகளை விட்டான்.
“அதான் ஊருக்குள்ளே ஒரு மாப்பிள்ளை வச்சிருக்கீங்களே?? அப்புறம் எதுக்கு எனக்கு கட்டி வச்சீங்க? ஏன்? ஏன்? நாட்டாமை பொண்ணு இல்லையா… ஊருக்கெல்லாம் ஒரு தீர்ப்பு உங்களுக்கு ஒரு தீர்ப்பு!! காதலிக்க ஒருத்தன்… கல்யாணத்துக்கு ஒருத்தன்!! படிப்பு வசதியோட ஏமாளி ஒருத்தன் கிடைச்சான்னு என் தலையில் கட்டிடீங்களா?” என்றவன் முடிக்கும் முன்னே கிருஷ்ணகுமார் அவனை அறைந்திருக்க…
“இதோ இப்படி என்னை அடித்து பேசி மிரட்டி அவளை கல்யாணம் பண்ணி வச்சீங்க.. இப்போ உண்மை சாயம் வெளுத்துச்சு இல்ல..” என்றவன் நிமிடம் கூட நிற்காமல் விடுவிடு என்று அங்கிருந்து செல்ல…
“என்ன மன்னிச்சிடுங் ஐயா.. சின்ன புள்ள வெவரம் தெரியாம ஏதோ பேசிட்டான்” என்று கிருஷ்ணகுமார் மன்னிப்பு கேட்க… பசுபதி ஒன்றும் சொல்லாமல் அப்படியே நின்று இருந்தார்.
அதற்குள் கார்த்திக் மனைவியிடம் வந்தவன் “கிளம்புடி..!!” என்று அதிகாரமாக கூற.. சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்து பார்க்க.. அவளோ “என்னங் மாமா.. என்ன ஆச்சு?” என்று பதட்டத்தோடு கேட்க.. “கிளம்புன்னு சொன்னேன்!” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினான் கார்த்திக்!!
அவள் அப்பாவை பார்த்து தேங்கி நிற்க.. அவள் கைகளை பிடித்து தரதரவென்று அவன் இழுத்துக் கொண்டு வர… “பார்த்துக்கோ உன் மாப்பிள்ளையை!” ஏகத்தாளமாக சிரித்தான் மாணிக்கவேல்.
அத்தனை அவமானமாய் இருந்தது பசுபதிக்கு. நல்ல குடும்பம்.. நல்ல மனிதர்கள் என்று பார்த்து தான் பெண்ணை கொடுத்தார். வசதிக்காகவெல்லாம் இல்லை. படிப்புக்காகவும் இல்லை. ஆனால் இன்றோ தன் கண் முன்னாலையே பெண்ணை அவதூறாக பேசி இப்படி அடிமை போல இழுத்துச் செல்கிறானே என்று அத்தனை கோபம் பசுபதிக்கு.
“அவ்ளோ கஷ்டப்பட்டுகிட்டு என்ற பொண்ண நீங்க வச்சு வாழ வேண்டாமுங்க.. உங்க வீட்ல இருக்குறத விட என்ற வீட்ல என்ற பொண்ணு இன்னும் சந்தோஷமா தானுங்க இருப்பாங்க.. விடுங்க என்ற பொண்ண…” என்று கார்த்திக்கின் கையில் இருந்து விடுவிக்க… ஒரு கணம் மனைவியை கூர்ந்து பார்த்து தாமதிக்க.. அவளோ விக்கித்து நிற்க… சிறிதும் யோசிக்காமல் அங்கிருந்து வேக நடையோடு வெளியேறி விட்டான் கார்த்திக்.
“என்ன ஆச்சுங்க பா.. ஏன் மாமா.. என்ன அப்பா? என்று இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு கதறிக்கொண்டு தந்தையின் கைப்பிடி அழுத்தத்தை மீறி செல்ல முடியாமல் நின்றிருந்தாள் மேகலை.
கிருஷ்ணகுமாரோ வேதனையோடு மருமகளை தான் பார்த்தார். பின்பு மாணிக்கவேல் கூறியதை அவளிடம் கூறியதும்… மேகலைக்கு உடல் எல்லாம் அப்படியே நடுங்கியது!! ‘எங்கள் அந்தரங்கத்தை பேச இவன் யார்? இவன் எதற்கு இதை எல்லாம் பேச வேண்டும்?’ என்று தோன்ற.. அப்பாவின் கையை ஒரு உதறு உதற அவளை அதிரவோடு பார்த்தார் பசுபதி.
பெண்களில் பெரும்பாலானோருக்கு அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஏதோ ஆண்களுக்கு பிரச்சனை தான் என்று பேசிக் கொண்டிருக்க… இப்பொழுது அனைத்தையும் கூற பாமாவுக்கு சற்று ஒரு மாதிரியானது. ஆனால் அன்று மகள் சொன்ன பிறகுதான் மகனின் பிடித்ததை அவர் புரிந்து கொண்டார். இன்று மற்றொருவனும் இதே போல் பேச.. மகனின் மனதுக்குள் பெரும் காயம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தவர் “இன்னும் என்னங்க நின்னுகிட்டு இருக்கீங்க..? நம்ம முதல்ல நம்ம புள்ளைய பார்ப்போம்! கண்டவன் பேசினால் உடனே இவர்கள் எல்லாம் நம்பிடுவாங்களா? என் புள்ளையோட விருப்பம் என்னன்னு எனக்கு தெரியும்.. வாழ்ந்து பார்த்த என் மருமகளுக்கு தெரியும்!! இவனுங்களுக்கெல்லாம் என்ன தெரியும்?” என்றதும் கூட்டத்தில் இப்பொழுது சலசலவென்று பேச்சு வார்த்தை.
மேகலை முந்தானையை நன்றாக இழுத்து சொருகிக்கொண்டு “என்ற கூட கொஞ்சம் வாங் மாமாங்..” என்றவள் மாணிக்கவேல் முன் நின்று இருந்தாள். அவனை கண்களாலேயே வதம் செய்வது போல அத்தனை கோபத்தோடு பார்த்தவள், “மாமாங்.. இவன் ரெண்டு கன்னத்திலேயும் என்ற சார்பா நல்லா அடிங் மாமாங்!” என்றது தான் தாமதம்.. கிருஷ்ணகுமாருக்கு மருமகளின் பேச்சுக்கு மறு பேச்சு எது? அவள் சொன்னது போலவே அடிக்க.. அவனோ கண்களில் கனிவோடு தான் மணிமேகலையை பார்த்தான்.
“ச்சீ.. இப்படி பார்க்காத! உன்னைய அடிக்கக் கூட என்ற விரல் நுனி உன்ற மேல் தொடக்கூடாது தான் என்ற மாமாவ விட்டு அடிக்க சொன்னேன்!! வெக்கமாக இல்லை உனக்கு! எங்க அந்தரங்கத்தை பேசுறதுக்கு நீ யாரு? எங்களுக்குள் என்ன நடந்தது? ஏது நடந்ததுனு உனக்கு தெரியுமா? நீ வந்து பார்த்தியா? எப்படி நீ என் புருஷனா பேசலாம்? என் மாமாவை எப்படிடா நீ பேசலாம்?” என்றதும் அவனுக்கே ஒரு நிமிடம் தான் சொன்னது தவறோ என்று எண்ணும் அளவுக்கு இருந்தது மேகலையின் ஆவேசம்!!
“நீ அக்கா தங்கச்சி கூட தானே பொறந்த? உனக்கு நாலு அக்கா தானே… அவங்க புருஷனோட உன்ற வீட்டுக்கு வந்தா இப்படித்தான் ஒளிஞ்சு நின்னு பார்ப்பியோ?
இதே வார்த்தைய உன்ற அக்கா மாமாவை பார்த்து என் அண்ணன விட்டு பேச சொல்லவா? அப்போ உன் அக்கா எப்படி உணருறா.. துடிக்கிறான்னு நீ கேளு.. அப்ப புரியும் பொண்ணோட மனசு அதில்லுள்ள வலி!” என்றதும் கிருஷ்ணகுமார் மருமகளை தோளோடு அணைத்து..
“பாப்பா.. வேணாமுங்க.. வெசனப்படாதீங்க.. தம்பி புரிந்துகொள்வானுங்க..” என்றதும் அவளும் கண்ணீர் உடைப்பெடுத்தது!!
“வந்தவருக்கு தான் எல்லோரும் சேர்ந்து நல்ல மரியாதை கொடுத்து அனுப்பிட்டீங்களே!! இதுதான் உங்க மரியாதையா? 101 பதார்த்தத்தை போட்டு வயிறு அடைச்சா பத்தாதுங்க.. மனசு உடைச்சு அனுப்பிட்டீங்க இல்ல என்ற மாமன் மனச உடைச்சு அனுப்பிட்டீங்களே!” என்றதும் தான் மற்றவர்களுக்கும் தாங்கள் செய்தது தவறு என்று புரிந்தது.
ஒரு இடத்தில் நடக்கும் தவறினை ஆதரிப்பது மட்டுமல்ல பார்க்காமல் இருப்பதும் பெரிய தவறு தானே என்று மருகினர்.
“எவனோ ஒருத்தன் வந்து உங்க வீட்டு பொண்ணு பத்தியும் அவ புருஷனோட இருந்தத பத்தியும் பேசுறான்… நீங்க எல்லாம் வாய் மூடிட்டு கேட்டுட்டு இருந்திருக்கீக.. இந்நேரத்துக்கு இவனை கிழிச்சிருக்க வேணாம்.. பேசினா வாயில பெட்ரோல் ஊத்தி எரிச்சிருக்க வேணாம்? எல்லாத்தையும் விட்டுபுட்டு என் மாமன நோகடிச்சு அனுப்பிட்டீங்களே.. நல்லா வருவீங்க நீங்க எல்லாம்!! இனிமே ஒருத்தரும் என்கிட்ட பேசக்கூடாது ஆமா..” என்று அப்பாவையும் பார்த்து கையை நீட்டி பேசினாள்.
“சரி பாப்பா.. வாங்க நம்ம வீட்டுக்கு போகலாமுங்க..” என்று கிருஷ்ணாகுமார் அழைக்க..
“நான் வரலீங் மாமாங்..” என்றதும் அவர் திகைத்து போய் பார்க்க..
“நான் அங்க வந்துட்டா நீங்க அவரை சமாதானம் பண்ணி எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிருவீங்க.. அது வேணாமுங்க!! அப்படி நடக்க கூடாதுங்க!” என்றாள் வருத்தத்தோடு.
“என்ன பாப்பா.. இப்படி எல்லாம் பேசுறிங்க!” என்று வருந்தினார்.
“இவங்க பேசுனதுக்கெல்லாம் இவங்க வேதனை பட வேணாமாங்க.. இவங்க கண்ணும் முன்னாலேயே நான் புருஷன் கூட வாழாமல் இருக்கிறதை பார்த்து மனசு நொந்து போகட்டுமுங்க.. இனி ஒரு பொண்ண யாரையும் பேச விட்டு வேடிக்கை பார்க்க மாட்டாங்கள?” என்று அதன் பின் அவர்கள் வீட்டுக்கு சென்று அமர்ந்து விட்டாள்.
கார்த்திக்கும் விடு விடு என்று சென்றவன் வழியில் வந்த வாகனத்தில் ஏறி பெங்களூருக்கே சென்று விட்டான்.
“என்னங் மாமா… நம்ம வீட்டுப் பெண்ணை பேசினவன வெட்டி போடுனுங்க” என்று மற்றவர்கள் நாட்டாமையை பார்த்து ஆவேசமாக கூறினார். மாணிக்கவேலை உயிரோடு பந்தாடும் நோக்கத்தோடு நெருங்க..
அவனோ அனைவரிடம் கையெடுத்து கும்பிட்டு தான் தப்பாக அர்த்தம் பண்ணிக் கொண்டதாக மன்னிப்பு கேட்க.. அப்படியும் விடாமல் அவனை புரட்டி போட்டு கிழித்து விட்டனர். பசுபதி தான் “வேண்டாமுடா.. விடுங்கடா!! தப்பு நம்ம பக்கமும் தான்! அப்பவே இந்த பயலே ஒரேடியா முடிச்சி இருக்கோணும்.. அப்ப விட்டது தப்பா போச்சு.. பொழைச்சு போகட்டும் விடுங்க!” என்று விட்டார்.
கிருஷ்ணகுமார் எத்தனையோ முறை ஃபோனை போட்டும் கார்த்திக்கு பேசவே இல்லை. ஒரு முறை பாமா நேராக சென்றும் அவன் முகம் கொடுத்து பேசாமல் அறைக்குள்ளையே அடைந்திருக்க ஒரு நாள் முழுக்க இருந்து பார்த்தவர் பிறகு வந்து விட்டார்.
இங்கே மணிமேகலையோ தன் அறப்போராட்டத்தையும் ஒத்துழையாமை போராட்டத்தையும் துவங்கி இருந்தாள்.
முன்னாடி பசுபதி அம்மணி என்றால் “என்னங்ப்பா…” என்று அவர் முகம் பார்த்து மனம் நோகாமல் இருக்கும் பெண் இன்று அவர் முகம் பார்த்து பேசுவதே கிடையாது. அப்பத்தாவோடும் அளவோடு தான் பேசினாள்.
அவளுக்கு தேவையானவற்றை அவளே சமைத்து உண்டாள். ஏதோ விருந்தாளி வீட்டில் இருப்பது போலவே இருக்க பசுபதிக்கு தான் மனம் நொந்து போனது.
“நான் என்னங்க ஆத்தா பண்றது? என்ற பொண்ணு இப்படி வந்து இருக்காங்களே..” என்று பசுபதி அன்னையிடம் அழுக..
“மக்கும்.. ஊருக்கு தான் நாட்டாம! நாலையும் யோசிச்சு பேசுறதில்ல.. அது எப்படி கட்டிக் கொடுத்த பொண்ணு உன்ற வீட்டிலேயே வைச்சிக்குவேன் நீ சொல்லுவ? உன் வீட்ல இருந்தா சந்தோஷமா இருப்பான்னு சொல்லுவ? எங்க இப்போ உன்கிட்ட தான் இருக்கா சந்தோஷமா இருக்காளா? இல்லையே.. என்ற பேத்தி கண்ணுல உயிர்ப்பே இல்ல.. அவ முகத்துல துளி ஒளி இருக்கா? என்னதான் இருந்தாலும் புருஷனோட தான் அவ வாழ்வு ஜொலிக்கும் பசுபதி! நீ தப்பு பண்ண தானே.. நீயே போய் பேசி மாப்பிள்ளை கூட்டிட்டு வா” என்று அனுப்பி வைத்தார்.
‘அம்மாவையே பார்க்க முடியாது என்று அறைக்குள் அடைந்து கொண்டவன் பொண்டாட்டியை பிடுங்கி வைத்துக் கொண்ட மாமனாரிடமா பேச போகிறான்’ என்ற எண்ணத்தோடு தான் பசுபதி பெங்களூருக்கு சென்றது. ஆனால்
கார்த்திக் வேலை விஷயமாக சிங்கப்பூர் சென்று இருந்தான்.
மருமகனை காண முடியவில்லை வருத்தத்தோடு ஊர் திரும்பினார் பசுபதி.
தினமும் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ.. கோழி கூவுகிறதோ இல்லையோ.. சென்னையில் இருந்து கிருஷ்ணகுமாரும் பாமாவும் பேசி விடுவார்கள் மேகலையிடம் காலையில்!! அனித்ராவும் அனைத்தும் விஷயம் தெரிந்து அவளுக்கு எவ்வளவோ சமாதானம் செய்து.. வீட்டுக்கு வர சொல்ல மறுத்து விட்டாள் மங்கை.
இப்படியாக ஒரு மாதம் ஓடி விட..
ஒரு மாதமும் தங்கள் அறைக்குள்ளயே படுப்பதில்லை கார்த்திக். குளித்து முடித்து உடுத்துவதோடு சரி.. மற்ற அறையில் தான் உறக்கம்!! இன்று ஏனோ மனைவியின் ஸ்பரிசத்திற்கு உடலும்.. மனமும் ஏங்க.. “அவ அப்பா அனுப்பலனா என்ன.. நாம போய் ஒரு முறை பார்த்துட்டு முடிந்தால் தூக்கிட்டு வந்துவிடலாம்!” என்று கிளம்பி விட்டான். அவனுக்குபசுபதி பெங்களூர் வந்தது தெரியாது.
முதலில் கோயம்புத்தூரில் அவர்கள் வீட்டில் சென்று இளைப்பாறியவனுக்கு மனம் ஏனோ அவள் கண்களை பார்க்க தைரியம் இன்றி தவித்தது. இவனும் வார்த்தையை விட்டது தவறு தானே!! என்று நினைத்தவனுக்கு கலங்கி தவித்த கண்களோடு மனைவி அவன் கண்களில் உலா வர.. சரக்கு பாட்டில் எடுத்துக்கொண்டு அமர்ந்து விட்டான்.
இத்தனை நாட்களாக அவன் கண்டு கொள்ளாத அவளின் சிணுங்கும் குரலும்.. மென்மையான ஸ்பரிசமும்.. குழந்தைத்தனமும்.. இன்றோ
அவனை சுற்றி அலைந்தது!!
அவனை தொட்டு சீண்டியது!!
காற்றாகி உடைக்குள் தவழ்ந்தது!!
குளிர் பனியாய் அவனை சிலிர்க்க வைத்தது!!
சுடும் தனலாய் தேகத்தை தகிக்க வைத்தது!!
சுழற்றி அடிக்கும் புயலாய் அவனை திக்கு முக்காட வைத்தது!!
மேக பொதி தேகம் கொண்ட இனியவளை மென்மையாய் அவளை சுகித்து தருணங்கள் நினைவில் வர..
சட்டென ஆழ் கடலுக்குள் மூச்சு திணற அவனை அமிழ்த்தியது..
சுற்றும் சூறாவளியாய் அவன் நினைவுகள் அவளை சுழன்று வர.. இனி அவளன்றி சுவாசம் இல்லை!! ஏன் அவனே இல்லை…
கருமத்தம்பட்டிகாரி நீக்கமற தன்னுள் நிறைந்து விட்டாள்
என்பதை ஐயம் திரிபற புரிந்து கொண்டவன், சரக்கு பாட்டிலை தூக்கி எறிந்து விட்டு.. அவள் வீட்டை நோக்கி எட்டி நடை போட்டான்!!
இவனோ பதுங்கிப் பதுங்கி சென்று தோட்டத்து பக்கம் தள்ளாடிபடியே நிற்க.. இவன் மீது மற்றொரு உருவம் தள்ளாடிப்படி வந்து விழுந்தது.
“எவண்டா அது எடு பட்ட பய!” என்று போதையில் குளறிய குரல் மாமனார் என்பதை போதையிலும் புரிந்து கொண்டவனோ “ஐயையோ ஏற்கனவே பொண்ண அனுப்ப மாட்டேன்னு சொன்னார்.. இப்போ குடிச்சிருக்கிறத பார்த்தா.. காலத்துக்கு அனுப்ப மாட்டார் போலயே.. எஸ் ஆகிடுவோம்!” என்று அங்கிருந்து நகர்ந்தவனின் சட்டையை பற்றி இழுத்த பசுபதி, அவனை திருப்பாமல்.. இவர் சுற்றிக்கொண்டு அவன் முன்னால் போய் பார்க்க.. அங்கே தன் மருமகனை கண்டவரோ அதிர்ந்தார்!!
ஆனந்த அதிர்ச்சி!!
“ஐயோ ..மாப்பிள்ளைங்.. நீங்களா? நான் யாரோ களவாணிப் பயன்னு நினைச்சிட்டேனுங் மாப்பிள்ளைங்.. மன்னிச்சிடுங்க!!” என்று தள்ளாடிய அப்படியே அவர் தலையை குனிந்து கூற..
“ஐயையோ.. இல்ல மாமா நீங்க தான் என்னை மன்னிக்கணும்! நான் தான் இந்த மிட் நைட்ல குடிச்சிட்டு வந்து உங்களை தொந்தரவு பண்ணிட்டேன்.. சாரி!” என்று அவனும் தலைய குனிந்து கூற…
“அதெல்லாம் இல்லைங் மாப்பிள்ளைங்… நான் தான் தப்புங்.. பொண்ணு தனியா வந்துட்டாங்களேன்னு எனக்கு பீலிங்கிங்.. கொஞ்சம் தண்ணி அடிச்சிட்டேனுங்.. வந்து மாப்பிள்ளை உங்க.. உங்க.. மேலேயே விழுந்துட்டேனுங்… அய்யயோ.. என்னை மன்னிச்சுங் மாப்பிள்ளைங்..” என்று கதறியவர் இன்னும் குனிந்து மன்னப்பு கோர…
“இல்லைங்க மாமா.. நான் தான் தப்பு!! ஸ்டெடியா வந்த உங்க பாதையில குறுக்கா நான் கட்டைய போட்டுட்டேன். அதனாலதான் நீங்க என் மேல இடிச்சிங்க… சோ.. தப்பு என்னது!! நீங்க என்ன மன்னிச்சிடுங்க” என்று அவரை விட இவன் குனிய…
“இல்லை மாப்பிள்ளைங்.. நான் தானுங்க தப்பு!” என்று அவர் இன்னும் குனிந்து கூற…
“நோ நோ மாமா.. நான் தான் தப்பு! நான் தான் சாரி.. சாரி சாரி மன்னிச்சிடுங்க..” என்று உளறியப்படியே இவன் இன்னும் குனிய…
உண்மையில் இருவரும் மன்னிப்பு கேட்டது தாங்கள் விட்ட வார்த்தைகளுக்காக தான்.. ஆனால் வெளியிலும் வேறு மாதிரி வந்து விழுந்தது வார்த்தைகள்!!
மாமனும் மாப்பிள்ளையும் இப்படி மாறி மாறி.. விடிய விடிய.. குனிந்து குனிந்து.. மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருக்க.. காலையில் வந்த சூரியனோ “அடேய் இன்னுமா டா உங்க அலப்பறை முடியல!! நான் வந்துட்டேன்டா!!” என்பது போல் உக்கிரமாக உதித்தான்!!
இஷ்டமாகுமா???
Super jiya sis
Semma ma
Super sis ❤️
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 vera level…….