இஷ்டம் -21
கார்த்திகை பெங்களூர் வரை தேடி சென்று அவன் இல்லை என்று சோர்ந்த முகத்தோடு வந்தவர், மகளை நிறுத்தி “அம்மணி.. அப்பா செஞ்சது தப்புதான். ஏதோ புத்தி கெட்டு போய் அவன் பேச்சை கேட்டு அப்படி செஞ்சிட்டேனுங்க.. மாப்பிள்ளைங் கூட ஃபர்ஸ்ட் அமைதியாய் தானுங்க இருந்தாப்புல.. எல்லாம் இந்த கூறுகெட்ட மாணிக்கவேலால் தானுங்க..” என்றதும் அப்பாவை தீர்க்கமாக பார்த்தவள்,
“எவனோ ஒருத்தன் சொன்னா உடனே நீங்க சந்தேகப்படுவீங்க அப்படித்தானே?? நீங்க வாரோணும்னா.. வாரோணும்!! போகோணும்னா போகோணும்.. இருனா இருக்கோணும்.. புருஷன் கூட வாழனா வாழோனும்!! அப்படித்தானுங்களே நாட்டாம! நான் மாட்டேனுங்க… நான் இங்கன தானுங்க இருப்பேன்!! இங்கன இருந்தா தானே நான் சந்தோசமா இருப்பேன்னீங்க.. நீங்களே எங்க உங்க பொண்ணு முகத்தில வேணா வேணா உதட்டிலாவது சிரிப்பு கொண்டு வந்துருங்க பார்ப்போம்!” என்றவள் முற்றும் முழுதாக சோக சித்திரமாக அந்த வீட்டினுள் நடமாட இன்னுமே சோர்ந்து போனார் பசுபதி.
தீர்ப்பு சொல்ல போகும் நிலைமையில் எல்லாம் அவரில்லை!! ஆனாலும் அவரது உறவினர்கள் அவரை அப்படியே விடாமல் “இந்தா பசுபதி.. நீ இப்படியே இருந்தினாக்கா புள்ளைக்கு யாரு தேறுதல் சொல்லவா? நாம பண்ணது தப்புதான்!! நாம வேணும்னா அல்லோரும் ரெண்டு லாரியில் போய் மாப்பிள்ளைய சமாதானம் பண்ணி கூட்டிட்டு வருவோமா?” என்றார் அவருடைய ஒன்று விட்ட மச்சான்!!
“அய்யய்யோ!!! சும்மா இருங்க சித்தப்பா.. ஏற்கனவே மாமன் குழம்பி இருக்காரு. இதுல நீங்க வேற அவரை போட்டு குழப்புறீங்.. நாம இப்படி ரெண்டு லாரியில் போனா மாப்பிள நம்மள பத்தி என்ன நினைப்பாருங்? எதுவும் அடிக்க வந்துட்டாங்கன்னு நினைக்க மாட்டாருங்? அவரே பாவம் பொண்டாட்டியை பிரிந்து நொந்து போய் இருக்காரு.. அன்னைக்கு அத்தனை பிரச்சினையிலும் அவர் தங்கச்சியை விட்டுட்டாங் போனார்? கிளம்புனு சொல்லி கையோட கூட்டிட்டு போக தானுங்க பார்த்தாரு!! பெரிய மனுஷனா நீங்க எல்லாம் என்ன பண்ணி இருக்கோணும்? நீங்களே அனுப்பி வைக்கிறத விட்டுபுட்டு அம்மணி பிடித்து வைச்சிகிட்டு.. இப்போ லாரில போறாங்களாம்.. நல்லா வருது வாயில!” என்றான் இன்னொரு ஒன்று விட்டு மச்சானின் மகன்!!
ஒன்றும் பதில் அளிக்க முடியாமல் அமர்ந்திருந்தார் பசுபதி… ஆலமரத்தை வெறித்தவாறு!!
மனைவி இருந்த உடன் ஒற்றை குழந்தையோடு தனித்திருந்த அவரை அத்தனை உறவும் மறுமணம் செய்து கொள்ள சொல்ல.. முடியாது என்ற மறுத்துவிட்டார்!!
அதனால் தாய் இல்லை.. கூடவே ஒற்றை பெண் குழந்தையா இருக்கிறாள் மேகலை என்று சகோதர உறவுகள் ஆகட்டும் மாமன் மச்சான் உறவுகள் ஆகட்டும் அனைவருமே அவளிடம் பாசத்தோடு நடந்து.. அவளை தங்கள் குலப்பெண்ணாகவே தூக்கி வைத்துக் கொண்டாட.. எவனோ ஒருவன் பேச்சை கேட்டு எப்படி தம் வீட்டுப் பெண்ணின் மகிழ்ச்சியை குழி தோண்டி புதைத்து விட்டோமே என்று வருந்தினர்.
அன்று மேகலையின் தோழி கனகத்தின் திருமணத்திற்கு தான் சென்று விட்டு வந்தார் பசுபதி. எல்லோரும் அவரிடம் விசாரிக்கிறேன்.. ஆறுதல் கூறுகிறேன்.. தேற்றுகிறேன் என்று கூறி கூறி அவர் மனதை ரணமாக்கி அனுப்பி வைத்திருக்க.. வீட்டிற்கு வந்தவருக்கு கொஞ்சம் கூட மனதே இல்லை மகளை தனியாக இப்படி சோகசித்திரமாக பார்க்க…
அதனால் மனைவி இருந்தபோது கூட தன் மனதினை திடமாக வைத்திருந்தவரால்.. மகளின் வாழ்க்கையை இப்படி பார்க்க முடியாமல், வீட்டில் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக தண்ணி அடிக்க சென்று விட்டார்.
தண்ணி அடித்து விட்டு தள்ளாடி தள்ளாடி வரும் வேளையில் தான் மாப்பிள்ளையை பார்த்ததும், அவர் மனதிற்கு அத்தனை மகிழ்ச்சி!! அதுவும் திருட்டுத்தனமாக செல்கிறார் என்றால்.. மகளை பார்க்க தானே? அதுக்கு காரணம் நான் தான்!! உரிமையோடு வரவேண்டியவரை இப்படி திருடனாக வரவைத்து விட்டனே என்று அதற்கும் சேர்த்து தான் இந்த மன்னிப்பு படலம்.
கார்த்திக்குமே தான் வார்த்தை விட்டது தவறு என்று இத்தனை நாளில் உணர்ந்து இருக்க… அப்பா கூட தன் கருத்தைக் கேட்க மாட்டார் ஆனால் மாமனாரோ எதையும் தன்னிடம் கேட்காமல் செய்ய மாட்டாரே.. அப்படிப்பட்டவரிடம் என்ன வார்த்தையை பேசி விட்டோம்? என்று குற்ற உணர்ச்சி பொங்க இவனும் மன்னிப்பு கேட்க..
மாமனாரும் மருமகனும் மாறி மாறி மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தனர்.. போதையில்.. உளறலில்.. கூடவே தூக்கத்தில்!! அருகருகே படுத்துக்கொண்டு..
பசுபதி மல்லாந்து கடக்க அவர் தொப்பையை தலையணையாக பாவித்து படுத்து இருந்தவன் கொஞ்சம் போதையில் இருந்தவரின் தாடையை பிடித்து ஆட்டி “மாமா… மன்னிச்சிடுங்க மாமா” என்றான்.
அப்போதுதான் தூக்கம் கண்ணை சொருக சடடென்று விழித்தவர் மாப்பிள்ளை மன்னிப்பு கேட்டுவிட்டாரே.. நாம் கேட்கவில்லை என்றால் பெரிய தப்பு.. என்று தூக்கத்தை உதறி, அவனது கைகளை பிடித்துக் கொண்டு “மாப்பிள்ளைங்.. மன்னிச்சிடுங்க மாப்பிள்ளைங்…” என்றார்.
இப்படித்தான் விடிய விடிய அலப்பறைகளை கூட்டிக்கொண்டு இருந்தார்கள் இந்த அலப்பரையன்ஸ்!!
காலையில் வாசல் தெளிக்க வந்தவள் தோட்டத்தில் இருந்து ஏதோ முணு முணுப்பாக சத்தம் வருகிறது என்று பயந்துவிட்டாள் மேகலை. ‘இன்னும் அப்பத்தா எழுந்து வரல.. அப்பாவும் தூங்கிக் கொண்டிருப்பார். யாரை துணைக்கு கூப்பிட? யாராவது திருட்டுப் பயலா இருந்தா?’ என்று இன்னும் இருள் பிரியாத கருக்கல் பொழுதில் அவ்விடத்துக்கு செல்ல தயங்கி நின்று இருந்தாள் மேகலை.
அப்போது மாடு கறக்க பால்காரர் வர அவர் சொம்புவின் தந்தை. சொந்தம் தான். “என்றா கண்ணு.. இங்கன நின்னுகிட்டு இருக்க வாசல் தெளிக்காம? இந்நேரம் தெளிச்சு கோலம் போட்டு இருப்பியே?” என்றபடியே வந்தார்.
“இல்லை சித்தப்பா.. வாசல் தெளிக்க தானுங்க வந்தேன்! ஆனா பக்கத்துல இருக்குற தோட்டத்திலிருந்து ஏதோ முணுமுணுப்பா சத்தம் கேட்டுகிட்டே கேட்குதுங்க.. கிட்ட போய் பார்க்க கொஞ்சம் பயமா இருக்குங்க.. யாராவது களவாணி பயலா இருந்தா? அப்பாவும் தூங்கிட்டு இருப்பார்.. அவரை எழுப்பவும் யோசனையா இருக்கு. அதானுங்க நின்னுகிட்டு இருந்தேன்”
“என்னது களவாணி பயலா? அதுவும் நாட்டாமைக்கார வூட்டுக்குள்ளேவா? எடு அந்த உருட்டுக்கட்டைய!” என்றபடி தோளில் கிடந்த துண்டை எடுத்து தலையில் கட்டிக்கொண்டு வேஷ்டியை மடித்தவாறு அந்த தோட்டத்தை நோக்கி சென்றார்.
“சித்தப்பா பாத்துக்கோ..” என்று இவள் பின்னாடி வர..
“நீ வர வேண்டாம் அம்மணி.. அங்க இரு. நான் பாத்துட்டு வரேன். நீ அங்கனவே நில்லு” என்றவாறு அந்த தோட்டத்துக்கு நுழைந்து சத்தம் வந்த திசையில் பார்த்தவர் திகைத்தார்!!
முதலில் என்ன இப்படி நாட்டாமை விழுந்து கிடக்கிறார் என்று நினைத்தவர்.. அருகில் செல்ல மாப்பிளையும் கூட!! யாரும் அடித்து போட்டு விட்டார்களோ என்று தான் பயந்தது கிட்டே சென்று “அண்ணா பசுபதி அண்ணா… மாப்புள” என்று எழுப்ப..
அவரோ அவர் உலுக்கியதில் “மாப்பிள்ளைங் மன்னிச்சுடுங்!” என்று சத்தமாக கூவ.. அதுவரை அவர் தொப்பையில் சுகமாக தூங்கி இருந்தவன் திடுக்கிட்டு எழுந்து “மாமா.. என்னை மன்னிச்சுருங்க மாமா” என்று இவனும் உளறிவிட்டு விழுந்து விட்டான். இருவரும் மாறி மாறி உளறுவதை பார்த்ததும் அவருக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
தனியாக இவர்கள் ரெண்டு பேரையும் சமாளிக்க முடியாது என்று நினைத்தவர், அந்த தோட்டத்தில் இருந்து வெளியே வந்தார் முகத்தில் சிரிப்போடு.
“சித்தப்பா களவாணி பயலுக தானா? இல்ல வேற ஏதுமுங்களா?” என்று அச்சத்தோடு மேகலை கேட்க…
“களவானிங் தான் அம்மணி.. ஒரு களவாணி இல்ல ரெண்டு களவாணிக”.
“ஆத்தி!! ரெண்டு பேரா? எம்புட்டு தைரியம் இருக்கணும் நாட்டாமைக்கார வூட்டுக்குள் நுழைந்து இருக்கானுவோ.. அவங்கள சும்மா விட கூடாதுங் சித்தப்பா.. இருங்க நீங்க அந்த உருட்டுக்கட்டை எடுத்துக்கோங்க.. நான் இந்த தடியை எடுத்துக்கிறேனுங்க.. ரெண்டு பேரும் அவனுகள போட்டு தள்ளிடலாம்!” என்று அவள் தடியை தூக்க..
“கெட்டது குடி.. போ அம்மணி!” என்று சொன்னவர், அவள் கையில் இருந்த தடியை வாங்கி கீழே போட்டு “நம்ம ஊரு பொண்ணுங்க வீரம் தானுங்க அம்மணி!! அதுக்காக பெத்த அப்பாவையும் கட்டுன பூருஷனையுமா அடிச்சு அதை நிரூபிக்கோணும்!” என்றதும் “என்ன??” அவள் அதிர்ந்து பார்க்க…
“அங்கன வந்து பாரு அம்மணி.. உன்ற ஐயனும் வூட்டுகாரனும் பண்ற அலப்பறைகள” என்று அவளை அழைத்துக்கொண்டு காட்ட.. இருவரும் தூக்கத்தில் இருந்தாலும்.. “மாமா..””மாப்பிள்ளை..”
என்று உலறியதை கண்டு
இருவரும் குடித்து வந்துள்ளனர் என்று ஒரு பக்கம் கோபம் வந்தாலும்.. மறுபக்கம் மனதில் அவ்வளவு மன நிம்மதி!! தன்னை தேடி வந்த கணவனை பார்த்ததும்! அதை விட இருவரும் மன்னிப்பு கேட்டுக் கொண்ட விதத்தில் சிறிது சிரிப்பு கூட முகிழ்த்தது அவளுக்கு.
அதன் பின் உதவிக்கு ஆட்கள் அழைத்து இருவரையும் தூக்கிக்கொண்டு உள்ளே செல்ல முயல… “டேய் விடுங்கடா எவன்டா என் மாப்பிள்ளை தூக்குறது? என் மாப்பிள்ளை மேல கைய வச்சா வெட்டி புடுவேன்” என்றவர் வேட்டியை கூட கட்ட முடியாமல் தள்ளாடியபடி ஆடினார்…
“ஆமா.. ஆமா.. என் மேல கைய வச்சீங்க.. எங்க மாமா உங்களை சும்மா விடமாட்டாரு டா? அவரை யாருனு நினைச்சீங்க.. 18 படி நாட்டாமை!!” என்றவாறு இவனும் உளர…
பார்த்துக் கொண்டிருந்தவர்கள்தான் பைத்தியமானர்கள் இவர்களை வைத்துக் கொண்டு.. பின்பு ஒரு வழியாக முற்றத்தில் இவர்களை அமர வைத்து.. அண்டா அண்டாவாக சமஞ்ச பொண்ணுக்கு தலைக்கு தண்ணீர் ஊற்றுவது போல சுற்றி நின்று பங்காளி மாமன் மச்சான்கள் அனைவரும் தண்ணீர் ஊற்றி ஓரளவு போதையை இறக்கி வைக்க.. அதற்குள் எலுமிச்சை சாறு கொண்டு வந்திருந்தாள் மேகலை.
அதையும் அவர்கள் வாயைத் திறந்து உள்ளே ஊற்றிவிட்டு இருவருக்கும் வேறு உடை மாற்றி விட்டு சென்றது அவ்உறவு கூட்டம்… பாசக்கார உறவு!!
கூடத்திலே இருவரையும் உருட்டி விட்டு பேத்தியும் அப்பத்தாவும் சமையலை பார்க்க சென்று விட்டனர்.
எப்பொழுதும் அதிகாலையில் எழுந்து பழக்கமுடைய பசுபதிக்கு 10 மணி போல் விழிப்பு வந்து ‘எங்க இருக்கோம்? நேத்து தண்ணி அடிக்க போனோமே.. அப்புறம்.. அப்புறம்.. மாப்பிள்ளை வந்தாரே ஓ அது கனவோ? கனவுல கூட வந்து நம்ம மாப்பிள்ளைங் மன்னிப்பு கேட்டாரு! ஆனா நம்ம நிஜத்துல கூட கேட்கலையே?’ என்று மிகவும் வருத்தப்பட்டார்.
“நாமளும் எப்படியாவது இன்னைக்கு மாப்பிள்ளை கனவுல போய்.. ஒரு பத்து மன்னிப்பு கேட்டு புடனும். ஆமா.. இல்லன்னா நம்ம மாப்பிள்ளைக்கு மரியாதையா இருக்காது” என்று வெகுவாக சிந்தனையில் ஆழ்ந்திருந்தவர் மேலே தொப்பென்று ஒரு கால் வந்து விழ… திடுக்கிட்டு திரும்பி பார்க்க அங்கு கார்த்திக் தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
பல நாள் தவம் புரிந்து பக்தனுக்கு இறைவன் காட்சியளித்தது போலவே கண்கள் ஒளிர.. முகத்தில் அத்தனை பரவசம் மின்ன.. மருமகனை பார்த்தார் பசுபதி.
“அப்போ நேத்து நடந்ததெல்லாம் கனவு இல்லையா?” என்று இவர் யோசித்துக் கொண்டே இருக்க உள்ளிருந்து ஒரு லோட்டா அவர் மீது வந்துவிழ.. திரும்பிப் பார்க்க அங்கே இடுப்பில் கை வைத்துக் கொண்டு நின்றார், அவரது அன்னை நாகவள்ளி பேருக்கு ஏற்றது போல கோபத்தில் புசுபுசு என்று மூச்சை விட்டபடி…
“அறிவு இருக்கிறவன் செய்ற காரியமாடா இது? குடிச்சிட்டு வந்து அலப்பறை பண்ணிட்டு கிடந்திருக்க.. இதுல மருமகன் வந்தது கூட தெரியாம அவரையும் சேர்த்து தோட்டத்துல படுக்க வைச்சிருக்க.. ஏதாவது பூச்சி பொட்டு கடிச்சி வச்சிருந்தா என்னடா பண்ணியிருப்ப? ஆளு வளந்திருக்கியே தவிர அறிவு வரல! இந்த அறிவு வச்சிட்டு 18 பட்டிக்கு நீ நாட்டாம வேற!!”என்று பிடி பிடி என்று காலையிலேயே சுப்ரபாதத்தை தொடங்கிவிட்டார் நாகவள்ளி!!
“ஆத்தா.. உஷ்.. உஷ்.. மாப்பிள.. தூக்கம்..” அப்படி இப்படி என்று எத்தனை சைகை செய்தாலும் நாகவள்ளி விடவே இல்லை! இத்தனை வருடம் இல்லாத பழக்கம் இன்று ஏன் வந்தது என்று அத்தனை ஆற்றாமை. இருவரும் கிடந்த நிலைமையை பார்த்து பெற்றவராய் மனதிற்குள் பிசைந்தது.
“ராவுல தோட்டத்துல கெடந்து இருக்காங்க.. ரெண்டு பேர்ல யாருக்கு எது நடந்தாலும் நமக்கு தானே வலியும் வேதனையும்” என்று உள்ளுக்குள் மருகியவர் அத்தனையும் போட்டு மகனை வெளுத்து வாங்கி விட்டார்.
அதன் பின்னே சமாதானத்தோடு அவர் உள்ளே செல்ல இவரும் பக்தி பரவசத்தோடு மீண்டும் மருமகனை பார்க்க…
ஒற்றைக்கண் திறந்து பார்த்தவன் மாமனாரின் பரவச முகத்தை பார்த்ததும் “அப்பத்தா போய்ட்டாங்களா மாமா?” என்று குசுகுசு குரலில் கேட்டான்.
மருமகன் தன்னிடம் சாதாரணமாக பேசியதை ஏதோ தெய்வத்தின் குரலை கேட்டது போல அத்தனை மகிழ்ந்தவர் “அப்பவே போயிட்டாங் மாப்பிள்ளைங்…” இன்று இவரும் குசு குசுப்பாக பதில் அளித்தார்.
“அப்பாடி!! என்ன வாய்.. என்ன வாய்.. எங்க அப்பா எல்லாம் தோத்துப் போயிடுவார் போல.. இந்த பெத்தவங்களே இப்படித்தான் மாமா!! ரொம்ப பேட்!!” என்றதும் அவரும் ஆமாம் மாப்பிள்ளைங் என்று ஜால்ரா போட…
“என்ன மன்னிச்சிடுங் மாப்பிள்ளைங்..” என்று இவர் ஆரம்பிக்க..
“ஐயோ போதும் மாமா! ராத்திரி பூரா நம்ம ரெண்டு பேரும் கேட்டுகிட்டது. நான் இப்ப என் பொண்டாட்டிய பாக்கணும். நான் அவ ரூமுக்கு போறேன். நீங்க இங்க சமாளிங்க..” என்று மெதுவாக அவளது அறைக்கு சென்று விட்டான்.
அப்பத்தா திட்டும்போது சமையல் முடித்து வந்தவள், அப்பாவை ஒரு கோப பார்வை பார்க்க.. “நீயுமா அம்மணி..” என்றவாறு தலையை குனிந்து கொண்டார். ‘இப்போதைக்கு அப்பத்தா நிறுத்தாது!’ என்று நினைத்தவள் தன் அறைக்கு சென்று விட்டாள்.
ஒரு மாத கால பிரிவு அவள் முகத்தில் ஒளியை இறக்கி.. உடலை இளக்கி.. இருந்தது. ஒல்லியாக இருந்தாலும் கொண்டவன் கண்களுக்கு பேரழகியாக ஒயிலாக தான் தெரிந்தாள் வதனியவள்!!
ஜன்னல் வழியே வெறுத்தவாறு நின்றிருந்தவள் முகத்திலும் மெல்லிய புன்னகை. அது என்னதான் கோபம் இருந்தாலும் கணவன் தன்னை விட்டு விடவில்லை.. மறக்கவில்லை என்று!!
அவனின் கருவளையம் விழுந்த கண்களும்.. மெலிந்த தேகமும் அவளின் பிரிவில் வருந்தி இருக்கிறான் என்று காட்டிக் கொடுத்திருக்க.. அதனை எண்ணியப்படி நின்று இருந்தவளின் மூக்கினில் மன்னவனின் வாசம்!! தன்னவனின் வாசம்!!
பெல்லு… என்று ஏக்கமான குரலில் கார்த்திக் கூப்பிட திரும்பி பார்த்தவளும் திடுக்கிட்டாள்.
இரு கைகளில் விரித்து வா என்று அவன் அழைக்க.. தாமதிக்காமல் அந்தக் கைகளுக்குள் சிறையானாள் மாது!!
“ரொம்ப தவிக்க விட்டுட்டடி… மேகா..” என்றவனின் புதிய செல்ல பெயரில் கண்கள் பிரகாசிக்க அவனைப் பார்க்க…
அவ்வளவுதான்.. சட்டென்று அவனுக்குள் கணன்று கொண்டிருந்த தீப்பிழம்பு வெடித்தது. அவளை இறுக்கி அணைத்து அள்ளித் தூக்கினான். அவன் சட்டென இப்படி மாறுவான் என்று எதிர் பார்க்காதவள் சிணுங்கி அவன் தோள்களை பிடித்து இறுக்கினாள். அவள் உதட்டை லபக்கென கவ்வியவன்.. கடித்து பின்.. உறிஞ்சி.. மென்று தின்றான். அவளோ கண்களை விரித்தபடி அவன் நெஞ்சில் இருந்த முடிக் கற்றைகளை அழுந்தப் பிடித்து இறுக்கினாள்.
ஒரு நிமிடம் அவளின் உதடுகளை சுவைத்தபின் அவளை தரையில் இறக்கி விட்டான் கார்த்திக்!!
“ப்ப்பா.. என்ன மொரட்டுத்தனமுங்… மாமா.?” என்று லேசான வெட்க முகத்துடன் அவனைப் பார்த்தாள் மேகலை!!
அவள் இடுப்பில் கை வைத்து தன்னோடு இறுக்கியவன்… காதோரம் இருந்த அவளது முடிக்கற்றைகளை காதுக்கு பின்னால் ஒதுக்கிவிட்டு.. இரு கைகளாலும் அவளது முகத்தை தாங்கி.. அத்தனை ஆசையோடு பார்த்தான்.
அவன் கண்களில் காதல் வழிய இவன் தன்னவன் தானா என்று இவள் விழிவரித்து பார்க்க.. ‘ஆம்.. நான் தான்!’ என்று கண்மூடி திறந்தான்.
“என் மேல் கோபமா மேகா..” என்றான் கார்த்திக்!!
அவன் மேலேயும் கோபம் இருந்ததுதான். என்ன இருந்தாலும் அந்த வார்த்தையை விட்டிருக்கக் கூடாது அல்லவா? ஆனாலும் அப்பொழுதும் தன்னை விட்டு விடாமல் அழைத்துச் செல்லவே நினைத்தவனோடு செல்லாதது அவள் தானே.. அவள் சற்று தள்ளி போக…
“ம்ஹூம்..!!” என்றவனின் மறுப்பில் அருகே வந்தவளின் கண்களை பார்த்து.. “கட்டிப்பிடி மேகா.. என் எலும்பு நொறுங்க.. அழுத்தமாக கட்டிப்பிடி!! உன் ஸ்பரிசத்தை உன் இருப்பை நான் உணர்ந்து கொண்டே இருக்கணும் டி மேகா! இனி ஒரு பிரிவு இதுபோல் வரக்கூடாது ப்ளீஸ் டி!” என்று குரலில் அத்தனை ஏக்கம்… கிறங்கி ஒலித்தது அவனது குரல்.
அவள் ஆவென்று பார்த்தவள், மெல்ல கட்டிப்பிடித்தாள். அதனை அவன் இறுக்கினான்.
“அப்போ.. ஏனுங் அப்படி பேசினீங்.. மாமா..?”
“அது… அது.. சாரி… டி! அந்தப் பய பேசின பேச்சில் கொஞ்சம் நிதானத்தை இழந்து…” என்று விளக்கம் அளிக்க முடியாமல் தவித்தவனின் வாயை தன் கரங்களால் பொத்தியவள் வேண்டாம் என்று தலை அசைத்தாள்.
அவள் இடுப்பை தழுவி அணைத்தவன் “நாம தோட்ட வீட்டுக்கு போகலாமா?” என்றான் மனைவியின் கழுத்தில் முகம் புதைத்து..
“ஏனுங்.. எதுக்குங்?” என்றாள்.
“அது.. அது.. எனக்கு உன்னை முழுசா உணரணும்டி.. உன் ஸ்பரிசத்தோடு உன் வாசத்தையும் சுவாசிக்கணும்! இங்க இருந்தா மாத்தி மாத்தி வந்து நலம் விசாரிக்கிறேனே என்னை உன் கூட இருக்க விட மாட்டானுங்க உன் சொந்தக்காரவங்க!” என்றான் தவிப்போடு!!
“ஒரு மாசமா தனியா தானுங்களே இருந்தீங்க? இப்ப மட்டும் என்னவாம்? வந்து எல்லாரும் நலம் விசாரிச்சிட்டு போகட்டுமுங்க.. அதுக்கு பின்னே பார்க்கலாமுங்க” என்று முழங்கையால் அவன் விலாவில் குத்தினாள்..
“சரி.. எதுக்கு அந்த அர்த்தராத்திரியில் வந்தீங்க?” என்று சற்று முறைப்போடு கேட்டாள். அவள் முறைப்பிலே தான் தண்ணி அடித்ததை தான் குறிப்பாக கேட்கிறாள் என்று புரிய..
“உங்க அப்பாதான் உன்னை அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாரா? அதான் உன்னை பார்க்கலாம்னு.. அது.. தண்ணி அடிச்சா கொஞ்சம் கூடுதல் தைரியம் வரும். முடிஞ்சா உன்ன தூக்கிட்டு வந்துடலாம்னு கிளம்பி வந்துட்டேன்” என்று சிரித்தான்.
“தூக்கிட்டு போக வந்த ஆள பாருங்? தோட்டத்துல மாமனார கட்டி புடிச்சிட்டு உருண்டு கிடந்தீங்.. ரெண்டு பேரையும் ஏதாவது பூச்சி பொட்டு கடிச்சிருந்தா என்ன ஆகிறதுங்க?” என்று அவளின் பதட்டத்தில்..
“கூல்.. கூல் மேகா! அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அது தான் அய்யனார் கணக்காக என் மாமனார் பக்கத்தில் இருந்தாரே!!” என்று அவன் சொல்லி சிரிக்க.. இவளோ முறைக்க..
“உங்களை நல்லா திட்டனும்னு வாயில வருதுங்..” என்றாள் முறைப்போடு.
“திட்டு..” என்றவன் அவளை மடியில் அமர வைத்து, இறுக்கி பிடித்து தன் அதிரங்கள் கொண்டு அவள் காது மடலில் உரசி.. ஜிமிக்கியை பற்களால் கவ்வி பிடித்து என்று அவன் சரசங்கள் செய்ய.. பேச்சு எங்க மூச்சுக்கே தத்தளித்தாள் பேதை!!
“மேகா… என்னை திட்டுறேன்னு சொன்ன?” என்று காதுக்குள் அவன் மொழிய…
மொழி புரியாதவள் போல் அவனை பார்த்தவள் கண்கள் அத்தனை மோகனத்தில் வழிய…
“எல்லாம் மறந்து போச்சுங்.. மாமா ” என்றவளின் மெல்லிய பேச்சில்..
சிரித்தவன் அவள் உதட்டை பிடித்து இழுத்து சுவைத்தான்.
அவளது இதழ் நீர்.. மெல்லிய பனித்துளியாக அவன் நாவில் இறங்க.. இதழ்களுக்கு இடையே போர் மூலம் அபாயம் அறிவிக்கப்பட..
“மாப்பிள்ளைங்…” என்று சத்தமாக வெளியில் குரல் கேட்க..
“போச்சு.. போச்சு! வந்துட்டானுங்க உன் சொந்தக்காரவங்க!!” என்று அலுத்தாலும் சந்தோசத்தோடு வெளியே சென்றான் கார்த்திக்!!
செல்லும் கணவனை இவள் பார்த்திருக்க.. இரண்டு எட்டு நடந்தவன் மீண்டும் அவள் இடை வளைத்து “நீ..நீ.. நீ.. என்னோட இஷ்டம்டி மேகா!” என்று அழுத்தமாக அவளது இதழில் தன் அச்சாரத்தை பதித்து விட்டே சென்றான்!!
Wowwwwww veryyy niceeeeeeeee bt rmba small story agidichii sisss💐🎉🎉🎉❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍🤩🤩🤩🤩😍😍😍😍😍😍
Enna sis idhu ippidi aittu adhukkulla story mudinjutta