ATM Tamil Romantic Novels

எங்கு காணினும் நின் காதலே… 6

6

 

 

ஆமாம் நான் தான் செய்தேன் என்றான் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பஞ்சாயத்தார் முன்னிலையில் வெற்றி வேந்தன்!!

 

சிங்கம் சிக்கிடுச்சு என்று மனதுக்குள் குதூகலித்த மருதுவோ.. “பார்த்தீய்ங்களா ஐயா.. அவன் வாயாலேயே அவனே ஒத்துக்கிட்டான். எங்க வீட்டு பொண்ண கடத்திட்டு போய் தப்பு செய்ததுமில்லாமல் அத நெஞ்சை நிமிர்த்தி கிட்ட வேற சொல்லுறான். வெள்ளையுமா சொள்ளையுமா சுத்தினாலும் உள்ளுக்குள்ள இருப்பதெல்லாம் வெறும் கசடு தானு இதோ நிரூபிச்சிட்டான்ல.. இவனை எல்லாம் சும்மா விடாதீய்ங்க” என்று கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு இதுநாள்வரை மனதில் வளர்த்த வன்மத்தை எல்லாம் வார்த்தைகளாக மாற்றினான் மருது.

 

 

அவன் பேசப்பேச வேந்தன் அண்ட் கோவுக்கு கோபம் எகிற.. பஞ்சாயத்து என்று தந்தைமார்கள் இருவரும் பொறுமை காக்க.. தனயனோ துள்ளிக் குதித்தான் மருதை வேட்டையாட.. கதிரின் கையை இறுகப் பற்றியிருந்த வெற்றியின் கையை மீற முடியாமல் அமைதி காத்தான் கதிர்.

 

 

மருது இவ்வளவு பேசியும் துளிகூட தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அதே நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையாக நின்றிருந்தான் வெற்றி வேந்தன்!!

 

“அடேய் சத்த பொறுப்பா.. அதான் அந்த புள்ள ஒத்துகிடுச்சு இல்ல.. அதுக்கு நாங்க பஞ்சாயத்துல பேசி முடிவு பண்ணுவோம். நீயேன் தவளை மாதிரி கத்திக்கிட்டு கிடைக்கிறவன்” என்று பஞ்சாயத்து பெருசு ஒன்று அவனை அடக்க..

 

பெரிய தலைகளும் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டே இருந்தன. இதுவரை ஒரு அடிதடி.. வரம்பு மீறிய பேச்சு.. என்று எந்த ஒரு வம்பு தும்பிலும் அடிபடாத வெற்றிவேந்தன் எப்படி இன்று இவ்வாறு நடந்தான் என தங்களுக்குள்ளேயே அங்கலாய்த்துக் கொண்டனர்.

 

 

அடுத்து ஒரு பஞ்சாயத்து தலை தொண்டையை செருமி பக்கம் பக்கமாக பேச எத்தனிக்க… “ஐயா ஒரு நிமிஷமுங்க.. நான் கொஞ்சம் பேசணும்” என்றான் வெற்றி வேந்தன்.

 

 

“இன்னும் பேச என்ன இருக்கு? அது தான் குத்தத ஒத்துக்கிட்டில” என்று அவனைப்பார்த்து எள்ளலாக சிரித்தான் மருது.

 

 

“நான் எப்ப குத்தம் செஞ்சேன்? அதை ஒத்துக்க” என்றானே பார்க்கலாம்!!

 

இந்த வார்த்தையில் மருது குடும்பம் மட்டுமல்ல.. வேந்தன் குடும்பமே அதிர்ச்சியில் அவனை திரும்பிப் பார்த்தது. கதிருக்கு மட்டும் அண்ணன் ஏதோ பெரிதாக பிளான் செய்து விட்டான் என்று புரிய அவனை ஒட்டி நின்று “அதானே!!” என்று ஒத்து பாடினான்.

 

 

இருக்கிற முன் உச்சி மூடி நாலையும் பித்து கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர் பரிதாபத்துக்குரிய பஞ்சாயத்து தலைகள்!!

 

“என்னையா சொல்லுற.. அப்ப நாங்க கேட்டதற்கு ஆமாம் தானே சொன்ன.. அப்படின்னா குத்தத்தை ஒத்துக்கிட்டதா தானே அர்த்தம்.. இப்போ இல்லைன்னு சொல்லுறியே அப்பு?” என்று ஒருத்தர் கேட்க..

 

 

“நீங்க என்ன கேட்டீய்ங்க?

 

“அந்த பொண்ணுகிட்ட முறைதவறிய நடந்தயானு கேட்டோம்?” என்றவர் தன் பக்கத்தில் இருந்தவர்களை பார்த்து நான் கேட்ட கேள்வி சரிதானே என்று பார்க்க அவர்களும் தலையசைத்து ஆமோதித்தனர்.

 

 

“நானும் ஆமாம்ன்னு சொன்னேன்” 

 

 

“அப்போ இதுக்கு என்ன அப்பு அர்த்தம்? குத்ததை ஒத்துகிட்ட மாதிரி தானே!!” என்று அவனை மடக்கி விட நினைப்புடன் தனது மீசையை அந்த பஞ்சாயத்து தலை தடவி கொடுக்க..

 

“இப்பவும் சொல்றேன்.. நான் குத்தம் செய்யல.. அந்த பொண்ணு கிட்ட வரம்பு மீறி நடந்து கிட்டியான்னு நீங்க கேட்டீய்ங்க அதுக்குதான் ஆமாம் சொன்னேன்.. ஆனா நானா போய் அந்த பொண்ண அவிய்ங்க வீட்டிலிருந்து தூக்கிட்டு போனேன்? இல்லை நாலு பேர் முன்னாடி வம்புடியாக கைப்புடிச்சு இழுத்திட்டு போனேனா?” என்றவன் கேள்வியில் இப்பொழுது பஞ்சாயத்து தலைகளும் மருது குடும்பமும் முழித்தது.

 

 

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பஞ்சாயத்தார் நிவேதிதாவை பார்க்க…

 

“காலையில உன் கொடைரோடு வீட்டிலிருந்து தான அவள நாங்க கூட்டிட்டு வந்தோம்.. அப்போ நீ தான அவள தூக்கிட்டு போனது” என்று மருது அவனை கிடுக்கிப்பிடி போட..

 

மாட்டுவானா என்ன? மருதுவின் பதிலே அலட்சியப்படுத்தி பஞ்சாயத்தாரை பார்த்து

“என்ன நடந்துச்சுன்னு முழுசா நான் சொல்றேங்கய்யா நீங்க கேளுங்க” என்றான் வெற்றி!!

 

 

சரி அண்ணன் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டான் என்ற நினைப்போடு மருதுவை பார்த்து நக்கலாக சிரித்தான் கதிர்.

 

“கடந்த மூணு நாளா நான் ஊரிலேயே இல்ல.. திருச்சிக்கு வேலை விஷயமா போய்ட்டு இன்னைக்கு காலைல தான் வந்தேன்.. வரும்போதே கொடைக்கானல் இருக்கிற எங்க பேட்டரியில் இருந்து போன் வந்தது. அதனால வீட்டுக்கு கூட போகாமல் கொடைரோடு போக வண்டியை பைபாஸில் திருப்பும்போது எதுத்தாப்புல நிக்குதே இந்த பொண்ணு தான் வண்டிய நிப்பாட்டிச்சு.. நீங்களே அந்த பொண்ணுகிட்ட ஆமாவா? இல்லையான்னு கேளுங்க? என்றான்.

 

 

பஞ்சாயத்து தலைகள் இப்போது தலையை நிவேதித்தா புறம் திருப்ப..

 

“ஆமாம்.. ஆனா..” என்று அவள் அடுத்த வார்த்தை பேசும் முன் அவளை மடை அடைத்து.. 

 

 

“கேட்டீய்ங்க இல்ல.. நான் பாட்டுக்கு சிவனேனு கார்ல போயிட்டு இருந்தவனை இந்த பொண்ணு தான் காரை மடக்கி நிறுத்திச்சு.. நானும் ஏதும் அவசரம் போலனு அந்த பொண்ண ஏத்திட்டு போனா.. எங்க போறீங்கனு கேட்டுச்சு.. நானும் எதார்த்தமா கொடைக்கானலுக்கு போறேன் சொன்னேனுங்க.. நானும் அங்கன தான் போறேன்.. என்னை இறக்கி விடுங்க சொன்னுச்சு..

 

 

உங்களுக்கே தெரியுமே நம்ம ஊர்க்காரர் பயலுவோ பொண்ணை மண்ணை தெய்வமா கும்பிடுவோம்னு.. சரின்னு கூட்டிட்டு போகும்போது மலை ஏறுறதுக்குள்ளேயே இருட்டிடுச்சு..

அதுக்கு மேல பாதுகாப்பு இல்லைன்னு தங்கினோம்.. 

 

 

இதுக்கு அப்புறம் நான் என்ன சொல்ல? இருள் சூழ்ந்த நேரம்.. மலைப்பாங்கான இடம்

இளமையின் தேடல்னு வச்சுக்கோங்க..” என்று பட்டவர்த்தனமாக சொல்ல.. பஞ்சாயத்தே பேச்சு மூச்சு இல்லாமல் திகைத்து நின்றது.

 

 

“அதோட இந்த பொண்ணு யாருன்னு எனக்குத் தெரியாது.. அதுவா வந்து வண்டியை மறித்து ஏறினா நாம என்ன நினைக்கிறது? சொல்லுங்க? புரிஞ்ச பெரியவங்க எல்லாம் நிறைய பேரு இருக்கீங்க.. நீங்களே சொல்லுங்க நியாயத்த” என்றான் மொத்தமாக ப்ளேட்டை திருப்பி போட்டு..

 

அவளை.. அவளின் நடத்தையை சரி இல்லை என்று சொல்லாமல் சொன்னான் வெற்றி..

 

“அதுவுமில்லாம பழங்காலத்தில் தேவரடியாள் ஒரு இனம் இருந்தாய்ங்க.. அவிங்களா விருப்பப்பட்டு ஒரு ஆணை அழைக்கும்போது அந்த ஆண் மறுத்தால் அது பெரும் பாவம் என்று சொல்லுவாய்ங்க.. என் நிலையும் அன்னைக்கு அதுதானுங்க” என்று கொஞ்சம் கூட பொய் சொல்கிறோம் என்றில்லாமல் அவன் அவளைப் பற்றிக் கூறிக் கொண்டே செல்ல..

 

 

“வேந்தா!!! போதும் நிறுத்து!!” என்று உக்கிரமாக அவனைப் பார்த்து முறைத்தார் புனிதா.

 

பின்பாதி வெற்றி சொன்ன விஷயங்கள் நிவேதிதாவுக்கு புரியாமல் இருக்க.. தன் அருகில் இருந்த தனபாக்கியத்தைக் கேட்க.. அவரோ அவன் சொன்னதின் அரத்ததை திரித்து அப்படியே திருப்பி போட்டு “உன்னை விலைமாது.. காசுக்காக வரவனு சொல்லுறான் பாப்பா” என்று அழுதார்.

 

இதுவரை அவளுக்கு ஒருதடவைக் கூட மனம் இவ்வளவு வலித்தது இல்லை. காரணம் அப்படியாகிய சம்பவங்கள் ஏதும் அவளின் வாழ்வில் நடந்தேறவில்லை இன்னும். 

 

ஆனால், இப்போது வெற்றி சொன்ன வார்த்தைகள் அவளின் காதில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டே இருந்தது. 

அடர் அமிலத்தை அபப்டியே மேனியில் ஊற்றியது போல தகித்தது.. வலித்தது அவளுக்கு.. கண்ணீரும் கூடவே பொலபொலவென அவளை அறியாமலேயே வரத் தொடங்கியது.

 

 

மகாத்மா சொல்லியிருக்கிறார்.. எந்த ஒரு பெண்ணும் தன் மனதால் தவறு செய்யாதவரை, உடலால் அவளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் கற்பு இழந்ததாக பொருள் அல்ல என்று!!

 

 

அதை தான் வெற்றியின் வீட்டில் இருந்தபோது தனக்குத்தானே சொல்லிக்கொண்டு திடமாக இருந்தவளை அவனின் ஒற்றை வார்த்தை கிழித்துக் கூறு போட்டது.

 

 

அழகு சுந்தரம் தன் மகன் மருதுவை பார்த்து “இதுக்குத்தான்யா பஞ்சாயத்து வேண்டாம் வேண்டாம்னு தலபாட அடிச்சுகிட்டேன்.. இப்போ புரிஞ்சுதா உனக்கு??” என்று ஆதங்கப்பட்டார். 

 

 

வாஞ்சி வேந்தனும் வெற்றிடம் இதை சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. 

 

 

“வேந்தரே என்ன இது?” என்று அவர் உறும..

மலரோ.. “ஏன் அண்ணே நம்ம புள்ளைய திட்டுறீய்ங்க.. அது நடந்த உண்மையை தான அப்படியே சொல்லுது” என்று மனதின் பெருவலிக்கு ஒரு சிறு ஒத்தடம் போல இந்த நிகழ்வை நினைத்து நிம்மதியானார்.

 

 

“இதற்குமேல் பஞ்சாயத்து வேண்டாமுங்க. நாங்க பிராது கொடுத்தது திரும்ப வாங்குகிறோம்” என்று அழகுசுந்தரம் கிளம்ப அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவானா என்ன?

 

 

“இருங்க.. இருங்க.. நீங்களா வந்தீய்ங்க தப்பே செய்யாத என் பேருல பழியை போட்டுட்டு.. இப்போ பிராது வேணான்னு போனா என்ன அர்த்தம்? அப்புறம் எதுக்கு பஞ்சாயத்துல பிராது கொடுத்தீய்ங்க?” என்று அவன் கேட்டதுக்கு பதில் அளிக்க முடியாமல் சங்கடமாக உணர்ந்தார் அழகுசுந்தரம். ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க முடியும் அவரால்!! ஆனால் அது தங்கள் பெண்ணையே பூமராங்காக வந்து தாக்கும் என்று உணர்ந்தே அமைதிகாத்தார்!!

 

 

“இங்க பாருங்க ஐயா!! எனக்கு கல்யாணம் ஆகல. எந்த பொண்ணையும் இதுநாள் வரைக்கும் மனசுல கூட நினைக்கல.. அதனால இதுல நான் பொண்டாட்டிக்கோ.. காதலிக்கோ துரோகம் பண்ணேன் சொல்லாதீய்ங்க” என்றவனின் உள்ளம் அப்படியா? என்று கேட்டது.

 

 

 

“அப்புறம் அந்தப் பொண்ணு தானா தான் என் கார்ல வந்து ஏறியதை.. ஹைவேயில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான சாட்சியம் இருக்கு.. வேணும்னா அதையும் போட்டு காட்டுறேன்” என்றான் வெற்றி தெளிவாக!!

 

 

நிவேதிதாவுக்கு, இவள் காரை வழி மறைக்கும் போது, அங்கேயே நிறுத்தாமல் ரிவர்ஸ் எடுத்து வந்து இவள் அருகில் நிறுத்தியத்தற்கான காரணம் தெளிவாக புரிய.. இப்படி ஒரு மாஸ்டர் மைண்ட் அவள் பார்த்ததே இல்லை. தன் அன்னை சுவாதியை விட ஜகஜால கில்லாடியாக இருக்கிறானே!! என்று அந்த நேரத்திலும் நினைத்துக்கொண்டாள்.

 

“பாப்பா இதுக்கு நீ என்ன சொல்ற?” என்று பஞ்சாயத்து தலை கேட்க..

 

 

‘இனிமேல் இதில் நான் சொல்ல என்ன இருக்கு? வண்டியில் நாமதான் ஏறினோம்.. அந்த ஒரே ஒரு புள்ளியை வைத்துக்கொண்டே மொத்த நாடகத்தையும் அழகாக வரைந்து விட்டு கடைசியில் நம்மையே குற்றம் கூறி விட்டான்’ என்று அவளுக்கு உள்ளுக்குள் கொதித்தது.

 

 

பஞ்சாயத்து தலைவர்களுக்கு இதில் என்ன முடிவு சொல்வது என்று ஒன்றுமே புரியவில்லை.. வெற்றிவேந்தனை சிறுவயதிலிருந்து அறிந்தவர்கள்!! போதாக்குறைக்கு எல்லாத்தையும் அவன் தெளிவாக உரைக்கிறான், இந்த பிள்ளையும் வாயை திறக்க மாட்டேங்குது என்ன செய்வது என்று புரியாமல் வாஞ்சி வேந்தனை பார்த்தார்கள்.

 

 

அவரோ பஞ்சாயத்து எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று நீதிடா!! நேர்மை டா!! வேந்தன் டா!! என்று பேச..

 

 

கதிருக்கு புசுபுசுவென கோபம் வந்தது. எவ்வளவு அழகாக காயை நகர்த்தி பஞ்சாயத்தையே கிடுகிடுக்க வைத்து இருக்கிறான் அண்ணன்.. பெரிய ஐயாவை என்னதான் செய்வது என்று தலையிலடித்துக் கொண்டான் வெளிப்படையாகவே..

 

 

அவரின் நேர்மையை புரிந்து கொண்ட பஞ்சாயத்து தலைவர்களும் “இந்த வழக்குக்கு தீர்ப்பு என்ன சொல்றதுன்னு எங்களுக்கு குழப்பமா தான் இருக்கு.. ஆனா வெற்றி தம்பி மேல மட்டும் தப்பு இல்லன்னு புரியுது.. அதேசமயம் ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழைந்து இருக்க முடியும்?” நூல் ஊசி என்று எதுவும் புரியவில்லை நிவேதிதாவுக்கு ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. வேண்டும் என்றே தன் பெயரை கெடுக்க இவன் செய்திருக்கிறான்.. இனியும் இதில் வாதாடிய பயனில்லை என்று புரிந்து..

 

 

இருகரம் கூப்பி அனைவரையும் பார்த்தவள், வேந்தன் குடும்பத்தையும் கூர்மையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு.. அடுத்த நொடி விடுவிடுவென்று அந்த இடத்தை விட்டு சென்று விட, அவள் பின்னே மொத்த குடும்பமும் சென்றது. அழகுசுந்தரம் மட்டும் பஞ்சாயத்தாரை பார்த்து.. “இதோட விட்டுடுங்க” என்றவாறு சென்றனர்.

 

 

வாஞ்சி மற்றும் மலரு அதற்கு மேல் அங்கே நிற்காமல் தங்கள் வீட்டுக்கு வந்துவிட வெற்றியும் கதிரும் அவர்களோடு வராமல் குவாரிக்கு சென்று விட்டனர். 

 

 

குவாரின் அலுவலக அறையில் வெற்றி அமர்ந்திருக்க.. அவன் முன்னால் கதிர்!! கனத்த மவுனம் மட்டுமே.. இதே ஒரு எதிரியை பழிவாங்க வேற வழியை தேர்ந்தெடுத்து இருந்தால், இந்நேரம் பட்டாசு வெடித்து.. தண்ணி பார்ட்டி வைத்து அதகள படுத்திருப்பான் கதிர். ஆனால் ஒரு பெண்ணை பற்றியது என்பதால் அடக்கி வாசித்தான் அதுவும் அண்ணன் திட்டுவானே என்று!!

 

 

சிறு வயது முதலே பெண்ணை போற்றவும், பாதுகாக்கவும் கற்றுக் கொடுக்கப் பட்டவர்கள். இன்று இந்த செயலை பழிக்குப்பழி தான் என்றாலும் மனம் என்னமோ தான் செய்தது அவர்களுக்கு.

 

 

“கதிரு..” என்றான் அமைதியை கிழித்துக்கொண்டு ஆளுமையான குரலில் வெற்றி.

 

“சொல்லுண்ணே!!” என்றவனும் லட்சுமணனாய் அண்ணன் முகம் பார்த்து இருந்தான் கட்டளைக்காக..

 

 

“சித்திரை திருவிழா நெருங்குது.. இந்த வருஷமும் நம்ம மூணு குட்டி யானையை தயார் செய்து சாமிக்கு முன்னாடி ஊர்வலத்துக்கு ரெடி பண்ணி வை.. அங்கங்க ரத வீதியில் தண்ணீர்பந்தல் வைச்சிடு.. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், அடுத்த நாள் தேரோட்டம் எல்லாத்துக்கும் நம்ம சார்பில் பட்டுப்புடவை பட்டு வேஷ்டி கொண்டு போவதற்கு இப்பவே கைத்தறிநகர் பகுதிக்குப் போய் நாம வழக்கமா கொடுக்கிற நெசவு ஆளுங்ககிட்ட சொல்லி வைச்சிடு..” என்று பட்டியல்களை அவன் அடுக்கிக் கொண்டே செல்ல.. 

 

அனைத்தைக்கும்.. “செஞ்சுடுவோம்!! பண்ணிடுவோம்!! பட்டையைக் கிளப்பிடுவோம்!!” என்று உரைத்துக்கொண்டே சைகை மொழியாலும்.. சொல்லிக்கொண்டே செல்ல..

 

அதற்கு மேல் பேசாமல் கீழுதட்டை மடித்து கடித்தபடி தன் தம்பியை உறுத்து பார்க்க..

 

 

அண்ணனின் இந்தப் பார்வையில் “விளையாடாதே!! வேலை செய்!!” என்று பொருள் எப்போதுமே பொதிந்திருக்கும்.. “ஹி..ஹி..ஹி..” என்று ஒரு அசட்டு சிரிப்புடன்.. “புரிஞ்சிடுச்சு!! இதோ இப்பவே கைத்தறி நகருக்கு கிளம்பிட்டேன்” என்றான்.

 

 

அதன் பிறகு தன் குவாரி வேலைகளிலும் திருவிழா வேலைகளிலும் வெற்றிவேந்தன் மூழ்கிவிட்டான்.

 

வழக்கம்போல தன் நான்கு செல்லாக்காசு அடியாட்களுடன் கைத்தறி நகரை நோக்கி பறந்தது கதிரின் சிவப்பு நிற ஜாகுவார்.

 

“மச்சக்கன்னி உன்னை தூக்க போறேன்!!” என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க..

 

 

“ஏன்டா மச்சக்கன்னினா என்னடா அர்த்தம்?” என்று அவர்களை பார்த்து கேட்க..

 

“அண்ணே.. சோடாபாட்டில்.. சைக்கிள் செயின்.. வீச்சருவா.. வேல்கம்பு இந்த மாதிரி ஏதாவது ஐட்டத்தை பத்தி கேட்டீங்கன்னா எங்களுக்கு தெரியும்.. நீங்க கேட்டது அவுட் ஆஃப் சிலபஸ் அண்ணே!!” என்று தலையை சொரிந்து கொண்டே ஒருவன் கூற, மற்றவர்களை திரும்பி பார்க்க.. அவர்களும் அதே தலைசொறிதலை அவனிடம் பார்சல் வாங்கி செய்து கொண்டிருந்தனர்.

 

“நம்மல சுத்தி இருக்கிற பக்கி பைய எல்லாம் காட்டுத்தனமாக மூஞ்சிய வைச்சு இருந்தா.. எப்படிடா ரொமான்ஸ் மூடு வரும். எப்போ நானும் ஒரு பொண்ண உசார் பண்ணி.. லவ் பண்ணி.. கல்யாணம் பண்ணி இப்பவே கண்ண கட்டுதே!!” என்றான் பெருமூச்சு விட்டபடி..

 

 

“ஏன் அண்ணே.. உங்க முன்னால வெற்றி அண்ண இருக்காரு”

 

 

“அதான்டா.. நான் இதெல்லாம் இப்பவே கொஞ்சம் கொஞ்சமா ஸ்டார்ட் பண்ணா தான் எங்க அண்ணன் கல்யாணம் முடியறதுக்குள்ள.. நானும் ஒரு பொண்ண கரெக்ட் பண்ணி, அவருக்கு கல்யாணம் ஆன அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் பண்ண முடியும்!!” என்று பேசிக்கொண்டே வர அவர்களது ஜாகுவார் கைத்தறி நகருக்குள் நுழைந்து இருந்தது.

 

 

வழக்கமாக அவர் குடும்பத்திற்கு பட்டு நெசவு செய்யும் அந்த வீட்டின் முன் வண்டி நிற்க.. இறங்கியவன் மற்றவர்கள் எல்லாம் வண்டியில் இருக்க சொல்லிவிட்டு சிறுவயதிலிருந்தே பழகிய வீடு என்பதால் உள்ளே நுழைந்தான்.

 

 

“வீட்ல யாரும் இல்லையா?” என்று அவனது குரலில் அவனுக்கே எக்கோ அடிக்க.. “இங்க நிக்குறதுக்கே தெருவே பெட்டர்” என்றவாறு வெளியில் வந்து நின்றவன், அருகிலிருந்து நெசவு செய்யும் பட்டறையில் இருந்து சத்தம் கேட்க அங்கே எட்டிப்பார்த்தான்.

 

 

வெள்ளை நிற குட்டையான கை ஒன்று தறியில் நர்த்தனமாட.. சற்று நேரம் அதையே பார்த்து இருந்தவன் “யாரும் இல்லையா?” என்று உரத்த குரலில் கேட்டான்..

 

தறியிலிருந்து முகத்தை மட்டும் வெளியே எட்டிப் பார்த்தாள் அந்தப் பாவை. 

 

“இல்லை!!” என்றவாறு மீண்டும் தறிக்குள் முகம் புதைக்க..

 

“கொழுப்ப பாருடா.. இருந்துகிட்டே இல்லைன்னு சொல்றத” என்றவன் “அப்ப இல்லைன்னு சொன்னது என்ன மோகினி பிசாசா?” என்று இவன் திருப்பி கேட்க..

 

 

வேலை கெடுவதை விரும்பாத அந்த பெண் தனது சுடிதார் ஷாலை எடுத்து ஒருபுறமாக போட்டுக்கொண்டு அவன் முன்னே இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முறைத்தாள்.

 

 

வெள்ளென்று மைதாவில் வார்த்தை பொம்மை போல தன் முன் நின்றவளையே விழி எடுக்காமல் பார்த்தான் கதிர்.

 

“பரமேஸ்வரரு இல்லையா?” என்று கொஞ்சம் கெத்தாகவே அவளை மேலும் கீழும் பார்த்துக் கொண்டே கேட்க..

 

“இல்லை!!” என்றாள் உதட்டை சுழித்து அலட்சியமாக..

 

“அவர் வந்தா கதிர் வந்திட்டு போனேனு சொல்லு பாப்பா” என்று அவள் உயரத்தை பார்த்து சொல்லி அவன் செல்ல..

 

 

“யாரு பாப்பா? நானா நானா?” என்றவள், விழிகளை விரித்து.. வில்லென்ற புருவத்தை சுருக்கி கோபத்துடன் கேட்டாள் அந்த நாலரை அடி அழகு பொம்மை.

 

 

“அப்போ அங்கத்து பேர சொல்றது” என்று கேட்க..

 

 

“பத்ம பிரியலோசனி திரிபுரசுந்தரி மீனாட்சி சுந்தரவள்ளி பாலாம்பிகை..” என்று அவள் சொல்லிக்கொண்டே போக…

 

 

“ஆத்தா.. நீ பேரை சொல்லிக்கிட்டு இரு நான் போய் ஒரு காபி குடிச்சிட்டு வந்துடுறேன்” என்று வெளியில் சென்றவனை பார்த்து அவளுக்கு ஆத்திரம்தான் வந்தது. பின்னே அவனை வார என்றே தன் பெயரை நீட்டி முழக்கி அவள் கூற, அவனோ சிரிக்காமலே அவளையே வாரி விட்டு சென்றான்.

 

“என்ன அண்ணே..பேசி முடிச்சிட்டீங்களா?” என்று அடியாள் ஒருத்தன் கேட்க..

 

“இப்பதாண்டா பேசி இருக்கேன்.. இனிமேதான் முடிக்கணும்” என்று வெட்க சிரிப்புடன் அருகில் இருந்தவனின் புஜங்களில் அவன் பரோட்டா மாவு பிசைய..

 

 

“டேய் அண்ணன.. ஏதோ அடிச்சிடிச்சு டோய்.. பாரு ஒரு மாதிரியா சிரிக்கிறாரு.. கையிலேயே பரோட்டா போடுறாரு” என்று மற்றொருவன் கேலி செய்ய..

 

 

“ஆமாண்டா பார்க்கும்போது ஜில்லுன்னு ஜிகர்தண்டா மாதிரி இருக்கு.. ஆனா பேச்சு மட்டும் மட்டன் கறி தோசை சாப்பிட்ட மாதிரி சுள்ளுனு வருதுடா.. அது தான் லைட்டா என்னை அடிச்சிடிச்சு” என்றான்.

 

 

“அண்ணா வேணாம்னா.. அவிய்ங்க ஆளுங்க வேற நாம வேற”

 

“அப்படி என்னடா அவிய்ங்க வேற நாம வேற?”

 

“அவிய்ங்க பதுவுசா இருந்துட்டு போறவிய்ங்க.. நாம வழியில போறவனை எல்லாம் இழுத்து வம்பு இழுக்குறவைய்ங்க”

 

“அது வீரம் டா!!”

 

“அவிய்ங்க சைவம் தான் பெரும்பாலும்.. ஆனா நாம காலைக்கு சிக்கன்.. மதியத்துக்கு மட்டன்.. ராவுக்கு இறாலுன்னு விதவிதமா திங்கிறவைய்ங்க அண்ணே”

 

“அது மண்ணின் மணமடா!!”

 

“அண்ணே.. அவிய்ங்க பேசுற மொழி வேற நம்ம மொழி வேற!!”

 

“யாதும் ஊரே.. யாதும் மொழியே!!” என்றான் கதிர்‌ கண்ணாடியை ஸ்டைலாக அணிந்தப்படி..

 

“அவிய்ங்க பேசுறதே வெளியிலேயே கேட்காது அண்ணே.. நாம ரகசியம் பேசினாலே எட்டூருக்கு கேட்குமே அண்ணே!!”

 

“அது வெங்கல குரல் டா!!” என்றான் மீசையை முறுக்கியபடி..

 

“உங்களுக்கு செட்டாகாது வேண்டாம் அண்ணே!!”

 

“இதுவரைக்கும் வெயிட்டிங் லிஸ்ட்ல தான் வச்சு இருந்தேன்.. இப்ப கன்ஃபார்ம் பண்ணிட்டேன். இந்த கைத்தறி நகர் தான் இனிமே உங்க அண்ணனோட புகுந்த ஊரு”

என்றவன், இவர்கள் இன்னும் போகாமல் நின்று பேசிக் கொண்டிருப்பதை தங்கள் பட்டறையில் இருந்து எட்டிப்பார்த்த பத்ம பிரியலோசனியை பார்த்து கை அசைத்தான்.

 

 

“பை மச்சக்கன்னி!!” எட்டிப் பார்க்கிறவளை இங்க இருந்தே

 கையை ஆட்டி அவளுக்கு பாய் சொன்னவன், அதே மச்சக்கன்னி பாடலை இப்போது வீடு வரும் வரை தன் வெண்கலக் குரலில் பாடிக்கொண்டே வந்தான்.. அடியாட்களின் காதல் ரத்தம் பெருகி வைகையை நிரப்பும் அளவுக்கு..

 

 

மச்சக்கன்னியை உசார் பண்ணுவானா நம்ம கதிரு???

 

 

காதலே.. காதலே…

 

1 thought on “எங்கு காணினும் நின் காதலே… 6”

  1. நீதி டா!! நேர்மை டா!! வேந்தன் டா!!

    செம செம செம !!!!😅😆😂🤣🤣🤣🤣

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top