“எதே தூக்கிட்டு போறியளா?” என்று கேட்டவளை திரும்பி கூட பாராமல் வேகமாக தன் வண்டியின் ஆக்ஸிலேட்டரை முறுக்கியவன் அதி வேகமாக வண்டியை மதுரையை நோக்கி விரட்டினான்.
அவனது எண்ணமோ தூக்குறோம்னு சொன்னதும் அழுது கத்தி ஊரை கூட்டினால்.. என்ன செய்வது என்று தான்! தடதடக்கும் மனதை வெளியே காட்டிக் கொள்ளாமல் விரைப்பாக அவன் வண்டி ஓட்ட…
முன்னால் அமர்ந்திருந்தவளோ… “அப்பாடி!! ரொம்ப நன்றிங்க…!! மதுரையில நீங்க என்னைய விட்டுட்டு போய்டீகனா எங்கன போறதுன்னு வெசனப்பட்டுட்டு இருந்தேன். அந்த சொக்கன் மாதிரி நீங்களே என்னைய அந்த நாதாரிக கிட்ட இருந்து காப்பத்துனது மட்டுமல்லாம என்னைய தூக்கிட்டு போறேன் சொல்லி என் வயித்துல பாலை வாத்திக! நீங்க தேன் என் ஆபத்பாந்தவன்!!” என்றதும் அவளின் வார்த்தைகளில் ஜெர்க்கானவன் வண்டியை நிறுத்தி விட…
“ஏங்க வண்டிய நிறுத்திப்புட்டிக?” என்று இமை தட்டி விழித்தாள் அப்பாவியாய்!!
“எதே ஆபத்பாந்தவனா? நீங்க தெளிவா தானே இருக்கிங்? நான் உங்கள காப்பாத்துறேன்னு சொல்லலிங் அம்மிணி.. உங்களை தூக்கிட்டு போறேன்னு சொன்னேனுங்க” என்றான் சற்று கடுப்போடு!!
“ரொம்ப தெளிவா இருக்கேன்! அதோட தூக்கிட்டு போறது தான் போறீக உடனே விட்டுறாதிய்ங்க!! ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு விடுங்க! அப்போ தேன் அவிய்ங்க தொல்லை இருக்காது! இல்லைன்னா என்னைய கட்டிக்க.. என்னைய கட்டிக்கனு இரண்டு எருமையும் என்னைய தொல்லை பண்ணுவாய்ங்க!” என்றாள் இன்னும் அவன் வண்டியின் முன்னால் ஜம்பமாக அமர்ந்துக் கொண்டே…
“இது என்னடா தொல்லையா போச்சு!” என்று விழி பிதுங்கினான் மாணிக்கவேல்!
அதற்குள் அவர்கள் பின்னால் டாவேராவில் வந்த கூட்டம், “அந்தா தெரியுது பார்.. அவேன் தான் அவனே தான்!! புடிங்க டா.. விரட்டுங்க டா வண்டிய…” என்று சத்தங்கள் கேட்க “ஐயோ.. ஏங்க வண்டிய விரட்டுங்க.. விரட்டுங்க.. சீக்கிரம் விரட்டுங்க.. அவிய்ங்க தான் அது! கிட்ட வந்துட்டாய்ங்க..!” என்று இவளே வண்டியை ஸ்டார்ட் செய்துவிட, யோசிக்க நேரமின்றி அவளை முன்னால் வைத்துக் கொண்டு வேகமாக விரட்டினான் வண்டியை மாணிக்கவேல்!!
பின்னாடி இரண்டு டவேராவில் வேகமாக “போங்கடா.. வேகமா போங்கடா!” என்று இரண்டு வண்டியும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வந்தது. கூடவே ஒன்றை ஒன்று ஓவர் டேக் செய்து “நான் முன்னே..!” “நான் முன்னே..!” என்றும் கத்திக் கொண்டே வர…
வண்டியின் முன்னால் அமர்ந்திருந்தவளோ மாணிக்கவேல் புறம் நன்றாக திரும்பி அவன் தோளின் மீது தன் முகத்தை வைத்து பார்த்தவள்.. “அவிய்ங்க ரொம்ப பக்கத்துல வந்துட்டாய்ங்க… சீக்கிரம் சீக்கிரம் போங்க.. என்னங்க இப்ப தான் 80ல போறிங்க… இது 125 சிசி வண்டி தானே? அப்புறம் என்ன பறக்க வேண்டியது தானே? சும்மா உறு உறுனு ஆக்ஸிலேட்டரை திருகினா மட்டும் பத்தாது… ஆக்ஸிலேட்டரை நல்லா முறுக்கி.. நாலாவது கீயருல வைச்சு.. அதோட ப்ரேக்கையும் சேர்த்து பிடிச்சி.. ப்ரேக்க விட்டீகனா…” என்று ஏகமாய் அவனை விரட்டியதோடு மட்டுமல்லாமல் அவனுக்கு டியூசன் வேறு எடுத்தவளை முறைப்போடு பார்த்தவன் “இரண்டும் பேரும் ஒரேடியா மேல் போய் சேர்ந்திருவோமுங்க…” என்றான் பற்களை கடித்துக் கொண்டு!!
“அதில்லங்க…” என்றவள் மீண்டும் ஆரம்பித்தாள்.
எப்படி வண்டியை ஓட்ட வேண்டும் என்பதை பற்றி அல்ல.. பின்னால் யாராவது விரட்டி வந்தால் எப்படி வேகமாக செல்ல வேண்டும் என்று வகை தொகையாக பாடம் எடுத்தாள்!!
யார் யாரடா தூக்கிட்டு போறீங்க? நமக்கே கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆகுது!!
திடீரென்று மாணிக்கவேல் சோழவந்தான் வர காரணம் என்ன?
நேற்று களஞ்சியத்தை காண நரிமேடு சென்ற ஜீவன் வந்து மாணிக்கவேலிடம் கூறியது என்ன??
குற்றம் நடந்தது என்ன?? என்ற ரீதியில் எல்லாம் ஆராய்ச்சி செய்ய வேணாம்!!
சோழவந்தானில் பெரும் தன குடிகாரர் திருமாறன் அவரின் மனைவி வேதாமணி. திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு பிறந்தவள் தான் நம் நாயகி மலர்விழி.
பெண் பிள்ளையாக பிறந்தால் பிறக்கும் போதே அத்தை மாமன் முறையில் உள்ளவர்கள் ‘என் வீட்டுக்குத்தான் மருமகளாக வரணும்!’
‘என் பிள்ளையை விட்டு என் மருமகள தூக்கிட்டு வர சொல்லிடுவேன்!’
என்று உரிமையாய் பேசுவதும் கேலியாய் சொல்வதும் உண்டு! அது போல வேதாமணியின் அண்ணன் கலியபெருமாளும்… திருமாறனின் தங்கை மகேஸ்வரியும் “உன் பொண்ணு தான் என் வீட்டுக்கு மருமக.. குலத்தெய்வம்.. குத்துவிளக்கு…” என்று சிறுவயதிலிருந்து அவளை பார்க்கும் நேரம் எல்லாம் சொல்ல… ஏனோ மாமன் என்று சொல்லி வலம் வரும் இருவரையும் கண்டாலே மலர்விழிக்கு பிடிப்பதில்லை.
“அய்யத்தான பாருடி… ஆச உள்ள ஆளு டி!” என்று கதிரேசன் பாட…
“மாசி மாசம் ஆளான பொண்ணு..
மாமன் உனக்கு தானே…” என்று களஞ்சியம் காஜியாக பாட…
மலரோ இருவரையும் முறைத்து பார்ப்பவள் தன் கையில் உள்ள விளக்குமாறையும் பார்ப்பாள். கதிரேசனோ கூச்சமே படாமல் “இந்தா வந்துட்டேன் அய்த்தான்.. நானே உனக்கு கூட்டி சுத்தம் பண்ணி தரேன்!” என்பான்.
“இந்தப் பட்டுப்போல மிருதுவான கையில இந்த பட்டு குஞ்சத்தை புடிக்கலாமா நீனு.. மாமன் உனக்காக வேலைக்காரங்களைப் போடுறேன்!” என்பான் களஞ்சியம்.
ஆக மொத்தம் சினிமா படத்தை பார்த்து பார்த்து காதல் வசனத்தை ஒன்று விடாமல் மனப்பாடம் செய்து, இருவரும் இவளை பார்க்கும் போதெல்லாம் அள்ளிவிட.. இவர்கள் செய்த அட்ராசிட்டியில் “இரண்டு பேரும் வேணா போங்கடா!” என்ற நிலைக்கு வந்து விட்டாள். இல்லையில்லை தள்ளப்பட்டாள் மலர்!!
இவர்கள் செய்யும் அட்டூழியம் பத்தாது என்று ஜோசியக்காரனும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான் அவள் வாழ்க்கையில்..
அவளது 21 வது வயதிற்குள் திருமணம் முடிக்கவில்லை என்றால் திருமணம் என்பது வெகு சிக்கலாகும்! ஏன் சாத்தியப்படாமல் கூட போகலாம்? என்று ஏதோ கட்டத்தை பார்த்து சொல்லிவிட்டு போக.. அதில் பிடித்தது ஏழரை சனி நம் நாயகிக்கு!!
ஒரு பக்கம் அவளது அத்தை மகேஸ்வரி தன் மகன் கதிரேசனை தான் கட்ட வேண்டும் என்று வற்புறுத்த… இன்னொரு புறம் அவளது தாய் மாமா என் மகன் களஞ்சியத்தை தான் கட்ட வேண்டும் என்று ஆர்டரை போட..
மத்தளத்துக்கு இரு பக்கம் அடி என்பது போல திணறியவள் “ரெண்டு பேருமே எனக்கு வேணாமா வெளியில் மாப்பிள்ளை பாருங்க!” என்று விட்டாள் பெற்றோரிடம்!!
திருமாறனுக்கும் வேதாவுக்கும்
சிறிது வருத்தமாக தான் இருந்தது. ஆனாலும் இரண்டு சொந்தத்தில் ஒருத்தருக்கு பெண்ணை கொடுத்து மற்றவரை பகைத்துக் கொள்வதை விட இந்த ஐடியா நல்லா இருக்கு என்று வெளியில் மாப்பிள்ளை தேட
துவங்கி விட்டார் திருமாறன்.
ஆனால்… இருவரும் விட்டா தானே? எப்படி மாப்பிள்ளை தேடினாலும் இருவரில் யாராவது ஒருவர் டைம்டேபிள் போட்டு போய் கலைத்து விட்டு வந்தனர்.
மற்ற எதில் ஒற்றுமையோ இல்லையோ இதில் மகா ஒற்றுமை இருவரும்!! களஞ்சியமே சில சமயம் கதிரேசனுக்கு போன போட்டு “டேய் பங்காளி.. போன தடவை நான் போய் அந்த மானாமதுரை காரன விரட்டி விட்டு வந்தேன்ல.. இந்த தடவை திண்டுக்கல்லில் இருந்து எவனோ வரானாம். நீ போய் அந்த சம்பந்தத்தை கலைச்சி விட்டுடு என்ன? வந்துட்டு பங்காளிக்கு ஒரு மெசேஜ் தட்டி விடு..” என்பான்.
“சரி பங்காளி..!” என்று கதிரேசனும் சென்று தன் வேலையை கச்சிதமாக முடித்து வந்து விடுவான்.
மாப்பிள்ளை தேடி கலைத்து விட்டார் திருமாறன். வேதாவுக்கும் இப்போதெல்லாம் தன் அண்ணியையும் நாத்தனாரையும் கண்டாலே எரிச்சலாக தான் வந்தது.
மகளின் வாழ்வை கெடுக்கிறார்களே என்று!!
இதில் இருவரும் சொந்த பந்தங்களை தூது விட்டு பொண்ணுத்தர சொல்லி அவர்களை கட்டாயப்படுத்தி நிர்பந்திக்க வைத்தனர்!! கூடவே 21 வயதுக்குள் முடிக்க வேண்டும் என்ற செய்தியும் அவர்கள் சொந்த பந்தங்கள் மத்தியில் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டது!!
இது போதாதா நம் உறவுக்காரங்களுக்கு?? சும்மா இருந்தாலே அத்தனை நியாயம் பேசுவார்கள்! இதில் வக்கணையாக அவலாக செய்தி கொடுத்தால் விட்டு விடுவார்களா என்ன?
தன் வீட்டில் அத்தனை அழுக்கை வைத்துக் கொண்டு எதிர் வீட்டில் இருக்கும் அழுக்கை பார்த்து குறை கூறுவது தான் மனித மனம்!! இதில் யார் தான் விதிவிலக்கு?? அப்படி வந்து குவிய ஆரம்பித்தது சொந்த பந்தங்களின் படையெடுப்பு திருமாறன் வீட்டில்!!
அதன் தொடர்ச்சியாய் திருமாறனுக்கு உடல்நலம் நலிய தொடங்கியது. ஏற்கனவே தவமிருந்து பெத்த பெண் அவளது வாழ்க்கை 21 வயதுக்குள் எந்த சிக்கலும் இல்லாமல் எப்படி நல்ல சம்பந்தத்திடம் ஒப்படைப்பது என்று யோசனை ஓடிக்கொண்டே இருக்க… இதில் தன் மாமனும் மச்சானும் சேர்ந்து இப்படி படுத்தி எடுக்கிறார்களே என்று அதையே நினைத்து நினைத்து உடல்நலம் குன்ற… அதையே சாக்காக வைத்து இரு குடும்பமும் அங்கே டேரா போடத் தொடங்கியது!!
இதில் கதிரேசனுக்கு சொத்துபத்துக்கள் உண்டுதான். சொத்துபத்தோடு கூடிய ஒற்றைப் பெண்.. அதுவும் தன் அண்ணன் பெண்ணை மகனுக்கு கட்டி வைத்தால் கசக்குமா என்ன? என்ற எண்ணம் தான் மகேஸ்வரிக்கு!!
இந்த பக்கம் கலியபெருமாள்.. ஏற்கனவே தங்கையை பெரிய இடத்தில் கட்டி கொடுத்திருக்க அவளின் மகளை தன் மகனுக்கு எடுத்து மகனையும் செட்டில் செய்ய நினைத்தார் கலியபெருமாள்!! அதற்கு தக்க களஞ்சியமும் பந்தா காட்ட வேண்டி அவ்வப்போது மாணிக்கவேலிடம் கடன் வாங்கி இருந்தான்.
கடன் வாங்கியவன் ஒழுங்காக வட்டியை கட்டி இருந்தால்.. இந்த கதையில் நம் மாணிக்கவேலுக்கு ஏது வாய்ப்பு??
அவன் கிரகம்.. நேரம்.. சரியாக வட்டி கட்டாமல் விட்டிருக்க அவனை தேடி நரிமேட்டுக்கு சென்றான் ஜீவன்.
அப்பொழுதுதான் பல நாட்களாக மாமன் வீட்டிலேயே பேரா போட்டு இருந்த களஞ்சியமும் தன் வீட்டிற்கு வந்தவன், ஜீவனை பார்த்துவிட்டு மிக அலட்சியமாக “என்ன தம்பி? என்ன விஷயம் இந்த பக்கம் எல்லாம் வந்து இருக்கீங்க?” என்று கேட்க அதில் கோபம் கொப்பளித்தது ஜீவனுக்கு!!
ஆனாலும் ஏதும் வாய் விட்டு விடாமல் “மாமா வட்டி பணம் வாங்கிட்டு வர சொன்னாங்க!” என்றான்.
“வட்டி பணமா?? எங்குட்டு இருக்கு பணம்?” என்று சிரித்தவன் “தருவோம்.. தருவோம் எங்க போய்ட போறோம்!” என்றான் வெகு அலட்சியமாக தன் அல்லகைகளோடு சேர்ந்து சிரித்தபடி..
“நாலஞ்சு மாசமா இதையே தான் சொல்லிட்டு இருக்கீங்க… போனு வேற சுவிட்ச் ஆப்னு வருது! வீட்டுக்கு வந்தாலும் பாதி நேரம் நீங்க இங்க இருக்கறது இல்ல.. அப்புறம் உங்களை எங்க போய் நான் தேட? இப்பதான் என் கண்ணிலே மாட்டி இருக்கீங்க! நீங்க ஃபர்ஸ்ட் வட்டி எடுத்து வைங்க!” என்றான் அதட்டலாக..
“ஏண்டா வெளியூரிலிருந்து பொழப்பு நடத்த எங்க ஊருக்கு வந்துட்டு.. நாலு காசு சம்பாதிச்ச உடனே உங்களுக்கெல்லாம் தலையில் இரண்டு கொம்பு முளைச்சிடுதோ? ரொம்ப அதிகாரம் பண்ற? தொலைச்சிடுவேன்!” என்றான் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களஞ்சியம்!!
“யாரு வெளியூரு? இந்தாரு.. நானும் மதுர காரன் தான்!!” என்று விஷால் கணக்கில் காலரை கெத்தாக தூக்கி விட்டவன் “நீ நரிமேடு! நான் சிம்மக்கல்!! அந்தாண்ட சுப்ரமணியபுரம் தான் என் பெரியப்பா ஊரு.. இந்த பக்கம் பழங்காநத்தம் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் பூரா சொந்தக்கார பயலுக தான் தெரியும் இல்ல!” என்றதும் சற்று அடக்கி வாசித்தான் களஞ்சியம்.
அவனுக்கு மாணிக்கவேலை தான் தெரியும். வெளியூரில் வந்து இங்கு வந்து பிழைப்பு நடத்துகிறான் என்று!! ஆனால் ஜீவன் உள்ளூர் என்பதை தெரிந்து கொள்ளவில்லை. இப்பொழுது காரியம் முக்கியமா வீரியம் முக்கியமா? காரியம் தான் முக்கியம்!!
மறுநாள் எப்படியாவது மாமனை சரிகட்டி பொண்ணுக்கு கட்டாய தாலியாவது கட்டிவிட வேண்டும் முனைப்பில் தான் இருந்தான் களஞ்சியம். அதே நினைப்புதான் அந்த பக்கம் கதிரேசனுக்கும்!!
கூடவே களஞ்சியம் கல்யாணத்தை முறையாக ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று தன்னுடைய ஆவணங்களை எடுக்க வீட்டுக்கு வந்த போது தான் ஜீவன் அவனை கண்டது!!
“இங்க பாரு பொடி பயலே!! நாளைக்கு எனக்கு கல்யாணம். உன் மாமா மாதிரி நான் என்ன மொட்டை பயலாவ சுத்திகிட்டு இருக்க முடியும்? அதனால இந்த டயத்துல பணத்தை பத்தி எல்லாம் நினைச்சு கூட பார்க்காத! எனக்கே ஏகப்பட்ட செலவு!!” என்றதும் ஜீவனுக்கு சுர்ரென்று கோபம் வர “டேய் நீ கல்யாணம் பண்ணு இல்ல கருமாதி பண்ணு அதுக்கு ஏன்டா என் மாமன இழுக்கிற?” என்றான் எகிறிக் கொண்டு!
ஜீவன் இங்கு வர வழியிலேயே அங்கு இருந்தவர்களிடம் களஞ்சியத்தைப் பற்றி ஏற்கனவே கேட்டு வைத்திருந்தான். அதன்படி அவனது சொந்த மாமனே பெண் தரவில்லை என்று செய்தி கிடைத்திருக்க.. “என் மாமா என்ன உன்ன மாதிரி நாதாரினு நினைச்சியா? ஒன்னுக்கு ரெண்டு முறை பொண்ணுங்க இருக்கு லயின்ல! இவர்தான் வேணாம்னு சொல்லிட்டு இருக்காரு.. உன்ன மாதிரி மிரட்டி விரட்டி போய் கல்யாணம் பண்ணிக்க நினைக்கல” என்றான் சற்று இளக்காரத்தோடு!!
“டேய்.. என்ன சொன்ன?” என்று அவன் மீது கை வைக்க வந்த அல்லகைகளை கைகாட்டி நிறுத்தினான் களஞ்சியம்.
“என்னடா உங்களுக்கு தான் ஆளு இருக்குன்னு காட்டுறீங்களா! எங்களுக்கும் ஆளு இருக்கு! எங்க என் மேல கைய வச்சி பாரு!” என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றான் ஜீவன்.
இவனிடம் சண்டை வளர்த்து அது மூலம் வேறு ஒரு பிரச்சினை இழுத்துக் கொள்ள விரும்பாத களஞ்சியம், “இப்போதைக்கு என்னால பணத்தை கொடுக்க முடியாது! உன் மாமனால என்ன முடியுமோ பார்த்துக்க சொல்லு! கேஸ் போட்டா கூட எனக்கு கவலை இல்லை.. நாளைக்கு என் மாமன் பொண்ண கட்டி தூக்குறது தான் எனக்கு முக்கியமான வேலை” அப்புறம் என்ன சொன்ன ரெண்டு முறை பொண்ணுங்க வெயிட் பண்றாங்களா… உங்க மாமன் சும்மா இருக்கானா?” நக்கலாக சிரித்தவன், “உன் மாமன ஒரு நல்ல டாக்டர்ட்ட போய் காட்டுடா! அவன் உண்மையிலேயே உனக்கு மாமனா இல்ல மாமியான செக் பண்ணிட்டு வா!” என்றதும் சிலிர்த்து எழுந்த குட்டி சிங்கம் நம் பெரிய சிங்கத்தை இன்னும் நாலு பிட்டு எக்ஸ்ட்ராவா போட்டு கிளப்பிவிட்டது சோழவந்தானை நோக்கி…
“இந்த பொண்ண கட்ட போறதுனால தான்டா பேசுற! உனக்கு கல்யாணம் ஆகவே ஆகாதுடா!” என்று தன் ஆண்மையை சீண்டி விட்டவனின் கல்யாணத்தை நிறுத்த மட்டும்தான் சென்றான் மாணிக்கவேல்!!
பாவம் அவனே அந்த குழியில் விழுந்து விட்டான்!
அதுவும் மறுநாள் தான் மலர்விழிக்கு 21வது பிறந்தநாள். அதனால் இரண்டு குடும்பங்களும் சொந்தபந்தங்களுடன் குத்த வைத்து பஞ்சாயத்தை நடத்தி.. யாராவது ஒருத்தருக்கு கட்டிக் கொடுத்தே ஆக வேண்டும் என்று நிற்க.. திருமாறனும் மகளை பாவமாக பார்த்தார்.
“ஆனால் யாருக்கு கட்டிக் கொடுக்க? இப்படி இரண்டு பேருமே கேட்கிறாய்ங்க? ரெண்டு பேருமே விட்டுக் கொடுக்க மாட்டேங்கிறாய்ங்க! நீங்களே யார் ஒருத்தர்னு முடிவு பண்ணிட்டு வாங்க அப்பு!” என்று திருமாறனும் வேதாமணியும் அமைதியாகிவிட அதற்கு பின் தான் இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி தங்கள் பெருமைகளை வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளம் ஏற்றிக் கொண்டிருந்த கேப்பில் தப்பித்து ஓடி வந்து விட்டாள் மலர்விழி.
போகிற வழியெல்லாம் முன்னால் அமர்ந்திருக்கும் மலர்விழியையும் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் மாணிக்கவேலையும் எல்லோரும் குறுகுறுப்பாக சிலர் பார்க்க… சிலரோ “பார்ரா கலிகாலம்..!” என்ற தலையில் அடித்துக் கொள்ள.. இன்னும் சிலர் “இந்த கொடுப்பினை எல்லாம் நமக்கு ஏது?” என்று பெருமூச்சு விட.. இவற்றை எல்லாம் போற போக்கில் கவனித்த மாணிக்கவேல் ‘இனி போக போக மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இன்னும் என்னென்ன வரப்போகிறதோ?’ என்று பதைபதைத்தவன் குறுக்கு வழியாக விட்டான் வண்டியை பாண்டி கோவிலுக்கு!!
ஏற்கனவே வீட்டில் அம்மா திருமணம் செய்து கொள் என்று ஒருபுறம் வற்புறுத்திக் கொண்டிருக்க.. மறுபுறம் தந்தையோ, தன் உடல் நிலையை காட்டி அமைதியாக அவனைப் பார்க்க.. இரண்டு அக்காளும் மாறி மாறி அவனை உபசரித்து மாப்பிள்ளையாக மாற்ற முயற்சிக்க.. என்று ஏக பிரச்சனைகளில் இருந்தவனுக்கு அருகில் பெரிய கோடு போட்டு.. அதெல்லாம் சின்னது என்று காட்டினார் கடவுள்.. புதிய பிரச்சனையை மலர்விழி மூலம்!!
சும்மா கடத்திக் கொண்டு போய் சிறிது நேரம் ஊர் சுற்றி விட்டு திரும்ப கொண்டு போய் ஒப்படைத்து விடலாம்… இல்லை ஆட்கள் இருந்தால் இவன் பேசிய பேச்சுக்கு எல்லோரும் முன்னாடியும் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்று நினைப்போடு வந்தவன் நினைப்பையே மாற்றிவிட்டாள் இந்த சாகசக்காரி!!
பாண்டி கோவில் மரங்கள் அடர்ந்த பகுதியில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியவன் அவளை இறங்க சொல்ல “இது பாண்டி கோவில் தானே.. எப்பவோ ஒரு தடவ வந்தது! வாங்க போய் சாமி கும்பிட்டு வரலாம்” என்று இயல்பாக அவனை அழைக்க இவனோ தலையில் அடித்துக் கொண்டான்.
“நான் உங்களை தூக்கிட்டு வந்து இருக்கேனுங்க அம்மிணி! அதுக்காவது கொஞ்சம் மரியாதை கொடுத்து பயந்த மாதிரி வேணாமுங்க.. கொஞ்சம் பேசமாவது இருக்கலாம் இல்லிங்!” என்று அவன் பற்களை கடித்துக் கொண்டு கேட்க.. அவனின் கோபம், அந்த கோபத்தின் ஊடே பேசும் அந்த மரியாதை கலந்த அவனின் பேச்சும் வெகுவாக ரசிக்க வைத்தது பெண்ணவளை!!
முகம் புன்னகையில் ரசிக்க “நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க! உங்க பேச்சு வழக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!” என்றாள்.
“எதே? புடிச்சிருக்கா?” என்று திகைப்போடு அவன் கேட்க…
“ஆமா புடிச்சிருக்கு! ரொம்ப.. ரொம்ப..” என்று அவள் கூற…
“ஐயய்யோ அண்ணாச்சி!! இவர் எங்க வந்தாரு?” என்று சட்டென்று எங்கேயாவது மறைந்து கொள்ளலாமா என்று பின்னால் பார்த்தவன் முகத்தை ஒத்த கையால் மூடிக்கொள்ள.. அவருக்கோ அது வெட்கம் கலந்ததாகவே தெரிந்தது!!
“நான் அன்னைக்கு கல்யாணம் பத்தி கேட்கும் போது சிரிச்சு சிரிச்சு மழுப்புன போது இப்படி ஒரு பொண்ண விரும்பி இருப்பேன்னு எனக்கு தெரியாம போச்சே வேலு! பபொண்ணும் நல்லா கலையா அம்சமா தான் இருக்கு” என்றார்.
கூடவே தன் மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்து அறிமுகம் செய்து வைக்க.. அவ்வப்போது அவரின் மனைவியை பார்த்திருக்கிறான் மாணிக்கவேலு. அதனால் “மதனி நல்லா இருக்கீங்களா?” என்று கேட்க.. பிள்ளைகளும் இவர்களுடன் உரிமையாய் அண்ணன் என்று பேசி “அண்ணி நல்லா இருக்காங்க அண்ணே!” என்க இன்னும் சங்கடமாகி போனது அவனுக்கு.
இதையெல்லாம் வெகு சுவாரசியமாக அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் மலர்விழி!!
அவர் பேச ஆரம்பிக்கும்போது இவள் வாயை திறக்க “நீங்க பேசாதிக! நான் பேசி சமாளிச்சுக்கிறேனுங்க!” என்று அடிக்குரலில் அவன் கட்டளை இட.. தோளை குலுக்கி கொண்டவள் பார்வையாளராக மாறி போனாள்!!
“நீங்க எங்க அண்ணாச்சி இங்க?” என்று இவன் சற்று மெல்லிய குரலில் கேட்க…
“எங்க பங்காளிங்க எல்லாம் சேர்ந்து இன்னைக்கு இங்க கிடா வெட்டு வேண்டுதல்! அதுக்குத்தான் வந்தோம்” என்றவர், “ஓ.. நீங்க ரெண்டு பேரும் இந்த கோயிலுக்கு தேன் அடிக்கடி வருவியளோ? ஊரை விட்டு தள்ளி இருக்கு! டக்குனு யார் கண்ணாலையும் பட தேவை இல்லை! பரவால்ல வேலு நீ இவ்வளவு விவரமாக இருப்பேனு நானு எதிர்பார்க்கல” என்று அவர் சிரிக்க..
“ஐயோடா..!!” என்று ஆனது மாணிக்கவேலுக்கு. அதுவும் அவரிடம் காட்ட முடியாத அந்த பாவத்தை அவன் கஷ்டப்பட்டு சிரித்து வைக்க… அதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி நின்று இருந்தாள் மலர்விழி கொஞ்சம் ரசனையோடு!!
கூடவே பக்கம் பக்கமாய் மாணிக்கவேலுக்கு மார்க்கெட்டிங் செய்து கொண்டு இருந்தார் கருப்பண்ணன்.
“தம்பி பாக்க தான் மா இப்படி நம்ம கருப்பண்ணசாமி கணக்கா இருக்கும். ஆனா மனசு ஃபுல்லா தங்கம்.. இல்ல பேருக்கு ஏத்த மாதிரி மாணிக்கம் தேன்! இன்னிக்கு நான் உன்கிட்ட நின்னு இப்படி பேசிட்டு இருக்கேன் அதுக்கு காரணமே தம்பி தேன்…” என்றவர் அவருக்கு செய்த உதவி முதல் அனைத்தையும் கூற அவனின் இந்த இன்னொரு முகத்தை ஆச்சரியமாக பார்த்தாள்.
“ஆமா வேலு.. பொண்ணு என்ன கல்யாணம் பொண்ணு மாதிரி அலங்காரத்தோடு வந்து இருக்கு? என்ன விஷயம்?” என்று குறும்பாக கருப்பண்ணனின் மனைவி கேட்க…
“அது ஒன்னுமில்லக்கா இன்னைக்கு எங்க வீட்ல எனக்கு கல்யாணம் பேசிட்டாய்ங்க… இரண்டு மாமன்களும் தட்டை தூக்கிட்டு வந்துட்டாய்ங்க.
அதான் இவரு வந்து தூக்கிட்டு வந்துட்டாரு…” என்று அவள் போட்டு உடைக்க…
அதேநேரம் இவர்களைத் தேடி ரெண்டு டவேராவும் பாண்டி கோவில் நுழைந்து விட…
அந்த டவேரா ஆட்களைப் பார்த்ததும் அனிச்சை செயலாக பயந்து மாணிக்கவேலின் கைகளை இறுக பற்றிக் கொண்டாள் மலர்விழி!!
டவேரா ஆட்கள் முதுகில் அருவாளை பார்க் செய்துக் கொண்டே.. டவேராவை நடு வீதியில் பார்க் செய்து விட்டு.. கோவிலுக்குள் வர.. இங்கே கல்யாணமே முடிந்திருந்தது மலர்விழிக்கும் மாணிக்கவேலுவுக்கும்!!
Superb Sis
Aha intresting sis 😍😍
Sema 🥰
🤩🤩🤩🤩🤩🤩