மாமனே 4
“ஏலேய்… இங்கன தான் இருக்காய்ங்க இரண்டு பேரும்! சீக்கிரம் வாங்க டா…” என்று ஒருவன்
கத்திக் கொண்டே டவேராவை நோக்கி ஓட…
இங்கே மலர்விழிக்கு கதி கலங்கி விட்டது. கண்கள் எல்லாம் கலங்க… மனதில் பயம் பீடித்துக் கொண்டது இவ்வளவு தூரம் தப்பி வந்து மீண்டும் இவர்கள் கையில் மாட்ட வேண்டுமா? என்று வெகுவாக கலங்கி தவிக்க.. அவளின் அந்த தவிப்பு அப்பட்டமாக அவள் கைகளின் வழியே மாணிக்கவேலின் கைகளுக்கு இடம் மாற… அவளின் கை இறுக்கத்தை உணர்ந்தவன், மெல்ல குனிந்து அவள் பற்றி இருந்த கைகளை பார்த்தான். ஏனோ சட்டென்று விலக்க மனம் வரவில்லை!
ஆனால் அவளோ அவனது புஜத்தில் தனது நெற்றியை முட்டி கையில் இறுக பற்றிக் கொண்டு அவன் பின்னே பாதியாக மறைந்து நின்று கொண்டு இருந்தாள்.
அவனது அறிவோ… “அவ கையை எடுத்து விடு டா! இன்னும் அவளை கட்டிக்கிட்டு திரிஞ்சா உனக்கு தான் பிரச்சனை! உன்னை பேசின அந்த களஞ்சியத்தை தனியா பார்த்து முகரையை பேத்துறலாம்” என்று அறிவுறுத்த…
மனமோ “வேண்டாமடா!! அந்த பெண் பாவம்!! இவ்வளவு தூரம் நீ கூட்டிட்டு வந்ததற்கு பிரயோஜனமே இல்லாம போயிடும். அதற்கு அப்போதே அவர்களிடம் விட்டு வந்திருந்தால் அந்த பெண்ணே ஏதாவது சமாளித்துக் கொண்டிருப்பா.. இப்பொழுது நட்டாத்தில் விட்ட கதையாகிவிடும்” என்று பாவம் பார்த்தது.
அறிவின் அறிவுரை ஏற்று மெல்ல அவளது கைகளை விலக்க முயன்றவன் கரமோ என்ன நினைத்ததோ அவள் கையை அழுத்தமாக பற்றிக்கொள்ள… அதில் தெரிந்த பாதுகாப்பு உணர்வில் மெல்ல கண்களை உயர்த்தி அவனை பார்த்தாள் மாது. ஆனால் அவன் பார்வையோ எதிரே வெறித்தது!!
“வேலு என்ன பிரச்சனை? அந்த ஆளு வந்து ஏதோ திட்டிட்டு போறான்? என்னன்னு சொல்லுப்பா!” என்றதும் விசும்பலாக ஒலித்தது மலர்விழியின் குரல் “இன்னிக்கு என்னோட 21வது பிறந்தநாளுங்க ணே! அதுக்குள்ள எனக்கு கல்யாணம் பண்ணனும் எங்க அப்பா கிட்ட ஒரு ஜோசியர் சொல்லிட்டாராம். அதனால அத்தை பையனும் மாமா பையனும் போட்டி போட்டு என்னை கல்யாணம் பண்ண தூரத்துறாய்ங்க ணே! எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கல…” முழுதாய் அவள் சொல்லி முடிக்கும் முன் அழுகை வெடிக்க…
அதற்குள் கருப்பண்ணனின் மனைவி வந்து அவள் கையை பற்றிக்கொண்டார் “ஏன் மா அழுகுற? ஐயனார் கணக்கா தம்பியை வைச்சிக்கிட்டு” என்று அவள் கண்களை துடைத்து விட்டவர் “என்னங்க பாத்துக்கிட்டே இருக்கீங்க! பிள்ளைகளை கோயிலுக்குள்ள கூட்டிட்டு போங்க!! நம்ம ஆளுங்களை எல்லாம் கூப்பிட்டு சட்டு புட்டுனு எல்லாத்தையும் முடிச்சு வைங்க” என்றார் அதிகாரமாய் மெல்லிய குரலில்!!
மனைவியின் சொல்லை புரிந்து கொண்டவர் “சரிதான் புள்ள! நீ சொன்னா சரியா தான் இருக்கும்” என்றவர், “வா வேலு…” என்று அவனை முன்னே அழைத்துச் சென்று, அங்குள்ள தன் அங்காளி பங்காளிகளிடம் விபரம் சொல்ல.. ஏற்கனவே வீரம் செறிந்தவர்கள் இப்படி ஒரு விஷயம் கேள்விப்பட்டால் சும்மா இருப்பார்களா என்ன?
அவர்கள் நரம்பெல்லாம் புடைக்க.. மீசையெல்லாம் வீரத்தில் முறுக்க.. கோவில் என்பதையும் மறந்து அந்த பாண்டிய முனிக்கு தம்பிகளாய் அனைவரும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கோதாவில் குதிக்க
தயாராகினர்.
பெண்கள் தான் அவர்களை தடுத்து “இந்தாருங்க… இது கோயிலு! ரசவாதம் எல்லாம் வேணாம். மண்ணுக்கும் பொண்ணுக்கும் சாமிக்கும் மருவாத கொடுக்குறவன்
தேன் மதுரக்காரன். எதுக்கு இம்புட்டு ஆவேசம். விவேகமா யோசிங்கப்பு!
பேசாம இரண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிச்சு விடுங்கப்பா.. அப்புறம் ஏன் அவிய்ங்க இந்த பக்கம் வரப்போறாய்ங்க!” என்றார்கள்!!
“அட ஆமா பா… பொண்ணுங்க சொல்றது சரி தேன். கல்யாணத்த முடிச்சு விட்டுட்டா அப்புறம் அவிய்ங்க வந்து என்ன பண்ணவாய்ங்கனு நாம பார்த்திரலாம்” என்றனர் ஆண்கள்!
“இன்னைக்கு மட்டும் இல்லிங்க.. நாங்க சொன்னா என்னைக்குமே சரியா தேன் இருக்கும்! ஆனா நீங்க என்னைக்கு தான் கேட்டு இருக்கீக? ஏதோ இந்த மட்டுல கேட்டதே சந்தோஷம்!” என்று அவர்களுக்கு ஒரு கொட்டும் கொடுத்து சென்றனர் மணமகளை தயார் பண்ண…
என்ன பெரிதாக தயார் பண்ண? அவளே ஏற்கனவே மணக்கோலத்தில் தான் இருந்தாள். பெரிதாக அவர்களுக்கு வேலை இல்லை. அங்கே இருந்த சின்ன பெண்கள் தங்கள் ஹேண்ட் பேக்கில் இருந்து ஒன்னு ரெண்டு மேக்கப் ஐட்டங்களை வைத்து, கலைந்து இருந்த அவளின் கூந்தலை வாரி, நலுங்கி இருந்த புடவையை சரிபடுத்தி, கொஞ்சம் பவுண்டேஷன் கண் மை.. என்று அழகியை மேலும் அழகுப்படுத்திக் கொண்டு இருக்க…
இந்த புறமோ மாணிக்கவேல் தவியாய் தவித்தான்! “என்னடா.. நம் ஒருதலைக் காதலுக்கு வந்த சோதனை? எப்படி அந்த பெண்ணை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியும்! மனம் ஒத்து எப்படி வாழ முடியும்… அதை விட… அந்தப் பொண்ணு யாரு என்னன்னே தெரியாதே? எல்லாம் இந்த ஜீவனால வந்தது! அடே ஜீவா…” என்று அவனுக்கு ஃபோன் போட, ஜீவன் நம்பரோ ஜீவன் இல்லாமல் கவரேஜ்க்கு வெளியில் இருப்பதாக கூறியது.
மாணிக்கத்தால் இப்பொழுது தான் செய்த காரியத்தை இவர்கள் முன்னால் கூறவும் முடியாது இங்கிருந்து கல்யாணம் வேண்டாம் என்று போகவும் முடியாது!
“ஓடவும் முடியாது! ஒளியவும் முடியாது!” என்ற ரீதியில் தாலி கட்டவும் முடியாது கட்டாமல் இங்கிருந்து தப்பிக்கவும் முடியாது என்று இருக் கொள்ளி எறும்பாய் தவித்தான் மாணிக்கவேல்!!
அதே சமயம் இவர்களை தேடி வந்த இரு கோஷ்டிகளும் தங்கள் டவேராவில் இருந்து இறங்க முற்பட.. ஒருவரை ஒருவரை முட்டி மோதி வண்டியை நிறுத்திருக்க… இரு கோஷ்டிகளாலும் உடனே இறங்க முடியவில்லை!!
“ஏலே.. நீ தள்ளி நிப்பாடுறா வண்டிய..”
“ஏன்.. நீ தள்ளி நிப்பாட்டுறது?” என்று அதற்கும் சண்டை போட்டு ஒரு வழியாக காரை சற்று தள்ளி நகர்த்த.. அதன்பின் தான் இரு கோஷ்டியும் ஒழுங்காக இறங்க முடிந்தது.
“வாங்கண்ணே.. வாங்கண்ணே.. இங்கன தேன் நின்னு பேசிட்டு இருந்தாய்ங்க” என்று அவர்கள் இருந்த இடத்தை போய் பார்த்தால், அங்கே அவர்களை காணவில்லை!
“வந்தவன் யாருடா? எதுக்குடா அவளை தூக்கிட்டு போனான்?” என்று களஞ்சியம் தன் ஆட்களிடம் கேட்க..
“எங்களுக்கு ஏதும் தெரியல ணே! நம்ம பொண்ணு கெத்தா வண்டில வந்தவன் முன்னாடி நின்னுச்சு! அவன் ஒரே சுழட்டு சுழட்டுனானா.. நம்ம பொண்ணு போய் அந்த வண்டியில் உட்கார்ந்திடுச்சு.. அவன் வண்டியை எடுத்துட்டு பறந்துட்டான்!” என்றான் களஞ்சியத்தின் அல்லக்கை.
களஞ்சியத்திற்கு அது கண்டிப்பாக மாணிக்கவேலாக இருக்கும் என்ற சிறு யோசனை கூட இல்லை!
கதிரேசனோ “ஏன் பங்காளி.. இப்படி நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுக்காம இருக்க.. இடையில புகுந்தது எவன்டா?” என்று கடுப்பில் வேக வேகமாக கோவிலுக்குள் நுழைந்தான் தன் உறவு கூட்டத்தோடு…
அதே நேரம் கோவில் உள்ளே… அப்புறம் என்ன பெருசுகளின் ஆசிர்வாதத்தில்.. சிறுசுகளின் சந்தோச கூச்சலில்… பாண்டி முனீஸ்வரனின் சன்னதிக்கு முன்னால் மாலை மாற்றிக் கொண்டனர் இருவரும்!!
எந்த வகை தாலி கட்டு என்று புரியாமல் இருந்தவர்களுக்கு மஞ்சள் கிழங்கிலேயே தாலி கயிற்றை கட்டிக்கொண்டு வந்தார் கருப்பண்ணன்!! பாண்டி முனியின் பாதத்தில் வைத்துக் கொடுக்க பஞ்சவாத்தியம் முழங்க.. கோவில் மணி ஓசைகளோடு அங்கே சுற்றி இருந்தவர்களின் நல் மனங்களின் ஆசிர்வாதத்தோடு இனிதாய் முடிந்தது திருமணம் மலர்விழிக்கும் மாணிக்கவேலுக்கும்!!
மலர்வழிக்கும் மனதுக்குள் சிறு நடுக்கம் தான்! என்னதான் மாணிக்கவேல் பற்றி நன்றாக அனைவரும் கூறினாலும்..
ஒரே நாள்கூட இல்லை.. சில மணி நேரங்கள் கூட இருக்காது இருவரும் பார்த்து!!
‘மிஞ்சிப்போனால் ஒரு இரண்டு மணி நேரம்.. அதற்குள் ஒருவனை பார்த்து அவன் கையால் தாலி வாங்கிக் கொண்டேனே? எப்படி சாத்தியம்?’ என்று பெரும் யோசனை!
அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற அனுமானம் இல்லை! அவள் பார்த்தவரையில் அவள் மாமன்களை விட இவன் பரவால்ல என்று தோன்றியது. அவள் மனதும் அவன் அருகே பாதுகாப்பை உணர.. அதற்கு மேல் எல்லாம் அவள் யோசிக்கவே இல்லை சந்தோஷமாகவே தலையை குனிந்து வாங்கிக் கொண்டாள் அவன் கட்டிய தாலியை!!
“டேய் எங்கடா அவிய்ங்கள காணும்” என்று ஒவ்வொரு இடமாய் அவர்கள் தேடிக் கொண்டே வர… “அங்கன என்னமோ கூட்டமா இருக்கு? என்னனு போய் பாருங்க?” என்றதும் கதிரேசன் மற்றும் களஞ்சியம் ஆட்கள் கூட்டத்தை விலக்க.. அப்போதுதான் மாணிக்கவேல் மூன்றாவது முடிச்சை மலர்விழி கழுத்தில் போட.. காண கிடைக்காத காட்சி இது மாமன்களுக்கு!!
மலர்விழிக்கு மணாளனாய் வேண்டும் என்று இருவரும் போட்டி போட்டுக் கொண்டு வர.. இங்கே அவள் மணக்கோலத்தை காணும் சாட்சிகளாய் நின்றனர் களஞ்சியமும் கதிரேசனும்!!
“டேய்…” என்று கை ஓங்கி வந்தவர்கள் கையில் அட்சதை கொடுக்கப்பட அயர்ந்து போய் நின்று விட்டனர் இருவரும்.
“மணமக்கள் இருவரும் சாமி கும்பிடுங்க!” என்றதும் மனம் முழுவதும் குழப்பத்தில் இருக்க தன்னிச்சையாக மாணிக்கவேல் கரம் உயர்ந்து கடவுளை தொழுதது.. கண்களோ வெறித்து பார்த்தது!! “உன்ற கோயிலுக்கு வரணும் வரணும்னு கொஞ்ச நாளா நினைச்சிட்டு இருந்தேன்!
இப்படி ஒரு திருப்பத்தை நீ கொடுப்பேனு நான் எதிர்பார்க்கவே இல்லை சாமி! ஏன் யா இப்படி..” என்றபடி கடவுளிடம் தன் மணக்கோலத்தை காட்டி மனதுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தான் மாணிக்கவேல்.
“நல்லதோ கெட்டதோ.. இது நீ ஏற்படுத்திக் கொடுத்த பந்தம்! கடைசி வரைக்கும் தொடர நீ தான் ஆசீர்வாதம் பண்ணனும் சாமி! நானும் அவரை மாற்ற என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன் சாமி!” என்று மலர்விழியும் மனதார வேண்டிக் கொண்டாள்.
“டேய் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?? யாருடா நீங்க? என்னங்கடா இதெல்லாம்!! அவ எங்க மொறப்பொண்ணு டா…” கத்தி கொண்டேன் கதிரேசனும் களஞ்சியமும் அங்கே உள்ளவர்களை தங்கள் கையில் இருந்த ஆயுத்தத்தை வைத்து மிரட்ட..
கருப்பண்ணன் ஆட்களும் மீசைய முறுக்கிக் கொண்டு அவர்களை கெத்தா ஒரு பார்வை பார்க்க.. “என்னடா கோவில்ல வந்து லந்து பண்ணுறீங்க.. எங்களையெல்லாம் பார்த்தால் எப்படி தெரியுது? உங்களுக்கு கொஞ்சமும் வீரத்திலேயும் நெஞ்சு உரத்திலேயும் குறையாதவைய்ங்க தேன் நாங்க! என்ன கோயிலுனு எங்க ஆயுதங்களை எல்லாம் வெளியில வச்சிருக்கோம்! எடுத்துட்டு வரட்டுமா.. நாங்களும்?” என்று கருப்பண்ணனின் பங்காளிகளில் ஒருவர் ஆஜானுபாகுவான தன் உடலை தூக்கி கொண்டு அவர்கள் முன் நின்று கேட்க.. சற்று பம்மினர் அவர்கள்…
“அவ எங்க வீட்டு பொண்ணு! அவளுக்கு எப்படி நீங்க கல்யாணம் பண்ணி வைக்கலாம்?” என்று கேட்டான் கதிரேசன்!
“அந்த புள்ள உங்க வீட்டு பொண்ணா இருந்தா.. ஏன்டா உங்க வீட்ட விட்டு ஓடி வர போகுது?” பதில் கேள்வி கேட்டார் கருப்பண்ணன்.
“அவ எல்லாம் ஓடி வரல! இதோ இருக்கியான் பாருங்க பக்கத்துல… இவேன் தான் தூக்கிட்டு வந்துட்டியான்!” என்றான் களஞ்சியம் ஆள் ஒருவன்!
களஞ்சியம் அப்போது தான் நன்றாக அது யார் என்று பார்த்தான்.
மலர்விழியின் கல்யாணமே அவனுக்கு அதிர்ச்சி என்றால்… மாணிக்கவேலை மணமகனாக பார்த்தது இன்னும் பேரதிர்ச்சி!!
“டேய் உன்கிட்ட வாங்குன பணத்துக்காக இப்படி என் வாழ்க்கையே தூக்கிட்டியேடா.. அவ பொறந்ததிலிருந்து என் பொண்டாட்டியா நினைச்சுகிட்டு இருந்தேன் டா.. இப்படி என் வாழ்க்கைய அழிச்சிட்டியே டா..!”
என்று அவனை அடிக்கப் போக சுற்றி இருந்த கருப்பண்ணன் அங்காளி பங்காளிகள் மணமக்களை ஒரு வளையமாக வளைத்து பாதுகாத்தனர்.
அவர்களை விலக்கிவிட்டு முன்னே வந்த மலர்விழி இரு மாமன்களையும் பார்த்து, “ரெண்டு பேரும் உங்களோட விருப்பத்தை தேன் சொல்லிக்கிட்டு இருந்தீக.. என் விருப்பம் என்னென்னு நீங்க கேட்டீகளா?” என்றாள் குரல் தழுதழுக்க..
“என்னது நீ என்ன பொண்டாட்டியா நினைச்சியா?” என்று களஞ்சியத்தை பார்த்து கேட்டவள் “நான் அப்படி உன்னை நினைச்சேனா? சொல்லு மாமா?” என்றாள் கோபத்தோடு. அவன் இல்லை என்று தலையாட்டினான்.
“பொறவு? எப்படி பேசுற மாமா நீனு?
நீங்க பார்க்க வளர்ந்த புள்ள நானு,
என் கல்யாணம் முடிஞ்சிடிச்சு!
என் தாய் விட்டு சொந்தமா நீங்க தான் வந்து இருக்கீக.. என்னைய ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா.. அய்த்தான்..” இருவர் காலிலும் அவள் விழ.. இருவரும் ஜெர்க்காகி பின்னே நகர்ந்தனர்.
அவளுக்கு தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்ளலாம் என்று நினைப்போடு வந்தவர்களுக்கு.. இவள் வேறு எவனோ ஒருவனிடம் தாலி வாங்கிக் கொண்டு தங்களிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தால்.. என்னதான் நினைப்பது?
“எங்கிருந்தாலும் வாழ்க!” என்றும் பாட வேண்டுமா என்ன? என்று நினைத்த கதிரேசன் “இதற்கு மேல் இங்கன நின்னு என்ன செய்றது! கெளம்புங்கடா..” என்று ஆட்களிடம் கூறயவன், மாணிக்கவேலின் புறம் திரும்பி “யோவ் புது பங்காளி.. ஒழுங்கா பார்த்துக்க. என்ன இருந்தாலும் மலரு புள்ள என் தாய்மாமன் பொண்ணு! ஏதாவது ஏடாகூடமாக கேள்விப்பட்டேன் வீச்சருவா ஆட்களோடு வந்து இறங்கி விடுவேன்.. ஜாக்கிரதை!” என்றபடி கிளம்பி சென்றான்.
ஆனால் கதிரேசன் போல் களஞ்சியத்தால் அவ்வாறு எளிதாக விட்டுக் கொடுக்க இயலவில்லை. அதிலும் நேற்று இரவு தான் ஜீவனிடம் அத்தனை பேசியிருந்தான் மாணிக்கவேலுவை பற்றி…
அதுவும் கடைசியாக ‘அவன் உனக்கு மாமனா மாமியானு செக்கப் செய்து தெரிந்துகொள்!’ என்று விட அது இப்போது கணக்கச்சிதமாக கேட்டது
அவனின் காதுக்குள்!!
மாணிக்கவேலுவுக்கு கதிரேசனின் அந்த பேச்சு பிடித்திருந்தது. அவன் சென்ற திசையை பார்த்து மெல்ல புன்னகைத்து இடம் வலமாக தலையை அசைத்துக் கொண்டான்.
பின் அலட்சிய பாவனையோடு களஞ்சியத்தின் அருகே வந்தவன் அவன் காதருகே குனிந்து, யாருக்கும் கேட்காத குரலில் “நான் மாமனா மாமியானு உனக்கு டவுட்டாமே.. அப்படியெல்லாம் டவுட் படாத பங்காளி!! எண்ணி பத்து மாதத்தில் உன்னை சித்தப்பாவாக்கி நான் யாருன்னு உனக்கு தெரிவிக்கிறேன் டா!” என்றவன் “போ.. போ.. வட்டி காச எடுத்து வை! காசு எடுத்து வைக்கலைனா போலீஸோட வருவேன்! என்னால என்ன புடுங்க முடியும்னு நீ பார்க்க தான் போற பங்காளி!” என்றான் கண்களில் தீப்பொறி பறக்க.. அதற்கு மேல் நிற்க களஞ்சியம் என்ன கூமுட்டையா அவனும் தன் ஆட்கள் கூட பறந்து விட்டான்.
“சரிங்க அண்ணாச்சி.. நாங்க கிளம்புறோமுங்க!” என்றதும் “அது எப்படி தம்பி? கல்யாணம் முடிச்சு உடனே கிளம்ப எல்லாம் முடியாது. விருந்து சாப்பிட வேணாமா.. வாங்க.. வாங்க..” என்று அவர்களை அழைத்துக் கொண்டு கறி விருந்து நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இவர்களிடம் இருந்து தப்பித்தாலும் அன்னை தந்தைக்கு தெரியாமல் இப்படி செய்துவிட்டோமே என்று குற்ற உணர்வோடு சாப்பிடாமல் கையால் உணவை அளந்து கொண்டிருந்தாள் மலர்விழி.
அதே எண்ணம் தான் மாணிக்கவேலுவுக்கும்!! அன்னை அத்தனை முறை கூறியும் ஒரு முறை கூட அவருக்கு செவி சாய்க்காதவன், ஒன்றுக்கு இரண்டாக அக்கா மகள்கள் அவனை திருமணம் செய்து கொள்ள போராடிக் கொண்டிருக்க.. அதையும் நினைத்து பார்க்காதவன், எப்படி இந்த பெண்ணை கட்டிக்கொள்ள சம்மதித்தேன்? அவள் கண்ணீர் கண்டு எப்படி மனம் இறங்கினேன்? அவளுக்காக உதவ வேண்டும் என்று ஏன் என் மனம் பரிதவித்தது அப்போது? என்ன காரணம் என்று புரியாமலேயே அவனும் சாப்பிடாமல் கைகளால் அளக்க.. கருப்பண்ணன் வந்து தான் இருவரையும் சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தார்!!
“இந்த பைக்ல போக வேணாம் வேலு.. நான் கார் ஏற்பாடு பண்றேன்” என்ற கருப்பண்ணன் கார் ஏற்பாடு பண்ணி கொடுக்க… இவன் வீட்டை நெருங்க…
அங்கே அல்லிமலர் தன் பெண்கள் நால்வரையும் அழைத்து வந்திருந்தார் அவன் தங்கி இருந்த வீட்டுக்கு! எப்படியாவது மகனை பேசிக் கரைத்து ஏதாவது ஒரு பேத்தியோடு திருமணம் பேசி முடிச்சு.. பரிசம் போட்டு விட்டு தான் கருமத்தம்பட்டிக்கு கிளம்புவது என்ற உறுதியோடு!!
பாவம்!! மகன் மாலையும் கழுத்துமாக வந்து நின்றால்.. என்ன செய்வாரோ?
Superb Sis
Wow nice epi sis ❤️
Sema 👌👌👌👌