தன் காதல் மச்சக்கன்னியை காண தன் செல்லாக்காசு அல்லகைகளை விட்டுவிட்டு தன் ஜாக்குவாரில் பறக்க ஆரம்பித்தான் கதிர் கைத்தறி நகரை நோக்கி கதிர்…
இது காதலா? வெறும் ஈர்ப்பா? என்று அவனுக்கு தெரியவில்லை. பார்த்தவுடனே அவனுக்குப் பிடித்தது அவளை.. இன்னும் பார்க்க பார்க்க பிடிக்குமா? இது வாழ்வுக்கு ஒத்து வருமா? என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. எனக்கு பிடிச்சது அவ்வளவுதான்!!
காதல் என்று வந்தால்.. காரண காரியங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாது!!
காதலே.. காதலே..
தனிப் பெருங் சுவையே..
பாடல் இப்போது ஜாக்குவாரில் ஆக்கிரமித்திருக்க.. அவனும் தன் மீசையை நீவிக் கொண்டு, சிகையை கோதிக் கொண்டு வெட்க புன்னகை சிந்திக் கொண்டான்!!
காதலுக்கு கண்ணில்லை தெரியும்!! சுவை இருக்குமா என்ன? என்று ஆகப் பெரும் சந்தேகம் இப்போது கதிருக்கு..
அப்படி சுவை இருந்தால் என்ன சுவையாக இருக்கும்?? காதலின் சுவையா? காதலியின் சுவையா?? என்று மதுரை ஆண்ட செண்பக பாண்டியன் போல.. இம்மதுரைக்காரனுக்கும்
சந்தேகம் எழுந்தது.
“அதை என் மச்சக்கன்னிகிட்ட தீர்த்துக்கிறேன்’ என்றவன், வண்டியை விரட்டினான் கைத்தறி நகரை நோக்கி..
பரமேஸ்வரன் வீட்டுக்கு முன்னால் அவனது ஜாக்குவாரை நிறுத்தினான் கதிர். கண்களை கூலரால் மறைத்துக் கொண்டான். பின் இவன் கண்கள் அலைபாய்வதை அவர்கள் கண்டு கொண்டால் என்ன செய்வது?
“வாங்க தம்பி.. வாங்க” என்று பரமேஸ்வரர் வரவேற்க..
“புடவை வேஷ்டி எல்லாம் ரெடி ஆயிடுச்சானு ஐயா கேட்டுட்டு வர சொன்னாருங்க.. எல்லாம் ரெடி ஆயிடுச்சு தானே?” என்று கேள்வி என்னவோ பரமேஸ்வரிடமும் பார்வை என்னமோ சுற்றி சுழன்று கொண்டிருந்தது அவனுக்கு..
“மத்தபடி எல்லாம் ரெடி பண்ணிட்டோமுங்க.. கல்யாணத்துக்கு மட்டும் ஸ்பெஷலா ரெடி பண்ண சொல்லி வெற்றி தம்பி சொல்லியிருந்தாங்க.. இந்த முறை நாம கொடுக்கிறது கல்யாணம் அன்னைக்கு சொக்கனுக்கு மீனாட்சிக்கும் அனுவித்து இருப்பார்களாம்.. அதனால தான் நாங்களும் கொஞ்சம் சிரத்தையா செய்யுறோம் தம்பி.. இன்னும் ஒரு வாரத்துல ரெடியாகிவிடும்” என்று அவர் கூற..
“ஒரு வாரமா திருவிழாவுக்கு இன்னும் மூணு நாள்தான் இருக்கு?” என்று இவன் கேட்க..
“திருக்கல்யாணம் கடைசி நாள் தானுங்களே.. தம்பி அதுக்குள்ள நாங்க எல்லாம் ரெடி பண்ணிடுவோம்.. நீங்க நேர்ல தான் வந்து கேட்கணும்னு அவசியமில்லை ரெடி ஆயிடுச்சுனா நானே போன் பண்ணி சொல்லிடுவேன் தம்பி” என்று அவனின் வருங்கால மாமனார் அவனுக்கு ஆப்பு வைக்க..
“அதெல்லாம் சரிவராது.. நான் போன் போடுற நேரத்துல நீங்க வேற ஏதாவது வேலையா வெளிய போலாம். நீங்க பண்ற நேரத்துல நானும் பிஸியா இருக்கலாம். திருவிழா வேலையுல நானெல்லாம் பிஸியோ பிஸி.. அதனால நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் வந்து ஒரு எட்டு பாத்துட்டு போறேன்.. வீட்டுலுள்ள உள்ளவங்க கிட்டேயும் சொல்லுங்க.. நீங்க இல்லாத போது நான் வந்து கேட்டா ஒழுங்கா பதில் சொல்ல சொல்லி” என்று அவன் கூற..
“ஐய்யோ தம்பி.. எங்க வீட்ல யாரும் அப்படி மரியாதை குறைவாய் எல்லாம் பேச மாட்டோம்” என்று பணிவுடன் அவர் கூற..
அதுவரை கண்ணில் படாத அவரின் மச்சக்கன்னியை தன் கண்முன் கொண்டு வர.. “அன்னைக்கு நான் வரும்போது ஒரு சின்ன பாப்பா வேலை செஞ்சுட்டு இருந்திச்சு… ஆளுதான் ஆளாக்கு மாதிரி இருக்கு.. ஆனா வாயி.. அப்பப்பா மதுரையை வித்து ஏப்பம் விடும் போல” என்று அவன் சீரியஸாக பேசுவதை கேட்ட பரமேஸ்வரனுக்கு பக்கென்று ஆனது. அவருக்குத்தான் அவரது பெண் பத்மபிரியாலோசனியை தெரியுமல்லவா? அவள்தான் ஏதேனும் துடுக்கு தனமாகப் பேசி விட்டதோ என்று பயந்து..
“பத்மா.. பத்மா..” என்று உள் பக்கம் நோக்கி அவர் சத்தமிட..
“பெய்.. கொம்ம நீ பாபா(அக்கா வீட்டுல இல்லை பா) என்று அவரது பையன் குமரன் பதிலளித்து விட்டு வெளியே விளையாட சென்று விட்டான்.
கதிருக்கும் அந்த குட்டி வாண்டு என்ன சொன்னது என்று புரியாமல் பரமேஸ்வரனை பார்க்க.. “அவன் என் இரண்டாவது பையன் ப்ளஸ் டூ படிக்கிறான். அவங்க அக்கா வீட்ல இல்லைன்னு சொல்லிட்டு போறான்” என்றார்.
“சரி பரவாயில்லை.. இனிமே வந்தா கொஞ்சம் நல்லபடியா பேச சொல்லுங்க” என்று தன் காதலுக்கு மாமனாரை இண்டைரக்டாக வேலை செய்ய வைத்திருந்தான் இந்த மண்ணின் மைந்தன்.
“இவளை கரெக்ட் பண்றதுக்கு முன்னாடி இவ லாங்குவேஜை கத்துக்கணும் போலயே.. பாதி வார்த்தை வாய்க்குள்ளேயே நுழைய மாட்டேங்குதே” என்று பலத்த யோசனையோடு தன் மச்சக்கன்னியை காணாத வருத்தத்தோடு குவாரிக்குச் என்றான் கதிர்.
அங்கே வெற்றி சட்டை இல்லாமல் வெறும் பனியனுடன் அமர்ந்து வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க.. ஒருமுறை கூட இவ்வாறு தன் அண்ணனை பார்த்ததில்லை இவன். இவனாவது வெயிலின் உக்கிரம் தாங்காமல் அவ்வபோது சட்டையை பின்பக்கம் ஏற்றி விடுவதும்.. பட்டனை திறந்து விட்டுக் கொள்வதுமாக இருப்பான். அனால் வெற்றியோ எப்பவும் அதே பக்கா பிஸ்னஸ் மேன் லுக்கோடுதான். ஒன்று வேஷ்டி அல்லது ஜீன்சில் தான் வலம் வருவான்.
தன் முன் இருந்த கோப்பையில் எதையோ சரி பார்த்துக் கொண்டிருந்த வெற்றி கதிர் என்று அறியாமல் “என்னடா சட்ட வாங்கிட்டு வந்துட்டியா?” என்று தன் வேலையாள் என நினைத்து கேட்க..
“நீ சொன்னா நான் வாங்கிட்டு வந்திருக்க மாட்டேனா? நீ எப்ப சொன்ன?” என்ற கதிர் பதில் கேள்வி கேட்க..
ஆஹா மாட்டிக் கொண்டோமே என்ற பிடிபட்ட உணர்வு வெற்றிக்கு. அதை தம்பி கிட்ட காட்டாமல்.. அதேநேரம் உண்மையையும் மறைக்காமல்.. சில டச்சிங் கிவிங் மட்டும் எடிட்டிங் செய்து அழகர்மலையில் நடந்ததைக் கூறினான்.
இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது மாதிரி அவன் நடத்தி முடித்த சில்மிஷ சேட்டைகளை கூறாமல்.. குரங்கு சேட்டைகளை மட்டும் கூறி முடித்து விட்டான் இந்த வேந்தன்.
அவனிடம் மறுத்து இதுவரை பேசியதில்லை கதிர்.. அண்ணன் என்று வந்தாலே மற்றவரைப் பேச விடுவதுமில்லை.. பின் எங்கிருந்து அண்ணன் மீது இவன் சந்தேகம் கொள்ள??
அவனும் இயல்பாகவே அதை ஏற்று “நானே போய் வாங்கிட்டு வரேன்” என்று வெளியேறும் தருணத்தில் தான் வேலையாள் சட்டையை வந்து கொடுக்க அதை அணிந்து கொண்ட வெற்றி “வா கோவில் வரை போயிட்டு வரலாம்” என்று தம்பியையும் அழைத்து திருவிழா பற்றி பேச கமிட்டிக்கு சென்றான்.
நிவேதிதா வீட்டிலோ அடுத்து ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது வசீகரன் நடுவில் வைத்து..
அழுத கண்கள் சிவந்த முகமாக வந்து இறங்கிய பெண்ணை.. அதுவும் ஒரு ஆணின் சட்டையை அணிந்துகொண்டு வந்து தங்கள் பெண்ணை பார்த்த புனிதா, திரும்பவுமா என்று மனது பதற “என்னாச்சு பாப்பா என்ன ஆச்சு?” என்று ஓடி வந்து கேட்டார்.
“பதறாதீக மதனி.. நீங்க நினைக்கிற போல எதுவும் இருக்காது.. கூட பாதுகாப்புக்கு என் சிங்கக்குட்டி அனுப்பி வைத்து இருக்கேனே” என்றபடி வந்த தனபாக்கியம் நிவேதாவை நிலையை பார்த்தவருக்கு மகனை யோசனையாக பார்த்தார்.
(அந்த குரங்கு குட்டிக்கு பயந்துட்டு இந்த சிங்கக்குட்டி ஓடிடுச்சு)
அழகும் மருதுவும் வீட்டில் இல்லை. இவள் பெரிய நடந்த எல்லாவற்றையும் கூற.. “இனிமே பார்த்து பத்திரமா இருந்துக்கோ டா அதுங்களோட குறி வந்து சாப்பாடா இருக்கும்போது நீ அதை தூக்கி போட்டு இருந்தா உன்னை இந்த அளவுக்கு பண்ணிட்டு இருக்காதுங்க.. ஆனாலும் உனக்கு தெரியாது தானே கூட கூட்டிட்டு போகிறவரு பத்திரமா கூட்டிட்டு போறது கிடையாது” என்று வசீகரனையும் அவர் விடவில்லை.
“முதல்ல நீ போட்டிருக்கிற இந்த கருமத்த கழட்டி தூக்கி போட்டு மருமகளே” என்று வெற்றியின் சட்டையை அணிந்து இருப்பதை பார்த்து கோபத்துடன் கத்தினார் தனபாக்கியம்.
“ஏன்டா.. அங்கேயே அவன் சட்டையை கழட்டி போட சொல்லிவிட்டு உன்னோடத கழட்டி கொடுத்தால் என்ன டா?” என்று கேட்ட பிறகுதான் வசீகரனுக்கு ஆமாமில்ல.. அந்த நினைப்பே வர தலையில் அடித்துக் கொண்டார் அவர்.
அதன்பின் நிவேதிதா தன் அறைக்குச் சென்றவள் அந்த சட்டையை கழட்டி தனபாக்கியம் சொன்னதுபோல மூலையில் வீசிவிட்டு குளித்துவிட்டு வந்தாள். ஆனாலும் அந்த நிலையிலும் அவன் சட்டையைக் கழற்றி கொடுத்த ஞாபகம் ஏனோ வந்துபோக அந்த சட்டையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதன்பின் அழகு சுந்தரமும் மருதுவும் வந்து விஷயத்தைக் கேள்விப்பட்ட வசீகரனை ரவுண்டு கட்டி விட்டனர் இருவரும்..
“அப்படி என்ன பெரிய ஆபீஸ்.. புடுங்குன ஆபீஸ் உனக்கு.. என் தங்கச்சியை விட.. இந்த லட்சணத்துல உனக்கு அய்த்த பாப்பாவ கட்டி தர சொல்லி அப்பாகிட்ட கம்பல் பண்றாங்க.. நீ பாத்துக்கிற லட்சணம் தான் இப்பவே தெரியுது” என்று நேரடியாகவே பேசிவிட்டான்.
இதே எண்ணம்தான் அழகு சுந்தரத்துக்கும்!! ஆனால் தங்கை இதுவரைக்கும் நேரடியாக கேட்காமல் இருப்பதால் அவரும் வாய் விடாமல் இருக்கிறார். தங்கை மகனே ஆனாலும் மகளுக்கு பொருத்தமாக இருக்க வேண்டும் அல்லவா? என்ற எண்ணத்தோடு..
“இரு மருது இப்படி ஆகும்னு அவனே எதிர்பார்க்கல.. பாப்பாவும் எதிர்பார்க்கல.. இதை எதுக்கு பெரிய விஷயமா பேசிட்டு இருக்குற.. அதென்ன என் பையன் வந்து அவளுக்கு ஏன் பொருத்தமில்லாதவன்? இன்ஜினியரிங் படிச்சிருக்கான்.. சொத்து பத்து என்ன கம்மியா இருக்கு எங்க கிட்ட.. அப்பன் உச்சத்திலேயே உட்கார்ந்து திங்காம தன் காலுல தான் நிற்கனும்னு.. சென்னையில் பெரிய கம்பெனியில பெரிய வேலையிலிருக்கிறான்.. சும்மா எல்லாம் மட்டம் தட்டி பேசாதே” என்று பையனுக்கு பரிந்து கொண்டு அவர் வர…
“இங்க பாருங்க மதனி இப்ப யாரும் பாப்பாவுக்கு கல்யாணம் செய்யுறதுக்கு பேசல.. அந்த உரிமை அவங்க அம்மா மட்டும் தான் இருக்கு.. அதனால தேவையில்லாம இதுபற்றியெல்லாம் பேச்சுகள் பேச வேண்டாம்” என்று அதோட முடித்துவிட்டார் புனிதா.
“ஆமாப்பா முதல்ல சின்ன அண்ணன் கிட்ட பேசணும்” என்றவாறு தன் அறைக்குள் மகனுடன் நுழைந்து விட்டார் அவர்.
“மருது.. பாப்பாவா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய்டு வாடா.. குரங்கு எங்கேயாவது கடிச்சு வச்சிருந்தா? எதுக்கும் ஒரு தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லதுதானே!!” என்று கூற..
“சரிமா கூட்டிட்டு போறேன்” என்றவன், அன்று மாலை போல மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடலுக்கு தங்கையை அழைத்துக் கொண்டு சென்றான். எப்பொழுதும் அவர்கள் குடும்பத்திற்கு என்று பார்க்கும் டாக்டர் அஷ்வீனை பார்க்க சென்றனர்.
தன் அருகில் இருந்த செவிலியரை அழைத்தவர் “இவங்களுக்கு காயம் ஏதும் பெருசா இருக்கான்னு.. செக் பண்ணுங்க சிஸ்டர்” என்ற செவிலியரோடு அனுப்பி வைத்தார் மதிவதனாவை..
மார்பின் மேல் பக்கத்தில் இருந்ததினால் டாக்டரே செவிலியரை பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.
மார்பின் மேல் பகுதியில் இரண்டு மூன்று கீற்றாக நக தடங்கள் மட்டும் மெல்லியதாக இருந்தது. செவிலியர் வந்து டாக்டரிடம் செல்ல அவளுக்கு தேவையான மருந்து ஊசியினை போட்டு அனுப்பி வைத்தார்.
“ரொம்ப வலிக்குதா பாப்பா? காயத்துக்கு மருந்து இப்பவே நீ போடுறியா நம்ம காரில் உட்கார்ந்து? இல்லேன்னா இங்கே என்னோட டாக்டர் ப்ரண்ட் ஒருத்தன் இருக்கான் அவன் ரூம்ல உட்கார்ந்து கூட போடலாம்..” என்று மருது அக்கறையாக தங்கையின் வதனம் பார்த்து கேட்க..
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ணா.. அவங்க ரூம்ல சிசிடிவி கேமரா அப்படியெல்லாம் ஏதும் வச்சிருப்பாங்க.. நான் நம்ம காருக்குள்ள உட்கார்ந்து போடுறேன்” என்று கூறியவளை, காரில் அமர்த்தி விட்டு.. “நீ போடு பாப்பா.. போட்டுட்டு எனக்கு போன் பண்ணு நான் கொஞ்சம் தள்ளி இருக்கேன்” என்றவாறு சென்றான்.
கொஞ்சம் லூசான ஷாட்டும் ஜீன்ஸ்மாய் தான் வந்திருந்தாள் மதிவதனா..
காரின் பின் பக்கம் அமர்ந்து, சட்டையின் மேல் பட்டன்களை கழற்றி விட்டு டாக்டர் கொடுத்த அந்த டியூப் மருந்தை திறந்தவள், மூடியை கீழே தவற விட குனிந்து அதை தேடி எடுத்தாள், மூடியின் பின்புறம் உள்ள அந்த கூர்முனை அல்லவா ஈசியாக மருத்து டியூப்பில் ஓட்டை போட முடியும். கீழ இருந்த நிமிர்ந்தவள் தன் அருகில் அமர்ந்து இருந்தவனை பார்த்து அதிர்ந்து ஒரு அடி பின்னால் சாய.. கதவில் இருக்கும் ஹேண்டில் தலையை முட்டிக் கொண்டாள்.
“ஆமாம் என்ன இந்த பக்கம்?” என்றான் கூலாக..
“நீ என்ன என்னையே பாலோ பண்ற? நான் எங்க போறேன்? என்ன பண்றேனு?” என்று அவள் கோபத்தில் கத்த..
“கத்தாதடி.. காருக்கும் நமக்கும் தான் செம ராசியா இருக்கு போல” என்று அவளைப் பார்த்து கூறியவன்..
“வெளியில போ டா” என்றவள் மீண்டும் கத்த..
“சொன்னேன் தான கத்தாதேனு.. இவ்ளோ நாளா நான் தான் உன்னை கார்ல தூக்கிட்டு போனேன்.. முதன்முறையாக பாரேன் இப்போ உன் காரில் என்னை நீ கடத்திட்டு போக பார்க்குற?” என்று அவன் கூறியதை கேட்டு அவளுக்கு மயக்கமே வந்து விட்டது.
இந்தப் பாதகன் அதையும் செய்தாலும் செய்வான்.. போதாக்குறைக்கு இம்முறை நம்ம காரில் ஏறிக்கொண்டு நான்தான் வர சொன்னேன் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று நினைத்தவள், அவன் மார்பில் கையை வைத்து “போடா பொறுக்கி.. சரியான பொம்பள பொறுக்கி!!” என்று அவனைக் கீழே தள்ள முயற்சிக்க..
அதற்கெல்லாம் கோபப்படவில்லை.. இல்லை கோபத்தை வேறு விதமாய் காட்டினான். அவளின் கையை இறுக பிடித்தான்.
நிவேதிதா வலியில் பேசிட, இன்னும் பலங் கொண்டு அழுத்தினான் வெற்றி, அவனின் பிடியை அவளின் மணிக்கட்டில். அவள் கரத்தை இழுத்து அவனின் பக்கத்தில் அவளை இழுத்தான்.
அவனின் திடீர் மாறுதலின் காரணம் புரியாதவள், அவனின் தோளிலிருந்து விலகி..
”ஏன்டா.. என்னை பாடாப்படுத்துற.. ஹல்க்”
என்றவளின் பக்கம் திரும்பியவன், அவளின் இருப்பக்க தோளையும் இறுக்கமாய் பற்றி உலுக்கினான் வெற்றி.
”என்னை பார்த்தா எப்படிடி தெரியுது உனக்கு? ம்ம்ம் எப்படி தெரியுது? பொம்பள பொறுக்கி மாதிரி தெரியறனா நான்.. சொல்லு? சொல்லுடி? சொல்லு? கேட்கறேன்லே சொல்லு? ஊரை கேட்டு பாரு இந்த வெற்றி எப்பேர்ப்பட்டவனு.. தீ டீ நானு!! தீ!! ஆனால் நீ மட்டும் விதிவிலக்கு.. மத்த பொண்ணுங்களுக்கு அரணா இருக்கிற இந்த வெற்றி உனக்கு மட்டும் அரக்கன் தான்!! வேற வழி கிடையாது உனக்கு இந்த அரக்கன சகிச்சு தான் ஆகணும்!!”
அவன் உலுக்கியதில் நிவேதிதா பிடித்திருந்த மருந்து கீழே விழ.. அவளின் சட்டையின் மேலிரு பட்டன்கள் திறந்து இருக்க..
“புரிஞ்சுதா?” என்று அகங்காரமாக அவன் கேட்க, நிவேதிதா அவனையே பார்த்தப்படி பேசாமல் இருந்தாள் பயத்தில்.. கோபமான வெற்றியின் விழிப் பார்வைகள் என்னவோ கோதை அவளின் விழிகளைத் தாண்டி தாண்டி வழிய போய் நின்று நகர மறுத்தது அவளின் திறந்த சட்டையை தாண்ட முடியாமல்..
பார்வையை நகர்த்த முடியாமல் திண்டாடியவன்.. “என்னாச்சு.. என்னாச்சு அங்க?” என்று தொண்டையை கனைத்து காயத்தை சுட்டிக்காட்டி கேட்டான்.
அப்போதுதான் அவன் எதிரில் தானிப்படி அமர்ந்திருப்பது புரிய சட்டென்று சட்டையை இரு கைகளாலும் மறைத்துக் கொண்டாள்.
“ரொம்ப பண்ணாதடி!! நான் பார்க்காதது ஏதாவது இருக்கா?” என்று அவளின் காதோரமாய் கிசுகிசுத்தவன், அவள் கையிலிருந்த சட்டையை விலக்கி கீழே இருந்த மருந்தை எடுத்து அவளின் காயத்தில் மென்மையாக தடவினான்.
எதையும் தடுக்கும் நிலையில் நிவேதிதா இல்லை.. எல்லாம் கடந்து சென்ற பின்னர் தடுத்து என்ன புண்ணியம்? என்றவாறு அமைதியாக கண்மூடி அமர்ந்திருந்தவளை.. செல்போன் சத்தம் நிகழ்காலத்துக்கு கொண்டுவர… கண் திறந்தவள் எதிரில் வெற்றி இல்லை.
தான் காண்பது கனவா என்று புரியாமல் சுற்றுமுற்றும் பார்க்க.. உண்மையில் அவன் வந்தானா? இல்லையா? என்று குழம்பிவளை.. நெஞ்சத்தின் மீது இருந்த மருந்து அவன் வரவை உறுதிப்படுத்தியது. மருது தான் அவளை அழைத்துக் கொண்டிருந்தான் போகலாமா என்று கேட்பதற்காக..
போனை அட்டன் செய்தவள் “போகலாம் அண்ணா வாங்க” என்றாள். அதன் பின் மருது சலசலவென்று சித்திரை திருவிழா பற்றிய விவரங்களை நிகழ்ச்சிகளை கொண்டாட்டங்களை கூறிக்கொண்டே வர எதுவுமே அவள் காதில் ஏறவில்லை ஒரு மோன நிலையிலேயே வந்து கொண்டிருந்தாள்.
இரண்டு நாள் கழித்து கைத்தறி நகருக்குள் நுழைந்திருந்தது கதிரின் ஜாகுவார். இம்முறை கண்டிப்பாக அவளைப் பார்த்தே தீர வேண்டும் என்றவன் வந்து கொண்டிருக்க.. அவர்கள் வீட்டிலிருந்து பம்மி பம்மி வெளியே சென்று கொண்டிருந்தாள் பத்ம பிரியலோசினி..
சட்டென்று ஜாக்குவாரை ஓரமாக நிறுத்தியவன் ‘இவள் எங்கே செல்கிறாள்? யாருக்கும் தெரியாமல்?? பதுங்கிப் பதுங்கி போற அவளுடைய முழியே சரி இல்லையே? என்னவோ திருட்டுதனம் பண்றா? நாமும் பின்னாடியே போய் பார்க்கலாம்” என்றவாறு இவனும் அவள் பின்னே பைய்ய பைய்ய சென்றான்.
சென்றவள் அவர்கள் வீட்டுக்கு சற்று தொலைவில் இருந்த ஒரு மரத்தின் பக்கம் வந்து மெதுவாக தனது கால் கொலுசு சினுங்க வைக்க.. அந்தப் பக்கத்திலிருந்து ஒரு அழகிய ஆண்மகன் வெளியே வந்தான்.
“அய்யோ!! இவ வேற யாரையோ லவ் பண்றாளா?” என்று அதிர்ந்து நெஞ்சில் கைவைத்து கதிர் அமர்ந்து விட.. வந்தவனும் அவள் அருகே நெருங்கி.. கையில் ஒரு பொருளை திணித்துவிட்டு.. காதில் குசுகுசுவென்று ஏதோ பேசிவிட்டு அடுத்த நிமிடம் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டான்.
வந்திருந்தவன் யார்? என்ன கொண்டு வந்து கொடுத்தான்? என்ன பேசினான்? இவளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? என கேள்விகள் வண்டாக மூளையைக் குடைய.. இதை அறிந்தால் இன்றி நிம்மதியாக இருக்க முடியாது என்று புரிந்த கதிர்.. அவளுக்கு பின்புறமாக மெதுவாக நடந்து வந்தவன்.. சுற்றுமுற்றும் பார்த்து விட்டு மீண்டும் தன் வீட்டுக்கு போக எத்தனித்த பத்மாவின் கையை அழுத்தமாக பிடித்தான்.
அப்போதுதான் அவள் கையில் இருந்த பொருளை பார்த்து அதிர்ந்து விட்டான்.
அவளோ “சொட்டான்.. சொட்டான்…” (திருடன்!! திருடன்!!) என்று அவள் கத்த..
“அய்யோ!! நானில்லை.. நானில்லை..” என்று கதிர் கத்த..
அவர்கள் சத்தத்தைக் கேட்டு கூட்டம் கூடத் தொடங்கியது.