மாமனே 6
அம்மா… அக்காக்கள் என்று குடும்பமே மொத்தமாக வந்து இறங்கி இருக்க… அதிர்ந்து சிலையாக நின்று விட்டான் மாணிக்கவேல்!!
“மாப்பிள்ள உங்கள் அக்காங்க மட்டும் வரல.. நாங்களும் வந்திருக்கோம்!” என்றபடி மாமன்மார்கள் இருவரும் வர…
‘ஏண்டா அந்த ரெண்டு டிக்கெட் மட்டும் வீட்டில விட்டிட்டு வந்தீங்க.. அவங்களையும் இழுத்திட்டு வந்திருக்க வேண்டியதுதானே!’ என்று இவன் மைண்டு வாய்ஸில் பேச..
அதை கேட்ச் பிடித்த அவனது மூன்றாவது அக்காவின் கணவர் “நீ யார தேடுவது புரியுது மாப்பிள்ள.. உன் முதல் இரண்டு மாமனுங்கள தானே.. இரண்டு பேரும் உள்ளார உன் அப்பா கிட்ட தான் பேசிட்டு இருக்காங்க!” என்றான்.
“அட.. நீ ஒரு கூறு கெட்டவன் சகல!! மாப்ள எதுக்கு மாமனுங்க தேட போறாரு.. மாமன் பொண்ணுங்கள தான் தேடுவாரு. அப்படித்தான் மாப்பிள்ள?? பொண்ணுங்களும் வந்து இருக்குங்க.. உள்ள தான் எல்லா பிள்ளைங்களும் இருக்கு!” என்றான்.
“சரியா சொன்ன சகல…!” என்று இரண்டு மூன்று ஹைஃபை கொடுத்துக் கொண்டார்கள்.
“அட!! கிரகம் புடிச்சவங்களா… இன்னைக்கு தான் எல்லாரும் வரணுமா?” என்று நொந்து நூடுல்ஸ் ஆகவில்லை வெந்து நூடுல்ஸ் ஆனான் மாணிக்கவேல்!!
‘ஒட்டுமொத்த குடும்பமும் படையெடுத்து வந்திருக்கே.. என்ன பிரச்சனைன்னு தெரியலையே? இல்ல இனிமேதான் பிரச்சனை பண்ண போறாங்களான்னு தெரியலையே.. இந்த நேரத்துல நான் வேற கல்யாணம் கட்டி வந்து இருக்குன்னு சொன்னா… ஐயையோ…!’ என்று அவன் நினைக்கும் போதே..
அந்த வண்டியில் இருந்த டிரைவர் “தம்பி.. பாப்பா இன்னும் உள்ள தூங்கிட்டே இருக்குது!” என்று கூறினார், ‘நான் செல்ல வேண்டும் உன் பொண்டாட்டியை இறக்குடா!’ என்று நேரடியாக சொல்லாமல்…
எப்படி செல்வானாம் அவன்? இல்லை எப்படி அவர்களை உதறிக் கொண்டு செல்ல முடியுமாம். இரண்டு கைகளையும் இருபக்கம் அக்காக்கள் பிடித்திருக்க.. மிக அருகில் பெரிய அக்காக்கள் இருவரும் நிற்க.. தன் எதிரே நின்று தாடையைப் பிடித்து மெல்ல ஆட்டியவாறு “நல்லா இருக்கியா ராசா? ஒழுங்கா சாப்பிடுறியா? என்ன இப்படி இளச்சி போய்ட்ட..”
என்று பிள்ளையின் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
பெண்கள் பக்கம் திரும்ப “ஏண்டி உங்களை எல்லாம் நம்பி தானே என் புள்ளைய விட்டுட்டு போனேன்? ஏண்டி இப்படி என் புள்ளையை இளைக்க வச்சிருக்கீங்க?” என்று அவர் ஏகத்துக்கும் மகள்களை கடிந்து கொண்டார்.
“நீ வேற ஏம்மா.. வாரத்துக்கு ஒரு நாள் கொண்டு வந்து கொடுக்குறத்துக்கே.. உன் புள்ள வாங்கிக்கொள்ளாம எங்க கிட்ட இருந்து தப்பிக்கிறதுலேயே குறியா இருக்கியான். இதுல தினமும் கொண்டு வந்து கொடுத்தோம்.. அவ்வளவுதான்!! மதுரையில் இருக்க மாட்டியான் திரும்ப நம்ம ஊர்ல செட்டில் ஆயிடுவியான்” என்று இரண்டாவது அக்கா சற்று கோபத்தோடு மொழிய… அதனை வழிமொழிந்தார் பெரிய அக்கா..
“சரி.. சரி.. விடுங்க.. விடுங்க.. கண்ணுகளா.. நீங்க வெசனசப்படாதீங்க. அதுதான் நான் வந்துட்டேன்ல! சீக்கிரமா என் பேத்தியில ஒருத்தியை பேசி பரிசம் போட்டு வச்சுட்டு தான் நான் ஊருக்கு போவேன். அதுக்கப்புறம் என்ன நீங்களாச்சு.. உங்க மருமகன் ஆச்சு..” என்று அவர் வாயெல்லாம் பல்லாக சத்தமாக கூற மாணிக்கவேலுக்கு மனது திக் என்று ஆனது!!
அந்த டிரைவர் பேசியது அப்போது தான் அங்கிருந்த ஐந்து பேருக்கும் புரிய.. “யாருடா அது பாப்பா?” என்று கேட்க.
இவனுக்கு எச்சில் தொண்டையில் மாட்டிக் கொண்டது. எத்தனை பெரிய பிரச்சனையும் சமாளிக்க முடிந்தவனால், ஏன் இவனே சில சமயம் பிரச்சனை எல்லாம் ஏற்படுத்தி அதில் இருந்து எல்லாம் தப்பித்து இருக்க… இன்றோ இவன் செய்ததை சொல்ல முடியாமல் இல்லை இல்லை வார்த்தைகள் கிடைக்காமல் தவித்தான் மாணிக்கவேல்!!
அதற்குள் அந்த காரை ஓட்டி வந்த ஓட்டுனரும் “தம்பி.. நான் திரும்பவும் போய் மத்தவங்கள அழைச்சிட்டு போகணும்னு. நேரம் ஆயிடும்!” என்று கூற..
“இதோ வரேனுங்க.. கொஞ்சம் இருங்க அண்ணா..” என்றவன் மற்றவர்கள் கையை மெல்ல உருவிக்கொண்டு காரை நோக்கி சென்றான்.
கடைசி இரண்டு அக்காமார்களும் எதற்கு “இவன் பதற்றத்தோடு ஏன் இப்படி போறான்? நம் கைய வேறு உருவிட்டுட்டு..” என்று யோசனையோடு பார்த்து இருந்தனர்.
காரில்நன்கு அயர்ந்து உறங்கி கொண்டிருந்த பெண்ணவளை தொடவே சற்று அவனுக்கு யோசனையாய் இருந்தது.
“அந்த பொண்ணு கைய புடிச்சு சுழட்டு சுழட்டி.. வண்டி முன்னால் உடம்போடு உடம்ப உரச உட்கார வைக்கும் போது.. இது தோணலையா ராசா?” என்று சம்மனே இல்லாமல் ஆஜாரான மனம் அவனை ஏகத்துக்கும் வார…
அதில் தலையை உலுக்கி கொண்டவன் மனைவியை மெல்லமாக தட்டினான்.
அவளோ சுகமான தூக்கத்தில்!! கன்னத்தில் தட்டிய அவன் கையை இரண்டு கைகளாலும் பிடித்து கழுத்துக்கு அடியில் வைத்துக் கொண்டு தூக்கத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்க… “ஐயோ..!” என்றானது மாணிக்கவேலுக்கு!!
பெண்ணே அவனுக்கு புதிது!! அதிலும் அவளின் வாசம்.. மெல்லிய ஸ்பரிசம் எல்லாம்.. ம்ஹீம்..!!
இத்தனை நாளில் இல்லவே இல்லை.
மற்ற விதத்தில் எப்படியோ நண்பர்களோடு கூடி குடித்து களித்து கொண்டாடி ஊர் சுற்றி எல்லாம் இருக்கிறானே ஒழிய.. பெண்களிடம் எல்லாம் மரியாதையான தூரத்தில் தள்ளி தான் இருப்பான். நான்கு அக்காக்களோடு பிறந்ததால்!
ஆனால் அதில் விதிவிலக்கு அவள் ஒருத்தி மட்டுமே!!
ம்ப்ச்.. அதுவும் முடிந்து போன அத்தியாயம்!!
மெல்ல கையை அவன் உருவிக் கொள்ள பார்க்க… இன்னும் அழுத்தமாக அவள் கழுத்துக்கு அடியில் பதித்து கொள்ள.. ஆணவனுக்கோ உடம்பில் புதுவித மாற்றம் ஒவ்வொரு அணுவிலும் பரவி விரவி படர்ந்தது!
அவன் இதயத்தில் படபடப்பு கூடியது. அதே சமயம் அவனின் மனதின் கணமும் கூடியது!! மெல்ல நடுங்கி அவன் கையோ மலரின் கன்னத்தின் மென்மைமையும் கழுத்தின் வெம்மையும் அறிய… ஆணவனுள் மெல்லிய படப்படப்பு!!
அவ்வளவு நெருக்கத்தில் அவளது முந்தாணை அவனின் உடலில் பட்டு படப்படக்க.. அதில் மாணிக்கவேலின் மனது தடத்தடத்தது!!
மற்றொரு கையால் அவளை மெதுவாக தொட.. அவன் முகம் அவள் முகத்துக்கு பக்கத்தில் இருக்க அவளின் வாசம் அவன் நாசியினுள் நுழைந்து இதயத்தில் சிம்மாசனமிட்டது!!
தேன் நிற தேகம் கொண்டவளின் கழுத்து இன்னும் சற்று வெளிறி இருக்க.. கூடவே அவன் தோளின் பட்டு போன்ற மென்மையும் அவனை ஏதோ செய்தது… ஏததோ செய்ய அழைத்தது!!
கடும் பனியில் நிற்பது போன்ற அத்தனை ஒரு குளிர்ச்சியோடு கூடிய விரைப்புத்தன்மை அவனின் சூடான தேகத்தில்!! அவளால் பிடித்த கை கழுத்தில் இடம் பிடித்திருக்க…
சின்னதாக ஒரு ஸ்பரிசம்.. இதற்கே மூச்சு முட்டியது அவனுக்கு!!
இனி வாழ்வியலின் அடுத்தடுத்து நிலைகளில் அடி எடுத்து வைக்க வேண்டும். இதற்கே இப்படி என்றால்.. சுத்தம்!!
இப்பொழுது அவள் கழுத்தில் இருந்து கையை இழுத்துக் கொண்டான் உரியவன்!!
அவளது பெயரை அங்கே கோவிலில் திருமணத்தை பதியும்போது மலர்விழி என்று சொன்ன ஞாபகம். கூடவே கதிரேசன் மலரு புள்ள என்று கூறியது நினைவு வர.. இப்போதைக்கு எதுவும் கூப்பிட வேண்டாம் என்று நினைத்தவன், “ஏனுங்க அம்மிணி.. எழுந்திருங்க..!” என்று அவனது ஆளுமையான குரலை சற்றே செருமி அழைக்க..
அடுத்து பிடித்து எழுந்து அமர்ந்தவள் தன் முன் நின்றவனை புரியாமல் பார்க்க.. அவனோ கைகளைக் கட்டிக் கொண்டு அவளை தீர்க்கமாக பார்க்க.. சட்டென்று குனிந்து தன்னையும் சுற்றுப்புறத்தையும் பார்த்தவளுக்கு அப்போதுதான் எல்லாமே புரிவதாய்!!
“ஐ அம் சாரி! நல்லா தூங்கிட்டேன் போல.. இத்தனை நாளுல இவிய்ங்களால சரியா தூக்கமே கிடையாதுங்க. ஏதோ உங்க பக்கத்துல இருக்கும்போது அவிய்ங்க நினைப்பு இல்லாம
நல்லா நிம்மதியா தூங்கிட்டேன்!” என்றவளின் வார்த்தைகள் அவன் மனதில் வெண்சாமரம் வீசியது!
தன் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து கொடுக்க.. “தாங்க்ஸ்..!” என்றவள் வாங்கி முகத்தை வாயெல்லாம் துடைத்துக் கொண்டவள், அவனிடம் திருப்பிக் கொடுத்தாள்.
இவ்வளவு நேரம் அருகில் கழட்டி வைத்திருந்த மாலையை எடுத்துக் கொண்டவள், பட்டுப் புடவை மாலையோடு இறங்க முடியாமல் சிரமப்பட.. இவனே அவளிடமிருந்து மாலைகளை வாங்கிக் கொண்டு அவளை நோக்கி வலது கையை நீட்ட, கொஞ்சம் கூட யோசிக்காமல் சிரித்த முகத்தோடு அதைப்பற்றி மெல்ல இறங்கினாள். அடுத்த கணம் கார் அங்கிருந்து சென்று விட்டது.
காரில் அந்தப் பக்கம் இவர்கள் இருந்ததால் வாசலில் நின்றிருந்த பெண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை இதுவரை..
இப்போது கார் சென்று அடுத்த நொடி கையில் மாலையோடு அருகில் பெண்ணுடன் நின்ற தம்பியை அதிர்ந்து அனைவரும் பார்த்து.. “அம்மா..?!” என்று கத்த..
“என்னங்கடி..??” என்றப்படி வெளியே வந்த அல்லிமலரோ அவனது மணக்கோலத்தை பார்த்து அங்கேயே நெஞ்சை பிடித்து உட்கார்ந்து விட்டார்.
“நான் என்னன்னு சொல்லுவேன்.. ஏதுன்னு சொல்லுவேன்.. தவமிருந்து பெத்த ஒத்த மகனை செல்லம் கொடுத்து வளர்த்தேனே… சோறு தண்ணி இல்லாம நான் கிடந்து அவனுக்கு பார்த்து பார்த்து ஊட்டினேனே…
அவன் அழகுக்கு ஊரு கண்ணு பட்டுடுமோன்னு பொத்தி பொத்தி வளர்த்தேனே.. சீறும் காளையா உலா வந்த போது மனம் நிறைந்து பார்த்தேனே… பேத்திகள ஒருத்திய பார்த்து வச்சு கல்யாணம் கட்ட ஆசையோடு இருந்தேனே… வீதி முழுக்க பந்தல் போட்டு தோரணம் கட்டி ஊருக்கே விருந்து போட்டு பெரும் விமர்சையா ஒத்த பையன் கல்யாணத்த பண்ணி பாக்கணும் பெரும் கனவோடு இருந்தேனே… நான் கட்டி வச்ச மனக்கோட்டை ஆசைக்கோட்டை எல்லாம் சீட்டு கட்டு கோட்டை மாதிரி சரிந்து போச்சே… நான் என்ன செய்வேன்? எது செய்வேன்?” என்று அந்த வாசலில் அமர்ந்து கொண்டு அவர் ஒப்பாரி வைக்க..
பெண்ணை பெற்று வைத்த இரண்டு அக்காள்களும் அவனை நோக்கி வந்தார்கள் கோபத்தோடு!!
அதற்குள் மனைவியின் சத்தத்தை கேட்டு உள்ளே சுந்தரவேலு மற்ற மாப்பிள்ளைகளும் வெளியில் வந்திருக்க… அவர்களுக்கும் ஏக அதிர்ச்சி தான் இந்த கல்யாணம்!!
ஆனால் பெண்களைப் போல சட்டென்று அவர்களது உணர்ச்சிகளை காட்டாமல் அமைதியாகவே இருந்தனர்.
“என்னடா காரியம் பண்ணி வெச்சி இருக்க? என்ன பண்ணிட்டு வந்திருக்க? உனக்காக நாங்க ரெண்டு பேரும் பொண்ண பெத்து வச்சு வளர்த்து எப்போ உன் கைல புடிச்சு கொடுக்கலாம்னு காத்துகிட்டு இருந்தா.. எப்படி நீ எவளோ ஒருத்தி கைய புடிச்சுட்டு வந்து நிக்கிறியே!! இதெல்லாம் நல்லா இருக்காடா??” என்று பெரிய அக்கா எழில் கோபத்தோடு ஆரம்பித்து கண்ணீரோடு முடிக்க..
“எங்க பொண்ணு மனசுல ஆசையை வளர்த்துட்டு இப்படி நீ ஆசைப்பட்ட பெண்ணோட வந்து நிக்கிறியே? இத நீ முன்னாடியே சொல்லி இருந்தா நாங்க எல்லாம் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க மாட்டோம் இல்ல! பாவம் எங்க பொண்ணுங்க.. அவளுகள நினைச்சு பார்த்தியா டா? உன் அக்கா பொண்ணுங்கள நெனச்சி பாத்தியா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார் இரண்டாவது அக்கா ஞானம்.
விட்டால் விடிய விடிய கேள்வி கேட்பார்கள் போல.. இதுல ஒன்று கூட அவன் செய்யவில்லையே என்று யோசிக்க மறந்தார்கள்!!
கன்டென்ட் கிடைக்காமலேயே விடிய விடிய பேசுபவர்களுக்கு.. இப்போது தொத்தாக கன்டென்ட் கிடைக்க விடுவார்களா என்ன? என்று அக்காவை அறிந்தவன், “இப்ப என்ன காரியம் பண்ணிட்டு வந்துட்டேனுங்களா? கல்யாணம் தானே பண்ணிட்டு வந்தேனுங்க..
மாலையும் கழுத்துமா தானுங்களே பொண்ண கூட்டிட்டு வந்தேனுங்க! வாயும் வயிறுமாக கூட்டிட்டு வரலையேங்க!” என்று போட்ட போடில் அத்தனை மலர்களும் வாயை பிளந்து கொண்டு நின்றது. அதில் புதிதாக சேர்ந்து மலர்விழியும் அடக்கம்!!
“புடிக்கலைன்னா சொல்லுங்க நான் இப்படி கிளம்பி என்ற ஊருக்கு போய்டுறேனுங்க..” என்று அவன் முறுக்கிக் கொண்டு கிளம்பினான்.
“வாங்க அம்மிணி..!” என்று அவன் கையை பிடித்து திரும்ப அதற்குள்
“ஐயோ ராசா.. போய்டாத.. போயிடாத..! இந்த அம்மா உன்னை ஒண்ணுமே சொல்லல” என்று அதுவரை வைத்திருந்த ஒப்பாரி எல்லாத்தையும் மறந்து விட்டு மகனின் பின்னே ஓடி வர..
“அப்பாடி!! நம்ம ராஜதந்திரம் வொர்க் ஆயிடுச்சுங்க அம்மிணி!” என்று அருகில் இருந்தவளிடம் மெல்லிய குரலில் கண்ணடித்தவன்,
முகத்தில் எதையும் காட்டாமல் மெல்ல திரும்பி நிற்க…
“இப்படி பொசுக்குனு நீ போறேன்னு சொன்னா எப்படி ராசா?” என்று அவர் மேலும் கண்ணீர் விட.. அம்மாவின் கண்ணீர் அவனை அசைத்து தான் பார்த்தது.
அதுவும் இல்லாமல் சொல்லாமல் கொள்ளாமல் இப்படி கல்யாணம் முடித்து வந்தால் அவருக்கும் அதிர்ச்சியாக தானே இருக்கும். கொஞ்ச நாள் ஆகும் எங்களின் இந்த உறவை.. திருமணத்தை ஏற்றுக் கொள்ள என்று நிதர்சனம் புரிந்தவன் “நான் எங்கேயும் போலங்க மா.. ஆனா ஒரு கண்டிஷனுங்க!” என்று அம்மாவை பார்த்தான்!!
என்ன கண்டிஷன் என்று கேட்ட அவருக்கு அவன் சொன்ன கண்டிஷனை கேட்டு தலை சுற்றாத குறை தான்!!
Superb sis
👌👌👌👌👌
🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥰 veryyyy niceeeeeeeee nd well going……….
Very interesting sis ❤️