ATM Tamil Romantic Novels

இராட்ஷஸ மாமனே… 7

மாமனே 7

 

“நாங்க இங்க இருக்கோணும்னா அதுக்கு ஒரு கண்டிஷன்!!” என்றான் மாணிக்கவேல்.

 

மகனுக்காக எந்த ஒரு கண்டிஷனையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தார் அன்னை.

 

அவர்கள் அருகில் நின்ற இரு அக்காள்களும் அதிர்ந்தனர்.

 

 “என்னது கண்டிஷனா? அதுவும் நீ போட போறியா? இதெல்லாம் நல்லாவா இருக்கு! இவனே கல்யாணம் பண்ணிட்டு வருவானாம். அதுவும் நமக்கு சொல்லாம.. ஆனா எங்க கூட இருக்கணும்னா அதுக்கும் அவனே கண்டிஷன் போடுவானாம்! ஆத்தாடி ஆத்தா… பார்த்தாலும் பார்த்தேன் இவன மாதிரி ஒரு ஆளை நான் பார்க்கவே இல்ல.. இல்லடி எழிலு!” என்று ஞானமலர் அருகில் இருந்த அக்காளிடம் குசுகுசுத்தார். அவரது பாஷையில் என்னமோ குசுகுசுகிறது தான். ஆனால் அருகில் இருந்த அனைவருக்கும் அப்பட்டமாக கேட்டது.

 

“அவளுக கிடக்குறாளுங்க… நீ சொல்லு ராசா!” என்றார் அல்லிமலர்.

 

“பாத்தியாடி ஞானம்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம்மள கண்ணுங்க கண்ணுங்கன்னு கொஞ்சன நம்ம அம்மா.. இப்ப நம்மள திட்டுது. புள்ளன்னு வந்துட்டா இந்த அம்மாக்கள் எல்லாம் சரியான சுயநலவாதியா மாறிடுறாங்க போலடி!!” என்றார் தன் ஆதங்கத்தை தங்கையிடம் கொட்டியபடி!!

 

“அவங்க.. அவங்க பிள்ளைக்கு சுயநலவாதியா இருந்தா‌. நாம நம்ம பிள்ளைக்கு சுயநலவாதியா இருப்போம் எழிலு! இவ்வளவு நாளு.. நம்ம பிள்ளைகள காக்க வச்சிட்டு இவன் எப்படி இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வரலாம்” என்று கொடி பிடித்தார்.

 

“அதானே…!!” என்று எழிலும் சேர்ந்து கொள்ள, அவன் தன் கண்டிஷன் என்று வாய் திறக்கும் முன்

 

“மொதல்ல எங்க பிள்ளைகளுக்கு ஒரு வழி சொல்லு தம்பி! அதுக்கப்புறம் நீ உன் கண்டிஷன போடலாம்” என்றனர் இருவரும் கோரஷாக! 

 

‘இது என்னடா புது விவகாரமாக இருக்கு! இந்த மாதிரி சமயத்துல ஏதாவது ஒரு பொண்ணு தானே எனக்கு ஒரு வழி சொல்லுங்கனு கேட்டுட்டு வரும்! காலம் காலமா நம்ம சினிமாவில எல்லாம் அப்படித்தானே பார்க்கிறோம்… கதையில் எல்லாம் அப்படித்தான் படிக்கிறோம்!! இவிய்ங்க என்ன ரெண்டு பொண்ணுங்களுக்கு வழி சொல்லுனு கேக்குறாய்ங்க!’ என்று ஆவென்று வாயை பிளந்த மலர்விழி அதே பொசிஷனில் அப்படியே திரும்பி தன் கணவனை பார்த்தாள்.

 

மனைவியின் பிளந்த வாயை பார்த்தவன், முறைத்து “ஏனுங் அம்மிணி.. வாயை மூடுங்க! இல்ல நான் மூட வேண்டி இருக்குமுங்க…” என்றான். 

 

முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு முத்தத்தைப் பற்றி பேசும் ஒருவன்.. இவன் ஒருவனே!! எஸ்.. யுனீக் பீஸ்!!

 

“இங்க பாருங்க கா… உங்க பொண்ணள கட்டிக்கிறனோ இல்ல உங்க பொண்ணு கட்டிப்பேனோ உங்ககிட்டயும் உங்க பொண்ணு கிட்டயும் என்னைக்காவது சொல்லி இருக்கேனுங்களா? நீங்களா இதெல்லாம் யோசிச்சு நடத்தி கேட்டா அதுக்கு நான் என்ன பண்ணுவேனுங்க?” என்றதும் இரு அக்காள்களின் முகங்கள் சூம்பி போக…

 

“அப்போ இத்தனை நாள்.. இந்த மதுரைக்கு நான் வந்திதிலிருந்து என்னை விழுந்து விழுந்து கவனித்ததெல்லாம் என்னை உங்க வீட்டுக்கு மருமகனா ஆக்கிக்கணும் தானுங்களா? என்ற தம்பினு பாசத்துல இல்ல.. அப்படித்தானுங்களே?” என்றதும் விசுக்கு என்று நிமிர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். உண்மை என்னவோ அதுதான்! ஆனாலும் அதை தாண்டிய தம்பியின் பாசம் அவர்கள் உள்ளத்தில் இருந்தது.

 

“ராசா.. வேணாம் ராசா! போதும் அவங்களை இதுக்கு மேல் எதுவும் பேசாதே…” என்று மகள்களுக்கு அம்மாவாக இப்பொழுது மாறினார் அல்லி மலர்!!

 

“நான் என்னங்க ம்மா பேசினேன். அவங்க தான் என்னமோ நான் ஏமாத்திட்டேன் என்ற புள்ளைக்கு வழி சொல்லுனு வந்து கேட்டுட்டு நிக்கிறாங்க! அதுவும் என்ன வீட்டுக்குள்ள விடாம.. இந்த வீட்டுக்கு வாடகை நான் தானுங்க கொடுத்துட்டு இருக்கேனுங்க…” என்றதும் அக்காக்களுக்கு அப்போ தான் தங்கள் மேல் உள்ள தவறு உறைக்க.. அன்னையின் முறைப்பில் வேகமாக உள்ளே சென்றனர் ஆலம் கரைக்க..

 

அதற்குள் மொத்த குடும்பமே வெளியில் வந்து நின்றது. அக்காக்கள் நால்வர் இருக்க.. யாரை விடுத்து ஆலம் எடுக்க சொல்ல? ஒருவரை தவிர்க்க முடியுமா? அங்கே நின்று இருந்து அக்கா மகள்களை பார்த்தவன் “நீங்களும் மச்சினிச்சி முறை தான் ஆவீங்க.. வந்து ஒரு கைப்பிடிங்க அம்முணிகளா…” என்றான்.

 

“மாமா எவ்வளவு நேக்கா உங்கள விட்டே ஆலம் எடுக்க சொல்றாரு பாத்தீங்களா…” என்று நறுமலர் தன் அக்காள்களிடம் கூறினாள்.

 

தேனும் வள்ளியும் மாமனை முறைத்துக் கொண்டு ஆலத்தில் கை வைக்க.. 

 

ஆலம் கரைத்து வலது கால் எடுத்து வைத்து புகுந்த வீட்டினுள் உள்ளே சென்றாள் மலர்விழி!!

 

“இப்ப சொல்லு உன்ற கன்டிஷன ராசா…” என்று அல்லிமலர் ஆரம்பிக்க..

 

“அவனே பேசாம தான் இருக்கியான்! இந்த அம்மா ஏன் இப்ப ஆரம்பிக்குது?” என்று கனி ஒளியின் காதை கடித்தார்.

 

“சும்மா இருடி.. எனக்கே பக்கு பக்குனு இருக்கு ஏதோ நம்ம பொண்ணுங்கள ஒன்ன கட்டுனா நாத்தனாரா நாள பின்ன நம்ம வந்தாலும், சித்தியின்னு நமக்கு ஏதோ கறியும் சோறும் போடும்!! இப்படி எங்கிருந்தோ ஒரு புள்ளைய கூட்டிட்டு வந்து இருக்கியான். யாரு என்னனு விவரம் கூட தெரியல.. நாள பின்ன நாம எப்படி தம்பி அம்மா வீடுன்னு போறது வர்றதுனு நானே அந்தக் கவலையில இருக்கேன்.. இவ வேற இப்ப!” என்று நொந்து கொண்டார் ஒளிமலர்!!

 

“அப்படியெல்லாம் நம்மள வர விடாம பண்ணிடுவாளா என்ன? அப்புறம் நாத்தனாருனு நம்ம பவுச காமிக்க வேண்டியது தேன்” என்று ஓரக் கண்ணால் தம்பி மனைவியை முறைத்தார் கனி மலர்.

 

இந்தப் பக்கம் பங்காளிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். “நல்ல வேலடா இவன் நம்ம பொண்ண கட்டல! இல்லனா எவன் பொண்ணா கட்டினாலும் அவன் மட்டும் மாமனாருனு ஜம்பமா அவேன் வீட்ல உட்கார்ந்து இருப்பியான். நம்மளை எல்லாம் மதிக்க கூட மாட்டானுங்க” என்று மூன்றாவது மாப்பிள்ளை நான்காவது மாப்பிள்ளையின் காதை கடிக்க…

 

“டேய் என்ன இருந்தாலும் அது என் அண்ணன் பொண்ணு டா!” என்று அவன் கூற..

 

“அண்ணன் தம்பி எல்லாம் கல்யாணம் வரைக்கும் தேன் சகல.. அப்புறம் எல்லாம் பங்காளிங்க தேன்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்.

 

“காலையில தானே நாம நம்ம பொண்ணுங்கள யாராவது ஒருத்திக்கு இவனை கட்டி வச்சே ஆகணும்னு மாமனார் கிட்ட அத்தனை பிட்டு போட்டோம்! அம்புட்டும் வேஸ்டா போச்சே டா!” என்று பெரியவர் தன் ஒன்று விட்டு தம்பியிடம் பேச…

 

“அட விடுங்க ணே.. இதுவும் நல்லதுக்கு தேன்! இப்ப ஏதாவது ஒரு பொண்ணு கொடுத்தோம்னு வெச்சுக்கோங்க.. நம்ம வீட்டு பொம்பளைங்களுக்குள்ளேயே பிரச்சனை வர நிறைய வாய்ப்பு இருக்கு… இப்போ இவளுங்க நாலு பேரும் சேர்ந்துக்கிட்டு அந்த பொண்ணுக்கு தேன் பிரச்சினை கொடுப்பாளுங்க! நமக்கு தொல்லை விட்டுது.. பாருங்க! கூடவே நமக்கும் என்டர்டைன்மென்ட்டா இருக்கும்!”

என்றதும், “அட!! இது கூட சரி தான் டா” என்று மகிழ்ந்து கொண்டனர்.

 

ஒரு வகையில் சுந்தரவேலுக்கு மகனின் இந்த திடீர் திருமணம் அதிர்ச்சியை கொடுத்தாலும்… மறுவகையில் ஒரு நிம்மதியை கொடுத்திருந்தது.

 

காலையிலிருந்து இரு பக்கமும் இரு மருமகன்களும் அமர்ந்து கொண்டு மாறி மாறி தங்கள் பெண்களுக்கு மார்க்கெட்டிங் செய்து கொண்டு இருக்க.. இவர் என்ன செய்வது என்று குழப்பத்தோடு அமர்ந்திருந்தார்.

 

“எதனாலும் என்ற பையன் வரட்டும் மாப்பிள்ளைங்க.. அவரு முடிவெடுக்கட்டுமுங்க. இதுல நாம முடிவெடுத்து ஒரு பிரயோஜனமும் இல்லிங்!” என்று பக்குவமாக எத்தனை முறை கூறியும்.. இருவரும் நிறுத்தாமல் இருக்க.. மலர்விழியை கல்யாணம் செய்து கொண்டு மருமகன்களின் தொல்லையில் இருந்து அப்பாவை காப்பாற்றினான் தனயன்!!

 

ஸ்ப்ப்பா!! என்ன குடும்பமடா உங்களது. இப்பவே கண்ண கட்டுது!!

 

இப்படி ஆளாளுக்கு ஏதோ பேசிக் கொண்டிருக்க… மலர்விழி பெரிய யோசனையோடு நெற்றியை தட்டி தட்டி யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

அருகில் நின்றிருந்தவனுக்கு “இவ என்ன தனியா யோசிக்கிறா?” என்று இவன் யோசித்து..

 

“ஏனுங்க அம்மிணி.. நீங்க என்ன பெரிய ஐன்ஸ்டீன் கணக்கா ரோஷனையில இருக்கீங்?” என்று கேட்க..

 

“யாருங்க அந்த ஐன்ஸ்டீன்? இருக்கற உங்க உறவுக்காரைய்ங்களே என்னால ஞாபகத்துல வைக்க முடியலிங்க.. இதுல புதுசா வேற ஒரு ஆள இன்ட்ரோ கொடுக்குறீங்களே! கொஞ்சம் அவங்களுக்கெல்லாம் ரெஸ்ட் கொடுங்க” என்றாள் பாவமாக..

 

அவள் சொன்னதில் அவனின் இறுகிய உதட்டில் சென்டிமீட்டர் அளவு புன்னகை!!

 

“சரிங்க.. நீங்க சொன்னது போல அவங்களுக்கு லீவு கொடுத்து அனுப்பிடுறேனுங்..” என்றவன் அவளை கேள்வியாக பார்க்க,

 

“அதில்லைங்க.. நீங்க பேசுற பேச்சு வழக்கப் பார்த்தா கோயம்புத்தூர் பக்கமா தெரியுது! ஆனா உங்க அக்காளுங்கனு சொல்ற இவங்க நாலு பேரும் பேச்சு வழக்கு எங்கள மாதிரி தான் இருக்கு! அதான் ஒரே குழப்பமா இருக்கு” என்றாள்.

 

அவளின் அதி முக்கிய கேள்வியில் அதிர்ந்து அவளைப் பார்த்தவன்,

‘எவ்ளோ பெரிய பிரச்சனை இங்க நடந்துகிட்டு இருக்கு.. அடுத்து என்ன நடக்குமோ ஏது நடக்குமோ நானே பக்கு பக்கு நின்னுகிட்டு இருக்கேன்! ஐயா வேற முறைச்சிகிட்டே இருக்காரு… அம்மாவோ ஒரு பக்கம் என்னை பாசமா பார்த்தாலும் இவள ஒரு மாதிரி மார்க்கமாவே பாக்குது! என் அக்காளுங்க இப்பவே நாத்தனார் மூடுக்கு மாறி அடுத்து இவளை என்னென்ன டார்ச்சர் செய்யலாமுன்னு கூடி கூடி பேசுதுங்க.. இதுல இவளுக்கு வந்த சந்தேகத்தை பாரேன்! பெரிய நக்கீரி பரம்பரை…” என்று மனதுக்குள் மட்டுமே திட்டிக் கொண்டான்.

 

ஆனாலும் அவளுக்கு பதில் சொன்னான்.”அது என்ற அக்காளுங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் ஆச்சுங்க… மதுர மருமகளா வந்து அப்படியே ஊரோடு குடும்பத்தோடு ஒன்றிட்டாங்க.‌ அதனாலதான் எங்க பேச்சு வழக்கு மறந்து போய் இந்த பேச்சு வழக்கு வந்துருச்சு! நான் இப்பதான் இங்க வந்திருக்கேனுங்க இனி உங்க கூட சேர்ந்தா…” என்று சில விநாடிகள் நிறுத்தி அவளை ஆழ்ந்து பார்த்தவன், “என்ற வழக்கும் மாறும்னு நினைக்கிறேனுங்க…!” என்றவன்,

 

“நீங்க என்ன நினைக்கிறிங் அம்மிணி?” என்றான்.

 

“நீங்க எதை கேக்குறீங்க சேருவதையா? மாறுவதையா?” என்று அவள் கேட்க.. சட்டு என்று சிவந்துவிட்டது மாணிக்கவேலின் காதுகள், அவள் சொன்ன அர்த்தத்தில்!!

 

“ஆத்தா‌.. இவ தெரிஞ்சு பேசுறாளா தெரியாம பேசுறாளா? நான் ஒன்னு சொன்னா இவ ஒரு அர்த்தத்துல சொல்றாளே… மாணிக்கம் இவ கிட்ட கொஞ்சம் பார்த்து தான் வாயை கொடுக்கணும் நீ” என்று நினைத்தவனின் புஜத்தில் இவள் விரலால் சுரண்ட…

 

என்ன என்று பார்வையாலே கேட்டவனிடம் “நீங்க இன்னும் பதில் சொல்லல!” என்றாள்.

 

“அது… சேரும் போது…” என்று அவன் திக்கி திணறி கூறும் போது..

 

திடீரென்று சுந்தரவேலு தொண்டையைக் கணைக்க.. “ஓகே நம்ம மாமனாரு நாட்டாமை மோடுக்கு வந்துட்டாரு” என்று நான்காவது மாப்பிள்ளை சத்தமாக சொல்லி சிரிக்க…

 

“சொல்லுங்க தம்பி… நாங்க தெரிஞ்சுக்கோணும்! இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணம் கட்டிக்கிட்டு வந்து நிக்கிறீங்க.. நாங்க இத்தனை வருஷமா எத்தனை பொண்ணு பார்த்திருப்போமுங்க.. அப்போதெல்லாம் வேணாமுனிங்க… இப்படி திடீர்னு? எங்க கிட்ட சொன்னா நாங்க உங்களுக்கு பண்ணி வைக்க மாட்டோமுங்களா? அவ்வளவு அந்நியமா போய்ட்டோமுங்களா நாங்க உங்களுக்கு? ஒரு நல்லது நடக்கோனும் தானே இத்தனை வருஷமா நாங்க கவலைப்பட்டு இருந்தோமுங்க… உங்க அம்மா கோவிலு கோவிலா ஏறி இறங்கிட்டு இருந்தா..” என்றதும் குற்ற உணர்வில் தலை குனிந்தான் மகன்.

 

மாமனாரின் இந்த குற்றச்சாட்டை தாங்க முடியாமல் “அதில்லிங்க மாமா…” என்று உண்மையை சொல்ல போனவளின் கையை இறுக பற்றியவனின் அழுத்தமே சொன்னது “நீ எதுவும் பேசாதே! வாயை திறக்காதே!” என்று!!

அழுத்தமாக நின்றான் மாணிக்கவேல்.

 

“எதுவும் சொல்ல மாட்டீங்களா? நீங்க செஞ்சதற்கான விளக்கம் கூட கொடுக்க மாட்டீங்களா?” என்றதும் அப்பொழுதும் மௌனமே சாதித்தான் மகன் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு எங்கோ பார்வையை வெறித்தபடி!!

 

 உண்மையை மறைப்பது வேறு! பொய்யாய் திரித்து பேசுவது வேறு! பொய்யாக எதையும் சொல்ல விரும்பவில்லை தன் பெற்றோர்களிடம் அவன். அதற்கு பதில் உண்மையை மறைத்து மௌனம் காப்பதே சிறந்தது என்று வாயை மூடிக்கொண்டான்.

 

“ஏனுங்க வேணாம்! முடிஞ்சது முடிஞ்சதா இருக்கட்டுமுங்க.. மத்த காரியத்தை பார்ப்போமுங்க!” என்று மெதுவாக அல்லிமலர் கூற..

 

“புள்ளன்னு வந்துட்டா உனக்கு மத்ததெல்லாம் மறந்து போயிடுமே! சரி போனது போகட்டும் அந்த புள்ளைய பத்தி விவரத்தையாவது சொல்ல சொல்லு உன்ற மவர் கிட்ட!” என்றார்.

 

அல்லிமலர் மகனைப் பார்க்க அவனுக்கு தெரிந்தால் தானே சொல்ல.. திரும்பி மனைவியின் முகத்தை அவன் பார்க்க.. அவள் தான் கடகடவென்று அனைத்தையும் கூறி முடித்தாள்.

 

அதாவது அவள் அப்பா அம்மா பற்றியும்.. இரண்டு முறை மாமன்கள் செய்த பிரச்சனை.. அன்று கல்யாணம் நடக்கும் நேரத்தில் இவன் வந்து காப்பாற்றிக் கூட்டி வந்தது வரை! ஆனால் இவர்களுக்குள்ளே எப்போ எங்கே அந்த காதல் முளைத்தது என்று அறிய வெகு சுவாரசியமாக நின்றிருந்தது இளசுகள்.

 

“அதெல்லாம் சரிங்க அய்த்த.. இதுல முக்கியமானது ஒன்ன டீலுல விட்டுட்டீங்களே..!” என்று நறுமலர் எடுத்துக் கொடுக்க.. என்ன என்று பார்த்தவளிடன் “அதான் உங்களுக்கும் மாமாவுக்கும் அந்த அஸ்கு அஸ்கு எப்போ எங்கே உருவானுச்சு!” என்று அவள் கேட்க… அவளோ கன்னங்கள் சிவந்து தலையை குனிந்து கொண்டாள் மலர்வழி.

 

“அடிச்சீ… கழுத வாய மூடுடி!” என்று கனி திட்ட, அவள் வாயை மூடிக்கொண்டாள்.

 

“நான் கண்டிஷன் சொன்னது இதுதானுங்க… எங்க ரெண்டு பேருக்கும் நடந்த விஷயம் எங்களுக்கு உண்டானது! அதை எல்லாம் யாரும் கேட்காதீங்க… அப்புறம் இந்த கல்யாணம் உங்களுக்கு தெரியாம நடந்ததால உங்களுக்கு கண்டிப்பாக கோபம் வருத்தம் எல்லாம் இருக்குமுங்க.. அதை எல்லாம் என்கிட்ட மட்டும் காட்டுங்க என்ற பொண்டாட்டி கிட்ட காட்டாதீங்க!!” என்றதும் அல்லிமலருக்கு திக் என்று ஆனது!!

 

“நான் அப்படி ஏதாவது பேசுவேணு நினைக்கிறியா ராசா?* என்று அவர் கேட்க..

 

“இல்லிங்மா கோவத்துல வருத்தத்துல கூட நீங்க வாய் விட்டுவிடலாமுலங்க…அதுக்காக தான் முன்னாடியே சொல்லி வைக்கிறேனுங்க..

எனக்கு நீங்க எல்லாம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமுங்க என்னை நம்பி வந்த பொண்ணும்!” என்றதும் கண்கள் கலங்க கணவனை பார்த்தாள் மலர்விழி!

 

அந்த விழிகளில் தான் எத்தனை எத்தனை நேசம்! எத்தனை காதல்!! ஒரே நாளில் ஒருவர் மீது நேசம் பூத்து விடுமா? காதல் மலர்ந்து விடுமா?

 

ஆம்! வந்து விட்டதே!! சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் காதல்!!

 

அவளை அந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றியது மட்டும் அல்லாமல் தன் குடும்பத்திடமே தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசும் இவனை அத்தனை பிடித்தது!! அதுவும் கணவனாய் நல்ல மனிதனாய்!!

 

“அப்புறம் இன்னொரு விஷயமுங்க.. இப்படி நான் திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டேன்! ஆனாலும் உங்க பேச்சாள வீட்டில் இரண்டு அம்முணிகளும் எனக்காக காத்துட்டு இருந்திருக்காங்க.. அதனால முதல்ல அவங்களுக்கு ஒரு நல்லது முடிக்கனுமுங்க… அதுக்கு இடையில இன்னும் குழந்தை உண்டாகலையா அப்படி இப்படின்னு கேட்டு எங்களை சங்கடப்படுத்தாதிங்! முக்கியமா என் பொண்டாட்டியை யாரும் எதுவும் கேட்கக்கூடாதுங்” என்று சபையிலேயே அவன் மிரட்டாமல் மிரட்டினான்!!

 

இப்போது வள்ளியும் தேனும் அவனை முறைத்துக் கொண்டு “நீங்க ஒன்னும் எங்க கல்யாணத்தை பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க! அதுக்கு தான் எங்க அப்பா அம்மா இருக்காங்களே.. அவங்க பார்த்து செய்வாங்க” என்றனர் வெடுக்கென்று!!

 

“நல்லா அந்த வாயிலேயே போடுவேன் பார்த்துக்க..!” என்று தங்கள் பிள்ளைகளை கண்டித்தனர் எழிலும் ஞானமும்.

 

“அவன் உன்ன கட்டுனாலும் கட்டலைன்னாலும்… தாய் மாமா தான் தாண்டி! அவன் முதல் மாலை போட்டா தான் உனக்கு கல்யாணமே! தெரியும் இல்ல?” என்று கண்டிக்க இவர்கள் இருவரும் உதட்டை சுழித்தனர்.

 

“சரி சரி அப்படியே சும்மா இராம மதிய விருந்துக்கு ஏற்பாடு பண்ணனுங்க… ஏம்மா மருமக பொண்ணு.. உங்க அப்பா அம்மா போன் நம்பர் குடுங்க. அவங்க கிட்ட பேசுவோம்! அந்த மனுஷனுக்காவது தெரியுமா?” என்றதும் இல்லை என்று தலையாட்டியவள் தன் அப்பாவின் நம்பரை சற்று பயத்தோடு கூறினாள்.

4 thoughts on “இராட்ஷஸ மாமனே… 7”

  1. 🤩🤩🤩🤩🤩🤩 wowwww very niceeeeeeeee epii sis very interesting…… Nd lovable…. Quickly upload nxt epiii sis ❤️❤️💐💐

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top