ATM Tamil Romantic Novels

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

பாரதி கண்ணன்

அத்தியாயம் 1

 

“ஆருஷாஆஆஆஆ.. அடியேய்! எந்திரிடி. விடிஞ்சு எவ்ளோ நேரமாச்சு. இன்னும் எப்படி தூங்குறா பாரு? எல்லாம் உன் அப்பா கொடுக்குற இடம். இன்னைக்கு வரட்டும் அந்த மனுஷன், ஒன்னு இந்த வீட்டுல நீ இருக்கணும்? இல்ல நானிருக்கணும்? அய்யய்யோ! என்னால இவளை மேய்க்க முடியலப்பா. காலேஜ் படிச்சு முடிச்சிட்டு ஒன்னு வேலைக்கு போகணும்?! இல்ல கூட மாட இருந்து வீட்டு வேலைல ஒத்தாசையா இருக்கணும்?! எப்பப்பாரு ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஊரை சுத்த வேண்டியது. ராக்கோழி மாதிரி விடிய விடிய போன் பார்க்க வேண்டியது, விடிஞ்சதுக்கு அப்புறம் தூங்க வேண்டியது. அடியேய்! எந்திரிச்சி சூரியனை ஒரு தடவையாவது பாருடி..”

 

 “நான் ஏன்மா சூர்யாவ பார்க்கணும்?! ஜோதிகாவுக்கு தெரிஞ்சா, என்னைய செருப்பால அடிக்க மாட்டாங்க?”

 

“ஓ! இது மட்டும் உன் காதுல நல்லா விழுகுதோ? அடியேய்! நான் எங்கடி சூர்யான்னு சொன்னேன்?! சூரியனை பார்க்கச் சொன்னேன்.”

 

“நான் ஏன்மா சூரியனை பார்க்கணும்? அடிக்குற வெயில்ல டங்குவாரெல்லாம் அத்துகிட்டு போகுது. இதுல சூரியனை நான் போய் நின்னு சைட் அடிச்சுட்டு இருந்தா, அந்த கோபத்துல அவர் என்னோட கண்ணை பொசுக்கிட மாட்டாரு?! நைட்டெல்லாம் சுஜா சிஸ் ஸ்டோரி படிச்சு கண்ணெல்லாம் எரியுது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்குறேனே!”

 

“அடியேய்! எதிர்த்த வீட்டு சதீஷை பாருடி. எவ்ளோ சமத்தா காலேஜ் முடிச்சு, கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட்டாகி, இன்னைக்கு ஒரு கம்பெனில டீம் லீடரா இருக்கான். நீயும் அவங்கூட தானே படிச்ச, கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்குறியா? இதையெல்லாம் உங்கப்பாட்ட சொன்னா ராஜபரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைன்னு ஆரம்பிச்சுடுவாரு. எல்லாம் என் தலையெழுத்து.”

 

“சும்மா கத்தாதம்மா, நீயும் அந்த சதீஷோட அம்மா மாதிரி டாக்டரா ஆகிடு. நானும் அவனை மாதிரி கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட்டாகி காட்டுறேன். விதை ஒன்னு போட்டா, சொரை ஒன்னா முளைக்கும். உன் பொண்ணு உன்னை மாதிரி தானம்மா இருப்பேன். சரி காஃபி எங்கம்மா?”

 

“ஆமாண்டி! அது ஒன்னு தான் குறைச்சல். உன்னை பெத்த வயித்துல பிரண்டையை கொண்டே அடிக்கணும். ஊர் உலகத்துல போய் பாருடி. ஒவ்வொரு பொண்ணும் எப்படி மங்களகரமா எந்திரிச்சு, அவங்க அம்மாக்கு காஃபி போட்டுக் கொடுக்குறாங்க. ஒத்தப்புள்ளன்னு தவமா தவமிருந்து பெத்தேன். அந்த ஒத்தையும் நத்தையா பொறந்துருக்கே.. எந்திரிடி.. எங்க அந்த தொடப்ப கட்டை..”

 

“ஏன்மா வீட்டை கூட்டப் போறியா?”

 

“இல்ல உனக்கு பேயோட்டப் போறேன்”

 

“ஏன்மா கோவிச்சுக்குற? என் செல்ல அம்மாயில்ல?! ஒரு ஒரே காஃபி போட்டுக் கொடும்மா..”

 

“ஏய் கல்யாணி! இந்தாடி தண்ணீ.. அவ மூஞ்சிலயே ஊத்துடி. பிள்ள பெத்துருக்காப் பாரு. தினோ இதே பொழப்பா போச்சு, உங்க ரெண்டு பேருக்கும். நீ சுப்ரபாதம் பாடி அவளை எழுப்பி விடலைனா, அவளுக்கு அந்த நாளே விடிஞ்சபாடிருக்காது.”   

 

“ஏய் தாய்கிழவி! முதல்ல உன்னை போட்டு தள்ளணும். என்னைய கொலைப்பண்றதுக்கு ஐடியாவா கொடுக்குற. இருடி. நீ தூங்கும் போது கட்டிப்பிடிச்சுட்டு இருப்பீங்களே, அதை சுடுறேன் பாரு..”

 

“க்கும் உன் தாத்தே சொத்துன்னு கொடுத்துட்டு போனதே அது ஒன்னு தான். அது மேல ஏன்டி உனக்கு கண்ணு. முதல்ல எந்திரிச்சு பல்லு தேய்டி. அய்யோ! எந்த பையே உன்கிட்ட மாட்டிக்கிட்டு சீரழியப் போறானோ?”

 

“உனக்கே ஒருத்தன் கிடைச்சுருக்குறப்போ, எனக்குன்னு ஒரு அடிமை சிக்காமலா போயிடுவான்?!”

 

“அடடடா! என்ன சத்தம் இங்க? காலங்காத்தால காய்கறி சந்தை மாதிரி சத்தம் கேட்குது. மனுஷன் வேலைக்கு போறதா? இல்லையா?”

 

“பாருங்கப்பா! உங்க அம்மாவும் பொண்டாட்டியும் எப்பப் பார்த்தாலும் திட்டிட்டே இருக்காங்க.”

 

“ஏன்மா வயசாகுதே?! கொஞ்சமாவது அறிவு வேணாம். இவ தான் பெத்த தாய் மாதிரி இல்லாம மாமியா மாதிரி இருக்கான்னா, நீங்களும் இவக்கூட சேர்ந்துட்டு என் பொண்ணை பாடாப்படுத்துறீங்க.”

 

 “ஆமாண்டா! இவ பெரிய மகாராஜாக்கு வாழ்க்கப்பட்டு போகப்போறா, நாலஞ்சு பேரு சுத்தி நின்னு சேவகம் பண்ணப் போறாங்க பாரு?! அடேய்! ஊருக்கே பருப்பானாலும் வீட்டுக்கு தொடப்பகட்ட தான். உன் மவ ஊருக்கே ராணியாயிருந்தாலும் வீட்டுல சட்டிப் பானைய உருட்டித் தான் ஆகணும்.”

 

 “நாம ராஜபரம்பரைம்மா, என் பொண்ணை ஒரு ராஜாவுக்கு தான் கட்டி வைப்பேன். நீங்க வேணா பாருங்க, என் பொண்ணோட அழகுக்கு ராஜா மாதிரி மாப்ள, குதிரை மேல வந்து தூக்கிட்டு போவாரு.”

 

“டேய் உங்க அப்பாவும் தாத்தாவும் இதே மாதிரி பெருமை பேசி பேசியே ஓஞ்சு போனாங்க. நீயும் ஏன்டா அதே தப்பை பண்ற?”

 

“ஹேய் ராஜம்மா! என் பேரனை குறை சொல்லலேன்னா, உனக்கு தூக்கம் வராதா? போ, போயி வேலையைப் பாரு.”

 

“க்கும்! வயசு நூறு ஆனாலும் இன்னும் சில்க் பாட்டுக்கு டான்ஸ் ஆடுற மாதிரி கிழவி வையிரம் பாஞ்ச கட்டையாத் தான் இருக்கு..”

 

“அங்க என்னடி முணுமுணுப்பு? மகன், மருமக, பேத்தி எடுத்தாலும் நீ இந்த வேலுநாச்சிக்கு மருமகதே. போ.. போயி எனக்கு கடிக்க நல்லா நாலு நல்லி எலும்பாப் பார்த்து வாங்கிட்டு வந்து குழம்பு வையி. போ..”

 

“கிழவிக்கு இருக்குற கொழுப்பப்பாரு? சாகப் போற வயசுல நல்லி எலும்பு கேட்குது. எல்லாம் என் நேரம். மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைன்னு சொல்லி சொல்லியே என்கிட்ட இருக்குற எல்லா நகையையும் வித்து திண்ணுட்டாங்க. இன்னும் எதை முழுசா முழுங்குறதுக்கு கிழவி காத்துகிட்டு இருக்கோ?”

 

“புலம்பாம போய் வேலையைப் பாரு. என்ன உனக்கு மட்டும் தனியா சொல்லணுமா? என் ஆருக்குட்டிய நான் பார்த்துக்குவேன். நீ உன் மாமியாருக்கு சமையல்ல போய் கூடமாட இருந்து ஒத்தாசை பண்ணு. டேய் ராஜராமா! உனக்கு மட்டும் தனியா சொல்லணுமா? கடை திறக்க நேரமாகல? கிளம்பு கிளம்பு.” என்ற வேலுநாச்சியாரை ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் ஆருஷா.

 

“ராஜமாதா! கலக்கிட்டப் போ.” 

 

“அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல போய் குளிச்சுட்டு வா. நாம இன்னைக்கு முக்கியமான இடத்துக்கு போகணும்.”

 

“எங்க? போயி கிளம்பிட்டு வா. சொல்றேன்.” 

 

“இதோ கிளம்பிட்டேன்.” என்று துள்ளி ஓடும் ஆருஷாவை ஆதூரமாக பார்த்திருந்தாள் நூறு வயதாகியும் இன்னும் இரும்பு மனுஷியாய் இருக்கும் வேலுநாச்சியார். தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில் உள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள கீழடி அவ்வூராட்சியின் ஒரு கிராமம் ஆகும். அக்கிராமத்தில் பெயர் பெற்ற குடும்பம் தான் ராணி வேலுநாச்சியாரின் குடும்பம். இவர்களின் குடும்பம் வழிவழியாக மக்களை ஆட்சி செய்து வந்த மன்னர் பரம்பரையாகும். காலப்போக்கில் நடந்த மாற்றங்களினால் இவர்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்த காரணத்தினால், இன்று மக்களோடு மக்களாக கலந்து வாழ்கின்றனர். மன்னர் பரம்பரை என்ற பெயரை தவிர இப்போது அவர்களிடம் வேறெதுவும் இல்லை. 

 

கீழடியில் தன் நிலத்தை குத்தகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் சொந்தமாக பலசரக்கு மாளிகை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர் ராஜாராமன். இவரது தாயார் ராஜம்மாள்; மனைவி கல்யாணி. இவர்களின் இளவரசி ஆருஷா. தொட்டால் சிவந்துவிடும் பொன்மேனி கொண்டவள். தரையில் நடக்காமல் ஓடும் கங்கையவள். கரும் மேகங்கள் அவளது குழலாகும்; கரும் பொன்வண்டுகள் அவளது விழிகளாகும்; சிரிக்கும் இதழ்களோடு கண்களும் கவிபாடும் பிரபஞ்ச அழகியவள். இவளை பாதுகாப்பதே அவ்வீட்டினரின் தலையாய கடமையாக இருக்கின்றது. பல இடங்களில் இருந்து பெண்கேட்டு வந்தாலும் தன் மகளை ராஜாவைப் போன்ற ஒருவனுக்கு தான் மணமுடிப்பேன் என்று காத்திருக்கிறார் ராஜராமன். ஆருஷாவிற்கு தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைக்கின்ற பொருள்களை பார்ப்பதில் அலாதி பிரியம் கொண்டவள். இதற்காக அகழ்வாராய்ச்சி செய்யும் இடத்திற்கு வாரம் ஒரு முறை தன் கொல்லுப் பாட்டியாக வேலுநாச்சியாரை இழுத்துக் கொண்டு சென்று விடுவாள். அதே போல் அன்றும் வேலுநாச்சியாரை இழுத்துக் கொண்டு சென்றவள், அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை தூரத்தில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருஷா. 

 

“ராஜமாதா! அங்கப்பாரேன். நம்ம வீட்டுல ராஜம்மா கட்டிலுக்கு அடில ஒரு பெட்டி இருக்குமே அதே மாதிரி இருக்குல்ல.”

 

“அடியேய் கிறுக்கி! சத்தமா பேசாத. அப்புறம் அந்தப் பொட்டியையும் வந்து தூக்கிட்டு போயிடுவானுங்க.”

 

“ஆமா ஆமா! நான் மெதுவாவே பேசுறேன். தாய்கிழவி, அந்த பெட்டிக்குள்ள என்ன வைச்சுருக்கும்?”

 

“யாருக்கு தெரியும்? அப்புறம் இன்னொரு விஷயம்..”

 

“என்ன ராஜமாதா?”

 

“இங்க கண்டுப்பிடிக்குறதெல்லாம் நம்ம அரண்மணைக்கு தான் வருமாம். உன் அப்பன்கிட்ட நாலு ஆஃபிஸர்ஸ் பேசிட்டுருந்ததை நான் கேட்டேன்.”

 

“அப்போ இந்த பெட்டியோட சேர்த்து நம்மகிட்ட ரெண்டு பெட்டி வரும்னு சொல்றீங்க.”

 

“அதே தான். சரி பொழுதோட வீட்டுக்கு போகணும். நடைய கட்டு. இன்னைக்கு உன் அப்பா, அம்மாவோட ராஜம்மாவும் உன்னோட கல்யாண விஷயமா சென்னைக்கு போறாங்க.”

 

“என்னது எனக்கு கல்யாணமா?”

 

“ஆமா! அங்க யாரோ ராதாகிருஷ்ணன் இருக்கானாம். பெரிய பணக்காரனாம்; கோடிக்கணக்கான டாலருக்கு அதிபதியாம். அவன் மேட்ரிமொனில பதிஞ்சுருக்கான். உன் அப்பாவும் உன்னோட போட்டோவை கொடுத்துருக்கான்ல. அதை பார்த்துட்டு அந்த ராதாகிருஷ்ணனோட பாட்டி உன்னையத் தான் அவங்க வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வரணும்னு ஒத்த கால்ல நிக்குறாங்களாம். அதான் உன் அப்பாவை குடும்பத்தோட தூக்கிட்டுப் போயிட்டாங்க. என்னடி சந்தேகமா பார்க்குற? உனக்கு துணையா என்னைய மட்டும் விட்டுட்டு போயிட்டாங்க. இல்லேன்னா சென்னைக்கு போயி அந்த தாஜ்மஹால பார்த்துட்டு வந்துருப்பேன்.”

 

“சென்னைல தாஜ்மஹாலு?!”

 

“ஆமா! பின்ன இல்லையா?”

 

“க்கும், உன்னோட ஷாஜகான் கட்டிய வைச்சுருக்காரு. போயி அங்கேயே ஜீவ சமாதியாகிடு.”

 

“ஏன்டி உனக்கு என் மேல இம்புட்டு வெறி?”

 

“ராஜமாதா! ஒழுங்கா பேசாம வா. நானே என்னைய சீக்கிரம் கல்யாணம் பண்ணி கொடுத்துடுவாங்களோன்னு பயந்து போய் கிடக்குறேன்.” என்றவாறே இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். அனைவரும் கிளம்பி சென்னை சென்றிருக்க, ஆருஷாவும் வேலுநாச்சியாரும் மட்டும் அரண்மனையில் தங்கியிருந்தனர். காவலுக்கு இருந்த காவல் துறை அதிகாரிகள் சாப்பிட சென்றிருந்தனர். இரவில் கண்மூடிப்படுத்திருந்த ஆருஷாவிற்கு உறக்கம் தான் வருவேனா என்றிருந்தது.

 

“ஹூம் எங்க தூங்குறது? நமக்கு தான் ராத்திரில தூக்கமே வர்றதில்லையே. ஊர்காவலன் ரஜினி மாதிரி விடிய விடிய இந்த வீட்டை சுத்துவோம். எங்க நம்மளோட வெப்பன். இந்தாருக்கு. இந்நேரம் ஸ்டோரி அப்டேட் வந்துருக்கணுமே?! ஏன் வரல? நோட்டிஃபிகேஷனும் காட்டல?” என்று புலம்பியவாறே கையில் செல்போனை எடுத்துக் கொண்டு தங்களது அரண்மணைக்குள் உலவிக் கொண்டிருந்தவளின் மேல் வந்து மோதினார் வேலுநாச்சியார். 

 

“ராஜமாதா! சொல்லிட்டு மோத மாட்டியா? அரண்மனை படத்துல வர்ற ஹன்சிகா மாதிரி ஏன் இப்படி ஃபுல் மேக்கப் போட்டுட்டு சுத்துற?”

 

“மெதுவா பேசு ஆரு. உன்னோட ரொம்ப நாள் ஆசை இன்னைக்கு நிறைவேறப் போகுது.”

 

“என்ன சொல்ற ராஜமாதா?”

 

“ராஜம் கட்டிலுக்கு அடியில் இருந்த அந்த பெட்டியோட இன்னைக்கு கண்டுபிடிச்சாங்களே அந்த பெட்டியையும் ஒன்னா சேர்த்து என் ரூம்ல மறைச்சு வைச்சுருக்கேன். அதை உன்கிட்ட காட்டணும்னு தான் கூப்பிட வந்தேன். போலமா?”

 

“ஐ! சூப்பர் போலாம்! போலாம்!” என்று துள்ளிக் குதித்த ஆருஷா, வேலுநாச்சியாரோடு சேர்ந்து அவரின் அறைக்குள் சென்றாள். அங்கே சிறிய ஒரு ஆள் மட்டுமே படுக்க முடியும் என்ற அளவிற்கு இரண்டு பெட்டிகள் இருந்தன. மூடியிருந்த அப்பெட்டியின் மீது சில தமிழ் சொற்களின் வடிவங்களும் தெய்வங்களின் திருவுருவங்களும் இருந்தன. அவ்விரு பெட்டியின் திருகுகோலும் சர்ப்பத்தை வடிவமாகக் கொண்டு அமைந்திருந்தது. 

 

“வாவ்! ராஜமாதா! சூப்பராயிருக்குல்ல.” என்ற ஆருஷா, அப்பெப்டியின் திருகுகோலை திறந்து, அதன் மேல் இருக்கும் எழுத்துக்கள் பொன்னொளியாக உயிர்பெற்றெழுந்தன. அதனை ஆருஷாவையும் அறியாது வாசிக்கத் தொடங்கியிருந்தாள். 

 

“காலமகன் சக்கரத்தை கண்ணியவள் தீண்ட, வண்ணம் நீவிய மன்னவனின் வணங்குஇறைப் பணைத்தோள் சேர்வாளோ பூவிழியாள்!” என்று படித்து முடித்த மறுகணம் கண்ணைப் பறிக்கும் ஒளியில் மாயமாகிப் போனாள் ஆருஷா. 

 

2 thoughts on “இரகசிய மோக கனாவில்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top