ATM Tamil Romantic Novels

எங்கு காணினும் நின் காதலே… 14

14

 

இளங்காலை வேளை.. அவர்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த மரங்களின் நடுவே நடந்து கொண்டிருந்தாள் நிவேதிதா!!

அவள் மனம் முழுக்க குழப்பங்கள் மேகங்களாக சூழ்ந்து மழையென பொழிந்துக் கொண்டிருந்தது.

 

 

தந்தையின் இந்த திடீர் விஜயம் தன்மேல் உள்ள பாசத்தினால் என்று தெரிந்தாலும் அதற்கு மேலே ஏதோ ஒன்று இருக்கிறது என்று அவளுக்குப் புரிந்தது. சாதாரணமாக இருக்கும்போது கூட அவளையே கண்களால் தொடர்ந்து கொண்டிருந்தார் மேகநாதன். சிறிது நேரம் அவள் வீட்டில் இல்லை என்றாலும் அவளை கூப்பிட்டுக் கண் எதிரே வைத்துக் கொண்டார். இதற்கெல்லாம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அவர்களைப் பிரிந்து படித்துக் கொண்டிருந்தவள் தானே!! அப்போதெல்லாம் இப்படி இல்லையே தந்தை!! இங்கே நான் வந்த பிறகு கூட பார்த்துக்கோ என்று எனக்கு தைரியம் அளித்தவர் தானே!! இந்த இடைப்பட்ட நாட்களில் என்ன நடந்தது? இது ஒரு பக்கம் அவளுக்கு தலையை குடைந்து கொண்டிருந்தது!!

 

மறுபக்கம் வெற்றி.. அவனின் செயல்களை எந்த கணக்கில் எடுப்பது? உரசி உரசி பேசுவதும்.. அவ்வப்போது எல்லைகள் தாண்டுவதும்.. இடையிடையே அக்கறை காட்டுவதும்.. கடைசியில் இவை எல்லாம் நடிப்பு என்ற மாதிரி ஒரு சிரிப்பு!! அவனின் அந்த நிதான சிரிப்பு!! முதுகு தண்டு வரை சில்லிட வைக்கும் அந்த சிரிப்பு!! அவன் நடவடிக்கைகளும்.. பேச்சும்.. பழிவாங்குவது போலவே இருந்தாலும்.. அதையும் தாண்டி அவ்வப்போது என் பத்திரத்தையும் பார்த்துக் கொள்கிறான். இவனை எந்த கணக்கில் சேர்ப்பது? நல்லவன் என்று நினைக்கவும் முடியவில்லை!! கெட்டவன் என்று விலக்கி வைக்கவும் முடியவில்லை!! என்ன நடந்தாலும் இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் இங்கு இருக்கக் கூடாது. திரும்பவும் ஆஸ்திரேலியா பறந்துவிட வேண்டும். இனி அந்த லாகிரித்தம்மை அம்மாவே நமக்கு பார்க்க மாட்டார்கள். அதனால் நிம்மதியாக நம் வேலையை பார்க்கலாம். இனி எப்பொழுதும் மருது அண்ணாவையும் கூடவே வைத்துக் கொள்ள வேண்டும் வெளியில் செல்லும் போதெல்லாம்!! அவன் கையில் இனி மாட்டவே கூடாது என பல வகையில் இவள் தனக்குள் தீரமானங்களை எடுத்துக் கொண்டிருந்தாள். தீரமானங்கள் யார் வேணாலும் எடுக்கலாம் ஆனால் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லவா?

 

 

அதைத்தான் எப்போதோ எடுத்துக்கொண்டு இருந்தானே வெற்றி!!

 

 

சிறிது நேரம் நடந்து விட்டு இவள் வீட்டுக்குள் நுழையும்போது.. அங்கே காலையில் இருந்து மகளை காணாமல் “நிவே.. நிவே” என்று குளறலாக் கத்திக் கொண்டிருந்தார் மேகநாதன்!!

 

 

அதுவும் வீல் சேரை அங்கே இங்கே நகர்த்திக்கொண்டு.. அவரின் பின் பக்கம் சுவாதி நின்றுகொண்டு “நாதன் ரிலாக்ஸ்!! ரிலாக்ஸ்!! நிவே இங்கே எங்காவது தான் இருப்பா.. நீங்க கொஞ்சம் ரிலாக்ஸாக இருங்க. ஸ்டே காம்” என்று மன்றாடி கொண்டிருந்தார்.

 

 

இன்னொரு பக்கம் புனிதா செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டிருக்க.. அழகு சுந்தரமோ “மேகா இங்கே பாருடா.. கொஞ்ச நேரம் அமைதியா இருடா!! பாப்பா எங்கேயும் போய் இருக்கமாட்டா.. கொஞ்சம் அமைதியா இருடா!!” என்று அவரை கன்னத்தில் தட்டி தட்டி நிதானத்துக்கு கொண்டு வந்தார்.

 

 

மருதுவோ அந்த வீட்டையே சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்தான். இன்னொரு பக்கம் தனபாக்கியமும்.. வரதனும் தேட.. அப்போதுதான் வசீகரன் வீட்டுக்குள் நுழைந்தான். ஏற்கனவே மேகநாதன் சுவாதி வரவைப் பற்றி மகனுக்கு அறிவித்து, அதனால் திருவிழாவை சாக்காக வைத்து லீவு எடுத்துக் கொண்டு வருமாறு அறிவுறுத்தி இருந்தார் தனபாக்கியம். அவனும் தாய் சொல்லைத் தட்டாத தனயனாக வந்து நிற்க மேகநாதனை நேரில் பார்த்தவனுக்கு அவரின் இந்த வினோத நடவடிக்கைகளை யோசனையுடன் பார்த்து கொண்டிருந்தான்.

 

 

அப்பத்தாவோ உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தார். வீட்டில் இப்படி ஒவ்வொருவராக ஒவ்வொரு நிலைமையில் இருக்க.. காலார நடந்து குழப்பத்தை தீர்க்கலாம் என்று நினைத்தவள் மீண்டும் மூளை நிறைய குழப்பத்தை சுமந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். 

 

 

தந்தையின் புலம்பலை பார்த்து தவித்து ஓடி அவர் அருகே சென்று “என்னாச்சு டாட்.. உங்க நிவே வந்துட்டேன் பாருங்க” என்று அவர் முன் மண்டியிட்டு அமர..

 

மகளின் வார்த்தைகளில் தான் நினைவுக்கு வந்தவர் “நிவே.. நிவே” என்று அவள் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டார். அந்த வார்த்தையை தாண்டி வேறு ஒரு வார்த்தை அவருக்கு வரவே இல்லை. 

 

“திடுமென இப்படி பொண்ணை தேடுற அளவுக்கு உங்களுக்கு என்ன ஆச்சு நாதன்?” என்று அவர் நடவடிக்கையின் மாற்றங்களை கவனித்து சுவாதி கூர்மையாக கேட்க..

 

“ஒன்னுமில்ல.. ஒன்னுமில்ல சுவாதி!!” என்று கூறியவரின் வார்த்தைகள் மிக மெலிதாக ஒலித்தது.

 

 

சுவாதிக்கு அங்கு நடப்பது ஒன்றுமே புரியாமல் குழப்பமாக இருந்தது. மற்றவர்களுக்கு மேகநாதனுக்கு ஏதோ விஷயம் தெரிகிறது என்ற அளவில் புரிந்திருந்தது. “சுவாதி!! தம்பியை நீ ரூமுக்கு அழைச்சிட்டு போமா.. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று அழகுசுந்தரம் கூற.. அவரிடம் சரி என்று தலையை ஆட்டியவர் மேகநாதனின் வீல் சேரை தள்ளி போக அதற்குள் தனபாக்கியம் “என்னடா பாத்துகிட்டே நிக்கிற!! மாமாவ அவங்க ரூமுக்கு தள்ளிட்டு போ.. பாவம் அத்தை தனியா தருகிறாக பாரு” என்று கோர்த்து விட.. அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்தவன் “சரி.. சரி” என்று கேட்டு, “வாங்க மாமா!! வாங்க அத்த” என்று முறையாக அவர்கள் இருவரையும் வரவேற்று விசாரித்து தள்ளிக் கொண்டு சென்றான்.

 

 

அப்படியே மெதுவா மெதுவா அவங்க ரூமுக்கு உள்ள போற மாதிரி அவங்க வாழ்க்கையிலும் என் பிள்ளை போயிடனும் என்று அந்த அழகரிடம் முறையிட்டார் தனபாக்கியம்.

 

 

அழகு சுந்தரம் யோசனையாக அமர “என்னங்க மாமா இப்படி யோசனையை ஒக்காந்து இருக்கீக” என்று கேட்டவாறே அருகில் அமர்ந்தார் புனிதா. ஆனால் அதே கேள்விதான் மற்றவர்களின் கண்களிலும்..

 

 

“இல்ல புனிதா தம்பிக்கு ஏதோ ஒரு விஷயம் தெரிஞ்சு இருக்கு பாப்பா பத்தி.. ஆனா அதை நாம கிட்ட சொல்ல மாட்டேங்குறான். அதுதான் இப்ப அவனோட இந்த பரிதவிப்புக்கு காரணம்.. இன்னும் என்னென்ன எல்லாம் பார்க்க வேண்டி இருக்குன்னு தெரியல” என்று தலையை பிடித்து அவர் அமர்ந்து கொள்ள..

 

 

மருது அப்பாவின் தோள்களில் கை வைத்து “நான் பார்த்துக்கிறேன் பா.. இதற்கு மேலும் இந்த குடும்பத்தில் எந்த வித பிரச்சினை வராம நான் பாத்துக்குறேன்” என்று தனயனாய் தோள் கொடுத்தான் தந்தைக்கு.

 

 

இவற்றையெல்லாம் பார்த்தபடி இருந்த வரதன் தானும் பெருமூச்சு ஒன்று விட்டு விட்டு வழக்கம் போல எந்தக் கருத்தையும் பதிவு செய்யாமல் தன் அறைக்கு சென்றுவிட்டார். தனபாக்கியத்தை முதலில் ஆசையாகத்தான் திருமணம் செய்தார். முதலில் சிறு பெண்ணாக இருந்தவரின் விருப்பத்திற்கு நடக்கிறேன் என்று கொஞ்சம் கொஞ்சமாக தன் சுயம் தொலைத்து இன்று மாமனார் வீட்டிலேயே மொத்தமாக தங்கிவிட்டார். ஆயினும் உட்கார்ந்து சாப்பிடவில்லை.. அவருக்கு என்று இருக்கும் தொழிலை பார்த்துக்கொண்டு அந்த வருமானத்தில் தான் சாப்பிடுகிறார் என்ற ஒரு நிம்மதி மட்டுமே அவரிடம்!!

 

 

அறையில் விட்டத்தை பார்த்து படுத்திருந்த மேகநாதனுக்கு காலையிலேயே வந்த அந்த மெசேஜ் தான் கண்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. விதவிதமாக வெற்றியும் அவரின் மகள் நிவேதிதாவும் செல்பியாக எடுத்திருந்த போட்டோக்கள்!! அதுவும் விதவிதமான கோணங்களில்.. இருவரும் உரசிக் கொண்டும்.. அணைத்துக் கொண்டும் இருப்பது போல.. 

 

 

சுவாதி வசீகரனிடம் பேசிக்கொண்டிருப்பதை திரும்பிப் பார்த்தார். சுவாதி வசீகரனிடம் அவனது படிப்பு தொழில் பற்றி விவரங்களை கேட்டுக் கொண்டிருக்க அவனும் மிக பவ்யமாகவே சொல்லிக்கொண்டிருந்தான். சட்டென்று அவரது மனதில் பல எண்ணங்கள்.. பல திட்டங்கள்.. ஆனால் அதெல்லாம் எந்தளவு சாத்தியம் என்று தெரியாவிடினும் சாதித்தே ஆக வேண்டிய கட்டாயம் அவருக்கு!!

 

 

அன்றிரவு பெரியப்பாவை அணைத்து “பெரியப்பா டாட் கிட்ட பேசுங்க.. அவங்க இங்க வந்ததுல இருந்து ரெஸ்ட்லெஸ்ஸா இருக்காரு.. என்னவோ அவளுக்குள்ளேயே யோசிக்கிறாரு.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. இப்பதான் அவருடைய உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமா தேறிட்டு வருது திரும்பவும் ஒரு அட்டாக்னா எங்களால் தாங்க முடியாது.. நீங்க கொஞ்சம் பேசுங்க பெரியப்பா” என்றாள் பெண் கெஞ்சுதலாக!!

 

“சரி பாப்பா” என்ற அழகு சுந்தரம், பின் புனிதாவிடம் சுவாதியை பார்த்துக் கண் ஜாடை காட்ட அவர் ஏதேதோ காரணங்கள் கூறி சுவாதியை அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

 

“மேகா!!” என்று அழைத்து அருகில் வந்து அமர்ந்த அண்ணனை கண்களில் வலியோடு பார்த்தார் மேகநாதன்.

 

 

“ரொம்ப நாள் கழிச்சு இங்கே வந்தேன்னு சந்தோசமா இருந்தேன் மேகா.. ஆனா உன் கண்ணுல உள்ள பரிதவிப்பு வலி ஏன்? என்னாச்சுன்னு அண்ணா கிட்ட சொல்ல மாட்டியா?” என்று கேட்க..

 

“நீங்க மட்டும் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிவிட்டு இருக்கீங்களா?” என்று கூராக வந்தது பதில்.

 

 

பெருமூச்சு ஒன்று இழுத்துவிட்டார் “என்னத்த சொல்ல சொல்ற? நாம செய்த செயல்களோடு வீரியம் தான் இப்படி நம்மை தாக்குது.. அதுவும் இரட்டிப்பா!!” என்றவர் விடுவிடு என்று நிவேதா காணாமல் போனது முதல் வெற்றி வீட்டில் கண்டுபிடித்தது பின் பஞ்சாயத்து கூடியது பஞ்சாயத்தில் நிவேதிதா மீது அவன் சொன்ன பழிகள் என்று வேதனையுடன் அனைத்தையும் தம்பியிடம் பகிர்ந்து கொண்டார்.

 

 

கண்களை மூடி அனைத்தையும் கிரகிக்க முயன்று தோற்ற மேகநாதன் கண்களில் நீர்த்துளிகளாக நிரம்பி வழிந்தது.

பழைய காட்சிகள் கண்களில் ஓட இப்பொழுது அழுது கரையும் நேரம் இல்லை.. அதற்கான நேரமும் இல்லை.. என்றவர் தன் போனில் வந்த வீடியோ பற்றியும் போட்டோக்கள் பற்றியும் அன்று வெற்றி தன்னை அழைத்து பேசியதையும் இவர் கூற..

 

 

“அவிய்ங்க இவ்வளவு பொறுமையாக இருக்காய்ங்களேன்னு நினைச்சது நம் தவறு தான்.. இதற்கு என்ன பண்றதுன்னு தெரியலையே மேகா.. இனியும் நீங்க இருக்க வேண்டாம் சீக்கிரமா கிளம்பி ஆஸ்திரேலியா போயிடுங்க” என்று கூற..

 

 

“ஆஸ்திரேலியா என்ன அடுத்த கண்டத்துக்கு போனா கூட அவன் விட மாட்டான். அவன் கண்ணில் தெரிந்த அந்த வெறி ரௌத்திரம் அதெல்லாம் அப்படித்தான் சொல்லுச்சு.. நான் ஒரு வேற ஒரு பிளான் யோசிச்சு இருக்கேன். உங்களுக்கு சரியா வருமான்னு சொல்லு ணா” என்று கேட்க…

 

 

“வசீகரனை நிவேதாவுக்கு கட்டி வச்சா என்ன?” என்றார். இவ்வளவு நேரமும் தந்தையும் பெரிய தந்தையின் பேசிக்கொண்டிருந்ததை அறைக்கு வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்த நிவேதிதாவுக்கு திக் என்றானது.

 

 

“போயும் போயும் அவனை எப்படி கல்யாணம் செய்து கொள்வது?” என்று அவள் கையைப் பிசைந்து கொண்டு நிற்க..

 

அதே நேரம் அந்தப் பக்கம் வந்த வரதன் இவள் அதை வாயில் நின்றிருப்பதை பார்த்து “என்னடா பாப்பா இங்கு நின்னுட்டு இருக்க?” என்று கேட்க.. அவ்வளவுதான் தான் ஒட்டு கேட்டுக் கொண்டிருப்பதை இவர் நிறைய பார்த்தால் என்ன நினைப்பார் என்று பேய் முழி முழித்து “ஒன்னும் இல்ல மாமா” என்று அவசரமாக தன் அறையை நோக்கி ஓடி விட்டாள்.

 

வரதனோ ஓடும் அவளையும் அந்த அறையையும் மாறி மாறிப் பார்த்தார்.

 

 

“மேகா அவசரப்பட்டு எந்த முடிவையும் நாம செய்ய வேண்டாம். இது நம்ம பொண்ணோட வாழ்க்கை யோசிச்சு தான் செய்யணும். அதை எல்லாத்தையும் விட ஒரு முக்கிய பிரச்சினை இருக்கு?” என்று அவர் தம்பியை கூர்ந்து பார்க்க..

 

“வெற்றிய சொல்றியா? வீட்டைவிட்டு தாண்டினா தான் அவனோட பிரச்சினை.. வீட்டுக்குள்ள என்ன நடந்தாலும் அவனால உள்ள நுழைய முடியாது” என்றார் சற்று திமிராகவே..

 

 

“வீட்டுக்கு வெளியில் அவன் பார்த்துக்குவான்.. ஆனா வீட்டுக்குள்ளேயே?” என்று நிறுத்தி தம்பியை நிதானமாக பார்த்தவர் “சுவாதி!!” என்றார்.

 

 

“இதுவரைக்கும் பழைய விஷயங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது என நினைக்கிறேன்.. இப்ப இந்த கல்யாணத்தை அவசரமாக அவசரமாக நாம செய்தோம்னா.. காரண காரியங்களை அவள் விசாரிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்ன்னு நினைத்து பார்த்தியா?” என்றார்.

 

 

சுவாதியை நினைத்தவுடன் அவருக்கும் கொஞ்சம் மனம் திக்கென்று தான் செய்தது. ஆனால் இதற்கு மேலும் மகள் வாழ்க்கையை சோதனையாக விரும்பாமல் அதேநேரம் எங்கோ ஆஸ்திரேலியாவில் யாரும் இல்லாத அனாதையாக அவள் இருப்பதையும் விரும்பாத மேகநாதன் பெருமூச்சு ஒன்று இழுத்துவிட்டு “சுவாதியிடம் நான் பேசுகிறேன் அண்ணே” என்றார் ஒரு முடிவாக..

 

 

“என்ன மேகா..” என்றவர் இழுக்க “இனிமேலும் ஆஸ்திரேலியாவுக்கு போக எனக்கு விருப்பம் இல்லை ணே.. பார்ப்போம்” என்று கூற.. அதற்கு மேலும் தம்பியிடம் விவாதம் பண்ணாமல் “நடப்பது நடக்கட்டும்!! எல்லாம் அந்த சொக்கன் செயல்!!” என்றவாறு தன் அறைக்கு வந்துவிட்டார் அழகு சுந்தரம்.

 

 

காலையில் சூரியன் சுள்ளென்று அடித்தும் கூட.. போ போ நீ எப்படி அடித்தாலும் என்னையெல்லாம் அசைக்கவே முடியாது என்றவாறு நன்றாக உறங்கிக் கொண்டிருந்த அவனை உர்.. உர்.. என்று அழைத்தது கதிரை செல்போன்.

 

 

கண்ணை மூடிக் கொண்டே தனது பெட்டில் தலையணைக்கு அடியில் தடவியவன் கைகளில் மாட்டிய.. அவனது செல்போனை எடுத்தவன் கஷ்டப்பட்டு ஒரு கண்ணை மட்டும் திறத்து யார் என்று பார்க்க.. ஏதோ ஒரு புதிய நம்பர்..

 

 

“இதுக்கெல்லாம் என் தூக்கத்தை விட்டு அட்டென்ட் பண்ணி பேச முடியாது” என்று ஒரே ஒரு நிமிடம் மட்டும் யோசித்தவன் திரும்பவும் அதை தலையணைக்கு அடியிலேயே புதைத்து விட்டு உறக்கத்தை தத்து எடுத்தான்.

 

 

ஆனால் அவனை அப்படி செய்ய விடாமல் மீண்டும் மீண்டும் ஒலித்தது அந்த உர்.. உர்.. “நிம்மதியா காலையில தூங்க விட மாட்டேன் என்கிறாய்ங்களே!!” என்று திட்டியபடியே போனை காதல் எடுத்த வைத்தவன் “ஹலோ!!” என்று சற்று காட்டமாகவே அழைக்க..

 

அந்தப் பக்கத்திலிருந்து பேச்சு மூச்சு இல்லாமல் சற்று நேரம் அமைதியாக இருந்தது.

 

“இங்கே பார் நான் நல்ல தூக்கத்தில இருக்கேன்.. ஒன்னு பேசு இல்ல போன வை” என்று தூக்க கலக்கத்திலேயே அவன் பேச..

 

 

“எனக்கு இன்னிக்கு சில்லி சாப்ஸ் வேணும்”

என்ற குரலில் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தான் கதிர்.

 

 

“அடியே மச்சக்கன்னி?!” என்று இவன் அதிர்ந்து கேட்க..

 

“சில்லி சாப்ஸ் இன்னும் அரை மணி நேரத்துல வேணும். வருமா? வராதா?” என்று அவள் கேட்டாள்.

 

“வரும்.. வரும்..” என்றவன் அந்தப்பக்கம் போன் டங்கு என்று வைத்துவிட.. “கொஞ்சமாவது மரியாதை கொடுக்கிறாளா பாரு” என்றவன் மணியை பார்க்க அது என்னமோ கிடுகிடு என்று ஓடுவது போல் இருந்தது அவனுக்கு. அடுத்த நிமிடம் அரக்கப்பரக்க ரெடியானதும் அல்லக்கைகள் எல்லாம் மறந்து விட்டு, அவனது புல்லட்டை எடுத்துக்கொண்டு பறந்தான் கைத்தறி நகரை நோக்கி..

 

அன்று அவர்கள் சந்தித்த அதே இடிந்த காம்பவுண்டில் பின்னால் அவள் காத்திருக்க.. வாங்கி கொண்டு சென்றவனை பார்த்தவளுக்கு கண்ணில் மின்னல் வந்து சென்றது.

 

 

சிரிப்புடனே அவன் கையிலிருந்த பார்சலை கைப்பற்றியவள் “ஸ்விக்கி.. டோமாட்டோ விட நீ பாஸ்ட்” என்று அவனுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்து விட்டு சிக்கன் சாப்ஸ்க்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தாள் வாய்க்குள்.

 

 

“அடியே!! மச்சக்கன்னி.. காலங்காத்தால என் வாயில பச்சைத்தண்ணி கூட படாம அரக்கப்பரக்க வாங்கிட்டு வந்தா.. நீ என்னடான்னா ஒத்தையில வச்சு மொத்த கோழி பீஸையும் திங்கிற.. மாமனுக்கு கொடுக்கனுமன்னு தோணுதாடி?” என்று கன்னத்தில் கை வைத்து கொண்டு அவளைப் பார்த்தவாறு கேட்டான்.

 

அவளோ “அப்படியா?” என்பது போல ஒரு லுக்கை மட்டுமே விட்டுவிட்டு தன் காரியத்தில் கண்ணாக இல்லையில்லை கையும் வாயுமாக இருந்தாள்.

 

 

சாப்பிட்டு முடித்தவள் மெல்லத் திரும்ப அவள் முகத்தருகே கதிரின் முகம்.. “ஆசை வந்துச்சா டி?” என்று இவன் கேட்க..

 

 

உதட்டைப் பிதுக்கி இல்லை என்று தலையாட்டினாள் பத்மா.. 

 

“நீ இப்படியே தின்னுகிட்டு இருந்தா.. ஆசை வராது டி அல்சர் தான் வரும்!!” என்றவன் பெருமூச்சு விட்டு செல்பவனை பார்த்துக் கொண்டிருந்த பத்மா முகத்திலும் கள்ளப் புன்னகை.

 

 

அடுத்த இரு முறையும் இவள் கேட்க.. அவன் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்க.. “ஆசை வந்ததா?” என்று இவன் அவள் முகத்தையே உற்று பார்க்க.. 

 

 

“இங்கே பார் சிலபேருக்கு பார்த்தவுடனேயே புடிச்சு போகும் உன்ன மாதிரி!! சில பேருக்கு பார்க்க பார்க்க புடிச்சு போகும்.. இன்னும் சில பேருக்கு பழகிப் பார்த்தால் புடிச்சு போகும்.. ஆனால் எனக்கு..” என்று அவள் சொல்லும் முன் “சிக்கன் வாங்கி கொடுத்தா தான் புடிச்சு போகுமாடி” என்றான் கதிர்.

 

 

“அதையே நீ சிக்கனா பாக்குற? அன்பா பாரு?? எனக்கு சிக்கன ரொம்ப புடிச்சிருக்கு.. என்னை உனக்கு புடிச்சிருக்கு.. எனக்கு புடிச்ச சிக்கன.. என்னை புடிச்ச நீ வாங்கி கொடு.. கூட சீக்கிரமே உன்னை புடிக்க சான்ஸ் இருக்கு” என்று அவள் விசு மாதிரி பேச.. தலையை பிடித்துக் கொண்ட கதிர் “போடிப்போ உனக்கெல்லாம் சாம்பார் மாதிரி உங்க அப்ப ஒருத்தன் பார்த்து வைப்பான்.. அவளையே கட்டி கிட்டு வெறும் பொங்கல் பொங்கலா தின்னு” என்று கோபத்தோடு கதிர் சென்றுவிட..

 

 

“அச்சச்சோ நிஜமா கோவிச்சிக்கிட்டானோ?” என்று பதைபதைத்து செல்லும் அவனையே கூப்பிட தோன்றாமல்.. எப்படி கூப்பிடுவது என்று தெரியாமல் விக்கித்து நின்றாள் பத்மா.

 

 

அழகு சுந்தரமும் மேகநாதனும் மற்ற குடும்ப உறுப்பினர்களோடு பேசி நிவேதிதா வசீகரன் திருமணத்தை திருவிழா முடியும் முன் செய்து விடலாம் என்று பேசி வைத்திருந்தனர். ஆனால் சுவாதிக்கும் நிவேதிதாவுக்கும் இந்த விஷயம் இன்னும் முறையாக பகிர படவில்லை. நிவேதிதாவுக்கு அன்று அவர்கள் பேசியதை கேட்டதிலிருந்து அந்த எண்ணம் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

 

 

அன்றும் அப்படித்தான் ஏதேதோ நினைத்துக் கொண்டு அவர்கள் வீட்டு வாசலில் நடைபெற்றுக்கொண்டிருந்தவள், கொஞ்சம் கொஞ்சமாக வீதிக்கு வந்து விட்டாள். ஆனால் திரும்ப போகும் வழிதான் தெரியவில்லை.. எப்படி போவது எங்கே போவது என்று புரியாமல் அவள் விழித்துக் கொண்டே வரும் வேளையில்.. அங்கு நின்ற ஆட்டோ டிரைவர் அவளைக் கண்டு கொண்டு, “நீங்க பெரிய வீட்டு பொண்ணு தானே.. வாங்க மா ஆட்டோல கொண்டு விடுறேன்” என்றான்.. அவளுக்கோ அவனின் முகமும் உடல் மொழியும் சரியாக படாததால் “வேண்டாம் நானே போய்கிறேன்” என்று அவள் கிளம்ப அந்த ஆட்டோ டிரைவரோ வழி மறைத்து நின்றான்.

 

 

அவள் சுற்றிக் கொண்டு செல்ல பார்க்க.. அங்கே மாற்றொருவன் வந்து நிற்க.. பயந்துபோய் அவள் பின்னே செல்ல..சட்டென்று அவள் கையைப் பிடித்து அவன் அருகில் இருந்த ஆட்டோவில் தள்ளி அரணாக அமர்ந்துகொண்டான். மற்றவனோ ஆட்டோவை எடுக்க சிம்மக்கல்லில் இருந்து பறக்க ஆரம்பித்தது அந்த ஆட்டோ!!

 

காதலே.. காதலே..

1 thought on “எங்கு காணினும் நின் காதலே… 14”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top