ATM Tamil Romantic Novels

இரகசிய மோக கனாவில் 3

அத்தியாயம் 3

 

“நாதா! இப்போது என்னை எங்கு தூக்கிச் செல்கிறீர்கள்?” என்றவளை தனது கட்டிலில் தூக்கிப் போட்டவன்,

 

“இங்க தான்; இதுக்கு தான்.” என்றவன், அவளை நெருங்கும் போது மற்றொரு பெட்டியில் இருந்த வேலுநாச்சியார்,

 

“எப்பா என்ன ஒரு புழுக்கம்? இன்னும் கொஞ்ச நேரம் உள்ளே இருந்திருந்தேனா மூச்சு முட்டி செத்தே போயிருப்பேன். ஏன்டி ஆரு! நீ மட்டும் வெளியே வந்துருக்க, என்னையவும் வெளிய கூப்பிடணும்னு தோணுச்சா? உன் காரியம் முடிஞ்ச உடனே என்னைய டீல்ல விட்டுட்டேல.” 

 

தன் அருகே திறந்த கிடந்த பெட்டியை பார்த்தபடியே திரும்பி பார்த்தவரின் விழிகள் உறைந்து நின்றிருந்தன. நேரே ராக்கியிடம் வந்தவர்,

 

“ஹேய் யாருடா நீ? என் பேத்திய என்னப் பண்ணப் போற? தள்ளிப் போடா!” என்றவனை நோக்கி வந்தவரை கூர்மையாக பார்த்தவன்,

 

“அப்போ நீங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டு தான் இங்க வந்துருக்கீங்க. இந்த ராக்கியோட கோட்டைக்குள்ள வர்றதுக்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்?” என்றவன் தன்னருகே இருக்கும் பூவிழியாழின் கழுத்தை நெறிக்க, 

 

“அய்யோ! என் பேத்தியை என்னடா பண்ணற? விடுடா அவளை! நாங்க ஏன்டா உன்னைய தேடி வரப்போறோம்? நீங்க தானேடா எங்களை தூக்கிட்டு வந்தீங்க. அய்யோ! இந்த கொடுமையை கேட்க ஆளில்லையா? என் பேத்தி மேல இருந்து கையை எடுடா.” என்று எண்ணெயில் பொரித்த அப்பளமாக குதித்தவரை பார்த்தவன்,

 

“ஸ்ஸ்ஸுஸுஸுஸு சத்தம் போட்ட இவ சங்கறுத்துடுவேன்.” என்றவன் கூறிக் கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்கவே, யாரையாவது அழைத்து தங்களுக்கு உதவி கேட்கலாம் என்று நினைத்த வேலுநாச்சியார், 

 

“ஹேய் நோ! கதவை திறக்காத.” என்றவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, வேகமாக சென்று கதவை திறந்தார். அங்கு தனக்கெதிரே நின்று கொண்டிருந்த பெண்மணியை கண்டதும் கதறி அழுகத் தொடங்கிய வேலுநாச்சியார், அப்பெண்மணிக்கு பின்னே வந்து கொண்டிருந்தவர்களை கவனிக்க தவறிவிட்டார். 

 

“அம்மா! நீங்க யாரு எவருன்னே தெரியல. எங்களை காப்பாத்துங்க. இந்த அரக்கன் என்னையும் என் பேத்தியையும் கடத்திட்டு வந்து சித்திரவதை படுத்துறான். எங்களை எப்படியாவது எங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சுடுங்க.” என்று கூறிய வேலுநாச்சியாரை அடுத்து உள்ளே சட்டையணியாமல் கட்டுமஸ்தாக நின்று கொண்டிருந்த ராக்கி என்ற ராதாகிருஷ்ணனையும் அவனது முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு தலையை மட்டும் எட்டிப் பார்த்து கொண்டிருந்த பூவிழியாழையும் பார்த்த அப்பெண்மணி,

 

“என்ன கிருஷ்ணா இதெல்லாம்? பொண்ணை மட்டும் தூக்கிட்டு வந்துருந்தா பரவாயில்ல; கூடவே இந்த கிழவியையும் தூக்கிட்டு வந்துருக்க. ச்சீ ச்சீ நீயெல்லாம் என் பேரன்னு சொல்லிக்கவே வெட்கமாயிருக்கு. உன்னை நம்பி பொண்ணு வீட்டுக்காரங்களை வேற வர சொல்லிருக்கேன். இப்படி என்னைய அவமானப்படுத்திட்டியே?!” என்று அவ்வறைக்குள் நுழைந்தார். அவனது பின்னால் ஒளிந்து கொண்டிருந்த பூவிழியாழை வெளியே வரச் சொல்லி அழைத்தவரை தயங்கி தயங்கி பார்த்தபடி நடந்து வந்தவளை பார்த்தவர்,

 

“ஹேய் நீ ஆருஷாயில்ல?! நீ எப்படி இங்க?” என்றவர் கேட்க,

 

“அது வந்து நான் இந்த பெ..” என்றவள் தொடங்கும் முன், அவளின் பேச்சை இடைமறித்த ராக்கி,

 

“பாட்டி நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம். திடீர்னு அவ வீட்டுல கல்யாண ஏற்பாடு பண்றாங்க. அதுனால தான் இவளை அவசரப்பட்டு அங்கிருந்து தூக்கிட்டு வர்ற மாதிரியாகிடுச்சு.” என்றவன் கூறியதை சந்தேகமாக பார்த்தார் ராக்கியின் பாட்டி மரகதவல்லி.

 

“பொண்ணை தூக்கிட்டு வந்து சரி; அது ஏன் கூடவே ஒரு ஆயாவையும் தூக்கிட்டு வந்துருக்க?” என்ற மரகதவல்லியைப் பார்த்த வேலுநாச்சியார்,

 

“என்னம்மா வார்த்தைக்கு வார்த்தை, என்னைய கிழவிங்குற, ஆயாங்குற; உனக்கு மட்டும் என்ன இளமை ஊஞ்சலாடுதோ? இன்னொரு தடவை கிழவி, ஆயான்னு ஏதாவது சொன்ன, அப்புறம் நான் மனுஷியாவே இருக்கமாட்டேன்.” என்று பொங்கி எழுந்து விட்டார். 

 

“சரி அதெல்லாம் இருக்கட்டும்; அது ஏன்டா உன் லவ்வர் நாடக கம்பெனில வேலை பார்க்குற மாதிரி அப்படியே ஓடிவந்துருக்கா?”

 

“ம்ம். இவ குடும்பம் ராஜபரம்பரையாம்; கல்யாணத்துக்கு ஓடி வரும் போது அந்த காலத்து பொண்ணுங்க மாதிரி தான் ஓடி வருவாங்களாம். அதான் ஃபுல் மேக்கப் போட்டுட்டு ஓடி வந்துருக்கா.”

 

“ஓ! அப்படியா?! எதுக்கும் பொண்ணோட பெத்தவங்கக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்குறேன். நீ என்கிட்ட உண்மைய சொல்ற மாதிரி எனக்கு தோணல.” என்ற மரகதவல்லி, தனக்கு பின்னால் வந்து நின்றிருந்த ஆருஷாவின் பெற்றோரை அறைக்குள் அழைத்தார்.  

 

“நல்லாப் பாருங்க சம்பந்தி! இதுக்கு மேலேயும் உங்க பொண்ணை என் பேரனுக்கு கட்டிக் கொடுக்க மாட்டேன்னு உங்களால சொல்ல முடியும்னு ‌நினைக்குறீங்க?” என்று மரகதவல்லி கேட்க, தலைகுனிந்து நின்றிருந்தனர் ராஜாராமன், கல்யாணி மற்றும் ராஜம்மாள். இவர்கள் மூவரையும் கண்ட நொடி மயக்கம் போடாத குறையாக நின்றிருந்தார் வேலுநாச்சியார். இத்தனை கூத்தும் நடந்து கொண்டிருக்க எதுவும் தெரியாமல் ராக்கியின் அருகே வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள் பூவிழியாழ். தன் மகளை சுட்டெரிக்கும் சூரியனாக பார்த்த ராஜாராமன்,

 

“அதான் அவளும் அவ பாட்டியும் தான் அவ தலையெழுத்தை முன்னாடியே முடிவு பண்ணிட்டாங்களே?! இதுக்கு மேல நான் என்னத்த சொல்ல? அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்தை வைச்சுக்கலாம்.” என்று வெறுப்புடன் கூறியவரை சிரிப்புடன் பார்த்திருந்தாள் பூவிழியாழ். பூவிழியாழை ஆருஷாவென்று நினைத்த ராஜாராமன், 

 

“என்னைய இப்படி தலை குனிய வைச்சுட்டியே! இதென்ன கோலம் ஆருஷா? நான் இப்படியே வளர்த்தேன்? பெத்த கடமைக்கு கல்யாணம் பண்ணி வைக்குறேன். ஆனா இதுக்கு அப்புறம் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இங்க வந்தப்போ இவன் ஒரு கொலைகாரன்னு கேள்வி பட்டதும் உனக்கிவன் வேண்டாம்னு முடிவு செஞ்சுருந்தேன். ஆனா உன் தலையெழுத்தை நீயே எழுதிகிட்ட. பெத்தவங்க முக்கியமில்லன்னு நினைச்சு தானே இவனைத்தேடி இங்க வந்திருக்க, இந்த வாழ்க்கை உனக்கு நிலைக்காது. நான் வயிரெரிந்து சொல்றேன், இவங்கூட நீ சுமங்கலியா வாழமாட்ட.” என்றவரை மிரண்டு போய் பார்த்திருந்தவளை திரும்பி பார்த்த ராக்கி,

 

“பாட்டி! அம்மா தாலிய கொடு.” என்று கேட்ட உடன் தன்னுடனேயே வைத்திருந்த ராக்கியின் தாயார் இறக்கும் தருணத்தில் அளித்த தாலியை அவன் கையில் கொடுத்தார் மரகதவல்லி. 

 

“என்னை இவ கல்யாணம் பண்ணா இவ நாசமா போயிருவா?! அதைத்தானே சொல்ல வந்தீங்க?! அதென்ன அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வைக்குறது? என்னைய தேடி இவ வந்த இன்னைக்கே நல்ல நாளு தான். இனிமே இவ உங்க பொண்ணு இல்ல; என் பொண்டாட்டி. உங்க சாபம் பழிக்குதா இல்லையான்னு பார்ப்போம்.” என்று கூறியபடியே பூவிழியாழின் கழுத்தில் தாலியை கட்டினான் ராக்கி. எந்த காலத்திலும் தாலியின் மதிப்பு மாறாதே. தன் கழுத்தில் ராக்கி கட்டிய தாலியை பார்த்தவருக்கு ஓவென்று அழுகத் தோன்றியது. எந்த நிகழ்விற்கு பயந்து போய், அவள் தன் உயிரை மாய்த்துக் கொள்ள கிணற்றில் குதித்து இங்கு வந்தாளோ, இன்று அது நிகழ்ந்து விட்டது. அதிர்ந்து நின்றிருந்தவளின் காதினில் ஒலித்தது அந்த குரல்,

 

“மாறன் அம்பை ஏற்று மஞ்சத்தில் வீழும் நேரம் மன்னவனின் உயிர் பூவிழியாழின் மடிசாயும்.”

 

******************************************************

 

“ஆஆஆஆஆ.. மம்மி காஃபி.. மம்மிஇஇஇஇ..” என்று கத்தியபடியே எழுந்து பார்த்த ஆருஷாவையே வெறித்து பார்த்தப்படி நின்றிருந்தாள் பெண்ணொருத்தி.

 

‘இவ யாரு? ஏன் நம்பள இப்படி முறைச்சு முறைச்சு பார்க்குறா?’ என்று நினைத்தபடியே எழுந்து அமர்ந்த ஆருஷா, அப்போது தான் அந்த இடத்தை சுற்றி பார்த்தாள். அவ்வறையின் பிரம்மாண்டம் அவளை மிரட்டியது. 

 

“என்னடா இது? ராஜமௌலி சார் படத்துல வர்ற மாதிரியே இருக்கு. எப்பா எவ்ளோ பெரிய ரூம்?” என்றவள் மெத்தையில் இருந்து கீழிறங்கும் போது, அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்பணிப்பெண் ஓடிவந்து, ஆருஷா எழுந்து கொள்ள உதவி புரிய, அவளை சந்தேகமாக பார்த்தாள் ஆருஷா.  

 

“ஹேய் நீ யாரு? கல்யாணி உன்னைய கடத்திட்டு வந்துட்டாங்களா? ஏன் என்னைய ஒரு மாதிரி பார்க்குற? ஆமா இது என்ன இடம்?” என்றவளைப் பார்த்து கண்ணீர் வடித்தாள் அப்பணிப்பெண்.

 

“ஹேய்! ஹேய்! இப்ப எதுக்கு அழுகுற? ராஜம்மா ஏதாவது திட்டுச்சா? உனக்கு யாருமில்லயா? ஓ! உனக்கு வாய் பேச வராதா? நீ ஊமையா? அத சொல்ல முடியாமத் தான் அழுகுறியா? ஏன் எனக்கு பதிலே சொல்ல மாட்டேங்குற?” என்றதும், 

 

“இளவரசியாரே! மன்னர் தங்களுக்கு விருப்பமில்லாமல் திருமண ஏற்பாடு செய்தது தவறு தான். அதற்காக தாங்கள் கிணற்றில் குதிக்கலாமா? இப்போது உங்கள் தலையில் அடிபட்டு புத்தி பேதலித்து விட்டதே! அய்யகோ இனி நான் என்ன செய்வேன்? எவ்வாறு மன்னரிடம் கூறுவேன்?!” என்று அழுதபடியே அப்பணிப்பெண் கூறிய செய்தியில் ஆருஷாவிற்கு மயக்கமே வந்து விட்டது. 

 

“என்னது நான் அரசரின் மகளா? ஓ மை காட்! என்னைய வச்சு ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலையே?!” என்றவளை கண்டு மேலும் அழுக ஆரம்பித்தவளை எப்படி சமாதானப்படுத்தவென்று அறியாமல் முழித்த ஆருஷா,

 

“வெயிட், வெயிட்! டோண்ட் க்ரை. உன் பெயர் என்ன?” என்று கேட்க, முதலில் அவள் பேசிய எதுவும் புரியாது முழித்த பணிப்பெண், அவளது பெயரைப் பற்றி கேட்டதும்,

 

“எனது பெயர் மல்லி. நீங்கள் அனைத்தையும் மறந்துவிட்டீர்களா இளவரசியாரே?! நாம் இருவரும் சிறு வயதிலிருந்தே தோழிகள். உங்களுக்கு சேவை செய்யவே நான் பிறந்திருக்கிறேன் இளவரசியாரே!” என்றவள் அப்போது தான் ஞாபகம் வந்தது போல் தன் உடையை குனிந்து பார்த்தாள். 

 

“ஹேய் என்ன ட்ரெஸ் இது? நான் போட்டுட்டு வந்ததெங்கே?” என்றவளை கூர்மையாக பார்த்த மல்லி,

 

“ஓ! தாங்கள் நேற்று அணிந்து வந்த உடையை கேட்குறீர்களா? அது பாதாள பைரவியின் சித்து விளையாட்டு. தங்களை அவளது உலகிற்கு அழைத்துச் சென்று பழிகொடுக்க நினைத்தாளாம். அதனால் தான் உங்களுக்கு அதனை அணிவித்திருந்தாளாம். நம்ம அரண்மனை ஜோசியர் கூறினார். ஆதலால், அந்த உடையை எரிக்கும்படி மன்னர் உத்தரவிட்டார். நான் தான் தங்களுக்கு வேறு உடை மாற்றிவிட்டேன்.” என்று பெருமையாக கூற,

 

“என்னது அந்த ட்ரெஸ்ஸை எரிச்சுட்டீங்களா? அய்யோ! அய்யோ! போத்தீஸ்ல ஒன்னுக்கு ஒன்னு ஆஃபர்ல வாங்கிட்டு வந்தேனே! இப்படி எரிச்சிட்டீங்களே! இனிமே என்னோட கஞ்சப்பிசுனாரி ராஜம் ஒத்த பைசா வெளிய எடுக்காதே. அதுக்கிட்ட இருந்து இனிமே நான் காசை சுட்டு, அதுல எங்குட்டு ட்ரெஸ் எடுக்குறது?! முடிஞ்சுது. அவ்ளோதான் இந்த ஜென்மத்துல எனக்கு புது ட்ரெஸில்ல. ஆமா இது என்ன ட்ரெஸ்டி? எல்லாம் பக்கமும் காத்தோட்டமா இருக்கு.” என்றவளை விநோதமாக பார்த்திருக்க வாசலில் சேவகர்களின் குரல் கேட்டது. 

 

“இளவரசியாருக்கு வணக்கம்! மன்னர் தங்களை குடும்ப அவைக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார்.” என்றதும் புரியாது மல்லியை பார்த்தாள் ஆருஷா. ஆருவிற்கு பதிலாக,

 

“நன்றி சேவகரே! இளவரசியாரை நான் அழைத்து வருகிறேன்.” என்று பதிலளித்தாள் மல்லி. இதுவரை தன் வாழ்க்கையில் நடக்கும் எதையும் புரியாது முழித்துக் கொண்டிருக்கும் ஆருஷாவைப் பார்த்த விதி,

 

“என்ன பயமா இருக்கா? இனிமே தான் அதிபயங்கரமா இருக்கும்.” என்று கொக்கரித்தது. 

 

6 thoughts on “இரகசிய மோக கனாவில் 3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top