15
நிவேதிதாவை இடைமறித்த இரு ஆட்களும் அவளை ஆட்டோவில் தள்ளி அங்கிருந்து பறக்க.. “டேய் யாருடா நீங்க எல்லாம்? எங்கடா கடத்திட்டு போறீங்க? நான் யாருனு தெரியுமா? எங்க பெரியப்பா யாருன்னு தெரியுமா? எங்க அண்ணனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது உங்களை எல்லாம் பாண்டி கோயிலுக்கு பிரியாணி ஆக்கிடுவாருடா.. ஒழுங்க என்னை விட்டுட்டு ஓடி போய்டுங்க!!” என்று அந்த மாமிச மலையை தாக்க முடியாமல் வார்த்தைகளால் அவனை தாக்கி கொண்டிருந்தாள்.
“சும்மா கத்தாத!! நீ யாரு என்னனு தெரிஞ்சு தான் தூக்கி இருக்கோம்.. அந்த வெற்றி பய கூட இருந்தவ தானே.. அப்படியே எங்களுக்கும் கொஞ்சம் கம்பெனி கொடுக்கிறது.. ஃபாரின் ஃபிகர் கூட எல்லாம் நாங்க இருந்ததே இல்லை!!” என்றவன் பீடா கரை வாயை இவள் புறம் திருப்பி இளித்து வைக்க.. முன்னை விட அதி பயங்கரமாக தெரிந்தான் நிவேதிதாவுக்கு அந்த மாமிச மலை.
“டேய் ஹல்க் எல்லாம் உன்னால தாண்டா!! நீ மட்டும் என் கைல மாட்டுனா..உன்னை அப்படியே தேங்காய் உரிக்கிற மாதிரி உரிச்சு சட்னி பண்ணிடுவேன்” என்று கைகளை நம்பியார் போல பிசைந்து கொண்டாள்.
“இது என்ன தூங்காநகரமா இல்ல கடத்தல் நகரமா டா? ஆளாளுக்கு என்னை தூக்குறதையே வேலையா வச்சிருக்கீங்க? உங்களுக்கெல்லாம் வீடு வேலை பொழப்பு எல்லாம் ஒன்னும் கிடையாதா? ப்ளடி பர்க்கர்ஸ்” என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி இரு மாமிச மலைககளையும் அவள் கத்திக் கொண்டே வர.. “டேய் இந்த மேட்டர் வாய மூட மாட்டேங்குது டா.. நொய் நொய்ன்னு பேசிக்கிட்டே வருது. காது உய்யுன்னு கேட்குதுடா” என்று நிவேதிதா அருகில் இருந்தவன் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தவனிடம் கேட்க.. “டேய் ரொம்ப பேசினா உன்கிட்ட இருக்குற கட்சிப் எடுத்து அது வாயை கட்டிட்டு” என்றான்.
“ஆமாம்டா கரெக்ட் ஐடியா பேசாதுல்ல” என்று அவன் கர்சிப்பை எடுக்க.. “பேசுறது என்ன முழிச்சே இருக்காது. மயக்கம் போட்டு விழுந்துடும்.. ரொம்பவும் கிட்ட கொண்டு போகாதே அப்புறம் ஒரேடியா நட்டுக்கிச்சு நம்மளால ஒன்னும் பண்ண முடியாது. அப்புறம் தூக்கி வந்ததே வேஸ்ட் தான்” என்று இருவரும் இவளை வைத்து ஒருவருக்கு ஒருவர் கலாய்த்து சிரித்துக் கொண்டே வந்தனர்.
“அடப்பாவிகளா ஒரு பொண்ணு தூக்குறோம்னு எங்கேயாவது பயம் இருக்கா ஈஸியா பேசுறாங்க? இருங்கடா உங்களை சும்மா விட மாட்டேன்” என்று கருவி கொள்ளமுடியும் மட்டுமே முடிந்தது நிவேதிதாவால்.. அவளது போன் இவளை அள்ளி ஆட்டோவில் போடும்போது கீழே விழுந்து சிதறி இருந்தது.
அப்போது வழியில் கதிரின் ஜாக்குவார் நின்றுகொண்டிருக்க.. அவன் அது மேலே அமர்ந்திருக்க.. சுற்றிலும் அவனது அல்லக்கைகள்.. கதிரை பார்த்ததும் நிவேதிதாவுக்கு மனதில் ஒரு நம்பிக்கை. சட்டென்று அவள் கத்த வாயை எடுப்பதை கவனித்துவிட்டு அந்த மாமிச மலை “கதிர் நிற்கிறான் வண்டிய அவிய்ங்கிட்ட மாட்டாம ஓடிட்டு போ” என்று இவளது வாயை கர்ச்சிபால் நன்றாக அடைத்து வைத்து கையை இறுக்கிக் கட்டி விட்டான்.
“டேய் அந்த ஸ்விக்கி பையன் கரெக்டா கொண்டு போய் பார்சலை கொடுத்து விடுவானாடா?” என்று தன் அல்லக்கைகளோடு பேசிக்கொண்டிருந்த கதிரின் கண்களில் அந்த ஆட்டோ மாட்ட..
சத்தமாக விசிலடித்து அந்த ஆட்டோவை நிறுத்தி வைத்தான். ஆட்டோ காரனும் அவனுக்கு நேர நிறுத்தாமல் சற்று தள்ளி நிறுத்தியவன், இறங்கி கதிரின் அருகில் பவ்வியமாக வந்து நின்றான்.
“என்னடா ஆட்டோ தானே ஓட்டுற ஜெட் மாதிரி பறக்குது.. எதுக்கு அர்த்தராத்திரியில் எவ்வளவு வேகம்?” என்று அவனை கூர்ந்து பார்த்துக் கொண்டே கேட்க..
“இல்லண்ணே.. ஃப்ரெண்ட் குடிச்சிட்டு மட்டை ஆயிட்டான்.. அதான அவனை வீட்டில் கொண்டுபோய் சேர்த்துவிடலாம் கொஞ்சம் வேகமா போயிட்டேண்ணே” என்றவன் தலையை சொரிந்து கொண்டே கூற.. “சரி சரி போ” என்றவன் கூடவே தன் அல்லக்கை கண்ணை காட்டி ஆட்டோவை பார்க்க சொன்னான்.
அங்கு சென்று அந்த அல்லக்கை “ஆமா ணே.. அவன் பிரண்டு தான் மட்டையாகி படுத்திருக்கான்” என்று கூற கதிர் கையசைக்க அந்த ஆட்டோ அவ்விடத்திலிருந்து வேகமெடுத்தது.
“அப்பாடி அவன்கிட்ட இருந்து தப்பியாச்சு!!” என்றபடி தனக்கு பின்னால் மறைத்து வைத்திருந்த நிவேதிதாவை அந்த மாமிச மலை தள்ளிப்போட.. அப்போதுதான் அவளுக்கு சீராக மூச்சே வந்தது.
“அறிவு கெட்டவன்!! அறிவு கெட்டவன்!! வாய் மட்டும் தான் அவனுக்கு ஏழு ஊருக்கு இருக்கு.. வந்து ஒழுங்கா செக் பண்ணி பார்த்தானா?” என்று கதிரை கரித்துக் கொட்டிக்கொண்டே அமர்ந்திருந்தாள்.
அதற்குள் நிவேதிதாவை காணோம் என்று மீண்டும் ஒரு தேடல் தொடங்கியது அவர்கள் வீட்டில்.. வாயில் நின்றுகொண்டிருந்த செக்யூரிட்டி “பாப்பா எப்படி தான் சும்மா வாக்கிங் நடந்து போச்சு” என்று சொல்ல மருது அவ்வழியே ஓடினான்.
அவர்கள் வசிக்கும் தெரு பகுதியில் இருந்து மெயின் ரோடு வரை வந்தவனுக்கு நிவேதிதா இருப்பதற்கான சிறு தடமும் தெரியவில்லை. யோசிக்க யோசிக்க அவனுக்கு தலை வலிக்க.. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு வந்தவன் கண்களில் விழுந்தது கேட்பாரற்று கிடந்த விலை மதிப்புள்ள செல்போன் பாகங்கள். சட்டென்று அதை எடுத்துப் பார்த்தவன் கண்டுகொண்டான் அது தன் தங்கையோடு என்று!!
“யாராவது கடத்திட்டு போய் இருப்பாய்ங்களா?” என்று தோன்றிய அடுத்த நிமிடமே வெற்றியாக தான் இருக்கும் என்று திண்ணமாக எண்ணியவன் அவனுக்கு போன் போட..
குவாரியில் வேலை முடித்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த வெற்றி மருதுவின் நம்பரை பார்த்தவுடன் கண்கள் சுருங்க எடுத்தான்.
“சொல்லு!!” என்று ஆளுமையான குரலில் கேட்க..
“நிவேதிதா எங்கடா? எதுக்காக டா அவள போட்டு இந்தப் பாடு படுத்துற? இப்ப எதுக்கு திரும்பவும் அவளை கடத்திட்டு போன?” என்று மூச்சுவிடாமல் கேள்வி கேட்டவனை பார்த்தவனுக்கு அலுப்பாக இருக்க..
“இங்கே பாரு!! நான் இப்பதான் குவாரியில் இருந்து வீட்டுக்கு போயிட்டு இருக்கேன். எனக்கு உன் தங்கச்சியை கடத்தனும் இப்போ எந்த தேவையும் இல்லை. அப்படியே கடத்தினாலும் சோலாவாத்தான் இறங்குவேன்.. வேற எவனாவது தூக்கிட்டு போயிட்டான் பாரு போ.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் வீட்டுக்கு போகணும்” என்று அவன் போனை வைத்துவிட.. இப்போது மருதுவுக்கோ மனம் பதைபதைக்க ஆரம்பித்தது.
அடுத்த பத்தாவது நிமிடம் அவனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை தனது வாட்ஸ் அப் குழு மூலம் அழைத்தவன் தங்கையின் போட்டோ அனுப்பி அங்கங்கே தேடச் சொன்னான்.
இவனும் சில ஆட்களோடு சேர்ந்து அங்கே இங்கே என்று விசாரித்தான். இவற்றையெல்லாம் வீட்டுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வது தான் பெரிய வேலையாக இருந்தது அவனுக்கு!!
“டேய் இந்நேரத்துக்கு இவ்ளோ தேட ஆரம்பிச்சு இருப்பாய்ங்க.. நம்மள கண்டுபிடிச்சுடுவாய்ங்க.. அதுக்குள்ளார நாம மேட்டரை முடிச்சுட்டு மதுரை விட்டு ஓடி இருக்கணும்.. எங்கேயாவது ஒதுக்குப் புறம் இடமா பாரு” என்று பின்னால் இருந்தவன் கூற ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்தவனும் சரி என்று தலையசைத்து மெதுவாக பார்த்துக் கொண்டே வந்தான்.
சுத்தமாக நிவேதிதாவுக்கு நம்பிக்கையே இல்லை இப்பொழுது.. முன்னே கண்டிப்பாக அண்ணன் வந்து காப்பாற்றுவான் என்று எண்ணியிருந்தாள். ஆனால் இது என்ன சினிமாவா? எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து வந்து காப்பாற்ற? இவர்கள் கையில் அகப்பட்டு சீரழிவதை விட.. சாலையில் குதித்து தப்பிக்க பார்ப்போம்.. சாவோ? வாழ்வோ? அது கடவுள் சித்தம்!! என்று எண்ணியவள் அமைதியாக இருப்பது போல காட்டிக் கொண்டு சட்டென்று ஆட்டோவின் மறுபுறம் உள்ள கம்பியை தாண்டி ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்து உருண்டாள்.
அவள் அமைதியாக இருந்ததை பார்த்து தப்பிக்க மாட்டாள் என்று நினைத்திருந்தவர்கள் சற்று அலட்சியமாக இருக்க.. ஆனால் அவளோ கிடைத்த கேப்பில் கம்பி ஏறி குதித்து விட்டாள். சாலையில் உருண்டவள், நல்லவேளையாக பின்னாடி ஏதும் வண்டிகள் வரவில்லை. மேலும் அது மெயின் ரோட்டிலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக அவர்கள் இடம் தேடுவதற்காக வந்த கிளை பாதை.. அதனால் அங்கங்கே உடலில் சிராய்ப்புகள் ஏற்பட்டு ரத்தம் கசிய.. அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் வந்த வழியிலேயே வேகமாக மெயின் ரோட்டை நோக்கி ஓடினாள்.
ஓடிக் கொண்டிருந்தவள் எதிரே வந்த காரின் மீது முட்டி நிற்க.. வேறு யாராய் இருக்கும் நம் வேந்தன் அல்லாது?!
அவளைக் கண்டு பதட்டப்படவோ.. அப்பாடா என்று ஆசுவாசப்படவோயில்லை அவன்!!
“இவளா?!” என்று அலுத்துக் கொண்டான்.
பொறுமையாகவே இறங்கி வந்தவன் “உங்க அண்ணே உன்னைய காணோம்னு எனக்கு போன் போட்டு திட்டுறான். நீ என்னன்னா இங்க இவிய்ங்க கூட ஓடி பிடிச்சி விளையாடுற.. விளையாடுறவ ஓரமா விளையாட வேண்டி தானே எதுக்கு என் கார்ல வந்து முட்டி நிற்கிற? போ.. போ..” என்றவன் கார் கதவை திறந்து உள்ளே நுழைந்து கொண்டான்.
நிவேதிதாவோ யாரும் துணைக்கு இல்லை என்று தைரியமாக அவர்களிடம் தப்பித்தவள், வெற்றியை பார்த்த நொடி அவன்மீது ஒரு துளி நம்பிக்கை கொண்டு எதிர்பார்ப்புடன் அவன் முகத்தை ஆவலாக பார்த்தாள். ஆனால்..
இப்படி ஒரு செயலை கண்டிப்பாக வெற்றி இடமிருந்து நிவேதா எதிர்பார்க்கவில்லை. பின்னால் துரத்தி வரும் இரண்டு தடிமாடுகள் முதலில் வெற்றியை பார்த்து பயந்தாலும்.. அவன் பாட்டுக்கு கார் உள்ளே சென்றதை கண்டு.. இவளை நக்கலாக பார்த்து சிரித்துக்கொண்டே நெருங்கி வந்தனர்.
காரில் அமர்ந்தவன்.. காரின் கதவு வழியே அவளை பார்க்க.. அவள் கண்களிலோ நீயா இப்படி? என்ற கேள்வியா.. நீயும் இவ்வளவுதானா? என்று விரக்தியா என்று தெரியாத ஒரு பாவனை. அதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் மெல்ல மெல்ல கார் கதவின் கண்ணாடியை உயர்த்தினான்.
மெது மெதுவாக அவளைத் தாண்டி கார் செல்லவும்.. அவர்கள் நிவேதிதாவை நெருங்கவும் சரியாக இருந்தது.
இரண்டு மலைகளும் அவளை மெதுவாக சுற்றிவந்து நக்கல் சிரிப்போடு.. “என்ன ஒன் ஹீரோ விட்டுட்டு போய்ட்டானா?”
“அவன் போனாலென்ன ஆதரிக்க தான் நாங்கள் இருக்கோமே!!”
“டேய் அவன் ஹீரோ இல்லடா ஆன்ட்டி ஹீரோ.. அதான் விட்டுட்டு போயிட்டான்..”
“கண்டிப்பா இந்த ஆண்ட்டிக்கு அவன் ஹீரோ இல்லை..” என்று கூறி இடி இடியென சிரித்தனர்.
இன்னும் என்னென்ன சொல்லி இருப்பார்களோ.. ஆனால் நிவேதிதாவின் மூளை சற்றே மரத்து அவர்கள் பேசுவதை கேட்க முடியாமல் செல்லும் வெற்றியின் காரையே கண்களில் நீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தாள். நீர் திரையிட்டு அவள் பார்வையை மறைக்க.. அனிச்சை செயலாக தன் புறங்கை கொண்டு கண்ணைத் துடைத்தவள், அருகில் டங்கென்ற சத்தத்தில் திரும்பி பார்க்க.. இரு மலைகளும் ஒன்றன்பின் ஒன்றாக மேலே சிறிது தூரம் பயணித்து.. அந்தரத்தில் அல்லாடி.. தள்ளாடி ரோட்டில் தொப்பென்று வந்து விழுந்தனர்.. வேந்தனின் கார் உபயத்தால்!!
நல்லவேளை விழுந்து வேகத்திற்கு ரோட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை!!
அவள் அதிர்ச்சியோடு திரும்பி பார்க்க இருவரும் வலியில் உருண்டு புரண்டு கொண்டிருந்தார்கள். வேந்தனின் கால் ரிவர்ஸில் சென்று பின் வேகம் அடுத்து அவர்களை நோக்கி வர… நிவேதிதாவோ கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தாளே ஒழிய கிஞ்சித்தும் அந்த இடத்தில் இருந்து நகரவே இல்லை.
ஆனால் அவர்களோ வெற்றியின் காரின் வேகத்தை பார்த்து சட்டென்று எழுந்து ஓட முடியாமல் ஓட.. வேகமாக வந்தவன் மீண்டும் ஒரு இடி அவர்களின் பின்பக்கம் இடிக்க.. ஓட எத்தனித்தவர்கள் ரோடு ரோலராக உருண்டார்கள்.
சாவதானமாக, அவர்கள் விழுந்து அடிபட்டு புலம்புவதை பார்த்துக்கொண்டே வெளியில் வந்தவன் கையில் போட்டிருந்த காப்பை முறுக்கி விட்டுக்கொண்டு காலால் இரண்டு பேர்களையும் இரண்டு மிதி மிதித்தான்.
“பொண்ணுங்க நைட் தனியா வந்தா.. அது ஆம்பளைக்கான வசதி இல்லடா அவர்களுக்கான பொறுப்பு!! அப்படி இருக்கிறவன் தான் உண்மையான ஆம்பள” என்று அவர்கள் சங்கில் காலை வைத்து மிதித்தான்.
“இன்னும் ஒரு முறை.. ஒரே முறை.. இந்த மாதிரி நீங்க பண்றதை பார்த்தேன் செதைச்சிடுவேன் உரு தெரியாமல்!! எதோ சொல்றேன்னு புரியுதில்ல” என்க இருவரும் வேகவேகமாக தலையாட்டி எழுந்து ஓட முயல…
“உட்காருங்க டா அப்படி!!” என்று வெற்றி அதட்ட.. இடுப்பில் காலில் அங்கங்க காயம் ஏற்பட்டு இருந்தாலும் உட்கார முடியாமல் அசைந்து அசைந்து உட்கார்ந்து வாயை பொத்தி இருந்தனர்.
அடுத்து தம்பிக்கு கால் போட்டவன் “எங்கடா இருக்க?” என்று கேட்க.
“என்ன எங்க அண்ணன் இவ்வளவு பாசமா கேட்கிறான்.. அப்ப ஏதோ பிரச்சனை போலையே?” என்று போனை மூடிக்கொண்டு அல்லக்கைகள் இடம் சொல்ல..
“எனன்து வெற்றி அண்ணனுக்கே பிரச்சனையா?” என்று அவர்கள் வீறு கொண்டு எழ..
“அட பிரச்சனைன்னு சொன்னேன்.. எங்க அண்ணனுக்கு சொன்னேனா? எங்க அண்ணால தான் யாருக்கோ பிரச்சனை!!” என்று இவன் இங்கே தனி அரட்டைக் கச்சேரியை ஓட்ட..
“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அங்க என்னடா பேச்சு வேண்டி கிடக்கு?” என்று மீண்டும் உறுமினான் வெற்றி.
“ஒன்னும் இல்லண்ணே.. இங்க நான் பக்கத்துல தான் நிற்கிறோம் என்னன்னு சொல்லு” என்றவனிடம் தான் இருக்கும் இடத்தை கூறி “சீக்கிரம் வந்து சேரு” என்றான் வெற்றி.
கதிரும் தன் விளையாட்டுத் தனத்தை விட்டு அடுத்த பத்தாவது நிமிடம் அங்கு வந்து நிற்க.. அங்கு இருந்த இரண்டு மலைகளையும் பார்த்து “டேய் இப்ப தானடா எங்கள நீங்க கிராஸ் பண்ணி போனீங்க” என்று கேட்டுக் கொண்டே அவர்கள் கிட்ட வர…
“அவிய்ங்கள பார்த்து தான் நீ விட்டியா?” என்று வெற்றி முறைத்துக் கொண்டே கேட்க..
“இல்லண்ணே வண்டியை வேலுவ விட்டு பார்க்க சொன்னேன்.. பிரெண்ட் மாட்டை ஆயிட்டான் கூட்டு போறேனா.. என்ன ணே ஏதும் பிரச்சனையா?” என்று விளையாட்டுதனத்தை விட்டு சீரியசாக கேட்க..
வெற்றி தன் பின்னால் திரும்பிப் பார்க்க அங்கே நின்றிருந்த நிவேதிதாவை பார்த்தவன் “பான்ட்ஸ் டப்பா ஏன் இங்கே நிக்குது?” என்று கேட்க..
“அந்தப் பான்ட்ஸ் டப்பாவை இந்த இரண்டு நரியும் ந ஆட்டோல போட்டு அள்ளிக்கிட்டு வந்து இருக்கு. நீ அவ்ளோ அழகா அத செக் பண்ணி இருக்க” என்றவுடன் கதிர் பட்டென்று திரும்பி தன் அல்லக்கையை பார்க்க, ஆட்டோவை சென்று சோதனையிட்டவனோ மற்றவர்கள் பின்னே ஒளிந்து கொண்டான்.
“டேய் அவருக்கு போனை போடு!!” என்றான் வெற்றி..
யாருக்கு என்று புரிந்தவன் போன் செய்ய அந்த பக்கம் எடுத்தவர் அதனால் அருகில் இருந்த மனைவியை பார்த்துக்கொண்டே..
“சொல்லுங்க தம்பி?” என்று கூற..
“என்ன சித்தப்பு பக்கத்துல உன் பொண்டாட்டி இருக்குது போலவே?” என்று நக்கலடித்தான் கதிர்.
“தெரியுது தானே!! விஷயத்தை சொல்லுங்க” என்றார் அவர்.
“அதான் அந்த பாண்ட்ஸ் டப்பா.. உங்க வீட்டுக்கு விருந்தாளி ஒன்னு வந்து இருக்கே அத ரெண்டு பேரும் தூக்கிட்டு போக பார்த்தாய்ங்க.. இங்கன தான் பிடித்து வைத்திருக்கோம் சீக்கிரம் வாங்க” என்று இடத்தை கூறி போனை வைத்தான் கதிர்.
“சரி நீ கிளம்பு!! போம்போது இவிய்ங்களை அள்ளிட்டு போய் பக்கத்துல ஸ்டேஷன்ல தள்ளி விட்டு போ” என்றான் வெற்றி.
“வேலை முடிஞ்சதும் விவரமா வெளிநடப்பு செய்ய வைச்சிடுவிய்ங்களே!!” என்று நிவேதிதாவையும் வெற்றியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு முணுமுணுத்துக் கொண்டே தன் ஜாக்குவாரை எடுத்தான்.
அவனின் அல்லக்கைகள் இரண்டு மாமிச மலைகள் தூக்கி போட, அருகில் உள்ள காவல் நிலையத்தை நோக்கி பறந்தான் கதிர்.
மெல்ல நிவேதிதா அருகில் வெற்றி நெருங்கி வர.. இன்னும் அதே படபடப்பு குறையாமல் இரு கைகளையும் இறுக்க கட்டிக்கொண்டு நின்றிருந்தாள் நிவேதிதா.
கைநீட்டி அவளது தோளை வெற்றி தொட.. அவளோ ஆத்திரத்துடன் அவனது கையை தட்டி விட்டாள். மீண்டும் அவன் தொட மீண்டும் அவள் தட்டி விட.. கோபம் கொண்ட பிள்ளை அப்பாவிடம் கொள்ளுமே அந்த ஊடலை போல இருந்தது அவனுக்கு. இரண்டு முறை பார்த்தவன் மூன்றாவது முறை “ம்ப்ச்.. வாடி” என்று தன்னோடு இழுக்க.. அவள் முரண்டு பிடிக்க.. வேகமாக தன்னோடு அணைத்து கொண்டான்.
“ஆர் யூ ஓகே?” என்று அவள் கன்னம் வருட, இதுவரை இருந்த அனைத்து அழுத்தமும் அவளுக்கு வெடித்துக் கொண்டு வர அவனின் மார்பில் விழுந்து கதறி அழுதாள். அவள் அழுகையின் காரணம் அவளின் கடத்தல் தான் என்று உணர்ந்தான் வெற்றி.
அந்த மாமிச மலைகளை மேலும் இரண்டு காட்டு காட்ட வேண்டும் என்று மனதுள் குறித்துக் கொண்டான். ஒரு கையால் அவளை இருக்க அணைத்தவன் அவள் முதுகை நீவி விட்டவாறு “நத்திங் ஹேப்பண்ட்.. யூ ஆர் சேப்” என்று திரும்பத் திரும்ப அவளிடம் கூறி அவளை தன்னிலைக்கு திருப்ப முயல.. அவளோ அதிர்ந்த மனநிலையிலிருந்து சற்றும் குறையாமல் அவனின் மார்பில் தன் முகத்தை இறுக்க புதைத்துக்கொண்டு இன்னும் இன்னும் அவனுள் புதைந்து கொண்டு இருந்தாள்.
அவனும் திரும்பத் திரும்ப அவளை சமாதானப்படுத்த முயல ஒரு கட்டத்தில்.. “போடா ஹல்க்.. எல்லாத்துக்கும் காரணம் நீதான்!! நீ மட்டும் தான்!!” என்று குற்றம் சாட்டினாள்.
“பயமெல்லாம் போய்டுச்சு போல.. அதுதான் காப்பாத்த வந்தவனையே குத்தம் சொல்றீக” என்று அவளை விட்டு பிரிந்தவன் காரில் வாகாக சாய்ந்து நின்று கொண்டு அவளை கேலியாக பார்த்தான்.
“என்னது?? காப்பாத்தினியா? யார் கிட்டே இருந்து? அவனுங்க கடத்த என்ன கார்ட்டர் தெரியுமா? என்ன சொன்னானுங்க தெரியுமா?” என்று வெடிக்கும் அழுகையை அடக்க பற்களால் கடித்து கட்டுப்படுத்திக் கொண்டாள்.
அவனோ அதே அலட்சியத்துடன் “என்ன சொன்னாய்ங்க?” என்று வண்டி சாவியை காதல் குடைந்து கொண்டே கேட்டான்.
‘எவ்வளவு அலட்சியம் உனக்கு ஆகாதுடா!!’ என்று மனதுக்குள் வெடித்தவள்..அவங்க சொன்ன வார்த்தையை சொல்ல.. அதில் அவனது தேகம் விரைக்க.. அதற்கு அவளிடம் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் பிடரியை தடவிக்கொண்டே அவளுக்கு முதுகு காட்டி நின்றான்.
அவள் அரை மணி நேரமும் இடைவிடாமல் சலிக்காமல் அவனை குற்றம் சாட்டினாள். வெற்றியோ முதலில் கேட்டுக் கொண்டிருந்தவன், “இப்போ நீ நிறுத்தப் போறியா? இல்லையா?” என்று அவள் அருகே உடலோடு உடல் உரச நெருங்கி நின்று தாடையை அழுத்தமாக பற்றி கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்துக் கேட்டான்.
இதழ்களுக்கிடையே நூலளவு தொலைவுதான்.. அவனின் இந்த அதிரடியில் அவள் அதிர்ந்து பார்க்க.. “இப்பவும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.. உனக்கு வர கெட்டது எல்லாத்துக்கும் நான் மட்டுமே காரணம் கிடையாது.. உன்னை பெத்தவங்க தான் காரணம்!! போய் கேளு அந்த ஆளுகிட்ட!!” என்றவன் அங்கே வந்து நின்று வரதனை திரும்பியும் பார்க்காமல் “இவளை கூட்டிட்டு போ சித்தப்பு!!” என்றான் கோபத்தோடு.
வரதனை அதிர்ச்சியுடன் நிவேதிதா பார்க்க..
“வா பாப்பா போலாம்” என்று வரதன் நிவேதிதாவை அழைத்துக்கொண்டு காரில் ஏற முனையும் சமயம்..
“இங்க நடந்ததை எதையும் சொல்லாத சித்தப்பு. ஆக்சிடெண்ட் என்று சொல்லும். போகும் போது ஹாஸ்பிடல்ல அவளுக்கு ட்ரீட்மென்ட் பாத்து கூட்டிட்டு போ சித்தப்பு” என்றான் வெற்றி எங்கோ பார்த்துக் கொண்டே..
வரதனும் சரி சரியென்று தலையாட்டிக் கொண்டு நிவேதிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
வீட்டுக்கு சென்றவர்களிடம் வாக்கிங் சென்றபோது பைக் மோதி விட்டதாகவும்.. அவர்களே அழைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி செய்ததாகவும்.. பின் வரதனுக்கு அழைத்து தெரிவித்ததாகவும் கூறினார்கள்.
முதன்முறையாக மேகநாதனுக்கு மரண பயம் கண்ணில் வந்து வந்து போனது. அது தன்னை பற்றி அல்ல!! தன் பெண்ணை பற்றி!!
அன்றிரவு சித்திரைத் திருவிழா முடிந்த மறுநாள் நிவேதிதாவுக்கு வசீகரனுக்கும் திருமணம் என்று அறிவித்தார் அவர்!!
நிவேதிதாவின் திருமணம் யாருடன்?
வெற்றியின் செயல் என்னவாக இருக்கும்??
காதலே.. காதலே..