அத்தியாயம் 4
“வணங்குகிறேன் இளவரசியாரே!” என்று வாயிற் காவலன் வரவேற்க, அவனிடம் ஒரு பார்வையை செலுத்திவிட்டு மாளிகையின் உள்ளே சென்றாள் ஆருஷா.
‘அடியேய் ஆரு! நீ ஒரு கராத்தே மாஸ்டர்னு எல்லோரும் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா நீ சாதாரண புரோட்டா மாஸ்டர்னு எனக்கு மட்டும் தானே தெரியும். அவ்வ்வ்வ்..’ என்றவள் மனசாட்சி உள்ளுக்குள் புலம்ப, வெளியே கம்பீரமாக நடந்து வந்தாள். தன் அருகே நடந்து வந்து கொண்டிருந்த மல்லியிடம் மெல்லிய குரலில்,
“மல்லி?” என்றழைக்க,
“கூறுங்கள் இளவரசியாரே!” என்றவள் முகம் பார்த்து நின்றாள் மல்லி.
“என்னோட குடும்பத்துல யார் யாரெல்லாம் இருக்காங்க? கொஞ்சம் சொல்லேன். எனக்கு எதுவுமே ஞாபகம் வரமாட்டேங்குது.”
“மன்னர் மதிவாணனரின் ஐந்தாவது மகள் தான் நீங்கள். பூவிழியாழ் என்பது தங்களது பெயர். மன்னருடைய மூன்றாவது துணைவியாருக்கு பிறந்தவர் தான் நீங்கள். தங்களது தாயாரின் பெயர் கோசலை.”
“என்னது என்னோட அம்மா துணைவியாரா? அப்படின்னா?”
“எங்கள் மன்னருக்கு ஒரு மகாராணியாரும் ஐந்து துணைவியாரும் உள்ளனர். இங்கு மன்னர்கள் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தும் பொருட்டு திருமணம் செய்து கொள்வார்கள்.”
“ஓ! நான் கூட ஏதோ கல்யாணம் பிடிக்காம தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணேன்னு சொன்னியே?!”
“ஆம் இளவரசியாரே! மகாராணியாரின் தம்பியான கருணாகர பாண்டியன் தங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார். அதே சமயம் மாவீரர் விக்கிரமாதித்தனையே தோற்கடித்த மாமன்னர் ரணவீரனும் தங்களைத் திருமணம் செய்ய விரும்புவதாக விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதில் என்ன முடிவெடுப்பதென்ற குழப்பத்தில் மன்னர் இருந்த வேளையில் தான் தாங்கள் அரண்மனையின் மேற்கே இருக்கும் பாதாள பைரவி கோவிலின் கிணற்றில் விழுந்து விட்டீர்கள் என்று தகவல் கிடைத்தது. நாங்கள் வந்து பார்த்த போது பேச்சு மூச்சின்றி இருந்தீர்கள். இப்போது தங்களது சுயம்வரத்தைப் பற்றி பேசத் தான் மன்னர் அழைத்திருக்கிறாரோ? என்னவோ? தெரியவில்லை இளவரசியாரே!”
“இந்த கருணாகர பாண்டியனை பத்தி சொல்லு.”
“அவர் மிகவும் மென்மையானவர் என்றும் நல்லவர் என்றும் ஒற்றர்கள் மன்னவரிடம் கூறியதாக தகவல் வந்தது இளவரசியாரே!”
“ஓ! அப்போ இந்த ரணவீரனைப் பத்தி சொல்லு.”
“அவர் மிகவும் அரக்கக்குணம் படைத்தவராம். அவருடைய இரண்டு மனைவிகளையும் வெட்டிக் கொன்றுவிட்டாராம். மிகச்சிறந்த போராளியாம். அவரைத் தான் நீங்கள் திருமணம் செய்ய வேண்டும் என்பது பேரரசின் ஆணை.” என்று மல்லி கூறியதை கேட்டவாறே குடும்ப அவைக்குள் நுழைந்த ஆருஷாவை அனைவரும் குறுகுறுவென பார்க்க,
“மன்னருக்கு வெற்றி உண்டாகட்டும்!” என்று குனிந்து மரியாதை செலுத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டாள் மல்லி. நான் என்ன செய்வதென்று அறியாது முழித்திருந்தவளைப் பார்த்த சிற்றரசர் மதிவாணனை நோக்கிச் சென்றாள் ஆருஷா.
‘அய்யோ இப்பவே கண்ணை கட்டுதே! இவனுங்க மொகரை எல்லாம் பாத்தா நல்லவனுங்க மாதிரி தெரியலையே! கடவுளே! எப்படியாவது இவனுங்கக் கிட்ட இருந்து என்னைய காப்பாத்துங்க.’ என்று மனதுக்குள் புலம்பியவாறே அரசரின் எதிரே சென்று நின்றுகொண்டாள்.
“க்கும்..” என்று தனது தொண்டையை மன்னர் செறும,
‘இவருக்கென்ன தொண்டையில் கிச்கிச்சா? இல்ல ஸ்டார்ட்டிங் ட்ரபிளா?’ என்று எண்ணிக் கொண்டிருந்தவளை மட்டுமின்றி அங்கிருந்த தன் மனைவி மற்றும் துணைவியரையும், தனது மகள்களையும் பார்த்திருந்த மன்னர்,
“நம் பேரரசரிடம் இருந்து அரசாணை வந்திருக்கின்றது. நம் ராஜவம்சத்தில் பிறந்த இளவரசியை மாவீரர் ரணவீரனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது பேரரசர் பாண்டிய மன்னனின் அரசகட்டளை. பேரரசரின் அரசாணையை நாம் நிராகரிக்க முடியாது. அதுபோல் கருணாகர பாண்டியனுக்கு கொடுத்த வாக்கை மீற முடியாது.” என்றவர் கூறி முடிக்கும் முன்பே அவரெதிரில் வந்த பூங்கொடியாழ்,
“தந்தையே! நான் தங்களுக்கு பிடித்த மகளல்லவா! தெரிஞ்சே தீக்குழியில் என்னை இறக்கிவிடாதீர்கள் தந்தையே! அவரை நான் திருமணம் செய்வதை விட உங்கள் வாளால் எனது தலையை கொய்து விடுங்கள்.” என்று மன்னரின் இரண்டவது துணைவி தேனிசையின் மகள் பூங்கொடியாழ் கூற,
“ஆம் மன்னா! பூங்கொடி தங்களுக்கு பிடித்த மகள் தானே! அவளை அந்த நரகத்திற்கு அனுப்பிவிடாதீர்கள்.” என்று தேனிசை கூற, அங்கிருந்த பூவிழியாழின் தாயார் கோசலை,
“மன்னரே!” எனத் தொடங்கும் முன்,
“என்னை எதிர்த்து பேசும் அளவிற்கு துணிந்து விட்டீர்கள் அல்லவா?! பேரரசரின் ஆணையை மீறினால் என்னாகும் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும் அல்லவா?! நம் நாட்டின் மீது படையெடுத்து வருவார்கள். இதற்கு மகாராணியார் தான் யோசனை கூறவேண்டும்.” என்றவர் அனைவரின் முகங்களையும் கூர்மையாக பார்த்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எண்ணிய தேனிசை,
“நம் பூங்கொடியாழை கருணாகர பாண்டியனுக்கும் பூவிழியாழை மாவீரர் ரணவீரனுக்கும் மணமுடித்து வைக்கலாமே?!” என்று அரசருக்கு யோசனை கூறிமுடித்த மறுகணம், மன்னர் முன் மண்டியிட்டு அமர்ந்தார் பூவிழியாழின் தாயார் கோசலை.
“அரசே! தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை. மாவீரர் ரணதீரனைப் பற்றி பலரும் பலவிதமாக பேசுகின்றனர். அவையாவும் மனதுக்கு ஒப்பானதாக இல்லை. அருமை பெருமையாக வளர்த்த பெண்ணை நரகத்தில் தள்ளுவதா? கருணை காட்டுங்கள் அரசரே! பூவிழியாழும் தங்களது புதல்வியல்லவா?! அவளுக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை?!” என்றவரை முறைத்துப் பார்த்தார் அரசர்.
“இது அரச கட்டளை! மீறினால் சிரசேதம்.” என்றதும் மகாராணியின் முன் மண்டியிட்ட கோசலை,
“மகாராணியாரே! தாங்களாவது சொல்லக் கூடாதா?! பூங்கொடியாழும் பூவிழியாழும் ஒரு நாழிகை மட்டுமே தள்ளிப் பிறந்தவர்கள். பூவிழியாழை கருணாகர பாண்டியனுக்கு மணமுடித்து வையுங்கள்.” என்று கதறியவரைப் பார்த்த ஆருஷாவின் மனதுக்குள்,
“கோபால்! கோபால்! யாருக்காக இந்த அழுகை? எதற்காக இந்த சோகம்? நானே இன்னும் கொஞ்ச நாளில் போயிடுவேனே கோபால்! அதற்காகவா இப்படி அழுகிறீர்கள்?! நான் என்ன கடைத் தேங்காயா போற, வர்றவனெல்லாம் வழிப்பிள்ளையார்க்கு உடைக்க? சத்திய சோதனை! ‘ என்று வசனம் பேச தோன்றவே, கண்களில் சிரிப்போடு நின்றிருந்தாள். தன் தாயார் அங்கு கலங்கிக் கொண்டிருக்க, இங்கு சிரித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த மல்லி,
‘இளவரசியாருக்கு முற்றிலுமாக புத்தி பேதலித்து விட்டது போலவே!’ என்று எண்ணிக் கொண்டிருந்தாள். இங்கு கோசலை தன் மகாராணியாரிடம் கெஞ்சிக் கொண்டிருக்க, எங்கு தன்னை ரணவீரனுக்கு மணமுடித்து விடுவார்களோ என்று பயந்து போன பூங்கொடியாழ், பேரரசரிடம் இருந்து வந்த அரசாணையில் கோசலையை கையெழுத்திடச் செய்யுமாறு மகாராணியிடம் அரசாணையை நீட்டினாள்.
“இதோ பார் கோசலை, ராஜகட்டளையை மீறினால் உன்னையும் உன் மகளையும் நாடு கடத்த நேரிடும். ஆதலால் மன்னனின் கட்டளையை ஏற்று இந்த அரசாணையில் இத்திருமணத்தை ஒப்புக் கொண்டதாக யையொப்பமிடு.” என்று தேனிசை கூற,
“இல்லை. கண் தெரிந்தும், என் மகளை பாழங்கிணற்றில் தள்ள நான் ஒருநாளும் சம்மதிக்கமாட்டேன்.” என்றார் கோசலை. அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த ஆருஷா,
“என்னால் யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது.” என்று விட்டு அங்கிருந்து செல்ல முயன்றாள்.
“மாவீரர் ரணதீரன், பாண்டிய மன்னரின் எல்லைக்காப்பான் படைதளபதியாவார். அவருக்கு உன் மகளை மணமுடித்துக் கொடுக்க, நீ பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.” என்று தேனிசை மீண்டும் பேச,
“அப்படியென்றால் ஏன் தங்களது மகள் பூங்கொடியாழை மாவீரர் ரணவீரனுக்கு மணமுடித்து கொடுக்கலாமே?! ஏன் என்னைய கட்டாயப்படுத்துறீங்க?!” என்று ஆருஷா சீறுவதைப் பார்த்த தேனிசை,
“என்ன ஒரு தைரியம்? என்னை எதிர்த்து பேசும் அளவிற்கு துணிந்து விட்டாயா?” என்ற தேனிசை, கோசலையை தாக்குவதற்காக முன்னேற, அதனைக் கண்ட மகாராணியார்,
“மன்னர் குடும்பத்தில் யாவரும் சமமானவர்களே! யாரும் யாரையும் வற்புறுத்தக் கூடாது.” என்றவர் கூறி முடிப்பதற்குள் கோசலையை ஓங்கி அறைந்திருந்தார் தேனிசை.
“மன்னர் கட்டளையை மீறும் அளவிற்கு தைரியம் வந்துவிட்டதா? உன்னை மன்னர் மாலையிட்டு மணக்கவில்லை. இருப்பினும் தாசியான உன் வயிற்றில் மகளாகப் பிறந்த பூவிழியாழிற்காக உன்னை துணைவியாக ஏற்றுக் கொண்டார். அப்படிப்பட்ட நீ வாயை திறக்கலாமா?” என்றவாறே கோசலையை தாக்கத் தொடங்கினார் தேனிசை. ஆருஷாவிற்கு தான் ஒருமாதிரியாக இருந்தது. கோசலை அடிவாங்குவதை தாங்க முடியாமல், அவரை மறைத்தாற் போல் ஓடிச் சென்று நின்று கொண்டாள் ஆருஷா.
“இப்ப என்ன இதுல எங்கம்மா கையெழுத்து போடணும். அவ்வளவு தானே?! இதுல கையெழுத்து போட்டதுக்கு அப்புறம் என்னோட அம்மாவை தரக்குறைவா பேசக்கூடாது; நடத்தவும் கூடாது.” என்றவள் அங்கிருந்த மையை தன் தாயின் கட்டை விரலில் தேய்த்து அரசாணையில் கையொப்பமிடச் செய்தவள்,
“நான் மாவீரர் ரணவீரனை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன்.” என்று கூறி தன் தாயை அங்கிருந்து இழுத்துக் கொண்டு சென்றாள் ஆருஷா. இதற்கு முன் பார்த்திராத தாயாருக்காக தன்னை தியாகம் செய்ய தயாராகினாள் ஆருஷா.
அன்றைய காலத்தில், பாண்டியர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. தங்களது எல்லைகளை விரிவுபடுத்தும் பொருட்டு பலமுறை திருமணத்தையும் நடைமுறையில் வைத்திருந்தனர்.
அரசாணையில் கூறப்பட்டிருந்தை போல் ஆருஷாவை மணமகளாக அலங்காரம் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த தேனிசையும் பூங்கொடியாழும்,
“ஹும்.. மாவீரர் ரணவீரன் ரொம்ப முரட்டுத்தனமானவராம். அப்படி இப்படி நடந்துகொண்டாலும் கத்திவிடாதே. அவர் மனசு கோணாமல் நடந்துக்கொள். உன்னுடைய நடத்தையில் திருப்தியில்லாமல் திருப்பி அனுப்பி விடப் போகிறார்.” என்று கூறி சிரிக்க அவர்களுக்கு தனது மௌனத்தையே பதிலாக கொடுத்தாள் ஆருஷா. சில சமயம் வலிகள் கொண்ட மௌனம் கூட, எதிரிகளுக்கு சரியான சவுக்கடியாக விழும். ஆருஷாவின் மௌனத்தால் கன்னத்தில் அறை வாங்கியது போல் உணர்ந்தவர்கள், அங்கிருந்து சென்றனர்.
அலங்காரம் செய்து முடிந்ததும், மாவீரர் ரணவீரனின் வாளில் அணிவிக்கப்பட்டிருந்த முத்துமாலையை எடுத்து பூவிழியாழின் கழுத்தில் அணிவித்தார் மகாராணி. அக்காலத்தில் அரசரின் வாளுக்கு மாலையிட்டு மனைவியாவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதே போல் ரணவீரனின் உடைமை பூவிழியாழ் என்பதை உலகிற்கு உறுதி செய்யும் பொருட்டு அதனை அவளுக்கு அணிவித்தனர். பல்லாக்கில் ஆருஷா ஏறிக் கொள்ள, பின்னால் சீரோடு அனுப்பி வைத்திருக்கும் குதிரை வண்டியில் மல்லியும் ஏறிக் கொண்டாள். மாவீரர் ரணவீரன் அழகானவனா? இல்லையா? கொடூர மனம் படைத்தவனா? கருணை உள்ளம் கொண்டவனா? என்று எதுவும் அறியாது, ஆறோடு செல்லும் மீனை போல், தன் வாழ்க்கை எதை நோக்கி பயணிக்கின்றது என்பதை அறியாது அதன் போக்கில் செல்ல தயாரானாள் ஆருஷா. ரணவீரனின் எல்லையைத் தாண்டி பல்லாக்கு தூக்கிச் செல்லும் போது வழிப்பறி கும்பலின் கையில் மாட்டிக் கொண்டாள் ஆருஷா. வழிமாறிச் செல்லும் படகு சரியாக கரையைச் சென்று சேருமா?
விறுவிறுப்பு
தாங்க் யூ சிஸ் 😍😍😍😍
cheapest tadalafil india
😍😍😍😍😍😍😍😍
Sema 👌👌👌👌👌
தாங்க் யூ சிஸ் 😍😍😍😍😍
❤️❤️❤️❤️❤️❤️❤️