ATM Tamil Romantic Novels

எங்கு காணினும் நின் காதலே… 18

18

 

 

வெற்றி நடை போட்டு வெற்றியை விட்டு பிரிந்து சென்றாள் நிவேதிதா!!

 

ஆனால் அவள் மனதிற்குள்ளே பெரும் பாரம்.. அது அவனை பிரிந்ததினால் அல்ல.. பாவைக்கு அவன் மீதான காதலினால்.. ஆம்!! காதலே தான். எங்கே? எந்த புள்ளியில்? அந்த காதல் பற்றி கொண்டது என்று கேட்டால் அவளுக்கு தெரியாது!!

 

காதலில் பொது விதியே அது தானே!!

எப்போது யார் மீது யாருக்கு தோன்றும் என்று யாரால் கணிக்க முடியும்??

 

ஆனால் முளைத்த காதலை வளரவிடாமல் புதைத்துக் கொண்டாள் தனது மனதிலே நிவேதிதா!!

 

 

நிவேதிதா சென்றபின் அழகுசுந்தரம் என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை குனிந்தவாறு தனது வீட்டாரோடு வேந்தன் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார்.

 

 

நிவேதிதா அதிரடி செயல் அந்த வீட்டிலிருந்த ஒவ்வொருவரையும் தாக்கியது. முதலில் மீண்டது மலர்வேந்தன் தான்!!

 

 “அப்பன போலவே அந்த புள்ளையும் இருக்கா? இந்த புள்ளையை வா நம்ம வீட்டுக்கு கொண்டு வரனும்? வந்தா நம்ம வீடு எல்லாம் விளங்குமா? இல்ல எப்படி இந்த வீட்டுக்கு பொருந்தும் அந்த புள்ள?” அவள் கேள்வி கேட்ட நியாயத்தை மறந்து வம்படியாக அவள் மீதே குற்றம் சாட்டினார் மலர்.

 

 

“மலர்!!” என்று வாஞ்சியின் ஒற்றை வார்த்தையில்.. “ஆமாம் போங்க அண்ணா” என்று முணுமுணுத்து விட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார். சுலோச்சனாவும் மரகதமும் வாஞ்சி வேந்தனின் கண் ஜாடையில் உள்ளே சென்று விட்டனர்.

 

 

இப்படி செய்வாள் என்று சற்றும் எதிர்பார்த்திராத வெற்றிவேந்தன் திகைப்பிலேயே நின்றிருக்க.. அவன் அருகே வந்த வாஞ்சி “வேந்தரே!!” என்று சற்று அழுத்தமாக சத்தமாக அழைக்க…

 

தன்னிலை கலைந்தவன் “ஹான்.. ஐயா!!” என்றான்.

 

அவனை தீர்க்கமாகப் பார்த்தார் வாஞ்சி.

” நீங்க செய்ததின் எதிர்வினை பார்த்தீய்ங்கள? சிறுவயதிலிருந்தே உங்களுக்கும் உங்க தம்பிக்கும் பெண்களை போற்றவும் பாதுகாக்கவும் தான் கற்றுக் கொடுத்தமோ ஒழியே இப்படி அவங்ங வாழ்க்கையில விளையாட இல்ல.. இவ்வளவு நாள் பொருத்தவ இன்னைக்கு பொங்கி எழுந்துட்டா. எப்பவுமே வலிக்க நமக்கு அடி விழும் பொழுதுதான் நாம் செய்த தப்பின் வீரியம் நமக்கு புரியும்.. இனியும் உங்களுக்குப் புரிந்தால் சரி தான்!!” என்றவர் அதற்கு மேல் ஒன்றும் கூறாமல் உள்ளே சென்று விட.. சிறிது நேரம் அமைதியாக நின்றவன் அதன் பின்னே தன் அறைக்கு சென்று விட்டான்.

 

 

 

நிஜமாலுமே நிவேதிதாவுக்கு தாலி கட்டும் எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை. நேற்று இரவு வந்த போன் கால் சொன்ன செய்தியின் வீரியம் அப்படி.. எப்படி அவள் இன்னொருத்தனை கட்டிக் கொண்டு சந்தோஷமாக இருக்கலாம்? அதுவும் மேகநாதனின் மகள் சந்தோசமாக இருக்கவே கூடாது!! என்ற முடிவின் விளைவுதான் இந்த திடீர் திருமணம். யாரும் மறுக்க முடியாத வகையில் திருக்கல்யாணத்தின் முன்னே நின்று தன் கல்யாணத்தையும் நிறைவேற்றிக் கொண்டான்.

 

 

தாலி என்று ஒன்று வந்துவிட்டால் அதன் பிறகு அவள் வேண்டாம் என்று சொன்னாலும் கூட, உறவுகளை பற்றி அறிந்தவன் எப்படியும் அவளை தன்னிடம் கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள் என்று இவன் நம்பியிருக்க.. அனைத்தையும் தவிடு பொடியாக்கி தலைகுப்புற கவிழ்த்துவிட்டாள் இந்த ராணி மங்கம்மாள்!!

 

 

அவனுக்கு ஆற்றாமை குறையவே இல்லை. அதற்கு மேல் கோபம்!! கோபம்!! கோபம் மட்டுமே!!

 

 

வீட்டில் இருந்தால், வீட்டில் உள்ளவர்களை கோபத்தில் வார்த்தைகளால் வதைத்து விடுவான் என்ற புரிந்தவன் நேராக காரை தஞ்சமடைந்து இலக்கில்லாமல் ஓட்டிக்கொண்டு சென்றான்.

 

 

கதிரோ இங்கே நடந்தது எதுவும் அறியாமல்.. இவர்களுக்கு பின்னால் வரலாம் என்று கையில் தாம்பூலத்துடன் வந்தவனை மறித்து நின்றாள் அவனின் மச்சக்கன்னி..

 

 

அதுவும் திருக்கல்யாணத்திற்கு குடும்பத்தோடு வந்திருந்தவள் கதிரைப் பார்த்து விட்டுத்தான், எல்லோருக்கும் மஞ்சள் தாலி கயிறு தாம்பூலம் கொடுப்பது போல கொடுத்துக் கொண்டே இவன் முன்னே வந்தது!!

 

 

“அப்புறமுங்க மாமா.. நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கிறது?” என்று கையில் வைத்திருந்த தாலிக்கயிறு ஆட்டி ஆட்டி அவள் கேட்க..

 

 

அவளின் இந்த தைரியத்தில் மனது சிறகு அடித்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் “பாருடா புள்ளபூச்சி எல்லாம் பறந்து பறந்து வாய் அடிக்கிறதை.. ஏன் பரமேஸ்வரர் கூப்பிடவா?” என்று அவன் நக்கலடிக்க..

 

 

“பரமேஸ்வரர் என்ன? அவரு பொண்டாட்டி சிவகாமியே கூப்பிட்டாலும் நான் பயப்பட மாட்டேன்” என்றாள்.

 

 

“பாருடா!! அப்புறம்?” என்றான் சிரிப்புடனே..

 

“200 ரூபாய் இன்னிக்கு உங்களால எனக்கு செலவு!!” என்றாள். 

 

அவன் புரியாமல் முழித்து “எதுக்கு??” என்று கேட்க..

 

“சீக்கிரம் கல்யாணம் ஆகுமுன்னு சொல்லி எங்க அம்மா இதை வாங்கி கொடுத்து எல்லாருக்கும் கொடுக்க சொல்லிட்டாங்க.. ஒத்த கயிறு வாங்கி நீங்க என் கழுத்துல கட்டிட்டா.. எத்தனை கயிறு வாங்கி கொடுக்க தேவையில்லை தானே.. இப்ப பாருங்க தேவையில்லாத செலவு” என்று அவள் அங்கலாய்த்துக் கொள்ள..

 

“அடிப்பாவி!! அடிப்பாவி!! என்னடி வரவர நீ இப்படி ஆயிட்ட?” என்று அதிர்ச்சியுடன் அவன் வாய் பிளக்க..

 

 

“இப்போவும் ஒன்னும் கெட்ட போல.. என் கையில நிறைய கயிறு வச்சிருக்கேன். அதுல ஒன்னே ஒன்னை எடுத்து அப்படி சாமிக்கு முன்னாடி நின்னு கட்டீனிங்கன்னு வைங்க ஜோலி முடிஞ்சது” என்று அவனை பேரதிர்ச்சி ஆளாக்கினாள்.

 

 

“இப்பதான் ஒரு தரமான சம்பவம் நடந்திருக்கு.. அதுக்கே என்னென்ன பஞ்சாயத்து வர போகுதுன்னு தெரியல.. இவ அடுத்த பஞ்சாயத்துக்கு ஆளை ஏற்பாடு பண்ற டா” என்று அருகில் இருந்தவனை பார்த்து கூறியவன்..

 

 

கையிலிருந்த தாம்பாளத்தை தனது அல்லக்கைகள் இடம் கொடுத்து “இத வெச்சிகிட்டு அப்படி ஓரமா போய் நில்லுங்க” என்றவன், கூட்டத்தோடு கூட்டமாக அவள் கைகளை பிடித்து காருக்குள் தள்ளினான்.

 

 

“என்னடி பயம் விட்டு போச்சு போல?” என்று அவளைப் பார்த்து கேட்க..

 

“ஆமாம்.. நான் எப்போ பயந்தேன்? அது இப்ப விட்டு போக?” என்று மேலும் கீழும் அவனைப் பார்த்தவள்..

 

அஞ்சறையடியில ஒரு எலும்புக்கூடு.. இதுக்கு மேல கொஞ்சமா ஜெர்க்கின் போட்ட மாதிரி சதை போட்டு இருக்கு.. நகைக் கடைக்கு டஃப்பு கொடுக்குற மாதிரி கழுத்து கை விரலு எல்லாம் நகை.. பார்க்க சகிக்கல.. 

 

ஏதோ அந்த முடி மட்டும் நிறைய அலையலையா காத்தடிச்சா பறக்குது, அது கொஞ்சம் நல்லா இருக்கு..

இந்த மீசையை கொஞ்சம் முறுக்கி விட்டு சண்டிகர் கணக்கா இருக்கு பார்க்க.. அப்பப்போ சட்டையைப் பின்னுக்கு தள்ளிவிடுறது, ஒரு எக்கு எக்கி வேஷ்டி கட்டுறது இதெல்லாம் ஓகே போல இருக்கு.. மத்தபடி ரசிக்கிற மாதிரி உன்கிட்ட என்ன இருக்கு?” என்றாள் ஒன்று விடாமல் அனைத்தையும் ரசித்து விட்டு..

 

 

முதலில் அவள் சொல்ல சொல்ல கபசரக்குடி நீர் குடித்த குரங்கு போல மூஞ்சியை வைத்தவன்.. அடுத்தடுத்து அவள் சொன்ன விஷயங்களில், அவள் எப்படி கூர்ந்து தன்னை கவனித்து இருக்கிறாள் என்று புரிந்து

கொண்டவனுக்கு அவள் மீதான அன்பு பிரவாகம் எடுத்தது.

 

 

“அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு ஏதோ பார்க்கிற மாதிரி இருக்கிற என்னைய எல்லாம் நீ கட்டிக்க வேணாமடி.. அன்னைக்கு பார்த்தோமே ஒட்டடை குச்சி மேலே விக்கு வைச்ச மாதிரி ஒருத்தன்.. அவனை மாதிரி ஆள நீ கட்டிக்கிட்டு நாலஞ்சு புள்ளகுட்டி பெத்துகிட்டு மதுரை ஜனத்தொகையை ஏற்றி விடு” என்றான் சிரிப்பை அடக்கியபடி..

 

 

“இப்படி எல்லாம் நீங்க பேசினா நான் கோச்சிக்கிட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைக்கிறீய்ங்க.. அதெல்லாம் நடக்காது” என்று அவள் போட்டிருந்த ஜாக்கெட்டின் மேல் பகுதியை கெத்தாக தூக்கிவிட்டு “நாம் மதுரைக்காரியாக்கும்!! அப்படி எல்லாம் சுலபமா என்னை ஏமாத்திட்டு ஓட முடியாது. வீடு பூந்து தூக்கிடுவேன்” என்றவளின் வார்த்தை ஜாலங்களில் மனதை தொலைத்தவன் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.

 

 

“அவ்வளவு மாமன் உன்னைய கஷ்டப்படுத்த மாட்டேன் மச்சக்கன்னி.. இப்பவே வா காரு ரெடியா தான் இருக்கு. எடுத்துட்டு கொடைக்கானல் பக்கம் விட்டுலாம் வண்டிய.. ஹனிமூன் எல்லாம் முடிச்சிட்டு பொறுமையா வரலாம்” என்று அவன் உதடுகள் அவள் காது மடலில் இருந்து உரசிக்கொண்டே கன்னத்திற்கு சென்று அங்கே அழுத்தமாக ஒரு இச்சை வைத்துவிட்டு.. உதடுகளை கவ்வ சந்தர்ப்பத்தை பார்த்து காத்துக் கொண்டிருந்தது உரசியபடி..

 

கதிரின் செயல்களில் வெட்கம் கொண்டவள் தாமரையென சிவக்க அதற்குள் அங்கே போலீஸ் காரர் ஒருத்தர்…

 

 

“பத்ம பிரியாலோச்சினி எங்க மா இருக்க? இங்கே உங்க அம்மா தேடுராக? உங்க அப்பா தேடுராக? கூடவே உன் தம்பி சொந்த பந்தங்கள் எல்லாம் தேடுறாக.. கூட்டத்துல எங்க இருந்தாலும் படக்குனு மின்னல் மாதிரி அழைப்பு கூடத்திற்கு வந்துடுமா!!” என்று பத்மாவின் மானத்தை மைக்கில் கூவிக்கூவி அவர் விற்க.. 

 

 

“அய்யய்யோ என் வீட்ல எல்லாரும் என்னைய தேடுறாய்ங்க.. அப்புறம் பார்க்கலாம்” என்றவள் சட்டென்று கதவை திறந்து விட்டு ஓடிவிட்டாள்.

 

 

“லிப் டூ லிப் போச்சே” என்று வட போச்சே ரீதியில் வருத்தப்பட்டவன் அதன் பின்னே தான் வீட்டிற்கு வந்தான்.

 

 

எப்படியும் சண்டை சச்சரவு முடிந்து இருக்காது. கூடவே சொந்த பந்தங்கள் எல்லாம் கூட்டி ஒரு பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும் என்று எதிர்பார்த்து வந்தவனுக்கு வீட்டில் இருந்த அசாத்திய அமைதியே ஏதோ சரியில்லை என்று கூற.. கையில் வைத்திருந்த தாம்பாளத்தை நேராக கொண்டு போய் பூஜை அறையில் வைத்து விட்டு.. நேராக அன்னையர்களை பார்க்க சென்றான்.

இருவரும் அப்பத்தா பெரியநாச்சியின் ரூமில் தான் அமர்ந்திருந்தார்கள்.

 

 

“ஐயாவும்.. பெரிய ஐயாவும் நயா பைசாவுக்கு வாயை திறக்க மாட்டாய்ங்க அவிய்ங்க கிட்ட கேட்டு கேட்டு சலிக்கிறதுக்கு.. நம்ம பேபி கிட்ட கொஞ்சம் கண்ணீர் விட்டால் ஒத்த வார்த்தை விடாம எல்லாத்தையும் சொல்லி விடும்” என்று அவன் பேபி என்று உருக்கமாக அழைத்துக் கொண்டே செல்ல…

 

 

அவன் நினைத்தது போலவே “ஐயோ ராசா!!” என்று அவனை இழுத்து தன் அருகில் வைத்துக் கொண்டு.. தன் ஒப்பாரியை துவக்கினார் பெரியநாச்சி.

 

 

நிவேதிதா செய்ததை கேட்க கேட்க கதிருக்கு வெறியேறியது. அண்ணன் தம்பி இருவருமே தங்களின் நிலையில் இருந்து மட்டுமே பார்த்தார்களே தவிர.. ஒரு பெண்ணை வைத்து அவளது வாழ்க்கையில் விளையாண்டு கொண்டிருக்கிறோம் என்பதை மறந்தனர். தங்களை வலிக்க அடித்தவர்களை திருப்ப வலிக்க அடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே!!

 

“அந்தப் பான்ஸ் டப்பாவுக்கு இவ்வளவு திமிரா? இருடி வந்து வச்சிருக்கிறேன் கச்சேரியை” என்று வேட்டியை மடித்துக் கொண்டு கிளம்பியவனை மரகதம் தடுத்தார்.

 

“முதல்ல உன் அண்ண எங்க இருக்கான்னு பார்த்து தேடி வீட்டுக்கு கூட்டிட்டு வா.. அந்த பையன் கோபத்தில் வண்டி எடுத்துட்டு போனான்.. கோபத்தோடு வண்டிய ஓட்டுறது நல்லதில்ல கதிரு.. முதல்ல அவனை கூட்டிட்டு வா.. அப்புறமா பஞ்சாயத்து கிளம்பு” என்று அவனிடம் கோபமாக கூற..

 

“பேருதான் பெரிய வேந்தன் குடும்பம்!! ஆனா இங்க ஆட்டிவைக்கிறது எல்லாம் பொண்ணுங்க தான்.. அம்மாவிலிருந்து இப்போ வீட்டுக்கு வந்த பான்ட்ஸ் டப்பா வரைக்கும்!!” என்று புலம்பியவன் அண்ணனை தேடி தனது ஜாக்குவாரை பறக்க விட்டான்.

 

மாலை சூரியன் தன் வக்கிரம் குறைத்து நிலவு மகளை தனது பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்க எத்தனித்திருந்த தருணம்.. ஆனால் தன் கோபம் சிறிதும் குறையாமல் எங்கே செல்கின்றோம் என்றும் புரியாமல் வண்டியிலே சுற்றிக் கொண்டிருந்தான் வெற்றி வேந்தன்.

 

 

கதிரும் தன் அண்ணனை தேடாத இடமில்லை.. கேட்காத ஆளும் இல்லை..

எங்கே இருக்கிறான் என்று அவனுக்கு தெரியவில்லை.. மனது அலுக்க வண்டியை ஓரங்கட்டி நிறுத்தியவன், வண்டி மேல் சாய்ந்து நின்று கொண்டு யோசித்துக்கொண்டிருக்கும் போது வரதனிடம் இருந்து போன் வந்தது.

 

 

“என்ன சித்தப்பு??” என்று அவரிடம் கடுப்பாக கேட்டவன், அவர் சொன்ன செய்தியைக் கேட்டு “அவ்வளவு தூரம் வந்திருச்சா? வகுந்திடுவேன்.. வகுந்து..

இந்தா வாரேன்” என்றவன் அதுவரை இருந்த மனசுணக்கம் மாற கோபத்தில் வண்டியை பறக்க விட்டான் அழகுசுந்தரம் வீட்டை நோக்கி..

 

 

அப்படி என்ன சொல்லியிருப்பார் வரதன்??

 

 

அழகு சுந்தரம் வீட்டிற்கு சென்ற நிவேதிதா நேராகச் சென்று தன் அறையில் அடைந்து கொள்ள.. வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில்.. காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்ததும் மன அழுத்தமும் நிவேதிதாவை துவள செய்ய அப்படியே உறங்கி விட்டாள்.

 

மாலைப் போல் தான் இறங்கி கீழே வந்தவள் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறையில் முடங்கி இருக்க இவருக்கோ பசி கிள்ளியது. மெதுவாக அறைக்கு சென்று “பெரியம்மா பசிக்குது!!” என்று கூற..

 

 

மகள் செய்தது பிடிக்கவில்லை என்றாலும், அவள் நிலையிலிருந்து பார்த்தால் அதுவும் சரியே என்று எப்படி அவளைத் தேற்றுவது என்று புரியாமல் இருந்த தம்பதியினருக்கு.. அவளே வந்து பசி என்றவுடன் தாங்க முடியாமல் “புனிதா போ போ வெரசா சாப்பிட எடுத்திட்டு வா” என்று மனைவியை விரட்டினார் அழகு சுந்தரம்.

 

 

அதன்பின் வீட்டிலிருந்த மாவை வைத்து சூடாக தோசையும் அவசரத்திற்கு சட்னி வைத்துக் கொண்டு வந்து மகளுக்கு கொடுக்க.. அவள் அதை வேகவேகமாக உண்பதை பார்த்து மனது வலிக்க அமர்ந்து இருந்தார் அழகு சுந்தரம்.

 

பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது போல.. செய்த பாவத்திற்கு தன் மகள் கஷ்டப்படுகிறாள் என்று கண்கள் கலங்க துண்டியில் அவசரமாக துடைத்துக் கொண்டார்.

 

 

அதேநேரம் வீட்டில் அரவம் கேட்க தனபாக்கியம் தான் முடங்கியிருந்த அறையில் இருந்து வெளியே வந்தார். சாப்பிட்டுக்கொண்டிருந்த நிவேதிதாவை பார்க்கப் பார்க்க அவருக்கு ஆதங்கம்.. கூடவே தன் கைவிட்டு போன சொத்தை நினைத்து அப்படி ஒரு ஆங்காரம் வந்தது.

 

 

அடுத்த நிமிடம் நடு வீடு என்றும் பாராமல் தலையை விரித்து போட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்..

 

 

“என்னனு சொல்லுவேன்.. ஏதுன்னு சொல்லுவேன்..

 

எங்க வீட்டு குல விளக்கு இப்படி ஒளியில்லாம அழிச்சிட்டானே..

 

எங்கு நடக்கும் இந்த கொடுமை..

 

யாரு இனி என் மருமவளுக்கு வாழ்க்கை கொடுப்பாரு..

 

ஏற்கனவே கற்பு இழந்தவ.. இப்ப தாலியும் இழந்து நிற்கிறாளே..”

 

என்று பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைக்க..‌ ஒட்டுமொத்த குடும்பமும் அங்கேயே கூடிவிட்டது.

 

 

இந்த அத்தைக்கு வேற வேலையே இல்லை என்று தலையிலடித்துக் கொண்ட மருது, வரதனை கண் காட்டி ‘கூட்டிட்டு உள்ள போங்க!!’ என்று சொல்ல..

 

 

அவரும் அவனைப் பார்க்காமல் மேலே மோட்டுவளையை பார்த்தவாறு திரும்பி நின்று கொண்டார்.. “உன் அய்த்த பற்றி உனக்குத் தெரியாதா?” என்றவாறு..

 

 

அடுத்த அரை மணி நேரமும் தனபாக்கியம் குரல் மட்டுமே அந்த வீட்டினுள் ஓங்கி ஒலித்தது. யார் சொல்லும் சமாதானமும் வார்த்தையும் ஒரு துளி கூட கேட்காமல்..

 

 

கடைசியாக அழகு சுந்தரத்தை பார்த்தவர் “என் மருமக எப்படி இருக்கான்னு பாருங்க.. அதான் அவளே கழுத்து தாலிய தூக்கி போட்டுட்டு வந்துட்டாள்ள.. என் மகனுக்கும் மருமகளுக்கும் இந்த வீட்டுல வச்சு நீங்க கல்யாணம் பண்ணுங்க” என்று குண்டை தூக்கிப் போட்டார்.

 

 

புனிதா அதிர்ந்து “மதனி என்ன பேசுறீக?” என்றார் குரல் நடுங்க..

 

“என்ன என்ன பேசுறேன்.. அறுத்தே கட்றாய்ங்க.. அவன் வேணாம்னு தானே அவ தூக்கி போட்டுட்டு வந்தா? இனிமேலும் இப்படியே விட்டு வைச்சா அவன் என்ன வேணாலும் பண்ணுவான்.. அதனால விடிஞ்சதும் பொத்துனாப்புல ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி ரிஜிஸ்டர் பண்ணிடலாம்” என்றார்..

 

நிவேதிதா ஏற்கனவே தனபாக்கியம் பேச்சில் காளியாக மாறி கொண்டிருந்தவள்.. இப்போது பத்திரகாளியாக உருமாறி கையில் ஆயுதங்கள் இல்லாமலேயே தனபாக்கியத்தை காவு வாங்க காத்திருந்தாள்.

 

“அய்த்த.. இப்பதான் ஒருத்தன் அனுமதியில்லாமல் தாலிகட்டி இருக்கான்.. நீங்களும் அதையேதான் செய்ய சொல்றீக.. நிவேதிதா அனுமதி இல்லாமல் எந்த முடிவும் யாரு இங்க எடுக்க கூடாது” என்றான் தங்கையை காக்கும் தனயனாக அய்யனாரு போல அவள் அருகே நின்று..

 

சுவாதியும் எதையும் கண்டுகொள்ளாமல் அருகில் இருந்த மேகநாதனை உருத்தி விழித்துக் கொண்டிருந்தார். ‘இவற்றுக்கெல்லாம் காரணம் நீ ஒருவன் மட்டுமே.. என்ன நடந்தது? ஏது நடந்தது? என்று கூறாமல் நீ அமைதியாக இருக்க.. அந்த தப்பின் வீரியம் என் பெண்ணை பாடாய் படுத்துகிறது’ என்று அவர் சொன்ன பார்வை உயிரோடு எரித்தது மேகநாதனை!!

 

 

ஆனால் தனபாக்கியம் இப்போது விட்டால் பின் எப்போதும் நிவேதிதா கிடைக்கமாட்டாள் என்று விடாப்பிடியாக கல்யாணத்தை நடத்தியே ஆகவேண்டும் என்று ஒரு ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தார். அவர் அறியாதது ஒன்று அது நிவேதிதா மனது வைத்தால் மட்டுமே எதுவும் நடக்கும் என்று!!

 

 

மருதுவும் அவரது வாய்க்கு எதிர் வாய் பேசிக்கொண்டே இருக்க.. அப்போதுதான் வரதன் போன் செய்து கதிருக்கு விஷயத்தை சொன்னது.

 

 

இவர்கள் இங்கு வழக்கு அடித்துக் கொண்டிருக்க.. அடுத்த பத்தாவது நிமிடம் அவர்கள் வீட்டு வாசலில் சடசட என்று சத்தம் கேட்க “இந்த நேரத்தில் எவன்டா பட்டாசு கொளுத்துவது?” என்று இங்கே சண்டை போட்டதை மறந்து வெளியில் சண்டை போட வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வந்தான் மருது.

 

அங்கு நின்ற கதிரைப் பார்த்து..”உங்க அண்ண பண்ணி வச்சா பிரச்சனை போதாதுன்னு.. நீ வேற வந்து பிரச்சனை பண்றியா?” என்று கேட்டுக் கொண்டிருக்க..

 

 

“டேய் அந்த பான்ஸ் டப்பாவை வெளியில வர சொல்லு” என்று அவன் கேட்க..

 

 

“அதெல்லாம் அவ வரமாட்டா” என்று மருது மறுக்க..

 

 

“அவ என்னா வெளியில வரது.. நானே உள்ள போறேன்” என்றவனை மருது தடுத்து நிறுத்த.. இவர்கள் சத்தம் கேட்டு மறுபடியும் உள்ளே இருந்த குடும்பம் வெளியே வர..

 

 

“ஏய் பான்ஸ் டப்பா!! உனக்கு எவ்வளவு திமிரு தைரியம் இருந்தா தாலியை அறுத்து எங்க அண்ணன் கிட்ட வீசிட்டு வருவ..” என்று கொந்தளித்தான்.

 

 

“உன் குடும்பம் பண்ணின பாவத்துக்கு உனக்கு இப்படிப்பட்ட மாப்பிள்ளை எல்லாம் கிடைக்க நீ எல்லாம் தவம் செஞ்சிருக்கணும் தவம்.. அதுவும் எங்க அண்ணன் மாதிரி ஒருத்தன் கிடைக்க”

 

இப்ப எங்க அண்ணன் வேணாம்னு தாலியை அறுத்து போட்டுட்டு இந்த பிக்காரிய கல்யாணம் பண்ணிக்க போறியா?” என்று வசீகரனை பார்த்து கேட்க.. வசீகரனுக்கோ கையில் கரப்பான் பூச்சி எல்லாம் ஊறியது.. அதாங்க கோபத்தில் நரம்பெல்லாம் புடைத்தது..

 

அதன்பின்.. வசீகரன் அருகில் வந்தவன் “இதிலேயும் நீ இரண்டாவது தாண்டா!!” என்று அவனுள் எரிந்து கொண்டிருந்த தீயினுள் நல்ல பெட்ரோல் ஊற்றி விட்டு சென்றுவிட்டான். 

 

கதிர் வந்து கத்தி விட்டு சென்றவுடன் தன் அறைக்குச் சென்றவள், கையில் கிடைத்தவற்றை எல்லாம் பேக் செய்து கொண்டு தன்னுடைய பாஸ்போர்ட் அனைத்தையும் எடுத்துக் கொண்டு.. கீழே இறங்கி வந்தாள் நிவேதிதா. “நான் இனி எங்கே இருக்க மாட்டேன் ஊருக்கு போறேன்” என்றவள் மருதுவை பார்த்து “என்னை கொண்டு போய் ஏர்போர்ட்டில் விடு” என்றாள்.

 

 

“பாப்பா இந்த டயத்துல ஃப்ளைட் எதும் இருக்காதுடா” என்று அவன் எவ்வளவு தான் சொல்ல.. “எந்த நாட்டுக்கோ எந்த ஊருக்கோ இருக்கும். அங்கே போய் ஆஸ்திரேலியா போய்கிறேன். ஆனால் ஒரு நிமிஷம் கூட இனிமே இந்த ஊருல இருக்க மாட்டேன்” என்று பிடிவாதமாய் நிற்க..

 

 

வேறு வழியின்றி அவளை ஏற்றிக்கொண்டு ஏர்போர்ட்டை நோக்கி சென்றது மருதுவின் கார்..

 

இலக்கில்லாமல் சென்றவனின் கார் வந்து நின்றது என்னவோ கொடைரோட்டில் அன்று அவர்கள் இருந்த அதே வீட்டில்!!

 

அந்த வீட்டையே வெறித்துப் பார்த்தான் வெற்றிவேந்தன்!!

 

 

காதலே.. காதலே…

2 thoughts on “எங்கு காணினும் நின் காதலே… 18”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top