உறவே உயிரே பிரியாதே – இறுதி அத்தியாயம் பத்து
பார்வதியும் வெங்கடேசனும் சென்னை விமான நிலையத்தில் இறங்கினர்.
உள்ளுக்குள் இதய துடிப்பு வேகமாக எகிறியது. கால் டக்ஸி எடுத்து கொண்டு நேற்று போட்டு இருந்த லிஸ்டில் இருந்த அகர்வால் நெய் அல்வா , தங்க சங்கிலி , பிரேஸ்லட் , ஜீன்ஸ் பாண்ட் , ஷர்ட் , பட்டு புடவை , மற்றும் பழங்கள் என 2 லக்ஷ ரூபாய்க்கு பொருட்களை வாங்கி கொண்டு தன் தாய் வீடான அந்த “சிவகிருபை இல்லத்துக்கு ” வந்து இறங்கினாள்.
காலை மணி 8 .
தாத்தா , பாட்டி , தீபிகா , நிவேதா என அனைவரும் புது உடுப்பில் வந்து ஹாலில் அமர்ந்தனர். நிவேதாவிடம் ஆர்த்தி தட்டு ஏற்பாடு செய்து வைக்க சொல்லி இருந்தார் தாத்தா.
பர்வதம் அம்மா ஹாலுக்கு வந்து இவர்களை ஒரு தினுசாக பார்த்து “என்ன இது புது உடுப்பில் ஆர்த்தி தட்டு சகிதம் ஏற்பாடு பலமாக இருக்கே.. யாராவது முக்கியமானவர்கள் வீட்டுக்கு வருகிறார்களா ?” என கேட்டாள்.
“ஆமாம் நம் வீட்டுக்கு ஒரு முக்கிய விருந்தாளி இன்று வர போகிறார்கள்.
அவர்களை வாசல் வந்து வரவேற்கணும். நீயும் புது புடவை கட்டி தயாராகிக்கோ அம்மா ” என்று நிவேதா சொல்லவும்..
அங்கே சிவக்கொழுந்து வர , நிவேதா சட்டென அமைதியானாள்.
“என்ன நிவேதா யார் வருகிறார்கள் எனக்கு தெரியாமல் இந்த வீட்டிற்கு” என கேட்க
சிவநேசன் சொன்னார் “வராத விருந்தாளி ஆனால் இந்த வீடு மஹாலஷ்மியாய் இருந்தவள்” என சொன்னதும்
சிவக்கொழுந்து புரிந்து கொண்டார். “மேலும் யார் அவர்களை இங்கே வர சொன்னது. பந்தம் வேண்டாம் என்று முறித்து கொண்டு போனவர்கள் ஆயிற்றே .. இப்போது என்ன வந்து ஒட்டுகிறார்களாம் .. வேறு எதுவும் நம்மால் அவர்களுக்கு ஏதும் காரியம் ஆக வேண்டி உள்ளதா” என நக்கலாய் சொன்னதும் ..
தீபிகா கோபமாக ” மாமா , நான் தான் வர சொன்னேன் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் அவர்களை திரும்பி போக சொல்லிவிடுகிறேன் ” என்றாள்.
நீ ஏன் கோபமாக பேசுகிறாய் ஒன்றும் விளங்கவில்லையே என்பது போல் அவளை பார்த்தார்..
தாத்தா உடனே ” டேய் சிவா , அவ தான் உன் தங்கையின் மகள் .. என் பேத்தி .. ” என உணர்ச்சி வசப்பட்டு சொல்ல ..
“ஓ அப்படியா சங்கதி .. மகளை விட்டு ஆழம் பார்கிறாளோ இந்த பார்வதி” என கேட்டார்..
“மாமா நாங்கள் எதற்கு உங்களை ஆழம் பார்க்க வேண்டும் … உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் இப்போதே சொல்லி விடுங்கள். நான் சென்று விடுகிறேன். அம்மாவையும் அப்பாவையும் உங்கள் வீடு வாசல் படி மிதிக்காமல் போக சொல்லி விடுகிறேன். ” என வார்த்தைகளில் வெடிக்க
பாட்டி மீனாட்சி உடனே ” தீபிகா இது உன் தாத்தா சம்பாத்தியத்தில் கட்டிய வீடு. தாத்தா தானே வர சொன்னது உன் அப்பாவையும் அம்மாவையும் .” என கொக்கி போட.
சிவக்கொழுந்து ” அம்மா இவ்வளவு நாள் உன்னை பார்த்து கொண்ட என்னிடம் இல்லாத பாசம் அவள் மீது உங்களுக்கு வருகிறதா ? என்னிடம் இது பற்றி யாரும் சொல்லவில்லை. அவள் மீது நான் வெறுப்பை கட்ட விரும்பவில்லை. அதே நேரம் ஆசையாய் அவளை வரவேற்கும் மன நிலையில் நான் இல்லை” என்றார்.
“அவள் வரட்டும் உங்களை பார்க்கட்டும் பேசட்டும் .. ஏன் இங்கேயே வேண்டுமானால் இருக்கட்டும். ஆனால் என்னால் அன்று நடந்ததை மறக்க முடியாது. உடைந்த உறவு என்றும் ஒட்ட முடியாது. அவள் போனதும் சொல்லுங்கள் நான் வருகிறேன்.” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே பார்வதியும் வெங்கடேசனும் காரில் வந்து இறங்கினர்.
தீபிகாவுக்கு மிகவும் அழுகை வந்து விட்டது. என்னால் தானே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இவ்வளவு கஷ்டம் என நினைத்து கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தாள்.
ஸ்ரீராம் ஒன்றும் செய்ய முடியாமல் பேசாமல் செய்வது அறியாது நின்று இருந்தான்.
சிவநேசன் ” டேய் 25 வருடங்கள் கழித்து வரும் உன் தங்கையின் மேல் இவ்வளவு கோபம் வேண்டாம்டா. அவர்களை மன்னித்து உள்ளே அழைத்து வா. நம் உறவு வளர வேண்டும்.. இப்படியே சுருங்கி போக கூடாதடா எனக்காக செய்யடா … உன் கலீல் வேண்டுமானால் விழட்டுமா .” என கலங்கிய கண்ணீரோடு கேட்க
சிவக்கொழுந்து மனம் வெதும்பி விட்டார். நிவேதா அம்மாவை அழைத்து கொண்டு போய் ஆர்த்தி எடு .. நான் வருகிறேன் .. என்று கூற தீபிகாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
மாமா என்று ஓடி சென்று கட்டி கொண்டாள்.
சரி வாருங்கள் எல்லோரும் போய் அவர்களை வீட்டுக்கு அழைத்து வருவோம். என கூறி வாசலுக்கு விரைந்தனர்.
பர்வதம் “ஆர்த்தி எடுத்து விட்டு உள்ள வாருங்கள் என்று அழைக்க , சிவா நேசனும் வாருங்கள் மாப்பிளை .. என அழைக்க
வெங்கடேசன் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. இவ்வளவு சொந்தங்களை அற்ப பணத்துக்காகவும் சொத்துகாகவும் இழந்து வெறுமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்ததை எண்ணி வெட்கப்பட்டார்.
சிவக்கொழுந்துவின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து விட்டார். என்னை மன்னித்து விடுங்கள் மைத்துனர் என்று..
சிவக்கொழுந்து “உங்களை பார்க்கும் முன்னர் வரைக்கும் கோபம் இருந்தது. இப்போது அனைத்தும் உங்கள் நேரில் பார்த்தவுடன் மறந்து விட்டது.
நாம் அனைவரும் இனி எந்த வேறுபாடும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்வோம்.” என்றார்.
தாத்தா ” ஸ்ரீராம் , தீபிகா இங்கே வந்து ஒன்றாய் அருகில் நில்லுங்கள். ” என்று கூறி அவர்களை ஆசிர்வதித்தார்.
சிவனின் அருளால் பிரிந்த உயிர் உறவுகள் மீண்டும் இணைத்து விட்டன.
சுபம் ..