ATM Tamil Romantic Novels

இரகசிய மோக கனாவில் 15,16&17

அத்தியாயம் 15

 

இரவின் இருட்டில் மின்மினி பூச்சிகள் கூட்டமாக பறந்து செல்ல, அதனை பின் தொடர்ந்து சென்றாள் ஆருஷா. அங்கே தன் எதிரில் தன்னைப் போலவே உருவம் நிற்பதை போல் கண்டாள். அவள் அசையும் போதெல்லாம் அவ்வுருவமும் அசைந்தது. அவ்வுருவத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தவளை நோக்கி, அவ்வுருவம் முன்னே நகர்ந்து வந்தது. அப்போது தான் அவள் அறிந்து கொண்டாள், அவ்வுருவம் ஆருஷாவைப் போன்றிருக்கும் பூவிழியாழின் உருவம் என்று. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிசயித்துப் கொண்டே, தூரத்தில் கும்மென்ற இருட்டின் நடுவில் வீற்றிருக்கும் ருத்ர தாண்டவ மூர்த்தியின் ரூபத்தில் இருக்கும் கால பைவர் கோயிலை நோக்கி நடந்து சென்றவள், திருவுருவத்தின் முன்னே இருக்கும் தாமரை மலரின் இதழ் போன்ற ஐந்து சங்குகளை இணைக்குமாறு தோன்ற, அதனை ஒன்றோடு ஒன்று இணைந்து வைத்த அடுத்த நொடி, பூமிக்குள் இருந்து ஈட்டி ஒன்று மேலே வந்தது. அதன் முனையில் முழுநிலா போன்ற உருவத்தில் மாணிக்கம் இருக்கவே, அதனை தொட முயன்றாள் ஆருஷா. என்னே ஓர் அதிசயம்! அவளது கைகளில் சிக்காமல் மீண்டும் மண்ணுக்குள் புதைந்து போனது. அப்போது அவ்விடத்தில்,

 

“இரு துருவங்கள் ஒரு சமயத்தில் இம்மாணிக்கங்களைக் கொண்டு இணையுமாயின் தத்தமது விதியும் ஒன்றோடொன்று இணையுமாக!” என்று அசரீரி ஒலிக்கவே, சட்டென்று இருவரும் தத்தமது இடங்களில் இருந்து விழித்தெழுந்தனர். அவர்கள் கண்டது கனவல்ல; நிஜம் என்று நிரூபிக்கும் வகையில், அவ் ஈட்டியில் இருந்த குங்குமம் அவர்களது கையில் ஒட்டியிருக்க, அதன் காரணம் என்னவென்று புரியாது தவித்தனர். விடியற்காலையில் எழுந்த ஆருஷா, தனது இடையை வளைத்து தழுவியவாறு தூங்கிக் கொண்டிருந்த ராக்கியைப் பார்த்ததும், அவனது கையை மெல்ல தன் இடையில் இருந்து விலக்கினாள். அறையில் இருந்த காகிதத்தில் தான் கனவில் பார்த்த காட்சிகளை வரையத் தொடங்கினாள் ஆருஷா. அவ்வரைபடத்தை வரைந்து முடித்ததும், அதனை பார்த்தவளுக்கு காலபைரவர் சிலையின் கீழ் இருக்கும் சூலத்தினை உற்று பார்த்தவளுக்கு, அதனை எங்கோ பார்த்திருப்பதை போன்று தோன்றவே, அதனை தன் கண்முன்னால் கொண்டுவர முயன்றாள். இறுதியில் தான் இவ்வுலகம் வரக் காரணமான புதையல் பெட்டியின் மேல் இருக்கும் அம்மையப்பன் சிலையின் கையில் இருக்கும் சூலமும், தலைமேல் இருக்கும் பிறைநிலாவும் ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் அப்பிறைநிலாவிற்கும் கனவில் வந்த பிறைவடிவிலான மாணிக்கக்கல்லிற்கும் என்ன தொடர்பென்று தான் புரியாது‌ யோசித்துக் கொண்டிருந்தவளின் இடையை வளைத்தது இரும்பு கரம் ஒன்று. 

 

“இந்த நேரம் இங்க என்னடிப் பண்ற? ஆமா இது என்ன படம்? நீயா வரைஞ்ச?” என்று அடுத்தடுத்த கேள்விக்கணைகளால் தன் மனைவியை தொலைத்துக் கொண்டிருந்தான் ராக்கி. 

 

“என்னுடைய சொப்பனத்தில் இவையெல்லாம் வந்தன நாதா! எனக்கு ஞாபகம் இருக்கும் பொழுதே ‌இதனை வரைந்து வைக்க வேண்டுமென்று தோன்றியது. அதனால் தான் உடனே வரைந்து வைத்தேன்.”

 

“ரொம்ப அழகா, உன்னைய மாதிரி வரைஞ்சுருக்க. ஆனா இப்போ என்கூட வந்து ஒரு குட்டி தூக்கம் போடு.”

 

“மன்னிக்க வேண்டுகிறேன் நாதா! இன்று நானும் ராஜாமாதாவும் கோயிலுக்கு சென்று வர இருப்பதினால், என்னால் உங்கள் அருகில் வர இயலாது நாதா!”

 

“ஏன்டி ஊர்ல இருக்குறவங்க எல்லோரும் தான் கோயிலுக்கு போறாங்க. அவங்க எல்லோரும் அவங்கவங்க புருஷனை பட்டினி போட்டா கோயிலுக்கு போறாங்க?”

 

“அய்யோ நாதா! நான் எங்கே தங்களை பட்டினி போடுகிறேன்.‌ இப்படியெல்லாம் அபத்தம் பேசாதீர்கள் நாதா!”

 

“அடியேய் பட்டினின்னா சாப்பாடு போடுறது மட்டும் கிடையாது. இது வேற வகையாக பட்டினி. இது முழுசா உன்னைய கடிச்சு சாப்பிடாம தீராது.”

 

“அய்யோ! தாங்கள் நரமாமிசம் சாப்பிடுவீர்களா?! கடவுளே! இப்படிப்பட்ட ‌அரக்கனிடம் என்னை சிக்க‌ வைத்துள்ளீர்களே?!”

 

“என்னைய பார்த்தா உனக்கு அரக்கன் மாதிரி தெரியுதா?”

 

“பின்னே இல்லையா?! வேண்டாம் எனதருகில் வராதீர்கள்.”

 

“வந்தா என்னடி பண்ணுவ?” என்றவன் அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு கட்டிலை நோக்கி செல்லும் போது, அறையின் கதவு தட்டப்பட்டது. 

 

“ஆரு! அம்மாடி ஆரு! இன்னைக்கு சீக்கிரமே கோயிலுக்கு போகணும்மா. விடியற்காலைல அபிஷேகத்துக்கு சொல்லிருக்கோம்.” என்று வேலுநாச்சியார் கூற,

 

“இதோ வந்துவிட்டேன் ராஜமாதா.” என்றவருக்கு பதில் அளித்த ஆருஷா, ராக்கியின் கைகளில் இருந்து திமிறி, குதித்திறங்கியவள், குளியலறைக்குள் ஓடி மறைந்தாள். 

 

“முதல்ல இந்த கிழவிய நாடு கடத்தணும்.” என்று வேலுநாச்சியாரைப் பற்றி யோசித்தவன், தனது கைபேசியை எடுத்து சின்னாவிற்கு அழைப்பு விடுத்தான்.

 

“ஹேய் சின்னா!’ 

 

“மாப்ள!”

 

“ஒரு கொசு தொல்ல ரொம்ப நாளாத் தாங்கலடா. அதை நசுக்கி தூக்கி எறியலாம்னு பார்த்தா, உன் தங்கச்சியோட அழுமூஞ்சி ஞாபகம் வந்து செய்யவிடாம தடுக்குது. அதுனால நீ என்னப் பண்ற, ஆன்மீக சுற்றுலா மாதிரி ஒன்னு ஏற்பாடு பண்ணி, அந்த கொசுவை அதுல வைச்சு பார்சல் பண்ற.”

 

“நீ ஒன்னும் கவலைப்படாத மச்சி. அந்த கொசுவை மூட்டை கட்டி கண்காணாத இடத்துக்கு அனுப்பி வைச்சுடுறேன்.” என்று பதில் அளித்த சின்னா வேலுநாச்சியாரின் ஆன்மீக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தான். 

 

குளியலறைக்குள் சென்ற ஆருஷாவிற்கு அப்போது தான் ஞாபகம் வந்தது,

 

“அய்யோ! மாற்று உடை எடுத்து வரவில்லையே?! இப்போது என்ன செய்வது?!” என்று புலம்பியவள்‌ மெதுவாக கதவை திறந்து பார்க்க, அறையில் ராக்கியை காணவில்லை. 

 

“நல்ல வேளை அவர் இங்கு இல்லை.” என்றவள் மெல்ல கதவை திறந்ததும், அச்சிறு இடைவேளையில் புகுந்து கொண்டு உள்ளே வந்தவனை பார்த்து அதிர்ந்து நின்றாள் ஆருஷா. 

 

“நாதா! நீ..நீங்க இங்க..” என்றவளின் பேச்சு தந்தியடிக்க,

 

“ம்ம்.. நான்.. சொல்லு..” என்றவளை நோக்கி அவனது கால்கள் முன்னேற, அவனை பார்த்துக் கொண்டே ஆருஷாவின் கால்கள் பின்னே நகன்றன. சுவற்றில் சென்று முட்டி நின்றவளின் இருபுறமும் கையூன்றி நின்றிருந்தவனின் மூச்சு காற்று அவளின் முகத்தில் மோத, மங்கையவளின் கால்விரல்கள் சட்டென மடங்கின. வெண்ணிலவை கருமேகக்கூட்டங்கள் மறைத்திருப்பது போல் ஆருஷாவின் முகத்தை மறைத்திருந்த, அவளது கருங்கூந்தலை தன் விரல் கொண்டு விலக்கி, காதுமடலோடு ஒதுக்கினான். அவளது நெற்றியோடு தன் நெற்றியோடு முட்டி நின்றான்.

 

“ஏன்டி என்னைய பார்த்து இந்த பயம் பயப்புடுற? உன்னையெல்லாம் ராஜபரம்பரைன்னு சொன்னா, யாராவது நம்புவாங்களா? பதில் சொல்லுடி.” என்றவனின் இதழ்கள் அவளது தோள் வளைவில் புதைய, மூச்சை அடக்கி விரைத்து நின்றாள் ஆருஷா. தன் மார்போடு சிறு துண்டை இறுக்கி கட்டியிருந்தவளின், இதயத்துடிப்பை அறிந்தவனது இதழ்களில் மந்தகாசமான புன்னகை ஒன்று உதிர்த்தது.

 

“எதுக்கு டி இப்படி வேக வேகமா மூச்சு விடுற? ரிலாக்ஸ் பேபி! ரிலாக்ஸ்!” என்றவனின் கைவிரல்கள் மங்கையவளின் கைவிரல்களோடு இணைந்து இறுக்கிக் கொண்டன.

 

“உன் அப்பன் வீட்டுல வேலையே செய்ய மாட்டியாடி? கை மட்டுமில்ல நீயே பஞ்சு மெத்தை மாதிரி மெத்து மெத்துன்னு இருக்கடி.” என்றவனின் இதழ்கள் அவளது ஒவ்வொரு விரல்களையும் தொட்டு செல்ல, கூச்சம் தாங்காது வயிற்றை எக்கி நெஞ்சை நிமிர்த்தியவளின் இரு கொய்யா கனிகளும் அவனது மார்பினை குத்தி நிற்க, இன்னும் என்னை எத்தனை முறையானாலும் குத்திக் காயப்படுத்து என்பது போல் அவைகளை இன்னும் இறுக்கி, நெருங்கி நின்றான். அவளது காதுமடலின் மூக்கை தேய்த்தவனின் மூச்சுக்காற்று அவளது காதினில் மோத, தனது கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். காதுமடலில் இருந்து கன்னம் வரை இதழின் ஈரத்தினால் அர்ச்சித்தவன், அவளது இதழை நெருங்கியதும், அவைகளை தொட்டும் தொடாத தூரத்தில் நின்று கொண்டான். தாமரை மலரென முகம் மட்டுமல்லாது உடல் முழுவதும் வெட்கச் சிவப்பினால் சிவந்து நின்றிருந்தவளை பார்வையால் ரசித்துக் கொண்டிருந்தான் ராக்கி. தனது இதழை முற்றுகையிடப் போகின்றானோ என்ற நினைப்பில் அவனுக்காக மங்கை தன்னை மறந்து காத்திருக்க, மோகத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பவளை தொடாது தள்ளி நின்று கொண்டான் ராக்கி. தன்னை நெருங்கி நின்றிருந்தவன், இன்னுமா தன்னை தீண்டாமல் இருக்கின்றான் என்று சந்தேகத்தினால் தனது கண்களை திறந்து பார்த்தவளின் பார்வையில், எதிரே தனது கைகளை கட்டியப்படி தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கணவன் விழ, தன் முகத்தை திருப்பி வேறு திசையில் பார்த்தவளது பார்வையில் அங்கே சுவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த பல்லி விழுந்தது. அதனை கண்டதும் பயத்தில் “நாதாஆஆஆஆஆ!” என்று அலறியபடி ராக்கியின் இடுப்பில் ஏறி அமர்ந்து கொண்டவள், அவனது தோள் வளைவில் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள் ஆருஷா. 

 

“ஏய்! என்னடி? ஏன் கத்துன?” என்றவன் கேட்டதும், “பல்லிஇஇஇஇஇஇ..” என்று திக்கித் திணறி கூறியவற்றை பார்த்து, “ஹஹஹஹஹா..” என்று சிரித்தான் ராக்கி. 

 

“எதுக்கு சிரிக்கின்றீர்கள்? அதை அவ்விடத்தில் இருந்து போகச் சொல்லுங்கள்.”

 

“ம்ம்ம்..”

 

“என்ன ம்ம்ம்? தயவு செய்து போகச் சொல்லுங்களேன்.”

 

“சொல்லலாம், ஆனா அதோட பாஷை எனக்கு தெரியாதே!”

 

“ஆஹா! ஊரையே மிரட்டி விரல் நுனியில் வைத்திருப்பவருக்கு, சிறுபல்லியை விரட்ட முடியாதா? அதைப் போகச் சொல்லுங்கள்.” என்று கண்ணை மூடிக் கொண்டு கூறிவளின் மேனியில் இருந்து வரும் நறுமணத்தை தன் நாசியில் ஏற்றி தனக்குள் நிரப்பிக் கொண்டான். 

 

“சென்று விட்டதா? கூறுங்கள் நாதா! பல்லி சென்று விட்டதா?” என்றவளின் முகத்தில் கைவிரல்களால் கோலமிட்டவாறே, “ம்ம்ம்..” என்றவன் கூறியதும், தனது ஒற்றை கண்ணை மட்டும் திறந்து சுவற்றைப் பார்த்தவள்,

 

“நல்ல வேளை, பல்லி சென்று விட்டது.” என்று கூறியவாறே, ராக்கியின் இடுப்பில் இருந்து கீழே இறங்கியவள் கட்டியிருந்த துண்டை ராக்கியின் கைகடிகாரம் பிடித்திழுக்க, அந்தோ பரிதாபம், அத்துண்டும் அவளின் உடலில் இருந்து விடைபெற்று கீழே விழுந்திருந்தது. தன்னை தழுவி இருந்த துண்டு கீழே விழுந்த மறுநொடி, “ஐய்யோ!” என்றவாறு தனது முகத்தை மூடிக் கொண்டாள் ஆருஷா. அவளை முழுதாக பார்வையில் வருடியவாறே, அவளின் அருகில் வந்தவன், கீழே கிடந்த துண்டை எடுத்து அவள் மீது போர்த்திவிட்டு, அவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டான். 

 

“முகத்தை மட்டும் மூடினா எப்படி? முழுக்க மூட வேணாமா?” என்றவாறே கட்டிலில் தூக்கிப் போட்டவன், அவள் மீது படர்ந்து, தனது ஆக்கிரமிப்பை தொடங்கும் நேரம் மீண்டும் கதவு தட்டப்படவே,

 

“உன்னோட ராஜமாதாவை கொல்லப் போறேன் பாரு. எப்பப் பாரு இங்கேயே மோப்பம் பிடிச்சுட்டு சுத்திட்டு இருக்கு.” என்று ராக்கி கூறிய மறுநொடி,

 

“மச்சி அனு வந்துருக்கா” என்ற சின்னாவின் குரலில் சட்டென அவளை விட்டு நீங்கியவன், படபடவென தன்னை தயாராக்கினான். தன்னையே விழி மூடாது பார்த்திருந்த ஆருஷாவை சிறிதும் திரும்பிப் பார்க்காமல் கீழே இறங்கிப் சென்றான் ராக்கி. யார் இந்த அனு? அவளது பெயரை கேட்டதும் மின்சாரம் பாய்ந்தது போல் ஏன் இந்த ஓட்டம்? எதுவும் புரியாது குழம்பிய ஆருஷா, கோயிலிற்கு செல்வதற்காக கிளம்பி வெளியே வந்தாள். அங்கே அழகிய இளம்பெண்ணை அணைத்தவாறு சோபாவில் அமர்ந்திருந்த தனது கணவனை பார்த்து அதிர்ந்து போய் நின்றாள் ஆருஷா. ஒரு பொருள் நம் கைக்குள் இருக்கும் வரை அதன் அருமை தெரிவதில்லை. அது நம்மை விட்டு செல்லும் போது தான் அதனுடைய விலைமதிப்பைப் பற்றி அறிய நேரிடும். இனியாவது தன் கணவனின் அருமையை உணர்ந்து கொள்வளா ஆருஷா?

 

அத்தியாயம் 16

 

“அடடே அனு! எப்படா வந்த?” என்று வந்த மரகதவல்லியை ஓடி வந்து கட்டிக் கொண்டாள் அனுராகா.

 

“பாட்டிஇஇஇஇ.. என்ன இப்படி துரும்பா இளைச்சுட்டீங்க? அத்தான் உங்களுக்கு சரியா சாப்பாடு போடுறதில்லயா? இல்ல இந்த வயசுலேயும் டயட்ல இருக்கீங்களா?” என்ற அனுவின் காதினைப் பிடித்து திருகினான் ராக்கி. 

 

“ஏய் வாலு! நீ இன்னும் மாறவேயில்ல. அப்படியே இருக்க.”

 

“அட ஆமா அத்தான்! ரெண்டு கண்ணு, ரெண்டு காது, ஒரு வாய்..”

 

“என்னது ஒரு வாயா? ஆயிரம் வாய்க்கு சமம்; இந்த ஒரு வாய்.”

 

“பாருங்க பாட்டி இஇஇஇஇ..” என்ற அனு, ராக்கியை பார்த்து, “போடா அத்தான் பொத்தான்” என்று கூறிவிட்டு ஓடியவளை விரட்டிப் பிடிப்பதற்காக அவள் பின்னே ஓடினான் ராக்கி. கீழே நடப்பவற்றை எல்லாம் மேலிருந்து பார்த்தபடி இறங்கி வந்த ஆருஷாவின் மேல் மோதினாள் அனுராகா.

 

“நீ.. நீ.. நீங்க?”

 

“நான் பூ.. பூ.. ஆருஷா”

 

“என்னது பூருஷாவா? அப்படின்னு ஒரு பெயரா?”

 

“அய்யோ மக்கு அனு! அது பூருஷாயில்ல, ஆருஷா. உன்னைய அவளுக்கு சரியா தெரியாதில்ல. அதுனால தான் கொஞ்சம் பதட்டமா இருக்கா. இல்ல பேபி!”

 

“பேபி?”

 

“எஸ். ஷி இஸ் மை பேபி. ஐ மீன் மை வொஃய்ப்.” என்ற ராக்கி, ஆருவின் தோள்களை சுற்றி கையிட்டு நிற்க,

 

“என்னது வொஃய்பா? யூ.. யூ.. ஆஆஆஆஆ.. பாட்டிஇஇஇஇ.. இப்படி என்கிட்ட சொல்லாம எப்படி அத்தானுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்? அப்போ நான் உங்களுக்கு ஒன்னுமே இல்லயா? எனக்குன்னு இந்த உலகத்துல இருக்குற ஒரு சொந்தம் நீங்க மட்டும் தான். நீங்களே என்னைய ஒதுக்கி வைச்சிட்டீங்கல்ல.” என்று அழுதவளின் தலையில் தட்டிய ராக்கி,

 

“ரொம்ப அழுகுற மாதிரி சீன் போடாத அனு. உனக்கு இதெல்லாம் செட்டாகல.” என்றவனை பார்த்து முறைத்த அனுராகா,

 

“கொஞ்ச நேரம் அழுகுற மாதிரி நடிக்கக்கூட விடமாட்டீங்களா அத்தான்?” என்ற அனுராகா, ஆருஷாவின் கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொண்டாள். 

 

“என்னக்கா ஒரே குழப்பமாயிருக்கா? என் பெயர் அனுராகா. இதோ உங்கப் பக்கத்துல நிக்குறாரே மிஸ்டர் ராதாகிருஷ்ணன். இவரோட அக்கா மைதிலியோட ஒரே ஒரு பொண்ணு. இத்தனை நாளா அமெரிக்கால படிச்சுட்டுருந்தேன். உங்க எல்லாருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் யார்கிட்டேயும் சொல்லாம நைட்டோட நைட்டா ஃப்ளைட் பிடிச்சு ஓடி வந்துட்டேன். உங்க கல்யாணத்தை பத்தி எனக்கு அத்தான் முன்னாடியே சொல்லிட்டாரு.” என்ற அனு, ராக்கிக்கும் ஆருஷாவிற்கும் இடையே புகுந்து கொண்டாள். நடப்பவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேலுநாச்சியாரை பரிதாபமாக பார்த்தாள் ஆருஷா. 

 

“பார்க்க பலி கொடுக்கப் போற ஆட்டுக்குட்டி மாதிரியே முழிச்சுட்டு நிக்குறாளே! இப்ப நான் தான் ஏதாவது பண்ணி, இவளை இங்கிருந்து தள்ளிட்டு போகணும் போல” என்று முணுமுணுத்த வேலுநாச்சியார் ஆருஷாவின் அருகே வந்தார்.

 

“ஆரு! கோயிலுக்கு போகணும்னு சொன்னா மாப்ள. உங்க பேர்ல அர்ச்சனை பண்ண சொல்லி அபிஷேகத்துக்கு வேற கொடுத்துருக்கா. நாங்க போயிட்டு சீக்கிரம் வந்துடுறோம்.” என்று கூறிய வேலுநாச்சியாரை கூர்மையாக பார்த்தவன்,

 

“கோயிலுக்கு போறதை நான் என்னைக்குமே வேணாம்னு சொன்னதேயில்ல. ஆனா இந்த விரதம் இருக்க சொல்ற வேலையெல்லாம் வைச்சுக்காதீங்க.” என்றவனை பார்த்து புன்னகைத்த வேலுநாச்சியார்,

 

“அடேய் ராக்கி! எனக்கே அட்வைஸ் பண்றியா? நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டா. இன்னைக்கு நான் வைக்குற ஆப்புல, இனிமே தினமும் உனக்கு படுக்கை வெளில தான்டா.” என்று முணுமுணுத்து கொண்டிருந்தவரை பார்த்த அனுராகா,

 

“அத்தான் இவங்க யாருன்னு நீங்க எனக்கு சொல்லவேயில்லயே?!” என்று கேட்க,

 

“அதை நானே சொல்றேன் அனுமா. எனக்கு இருக்குற அறிவுக்கு இந்த ஆல் இன் ஆல் வேலுநாச்சியார் அமெரிக்கால இருக்க வேண்டியவ; ஹூம்.. இப்போ இந்த ஆருஷாவோட ராஜமாதாவா இருக்கேன்.” என்றவரைப் பார்த்து சிரித்த அனுராதா,

 

“ஆரு அக்காவுக்கு நீங்க ராஜமாதான்னா, எனக்கும் நீங்க ராஜமாதா தான். நானும் உங்களை அப்படியே தான் கூப்பிடுவேன்.” என்று கூற, 

 

“தாராளமா கூப்பிடுமா.” என்றார் வேலுநாச்சியார்.

 

“என்னமோ கோயிலுக்கு போகணும்னு சொல்லிட்டுருந்தீங்களே?! நானும் வரட்டுமா?!”

 

“வாம்மா..” என்று வேலுநாச்சியார் கூற, “நோ..” என்றான் ராக்கி.

 

“அத்தான் ப்ளீஸ். ரொம்ப நாள் கழிச்சு இந்தியா வந்துருக்கேன். எனக்காக என்னைய அலோ பண்ணுங்க ப்ளீஸ்.” என்று ராக்கியைப் பார்த்து கூறிய அனுராகா,

 

“ராஜமாதா! ஒரு ட்டூ மினிட்ஸ். குளிச்சுட்டு வந்துடுறேன்.” என்று வேலுநாச்சியாரிடம் கூறிவிட்டு மாடியை நோக்கி சென்றவளைப் பார்த்து,

 

“அனுமா! உன்னோட லக்கேஜை மேல இடதுபுறம் இருக்குற ரூம்ல வைக்க சொல்லிருக்கேன்.” என்று மரகதவல்லி கூற,

 

“தாங்க் யூ பாட்டி!” என்றவாறே ஓடி மறைந்தாள் அனுராகா. அனுராகா சென்றதும், வெளியே வந்த ராக்கி, அங்கே தோட்டத்தில் நின்று கொண்டிருந்த சின்னாவை நோக்கிச் சென்றவன், மெல்லிய குரலில் பேசலானான். 

 

“சின்னா!” 

 

“மச்சி..”

 

“நீயும் இவங்கக்கூட கோயிலுக்கு போ.”

 

“மச்சி இன்னைக்கு உனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. நீ எப்படி தனியா?”

 

“நான் என்ன குழந்தையா தொலைஞ்சு போறதுக்கு. இந்த ராக்கியை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும். மயங்க் போலீஸ்ல இருந்து தப்பிச்சுட்டான். எந்த நேரத்திலும் எது வேணா நடக்கலாம். மைதிலி அக்காக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேத்தணும்.”

 

“ஆனா மயங்க் எப்படி அவ்வளவு செக்யூரிட்டியை தாண்டி தப்பிச்சுருக்க முடியும்?”

 

“மல்கோத்ரா..”

 

“அவனா? அவனுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்துச்சு? அவனை நீ அன்னைக்கே போட்டுருந்தேனா, இன்னைக்கு அந்த மிருகம் வெளிய வந்துருக்காது.”

 

“எல்லோருக்கும் வாழ்க்கைல ஃபர்ஸ்ட் சான்ஸ்னு ஒன்னு இருக்கும். அதை அந்த மல்கோத்ரா மிஸ் பண்ணிட்டான். இனிமே அவனுக்கு வாழ்க்கைல எதுக்கும் சான்ஸே கொடுக்கப் போறதில்ல. அதுக்கு இன்னைக்கு நடக்கப் போற இந்த டீலிங் ரொம்ப முக்கியம். இந்த டீலிங் மட்டும் சரியா அமைஞ்சா, புது ராஜ்யத்தையே அமைக்கலாம்.”

 

“இவ்வளோ ரிஸ்க் எடுத்து அவங்க கோயிலுக்கு போறதுக்கு பதிலா, அவங்க வீட்டுலயே இருக்கலாமே. நீ ஏன் அவங்க கோயிலுக்கு போறதுக்கு பர்மிஷன் கொடுத்துருக்க? பேசாம அவங்க வீட்டுலயே இருக்கட்டுமே?!”

 

“கல்யாணமாகி முதல் தடவை எனக்காக கோயிலுக்கு போறேன்னு நிக்குறவளை போகாதேன்னு சொல்ல மனசு வரல மாப்ள. நீ அவங்க கூட இருக்கும் போது எனக்கென்ன கவலை? அவங்களை பத்திரமா பார்த்தேக்கோ.” என்ற ராக்கியின் கண் முன்னே அமைதியே உருவான மைதிலியின் முகம் வந்து போனது. தனது துறைமுகத்தை நோக்கி ராக்கி செல்ல, அருகில் இருக்கும் காலபைரவர் கோயிலுக்கு சென்றாள்‌ ஆருஷா. ஆருஷா, அனுராதா, வேலுநாச்சியார், மரகதவல்லி மற்றும் சின்னா, அவர்களுடன் பாதுகாப்பினரும் சென்றிருக்க, அபிஷேகம் நல்லபடியாக முடிந்தென கோயிலை சுற்றி வரும் வழியில், உடல் முழுவதும் நீலகண்டனின் திருநீற்றை அணிந்து, சடாமுடியோடு இருக்கும் சித்தர் ஒருவர் அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவரை சுற்றி அருள்வாக்கு கேட்பதற்காக பலரும் அமர்ந்திருக்க, அதனை கண்ட மரகதவல்லியும்,

 

“அங்க இருக்குற சித்தர் அருள்வாக்கு சொல்றாருன்னு நினைக்குறேன். நம்மளும் அங்க போய் கேட்டுட்டு வருவோமே?! வாங்க போலாம்.” என்று கூற அதனை மறுத்தான் சின்னா,

 

“பாட்டி, ராக்கி கோயிலுக்கு போயிட்டு நேரா வீட்டுக்கு தான் வரச்சொன்னான். டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரம் கிளம்புங்க.” என்றவனை முறைத்துக் பார்த்தார் மரகதவல்லி. 

 

“டேய் ஏன்டா இப்படி அநியாயம் பண்றீங்க? ஒரு தடவை சித்தரை பார்த்துட்டு போலாம்டா.” என்று மீண்டும் கூறியவரை யோசனையுடன் பார்த்தான் சின்னா. அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் மரகதவல்லி. 

 

“தாங்க்ஸ்டா சின்னா. வாங்க! வாங்க! அவன் சரின்னு சொல்லிட்டான். போய் பார்க்கலாம்.” என்றவர் அனைவரையும் இழுத்துக் கொண்டு அந்த சித்தரைக் காணச் சென்றார் மரகதவல்லி. இதுவரை தன்னை சுற்றி இருந்தவரை கண்திறந்து பார்க்காமல் இருந்தவர், ஆருஷா வந்து அமர்ந்ததும், தன் கண்களை திறந்து,

 

” வா பெண்ணே! உன் வருகைக்காக காலம் காத்திருக்கின்றது. நின் கண்ட சொப்பனத்தில் அம்மையப்பனோடு உதிக்கும் பிறைநிலாவை கொண்டு சேர்ப்பாயேயானால் நின் போகும் வழிக்கான வெளிச்சம் கிட்டும்.” என்று கூறியவர், தன் கண்களை மூடி சிறிது நேரம் தியானித்தவர், “ஓம் நமச்சிவாய!” என்று கூறி தன் கையை நெற்றியில் வைத்து மந்திரம் சொன்ன சித்தரின் கையில் பிறைவடிவிலான மாணிக்கங்கள் இருந்தன. 

 

“நின் மனதறியும் பாதையில் செல்ல, இவை உதவும்.” என்று கூறி அம்மாணிக்கங்களை ஆருஷாவின் கையில் கொடுத்தவர்,

 

“மனதில் கொள் மகளே! காலனை காலத்தால் வெல்ல நின் மதி சகாயம் செய்யும்!” என்றுரைத்து விட்டு அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டார். அங்கிருந்த அனைவருக்கும் அவர் என்ன கூறினார் என்பது விளங்கவில்லை. ஆனால் ஆருஷாவிற்கு நன்றாக புரிந்தது. அவர் கொடுத்த மாணிக்கங்களை தனது தாலிக்கொடியோடு கோர்த்துக் கொண்டாள் ஆருஷா. 

 

“அந்த சாமியார் சொன்ன எதுவும் எனக்கு புரியவேயில்ல. உங்களுக்கு புரிஞ்சுதா அக்கா.” என்று கிள்ளை மொழியில் பேசியபடி வந்தவளின் நோக்கி பாய்ந்து வந்தன தோட்டாக்கள். சட்டென சுதாரித்து கொண்ட சின்னா, அனுராகாவை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தவன், தன் முதுகிற்கு பின்னால் இருந்த துப்பாக்கியால் தோட்டாக்கள் வந்த திசையை நோக்கி சுட ஆரம்பித்தான். தனக்கு அருகில் இருந்த புதருக்குள் அனைவரையும் ‌மறைந்திருக்குமாறு அறிவுறுத்தி விட்டு தாக்குதல் நடத்தியவர்களை நோக்கிச் சென்றான் சின்னா. 

 

“சின்னா! போகாதீங்க. எனக்கு பயமாயிருக்கு.” என்ற அனுராகாவை திரும்பி தீர்க்கமாக பார்த்துவிட்டு மேலும் முன்னேறிச் சென்றான் சின்னா. காலனை தேடிச் செல்லும் சின்னாவை மீட்க வருவானா ராக்கி? 

 

அத்தியாயம் 17

 

“சின்னா! சின்னா!” என்று அவனை கூப்பிட்டபடியே சின்னாவின் பின்னே ஓடப் போன அனுராகாவின் கையைப் பிடித்து தடுத்தாள் ஆருஷா.

 

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸூஸூஸூ.. சத்தம் போடாதே. இங்கே வந்து விடப்போகிறார்கள்.”

 

“வந்தா வந்துட்டு போட்டும். இதே மாதிரி தான் என் அம்மாவும் சொல்லிட்டு போனாங்க. கடைசில வரவேயில்ல. சின்னாவையும் நான் இழக்க மாட்டேன்.” என்று சின்னாவை நோக்கி ஓடியவளின் பின்னே ஓடினாள் ஆருஷா.

 

“சற்று நில்! ஓடாதே! அனுராகா ஓடாதே.” என்றவாறே ஓடிக் கொண்டிருந்த ஆருஷாவையும் அனுராகாவையும் துப்பாக்கியுடன் நான்கு பேர் சூழ்ந்து கொள்ள, செய்வதறியாது முழித்தனர் இருவரும். திடீரென அந்த கூலிப்படையினரின் கைகளில் தோட்டாக்கள் பாய, அலறியபடியே அவர்கள் அனைவரும் கீழே விழும் போது புயலென அங்கு வந்து சேர்ந்தான் சின்னா. அங்கிருந்த கட்டையை கொண்டு கண்மூடித்தனமாக அனைவரையும் தாக்கிக் கொண்டே,

 

“ஆரும்மா அவங்களை கூட்டிட்டு இங்கிருந்து போ.. போம்மா..” என்று கத்த,

 

“உங்களை இப்படியே விட்டுட்டு என்னால போக முடியாது. உங்களை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்.” என்று அனுராகாவும் கத்தினாள். பொறுமையிழந்த சின்னா,

 

“ஆரும்மா, இந்த பைத்தியக்காரியை கூட்டிட்டு போம்மா. என்னைய பத்தி கவலைப்படாத. இவனுங்கள ஒரு கைப் பார்த்துட்டு கண்டிப்பா உங்களைத் தேடி வருவேன்.” என்றவாறே அவர்களை தாக்க வந்தவர்களை தொடர்ந்து தடுத்துக் கொண்டிருந்தான் சின்னா. 

 

“நீ என்னுடன் வா..” என்ற ஆருஷா, அனுராகாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல முயன்ற போது,

 

“நான் பைத்தியக்காரி தான். உங்களுக்காகவே வாழும் நான் பைத்தியக்காரி தான். ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுக்கோங்க. நீங்கயில்ல இந்த அனுராகாவும் இருக்கமாட்டா..” என்றவாறே ஆருஷாவின் இழுத்து இழுப்பிற்கெல்லாம் அவள் பின்னோடு ஓடினாள் அனுராகா.

 

“டேய் இவனை விடுங்க டா. நாம போட வேண்டியது அவளுங்கள. போய் அவளுங்களை இழுத்துட்டு வாங்கடா.” என்று கூலிப்படை தலைவன் கத்த, சின்னாவை சுற்றியிருந்த கூலிப்படையினர் அனைவரும் ஆருஷாவையும் அனுராகாவையும் துரத்திக் கொண்டு ஓட, துரத்துபவர்களுக்கு முன்னால் துப்பாக்கியுடன் வந்து நின்றிருந்தார் மரகதவல்லி. 

 

“நிக்காதீங்க! ஓடுங்க! ஆரு சீக்கிரம் அனுவை கூட்டிட்டு ஓடு!” என்று ஆருஷாவிடம் கூறியவாறே கூலிப்படையினரை சுடத் தொடங்கினார். ஆருஷாவோ அனுவை கூட்டிக் கொண்டு அருகே இருந்த காட்டுக் கோயிலுக்குள் நுழைந்தவளின் கண் முன்னே தெரிந்தது அந்த காலபைரவர் சிலை. அதனை பார்த்ததும் கனவில் பார்த்த அத்தனை இடங்களும் ஞாபகம் வரத் தொடங்கின. அங்கிருந்தவற்றை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி பாய்ந்து வந்த கத்தியைப் பார்த்த அனுராகா,

 

“நோ.. அக்காஆஆஆஆ..” என்று கத்திக் கொண்டே, ஓடி வந்தவள் ஆருஷாவை தள்ளிவிட, அனுராகாவின் கையை பதம் பார்த்தது அவர்கள் வீசிய கத்தி. அதனைப் பார்த்த ஆருஷாவிற்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ, காலபைரவர் கையில் வைத்திருந்த வாளை எடுத்தவள், தங்களை தாக்க வந்தவர்களின் முன்னால் கம்பீரமாக ஒரு ராணியைப் போல் நின்றாள். கையில் அடிபட்டு நின்றிருந்த அனுராகாவை தாங்கிப் பிடித்தவள், காலபைரவரின் காலடியில் அமர வைத்தவள். 

 

“உங்கள் அனைவருக்கும் இவளது உயிர் வேண்டுமாயின் அது என்னை மீறித் தான் தங்களுக்கு கிடைக்கும். முடிந்தால் என்னை வீழ்த்துங்கள்.” என்றவள் காற்றின் வேகத்திற்கு ஈடாக தன் வாளை சுழற்றினாள். தங்களை நெருங்கியவர்களை எல்லாம் தனது கத்தி முனையால் தாக்கி முன்னேறியவளை நோக்கி பாய்ந்து வந்த தோட்டாக்களை தன் வாளினால் சாமர்த்தியமாக தடுத்துக் கொண்டிருந்தவளின் கண்ணில் மண்ணை தூவினான் ஒருவன். கண்ணில் விழுந்த மண்ணோடு போராடிக் கொண்டிருந்தவளின் கைகளை இருபக்கமும் இருவர் பிடித்திருக்க,

 

“என்ன சொன்ன? உன்னை தாண்டித் தான் அவளை தொட முடியும்னு சொன்னேல. உன்னை கொன்னுட்டு அவளையும் உன்கூடவே அனுப்பி வைக்குறேன்.” என்று கூறிய ஒருவன், தன் கையில் இருந்த கத்தியை, ஆருஷாவின் வயிற்றில் குத்துவதற்காக ஓங்கியவனின் கையை பதம் பார்த்தன எங்கிருந்தோ பாய்ந்து வந்த தோட்டாக்கள். திரும்பிப் பார்த்தவர்களின் விழிகள் பயத்தில் விரிந்தன. ஆருஷாவின் கைகளை பிடித்திருந்தவர்களின்‌ கைகள் தோட்டாக்களால் துளைக்கப்பட்டதும், அவளை விட்டு சிதறி ஓடினர். ஆருஷாவின் கண்ணில் மண்ணை தூவியவனின் கையை உடைத்தவன்,

 

“உன்னோட தைரியத்தை பாரட்டியே ஆகணும். ஏன்னா எவ்ளோ தைரியம் இருந்திருந்தா என் பொண்டாட்டி கண்ணுல மண்ணள்ளி போடுவ? அதுக்கு உனக்கு கிஃப்ட் கொடுக்க வேணாம்?!” என்று கூறியவாறே தன் கையிடுக்கில் மாட்டிக் கொண்டிருந்தவனின் கழுத்தை திருவினான் ராக்கி. அடுத்ததாக அங்கிருந்தவர்களை எல்லாம் வெறித்தனமாக அடித்தவனைப் பார்த்த கூலிப்படையினர்,

 

“டேய் ராக்கி பாய்டா! ஓடு, ஓடு” என்றவாறு சிதறி ஓடினர். அவர்களை எல்லாம் துரத்தி பிடித்தவன், மிருகமாய் வேட்டையாடினான். 

 

“இனியொரு தரம் என் குடும்பத்து மேல கை வைக்கக்கூட எவனும் யோசிக்கணும்.” என்றவாறே அனைவரையும் அடித்து நொறுக்கி முடித்தவன், அனுரேகாவின் அருகே கண்களில் விழுந்த மண்ணை துடைத்துக் கொண்டிருந்த ஆருஷாவின் அருகே வந்த ராக்கி, அவளின் கண்ணிமைகளை பிரித்து கண்ணின் கருமணிகளில் தன் இதழ் குவித்து ஊதினான். தன் கைக்குட்டையை அங்கிருக்கும் நீரில் நனைத்து ஆருஷாவின் முகம் முழுவதும் துடைத்து விட்டான். 

 

“எப்பா என்னா ஃபைட்டு? ஜான்சிராணி தான் போ. ஆமா, இவ்ளோ அழகா சண்ட போடுறியேடி, அப்புறம் எதுக்கு டி என்னைய பார்த்து பயந்து நடுங்குற?” என்றவாறே அவளது விழிகளையும் முகத்தையும் சுத்தம் செய்து கொண்டிருக்க,

 

“மச்சி! நீ சொன்ன மாதிரியே அவனுங்க எல்லாத்தையும் பேக் பண்ணி மல்கோத்ரா வீட்டுக்கு பார்சல் அனுப்பிட்டேன்.” என்றவாறே வந்தான் சின்னா. ராக்கி ஆருஷாவை கவனித்துக் கொண்டிருக்க, சற்று தள்ளி அருகில் இருந்த பாறையில் கையில் கட்டுடன் அமர்ந்திருந்த அனுராகாவை பார்த்தான் சின்னா.

 

“காயம் ரொம்ப ஆழமா இருக்கும் போலவே?! டாக்டர் கிட்ட போய் டிடி இன்ஜெக்ஷன் போட்டுடலாம்.” என்ற சின்னாவை பார்த்து புன்னகைத்த ராக்கி,

 

“உன் தங்கச்சி நல்லாதான் இருக்கா. சும்மா காத்து மாதிரில சுழண்டு அடிச்சா.” என்று கூற,

 

“நான் ஆருஷாவை சொல்லல; அவளை காப்பாத்த போன அனுராகாவை சொன்னேன்.” என்று சின்னா கூறினான். 

 

“அதிகப்பிரசங்கி. எல்லாமே முந்திரி கொட்டத்தனம். ஒழிஞ்சுக்க சொன்னா பக்கம் பக்கமா டயலாக் அடிச்சுட்டு இருக்கா. ஆரு மட்டும் இல்லேனா, இந்த அரைலூசு இந்நேரம் பரலோகம் போயிருக்கும்.”

 

“மச்சி அப்படி சொல்லாதடா. ஆரு மேல் விழப் போற கத்தியைத் தடுத்திருக்காடா. இப்படி எல்லாம் பேசி, அவளை கஷ்டப்படுத்தாத.”

 

“ஓ! உங்க ஆளை சொன்ன உடனே கோபம் பொத்துகிட்டு வருதோ? கொஞ்சமாவது மண்டைல மசாலாவை வைச்சுக்கச் சொல்லு. மூளைய மியூசியத்துல வைச்சுட்டு வரச்சொல்லாத.” என்று ராக்கியும் சின்னாவும் எதிர்வாதம் செய்து கொண்டிருக்க, காலபைரவரின் முன்னால் இருக்கும் மேடையில் உள்ள ஐந்து தாமரை மொட்டுக்களையும் சுற்றி விட்டு ஒன்று சேர்த்தாள் ஆருஷா. சட்டென மேடையின் அடியில் இருந்த திரிசூலம் மேடையில் மேல் வரவே, அதில் பிறை நிலவை கொண்ட மாணிக்கங்கள் இருந்தன. அதனை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டவள், காலபைரவரை வணங்கி நிற்கும் போது அவளின் காதினில், ‘ஒன்பது கிரகங்களும் நேர்கோட்டில் வர இன்னும் இரு வாரங்களே உள்ளன’ என்ற அசரீரி கேட்க, கண்ணில் நீர் வழிய நின்று கொண்டிருந்தாள் ஆருஷா. இப்போது அவள் செல்லும் நேரம் நெருங்கி விட்டது என்பதை நினைத்து மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக, ராக்கியை நினைத்து மனதில் பாரம் தான் ஏறியது. அவனை பற்றி நினைக்கும் போதெல்லாம் அவனை விட்டு பிரிய முடியாதவாறு அவளது காலில் இரும்பு குண்டுகள் பிணைக்கப்பட்டதை போல் உணர்கின்றாள். காலபைரவர் முன்னிலையில் கண்களில் கண்ணீரோடு நின்றிருப்பவளின் அருகே வந்த ராக்கி,

 

“எதுக்குடி அழுகுற? உன் புருஷன் உன்னைய விட்டுட்டு அவ்வளவு சீக்கிரம் போயிடுவானோன்னு நினைச்சு அழுகுறியா?” என்று கேட்க, சட்டென அவனது வாயை தன் கை கொண்டு மூடினாள் ஆருஷா.

 

“விளையாட்டிற்காகக் கூட இவ்வாறெல்லாம் பேசாதீர்கள். கோயிலில் எப்போதும் நல்ல தேவதைகள் நம்மை சுற்றி இருப்பார்கள். நாம் கடவுளிடம் வேண்டுவன அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று எப்போதும் ததாஸ்து கூறுவார்கள். ஆதலால் நாம் பேசுவன யாவும் நல்லவைகளாக இருத்தல் வேண்டும். இவ்வாறு அபசகுணமாக பேசாதீர்கள். தாங்கள் நூறு வருடம் தீர்க்கமான ஆயுள் அருளோடு வாழ வேண்டும்.”

 

“உன்னைய விட்டு அவ்வளவு சீக்கிரம் பிரிஞ்சு போகமாட்டேன் டி. உன்னையவும் போக விடமாட்டேன். நூறு வருஷம் நான் உன் கூட வாழணும். என் உயிர் இந்த உடலை விட்டு பிரிந்தால் உன்னையும் கூடவே கூட்டிட்டு தான் போவேன். நீயில்லாம நான் வெறும் கூடு தான்டி.” என்றவள் குவித்திருந்த கையில் முத்தமிட,

 

“என்ன செய்கிறீர்கள்? இது கோயில் இங்கு இப்படி எல்லாம் செய்யக்கூடாது.” என்று கூறி விலகி நின்றிருந்தவளை தன் அருகில் பிடித்து இழுத்தவன்,

 

“இது கோயில்னு எனக்கும் தெரியும். இங்கக்கூட உன்னைய விட்டு விலகி இருக்க என்னால முடியல டி.” என்றவாறே அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றான் ராக்கி. காரில் ஏறும் முன் சின்னாவையும் அனுராகாவையும் பார்த்தவன், தான் வந்திருக்கும் காரின் சாவியை சின்னாவிடம் கொடுத்து,

 

“இவளை நீயே ஹாஸ்பிட்டல் கூட்டுட்டு போ. அப்புறம் என்ன பேசணுமோ க்ளியரா பேசிடுங்க. அடுத்த வாரம் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்.” என்று விட்டு ஆருஷாவுடனும் பாட்டிகளுடனும் மற்றொரு காரில் ஏறி சென்று விட்டான் ராக்கி. 

 

“வண்டில ஏறுடி!”

 

 “முதல்ல இந்த கல்யாணத்துல உங்களுக்கு சம்மதமான்னு சொல்லுங்க. அப்புறம் கார்ல ஏறுறேன்.”

 

“அனு என்னோட பொறுமைய ரொம்ப சோதிக்காத. ஒழுங்கா கார்ல ஏறிடு.”

 

“இல்லேன்னா என்ன பண்ணுவீங்க?” என்று அனுராகா கூறிய மறுநிமிடம், அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு காரில் திணித்திருந்தான் சின்னா. 

 

“வர, வர உன்னோட சுட்டித்தனம் ரொம்ப ஜாஸ்தியாகிடுச்சு. சின்ன குழந்தை மாதிரி எல்லாத்துக்கும் அடம்பிடிக்குற.” என்று கூறிவாறே காரை எடுத்த சின்னாவின் தொடையில் நறுக்கென கிள்ளினாள் அனுராகா.

 

“ஏன்டி கிள்ளுற ராட்சசி?”

 

“பின்ன அத்தான் கல்யாணத்தை பத்தி பேசுற வரைக்கும் என் பக்கம் திரும்பி பார்க்கவேயில்ல. இப்போ மட்டும் இவ்வளோ வார்த்தைகள் எங்கிருந்து வந்துச்சு? பத்து வருஷம் உன்னையவே மனசுல நினைச்சுட்டு இருக்கேன். கொஞ்சமாவது என்னையப் பத்தி யோசிச்சு பார்த்தியா. என் அம்மா இறந்ததுக்கு அப்புறம் நான் எப்படி உடைஞ்சு போயிட்டேன்னு தெரியுமா? அப்பக்கூட நீ என்னைய தேடி வரவேயில்ல. ஒவ்வொரு தடவையும் நீ எனக்கு போன் பண்ணுவன்னு எவ்வளவு தூரம் எதிர்பார்த்து ஏமாந்து போயிருப்பேன் தெரியுமா? ஏன்டா இப்படி பண்ண?” என்று கண் கலங்கிய அனுராகாவின் கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டவன்,

 

“நட்பு, நன்றி உணர்வு, விஸ்வாசம்.. இப்படி இதுல நீ எதை வேணாலும் பதிலா எடுத்துக்கலாம். எப்ப நீ என்னைய விரும்புறேன்னு சொன்னியோ, அப்ப என் கண் முன்னாடி வந்தது இதெல்லாம் தான். தெருவுல அநாதையாக கிடந்த என்னைய ராக்கி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கலாம். ஆனா, எந்தவிதமான பாரபட்டமும் பார்க்காம சோறு போட்டு என்னைய ஆளாக்கி விட்டது மைதிலியக்கா. உண்ட வீட்டுக்கு என்னால் ரெண்டகம் பண்ண முடியாது. காதலா நட்பான்னு வந்தா, எனக்கு என்னோட நண்பன் தான் முக்கியம்; அவனோட நட்பு தான் முக்கியம். இதை புரிஞ்சுக்க முடிஞ்சா புரிஞ்சுக்கோ; இல்லேன்னா உன் இஷ்டம்.” என்று பேசிக்கொண்டே காரினை செலுத்த,

 

“ஒரு லவ்வரை சமாதானப்படுத்தத் தெரியல. உனக்கெல்லாம் எதுக்குடா கல்யாணம்?” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் அனுராகா.

 

“கரெக்ட். அப்போ பண்ணிக்காத. நல்ல இளிச்சவாயன் மாட்டுவான்; அவனை கல்யாணம் பண்ணிக்கோ.” என்றவனின் காதை திருகினாள்.

 

“ஒழுங்கா உசுரோட ரெண்டு பேரும் வீடு போய் சேரணும்னா என்னைய விட்டு தள்ளி உட்காரு. இல்ல, எந்த மரத்துலயாவது கொண்டு போய் பார்க் பண்ணிடுவேன்.” என்ற சின்னாவை முறைத்துக் கொண்டே அமைதியாக அவனுடன் மருத்துவமனைக்கு சென்று மருந்திட்டுக் கொண்டாள் அனுராகா.

 

காதலை தடுப்பது, அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பதை போன்றதாகும். ராக்கியை விட்டு பிரிந்து போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே, அவனது நினைவுகளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் ஆருஷா. வேலுநாச்சியாருக்கு கொடுத்த வாக்கிற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகத்தினை நடத்தி, அவனை தன்னிடம் இருந்து தள்ளி வைத்தாள். அவனை தள்ளி வைத்து, அவள் தான் வலியை அனுபவித்தாள். மங்கையிவள் மன்னனுக்கு விடை கொடுப்பதை பற்றி நினைத்திருக்க, அதனை மன்னவன் நிறைவேற விடுவானோ?

 

2 thoughts on “இரகசிய மோக கனாவில் 15,16&17”

  1. Wowwwwww veryyy niceeeeeeeee epii ❤️💐❤️🥰 intresting epiiiii ❤️🥰🥰🥰 quickly upload nxt epiii 💕💕💕💕

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top