மாமனே 17
அத்தனை சொத்துக்களும் ஒத்த ஆண் வாரிசு… காதலித்தவள் மறுத்த காரணத்தினால் இத்தனை வருடங்களாக சொந்த ஊருக்கு வரவே இல்லை!
எத்தனையோ முறை அக்காக்களும் மாமாக்களும்.. ஏன் அம்மாவும் அப்பாவும் மன்றாடியும் கூட மனம் இறங்காதவன் அவன்!! ஆனால் இன்று வருகிறான் காரணம்… அவனது மனதை மாற்றிய அவன் மனைவி! மலர்விழியாள்!! மாணிக்கவேலின் விழியாள்!!
கல்யாணம் என்பது வெறும் கமிட்மெண்ட் மட்டும் கிடையாது! அதை தாண்டிய உள்ளார்ந்த அன்பு நேசம்!!
எதிர்பாராத விதமாய் திருமணம் செய்து கொண்டாலும் மலர்விழிக்கும் மாணிக்கவேலுக்கும் ஒருத்தருக்கு மற்றவர் மேல் ஏற்பட்டிருந்த அந்த நேசமானது.. மூங்கில் போன்று கீழே ஆழமான வேர்களைக் கொண்டது.
இன்னும் வருங்காலத்தில் இந்த அன்பு ஆத்மார்த்தமாகி.. நேசம் நெருங்கி வான் வரை உயர்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை!!
ஆனால் வெறும் மகிழ்ச்சி மட்டும்தான் என்றால் சலித்து விடுமே! சர்க்கரை பொங்கல் மட்டுமே உண்பது போல…
ஊடல், கோபம், சண்டை, சச்சரவு இது அனைத்தும் சேர்ந்ததுதானே அறுசுவை! ஊடல் இல்லாத கூடல் மட்டும் எங்கணம் இனிக்கும்?
ஊருக்குள் நெருங்கியதுமே அவனுக்கு பழைய நினைவுகள் வந்து வாட்ட கண்களை அழுந்த மூடிக்கொண்டான். முன்னிருக்கையில் டிரைவரோடு அவன் அமர்ந்திருக்க, பின்னால் மூன்று பெண்களும்.. கடைசியில் ஜீவன் நன்றாக உறங்கிக் கொண்டு வந்தான்.
இவர்களின் தெரு உள்ளே நுழைந்ததுமே ஆரம்பித்தது சண்ட மேளம்!! கூடவே சிவகாசியே மொத்தமாய் வந்த இறக்கியது போல அத்தனை விதமான வேட்டுகள்.. பட்டாசுகள் காதை மட்டும் அல்ல வானையும் பிளந்தது!
*ஐயையோ யாரோ வீட்டுக்குள்ளார வெடிய கொழுத்தி போட்டுட்டாய்ங்க மாமா… ஓடுங்க ஓடுங்க எல்லாரும் ஓடுங்க!” என்று தூக்கத்திலேயே அலறி எழுந்து உட்கார்ந்தான் ஜீவன்.
“சும்மா கம்முனு இருடா! ஊருக்கு வந்தாச்சு. நம்மளை தான் இத்தனை தடபுடலா வரவேற்கிறாய்ங்க” என்று தம்பியின் தலையில் கொட்டிய தேன் அவனைத் திட்ட…
“ஏய்.. ஏய்.. சந்தடி சாக்குல என்ன நம்மளனு சொல்ற.. உன்னைய எல்லாம் வரவேற்க இப்படி பண்ணல!! எங்க மாமாவையும் அய்த்தையையும் வரவேற்கத்தான் இத்தனை ஏற்பாடு!!” என்று அக்கா குட்டியதில் வலித்த தலையை தேய்த்துக் கொண்டே அவளை வெறுப்பேற்றினான் ஜீவன்.
“ரொம்ப தாண்டா!!” என்று வள்ளியும் தேனும் முகத்தை சுழிக்க… “இப்படியே முகத்த சுழிச்சுக்கிட்டே இருங்க ஒரு நாளு பாரு ஃபேவிகுயிக் வாங்காட்டு வந்து அப்படியே ஒட்ட வச்சுடுறேன். அப்புறம் எப்பவும் இப்படி சுழிச்ச மூஞ்சியோட தான் திரிவீங்க இரண்டு பேரும்” என்று கடுப்படித்தான் ஜீவன்.
என்னதான் அக்கா என்ற பாசம் இருந்தாலும், இவர்களின் திடீர் திருமணத்தால் அவர்கள் மனதில் வருத்தம் இருப்பது புரிந்தாலும், எப்பொழுதும் அதையே சொல்லிக்கொண்டு அடிக்கடி முகத்தை திருப்பிக் கொண்டிருக்கும் இவர்களின் செயல்கள் சுத்தமாக பிடிக்கவில்லை ஜீவனுக்கு!!
“முதல்ல வீட்டுக்கு வரட்டும் இவிய்ங்கள பேசக்கூடாது.. இவிய்ங்கள பெத்த புண்ணாயவதிங்க.. என் பெரியம்மாக்கள பேசணும்! அவிய்ங்களுக்கு இரண்டு கொடுத்த இவளுக அடங்கிருவாளுங்க!” என்று கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்துக் கொண்டான்.
மலர்விழிக்கும் புரிந்து தான் இருந்தது இவர்களின் இந்த முகம் திறப்பதற்கு காரணம். ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!! மிஞ்சி மிஞ்சி போனால் இவளை விட ஓரிரு வயது கூட இருப்பார்கள். இவர்களிடம் இதே போல் திரும்பி முகத்தை காட்ட ஒரு நிமிடம் ஆகாது. ஆனால்… அவள் தன் கணவனுக்காக பார்த்தாள்.
உண்மைதானோ?? திருமணம் என்று ஒன்று நடந்து விட்டால் பெண்கள் மனதில் முதிர்ந்தவர்களாகி விடுகிறார்கள் போல.. எதனையும் தன் கண் கொண்டு ஆராயாமல் கணவனின் கண் மூலமாகவும் பார்த்து நடக்க பழகிக் கொள்கிறார்கள். ஆனால் இதெல்லாம் பெண்களுக்கு மட்டுமே கைவந்த கலை.. எல்லா ஆண்களிடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பதென்பது ஆக சிறந்த முட்டாள்தனம்!!
அவர்கள் தெரு ஆரம்பித்ததில் இருந்து பந்தல் போட்டு இருந்தது. “மாமா.. தாத்தா செமையா கலக்கி இருக்கிறாரு போல..” என்று ஜீவன் போடப்பட்டிருந்த அலங்கார பந்தலையும் அதில் அழகுக்காக இருந்த விளக்குகளையும் பார்த்து வாயை பிளந்தான்.
அதுவும் கார் அலங்கார பந்தல் உள்ளே நுழைய இரு பக்கமும் சண்ட மேளங்கள் முழங்க.. இதுவரை இருந்த பழைய கசப்பு மறைந்து சிரிப்பு கூட வந்தது மாணிக்கவேலுக்கு “இந்த ஐயா செய்ற அலப்பறை இருக்கே!” என்று சிரித்துக்கொண்டான்.
ஆனாலும் அதன் பின்னே “இவங்க என்ற திருமணத்தை எவ்வளவு தூரம் எதிர்பார்த்து இருந்துயிருக்காங்க!” என்று அவரின் அன்பும் புரிய மனம் கசிந்தது தந்தையின் பால்…
இவர்கள் வந்து சேரும் முன் மலர்விழியின் சொந்தங்களும் ஏற்கனவே வந்து இறங்கி இருக்க.. மாணிக்கவேலையும் மலர்விழியையும் அருகருகே வைத்து நாத்தனார் முறையுள்ளவர்கள் ஆலம் சுற்றினர். அதுவும் விதவிதமாய்!!
அதன்பின் கொழுந்தியாக்கள் என்று ஆலம் சுத்தியது மட்டுமல்லாமல் அதற்கு எல்லாம் தட்டில் காசு போடு என்று மாணிக்கத்தின் நிறைமாத பர்ஸை பிரசவித்த பெண் போல ஆக்கினர்.
அதுவும் கடைசியாக வந்த சின்ன அக்காவின் பெண் நறுமலரோ “மாமா.. எனக்கு வந்து நீங்க ஜிபே பண்ணிடுங்க மாமா.. கைல கொடுத்த எங்க அம்மா புடிங்கிக்கும்” என்று அவள் தெளிவாக உரைக்க “அடிப்பாவி..!” என்று மற்ற அக்காக்கள் எல்லாம் சிரித்தனர்,
“இவளுக்கு இருக்கும் தெளிவு நமக்கு இல்லாம போச்சே!” என்று மற்ற அக்கா பெண்களும் வியந்தனர்
இப்படி சொந்தங்களின் சந்தோச ஆர்ப்பாட்டத்தோடு உள்ளே நுழைந்த மகனை.. அதுவும் மனைவியோடு இணைந்து வந்தவனை கண்களில் நீர் பெருக பெருக ஆசையோடு பார்த்தனர் சுந்தரவேலு மற்றும் அல்லிமலர் தம்பதி!!
என்னதான் வெண்கல குரலில் அந்த ஊரையே அரட்டை உருட்டி மிரட்டினாலும் அல்லிமலரும் ஒரு தாய் தானே! தன் தாய்க்கும் மகனின் இந்த திருமண கோலத்தை பார்க்க எத்தனை ஏங்கி இருப்பார்? அதுவும் இவனின் பிடிவாதத்தால் அத்தனை நொந்து இருந்தவர்களுக்கு மனைவியோடு மகன் வந்து நின்ற கோலம் அத்தனை தித்திப்பாக இருந்தது!! மனம் சந்தோஷத்தில் நிரம்பி வழிந்தது!!
இருவரும் சேர்ந்து பெற்றோர் காலில் ஆசிர்வாதம் வாங்க “ஐயா நீங்களும் வந்து நில்லுங்க!” என்று சுந்தரவேலு அழைக்க.. திருமாறன் வேதாமடி தம்பதிகளும் வந்து நிற்க அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.
பெண்ணின் புகுந்த வீட்டை பார்த்து சற்று மிரண்டு தான் போயிருந்தார் வேதாமணி. சொந்தங்கள் மட்டுமல்ல சொத்துக்களும் நிறையவே!!
“எம் பொண்ணு எப்படி சமாளிக்க போறானு தெரியலையே மதனி?” என்று தன் நாத்தனாரிடமும் அண்ணியிடமும் புலம்பிக் கொண்டே இருந்தார் இந்நேரம் வரை..
ஆனால் மாப்பிள்ளையோடு மகளை பார்த்ததும் அனைத்தும் மறந்து கண் நிறைந்து இருக்க.. மகளை கட்டி தழுவிக் கொண்டவரின் கண்களில் இப்பொழுதும் கண்ணீர் தான்! ஆனால் ஆனந்த கண்ணீர்!!
“பொண்ணு மாப்பிள்ளை எல்லாம் வந்தாச்சு தானுங்களே.. பூசைய போட்டு விடலாமே சுந்தரம்” என்று ஒரு பெருசு சொல்ல..
“ஆமாங் பெரியப்பா.. போட்டுடலாமுங்க!” என்று தாலிச் செயின் உடன் கூடிய திருமாங்கல்யம் மற்றும் மணமக்களின் புது துணிகளையும் வைத்து பூஜை அறையில் வைத்து பூஜை செய்யப்பட்டது.
பூஜை முடித்ததும் இவர்கள் இருவரையும் சேரந்து தீபாராதணை காட்ட சொன்னார்கள். தன் கையோடு பிணைத்திருந்த மனைவியின் கைகளை பார்த்தவனுக்கு மனம் நிறைந்திருக்க.. நல்ல மணையாளை கொடுத்த கடவுளுக்கு நன்றி கூறினான் மாணிக்கவேல்.
இருவரும் சற்று நேரம் கண்மூடி பிரார்த்தனை செய்தனர், எதிர்வரும் அவர்களின் நல் வாழ்க்கையை வளமாக்க வேண்டி…
அதன் பின் அவர்கள் பக்க சடங்குகள்.. இவர்கள் பக்க சடங்குகள் என்று அதைப் பற்றி பேசி விருந்து உபச்சாரம் என்று தடபுடலானது.
அல்லிமலர் “மலரு…” என்று தொண்டை கிழிய அழைக்க.. ஐந்து மலர்களும் அடுத்த நிமிடம் அவர் முன்னால் ஆஜர்!! அதாவது மகள்களும் மருமகளும்…
“ஏய்.. உங்களை எங்கடி கூப்பிட்டேன். உங்கள கூப்பிடனும்னா ஒளி ஞானம் கனி எழிலுனு தானடி கூப்பிடுவேன். மலர்னா அது என்ற மருமகளாக்கும்! போங்க.. போங்க.. வம்பு பேச்சை பேசாம வேலைய பாருங்க” என்று மகள்களை அவர் விரட்ட..
“பாத்தியாடி.. அம்மா மருமக வந்ததும் நம்மளை எல்லாம் கழட்டி விட்டுடுச்சு! இத்தனை நாளும் நாம தானடி பார்த்தோம்.. வந்து ஒரே நாளுல மாமியாரையும் முடிஞ்சு வைச்சு கிட்டா…” என்று பெரிய மகள் அங்கலாயக்க..
“அதுல உங்களுக்கு என்னடி ஆக வருத்தம்! நீங்க வேணும்னா உங்க மாமியார்கள முடிஞ்சு வைச்சுக்கோங்க!” என்று அல்லி கூறினார்.
“ம்க்கும்.. எங்க மாமியார முடிஞ்சு வைக்குனும்னா அதுக்கு நானு இவளும் மேலாக தான் போகனும். எங்க ரெண்டு பேரும் மாமியாரும் போய் சேர்ந்து அஞ்சு வருஷம் ஆச்சு” என்றனர் எழிலும் ஞானமும்…
“எங்களுக்கெல்லாம் அந்த வேலையே கிடையாது! முடிஞ்சா எங்க மாமியாரு எங்களை முடிஞ்சு வச்சுக்கிடட்டும்” என்று கனியும் ஒளியும் ஹைபை கொடுத்துக் கொண்டனர்.
“இந்த வாய் மட்டும் இல்லைன்னு வச்சுக்கோங்களேன்…” என்று அல்லிமலர் ஆரம்பிக்க..
“பின்ன.. அல்லி மலர் பொண்ணானு யாரும் கேட்க கூடாது பாருமா.. அதுக்கு தான் இத்தனை வாய்!
தாயைப் போல பிள்ளை நூலை போல சேலை.. சரி.. சரி.. ஏதோ மருமகளோட ரகசியம் பேசணும்னு தானே கூப்பிட்ட.. பேசு பேசு போ” என்று இவர்கள் நால்வரும் வெளியே வந்துவிட.. இந்த புரிதலை கண்டு புன்னகையோடு நின்றிருந்தாள் மலர்விழி.
“இங்க வா அம்மிணி.. இந்த நகையெல்லாம் பாரு” என்று மருமகளை அழைத்து அவர்களது பரம்பரை நகையை காட்டினார் அல்லிமலர்.
இவர்களின் சம்பாஷனை அருகில் இருந்த மற்றவர்களுக்கும் கேட்க தான் செய்தது. “நல்ல வேலை மதனி உங்க பொண்ணுக்கு வாய்ச்ச நாத்தனார் எல்லாரும் நல்ல விதமா இருக்காங்க.. அந்த வகையில் நம்ம பொண்ணு கொடுத்து வைச்சவ” அமுதா கூற அவரும் தலையசைத்துக் கொண்டார்.
“அப்படி எல்லாம் பொசுக்குனு சொல்லாதீக! நாத்தனாரா இருக்க வேண்டிய நேரத்துல நாத்தனாராவும் இருப்போம்” என்று போற போக்கில் கனி சொல்லிவிட்டு செல்ல..
“அய்யய்யோ மதனி…” என்று வாயைப் பிளந்தார் வேதாமணி.
அதற்குள் ஒளி வந்து “அவ சும்மா சொல்லிட்டு போறா.. பயப்படாதீங்க நாங்களும் எப்படியாவது எங்க தம்பிக்கு ஒரு நல்லது நடக்காதானு ஏங்கினவங்க.. அதுக்கு தான் இவ்வளவு நாள் காத்துகிட்டு இருந்தோம்! அது உங்க பொண்ணு மூலமா நிறைவேறி இருக்கு. அப்புறம் எப்படி அவளை நாங்க வருத்த நினைப்போம்? அதுவும் இல்லாம.. அவளை எங்க தம்பி பொண்டாட்டியா பார்த்தா தான் நாத்தனார் குணம் வரும். எங்க மகளா பாத்தா? அதெல்லாம் எப்படி தோணும்? எங்க பொண்ணுங்கள யாரைவது எங்க தம்பிக்கு கொடுத்திருந்தால்.. எப்படி இருப்பமோ அப்படித்தான் இருப்போம்! கவலைப்படாதீங்க!!” என்று ஒளி ஆறுதல் சொல்லி செல்ல…
அருகில் இருந்த மகேஸ்வரியின் கையைப் பிடித்து ஒரே அழுகையை வேதாமணி.
“அட ச்சீ.. இப்ப எதுக்கு அழுகுற நீனு” என்று அண்ணன் மனைவியை தேற்றினார் மகேஸ்வரி.
“நான் நினைக்கிறேன் இப்படி ஒரு நாத்தனார் அவளுக்கு கிடைக்கலைன்னு நினைச்சு அழுகுறா போல..” என்று அமுதா மாட்டி விட..
அதுவரை அழுத வேதாமணி “அய்யய்யோ அப்படிலாம் இல்ல மதனி… எங்க அமுதா மதனி சும்மா சொல்றாங்க..” என்று அவசர அவசரமாக கூறினார். ஏனென்றால் இம்மூவருக்குள்ள இந்த நாத்தனார் பிரச்சினைகள் இதுவரை வந்தது கிடையாது என்பதை விட, வந்தாலும் அதை தோளில் சுமந்து கொண்டு திரிய மாட்டார்கள்!!
இம்மாதிரி அனுசரித்து புரிந்து நடந்து கொள்ளும் உறவுகள் கிடைப்பதெல்லாம் பெரும் வரம்!!
ஆனால் உண்மை என்னவென்றால் இந்த வரங்கள் நிறைய பேருக்கு கிடைப்பதில்லை!!
மறுநாள் அதிகாலை சுப வேளையில் அவர்களது குலதெய்வமான கங்கம்மா கோவிலில் அவர்கள் முறைப்படி வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே அவன் கட்டியிருந்த தாலி மஞ்சள் கிழங்கு கயிற்று தான்.
அதை தற்போது கழட்டி அம்மனின் தல விருட்சத்தில் கட்டி விடுமாறு ஒரு மூத்த பெண்மணி சொல்ல.. அப்படியே செய்தாள் மலர்விழி!
கட்டிவிட தான் முனைந்தாள், ஆனால் அது என்னவோ தொட்டில் போல தளர்ந்து தொங்கி ஆட..
“அட அல்லி.. இந்த பொண்ண நா தாலிய கட்ட சொன்னா தொட்டில் கட்டிட்டு வந்துட்டா பாரேன்… உன்ற மருமக ரொம்ப வெவரம் தான்! அடுத்த பத்தாவது மாசம் உன்ற வீட்டில் தொட்டில் ஆடுவது உறுதி தான்” என்றதும் பெண்கள் எல்லாம் சிரிக்க.. இவளுக்கோ முகம் செந்தாமரையாக நாணத்தில் சிவந்து வெட்கத்தில் மலர்ந்தது.
மணமக்களை வாழ்த்த ஊரில் உள்ள அனைவரும் வந்திருக்க.. அதில் நம் பசுபதி நாட்டாமையும் ஒருவர். அவர் மணிமேகலையில் தந்தை!!
ஒருவித தயக்கத்தோடு தான் அவரை எதிர்கொண்டான் மாணிக்கவேல். ஆனால் அவருக்கு அப்படியெல்லாம் இல்லை. என்ன இருந்தாலும் நாட்டாமை அல்லவா? பரந்த மனது கொண்டவர்.
“ரொம்ப நாள் சோடியா நல்லா இருக்கோணும் தம்பி நீங்க.. அம்மிணிய பத்திரமா பாத்துக்கோங்க” என்று மொய் கவர் ஒன்று கொடுத்தவர், ஒரு பரிசுப் பொருளையும் கொடுத்து “இது என்ற மாப்பிள்ளைங் கொடுக்க சொன்னாருங் தம்பி” என்று கொடுத்துவிட்டு சென்றார்.
யார் என கேள்வியோடு பார்த்த மனைவியிடம் “அன்னைக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் பார்த்தோம் இல்ல அவங்க அப்பா அம்மிணி!” என்றான்.
கல்யாணம் மூன்று நாட்கள் கொண்டாட்டமாக நடக்க வேண்டும் என்று சுந்தரவேலு எதிர்பார்த்தார்ஹ அதனால் திருமணம் முடிந்த அடுத்த நாள் திரும்பவும் கோவிலில் பொங்கல் வைத்து பங்காளிகளுக்கு விருந்து.. அடுத்த நாள் கறி விருந்து என்று ஏற்கனவே அழைக்கும் போது அழைத்து விட்டார். அதனால் மூன்று நாட்களும் அவரது வீட்டில் சொந்த பந்தங்களின் கூச்சல்! கும்மாளம்! கொண்டாட்டம்!!
தன் வயதை எல்லாம் மறந்து சுந்திரவேலு மருமகன்களை வைத்துக் கொண்டு விருந்துக்கு தேவையானவற்றை கவனித்துக் கொள்ள.. இங்கு அல்லிமலரும் மகள்களின் உதவியோடு விருந்தினர்களை கவனித்துக் கொண்டார்.
இதில் களஞ்சியமும் கதிரேசனும் கல்யாணத்துக்கு அன்று காலையில் தான் வந்து இறங்கி இருந்தார்கள்.
அதிலும் மணமேடையில் அவ்வப்போது சோர்ந்து போகும் மனைவியிடம் “இன்னும் கொஞ்ச நேரம் நில்லு அம்மிணி.. இவங்க வந்துட்டு போய்ட்டா அப்புறம் மேடை விட்டு இறங்கலாம்!” என்று மாணிக்கவேல் வற்புறுத்திக் கொண்டிருக்க..
அதை பார்த்து கதிரேசனக்கு அத்தனை கோபம்!!
“பார்த்தியா பங்காளி.. நான் அப்பவே சொன்னேன்ல. பாரு மலர் புள்ளய எப்படி கஷ்டப்படுத்துறாய்ங்க… எவ்வளவு நேரம் கால் கடுக்க நிக்க முடியும்..” என்று மீண்டும் அவன் ஆரம்பிக்க.. அதைக் கேட்ட களஞ்சியமோ மணமேடையை பார்க்க.. அந்நேரம் பார்த்து மனைவியின் பின் பக்கமாக கை கொடுத்து இடையோடு அழுத்தமாக பிடித்து அவளின் காதில் ஏதோ குசு குசு என்று பேசினான் மாணிக்கவேல்! மலர்விழியின் முகமோ வெட்கத்தில் வகிசித்தது!!
“அது எப்படிடா திமிங்கிலம்… அவன் பாக்கும்போது மட்டும் விறைப்பா நிக்கிற.. நான் பார்க்கும்போது மட்டும் இப்படி கொஞ்சிக்கிட்டு நிக்கிற?? ஹான்… பங்கு என்னை விட்டுட்டு!” என்று தலையை பிடித்துக் கொண்டவன் ‘இனி இந்த ஆட்டத்துக்கு நான் வரலடா! போங்கடா.. நீங்களும் உங்க கல்யாணமும்!’ என்று சென்று விட்டான்.
மாணிக்கவேலின் வீடு இரண்டடுக்கு வீடு!! முதல் கட்டில் தான் அவனுடைய அறைகளும்.. அக்காள்களோ அல்லது அவர்களது பிள்ளைகளோ வந்தால் தங்குவதற்கான அறைகள் அங்கே இருக்கும். கீழே சுந்தரவேலு அறையும், இரண்டு விருந்தினர்கள் அறையும் இருக்கும். இரண்டாம் அடுக்கில் பாதி அறைகளும் பாதி வெறும் விஸ்தாரமான இடமுமாக இருக்கும். ஏதாவது விசேஷம் நடத்தவோ இல்லையென்றால் விருந்து செய்யவோ ஏற்ப அவ்வளவு விஸ்தாரமாக இருக்கும்!!
விருந்தினர்கள் முக்காலவாசிப்பேர் காற்றோட்டமாக இப்பொழுது அங்கே தான் கடை விரித்திருந்தனர்.
அன்றிரவு… அவர்களுக்கான ஏகாந்த தனிமை.. மொட்டை மாடியில்…!!
Very nice👍
Super Sis
Super sis ❤️
Super 👌👌👌👌👌