அத்தியாயம் 18
“மல்லி.. மல்லி..”
“சொல்லுங்கள் இளவரசியாரே!”
“எனக்கு இப்பவே சாப்பிட ஏதாவது கொண்டுவா.”
“இளவரசியாரே! அது வந்து..”
“இங்கப்பாரு நான் இப்போ ரொம்ப கோபத்துல இருக்கேன். எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பிட ஏதாவது கொண்டு வரப்போறியா? இல்ல உன்னைய சாப்பிடவா?”
“இல்ல.. இல்ல.. இதோ கொண்டு வருகிறேன் இளவரசியாரே!” என்ற மல்லி, உடனே ஓடிச் சென்று அவித்த மரவள்ளிக்கிழங்கை எடுத்து வந்து கொடுத்தவளை முறைத்துப் பார்த்தாள் பூவிழியாழ்.
“மன்னிக்க வேண்டும் இளவரசியாரே! சமையலறைக்குள் இப்போது அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதை நான் யாருக்கும் தெரியாது, தங்களுக்காக எடுத்து வந்தேன்.”
“பரவால்ல கொடு. இப்ப வேற வழியும் இல்ல. சாப்பாட்டை பழிக்கக்கூடாதுன்னு எங்கம்மா சொல்லிருக்காங்க.” என்றபடியே அனைத்தையும் உள்ளே தள்ளி முடித்தவள், ” ஏஏஏஏஏஏஏஏப்ப்ப்ப்” என்று ஏப்பமிட்டவாறே எழுந்து வந்தவளை பார்க்க வந்திருந்தான் வாயிற்காப்பாளன் அங்கதன்.
“வணங்குகிறேன் இளவரசியாரே! மன்னர் தங்களை விருந்து மாளிகையில் நடக்கும் இரவு விருந்திற்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்.” என்று கூற,
‘என்னது திரும்பவும் முதல்ல இருந்தா? இப்பத்தான்டா ஃபுல் கட்டு கட்டுனேன். இதுக்கு மேல சாப்புட்டா என் வயிறு வெடிச்சுடுமே?! அந்த ராணாக்கு முதல்லயே இதெல்லாம் தெரியும். தெரிஞ்சுருந்தும் ஏன் அவன் என்கிட்ட சொல்லல? இன்னைக்கு நைட் டின்னர் கெஸ்ட் கூட சாப்பிடப் போறோம். சோ உன் வயித்தை காயப் போடுன்னு, ஏன் சொல்லல?’ என்று மனதுக்குள் ரணவீரனை திட்டினாலும் விருந்து மாளிகைக்கு கிளம்பிச் சென்றாள். அங்கே பேரரசரின் ஆஸ்தான ஜோதிடர் அமர்ந்திருக்க, இவளும் ரணவீரனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். தனது குரலை தழைத்துக் கொண்டு ரணவீரனுக்கு மட்டும் கேட்கும்படி,
“யோவ் ராணா! இந்த சொட்டத்தலை இன்னைக்கு ராத்திரி இங்க சாப்பிட வரும்னு உனக்கு முன்னாடியே தெரியும்தானே?!” என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தவளை உதட்டிற்குள் அடக்கிய சிரிப்போடு பார்த்த ரணவீரன்,
“மீனிற்கு தண்ணீரில் நீந்த கற்றுக் கொடுக்க வேண்டுமா? என்னுடன் சேர்ந்து நடிக்க உனக்கு கற்றுக் கொடுக்க வேண்டுமா? மரியாதை நிமித்தமாக எங்களுடன் அமர்ந்து உணவருந்தி விட்டு, பிறகு நமது அந்தபுரத்திற்கு செல்லலாம்.” என்று அவளது தாடையைப் பிடித்தபடி கூற, அதனைப் பார்த்த ஜோதிடரின் மனதில் ‘ஆஹா! என்ன ஒரு அருமையான தம்பதியர்?!’ என்று தான் தோன்றியது. அவளது மூச்சுக்காற்று அவனது தோளில் மோதும் அளவிற்கு நெருங்கி சென்றவள்,
“யோவ் ராணா! சத்தியமா என்னால இதையெல்லாம் இப்ப சாப்பிட முடியாதுயா. இப்பதான் முழுசா சாப்பிட்டு வந்தேன். ஒன்னு சாப்பாடு போடாம கொலைபண்ண பார்க்குற; அப்படியில்லன்னா சாப்பாடு போட்டே கொல்லப்பார்க்குற. உன் மனசுல நீ என்ன தான் நினைச்சுட்டுருக்க?” என்னவளின் கையைப் பிடித்து அழுத்திய ரணவீரன்,
“அமைதி! அமைதி! அரசியாரே!” என்று பூவிழியாழைப் பார்த்து கூறியவன், விருந்தில் தங்களுடன் அமர்ந்திருந்த அனைவரையும் பார்த்து,
“அனைவரும் எனது அழைப்பின் பெயரில் வந்தமைக்கு மிக்க நன்றி. உங்களை ஒருங்கே காண்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவரும் உணவருந்த தொடங்குங்கள்.” என்று கூறியதும் அனைவரும் உணவருந்த தொடங்கினர். அசைவ உணவுகளும் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதில் இருந்து மீன் துண்டுகளை எடுத்து பூவிழியாழின் தட்டில் வைத்து ரணவீரன்,
“இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். சாப்பிட்டுப் பார்.” என்று கூற,
“உனக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லயா? என்னால இதையெல்லாம் சாப்பிட முடியாது. சொன்னா புரிஞ்சுக்கோ.” என்று மெல்ல கூறியவளின் வாயிற்குள் திணித்தான் ரணவீரன். அங்கிருந்த அனைவரும் அவர்களை அன்யோன்யமான தம்பதியினராக பார்த்தனர். ரணவீரனின் செயல்களை பல்லைக்கடித்தபடி பார்த்துக் கொண்டிருந்த பூவிழியாழ், தன் அருகே நின்றிருந்த மல்லியை அழைத்து, அவள் காதில் சிலவற்றை கூற, மல்லியின் முகம் இருளடைந்து போனது.
“இளவரசியாரே! இதை நான்..”
“சொன்னதை செய் மல்லி.” என்று மல்லியை அங்கிருந்து வெளியே அனுப்பினாள் பூவிழியாழ். பிறகு தன் அருகே அமர்ந்திருந்த ரணவீரன், அறுசுவை உணவை அள்ளி வாயில் வைக்கும் முன், அதைத் தடுத்த பூவிழியாழ்,
“அரசே! தாங்கள் என்ன செய்ய விழைகிறீர்கள்? தங்களுக்கு ஏற்கனவே வயிறு உப்புசமாக இருக்கிறது என்று கூறினீர்களே?! ஆதலால் தங்களுக்கென தனியாக உணவு தயாரிக்க உத்தரவிட்டிருக்கின்றேன்.” என்றவள் உள்ளே வந்து கொண்டிருந்த மல்லியை கண்டதும்,
“மல்லி அந்த கஞ்சியை இங்கே என்னிடம் கொடு.” என்று வாங்கியவள், அதனை ரணவீரனுக்கு பரிமாற,
“பரவாயில்லை அரசியே!” என்று மறுத்து கூற விழைந்த ரணவீரனின் பேச்சை இடைமறித்த பூவிழியாழ்,
“அரசே! தங்களது உடல் ஆரோக்கியம் மக்களின் ஆரோக்கியம். தாங்கள் நன்றாக இருந்தால் தான் நாட்டு மக்களும் நிம்மதியுடன் வாழ்வார்கள். மக்களுக்காக தங்களது உடல் ஆரோக்கியத்தினை பேணுவது சாலச்சிறந்தது.” என்று கூற, அவளை முறைத்துக் கொண்டே, அவள் அளித்த கஞ்சியை குடித்து முடித்தான்.
‘மவனே! நீயா வந்து கட்டி பிடிப்ப, அப்புறம் துரத்தி அடிப்ப, சாப்பிட முடியலைன்னு சொன்னா அடுத்தவங்க முன்னாடி சீன் போடுறதுக்காக சாப்பிட சொல்லுவ, என்னையப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டிருந்தவளை பார்த்து தன் வெண்பற்கள் தெரிய சிரித்தான் ரணவீரன்.
‘ஹுஹும்! பயபுள்ள ஏதோ ஃப்ளான் பண்ணிடுச்சு. என்ன பண்ணப் போறானோ?!’ என்றெண்ணியவளின் எண்ணத்தை பொய்யாக்காமல், பூவிழியாழைப் பார்த்து,
“ஆம்! இன்று எனது வயிறு சரியில்லாத காரணத்தால் உங்களுடன் தொடர்ந்து என்னால் உணவருந்த முடியாது போயிற்று. ஆனால் எனது அரசியார், இந்த அனைத்து உணவுகளையும் தானே சாப்பிட்டு தங்களுடனான இவ்விருந்தை சிறப்பிப்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றவனை கொலைவெறியோடு பார்த்திருந்தாள் பூவிழியாழ்.
‘அடேய் கடங்காரா! இதே சாப்பாட்டை நாளைக்கு காலைல கொடுத்துப் பாருடா. சும்மா ரவுண்ட் கட்டி அடிக்கலைனா, என்னைய என்னன்னு கேளு. ஆனா இப்படி சாப்பாடு தொண்டை வரைக்கும் இருக்கும் போது தான் சாப்பிடு! சாப்பிடுன்னு ஊர்காவல்காரன் படத்துல வர்ற ராதிகா மாதிரி சாவடிக்குறியேடா கொப்பரை தலையா?!’ என்று எண்ணிக் கொண்டிருந்தவளின் தட்டில் பொறித்த முழுகோழியை எடுத்து வைத்தான் ரணவீரன். அங்கிருந்த அத்தனை உணவு வகைகளையும் அவளை சாப்பிட வைத்தான்.
“அய்யோ அம்மா! வயிறு வலிக்குதே! இது எல்லாத்துக்கும் காரணம் அந்த டெல்லி எரும தான் காரணம். என்னோட வயிறு வெடிச்சுடுமா? அடேய் ராணா! இப்ப மட்டும் நீ என் கைல கிடைச்ச?” என்று புலம்பியவாறு தனது அறைக்குள் நடைப்பழகிக் கொண்டிருந்தவளின் அறை முன்னே நின்றான் ரணவீரன்.
“விழி! விழி!” என்று ரணவீரன் அறைக்கு வெளியே இருந்து அழைக்க,
“இன்னியாரத்துக்கு இவர் எதுக்கு எலி! எலின்னு கத்திட்டுருக்காரு?” என்று புலம்பியவாறே வயிற்றைப் பிடித்து கொண்டே கதவைத் திறந்து வெளியே வந்தவளைப் பார்க்க ரணவீரனுக்கே பாவமாக இருந்தது.
“என்ன செய்கிறது? ஏன் இப்படி நடந்து கொண்டிருக்கிறாய்?”
“டேய் ராணா! நான் மட்டும் நல்லா இருந்துருந்தேன்னா உன்னைய உண்டு இல்லைன்னு ஆக்கிருப்பேன். உன்கிட்ட எவ்வளவு கெஞ்சினேன்? என்னால சாப்பிட முடியாது; விட்டுடுன்னு. இப்படி வைச்சு செஞ்சிட்டியேடா. பாவி! அதெப்படி டா பிள்ளையையும் கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுறதுக்கு வந்துருக்கப் பாரு. அதை நினைச்சாத் தான் என் வயிறு பத்திட்டு எரியுது.”
“அதிகமாக சாப்பிட்டால் இப்படி தான் வயிறு வலிக்கும். சிறிது தூரம் நடைபயிற்சி மேற்கொண்டாயேயானால் சரியாகி விடும். வா என்னோடு, சிறிது தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.”
“என்னது நாய், நரி, பேய், பிசாசு உலவுற நேரத்துல வாக்கிங் போகச் சொல்லுறியா? நல்லா வருது என் வாயில. நானே ஐ படத்துல வர்ற விக்ரம் மாதிரி நடந்துட்டு திரியுறேன். இதுல நீ வேற ஏன்டா என் உயிரை வாங்குற?”
“பெண்ணே! எப்போதும் போல் நீ பேசும் மொழி யாவும் எனக்கு விளங்கவில்லை. கொஞ்சம் விளக்கமாக கூறு.”
“ஆமாண்டா விம்பார் போட்டு நல்லா தேய்ச்சு விளக்கமா சொல்றேன். கொல காண்டுல இருக்கேன். ஒழுங்கு மரியாதையா நீயா இங்கிருந்து போயிடு. அய்யோ அம்மா! வயிறு ரொம்ப வலிக்குதே!” என்றவளின் முன்னே வேகமாக சென்றான் ரணவீரன்.
“இங்க என்ன மராத்தான் போட்டியா நடக்குது? மெதுவாகத்தான் நடங்களேன்?!”
“என்ன இது திடீர் மரியாதை?”
“ஏன் வேண்டாமா?”
“நீ இவ்வாறு மரியாதையோடு பேசும் போது, வேறு ஒருவருடன் பேசுவது போல் இருக்கின்றது.”
“சரி! மெதுவாகத்தான் நடயேன்?!”
“வேகமாக நடந்தால் மட்டுமே அஜீரணம் ஆகாது, செரிமாணமாகும்.”
“ஏற்கனவே நான் வாத்து மாதிரி நடந்துட்டுருக்கேன். இதுல நீ வேற ஏன்டா என்னைய குள்ளவாத்து ஆக்குற?” என்று புலம்பியவளின் கையில் தனது அங்கவஸ்திரத்தை கொடுத்தவன், அதன் ஒரு முனையை அவள் பிடிக்கச் சொல்லி, மறுமுனையை அவன் பிடித்துக் கொண்டான். முன்னே வேகமாக ரணவீரன் நடந்து செல்ல, அவனது பாதத்தடத்தை பார்த்துக் கொண்டே, அங்கவஸ்திரத்தை பிடித்துக் கொண்டு ரணவீரனை தொடர்ந்தாள் பூவிழியாழ்.
“ஊஊஊஊஊ சிக்கு புக்கு.. பூவரசம் பூ பூத்தாச்சு.. பொண்ணு செய்தி வந்தாச்சு.. ஊஊஊஊஊ சிக்கு புக்கு சிக்கு புக்கு..” என்று பாடியவாறே தன் பின்னே வந்தவளை விசித்திரமாக பார்த்தவாறு அவளோடு நடைபயிற்சி மேற்கொண்டான் ரணவீரன்.
மறுநாள் காலையில் எழுந்ததும் பேரரசர் கொடுத்த ஓலையைப் பற்றி ரணவீரனுக்கு ஞாபகப்படுத்தினார் படைத்தளபதி. தங்களது நாட்டின் எல்லையை விரிவுபடுத்த வேண்டி, சில நாடுகளின் மேல் படையெடுக்க வேண்டுமென்று அதில் ஆணையிடப்பட்டிருந்தது. அதனை படித்ததில் இருந்து தான் பூவிழியாழை தள்ளி வைத்திருந்தான். ஆனால் பூவின் மணம் வண்டை இழுப்பது போல், பூவிழியாழின் துறுதுறுப்பான செயல்களும் குறும்பான பேச்சும் அவளின் பால் ரணவீரனை மொத்தமாக வீழ்த்தியிருந்தது. ஆனால் இப்போது அவன் செல்ல இருக்கும் யுத்தகளத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதில் தான் வீழ்ந்தால் தன்னோடு ஒருநாள் கூட வாழாது இளம் விதவையாக பூவிழியாழ் உடன்கட்டை ஏறவேண்டும் என்பதை யோசித்த ரணவீரன், அவளை மணமுடிக்காது அவளது தந்தையிடம் திருப்பியனுப்ப முடிவு செய்திருந்தான். அவளின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்த ரணவீரன், அவளது எதிர்காலமே அவன் தான் என்பதை மறந்து போனான். கணவன் மனைவி இருவரும் சேர்ந்ததே வாழ்க்கை; அந்த வாழ்க்கையை சேர்ந்தே கடந்து செல்ல வேண்டும் என்பதை மறந்தான் ரணவீரன். இனிமேலும் பூவிழியாழை தனதருகே வைத்திருந்தால், அவளை விட்டு அவனால் பிரிய முடியாது என்று நினைத்தவன், பூவிழியாழுக்கு மணமுறிவு சான்றிதழை தன் கையால் எழுதினான். அவள் வெளியுலகிற்கு மட்டுமே மனைவியாக இருந்தாள் என்றும் அவர்கள் தங்களது திருமண வாழ்க்கையை இன்னும் மணமக்களாக தொடங்கவில்லை என்றும் எழுதி கையெழுத்திட்டிருந்தான். மணமுறிவு சான்றிதழை பார்க்கும் பூவிழியாழின் மனநிலை என்ன? ரணவீரனின் இம்முடிவை மங்கையிவள் ஏற்று நடப்பாளோ?
அத்தியாயம் 19
அக்காலத்தில் போரில் அரசனோ அல்லது படைவீரனோ வீரமரணம் எய்தினான் என்றால் அவனது மனைவியும் கற்பு நெறி தவறாது, தன்னை மணப்பெண் போல் அலங்கரித்துக் கொண்டு அவளது கணவனுடன் சதியேறும் பழக்கம் நடைமுறையில் இருந்தது. ஆதலால் அது போல் நடக்காது தன் மனைவி தான் இறந்த பிறகும் சந்தோஷமாக வாழ வேண்டுமென நினைத்த ரணவீரன் அவளுக்கு மணமுறிவுச் சான்றிதழ் வழங்க தயாரானான். ரணவீரன் போருக்கு செல்ல போவதை மல்லி மூலம் கேள்வியுற்றவள், அவனைத் தேடி அரசரவைக்குச் சென்றாள். அரசமாளிகையில் ஆஸ்தான ஜோதிடருடன் அமர்ந்திருந்த ரணவீரனைக் கண்டாள். ஜோதிடர் இருப்பதினால் அவனிடம் எதுவும் அவளால் பேச முடியவில்லை.
“மன்னருக்கு வெற்றி உண்டாகட்டும்! தஙகளது ஜாதகப்பலன்களின்படி இன்னும் இரு வாரங்களில் தங்களுக்கு பெரிய கண்டம் ஒன்று ஏற்பட காத்திருக்கின்றது.” என்று கூற அதிர்ந்து போன பூவிழியாழ்,
“அக்கண்டத்தில் இருந்து தப்பிக்க ஏதேனும் பரிகாரம் இருக்கின்றதா?” என்று வினவினாள்.
“இருக்கின்றது அரசியாரே! பாதாள பைரவியிடம் இருக்கின்ற தங்களது குலச்சொத்தான காலச்சக்கரப் பெட்டியினை குலதெய்வமான காலபைரவரின் காலடியில் கொண்டு வந்து சேர்த்தீர்களேயானால் குலதெய்வத்தின் உக்கிரம் குறைந்து உங்கள் தாலி பாக்கியம் அதிகரிக்க வழியுண்டு.” என்று ஜோதிடர் கூற,
“அதனை எப்பாடுபட்டாவது நான் செய்து முடிக்கின்றேன்.” என்று உறுதி கூறிய பூவிழியாழை விநோதமாக பார்த்தான் ரணவீரன்.
“நீ இவையாவும் செய்ய வேண்டிய அவசியமில்லை.” என்ற ரணவீரன் கூறிய எதையும் காதில் வாங்காது, ஜோதிடர் கூறும் பரிகாரங்களை கவனமுடன் கேட்டு தெரிந்து கொண்டாள் பூவிழியாழ். ஜோதிடர் அங்கிருந்து சென்றதும், ரணவீரனின் அருகே வந்த பூவிழியாழ்,
“நீ.. நீங்க போர் புரியப் போவதாக மல்லி சொன்னா. ஏன் தேவையில்லாம அடுத்த நாட்டோட போயி சண்ட போடணும்? சமதானமா போனா உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்படாதே?! எதுக்காக அவங்கக்கூட போயி சண்ட போடணும்?” என்று தன் கண்களை விரித்து கேட்க, அவளை இறுக்கி அணைத்து முத்தமிட வேண்டும் என்ற ஆவலை தனக்குள் அடக்கி வைத்தவாறு,
“அந்த நாட்டு மக்கள் நம்ம பேரரசுக்கு வரியும் கப்பமும் கட்ட வேண்டுமென நாம் அனுப்பிய அரசாணையை அவர்கள் துளியும் மதிக்கவில்லை. ஆதலால் தான் அவர்களோடு போர் புரியப் செல்கிறோம்.” என்று கூறியவனிடம்
“அவர்கள் எதக்கு தங்களுக்கு வரியும் கப்பமும் கட்ட வேண்டும்? அவங்ளும் சுதந்திரமா இருக்கட்டுமே.” என்று வாதிட்டாள் பூவிழியாழ்.
“அவர்கள் சுதந்திரமாக இருக்கக்கூடாது என்று இங்கு யாரும் கூறவில்லை. ஆனால் எனது கடமை நம் நாட்டு எல்லையை விரிவுபடுத்துவதாகும். நான் எனது கடமையை செய்யப் போகின்றேன். ஆகையால் நான் செல்லும் வழியை மறைக்காதே!”
“ஏற்கனவே உங்க உடம்புல பல ரணமான காயங்கள் இருக்குது. இன்னொரு தடவை புதுசா எந்த காயமும் வராமப் பார்த்துக்கோங்க. எனக்கு தெரியும்; சண்டைன்னு வந்துச்சுன்னா நாலு சட்டை கிழியத் தான் செய்யும். ஆனா அது உங்களை பாதிக்காம பார்த்துக்கோங்க.” என்றவளின் கையில் ஓலை ஒன்றை அளித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான் ரணவீரன். அதனை பிரித்து பார்த்தவளுக்கு ஓரளவு அவன் அதில் எழுதியிருந்தவைகள் புரிந்தன. அதனை எடுத்து கொண்டு உடனே அவன் பின்னால் ஓடினாள் பூவிழியாழ்.
“யோவ் ராணா! நில்லுயா. நில்லுன்னு சொல்றேன்ல.” என்று அவன் பின்னோடு அரண்மனை வாயில் வரைக்கும் சென்றவளை திரும்பிப் பார்த்தான் ரணவீரன். அவனிடம் தன் கையில் இருந்த ஓலையை காட்டி,
“என்னதிது? இதுக்கு என்ன அர்த்தம்? எதுக்கு இதை கொடுத்துருக்க? நான் உன்னை விரும்புறேன்; நீயும் என்னைய விரும்புற; அப்புறம் எதுக்குயா இப்படியெல்லாம் பண்ற? யோவ் ராணா! இங்க என்னையப் பாருயா. திரும்பி அந்த பக்கம் நின்னு வானத்துல எத்தனை காக்கா பறக்குதுன்னா எண்ணிட்டுருக்க? திரும்புன்னு சொன்னா திரும்ப மாட்ட?” என்றவள் அவனது காலில் மிதிக்க, அவளை நோக்கி திரும்பினான் ரணவீரன்.
“என் முகத்தை பார்த்து சொல்லு உனக்கு என்னைய பிடிக்கலைன்னு? உன்னோட இந்த கண்ணு, பார்வை, ஏன் உன்னோட ஒவ்வொரு அசைவும் கூட சொல்லுது நீ என்னைய எந்த அளவுக்கு விரும்புறேன்னு. அப்புறம் ஏன்யா என்னைய வேணாம்னு சொல்லுற?”
“நீ என்னை தவறாக புரிந்து வைத்திருக்கிறாய். எனக்கு உன் மீது எந்த விருப்பமும் கிடையாது.”
“திரும்ப திரும்ப பொய் சொன்னா, பொய் உண்மையாகிடுமா? நிஜமா சொல்றேன், ஆரம்பத்துல உன்னைய எனக்கு சுத்தமா பிடிக்கல. நீ ஒரு முரடன்; கொலைகாரன்னு சொல்லி பயமுறுத்தியிருந்தாங்க. ஆனா நீ அந்த மாதிரி எல்லாம் இல்ல. சொல்லப் போனா இந்த அரண்மனைல, உனக்கு நான் பண்ண மார்ச்சுக்கு வேற எவனாவதா இருந்திருந்தா இந்நேரம், என்னைய கொன்னு போட்டுருப்பான். ஆனா நீ என்னைய எவ்வளவு அன்பா பார்த்துகிட்டன்னு தெரியுமா? ஒழுங்கு மரியாதையா எதுக்கு என்னைய வேணாம்னு சொல்லுற? அப்படிங்குறதுக்கு ஒரு காரணமாவது இப்ப நீ சொல்ற.”
“என்னுடன் நீ வாழ்ந்தால் மரணத்தை தவிர வேறெதையும் என்னால் உனக்கு பரிசளிக்க முடியாது. உன்னை என்னால் காதல் செய்ய முடியாது. அப்படிப்பட்ட வாழ்க்கையை உனக்கு என்னால் வழங்க முடியாது. உன்னிடம் அந்த மாதிரியான உணர்வுகள் ஏதும் எனக்கு தோன்றவில்லை பெண்ணே!”
“இது பொய்! பச்ச பொய்! அப்புறம் என்னத்துக்குயா அன்னைக்கு ராத்திரி அப்படி நடந்துகிட்ட? இங்க, இங்க எல்லாம் எதுக்கு முத்தம் கொடுத்த?”
“நீ என்ன செய்யவென்று நினைக்கின்றாயோ அது உன் இஷ்டம். இன்றிலிருந்து நான் போர்பயிற்சிக்காக செல்லப் போகின்றேன். நான் திரும்பி வருவேனா இல்லையா என்பது விதியின் வசம். ஆகையால் உன் தந்தையின் நாட்டிற்கு திரும்பிச் செல்வது உத்தமம்.”
“மாட்டேன், மாட்டேன்! இந்த மணமுறிவை நான் ஏத்துக்க மாட்டேன். நான் உன்னைய விட்டு எங்கயும் போக மாட்டேன். புரியுதா? நான் எங்கும் போக மாட்டேன். இந்த ஓலையால உன்னை எங்கிட்ட இருந்து பிரிக்க முடியாது.” என்று அவ்வோலையை கிழித்து எரிந்தவளை வெறுமையாக பார்த்தான் ரணவீரன்.
“எனக்கு நேரம் மிகவும் குறைவாக இருக்கின்றது. நான் யுத்தகளத்திற்கு செல்ல வேண்டும்.” என்றவன் தனது படைவீரர்களை நோக்கி செல்லலானான்.
“யோவ் ராணா! நீ யுத்தத்திற்கு போ, இல்ல எங்க வேணா போ. ஆனா நான் எங்கேயும் போக மாட்டேன். உனக்காக இங்கேயே காத்திட்டுருப்பேன்.” என்று கத்தியவளின் கண்களில் இருந்து கண்ணீரோடு அவன் மீது அவள் வைத்த காதலும் உருகி வழிந்தது. மன்னவன் மீண்டு மங்கையிடம் வருவானா?
அத்தியாயம் 20
“மல்லி.. மல்லிஇஇஇ..”
“சொல்லுங்கள் இளவரசியாரே! ஏன் இவ்வளவு கோபம்?”
“ம்ம் எனக்கு பைத்தியம் பிடிச்சு போச்சு. போதுமா? கிளம்பு. நாம இனிமே இங்க இருக்க வேணாம்.”
“ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள்? இதுதான் தங்களது அரண்மனை. இதுதான் தங்களது சமஸ்தானம். இதை விட்டுட்டு எங்கப் போகப் போகிறோம் இளவரசி?”
“வேற என்னைய என்ன செய்ய சொல்ற? அந்த ஆளு என்கிட்ட நம்ம கல்யாணம் பெயரளவுல தானே நடந்துருக்கு. ஊரறிய நடந்து நாம என்ன புருஷன் பொண்டாட்டியாவ வாழ்ந்துருக்கோம்னு சொல்லி இதை என் மூஞ்சில வீசி எறிஞ்சுட்டு போயிட்டாரு. இப்ப நான் என்ன பண்ண?” என்ற பூவிவியாழ் தன் கையில் இருந்த மணமுறிவு சான்றிதழை மல்லியிடம் கொடுக்க, அதனை வாங்கிப் பார்த்த மல்லி,
“என்னது மணமுறிவு சான்றிதழா?” என்று அதிர்ச்சி அடைந்தாள்.
“ஆமா!”
“ஆனா நீங்க எப்படி திரும்பிப் போக முடியும்?”
“ஆமா! இப்ப நான் திரும்பிப் போனா அந்த பூங்கொடியாழ் எனக்கு சோத்துல விஷத்தை வைச்சு கொடுத்துருவா.”
“ஆம் இளவரசியாரே! இப்போது நாம் என்ன செய்வது?”
“அதை நான் முடிவு பண்றேன்.” என்ற பூவிழியாழின் மனதில் திட்டம் ஒன்று உருவானது.
*************************************************
“எல்லோரும் தயாராக இருக்கின்றனரா?” என்று கேட்ட ரணவீரனிடம்,
“ஆம் அரசே! தங்களுக்காக நம் படைவீரர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.” என்று பதில் அளித்தார் படைதளபதி.
அங்கே போர்முறை பயிற்சிக்காக வந்திருக்கும் வீரர்கள் அனைவரும் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்தனர். அதில் கடைசியாக நின்ற உருவம் மட்டும் குதித்தபடியே நின்று கொண்டிருந்தது.
‘இதுக்கு தான் சின்ன வயசுல நிறைய காம்ப்ளான் குடிக்கணும்னு சொல்லுறது. இப்பப்பாரு முன்னாடி நிக்குறவே தலையத்தவிர வேறெதுவும் தெரிய மாட்டேங்குது. என்னத்தத்தான் குடிப்பாய்ங்களோ ஒவ்வொருத்தனும் அண்டாட்டக்கர் உயரத்துக்கு ஹைட் அண்ட் வெயிட்டா இருக்கானுங்க.’ என்றவாறே முன்னால் நின்று கொண்டிருந்த ரணவீரனைப் பார்க்க குதித்துக் கொண்டிருந்தவளை பார்த்துவிட்டான் ரணவீரன்.
“அங்கதா!” என்று தனது வாயிற் பாதுகாவலனை அழைத்த ரணவீரன்,
“இவள் எதற்காக இங்கிருக்கின்றாள்? இவளை யார் உள்ளே வர அனுமதித்தது?” என்று கோபமாக கேட்க,
“நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டேன் அரசே! அரசியார் கேட்பதாகவே இல்லை. மணந்தால் மகாதேவன்! இல்லையேல் மரணதேவன் என்கிறார்.”என்று பதிலளித்தான் அங்கதன்.
‘யார் அந்த மகாதேவன்?’ என்று யோசித்தவனுக்கு கோபம் உச்சத்திற்கு சென்றது. படைவீரர்கள் அனைவரும் வரிசையில் நின்றிருக்க, அவர்களை சுற்றி வந்த ரணவீரன், பூவிழியாழின் அருகே வந்து நின்றான்.
“நீயா? நீ இங்கே என்ன செய்கின்றாய்?”
“நான்.. நான் உங்கள் படையில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய போறேன். அதுல உங்களுக்கு என்ன கஷ்டம்?.”
“உளறாதே! என்ன முட்டாள்தனம் இது? பெண்கள் எப்படி போர் புரிய முடியும்?”
“அரசே! நாட்டிற்கு சேவை செய்ய ஆண், பெண்ணு ஏன் பிரிச்சு பார்க்குறீங்க? புலியை முறத்தால் அடித்து விரட்டும் பெண்களுக்கு கத்தி பிடிச்சு சண்ட போடுறது ஒன்னும் பெரிய விஷயமில்ல. வீட்டுக்கு ஒருத்தர் யுத்தத்திற்கு வரணும்னு நீங்க தானே அறிவிப்பு கொடுத்தீங்க?! அதை கேட்டு நாட்டுக்காக உசுரை கொடுக்க வந்தா ஏன் வந்தன்னு கேட்குறீங்க?.”
“வீட்டிற்கு ஒருவர் வந்தால் போதும் என்று தான் கூறினேன். நம் வீட்டின் சார்பாக நான் வந்துள்ளேனே?! பிறகு நீ ஏன் வந்தாய்? இப்போதே இங்கிருந்து செல்.”
“என்னது நம்ம வீடா? நீங்களும் நானும் ஒரே வீடா? அப்போ நீங்க எனக்கு என்ன முறை? அண்ணனா? தம்பி? மாமாவா? சித்தப்பாவா? நீங்க யார் எனக்கு?”
“நான்.. நான்..”
“சொல்லுங்க நீங்க எனக்கு என்ன முறை? நாம ரெண்டு பேரும் எப்படி ஒரே வீடா மாறினோம்? அதை மட்டும் சொல்லிடுங்க. நான் இங்க இருந்து போயிடுறேன்.” என்ற பூவிழியாழை உறுத்து விழித்தவன்,
“அங்கதா!” என்று தன் வாயிற்காப்பாளனை அழைக்க, ” அரசே!” என்றவன் முன்னே வந்து நின்றான் அங்கதன்.
“போர் பயிற்சிகள் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும். பெண்ணென்று யாருக்கும் பாரபட்சம் பார்க்கக் கூடாது. புரிந்ததா?” என்று ரணவீரன் கூற,
“அப்படியே ஆகட்டும் அரசே!” என்ற அங்கதன் பயிற்சி பெறும் வீரர்களை இரு வேறு பிரிவுகளாக பிரித்தான். இரு பிரிவுகளில் இருந்தும் இரு வீரர்களை அழைத்த அங்கதன், அவர்கள் இருவரையும் மல்யுத்தம் செய்யும்படி கூற, அவர்களும் தங்களது பலத்தை சோதிக்கத் தொடங்கினர். அவ்விருவரில் ஒருவர் வெற்றி பெறவே, அடுத்ததாக மல்யுத்தம் புரிய ஒரு பிரிவில் இருந்து பூவிழியாழும், மற்றொரு பிரிவில் இருந்து மற்றொரு வீரனும் இறங்கினர்.
‘என்னத்த திண்ணு இப்படி உடம்பை வளர்த்து வைச்சுருக்கானோ? இவன் பக்கத்துல நான் சுண்டெலி மாதிரி தெரியுறேனே?! அடேய் ராணா! வேடிக்கையாப் பார்க்குற? ஏதாவது பண்ணுடா’ என்று மனதுக்குள் புலம்பிய வாயே மல்யுத்தத்திற்கு தயாரானாள்.
“வீரனே! சற்றுப் பொறு. இப்பெண்ணிற்கு எவ்வாறு சண்டையிடுவதென்று நானே கற்றுக் கொடுக்கின்றேன்.” என்ற ரணவீரன், தானே களத்தில் இறங்கினான். சிங்கத்தின் மேல் சிறு எலி ஒன்று ஏறி விளையாடுவதைப் போல், பூவிழியாழின் கரங்கள் ரணவீரனோடு இணைந்தது.
‘இவனோட கை மட்டும் எவ்ளோ பெரிசா, ஸ்ட்ராங்கா இருக்கு?!’ என்று பூவிழியாழ் மனதுக்குள் நினைக்க,
‘இவளின் கைகள் பூக்களை விட மென்மையை இருக்கின்றதே?! இதை கொண்டு இவள் எவ்வாறு போரிடுவாள்?’ என்று ரணவீரன் எண்ணினான்.
அவளின் பலத்திற்கு முன் தனது பலத்தை உபயோகிக்க விரும்பாத ரணவீரன், பூவிழியாழின் போக்கிலேயே சென்று அவளுக்காக வளைந்து கொடுத்தான். பூவிழியாழின் கையோடு இணைத்தவன், ஒரு கட்டத்தில் அவளது கையை இழுத்து இடையோடு வளைத்து தனது புஜத்தினால் தூக்கி மண்ணில் எறிய நினைத்தவன், அவளது உடல் மண்ணில் விழும் முன் தன் கைகொண்டு தடுத்தான். அவனால் அவளை சிறிதும் காயப்படுத்த இயலவில்லை. இருவரும் மண்ணில் புரண்டு எழுந்து, இருவருமே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டனர். அடுத்ததாக படைவீரர்களை வரிசையாக நிற்க வைத்து, அவர்களின் காலடியில் அதிக எடை மிகுந்த மூட்டைகள் வைக்கப்பட்டன.
“வீரர்களே! தங்களுக்கான மூட்டைகளை தூக்கிக் கொண்டு, அதோ அங்கே தூரத்தில் இருக்கும் மரத்தின் அருகே வைத்து விட்டு அங்கிருக்கும் மூட்டையைத் தூக்கிக் கொண்டு, இதோ இங்கு வரவேண்டும்.” என்று கூற அனைவரும் மூட்டையை கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டு செல்ல, தனது காலுக்கடியில் இருந்த மூட்டையை தூக்கியவளுக்கு அதன் எடை மிகவும் இலகுவாக இருந்தது. அதனை தூக்கிக் கொண்டு ஓடியவள், தூரத்தில் இருக்கும் மரத்தின் அடியில் அதனை வைத்தாள். பின்னர் அங்கு இதே போல் இருக்கும் மூட்டையை தூக்கிக் கொண்டு வந்தவளுக்கு ஏதோ பஞ்சு மூட்டையை தூக்கிக் கொண்டு வந்தது போல் இருந்தது. ரணவீரனுக்கு முன்னால் அம்மூட்டைகளை கீழே தூக்கிப் போட்டவள், தன் இருகைகளையும் தூசி தட்டுவதை போல் தட்டிவிட்டு மீண்டும் வரிசையின் பின்னால் சென்று நின்று கொண்டாள். பின்னர் அங்கிருக்கும் வீரர்களிடம் அவர்களுக்கு பிடித்த ஏதோ ஒரு ஆயுதத்தை தேர்ந்தெடுத்து அதில் பயிற்சி பெறும்படி அங்கதன் கூற, அனைவரும் தங்களுக்கென ஆயுதங்களை தேர்ந்தெடுத்தனர். ஆனால் எதை எடுத்து சண்டையிடவென அறியாது வாயில் விரல் வைத்தபடி அங்கிருந்த ஆயுதங்களை பார்வையிட்ட பூவிழியாழின் பார்வையில் பெரிய ஈட்டி ஒன்று கண்ணில் படவே அதனை தூக்கச் சென்றாள். அவள் ஆயுதத்தின் அருகே செல்வதை கண்ட ரணவீரனும் அவள் அருகில் சென்றான். பெரிய ஈட்டியை தூக்கிய பூவிழியாழ், அதன் எடையை சமாளிக்க முடியாது பின்னோக்கி நகர, பின்னால் இருந்து அவளை தாங்கிக் கொண்ட ரணவீரன், அவளின் இடையை தன்னையுமறியாமல் இறுக்கி அணைத்தபடி,
“உன்னால் தான் ஆயுதத்தை ஏந்தவே முடியவில்லையே?! அப்புறம் எதற்கு இந்த முயற்சி? இவையெல்லாம் வீண் முயற்சி. அரண்மனைக்கு திரும்பிச் செல்.” என்றுரைக்க, தனது முன்னங்கையால் அவனது வயிற்றில் இடித்து, அவனை விட்டு விலகியவள், அந்த ஈட்டி நீட்டிப்பிடிக்க முயற்சித்தாள். அந்தோ பரிதாபம்! அவள் ஒரு பக்கம் செல்ல, ஈட்டியோ மறுபக்கம் சாய்ந்தது.
‘ஏய்! இப்போ ஒழுங்கா நிக்கப் போறியா? இல்லையா?’ என்று அந்த ஈட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்க, பூவிழியாழைப் பார்த்த ரணவீரன் பெருமூச்சுடன் அவள் கையில் இருந்த ஈட்டியை வாங்கி அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு, வில்லையும் அம்பையும் எடுத்து அவள் கொடுக்க, அதனை எவ்வாறு பயன்படுத்துவதென தெரியாது முழித்தாள் பூவிழியாழ். வில்லோடு அம்பை தன்னைப் நோக்கினாற் போல் இணைத்தவளை பார்த்து இருபுறமாக தலையசைத்த ரணவீரன்,
“இப்படி வா..” என்று அவளை தன் இரு கைகளுக்குள் கொண்டு வந்து,
“நேராக நிமிர்ந்து நில்.” என்றவன் அவளின் கைகளால் வில்லை சரியாக பிடிக்கப் செய்தவன், அவள் விரல்களோடு தன் விரல்களை இணைத்தான். வில்லோடு அம்பை சரியாக சேர்த்து இலக்கை குறிவைத்து எய்திட, அம்பானது சரியாக தனது இலக்கை சென்றடைந்தது.
“வாவ்! எப்படி பண்ணீங்க? இன்னொரு தடவை இதே மாதிரி சொல்லிக்கொடுங்க. ப்ளீஸ்.” என்று கொஞ்சியவளின் இடையை இன்னும் தன்னோடு தன்னோடு சேர்த்து அணைத்தவன்,
“உன் கண்முன்னே அடைய வேண்டிய இலக்கு மட்டுமே தெரிய வேண்டும். உனது கவனத்தை சிதற விடாது, வில்லின் நாணை அம்போடு சேர்த்து இப்படி இழுக்க வேண்டும்.” என்று கூறியவாறே மீண்டும் அம்பை எய்திட,
“வாவ்! சூப்பர்!” என்று குதித்தபடியே திரும்பியவளின் இதழ்களோடு அவனின் இதழ்கள் உரசிச் செல்ல, இருவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. ஒரு நிமிடத்திற்கு இருவரும் இவ்வுலகை மறந்து தனி உலகில் சஞ்சரித்தனர். முதலில் சுதாரித்துக் கொண்ட ரணவீரன், சட்டென பூவிழியாழிடம் இருந்து விலகினான்.
“கவனத்துடன் பயிற்சி செய்.” என்று கூறிச் சென்றவனை எரிச்சலோடு பார்த்தாள் பூவிழியாழ். அதன்பின்னர் அனைவருக்கும் சுருள் வாள் சிலம்பம் பயிற்சி அளிக்க மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அனைவரின் கையிலும் சுருள் வாள் சிலம்பத்தை கொடுத்த படைத்தளபதி, அதனை எவ்வாறு உபயோகப்படுத்துவதென கற்றுக் கொடுக்க, அதன்படி அனைவரும் அதனை பயன்படுத்தத் தொடங்கினர்.
“ஆஆஆஆஆ.. அம்மா..” என்று சிலரின் முதுகை பதம் பார்த்தது. சிலரின் கைகளிலும் கால்களிலும் சுருள் வாளினால் வெட்டி ரத்தம் வரவே, சட்டென பூவிழியாழைப் பார்த்த ரணவீரன்,
“ஹேய் பெண்ணே! இங்கு வா.” என்று அவளை தன் அருகே அழைத்தான்.
“எதுக்கு என்னைய இப்போ கூப்டீங்க? சீக்கிரம் சொல்லுங்க. நான் பயிற்சி எடுக்கணும்.”
“இதை விளையாட்டுத்தனமாக பயன்படுத்த கூடாது. உன் மேல் பட்டுவிடக்கூடும். அதனால் ஏற்படும் வலியை உன்னால் தாங்க இயலாது. இது மிகவும் ஆபத்தான ஆயுதம்.”
“அதானே?! என்னடா இன்னும் நாட்டாமையை காணோமேன்னு பார்த்தேன். அதெப்படி இத்தனை பேர் பயிற்சி எடுக்கும் போது என்னைய மட்டும் ஏன் பார்க்குறீங்க? நான் எப்படி சுத்தி அடிவாங்கினா, உங்களுக்கென்ன? எனக்கு அடிபட்டா, உங்களுக்கு ஏன் வலிக்குது?”
“ஏன் என்றால் நீ ஒரு பெண். அது மட்டுமின்றி நீ என்னுடைய..”
“உங்களுடைய?”
“படைவீரன். என்னுடைய படையில் இருக்கும் அத்தனை வீரர்களும் எனது ஆணையின் கீழ் தான் செயல்பட வேண்டும்.”
“உங்க அறிவுரை முடிஞ்சுதா? இப்ப நான் ப்ராக்டிஸ் பண்ண போலாமா?”
“நில்!”
“உங்களுக்கு இப்ப என்ன தான் வேணும்?”
“நீ என்னுடன் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.”
“எப்படி இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வில்லையும் அம்பையும் வைச்சு சொல்லி கொடுத்தீங்களே?! அது மாதிரியா? வேணாம்பா சாமி. நான் தனியா ப்ராக்டிஸ் பண்ணிக்குறேன். நீங்க உங்க வேலையா மட்டும் பாருங்க.” என்றவள் அங்கிருந்து சென்றவளின் கையைப் பிடித்து இழுத்தவன்,
“என் மீது தாக்குதல் நடத்து.” என்று கூறியவனை எரிச்சலோடு பார்த்த பூவிழியாழ், அவன் மீது சுருள் வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தினாள். அவளின் ஒவ்வொரு தாக்குதலில் இருந்தும் தப்பித்து சென்றவனின் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டாள் பூவிழியாழ்.
“மாவீரர் வாழ்க! வாழ்க! மாவீரர் ரணவீரனுக்கே வெற்றி உண்டாகட்டும்!” என்று கோஷமிட்டவாறே படைவீரர்களும் இவர்களின் சண்டையை பார்க்க, தன் கை வலிக்கும் வரை அவனை தாக்க முயன்றாள் பூவிழியாழ். இறுதியில் ரணவீரன் அணிந்திருந்த உடற்கவசத்தில் கீறல் விழுகவே,
“ஏஏஏஏ! நான் உங்களை ஜெயிச்சுட்டேன். எப்படி? சூப்பர்ல? சீக்கிரம் போயி கிழிஞ்சதை மாத்திக்கோங்க. இன்னைக்கு நான் நரி முகத்துல தான் முழிச்சுருக்கணும்னு நினைக்குறேன்.” என்று கத்தியபடியே அங்கிருந்து ஓடியவளைப் பார்த்த அனைவரும்,
“என்ன ஒரு திறமையான பெண்! அரசரையே ஜெயித்து விட்டாளே?!” என்று அனைவரும் பேசிக் கொண்டிருக்க, ரணவீரனை தோற்கடித்த மகிழ்ச்சியில் குதித்தபடியே சுருள் வாளை வீசிக் கொண்டிருந்த பூவிழியாழை பார்த்தபடியே அங்கிருந்து அகன்றான் ரணவீரன். சீறும் சிங்கத்தை வென்றுவிட்டோமென சிறு முயல் நினைத்திருக்க, சிறு முயலிற்காக சிங்கம் தன்னை விட்டுக்கொடுத்ததை அச்சிறு முயல் அறியுமோ?!
Wowwwww vera level lovlyyyyyyyyyy epiiiiii ❤️❤️❤️❤️❤️❤️ quickly upload nxt epiii sis