ATM Tamil Romantic Novels

இரகசிய மோக கனாவில் 21&22

அத்தியாயம் 21

 

பேரரசர் பாண்டிய மன்னனின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார் ஆஸ்தான ஜோதிடர் வடிவில் ரணவீரனின் அரண்மனைக்கு வந்து சென்ற ஒற்றன்.

 

“மன்னருக்கு வெற்றி உண்டாகட்டும்!” 

 

“வா வேலவா! வருக! வருக! உன் வருகையைத் தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். சென்ற காரியம் நலம் தானே?!”

 

“தாங்கள் கூறியபடியே அவர்களை கண்காணித்து விட்டுத் தான் வந்தேன் அரசே! இருவரும் ஓருயிர் ஈர் உடலாக வாழ்கின்றனர்!”

 

“ஆஹா! கேட்கவே எத்தனை ஆனந்தமாக இருக்கின்றது?! அன்னை தந்தையை நாட்டிற்காக தியாகம் செய்து, தானும் நாட்டிற்காகவே வாழும் ரணவீரனின் திருமணத்தைப் பற்றிய என் கவலை அகன்றது. இதோ உனக்கான பொற்காசுகள்.”

 

“வாழ்க மன்னர்! எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க!” 

 

“இப்போது நம் நாட்டின் எல்லையில் இருக்கும் நிலையென்ன? தாங்கள் அறிந்து கொண்டு வந்த செய்தியாது?” 

 

“நம் நாட்டின் மீது வல்லவராயனின் படையினர் போர்த் தொடுக்கப் போவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது அரசே!”

 

“என்ன?!”

 

“ஆம் அரசே! நமக்கு வரி கட்ட விருப்பமில்லாத காரணத்தினால் படையெடுத்து வரவிருப்பதாக அந்நாட்டில் இருக்கும் நம் ஒற்றர்களின் மூலம் செய்தி கிடைத்துள்ளது. ஆதலால் வீட்டிற்கொருவரை போர்க்கள பயிற்சி அளித்து படைவீரராக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இன்னும் சில நாட்களில் போர் முழக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது அரசே!”

 

“ரணவீரனுக்கு இப்பொழுது தான் திருமணமாகி உள்ளது. இந்நிலையில் அவன் போருக்கு செல்வது, எனக்கு சரியென்று தோன்றவில்லை. ஆதலால் தலைநகரில் இருக்கும் நம் படையின் சிறந்த போர் வீரர்களை நம் எல்லைக்கு சென்று போர் புரிய வேண்டுமென்று ஆணையிடுகிறேன்.” 

 

“அப்படியே ஆகட்டும் அரசே!” என்று கூறி விடைபெற்றான் ஒற்றன். தன்னிடம் இருக்கும் படைவீரர்களில் சிறந்த வீரர்களை எல்லையில் இருக்கும் ரணவீரனுக்கு உதவிப் புரியவென அனுப்பினார் பாண்டிய மன்னர்.

 

**************************************************

 

“நம் வேங்கையனின் மரணத்திற்கு அந்த ரணவீரன் பதில் சொல்லியே தீரவேண்டும்.” 

 

“ஆம் தலைவரே! நம் கள்ளர்கூட்டத்தின் தலைசிறந்த வீரனை வெட்டி வீழ்த்தியதற்காக அந்த ரணவீரனையும் அவனது ஆசை மனைவியையும் பழி தீர்த்தாக வேண்டும்.”

 

“ஆணையிடுங்கள் தலைவரே! இப்போதே அவ்விருவரின் தலைகளையும் வெட்டி தங்களது காலுக்கடியில் வந்து போடுகிறேன்.”

 

“அமைதி கொள்க வீரர்களே! நீங்கள் கூறுவது அனைத்தும் எனக்கு நன்றாக புரிகின்றது. மரணித்த வேங்கையன் உங்களுக்கு கூட்டாளியென்றால் எனக்கு தவப்புதல்வன் ஆவான். அவனின் மரணத்திற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆனால் இச்சமயம் நான் தங்களது தலைவனும் ஆவேன். இங்கிருக்கும் ஒவ்வொருவரின் உயிருக்கும் நான் தான் காவல். கொஞ்சம் பொறுத்திருங்கள்; காலம் கனியும் போது அந்த பாதாள பைரவிக்கு அவர்களை பலியிட்டு எனது வேங்கையனின் மரணத்திற்கு நியாயம் செய்வேன்.” என்று கள்ளர்களும் அக்கூட்டத்தின் தலைவனும் வேங்கையனின் மரணத்திற்காக ரணவீரனையும் பூவிழியாழையும் பழிதீர்க்க காத்திருக்கின்றனர். 

 

*****************************************************

 

“மேற்கில் இருந்து வரும் படையை நாம் அர்த்த சக்கர வியூகம் அமைத்து தாக்குதல் நடத்த வேண்டும்.”

 

“அப்படியே ஆகட்டும் அரசே!”

 

“மற்றும் நம் படையின் மறுபாதி கிழக்கில் இருந்து மண்டல வியூகம் அமைத்து தாக்குதல் நடத்த வேண்டும்.”

 

“அப்படியே ஆகட்டும் அரசே!” என்று படைத்தளபதிகள் கூற, போரிடும் இடத்தையும் நேரத்தையும் மற்றும் வியூகங்களையும் வகுத்துக் கொண்டான் ரணவீரன். தனது படைவீரர்களை ஒருங்கிணைத்து அவர்களின் முன்னே வந்தவன்,

 

“நம் நாட்டின் ஒரு பிடி மண்ணைக்கூட அவர்களுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது.” என்று 

 

“ஆம்! ஆம்! நம் நாட்டிற்காக எங்களது உயிரையும் கொடுப்போம் அரசே! வாழ்க பாண்டிய நாடு! வாழ்க மாவீரர்!” என்று படைவீரர்கள் கோஷம் எழுப்பினர். அவர்கள் அனைவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பூவிழியாழ். கடுமையான பயிற்சிக்கு பிறகு அனைவரும் உணவருந்த செல்ல தானும் அவர்கள் நிற்கும் வரிசையில் நின்று கொண்டாள். 

 

‘என்ன சாப்பாடு போடுவாங்க? பிரியாணி? சிக்கன் க்ரேவி? லட்டு? பால்கோவா? இல்லேனா சாம்பார், அவியல், வத்தக்குழம்பு.. ம்ம் யம்மி..’ என்று யோசித்தவாறு வரிசையில் நின்றிருந்தவளின் முன்னே ஒரு குவளையில் கஞ்சியை நீட்டினர். அதனைக் கண்டதும் அவளது முகம் சுருங்கி விட்டது. 

 

‘இதப் போய் சாப்பிடச் சொல்றாங்களே?! யோவ்! மூட்டையெல்லாம் தூக்கி, சண்டயெல்லாம் போட்டது இந்த கஞ்சித் தண்ணியை கூடிக்கத்தானா? ஏன்டா இந்த இத்துப்போன நாலு வாழைத்தாருக்கு ஒரு கோடியா? இதுக்கா இம்புட்டு பில்டப்பு கொடுத்தீங்க? எங்கடா அந்த ராணா?’ என்று மனதுக்குள் புலம்பியவாறே ரணவீரனைத் தேடிச் சென்றாள்‌ பூவிழியாழ். கையில் கஞ்சிக் குவளையோடு மதுரையை எறித்த கண்ணகியைப் போல் வந்து நின்றவளை பார்த்த ரணவீரன், என்னவென்று தன் புருவங்களை உயர்த்தி கேட்க, அவனின் விழிப்பார்வையில் வீழ்ந்து போனாள் பூவிழியாழ். தான் என்னக் கூறுவதற்காக வந்தோம் என்பதையே மறந்து அவனைப் பார்த்தவாறே நின்றிந்தவளின் அருகில் வந்த ரணவீரன், 

 

“ஏன் அப்படி பார்க்கின்றாய்? உனக்கு என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா?” என்று கேட்க, அப்போது தான் தன் கையில் இருக்கும் கஞ்சிக் குவளையே அவளுக்கு ஞாபகம் வந்தது. 

 

“யோவ் ராணா! என்னயா இது? நாட்டை காப்பாத்துறதுக்காக இவங்க எவ்ளோ போராடுறாங்க. அவங்களுக்கு நல்ல சாப்பாடு கொடுக்காம, இப்படி அரை வயிறுக்கும் கால் வயிறுக்குமா சாப்பாடு போடுற. நீ இவ்ளோ கஞ்சனா இருப்பேன்னு நான் நினைச்சிக் கூட பார்க்கல.” 

 

“நல்ல சாப்பாடு சாப்பிட்டு விருந்துறவாடவா இவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்? தங்களது உணர்வுகளை தியாகம் செய்து, நாட்டிற்காக தங்கள் உயிரை அர்ப்பணிக்க வந்திருக்கிறார்கள். இனி இவர்கள் செல்லும் இடங்களில் சரியான உணவு வகைகள் கிடைக்குமோ? கிடைக்காதோ? ஆனால் கஞ்சி நிச்சயம் கிடைக்கும். அதுமட்டுமின்றி இது குடிப்பதினால் அவர்கள் நோய்வாய்ப்பட மாட்டார்கள். நாட்டு மக்களின் வரியை வீணாக்காமல் நாட்டிற்காக போராட கற்றுக் கொள்கிறார்கள். இப்போது புரிகிறதா? ஏன் இவர்கள் கஞ்சிக் குடிக்கின்றனர் என்று”

 

“அதெல்லாம் சரி தான். அது ஏன் படைவீரர்கள் மட்டும் தான் குடிக்கணுமா? நீயெல்லாம் குடிக்க மாட்டியா? அரசனுக்கு ஒரு நீதி; படைவீரர்களுக்கு ஒரு நீதியா? நல்லாருக்கே உன் நியாயம்.”

 

“வெட்டும் வாளிற்கு தெரியாது. அவை யார் சொல்லி வெட்டுகின்றன? யாரை வெட்டுகின்றன? என்று. இவைகளெல்லாம் அதனை கையாளத் தெரிந்தவனுக்கு மட்டுமே தெரியும் ராஜதந்திரம். இவர்கள் அனைவரும் என்னைச் சுற்றி இயங்குபவர்களானாலும் இவர்களை இயக்குபவன் நான். எனவே நான் எவ்விதமான உணவுவகைகளை எடுத்துக் கொள்ள வேண்டுமோ அவைகளை மட்டுமே உட்கொள்வேன்.”

 

“அய்யோ இப்போ எனக்கு ரொம்ப பசிக்குதே! அங்கே மல்லி எனக்காக விதவிதமா சமைச்சு கொடுப்ப. இங்க இந்த கஞ்சியைத் தான் நான் குடிக்கணுமா?”

 

“நீ இந்த கஞ்சியை குடிக்க வேண்டிய அவசியமில்லை. உனக்காக எனது கூடாரத்தில் உணவு வகைகள் தயாராக இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு நிபந்தனையுடன் நீ அதை அருந்தலாம்.”

 

“என்ன?”

 

“நீ அதை சாப்பிட்டப் பின் அரண்மனைக்கு திரும்பிச் செல்ல வேண்டும்.”

 

“க்கும். நீ இதத்தான் சொல்வேன்னு எனக்கு நல்லா தெரியும். உன்கிட்ட அவ்வளவு சீக்கிரம் நான் தோல்வியை ஒத்துக்க மாட்டேன். ” என்றவள் தன் கண்ணை மூடிக்கொண்டு கையில் இருந்த கஞ்சியை மொத்தமாக குடித்து முடித்தாள். 

 

“இன்னொரு தடவ அரண்மனைக்கு திரும்பிச் செல், அப்படின்னு சொன்ன, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” என்று முறைத்தவாறு கூறி அங்கிருந்து சென்றாள் பூவிழியாழ். 

 

“வீரர்களே! இப்போது அனைவரும் நீராடும் நேரம். ஐம்பது நாழிகைக்குள் அனைவரும் நீராடி முடித்திருக்க வேண்டும்.” என்று அங்கதன் கூற, அனைவரும் குளிப்பதற்காக வரிசையில் சென்று நின்று கொண்டனர். இதனை தனது கூடாரத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ரணவீரன் வேகமாக வெளியே வந்து பூவிழியாழை நோக்கினான். அனைத்து ஆடவர்களும் மாற்று உடையுடன் நீராட வரிசையில் நிற்க, அனைவருக்கும் கடைசியாக வரிசையில் நின்று கொண்டிருந்தாள் பூவிழியாழ். அவளருகில் வந்த ரணவீரன்,

 

“இதோ பார் விழி! இங்கே இருப்பவர்கள் அனைவரும் ஆண்மகன்கள். இங்கு நீ நீராடுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆகையால் எனதிடத்தில் வந்து நீராடி கொள்.” என்று கூற, தன் கையைப் பிடித்திருந்த அவனது கையை உதறிய பூவிழியாழ்,

 

“அதெப்படி? நீங்க எனக்கு மணமுறிவு சான்றிதழ் கொடுப்பீங்களாம்; என்கூட சேர்ந்து வாழ மாட்டீங்களாம்; ஆனா இப்படி ஜீனி பூதம்‌ மாதிரி திடீர் திடீர்னு வந்து உதவி செய்வீங்களாம். உங்க மனசுல நீங்க என்ன தான் நினைச்சுட்டுருக்கீங்க? முதல்ல இங்க இருந்து போங்க. ஓ! இது உங்க படைவீரர்கள் இருக்குற இடம்ல? ஓகே! அப்போ நான் போறேன்.” என்றவள் தன் மாற்று உடையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள். 

 

அத்தியாயம் 22

 

‘இந்த ஹல்கு எதுக்கு நான் எங்க போனாலும் பின்னாடியே வர்றான்? லவ்வெல்லாம் பண்ண மாட்டானாம்; ஆனா அக்கறையா பார்த்துப்பானாம்; நல்லாருக்கு கதை. அய்யோ உடம்பெல்லாம் அரிக்குது; பேட் ஸ்மல் வேற வருது.’ என்று மனதுக்குள் நினைத்தவாறே தன்னை நுகர்ந்து பார்த்தவளுக்கே குமட்டிக் கொண்டு வந்தது. 

 

‘இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லோரும் தூங்க போயிடுவாங்க. சோ அப்போ போய் யாருக்கும் தெரியாம குளிச்சிடலாம்.’ என்று திட்டம் தீட்டியவாறே மாலை நேரத்திற்காக காத்திருக்கலானாள் பூவிழியாழ். மாலையில் அனைவரும் உறங்குவதற்காக தங்களது கூராங்களுக்குள் செல்ல, தனியே நின்றிருந்த அங்கதனிடம் சென்ற பூவிழியாழ்,

 

“நான் எங்க போய் தூங்குறது? என்னோட கூடாரம் எங்க இருக்கு?” என்று கேட்க,

 

“என்னுடன் வாருங்கள் அரசியாரே!” என்ற தன்னுடன் பூவிழியாழை அழைத்துச் சென்ற அங்கதன், ரணவீரனின் கூடாரத்தினை கை காட்டினான். 

 

“அரசியாரே! தங்களுக்காக மன்னர் காத்திருக்கின்றார். தங்களுக்கான படுக்கைகள் அரசரின் கூடாரத்தில் தான் போடப்பட்டுள்ளது.” என்று கூறியவனை உறுத்து விழித்த பூவிழியாழ், நேரே ரணவீரனிடம் சென்றாள்.

 

“யோவ் ராணா! நீ தான் என்னைய வேணாம்னு சொல்லிட்டல்ல, அப்புறம் எதுக்குய்யா நான் உன் கூட இந்த கூடாரத்துக்குள்ள தூங்கணும்? ஒழுங்கு மரியாதையா எனக்கு தனியா பெட் போட்டுக் கொடு. அப்படியில்லனா?”

 

“அப்படியில்லை எனில்?”

 

“நான் எல்லோர் கூடவும் சேர்ந்து ஒரே கூடாரத்துக்குள்ள தான் தூங்குவேன்.”

 

“அப்படியா? அது உன்னால் முடியுமா?

 

“பாரு! இப்பவே போய் அவங்க எல்லோர்கூடவும் சேர்ந்து தூங்குறேன்.” என்றவள் விறுவிறுவென அனைவரும் ஒன்றாக உறங்குவதற்காக போடப்பட்டிருந்த கூடாரத்திற்குள் நுழைய, இவளைப் பார்த்ததும் அனைவரும் அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர். 

 

“நான் என்ன பேயா? பிசாசா? என்னையப்‌ பார்த்து எதுக்கு இவங்க எல்லோரும் ஓடணும்?” என்று அங்கிருந்த அங்கதனிடம் கேட்க,

 

“தாங்கள் எங்கள் அரசியார். தங்களுடன் இவர்கள் இங்கு தங்கினால் அரசரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதனால் தான் அனைவரும் இங்கிருந்து ஓடுகின்றனர்.” என்று கூறிவிட்டு அங்கதன் அங்கிருந்து செல்ல,

 

‘அடேய் ராணா! உன்னால என்னோட நிம்மதி போச்சு; சந்தோஷம் போச்சு; முக்கியமா சாப்பாடு போச்சு; உடம்பெல்லாம் குளிக்காம அரிக்குது; இப்போ பாவம் இவங்க எல்லோருடைய தூக்கமும் போச்சு.’ என்று புலம்பியபடியே அங்கிருந்த படுக்கையில் படுத்துக் கொண்டாள் பூவிழியாழ். 

 

படுத்துக் கொண்டிருந்தவள் திடீரென எழுந்து அமர்ந்தாள்.

 

“அய்யோ முடியலையே! இவனுங்க எல்லாம் போர்ல சாகப்போறானுங்கன்னா, நான் இப்படி சொரிஞ்சு சொரிஞ்சே சாகப் போறேன். நிம்மதியா தூங்கக்கூட முடியல. உடம்பெல்லாம் அரிக்குது.” என்று புலம்பினாள். பின்னர்,

 

“ஐடியா! இந்த அர்த்த ராத்திரில யாரும் முழிச்சுருக்க மாட்டாங்க. நான் இப்படி போய் அப்படி குளிச்சுட்டு வந்தாக்கூட யாருக்கும் தெரியாது.” என்று முணுமுணுத்தவாறு தனது மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறையை நோக்கிச் சென்றாள். அந்தோ பரிதாபம்! பாதுகாப்பு வீரர்கள் அவ்விடத்தை சுற்றி வருவதைப் பார்த்து அங்கிருந்து ஓடியவளின் காதில் நீரின் சலசலப்பு கேட்க, அத்திசையை நோக்கி சென்றாள். அங்கு ஓடை ஒன்றை கண்டவள், தனது ஆடைகளை நீக்கி விட்டு, தனது துண்டை மார்போடு கட்டிக் கொண்டாள். தண்ணீரில் கால் வைக்க அது ஐஸாக குளிர்ந்தது. 

 

‘அய்யோ இப்படி குளிருதே?! இதுல குளிச்சேன்னா கண்டிப்பா ஜன்னி வந்து செத்துப் போயிடுவேன். ஆனா எனக்கு வேற வழியில்லயே. ஜன்னி வந்து செத்தாலும் பரவாயில்ல; சொரிஞ்சு சொரிஞ்சே சாகக்கூடாது.’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டவள், ஜில்லென்று இருந்த ஓடையினுள் இறங்கினாள். தண்ணீரை எடுத்து தன் மேல் வாரியிறைத்துக் குளித்துக் கொண்டிருந்தவளின் பின்னால் இருந்து யாரோ வரும் சத்தம் கேட்கவே, மறைவான இடத்தை நோக்கி நகர எண்ணியவளின் காதில்,

 

“அசையாதே! அப்படியே இரு.” என்ற ரணவீரனின் குரல் கேட்டது. 

 

“யோவ் ராணா! எங்கப் போனாலும் உன் தொல்லை தாங்கல. இங்க எதுக்குயா வந்த? நிம்மதியா குளிக்கக்கூட விடமாட்டியா?”

 

“பேசாதே! அசையாதே! அப்படியே இரு.”

 

“ஏன்? என்னைய என்னப் பண்ணப் போற”?

 

“உன் பின்னால் விஷப்பாம்பு இருக்கின்றது.”

 

“என்னது பாம்பா?” என்றவள் திரும்பி அவனை அணைப்பதற்கும், அப்பாம்பை எடுத்து அவன் எறிவதற்கும் சரியாக இருந்தது. நடுங்கியவாறு தன்னை அணைத்து நின்றிருந்தவளை கோபமாக பார்த்த ரணவீரன்,

 

“உமக்கு சற்றேனும் அறிவென்பது இருக்கின்றதா? இப்படித்தான் யாவருக்கும் சொல்லாமல் நடுஇரவில் இங்கு வருவதா? இந்த குளிரில் உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் நான் என்ன செய்வேன்?” என்று கத்திக் கொண்டிருந்தவனை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பூவிழியாழ். திடீரென தன் காலுக்கடியில் ஏதோ ஊர்வது போல் இருக்க, சட்டென தாவி அவனது இடுப்பில் அமர்ந்து கொண்டாள். 

 

“பாம்பு! பாம்பு!” என்று கத்தியவளைத் தொடர்ந்து கீழே பார்த்தவன் முன்னே இருந்தது தவளை. 

 

“அய்யோ அழகி! இங்கே பார். அது பாம்பல்ல; நுணல்.”

 

“என்னது நுணலா? அப்படின்னா?”

 

“அப்படியென்றால் அதோ அங்கே பார்!” என்றவன் கைநீட்டிய திசையில் தாவித் தாவி தன் இணையை துரத்திக் கொண்டு சென்ற தவளையைப் பார்த்தாள் பூவிழியாழ். தன்னை பார்க்காது தரையைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் நடுங்கும் மேனியையும் அதில் துளி துளியாய் வலிந்து கொண்டிருந்த நீரையும் பார்த்த ரணவீரன், தன்னை தோள்களை இறுக்கி அணைத்திருந்த கையில் மென்மையாக முத்தமிட, சிலிர்த்தெழுந்தது பூவிழியாழின் பெண்மை. மெல்ல தன் இதழினால் அவள் மேனியில் இருக்கும் நீர் துளிகளை தேன் துளிகளாய் நினைத்து சப்பி சுவைத்துக் கொண்டே, அவளது கழுத்தருகே வந்து இளைப்பாறினான். தலைமுடிக்கு எதுவும் போடாமலேயே அவள் குளித்திருக்க, அதில் இருந்து வந்த வாசனையை நுகர்ந்தவாறே அவளது காது மடலில் முத்தமிட, அதன் கூச்சம் தாங்காது சட்டென ரணவீரனின் இடையில் இருந்து குதித்திறங்கினாள் பூவிழியாழ். வெறும் துண்டை மட்டுமே கட்டியிருந்தவளின் தளிர் மேனியை தன் கண்ணால் மேய்ந்தவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்த பூவிழியாழோ தன் கைகளைக் கொண்டு தன் மேனியை மறைத்துக் கொண்டாள். சட்டென அவன் தனக்கு மணமுறிவு சான்றிதழ் அளித்தது ஞாபகத்திற்கு வரவே,

 

“யோவ் ராணா! தள்ளி நில்லு. நீயா வருவ, என்னைய கட்டிப்பிடிச்சு முத்தா கொடுப்ப. அப்புறம் உன்னை எனக்கு பிடிக்கலன்னு சொல்லி மணமுறிவு சான்றிதழை தூக்கி எறிவ. என்னய்யா நினைச்சிட்டுருக்க உன் மனசுல? நான் என்ன உனக்கு விளையாட்டு பொம்மையா? நீ என்னைய தூக்கி கொஞ்சுறதுக்கும் திடீர்னு தூக்கி எறியுறதுக்கும் நான் என்ன உன் கைபொம்மையா? ரத்தமும் சதையும் உள்ள மனுஷி. உங்க இஷ்டத்துக்கு என்னைய ஆட்டி வைக்குறீங்க. மனசு எவ்ளோ வலிக்குது தெரியுமா? நீயா ஒன்னை நினைச்சு அது தான் சரின்னு ஒத்தக்கால்ல நிப்ப. என்னையப் பத்தி ஒரு தடவையாவது யோசிச்சுப் பார்த்தியா? முதல்ல நான் யார் தெரியுமா? நீங்க எல்லோரும் நினைக்குற மாதிரி நான் பூவிழியாழ் இல்ல. என் பெயர் ஆருஷா. நான் எதிர்காலத்துல இருந்து இங்க வந்துருக்கேன். நான் எப்ப திரும்பி போவேன்னு எனக்கே தெரியாது. எப்ப அந்த பூவிழியாழ் இங்க வருவான்னும் தெரியாது. ஆனா எனக்கு உன்னைய விட்டு போக விருப்பமில்ல. நீ அடிக்கடி சொல்லுவியே! உன்னில் வித்தியாசமாக ஏதோ தெரிகின்றதுன்னு. காரணம் நான் இந்த காலத்துப் பொண்ணேயில்ல. எந்த காரணமும் இல்லாம நீ என்னைய வேணாம்னு சொல்லும் போது, இவ்வளோ காரணம் இருக்கும் போது நான் ஏன் உன்னைய வேணாம்னு சொல்லக்கூடாது? இப்ப சொல்றேன் நீ எனக்கு வேணாம். நான் திரும்பி என்னோட உலகத்துக்கே போறேன். போயா! போயா! லெக்கான் கோழி.” என்றவாறே தன் உடைகளை அணிந்து கொண்டு, எங்கு செல்கிறோம் என்றே அறியாது, தன் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்திருந்தாள் பூவிழியாழ். அவள் கூறிய விஷயங்களை ஜீரணிக்க முடியாமல் தடுமாறி நின்றிருந்தான் ரணவீரன். அவள் கூறிய அனைத்தும் கனவில் நடப்பது போல் தோன்றியது. 

 

‘இப்படியும் நிகழுமா? அவள் என்னை விட்டு நீங்கிச் சென்றுவிடுவாளா? அப்படி அவள் என்னை விட்டு நிரந்தரமாக சென்றுவிட்டால் என் நிலையென்ன?’ என்று யோசித்தவாறே நின்றிருந்தவனுக்கு சிறிது நேரம் கழித்து தான் தன்னவள் அங்கில்லை என்பதே உறைத்தது. 

 

‘அய்யோ! அவள் எங்கு சென்றாள்? அவளுக்கு இங்கிருக்கும் நாட்டைப் பற்றி ஒன்றும் தெரியாதே?! இப்போது என்ன செய்வேன்?’ என்று தனக்குள் புலம்பியவாறே பூவிழியாழைத் தேடிச் சென்றான் ரணவீரன்.

 

பூவிழியாழின் மனதை புரிந்து அவளோடு இணைவானா ரணவீரன்?

 

4 thoughts on “இரகசிய மோக கனாவில் 21&22”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top