ATM Tamil Romantic Novels

இரகசிய மோக கனாவில் 25&26

அத்தியாயம் 25

 

“நாளைக்கு காலைல நம்ம முருகன் கோயில்ல உனக்கும் சின்னாக்கும் கல்யாணம்.”

 

“டேய் ராக்கி! உனக்கென்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சுருச்சா? இன்ஸ்டென்ட் சாப்பாடு மாதிரி திடீர்னு கல்யாணம் பண்ணி வைக்கணும்குற?! நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்க வேண்டாமா? கல்யாணத்துக்கு நகை புடவை எல்லாம் எடுக்கணும், நாலு பேரை கூப்பிட்டும், பந்தல் போடணும், பந்தி பரிமாறணும். வர்றவங்க மனசார வாழ்த்தணும். இவ்வளவு இருக்குடா. நீ என்னமோ ஃபாஸ்ட் ஃபுட் ரெடிங்குற மாதிரி பொண்ணு மாப்பிளைய ரெடி பண்ற?! உன்னோட கல்யாணம் தான் யாரும் எதிர்பாராத மாதிரி நடந்துச்சு. இவ கல்யாணமாவது நாலு பேருக்கு சொல்லி தடபுடலா பண்ணணும்னு நினைச்சா, இப்படி சொல்ற?!”

 

 “நான் ஒன்னு சொன்னா, அதுல கண்டிப்பா ஏதாவது காரணம் இருக்கும்னு புரிஞ்சுக்கோங்க. எனக்கு மட்டும் மைதிலி அக்கா பொண்ணு கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கணும்குற ஆசையில்லயா? ஆனா நிலைமை அப்படி இருக்குதே?!”

 

“என்னமோ போ! நீ சொல்ற, நாங்க கேட்குறோம்.” என்றவாறே காரின் பின் இருக்கையில் வசதியாக சாய்ந்து தன் கண்களை மூடிக் கொண்டார் மரகதவல்லி. 

 

“பாட்டி! கொஞ்சம் சும்மா இருங்களேன். அத்தான் எது செஞ்சாலும் அதை நல்லா யோசிச்சு தான் செய்வார். நீங்க சும்மா குறுக்க புகுந்து கட்டைய போடாதீங்க. அவரை கல்யாணம் பண்ணா போதும்.” என்று தன் கண்களை மூடி, நடக்கவிருக்கும் தனது திருமணத்தை கனவில் நினைத்து ரசித்தப்படி தன் அருகில் தன்னுடன் வைத்துக் கொண்டிருந்த அனுராகாவின் கையை நறுக்கென்று கிள்ளினார் மரகதவல்லி.

 

“ஏன்டி?! அவன் என்ன சொன்னாலும் அப்படியே கேட்பியா? நாளைக்கு வெள்ளக்காக்கா மல்லாந்துட்டு போகுதுன்னு சொல்லுவான்; நீயும் ஆமா அத்தான் ஜோடியா சொய்ங்குன்னு போச்சுன்னு மேலப் பார்க்காமலேயே சொல்லு.” என்றவரை முறைத்துப் பார்த்தவளின் அருகே இருந்த சின்னாவின் முகம் புன்னகையில் மின்னியது. மெல்ல மரகதவல்லி பாட்டி அருகில் சென்ற அனுராகா, 

 

“தாய் கிழவி! என்னோட கல்யாணத்துக்கு ஏதாவது ஸ்பீட் ப்ரேக் போட்ட?!” என்று கூற, அவளை திமிராகப் பார்த்த மரகதவல்லி,

 

“என்னடி பண்ணுவ? என் தலைய சீவிடுவியோ?” என்ற கேட்டவரின் கன்னத்தில் பசக்கென்று முத்தமிட்டவள்,

 

“இதே மாதிரி பல இம்சைகள் பண்ணுவேன். வேணுமா?” என்று கூறி கண்ணடிக்க, அவளைப் பார்த்துக் கொண்டே தன் தலையில் அடித்துக் கொண்டார் மரகதவல்லி. 

 

“கலிகாலம்.. கலிகாலம்.. எல்லாம் கலி முத்திடுச்சு..” என்றவர் கூற, சத்தமிட்டு சிரித்தனர் ராக்கி, சின்னா மற்றும் அனுராகா. அவர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே வர, சிரிக்கும் ராக்கியின் முகத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டு வந்தாள் ஆருஷா. 

 

“ஹேய் பொண்டாட்டி! எதுக்குடி மாமனை இப்படி உத்து உத்துப் பார்க்குற? மாமே அம்புட்டு அழகாவா இருக்கேன்?” என்று தன் அருகே கோவில் செப்பு சிலை போல் அமர்ந்து தன்னையே முழுங்கி விடுவது போல் பார்த்திருந்த ஆருஷாவைப் பார்த்து கூறிய ராக்கி, சட்டென கண்ணடித்தான். அவன் பார்த்த பார்வையில் ஏற்கனவே குங்குமமென சிவந்து இருத்தவளின் கன்னங்கள், அவளது கண் சிமிட்டலில் ரத்த நிறமாக மாறியது.

 

“என்னடியாச்சு உனக்கு? இப்படி பார்க்குற? இப்படியெல்லாம் பார்க்காத, அப்புறம் மாமே இப்படியே வண்டியை வீட்டுக்கு திருப்பி, உன்னைய நம்ம ரூம்குள்ள தள்ளிட்டு போயிடுவேன்.” என்ற ராக்கியின் தொடை மேல் தன் கையை வைத்து ஆருஷா அழுத்த, ஜிவ்வென்றிருந்தது ராக்கிக்கு. 

 

 “என்னடி வர வர ஒரு மார்க்கமா தான் இருக்க?! அன்னைக்கு கோயிலுக்கு போறதுக்கு முன்னாடி வரைக்கும் நானா உன்னைய தேடித் தேடி வந்துட்டுருந்தேன். ஆனா இப்போல்லாம் நீயா வந்து என் மடிமேல உட்கார்ற; நீயா எவ்ளோ வேணுமோ முழுசா உன்னைய தர்ற! என்ன விஷயம்? மாமே அழகுல மயங்கிட்டியா?” என்ற ராக்கியின் இடது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்ட ஆருஷா,

 

“ஏன் என் மாமனுக்கு என்ன குறை? தாங்கள் ஆணழகன்; என் இதயத்தை ஆளும் தேவாதி தேவன்.” என்றவாறே அவனது புறங்கையில் தன் இதழைப் பதித்தாள். 

 

“அப்ப்ப்பாஆஆஆஆ.. சும்மா சரக்கடிச்ச மாதிரி கிக்கோ.. கிக்குடி. பிரம்மன் படைச்ச உயிர் உள்ள ஓவியம்டி நீ. உன் பார்வையே ஆளை இழுக்குது டி. அப்படி என்ன சொக்குப்பொடிடி தூவின? அன்னைக்கு இந்த கண்ணுக்குள்ள விழுந்தவன் தான் இனி வாழ்க்க ஆயுசுக்கும் எந்திரிக்க முடியாதேடி.” என்றவன் கூறிய ராக்கியின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள் ஆருஷா. ஏனெனில் ஒன்பது கிரகங்களும் நேர்கோட்டில் வர இன்னும் இரு நாட்களே இருக்கும் பட்சத்தில், யாரோடும் வாழாத தன் வாழ்வை இந்த இரு நாட்களுக்குள் வாழ்ந்து தீர்த்து விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள் ஆருஷா. இன்னும் இரு நாட்களில் அம்மாணிக்கங்களை பயன்படுத்தி அப்பெட்டியை திறந்து, தன் உலகிற்கு செல்ல நினைத்திருந்தாள் ஆருஷா. ராக்கியை விட்டுப் பிரிவது என்பது அவளது உயிரையே துண்டு துண்டாக வெட்டி போடும் வலியை கொடுத்தது. ஆனால் வேலுநாச்சியாருக்கு தான் கொடுத்த வாக்கிற்காகவும் பூவிழியாழாக அங்கு வாழ்பவளுக்காகவும் அவள் இங்கிருந்து செல்வது மிகவும் அவசியம் என்று நினைத்தாள். தன்னை நம்பும் மனிதர்களுக்கு உண்மையுள்ளவளாக இருக்க நினைத்து, தன் காதலை துறக்க முடிவு செய்திருந்தாள். ஆதலால் தான் ராக்கியுடன் இருக்கும் வரை அவனை மொத்தமாக அவனை தனக்குள் நிறைத்துக் கொண்டிருந்தாள் ஆருஷா. 

 

சின்னா மற்றும் அனுராகாவின் திருமணத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு அனைவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சின்னா அனுராகாவிற்கு கல்யாணப்புடவை எடுத்திருப்பதை விட ராக்கி ஆருஷாவிற்கு புடவை தேடி எடுக்கவே அதிக நேரம் எடுத்துக் கொண்டது. 

 

“ஏன் அத்தான்? இது உங்களுக்கே நியாயமா இருக்கா?” என்று கேட்ட அனுராகாவை காரில் இருந்த கண்ணாடியாகப் பார்த்து புருவங்கள் சுருக்கினான் ராக்கி.

 

“எது நியாயமா?”

 

“இல்ல.. நடக்கப் போறது எங்களோட கல்யாணம் தானே?!”

 

“ஏன் அதுல உனக்கேதும் சந்தேகம் இருந்தா? உன் பக்கத்துல பழியாடாய் உட்கார்ந்துருக்கான் பாரு, அவனை கேளு.”

 

“க்கும் இவர்கிட்ட நான் கேட்டு, அதுக்கு இவர் பதில் சொல்லி விளங்கிரும். இன்னைக்கு கேட்டா நாலு நாள் கழிச்சு தான் பதில் சொல்லுவாரு.” என்ற அனுராகாவின் கைவிரல்களுக்குள் தன் கைவிரல்களை கோர்த்துக் கொண்டான் சின்னா. மெல்ல அவளது காதருகே தனது இதழ்களை கொண்டு சென்றவன்,

 

“எனக்கு பேசவெல்லாம் தெரியாது. ஆனா செயல்ல காட்டத் தெரியும். காட்டவா?” என்று  கேட்ட சின்னாவை நிமிர்ந்து பார்க்க முடியாது திணறிய அனுராகாவை,

 

“என்ன சின்னா பதில் சொல்லிட்டான் போல?! உன்னோட பதிலையே காணோம்.” என்ற ராக்கியின் குரல் நிகழ் உலகிற்கு கொண்டு வந்தது. 

 

“போங்க அத்தான். எனக்கு புடவை எடுத்ததை விட ஆரு அக்காக்கு எடுத்தது தான் அதிகம். அதுவும் புடவையை அவங்க மேல வைச்சுப் பார்க்குறேன்னு நீங்க பண்ண அட்டகாசத்திற்கு அந்த மொத்த புடவை கடையும் சாட்சி சொல்லும்.”

 

“உனக்கு பொறாமை. வேணும்னா உன் ஆளு பக்கத்துல தானே உட்கார்ந்து வர்றான். அவனோட சட்டைய புடிச்சு கேளு. ஏன்டா தடியா நீ ஏன் எனக்கு அந்த மாதிரி எதுவுமே பண்ணலைன்னு?!” என்று ராக்கிக் கூற,

 

“அடேய் தடியங்களா! கொஞ்சம் நல்லப் பேச்சு பேசுங்க டா. சின்னஞ்சிறுசுங்களை பக்கத்துல வைச்சு கிட்டு என்னப் பேச்சு பேசுறீங்க?” என்று வேலுநாச்சியார் கேட்க,

 

“இங்கு யார் சின்னஞ்சிறுசுங்க ராஜமாதா?! அப்படி என்றால் என்ன?” என்று அறியாது கேட்ட ஆருஷாவை ராக்கி கனிவுடன் பார்த்தான் என்றால் சின்னாவைத் தவிர மற்ற அனைவரும் கொலைவெறியோடு பார்த்திருந்தனர். அவளது கேள்விகளுக்கு பதில் சொல்வது அவர்கள் அல்லவா?! 

 

“சின்னஞ்சிறுங்கன்னா வேற யாருமில்லடா ஆரு. நானும் உன் ராஜமாதாவும் தான் அந்த சின்னஞ்சிறுசுங்க.” என்று மரகதவல்லி கூற, “ஓ..” என்று அதிசயித்தவளின் இதழ்களை கவ்வி சுவைக்கும் ஆசை வந்தது ராக்கியிற்கு. சிறிது நேரத்தில் காரில் அனைவரும் தூங்கிவிட, ராக்கி மற்றும் ஆருஷா மட்டும் தூங்காது ஒருவரை ஒருவர் பார்வையால் பருகிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். தங்களது காருக்கு முன்னே பைக்கில் ஒரு ஜோடி ஒருவரை ஒருவர் இறுக்கி அணைத்தப்படி சென்று கொண்டிருக்க, அதனைக் கண்ட ஆருஷாவின் விழிகளில் அரை நாழிகையேனும் ஏக்கம் வந்து போக, அதனை கண்டு கொண்டான் ராக்கி. சற்று தூரத்தில் காரினை நிறுத்தி கீழே இறங்கிய ராக்கி, யாருக்கோ போனில் அழைத்து சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் காருக்கருகே வந்தான். பின் சீட்டில் அமர்ந்திருந்த சின்னாவை அழைத்து கார் சாவியை கொடுத்து வீட்டிற்கு செல்லுமாறு கூறினான் ராக்கி.

 

“மச்சி! மயங்க்கும் மல்கோத்ராவும் உன்னை கொல்றதுக்கு மிருகமா சுத்திட்டு இருக்காங்க. இந்த நேரத்துல நீ வெளில அதிக நேரம் சுத்துறது நல்லதில்லை மச்சி! இப்போ கல்யாணம் வேணாம்னு சொன்னா அதையும் கேட்க மாட்டேங்குற. சிஸ்டருக்கு வேற உடம்பு சரியில்லை போலடா. அடிக்கடி வேலு பாட்டியோட வாஷ்ரூம் போயிட்டு வர்றாங்க. என்னன்னு கேட்க எனக்கும் சங்கடமா இருக்கு. நீ அதை கவனிச்சியா இல்லையான்னு தெரியல. இப்போ கார் சாவியை என்கிட்ட கொடுத்துட்டு நீ எங்கப் போறேன்னு தெரியல. நீ என்ன தான்டா நினைச்சுட்டுருக்க?!”

 

“என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கு நல்லாவே தெரியும் மாப்ள. இந்தா உள்ள அமுக்குனி மாதிரி உட்கார்ந்துருக்கா பாரு?! உன் தங்கச்சி. அவ என்கிட்ட ஒரு பெரிய முக்கியமான விஷயத்தை மறைச்சுட்டு உட்கார்ந்துருக்கா. முழுப் பூசணிக்காயை சோத்துல வைச்சு மறைச்சா விஷயம் வெளில தெரியாதுன்னு அவ நினைச்சுட்டுருக்க. ஆனா அவளோட ஒவ்வொரு அசைவுக்கும் எனக்கு மட்டும் தான் அர்த்தம் தெரியும்னு அவளுக்கு தெரியலடா. இப்போக்கூட பைக்ல போக ஆசைப்பட்டு ஏக்கமா பார்க்குறா. ஆனா உரிமையா எதுவும் வாய் விட்டு கேட்க மாட்டேங்குறா. இந்த மாதிரி நேரத்துல அவ ஏக்கமா இருக்கக்கூடாதுடா. அதுனால நான் அவளை கூட்டிட்டு பைக்ல வர்றேன். நீ இவங்களை எல்லாம் பத்திரமா கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு போ. அப்புறம் இந்த கல்யாணம் மைதிலியக்காவோட கனவு. நாளைக்கு அவங்களோட நினைவுநாள். அவங்களுக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேத்தப் போற நாள். எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு.” என்று கூறிய‌ ராக்கியின் அருகே பைக்கொன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய ராக்கியின் விசுவாசி, அதன் சாவியை அவன் கையில் கொடுத்தான். 

 

“ராக்கி உன்னோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம் டா.” என்ற சின்னாவின் வார்த்தைகளை சிறிதும் மதியாது, காரில் அமர்ந்திருந்த ஆருஷாவை இறக்கியவன், அவளை தன் கை வளைவிற்குள் வைத்து கொண்டு,

 

“அதிகமா பேசாத. இவனும் உன்கூட உங்க பாதுகாப்புக்கு வருவான்.” என்று தன்னிடம் பைக்கை கொண்டு வந்து கொடுத்தவனையும் அவர்களோடு காரில் செல்ல சொல்லியவன், “பத்திரமா வீட்டுக்கு போயிட்டு மெசேஜ் பண்ணு.” என்றக் கூறி அனைவரையும் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தான். பின்னர் பைக் சாவியை ஆருஷாவின் முன்னே ஆட்டிக் காண்பித்தவன், அவளது இடையோடு கையிட்டு தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தான்.

 

“பைக்குல போகணும்னா, அடேய் தடியா! எனக்கு பைக்ல உன்னை இப்படி இறுக்கிக் கட்டிப் பிடிச்சுட்டு போகணும். அப்படின்னு ஃப்ரீயா பேசுடி. இந்த ராக்கி உன் வாய் திறந்து சொல்றதை மட்டுமில்ல உன் விழிபார்வை சொல்றதை கூட செய்றவன். போலாமா?!” என்றவன் பைக்கில் அவளை தன் பின்னே அமர்த்திக் கொண்டான். அவளது இரு கைகளையும் எடுத்து தன் இடுப்போடு பின்னிக் கொள்ள செய்தான். அவளது முன்னழகு மேனி முழுவதும் ராக்கியின் பின்னோடு படர்ந்திருக்க, காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தது ராக்கியின் பைக். இதுபோல் அனுபவமில்லாத ஆருஷாவிற்கு காற்றில் பறப்பது போல் இருக்கவே, தன் முகத்தை ராக்கியின் தோளில் வைத்தாள். தன் முகத்தில் வந்து மோதிய காற்றோடு சேர்த்து ராக்கியின் ஆண்மை வாசத்தையும் தன்னோடு நிரப்பிக் கொண்டிருந்தாள் ஆருஷா. பைக்கின் கண்ணாடி வழியாக அவள் முகத்தில் வழிந்த சந்தோஷத்தை பார்த்துக் கொண்டே இன்னும் அதிவேகமாக சென்றான் ராக்கி.  

 

சிறிது நேரத்திலேயே நகரத்தை விட்டு வெளியே வந்திருந்தனர். செல்லும் வழியில் சிறு கிராமம் ஒன்று கண்டனர். அங்கு நடந்த அம்மன் ஊர்வலத்தை கண்டதும் ஆருஷாவின் கண்கள் மின்னின. அம்மன் அலங்காரத்தில் ஜொலிக்க, பல்லாக்கில் ஏற்றி நகர் ஊர்வலத்திற்கு தயாராக்கிக் கொண்டிருந்தனர். அந்த ஊரின் எல்லையில் கூட்டத்தில் அனைவரும் அம்மனை மறைத்து நின்றிருக்க, அம்மனை தரிசிக்க முடியாது எக்கி எக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருஷா. அதனை கண்ட ராக்கி, பைக்கினை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு, ஆருஷாவின் இடையைப் பற்றி தூக்கியவன், தன் தோளில் அமர்த்திக் கொண்டான்.  இப்போது அனைவரையும் விட மிக உயர்ந்த இடத்தில் இருந்து அம்மனை கண்ணாற தரிசித்தவளின் காதல் பக்தனாக மாறி, அவளது மகிழ்ச்சியை தனக்குள் தரிசித்துக் கொண்டிருந்தான் ராக்கி. அம்மனை மீண்டும் கோவிலுக்குள் அழைத்துச் செல்லவென்று பல்லாக்கை திருப்பி ஊருக்குள் விட, ராக்கியின் தோளில் மேல் அமர்ந்து கொண்டிருந்தவளுக்கு வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. அவனிடமிருந்து கீழே இறங்க எண்ணியவளை மெல்ல பைக்கின் ஓரம் அழைத்துச் சென்றவனின் கையைப் பிடித்து கொண்டு குடலே வெளியே வந்து விடும் அளவிற்கு வாந்தி எடுக்க ஆரம்பித்தாள் ஆருஷா. அவளின் நெற்றியை இதமாக பிடித்துக் கொண்டவன், பைக்கின் முன்னால் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்து அவளை சுத்தப்படுத்தினான். வாந்தி எடுத்து, அதன் தாக்கம் தாளாது தன் மீது சாய்ந்தவளை நெஞ்சில் தாங்கிக் கொண்டான் ராக்கி. தாங்கள் இருக்கும் இடத்தை சுற்றிப் பார்த்தவன், தான் நிற்கும் இடத்திற்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த புளியம்பழத்தை பிடிங்கி அதனை உறித்து ஆருஷாவின் வாயில் வைக்க, அதனை ஆசையோடு சுவைத்த ஆருஷாவின் விழிகள் சட்டென ஆச்சரியத்தில் விரிந்தன.

 

“உங்களுக்கு எப்படி? நான்.. நான்..”

 

“நான் அப்பாவாகப் போறேன். நமக்கு குட்டி சொந்தம் ஒன்னு வரப்போகுது. கரெக்டா?” 

 

“அது அது வந்து..”

 

“நீ எதுக்குடி இப்படி சாக்காகுற?! எனக்கு எப்படி தெரிஞ்சுதுன்னா?! உன் மூச்சுக்காத்துக்கூட நீ என்ன நினைக்குறன்னு என்கிட்ட சொல்லிரும்டி. இவ்ளோ பெரிய விஷயம் தெரியாம போகிடுமா? ஆனாலும் அந்த தாய்கிழவி ரொம்ப தான் வாழ்க்கைல விளையாடுது. அது தானே இதை என்கிட்ட சொல்லக்கூடாதுன்னு உன்கிட்ட சொல்லிருக்கும்?! நீயும் அது பேச்சை கேட்டுட்டு எப்பவும் போல பூம்பூம் மாடு மாதிரி மண்டைய ஆட்டிருப்ப?! அப்படி தானே?! இருக்கட்டும் அந்த கிழவிய நான் கண்டம் விட்டு கண்டம் கடத்தல?!” என்றவனின் வாயை தன் கை கொண்டு மூடினாள் ஆருஷா. 

 

“இவன் நம் மகன். இவனை நான் மறைக்க எண்ணவில்லை. எனக்கே இன்று காலை தான் தெரியும். எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தான் ராஜமாதாவிடம் கூறினேன்.”

 

“இந்த விஷயத்தை முதல்ல என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணவே இல்லல.”

 

“எனக்கு அச்சமாக இருந்தது. நீங்கள் செய்யும் வன்முறையின் நிழல் நம் மகனின் மீது விழுந்து விடுமோ என்கிற அச்சம் தோன்றியது.”

 

“ஏய்.. நான் அப்படித்தான். எனக்கு மட்டும் என்ன ஆசையா? இப்படி போற இடத்துல எல்லாம் கத்தியையும் துப்பாக்கியையும் தூக்கிட்டு திரியணும்னு?! இருபது வருஷப் பகைடி. அவ்ளோ சீக்கிரம் முடிஞ்சுருமா? நான் யாருன்னு தெரியுமா? எதுவுமே இல்லாத அனாதையாக சுத்திட்டு இருந்த என்னைய இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்தது யாருன்னு தெரியுமா? அவங்களுக்கு என்னாச்சு தெரியுமா?”

 

“இவை யாவும் எனக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. எனக்கும் நம் மகனுக்கும் வன்முறை இல்லாத அமைதியான வாழ்க்கை  தான் வேண்டும்.”

 

“அது எப்டிடி தாலி கழுத்துல ஏறுனதுக்கு அப்புறம் புருஷன் மேல வர்ற காதல் புள்ள உண்டானதுக்கு அப்புறம் அந்த புள்ள மேலயே ஃபுல்லா போயிடுது. உன்னைய கல்யாணம் பண்ணப்பவும் இதே மாதிரி தான் இருந்தேன். அப்ப நீ பயந்த மாதிரி தெரியலையே?! இப்ப புள்ள வந்தப்புறம் புள்ளைய கொடுத்தவன் தப்பானவனா தெரியுறேன் அப்படித்தானே?!” என்ற ராக்கியின் நெஞ்சில் சாய்ந்து கொண்ட ஆருஷா,

 

“அப்படியெல்லாம் இல்லை அய்யனே! நான் உங்கள் மீது வைத்திருப்பது மாசற்ற காதல். ஒரு மனைவியாய் என் உயிரைத் தாண்டித் தான் எமனும் உங்கள் மீது பாசக்கயிற்றை வீச இயலும். நம் மகனும் இவ்வாறு தங்களைப் போல் நிம்மதியற்று இருக்கும் நிலை வந்துவிடுமோ என்பதே என் கவலை. என்னை புரிந்து கொள்ளுங்கள்.” என்று கூறியவளின் பேச்சு சட்டென நின்று போனது. ராக்கியின் நெஞ்சில் சாய்ந்திருந்தவள், மெல்ல சரியத் தொடங்க, அவளை கீழே விழாமல் தாங்கிப் பிடித்தவனின் கையில் செந்தணலாய் அவளது உதிரம். 

 

“பேபிஇஇஇஇஇஇஇ..” என்றவனின் கைகளில் கண்ணில் வலியோடு வழியும் கண்ணீருடன் துடித்துக் கொண்டிருந்தாள் ஆருஷா. 

 

அத்தியாயம் 26

 

“பேபிபிஇஇஇஇ..” என்று ஆருஷாவின் கன்னத்தை தட்டிக் கொண்டிருந்தவனின் மொபைல் அழைக்கவே, அதனை எடுத்து காதில் வைத்தவனிடம்,

 

“என்ன வலிக்குதா? ரொம்ப வலிக்குதோ? இன்னும் வலிக்கணும்டா. அவ உன் கண்ணு முன்னாடி துடிதுடிச்சு சாவா. இது ஆரம்பம் தான். இனி உன் கண்ணு முன்னாடியே ஒவ்வொருத்தரா சாவாங்க.” 

 

“மயங்க்க்க்க்..” என்று கத்தியவன், தனது மொபைலில் இருந்து தன்னுடைய மருத்துவமனைக்கு அழைப்பு விடுக்க, ஆம்புலன்ஸ் அவர்களைத் தேடி ஓடி வந்தது. தன் கண்முன்னால் உணர்வற்று படுத்திருந்தவளுக்கு சுழற்சி முறையில் அவளது வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்தவன், அவளது இதயப் பகுதியில் கை வைத்து அழுத்தம் கொடுக்க, அடுத்த ஐந்தாவது நிமிடம் மூச்சை இழுத்தபடி கண்விழித்தவளைத் தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டவன், ஆம்புலன்ஸில் ஏற்றி முதல் உதவி அளித்துக் கொண்டே மருத்துவமனையை நோக்கிச் சென்றான். 

 

“ஏய் இங்கப்பாரு டி.. என்னையப் பாருடி.. இப்படி பாதிலயே விட்டுட்டு போகலாம்னு நினைச்ச?! அவ்வளவு தான்.” என்றவனின் முகத்தை வலியோடு பார்த்திருந்தவளின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான் ராக்கி. அவளது முகத்தில் தெரிந்த கலக்கத்தைப் பார்த்தவன், அவளது வயிற்றில் தன் கையை வைத்து,

 

“உனக்கும் எதுவும் ஆகாது; நம்ம புள்ளைக்கும் எதுவும் ஆகவிடமாட்டேன். என்னைய நம்புடி.” என்றவனின் இதழ்கள் தன் கையோடு கோர்த்திருந்த ஆருஷாவின் கையில் முத்தமிட்டு சென்றது. அவனைப் பார்த்து கொண்டே கண்களை மூடியவளின் கன்னங்களை தட்டியபடியே மருத்துவமனை வந்து சேர்ந்தவன், தன் மனைவியை யாருக்கும் தரமாட்டேன் என்னும் விதமாக அவளை விட்டு இம்மியளவும் நகராது நின்றிருந்தான். அம்மருத்துவமனையே ராக்கியினுடையது; ஆதலால் அவனை ஐசியூ அறையை விட்டு வெளியே அனுப்பும் தைரியம் அங்கு யாருக்கும் வரவில்லை. சிகிச்சை நடை பெறும் போதும் ஆருஷாவின் கைகளை விட்டானில்லை. ஆருஷாவின் நெஞ்சுப் பகுதிக்கும் தோள்பகுதிக்கும் இடையே துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பதால் அதனை சுலபமாக நீக்கியிருந்தனர். ஆருஷாவையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த ராக்கியிடம் வந்த மருத்துவர்கள்,

 

“இனி நீங்க பயப்படுற மாதிரி எந்த ஆபத்தும் இல்ல. தாயும் சேயும் நலமா இருக்காங்க. அதிகப்படியான ரத்தப் போக்குனால கொஞ்சம் டயர்டா இருப்பாங்க. சோ கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க. பெட் ரெஸ்ட் கண்டிப்பா எடுக்கணும்.” என்று கூறிவிட்டு செல்ல, தன் கண் முன்னே அமைதியாக உறங்கும் ஆருஷாவின் நெற்றியில் முத்தமிட்டவன்,

 

“இது தான் கடைசி. இந்த ஒரு தடவை நான் போய் தான் ஆகணும். நான் திரும்பி வர்ற வரைக்கும் நம்ம புள்ளைய பத்திரமாப் பார்த்துக்கோ.” என்ற ராக்கி, அங்கு பதற்றத்துடன் வந்த சின்னாவிடம்,

 

“மாப்ள! குடும்பத்தை பத்திரமாப் பார்த்துக்கோ. எனக்கு முடிக்க வேண்டிய கணக்கு ஒன்னு பாக்கியிருக்கு.” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்ற ராக்கியின் கைகளைப் பிடித்து தடுத்து நிறுத்தினான் சின்னா.

 

“சிஸ்டர் கண்ணு விழிச்சு நீ எங்கன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்? வேணாம் மச்சி. இந்த மாதிரி நேரத்துல நீ சிஸ்டர் பக்கத்துல தான் இருக்கணும். நான் போறேன் டா. அவனுங்களை நானே என்னோட கையால கொன்னுட்டு ஜெயிலுக்கு போறேன்.”

 

“இது என்னால ஆரம்பிச்சது; நான் தான் முடிக்கணும். நீ இங்க இருந்து எல்லாத்தையும் பார்த்துக்க; நான் சீக்கிரம் வந்துடுவேன்.” என்று கூறிய ராக்கி, அங்கிருந்து வேகமாக வெளியே சென்றான். 

***************************************************

“பிரபல தொழிலதிபர் மிஸ்டர். மயங்க் ராஜ்பூத் இன்று காலையில் ஏற்பட்ட கார் விபத்தினால் கோமாவிற்கு சென்றுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.” என்று காலையில் எழுந்ததும் தொலைக்காட்சியில் தான் பார்த்த தலைப்பு செய்தியால் மல்கோத்ராவிற்கு நெஞ்சுவலியே வந்துவிடும் போல் இருந்தது. மல்கோத்ராவும் மயங்க் ராஜ்பூத்தும் சேர்ந்து தான் ராக்கியை கொல்வதற்கு திட்டம் வகுத்து அதனை செயல்படுத்தினர். ஆனால் அதில் ஆருஷா இடையில் வருவாளென அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை. மேலும் அடிபட்ட சிங்கத்தின் பிடரியை பிடித்திருப்பது போல் மயங்க் ராக்கிக்கு ஃபோன் செய்து அதனை செய்து, ராக்கியை மேலும் கோபப்படுத்தியிருந்தனர். அதன் விளைவைத் தான் இப்போது தன் எதிரே பார்த்தார் விராட் மல்கோத்ரா. யாராலும் தொட முடியாத மயங்க் ராஜ்பூத்தையே அடித்து மூச்சு பேச்சில்லாமல் படுக்க வைத்திருக்கும் ராக்கிக்கு, சிறு எறும்பு போல் இருக்கும் மல்கோத்ராவை கொல்வது அவ்வளவு பெரிய விஷயமல்லவே! பயத்தில் உடல் முழுவதும் வேர்த்து, மெல்ல நெஞ்சில் சுருக்கென்று வலியெடுக்க தண்ணீர் குடிக்க வேண்டிய திரும்பிப் பார்த்த மல்கோத்ராவின் மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது. கர்ஜிக்கும் சிங்கத்தைப் போன்று கால் மேல் கால் போட்டு, சிவந்த விழிகளோடு, எந்நேரமும் தாக்க தயார் என்பது போல் வேங்கையின் வேட்கையோடு சோஃபாவில் அமர்ந்து இருந்தான் ராக்கி. 

 

“ரா.. ரா..ஆஆஆ.. க்.. க்.. கி.. கி..இஇ..”

 

“கூல் கூல் மல்கோத்ரா சார். வாய் வழியா ஹார்ட் வெளிய வந்துடப் போகுது. என்னடா இவ்வளோ நாள் உங்கக் கூட எல்லாத்துலயும் ஒன்னா இருந்தவன், இப்போ உங்கள மட்டும் தனியா விட்டுட்டு கோமால கிடக்குறான்னு ரொம்ப வருத்தப்படுறீங்க போல?! ச்சு.. ச்சு.. ரொம்ப கஷ்டப்படாதீங்க மல்கோத்ரா சார், இதோ ஒரு அஞ்சு நிமிஷம் பொறுத்துக்கோங்க. உங்களை அவரோட நிலைக்கு ரொம்ப சேஃபா அனுப்பி வைக்குறேன்.” என்ற ராக்கி, தன் கையில் வைத்திருந்த மொபைலை எடுத்து மல்கோத்ராவிடம் காட்ட, அதனைப் பார்த்த மல்கோத்ராவிற்கு உண்மையிலேயே நெஞ்சுவலி வந்து விட்டது. 

 

“அடடா.. பார்க்க இது உங்களோட சின்ன வீடு மாதிரி இல்ல?! ம்ம்ம்ம்ம்ம்.. அப்போ அடுத்த வீடியோ பாருங்களேன். இது உங்க பெரிய வீடு மாதிரி தெரியல?!” என்று அவர்கள் அனைவரும் துப்பாக்கி முனையில் இருப்பது போல் அப்பதிவில் இருக்க, செய்வதறியாது திணறினார் விராட் மல்கோத்ரா. 

 

“என்ன எனக்கு மட்டும் தான் குடும்பம் இருக்குதா? உங்களுக்கு இல்ல? நீ குருவிக்கூட்டம் மேல கல்லு எரிய நினைச்சு, தேனீக்கூட்டம் மேல எரிஞ்சுட்டியே! அது உன்னை கொட்டாமவிடாதே! இப்போ உன்னால உன் மொத்த குடும்பமும் மேல போகப் போகுது. நான் எப்படி என் கண்ணு முன்னாடி என் உசுரு துடிச்சதைப் பார்த்தேனோ?! அதே மாதிரி நீயும் துடிக்கணும்.” என்றவன் தன் கைபேசியை எடுத்து அதில் யாருக்கோ அழைத்தவன், “முடிச்சுருங்க” என்று கூற, தன் குடும்பத்தை தான் கொன்றுவிட்டானோ என்ற அதிர்ச்சியில் விராட் மல்கோத்ராவின் இதயம், அதன் துடிப்பை நிறுத்தியது. 

 

“இந்த ராக்கியோட நிழலை தொடணும்னு யோசிச்சாலே உருத்தெரியாம பண்ணிடுவேன். ஆனா நீங்க என் குடும்பத்து மேல கை வைக்குற அளவுக்கு வந்துருக்கீங்கன்னா, அந்த தைரியத்தை முளையிலேயே கிள்ள வேண்டாம்?! இந்த ராக்கியோட வழில யார் வந்தாலும் இதை விட மோசமா அனுபவாப்பாங்க.” என்றுரைத்த ராக்கி, மயங்க் ராஜ்பூத் மற்றும் விராட் மல்கோத்ராவின் ஒட்டு மொத்த சம்ராஜ்யத்தையும் ஒன்றுமில்லாது தரைமட்டமாக்கினான். ஆருஷாவை சுட்டவனின் கையை வெட்டியவன், 

 

“ஹை ஓல்ட்டேஜை தொட்டா ஷாக்கடிக்கும்னு தெரிஞ்சே தொட்டா, இப்படித் தான் சட்டுன்னு ஆளையே தூக்கி வீசிடும்.” என்று அங்கிருந்த அனைவரையும் சூரசம்ஹாரம் செய்வதை போல் சூரையாடினான். 

******************************************************

கண்விழித்ததும் ராக்கியை தான் தேடினாள் ஆருஷா. ஆனால் அவனிற்கு பதிலாக அனுராகாவையும் சின்னாவையும் தான் கண்டாள். அவன் வருவானென்று மருத்துவமனையில் இருந்த ஒரு மாதமும் வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள். அவன் வரவை எதிர்பார்த்து ஏமாந்து போனவளின் ஏமாற்றமே நாளடைவில் அவன் மேல் கோபமாக மாறியது. தன் குழந்தை நன்றாக இருக்கின்றதாவென மருத்துவரைக் கேட்டு அறிந்து கொண்டவளின் மனம் அதனை தன் தலைவனிடம் பகிர்ந்து கொள்ள எண்ணியது. ஒவ்வொரு நவீன மருத்துவ உபகரணஙக்ளைப் பார்த்தும் பயந்து போய் நின்றிருந்தவளின் மனம் முழுவதும் மன்னவனின் மதிமுகமே நிறைந்திருந்தது. சின்னாவிடம் எந்த ஒரு கேள்விக்கும் பதில் கிடைக்காமல் போனதால், யாரிடமும் பேசாது தன் மௌனம் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தாள். வீட்டிற்கு வந்தவளை அனைவரும் பரிவுடன் பார்த்துக் கொண்டாலும், கோதையவள் தன் கொண்டவனின் மடி தேடினாள். தனது மசக்கையின் மயக்கத்தையும், உடல் சோர்வையும், வாந்தியையும் பற்றி அவனிடம் பகிர்ந்து கொள்ள ஆவல் கொண்டாள். தான் இங்கிருக்கும் வரைக்கும் தனது மன்னவனின் மதிமுகத்தை தனக்குள் நிறைத்துக் கொள்ள எண்ணினாள். ஏனெனில் ஒன்பது கோள்களும் நேர்கோட்டில் வரும் நாளன்று அப்பெட்டிகளை பாதாள பைரவியின் கோவிலில் சேர்ப்பித்து, அதில் அவள் பயணம் மேற்கொண்டால் மட்டுமே அக்குறிப்பிட்ட காலத்திற்கு செல்ல முடியும். இல்லையேல் அவளால் எப்போதும் தன் காலத்திற்கு திரும்பிச் செல்ல இயலாது. ஆருஷாவாக காலம் முழுவதும் இங்கே பூவிழியாழும், பூவிழியாழாக காலம் முழுவதும் அங்கே ஆருஷாவும் வாழ வேண்டிய நிலை ஏற்படும். ராக்கியை விட்டு இம்மியும் விலகாது வாழவே ஆருஷா விரும்பினாள். ஆனால் வேலுநாச்சியாரின் குற்றம் சாட்டும் விழியை பார்க்க முடியாது, அவளது குற்ற உணர்வு மேலோங்கியதால் தன் காதலனையும் காதல் வாழ்க்கையையும் விட்டுக் கொடுக்க முடிவெடுத்தாள். இன்று இரவு தான் முழு சித்ரா பௌர்ணமி. ஒன்பது நேர்கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் நாள். இப்போது ஆருஷாவிடம் இரு வழிமுறைகள் உள்ளன. ஒன்று காலச்சக்கரப் பெட்டிக்குள் சென்று தன் காலத்தை அடைய வேண்டும். அவ்வாறு செய்வாளேயானால், அங்கிருக்கும் பூவிழியாழும் தன்னைப் போல் நிகழ்காலத்திற்கு வந்துவிடுவாள். அவ்வாறு இன்றைய சூழ்நிலையை தவறவிட்டு விட்டால் இனி எப்போதும் அவர்கள் இருவரும் தத்தமது காலங்களுக்கு எப்போதும் திரும்பி வரவே  முடியாது. அதுமட்டுமின்றி அக்காலச்சக்கரமும் பாதாள பைரவியின் உலகிற்கு சென்றுவிடும். இது அப்பெட்டியினுள் எழுதியிருக்கும் சித்தர் வாக்கு. ஆகவேதான் இறுதியாக ஒரு முறை ராக்கியை காண எண்ணினாள். ஆனால் ராக்கி எங்கிருக்கின்றான் என்று யாருக்கும் தெரியாதே! அப்படி இருக்கும் போது எவ்வாறு ஆருஷாவிடம் அவனிருக்கும் இடத்தைப் பற்றி கூற முடியும்? ராக்கியின் நினைவாக மொட்டை மாடியில் நடைபயின்று கொண்டிருந்தவளிடம் வந்தார் வேலுநாச்சியார்.

 

“இப்போ உனக்கு சந்தோஷமா? நீ உன்னோட வயித்தை மட்டும் இப்படி நிறைச்சுக்கிட்டு, என் பேத்தி வாழ்க்கையை அம்போன்னு விட்டுட்டியே?! நீ உன் புருஷன் உன் குடும்பம்னு நீ மட்டும் சந்தோஷமா இருந்தா போதும்?! அடுத்தவங்க எக்கேடு கெட்டா உனக்கென்ன? கடைசில என் பேத்தியை கண்ணால பார்க்க முடியாமலேயே சாகப் போறேனே!” என்று அழுத வேலுநாச்சியாரை நோக்கி நடந்து வந்த ஆருஷா,

 

“கொடுத்த வாக்கை என்றும் நான் மீறுவதில்லை. இன்றிரவு உங்கள் பேத்தியை உங்களிடம் ஒப்படைப்பேன்.” என்றவள் நேரே சின்னாவிடம் சென்றாள். அவன் அசந்திருந்த நேரம் பார்த்து, அப்பெட்டிகள் அடைக்கப்பட்டிருந்த குடோனின் சாவியை எடுத்துக் கொண்டு அவ்விடத்திற்கு விரைந்தாள் ஆருஷா. 

 

‘இவளை நம்ம முடியாது; கடைசி நேரத்துல மனசு மாறி திரும்பி வந்துட்டாள்னா? என் பேத்தியோட நிலைமை என்னாகும்? அவ காலம் பூரா அங்கேயே இருந்துடுவாளே?! ம்ஹும்.. இந்த வேலுநாச்சியார் உசுரோடு இருக்குற வரைக்கும் என் பேத்திக்கு எதுவும் ஆகவிமாட்டேன். இவளையும் பார்த்தா பாவமா தான் இருக்கு. ஆனா பாசமா பாவமான்னு பார்த்தா பாசம் தான் கண் முன்னாடி வந்து நிக்குது.’ என்று மனதுக்குள் கூறியவாறே ஆருஷாவை பின் தொடர்ந்து சென்றார் வேலுநாச்சியார். தன் கண்முன்னே காலச்சக்கரம் பெட்டி இருக்க, அதன் அருகே சென்ற ஆருஷாவின் விழிகளில் ராக்கியே நிறைந்திருந்தான். அவனை நினைத்துக் கொண்டே தன் கையில் இருந்த மாணிக்கங்களை அச்சக்ரப்பெட்டியின் தாமரை இதழ்களுக்கு ஒன்றாக வைக்க, பெட்டியும் திறந்து கொண்டது. தனது காலத்தில் காலம் தனக்காக என்ன வைத்து காத்திருக்கின்றது என்பது அறியாமலேயே, தன் வயிற்றில் ராக்கியின் குழந்தையோடு அப்பெட்டியினுள் ஏறிப் படுத்துக் கொண்டாள் ஆருஷா. நிகழ்காலத்தை விட்டு கடந்த காலம் செல்லும் ஆருஷாவை அக்காலம் ஏற்றுக்கொள்ளுமா?

1 thought on “இரகசிய மோக கனாவில் 25&26”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top