ATM Tamil Romantic Novels

இரகசிய மோக கனாவில் 26&27

அத்தியாயம் 27

 

இறுதியாக தன் கணவனை நினைத்துக் கொண்டே கண்களை மூடியவளின் கைகளைப் பிடித்து யாரோ வெளியே பிடித்து இழுப்பதைப் போல் உணர்ந்தவள், தன் கண்களை திறந்து பார்க்க, அவளின் எதிரே அசாதாரண சூரனாக நின்றிருந்தான் ராக்கி. 

 

“எனக்கு தெரியும் டி. நீ இப்படி தான் ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணுவேன்னு. இந்த பெட்டிக்குள் போனா நீ உன்னோட காலத்துக்கு போயிருவேன்னு சொன்னேல. லூசு.. லூசு.. கடந்த காலத்துக்கு போக மாட்ட இறந்து இறந்தகாலத்துக்கு போயிடுவ. ஆமா.. உனக்கு இந்த ஐடியாவ யார் கொடுத்தா? இந்த தாய்கிழவி தானே கொடுச்சு. சொல்லு டி. இந்த கிழவியோட வேலை தானே இது. எங்க அந்த கிழவி?” என்ற ராக்கி வேலுநாச்சியாரை தேட, அங்கிருந்த தூணுக்கு பின்னால் பல்லி போல் ஒட்டிக் கொண்டிருந்த வேலுநாச்சியார்,

 

‘அய்யோ! போச்சு! போச்சு! கூப்பிடுறானே! நம்மள கொல்லாம விடமாட்டானோ? அய்யோ! போயும் போயும் இவன் கையாலயா நான் சாகணும்?’ என்று மனதுக்குள் நினைத்தவாறே ராக்கிக்கு பயந்து நின்றுக் கொண்டிருந்தவரை கண்டு கொண்டன ராக்கியின் விழிகள். 

 

“வாடி கிழவி இதெல்லாம் உன்னோட வேல தானா?”

 

“வயசுல பெரியவங்களை இப்படி தான் டி போட்டு பேசச்சொல்லி கொடுத்துருக்காங்களா? அய்யோ! எப்படிப்பட்ட ரௌடி பயலுக்கு என் பேத்தியை கல்யாணம் பண்ணி கொடுத்துருக்கேன்?!” 

 

“சும்மா உன்னோட பேத்தின்னு சொல்லி சீன் போடாத. உண்மையிலேயே இவ உன்னோட பேத்தியா இருந்திருந்தா இப்படித்தான் பெட்டிக்குள்ள வைச்சு பூட்டுவியா?” என்று வேலுநாச்சியாரைப் பார்த்து ராக்கி கேட்க,

 

‘க்கும்.. இதே என்னோட பேத்தியா இருந்துருந்தா என்னையத் தான் உள்ள வைச்சுப் பூட்டிருப்பா.. இவ யார் பெத்த புள்ளயோ இன்னைக்கு வரைக்கும் எனக்கு மரியாதை கொடுத்து நடந்துட்டு வர்றா. அது கூட உனக்கு பொறுக்கல?! மரியாதை இல்லாம பேச கத்துக் கொடுக்குற. பாண்டுரங்கா காலக் கொடுமைடா சாமி.’ என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தவர் வெளியே பச்சைப்புள்ளயாய் நின்றிருந்தார் வேலுநாச்சியார்.      

 

“பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத பச்சப்புள்ள மாதிரி நின்னா விட்டுவேன்னு நினைச்சியா? தாய்கிழவி! இன்னைக்கு தான் உனக்கு கடைசி நாளு. உன்னைய கொல்லாம விடமாட்டேன்.” என்று ஆக்ரோஷமாக கத்திய ராக்கியைப் பார்த்து உள்ளுக்குள் பயந்தாலும், வெளியே தைரியமாக இருப்பதைப் போல் காட்டிக் கொண்டார் வேலுநாச்சியார். 

 

‘பயபுள்ள நிஜமாவே கொன்னுடுவானோ? பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா!’ என்று தன்னைத் தானே தைரியமூட்டிக் கொண்டவர்,

 

“வாடாப்பா வா. என்னாமோ நான் வேணும்னே உன் பொண்டாட்டிய பெட்டிக்குள்ள வைச்சுப் பூட்டப் பார்க்குறேன்னு என் மேல கொலக்குத்தம் சாட்டுற? ஆமா! நான் தான் சொன்னேன்னா உன் பொண்டாட்டிக்கு எங்கப் போச்சு புத்தி?! இல்ல பாட்டி! என் அத்தானை பொத்தான் மாதிரி என் நெஞ்சுக்குள்ள வைச்சு வைச்சுருக்கேன். அவர் இல்லாமல் நான் வாழ மாட்டேன். அப்படின்னு ஒரே போடா போட்டுருந்தான்னா நான் ஏன்பா அவப் பின்னாடி அலையப் போறேன்? ஒரு வேளை அவளுக்கு உன்னைய பிடிக்கலையோ?! இல்ல நீ அவளை லவ் டார்ச்சர் பண்ணுறியா?! எதுக்காக உன்னைய விட்டு பிரிஞ்சு போகணும்னு துடியா துடிக்குறா?! வெல்லந் திங்குறது நீ; விரல் சூப்புறது நானா? நீ என்னத்தாப் பண்ணியோ என் பேத்தி உன் கூட வாழறதை விட சாகுறதே மேல்னு இந்த சவப் பெட்டிக்குள்ள போகப்பார்க்குறா. அதை தெரிஞ்சுகிட்டு என்னன்னு சரி பண்ண பார்ப்பியா? வந்துட்டான் நீயா நானா கோபிநாத் மாதிரி யார் மேல தப்பு இருக்குன்னு கண்டுபிடிக்குறதுக்கு?! நாட்டாமை எப்பவும் தீர்ப்பை எழுதிட்டு வந்து தீர்ப்பை சொல்லக்கூடாது; உண்மையெது பொய்யெதுன்னு தெரிஞ்சுகிட்டு தீர்ப்பு சொல்லணும். நல்லாருக்கே கதை?! ஏதோ என் பாட்டுக்கு சிவனேன்னு சாப்பிட்டு தூங்கிட்டுருந்தவ கண்ணுல திருட்டுத்தனமா இவ வெளியப் போறது பட்டுச்சு. சரி வயித்துப் புள்ளக்காரியாச்சே, ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடுமோன்ற பயத்துல பின்னாடியே வந்தா கொலைகாரி பட்டமா கொடுக்குற? நல்லாருக்குப்பா. ரொம்ப நல்லாருக்கு.” என்று பேசிய வேலுநாச்சியார் பேச்சில் தான் தவறு செய்துவிட்டோமோ என்ற குழப்பத்தில் நின்றிருந்தான் ராக்கி. 

 

‘யப்பா நாச்சி! இது தான் சரியான நேரம்; அவன் திரும்பவும் கண்டுபிடிக்குறதுக்குள்ள இப்படியே எகிறி குதிச்சு ஓடிடு.’ என்று மனதுக்குள் புலம்பியவாறே ராக்கியின் கவனத்தை ஈர்க்காத வண்ணம் நகர முயன்றவரின் புடவை காலச்சக்கரப் பெட்டியினுள் மாட்டிக் கொண்டது. 

 

‘அடங்கொப்பே தாமிரபரணில தலை முழுக! சீலை இப்படி மாட்டிக்கிச்சே! இதை எப்படி எடுக்குறது? இழுத்தா சீலை கிழிஞ்சுடும். இல்லேன்னா பொழப்பு சிரிப்பா சிரிச்சுடும். இப்ப என்னப் பண்றது?’ என்று புலம்பியவாறே, தன் புடவையை அப்பெட்டியில் இருந்து வெளியே எடுக்கப் போராடினார் வேலுநாச்சியார். அதே சமயம் ஆருஷாவை அந்நியப் பார்வை பார்த்தவாறு நின்று கொண்டிருந்த ராக்கியைப் பார்த்த ஆருஷா, சட்டென அவன் நெஞ்சில் சாய்ந்து,

 

“தயவு செய்து என்னை அவ்வாறு பார்க்காதீர்கள்! நான்.. நான்.. உங்களை மிகவும் விரும்புகிறேன். இவர்களது பேத்தியின் நிலையை அறியவே அக்காலம் செல்ல முடிவுசெய்தேன். மன்னவா! வேறு ஏதும் குற்றம் அறியேன். என்னை நம்புங்கள் நாதா! என்னால் உங்களை விட்டுப் பிரியவே இயலாது. உயிரை விடலாம் என்றால் வயிற்றில் உங்களது உயிர் இருக்கிறதே! அதை எவ்வாறு அழிப்பேன் நாதா?! என்னை நம்புங்கள் நான் உங்களை விட்டுப் பிரிய எண்ணவில்லை; என் உயிர் உள்ளவரை அது நடக்கவும் நடக்காது. என் உயிர் ஆன்மா அனைத்திலும் நீங்களே நிறைந்து இருக்கிறீர்கள். தங்களது பூ முகமே நிறைந்திருக்கிறது. கண் விழித்ததும் நான் தேடியது உங்களைத்தான். மசக்கையினால் நான் படும் அவஸ்தைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள என் மனம் துடித்தது நாதா! தங்களது வரவை எண்ணி எண்ணி என் கண்கள் தான் வேர்த்ததேத் தவிர தாங்கள் வரவில்லை. இருப்பினும் இந்நாள் இந்நேரத்தை தவறவிட்டால் என்னால் அக்காலத்திற்கு எந்த ஜென்மத்திலும் செல்ல இயலாது. ராஜ மாதாவின் பேத்தி பற்றிய நிலையை அறிய எனக்கிருக்கும் ஒரே வாய்ப்பையும் தவற விட்டு விடுவேன்; பிறகு அக்குற்ற உணர்ச்சியால் நான் கொஞ்சம் கொஞ்சமாக மடிந்துவிடுவேன் நாதா! ஆகையால் தான் நான் காலத்திற்கு சென்று தங்களது நினைவாகவே வாழ்ந்து மடிந்துவிட முடிவு செய்தேன். இது நான்.. என் மனதார எடுத்த முடிவல்ல நாதா! நம்புங்கள்.. என்னை நம்புங்கள்.. அடியேனுக்கு தங்களை விட்டால் வேறு எந்த அடைக்கலமும் கிடையாது; தங்களிடம் முழு சரணாகதி அடைந்துவிட்டேன். நான் செய்ததை மறந்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் நாதா! என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிடாதீர்கள்; என்னை ஒதுக்கி வைத்து விடாதீர்கள். உங்களையன்றி எனக்கு வேறு உலகம் இல்லை. கருணை காட்டுங்கள் மகாப்பிரபு!” என்று தன் முன்னே அழுதுகொண்டு இருப்பவளை சமாதானப் படுத்த எண்ணியும், ராக்கியால் அதனை செய்ய முடியவில்லை. இன்னும் ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் அந்த தாய்கிழவி, ஆருஷாவை அவனது கண்ணில் காட்டாமல் கடந்த காலத்திற்கு பொட்டலம் கட்டி அனுப்பி வைத்திருக்குமே?! குற்ற உணர்ச்சியால் அவள் இம்முடிவு எடுத்திருந்தாலும் அவளால் தனியாக எப்படி இப்படி ஒரு முடிவை எடுக்க முடிந்தது? அதுவும் வயிற்றில் தன் குழந்தையை சுமந்துக் கொண்டு எப்படி அவளால் இப்படி ஒரு முடிவை எடுக்க முடிந்தது? என்னதான் அன்பைக் கொட்டி அவன் பார்த்துக் கொண்டாலும், அவனின் மனதினை அறியாது, ஒவ்வொரு முறையும் அவனது அன்பை உதாசீனம் செய்கிறாளே! என்ற ஆதங்கம் ஏற்பட்டது. அவளது கண்ணீரை நம்ப மனம் மறுத்தது. உண்மையாகவே அவள் தன்னை நேசிக்கின்றாளா? அல்லது தாலி கட்டிய கடமைக்கு குடும்பம் நடத்துகின்றாளா? என்பதை அறிய ஆவல் கொண்டான் ராக்கி.  

 

“இவ்வளவு கெஞ்சி கேட்கின்றேனே?! இன்னும் தங்களது கல்மனம் கரையவில்லையா? என் மனம் புரியவில்லையா? என்னை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? இந்தப் பாவியை மன்னித்து உங்களுடன் சேர்த்துக் கொள்ள மாட்டீர்களா? இன்னும் ஒரு முறை.. இன்னும் ஒரு முறை எனக்கு சந்தர்ப்பம் அளியுங்கள் நாதா! என் உயிர் உள்ளவரை உங்களை பிரிய மாட்டேன். இது நான் சுமக்கும் என் பிள்ளையின் மீது ஆணை. இப்போதும் தங்களுக்கு என் மீது நம்பிக்கை வரவில்லையா?” என்றவளின் வாயில் கை வைத்து மூடியவன்,

 

“உன்ன நம்புறேன். ஆனா ஒரு நிபந்தனை. இப்ப நான் பண்ணப் போற எந்த ஒரு விஷயத்துக்கும் நீ இடையில வரவேக்கூடாது. அப்படி நீ வந்தேன்னா அது தான் நீ என்னையப் பார்க்குற கடைசி நிமிஷமா இருக்கும். புரிஞ்சுதா?” என்று ராக்கி கேட்க, புரிந்தது எனும் விதமாக தலையை ஆட்டினாள் ஆருஷா.

 

காலச்சக்கரப் பெட்டியின் அருகில் தன் புடவையுடன் போராடிக் கொண்டிருந்த வேலுநாச்சியாரை நோக்கிச் சென்றான் ராக்கி. 

 

‘இவே எதுக்கு இப்ப என் பக்கத்துல வர்றான்? பயபுள்ள ஏதோ திட்டத்தோட தான் வருது. இந்த சீலையாவது வந்து தொலையுதா? அவே என் சாவுக்கு சங்கு ஊதுரதுக்குள்ள இங்கிருந்து எப்படியாவது தப்பிச்சு போயிடணுமே?! ஏழு குண்டலவாடா இவன் கிட்ட இருந்து என்னைய காப்பாத்திடுப்பா. உன் மலைக்கு நடந்தே வந்து மொட்டைப் போடுறேன்.’ என்று வேலுநாச்சியார் நினைத்திருக்க,

 

“இங்க ஒருத்தனுக்கு மொட்டை அடிச்சுட்டு திருப்பதில போய் அந்த ஏழுமலையானுக்கும் சேர்த்து மொட்டைப் போடப் போறியா தாய்கிழவி?!” என்று அவர் அருகில் வந்து ராக்கி கேட்க,

 

“நான் மனசுல நினைச்சது உனக்கு எப்படி கேட்டுச்சு?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் வேலுநாச்சியார்.

 

“மனசுல நினைக்குறதா நினைச்சுக்கிட்டு நீங்க வெளியில சத்தமா சொல்லிட்ட தாய் கிழவி!” என்று ராக்கி கூற,

 

“அய்யய்யோ!” என்று வாய் விட்டு அலறிய வேலுநாச்சியார்,

 

“அதுக்கு இப்போ என்னைய என்னப் பண்ணப் போற?” என்று பயந்து போய் கேட்க,

 

“ஆமா! உனக்கு உன் பேத்திய நேர்ல பார்க்கணும். அவ்வளவு தானே?!” என்று அவரைப் பார்த்து சந்தேகமாக கேட்டவனிடம்,

 

“ஆமா! ஆமா! இந்த கட்டை வேகுறதுக்குள்ள என் பேத்தியை கண்ணால ஒருதடவை பார்த்திட்டேன்னா போதும்! அப்புறம் நிம்மதியா கண்ணை மூடிடுவேன்.” என்றார் வேலுநாச்சியார். 

 

“அப்புறமென்ன? பெட்டிக்குள்ள குதிச்சு, உங்க பேத்தியை நேரடியாப் போய் பார்க்க வேண்டியது தானே?! என்ன பாட்டி நீங்க? இதைக்கூடவா நீங்க என்கிட்ட இருந்து மறைச்சு வைப்பீங்களா? சரி! சரி! நேரமாகுது டபார்னு உள்ள குதிங்க. போயி உங்க பேத்தியைப் பார்த்துட்டு வாங்க.”

 

“என்னது நானா?”

 

“பின்ன இங்க வேற யாரு பாட்டி இருக்கா? நிம்மதியா உங்க பேத்திக்கூடவே செட்டிலாகிடுங்க. என் பொண்டாட்டி புள்ளைய உங்க சுயலாபத்துக்கு என்னால் அடகு வைக்க முடியாது. நாங்க வாழ வேண்டியவங்க; ஆனா நீங்க வாழ்ந்து முடிச்சவங்க. அதுனால நீங்க தான் போகப் போறீங்க.” என்ற ராக்கி, சட்டென வேலுநாச்சியாரை தூக்கி காலச்சக்கரத்துக்குள் போட்டு மூடினான். ஆருஷாவின் கையில் இருந்த அத்தனை மாணிக்கங்களையும் அதற்குரிய இடத்தில் பொருத்தியவன், இறுதியாக அப்பெட்டியின் மீது எழுதி இருந்ததைப் படித்ததும், வேலுநாச்சியாரோடு காலச்சக்கரப் பெட்டிகளும் மாயமாகின. இனி இந்த ஜென்மம் முழுவதும் ராக்கியுடன் தான் ஆருஷாவின் வாழ்க்கை என்று விதி எழுதியிருக்க, அதை மாற்ற வேலுநாச்சியாரால் முடியுமா? பாவம்! தன் பேத்தியிடம் செல்வதற்காக பயணிக்கும் வேலுநாச்சியார், முழுதாக அவ்விடம் அடைவாரா?

 

அத்தியாயம் 28

 

அடுத்த நாள் காலையில் அமைதியாக நடந்தது சின்னா மற்றும் அனுராகாவின் திருமணம். எல்லாவற்றையும் தானே முன்னால் நின்று செய்தான் ராக்கி. திருமணம் முடிந்ததும் வீட்டிற்கு வந்த மணமக்களை மைதிலியின் படத்திற்கு முன்னால் நிற்க வைத்து,

 

“சின்னா இது அனுவோட அம்மா மைதிலியக்காவோட சொத்து பத்திரங்கள். இத்தனை நாள் இதை அனுவோட கார்டியனா பத்திரமா பார்த்துக்க வேண்டியதா இருந்துச்சு. எப்போ அனுவிற்கு கல்யாணம் ஆகிடுச்சோ இனி அவளோட புருஷங்குற முறையில நீதான் இனிமே இதையெல்லாம் பார்த்துக்கணும். இப்போ தான் என் மனசுல இருந்த பெரிய பாரம் இறங்குன மாதிரி இருக்கு. இனி இந்த சாம்ராஜ்ஜியம் முழுவதும் உன்னோடது. அதோட அனுவையும் பத்திரமா பார்த்துக்கோ. குறும்புக்கார பொண்ணு தான், ஆனா எடுத்துச் சொன்னா கேட்குக்குவா. உனக்கு இதெல்லாம் சொல்லணும்னு அவசியமில்ல தான். ஆனா சொல்ல வேண்டியது என்னோட கடமை.” என்றவனை இறுக அணைத்துக் கொண்டான் சின்னா.

 

“எங்களுக்கு இந்த சொத்து பத்து எதுவும் வேணாம். எங்களுக்கு எப்பவும் நீதான் வேணும். நானும் நீயும் எப்பவும் வேற வேற இல்லடா. எந்த சொந்தம் எனக்கு வந்தாலும் நீதான் எனக்கு முதல்ல, தெரிஞ்சுக்கோ. இனிமே இந்த மாதிரி பேசாத.” என்று அழுகுரலில் கூறியவனை பார்த்து புன்னகை புரிந்தான் ராக்கி. 

 

“இங்கப்பாரு! பொண்டாட்டிய பக்கத்துல வைச்சுக்கிட்டு இந்த மாதிரி உருக்கமா எல்லாம் பேசக்கூடாது. என்னைக்குமே பொண்டாட்டிக்கு தான் உன் மனசுல முத இடத்தை கொடுக்கணும். நம்பல மட்டும் நம்பி, நம்மக் கூட வாழ வர்றவ மனசு கோணாம நடந்துக்கோ.” என்று கூறிய ராக்கியின் கழுத்தை கட்டிக் கொண்டு தொங்கினாள் அனுராகா.

 

“இப்படி எல்லாம் பேசுற வேலைய விட்டுடு அத்தான். நான் பொறந்ததுல இருந்து எனக்கு அம்மாக்கு அம்மாவா, அப்பாக்கு அப்பாவா, அதட்டி வளர்க்குறதுல அண்ணனுக்கு அண்ணனா நீங்கதானே வளர்த்தீங்க. நானும் உங்களை விட்டு எங்கும் போகமாட்டேன்.” என்று மாறி மாறி சோகத்தை பிழிந்து கொண்டிருக்க, அவர்களது மனதை திசை திருப்பும் விதமாக,

 

“ஆமா! இந்த வேலுநாச்சி எங்கப் போனாங்க? நேத்துல இருந்து என் கண்ணுல படவே இல்ல?!” என்று மரகதவல்லி கேட்க, திருதிருவென விழித்தபடி ராக்கியைப் பார்த்தாள் ஆருஷா. பதட்டத்துடன் இருக்கும் தன் மனைவியை நோக்கி கண்ணடித்த ராக்கி,

 

“பாருங்க பாட்டி! வர வர எனக்கு ஞாபக மறதி ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு. நேத்து நைட்டு தான் உலகம் பூரா இருக்குற கோவிலுக்கு யாத்திரை போகணும்னு மூட்டை முடிச்செல்லாம் கட்டிட்டு கிளம்பிப் போயிட்டாங்க. நான் தான் டிக்கெட் எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். உங்கக்கிட்ட நான் சொல்லிக்குறேன்னு சொல்லி அனுப்பி வைச்சேன், ஆனா மறந்துட்டேன்.” என்று கூற,

 

“ஏன்டா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருந்தா நானும் அவங்கக்கூட போயிருப்பேன்ல? அவங்களை மட்டும் தனியா அனுப்பிருக்” என்று கேட்ட மரகதவல்லியின் கையைப் பிடித்து தனக்குள் வைத்துக் கொண்ட ராக்கி,

 

“நீங்களும் அவங்கக்கூட போயிட்டா, என் பொண்டாட்டிக்கு யாரு பிரசவம் பார்ப்பா? சும்மாவே நான் சொல்லுற எதையும் கேட்கமாட்டா. இந்த மாதிரி நேரத்துல சுத்தமா கேட்கமாட்டா.” என்று ஆருஷாவை பார்த்தபடி ஒருமாதிரி குரலில் கூறிய ராக்கியை கெஞ்சலுடன் பார்த்தாள் ஆருஷா. 

 

“நீ சொல்றதும் சரி தான். நானும் போயிட்டா அப்புறம் என்னோட கொல்லுப் பேரனை யார் பார்த்துப்பா? ஆனாலும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருக்கலாம்.” என்று சலித்துக் கொண்டார் மரகதவல்லி. 

 

“இந்த சான்ஸ் எப்ப கிடைக்குமோ? அதான் போகமாட்டேன்னு சொன்னவங்ககிட்ட, என் பாட்டி நல்லவங்க, வல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்கன்னு எவ்வளவோ எடுத்துச் சொல்லி அனுப்பி வைச்சுருக்கேன். ஆனா நீங்க என்னன்னா இப்படி சலிச்சுக்குறீங்க? போங்க! போங்க! யாரும் வேணாம். என் பொண்டாட்டி புள்ளைய நானே பார்த்துப்பேன்.” என்று கோபமாக கூறியவனின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவர்,

 

“ஆன்னா ஊன்னா கோபம் மட்டும் வந்துடுது. உன்னைய பெத்துப் போட்டுட்டு என் மவ கண்ணை மூடிட்டா. இதோ இவனை என் மருமவ பெத்துப் போட்டுட்டு மகராசி போய் சேர்ந்துட்டா. உங்களைப் பெத்தவனுங்க அவனுங்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு வேற எவளையோ கல்யாணம் பண்ணிட்டு போயிட்டானுங்க. ஒத்தப் பொம்பளையா நின்று உங்களை வளர்த்தேன். மைதிலி பொண்ணு தான் நம்மளை கூட்டிட்டு வந்து அதோட பங்களால வேலைப் போட்டு கொடுத்து, அவங்க குடும்பத்துல ஒருத்தரா நம்பள நடத்துச்சு. யார் கண்ணு பட்டுச்சோ அந்த மயங்க் பயே தொழில் போட்டிக்காக அனுவோட மொத்த குடும்பத்தையும் வெடிகுண்டு வைச்சு கொன்னுப் போட்டுட்டான். அன்னைல இருந்து எனக்கு மூணு பேரக்குழந்தைங்க ஆகிடுச்சு. செய்நன்றிக்காக இந்த குடும்பத்தை இன்னும் உன் தோள்ல சுமக்குற மாதிரி உன்னைய பொறுப்பா வளர்த்துருக்கேன்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு.” என்று கூற,

 

“நான் ஒன்னும் யாருமே இல்லாம வரலையே?! அம்மா மாதிரி இருந்து மைதிலியக்கா என்னைய வளர்த்தாங்க. இறந்து போற நேரத்துலயும் அவங்க என்னைய தானே தேடினாங்க. அவங்களுக்கு விசுவாசமா நடப்பேன்னு நம்பி தானே ஒரு வயசு அனுராகாவை என் கைல ஒப்படைச்சுட்டுப் போனாங்க‌. அந்த நம்பிக்கையை காப்பாத்தணும்னு தான் இத்தனை நாள் போராடினேன். அந்த மயங்க்கோட கண்ணு அனு மேல பட்டுடக் கூடாதுன்னு தான் யாருக்கும் தெரியாம வெளி நாட்டுல படிக்க வைச்சேன். இப்போ அந்த மயங்க்கும் இல்ல, மல்கோத்ராவும் இல்ல. அனு இப்போ சந்தோஷமா வாழலாம். அதுனால தான் இதையெல்லாம் அவகிட்டயும் அவ புருஷன் கிட்டயும் ஒப்படைச்சுட்டு போலாம்னு நினைச்சேன். நானும் ஒன்னும் சும்மா இல்ல; நானும் என் குடும்பமும் தலைமுறை தலைமுறையா உட்கார்ந்து சாப்பிட்டு வாழுற அளவுக்கு என் சொந்த சம்பாத்தியத்துல நிறைய சொத்து வாங்கிப் போட்டுருக்கேன். அதுனால நான் ஒன்னும் கஷ்டப்பட போறதில்ல. அதுனால தயவுசெஞ்சு வாங்கிக்கோங்க. இதுக்கு மேல என்னால இந்த சோகக்கதை எல்லாம் சொல்ல முடியாது. இது தான் முதலும் முடிவுமா இருக்கணும்.” என்று ஆருஷாவைப் பார்த்து கூறியவிட்டு, தன் கையில் இருந்த சொத்து பத்திரங்களை சின்னா மற்றும் அனுராகாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றான் ராக்கி. இப்போது தான் என்ன செய்வது என்று அறியாது முழித்துக் கொண்டிருந்தாள் ஆருஷா. அவளால் அவன் மனதில் ஏற்பட்ட காயம் பெரும் ரணமாக இருந்தது. சிலக் காயங்கள் மருந்தினால் ஆறும்; ஆனால் சிலக் காயங்களை காலம் தான் ஆற்றும். அவளால் ஏற்பட்ட காயத்திற்கு அவள் தான் மருந்திட வேண்டும். ஆனால் ராக்கியின் அருகே செல்லவே பயந்து போய் நின்றிருந்தாள் ஆருஷா. கணவனுக்கு கோபம் வந்தால் அதை தணிக்கும் மந்திரம் மனைவியின் புன்னகையில் இருக்கிறது என்பதை அவளுக்கு யார் சொல்வது? இரவின் தனிமையில் தன்னை நோக்கி வந்த மனைவியின் அழகினை உள்ளுக்குள் ரசித்தாலும் அவள் தன்னை விட்டு மிகச்சுலபமாக பிரிந்து செல்ல முடிவெடுத்துவிட்டாள் என்ற நினைவு வரவே கனிந்த முகம் மீண்டும் பாறையென இறுகிவிட்டது. அவளைப் பார்க்காமல் படுக்கையின் அந்தப் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டான் ராக்கி. அவனை எப்படி தன்புறம் திருப்புவது என்ற யோசனையில் இருந்தவளின் காதில் மரகதவல்லியம்மா கூறியவை ஒலிக்க ஆரம்பித்தன. 

 

“புருஷங்காரே கோபப்பட்ட பொண்டாட்டிக்காரி அவனை சமாதானப்படுத்துற ஐஸ்கிரீமா மாறிடணும். புருஷங்கிட்ட மட்டும் அச்சம் மடம் நாணம் இதெல்லாம் பார்க்கவே கூடாது. இவே என் புருஷே. எனக்காக கடவுள் படைத்தவன். அவனுக்காக நீ வளைஞ்சு கொடு; உனக்காக காலம் பூரா அவன் வளைஞ்சு கொடுப்பான். விட்டுக் கொடுத்து வாழுறவங்க கெட்டுப் போக மாட்டாங்க. போ.. போயி உன் புருஷனை எப்படியாவது சமாதானப்படுத்து.” என்று கூறி ஆருஷாவை அவளது அறைக்குள் அனுப்பி வைத்திருந்தார் மரகதவல்லி. 

 

‘என் கணவனிடம் பேச எனக்கென்ன பயம்?’ என்று உள்ளுக்குள் நினைத்தவள், அவளுக்கு எதிர்புறமாக முதுகை காட்டிப் படுத்திருந்தவனின் தோளில் கையிட்டு தன்னை நோக்கி திருப்பினாள். தன்னை முழுமைக்கும் திருப்பிய மனைவியை ஆச்சரியமாக பார்த்தான் ராக்கி. அந்த அதிர்ச்சியுடனே கண்களை விரித்து அவளை அவன் பார்க்க, அவளோ அவர்களுக்குள் எந்த சண்டையுமில்லை என்பது போல் அவனது கழுத்தை கட்டிக் கொண்டு நெஞ்சில் தலை வைத்து படுத்துக் கொண்டாள். அவள் விலகி இருந்தாலே அவளை கண்களால் தொடந்து கொண்டு இருப்பவன், இப்போது அவளோ அவனது கைகளுக்குள் இருக்கின்றாள். அவனால் அவளை விட்டு விலகி இருக்க முடியாது போய்விடுமோ? என்று பயந்தான். தன் கைகளால் கட்டிலின் விரிப்பை அழுத்தி சுருட்டிப் பிடித்துக் கொண்டவன், ஆழமாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டிருந்தான். அவன் நெஞ்சில் தலை வைத்திருந்தவள், அவனது நெஞ்சு தெரியுமாறு அணிந்திருந்த சட்டையின் பட்டனை திருக்கிக் கொண்டும், வெளியே தெரிந்த அவனது மார்பில் தன் கன்னத்தை வைத்து தேய்த்துக் கொண்டும் இருந்தவளின் கைகளைப் பிடித்து தள்ளிப் படுக்க வைக்க முயன்றான். இனிப்பைத் தேடி வரும் எறுப்பாக மீண்டும் அவன் மார்பில் தலை வைத்து படுத்துக் கொண்டவள், இம்முறை அவனது மார்பில் உதடுகளால் கோலமிட ஆரம்பித்திருந்தாள்.  

 

‘அய்யோ! இந்த நிலைமைக்கு முன்னாடி இருந்ததே பரவாயில்லப் போலவே?! விடமாட்டேங்குறாளே!’ என்று நினைத்தவனின் கட்டுப்பாடு எந்த நிலையிலும் உடைந்து விடும் தருணத்தில் இருந்தது. இதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவன், அவளை புயலென திருப்பி அவளது இதழ்களை கவ்வி கொண்டான். பல நாட்கள் பட்டினி கிடந்தவன் போல், அவளது இதழில் இருக்கும் மொத்தத் தேனையும் உறிந்து எடுத்துக் கொண்டிருந்தான். எப்போதும் அவனுக்கு அடங்கி அவன் செய்யும் அத்தனை லீலைகளுக்கும் வழிவிட்டு அமைதியாய் இருப்பவள், இப்போது அவனின் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினையாக அதே செயலை திருப்பிக் கொடுத்தாள். அவனது இதழ்களை இவளும் வன்மையாக கவ்விக் கொள்ள ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றான் ராக்கி. இருவரும் முத்தமிடுவதில் பட்டம் பெற்றவர்கள் போல் மாற்றி மாற்றி முத்தமிட்டு தங்களது இணையின் மீதிருக்கும் அன்பினை வெளிப்படுத்தினர். அவளது ஆடைகளை நீக்க ஆரம்பித்தவனுக்கு அப்போது தான் அவளின் மணிவயிற்றில் தனது உதிரம் இருப்பது ஞாபகம் வர, அவனை விட்டு மெல்ல நீங்கினான். அவனது செயலில் பயந்து போன ஆருஷா, இம்முறை தானே அவனை எடுத்துக் கொள்ள நினைத்தாள். அவனின் மீது இவள் படர,

 

“வேணாம்டி குழந்தைக்கு ஏதாவது ஆகிடப் போகுது?!” என்று மென்மையாக கூறியவனின் முகத்தை தன் கையில் ஏந்தியவள்,

 

 “அப்படி எதுவும் ஆகாது. உங்களை நான் நம்புகின்றேன் நாதா!” என்றவள் தானே அவனது தடைகளை அகற்றி மேலும் முன்னேறினாள். யாருக்கும் எதற்கும் அஞ்சாதவன், முதல் முறையாக தனக்காகவும் தங்களது மகவிற்காகவும் அஞ்சியதைக் கண்டு தனக்குள் பூரித்துப் போனாள். முழுதாக தன்னை அவனிடம் ஒப்படைத்தாள். இதுவரை நெஞ்சில் இருந்த குற்ற உணர்ச்சியினால் தடைப்பட்டிருந்த மொத்த காதலையும் அவனிடம் கொட்டினாள். அவளது செயலில் திகைத்துப் போனவன், தன் சூழ் சுமந்திருக்கும் தங்கத் தாமரை மகளை கண்ணாடிப் பொருள் போல் கையாடினான். இருவரும் இந்த மண்ணுலகம் மறந்து தங்களது உலகத்தில் சஞ்சரிக்கும் தொடங்கினர். நேசிப்பதால் நீங்கள் எதையும் இழக்கப் போவதில்லை. ஆனால் பின்வாங்குவதன் மூலம் உங்களது காதலை மட்டுமல்ல வாழ்க்கையையே இழக்கின்றீர்கள். 

 

ஒரு காதல் ஜோடி இனிதே தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கியிருக்க, மற்றொரு ஜோடி என்னவாகினரோ? 

 

2 thoughts on “இரகசிய மோக கனாவில் 26&27”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top