அந்த மிகப்பெரிய மண்டபத்தின் வாயிலில் ஹர்ஷினி வெட்ஸ் ஆதித்யவர்மன் என முழுக்க முழுக்க மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட மண்டபம் முழுவதும் மஞ்சள் மற்றும் சிவப்பு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பல இடங்களில் பல லட்சங்களை முழுங்கிய அழகிய சிலைகள் குத்துவிளக்குகள் ஏற்றப்பட்டிருந்தது. அந்த அரண்மனை போன்ற மண்டபத்தில் எங்கும் சந்தனம் மற்றும் பன்னீரின் வாசமே முழுவதும் நிறைந்திருந்தது. ஆயிரம் பேர் அமரக்கூடிய இருக்கைகள் அழகாக வெள்ளை மற்றும் சிவப்பு ரிப்பன்கள் கட்டப்பட்டு இருந்தது.
முதல் 200 இருக்கைகளில் விஐபிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அமர்ந்திருக்க மீதி இருக்கைகள் உறவினர்களால் நிரம்பி வழிந்தனர். அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.
இந்தியாவின் முன்னணி தொழில் சாம்ராஜ்யத்தின் இரண்டு வாரிசுகளின் திருமணம் நடைபெறுகிறது. அப்பொழுது ஐயர் மாப்பிள்ளையை அழைத்து வாருங்கள் எனக் கூற மாநிறத்திற்கு கூடுதல் நிறமாக ஆறடி உயரத்தில் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக கேசம் அசைந்தாட ஆதித்யவர்மன் மேடை ஏறி மனையில் அமர்ந்தான்.
கழுத்தில் மலர்மாலை சூடி தாடி எதுவும் இல்லாமல் மீசையை மட்டும் கம்பீரமாக முறுக்கி விட்டு லேசான புன் சிரிப்புடன் அமர்ந்து இருந்தான்.
அவனுக்கு காப்பு கட்டி சில மந்திரங்களை கூற சொல்ல அவனும் அதன்படியே செய்தான். அப்போது மணமகளை அழைத்து வாருங்கள் என கூறவே தோழிகள் புடை சூழ தன் தங்கை ஆத்மிகா ஒரு புறமும் ஆதித்யாவின் தங்கை ஸ்வர்னிதா ஒரு புறமும் அவளை கிண்டல் கேலி செய்து சிவக்க வைத்து அழைத்து வந்தார்கள்.
ஐந்தரை அடி தங்க சிற்பம் சிவப்பு பட்டு உடுத்தி தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் முழுவதும் இழைக்கப்பட்ட நகைகள் அணிந்து அந்நகைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் மலர்ந்த புன்னகையுடனும் கன்னத்தில் தோழிகளின் கிண்டலால் உண்டான வெட்கசிவப்புடனும் அன்ன மயிலாக நடந்து வந்து ஆதித்யாவின் பக்கத்தில் அமர்ந்தாள் ஹர்ஷினி . அமர்ந்ததும் ஆதித்யாவை நோக்கி ஹர்ஷினி புன் சிரிப்பை சிந்த அதற்கு குறைவில்லாத அதே அளவு புன்சிரிப்புடன் அவள் கரம் பற்றினான்.
அதில் அவள் கண்ணசிவப்பு இன்னும் அதிகமாகுவதை கண்டு ஆதித்யாக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. இத்தனை நாள் பார்த்ததைவிட இன்று பேரழகியாக ஜொலிக்கும் அவளை கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.அதை பார்த்து அவன் தோழன் ஈஸ்வர் அவனின் தோளில் லேசாக தட்ட அதில் சுயநினைவுக்கு வந்ததும் ஐயர் கூறிய பொருட்களை ஓமத்தில் போட்டான்.
ஆதித்யாவின் செயலை பார்த்து சிரிப்புடன் இருந்த ஹர்ஷினியை அய்யர் அழைக்கவே அவள் கைகளிலும் காப்பு கட்டப்பட ஐயர் மந்திரங்களை கூற தேங்காய் மேல் வைக்கப்பட்ட தங்க தாலியை அங்கிருக்கும் ஒரு சுமங்கலி பெண்ணிடம் கொடுக்க அவளும் அனைவரிடமும் தாலியை காட்டி ஆசீர்வாதம் வாங்கிவிட்டு அவரிடம் கொடுத்தாள்.
ஐயர் மந்திரங்களை கூறி தாலியை எடுத்து ஆதித்யாவிடம் கொடுத்து கெட்டிமேளம் கெட்டிமேளம் எனக் கூற மாங்கல்யத்தை வாங்கி அவளின் கழுத்தில் கட்டப் போகும் முன் அவளை பார்க்க ஆதி இன்னும் கட்டாததை உணர்ந்து அவளும் நிமிர்ந்து அவனை பார்க்க அவள் கண்களில் ஒரு மின்னல் வெட்டி சென்றது.
அதைப் பார்த்து ஆதித்யாவுக்கு உலகமே சுற்றும் உணர்வு.அவள் கண்களில் அத்தனை காதல். ஆதித்யாவிற்கு இது பெரியவர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் ஆனால் ஹர்ஷினிக்கு தன் காதல் கை கூடி வரும் தருணம் இது .அதில் அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி இதயத்துடிப்பு அதிகரிக்க அவன் கண்களை ஆழ்ந்து பார்க்க அய்யர் மறுபடியும் கெட்டிமேளம் கெட்டிமேளம் எனக் கூற அதில் சுயநினைவு பெற்று அவள் கழுத்தில் இரண்டு முடிச்சுகளைப் போட மூன்றாம் முடிச்சு போட வந்த தன் தங்கையை தன் பார்வையால் நிறுத்தி மூன்றாவது முடிச்சையும் அவனே போட அதில் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி.
பின்னே அது அவள் கனவு அல்லவா மூன்று முடிச்சுகளும் அவனே இடவேண்டும் என. அதை அறிந்தோ அறியாமலோ அவன் இட்ட முடிச்சு தன் வாழ்க்கைக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரிடம் ஒரு வேண்டுதலை வைத்து விட்டு திருமண சடங்குகளை தொடர்ந்தார்கள்.
அனைத்து திருமண சடங்குகளும் முடிய அந்த திருமண மண்டபத்திலேயே அவர்களை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு மாலை ரிசப்ஷனுக்கு தேவையான வேலைகளை கவனிக்க சொந்தங்கள் சென்றது.
அனைத்து திருமண வேலைகளையும் காண்டக்ட் ஆட்களிடம் ஒப்படைத்தாயிற்று. இருந்தாலும் மேற்பார்வை பார்க்க மணமக்களின் தந்தைகளும் நண்பர்கள் மூவரும் வேலைகளை கவனிக்க சென்றனர். மணமகன் ஆதித்யாவர்மனின் தந்தை குணசேகரன் மணமகளின் தந்தை அபி ரஞ்சன். இருவரின் நெருங்கிய தோழன் நாகராஜன் மூவரும் இணைந்து அனைத்து வேலைகளையும் மேற்பார்வை விட ஆரம்பித்தார்கள்.
மணமகள் அறையில் அழகு கலை நிபுணர்கள் அவளின் அலங்காரம் அனைத்தையும் கலைக்க சூடான நீரில் ஒரு குளியலை முடித்து இலகுவான ஒரு உடையை அணிந்து கட்டிலில் சரிந்தாள்.அவள் இருபுறமும் சுவர்ணிதா ஆத்மிகா இருவரும் படுத்தார்கள்.படுத்த இரண்டே நிமிடங்களில் மூவரும் நல்ல உறக்கத்தை அடைந்தார்கள்.
இங்கு மணமகன் அறையில் ஆதித்யா மாலை மற்றும் பட்டு வெட்டி சட்டையை கலைந்து ஒரு குளியலை போட்டுவிட்டு சாக்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து வர ஈஸ்வர் ” மச்சான் இப்பயாச்சும் சிஸ்டர் மேல லவ் வந்துச்சா ” என ஒருவித பரபரப்பான குரலில் கேட்க “ஏண்டா லூசு மாதிரி பேசுற” அதற்கு ஈஸ்வர் “யாரு நானா இப்ப என்ன கல்யாண பொண்ணு சிஸ்டர் தான் தெரிஞ்சதில் இருந்து சின்ன வயசில் இருந்து பார்த்த பொண்ணு எனக்கு பீலிங்ஸ் வர மாட்டேங்குது.அது இதுன்னு பேசிட்டு இருந்த இப்ப கல்யாணத்தில் சிரிச்சிட்டு தாலி கட்டுன அதுதான் யோசிச்சேன். சரி லவ் வந்துருச்சு போல பயபுள்ளைக்குன்னு”.
அதற்கு அவனே “அட போடா என்னதான் சின்ன வயசுல இருந்து பார்த்தாலும் நானும் அவளும் வேற வேற ஸ்கூல் அதிகமா பாத்துகிட்டுது இல்லை.சம்டைம்ஸ் அப்பப்ப வருவாள் அவ்ளோதான் ஆனா அவங்க அம்மாவும் எங்க அம்மாவும் ரொம்ப கிளோஸ். எனக்கும் அத்தை அழகு ராணினா ரொம்ப பிடிக்கும். அவ மேல பஸ்ட் பீலிங் இல்ல ஆனா தாலி கட்டுனதுல இருந்து சம்திங் அவ ஏதோ என்னை பண்றடா. ஐ கேன் ஃபீல் இட். இது ரொம்ப நல்லா இருக்கு பட் அது லவ்வான்னு எனக்கு தெரியல. ஆனா மனைவின்னா இந்த ஜென்மத்துல இல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவள் தான்”.
ஈஸ்வரன் மனதுக்குள் ‘இதுக்கு பேருதான்டா லவ் லூசு பயலே அந்த பொண்ண தவிர வேற யாரையும் உன்னால மனைவின்னு பாக்க முடியலன்னா அது தான் லவ். அதை நீ இப்ப புரிஞ்சுக்கல கண்டிப்பா புரிஞ்சுப்ப. காதல் தானா வரணும் நான் எதுக்கு போய் குழப்பிக்கிட்டு நீயே ஒரு நாள் பீல் பண்ணுவ.அந்த பீலிங் தான் உண்மையா இருக்கும்’ என அவனும் மனதிற்குள் நினைத்துக் கொண்டு வெளியில் ” ஓகே டா தூங்கு” என கூற ஆதியும் படுத்ததும் உறங்கினான்.
மாலை சரியாக நாலு மணிக்கு அழகு கலை நிபுணர்கள் அங்கு வர ஹர்ஷினியும் எழந்து குளித்து தயாராக இருந்ததால் உடனே அவளுக்கு மேக்கப் செய்ய ஆரம்பித்தார்கள். இங்கு அவர்களின் தங்கைகளும் தங்கள் மேக்கப்பை முடிக்க ஹர்ஷினி அத்தையும் ஆதித்யாவின் அம்மாவுமான சண்முகவள்ளி அங்கு வர அவளை பார்த்ததும் தங்க விக்கிரகம் மாறி இருக்காடா எனக்கூற அதற்கேற்ற போல் தங்க நிறத்தில் லெகங்கா அணிந்து முழுவதும் தங்க கற்கள் மற்றும் தங்க நிற ஜரிகைகள் இடப்பட்டிருந்தது அந்த ஆடையில் .
அதற்கேற்ற போல் கோல்டன் மேக்கப் போடப்பட்டு அழகான நீண்ட கூந்தலை சுருள் சுருளாக சுருட்டி விட்டு இருந்தார்கள்.கூந்தலின் நடுவில் முழுவதும் தங்க கற்களால் இழைக்கப்பட்ட கிளிப் சூடப்பட்டு இருக்க அது அந்த வெளிச்சத்தில் ஜொலித்தது.அவள் அணிந்திருந்த வைர கற்கள் வைத்த தோடு வெளிச்சத்தில் பட்டு தெறித்து அவள் கன்னத்தில் கோலமிட்டது.
அவளுக்கு சற்றும் குறைவில்லாத அழகுடனும் கம்பீரத்துடன் கோல்டன் கலர் ஷர்வாணியில் ஆதித்தியவர்மன் தயாராகி மேடையில் நின்றான். திருமணத்தின் போது நடந்தது போலவே தோழிகள் படைசூழ இருபக்கமும் அவர்களின் தங்கைகள் அழைத்து வர மேடை ஏறினாள்.
அவளைப் பார்த்து ஆதி ஒரு சிறு புன்னகை செய்ய அவளும் சிரித்தாள்.அவளுக்கு தெரியும் ஆதிக்கு செயற்கை அலங்காரம் எதுவும் அவ்வளவு பிடிப்பதில்லை. அதனால்தான் அவன் எதுவும் பாராட்டவில்லை என புரிய அவன் மனது புரிந்து அவளும் எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதை அவனும் அறிவான். காலையில் திருமணம் என்பதால் நகைகள் தான் அதிகம் அணிந்து இருந்தாள்.
வெகுநேரம் புகை முன் அமர வேண்டும் என்பதால் மேக்கப் அதிகமாக போடவில்லை அவள். அவனுக்கு அவளை நினைத்து அவ்வளவு பெருமிதம். அவள் என்றுமே மற்ற பெண்களிடம் இருந்து மாறுபட்டு இருந்தாள்.அனைத்து பெண்களுக்கும் நகை மற்றும் உடைகளின் மேல் ஆர்வம் இருந்தால் இவளுக்கு மரம் செடி கொடிகளின் மீது தான் அதிக ஆர்வம். அலங்கரிக்கவே மாட்டாள் என கூற முடியாது.
அழகு இல்லாத பெண்கள் இந்த உலகத்தில் இல்லை தன்னை அழகாக அலங்கரிக்க தெரியாத பெண்கள் தான் உள்ளனர் என்ற கூற்று அவளுக்கு தெரியும் மற்றவர்கள் முன் நாகரீகமாக இருக்க எந்த அளவு அலங்காரம் செய்ய வேண்டும் என அவளுக்கு தெரியும் பிசினஸ் சர்க்கிலில் இருப்பதால் அவள் உடைகளில் எப்பொழுதும் ஒரு நேரத்தியும் ஒப்பனைகளில் எப்பொழுதும் ஒரு மரியாதையும் இருக்கும்.
அனைத்தையும் நுணுக்கமாக ஆழ்ந்து சிந்திக்கும் அறிவு உடையவள். அதற்கேற்றது போல் மைக்ரோ ஆர்ட்டிஸ்ட் ஆக உள்ளாள். விரும்பி கற்றது மைக்ரோ ஆர்ட்டிஸ்ட் ஆனால் தங்களுடைய பிசினஸ்யும் பார்க்க வேண்டும் என்பதால் கல்லூரியில் காமர்ஸ்சும் மேற்படிப்பு எம்பிஏ படித்து தங்களுடைய ஏ ஆர் நகைக்கடை துணிக்கடை மற்றும் பாத்திர கடைகள் அனைத்தையும் பார்க்கிறாள்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அவர்களுக்கு கிளை உள்ளது. அதன் தலைமை செயலகம் சென்னையில் உள்ள அடையாறில் உள்ளது அங்கேயே இவள் தற்போது எம். டி ஆக உள்ளாள்.
அவள் அணியும் நகைகளின் வடிவமைப்பு முழுவதும் அவளே செய்து கொள்வாள். அதேபோல அவள் அவர்களின் நகை கடையில் ஒரு செக்ஷன் முழுவதும் இவளின் டிசைன்கள் இருக்கும். இரண்டே மாதத்தில் நிச்சயமான திருமணம் என்பதால் திருமணத்தின்போது அணிந்த நகைகள் மட்டுமே இவள் டிசைன் செய்தது.
ரிசப்ஷன் நல்லபடியாக 12:00 மணிக்கு முடிய அவள் முகத்தில் களைப்பு தெரிய உடனே வீட்டுக்கு கிளம்பலாம் என்று ஆதித்யா கூற அவனை நன்றியுடன் பார்த்தாள்.ஆனால் பெரியவர்கள் நாளை காலையிலே நல்ல நேரம் இருப்பதாக கூறி இருவரையும் மண்டபத்திலே தனித்தனியாக உறங்க சொல்லிவிட்டு அவர்களும் உறங்கினார்கள். இருவர்களின் நேரம் படி அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கான முகூர்த்தம் இரண்டு நாள் கழித்தே குறிக்கப்பட்டது.
இருவரும் தங்கள் அறைகளில் உறங்க அடுத்த நாள் இனிமையாக இருவருக்கும் தொடங்கியது. மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த சாப்ட் சில்க் கட்டி தன்னுடைய நீண்ட கூந்தலை டிரையர் கொண்டு உலர்த்தி தளர்வாக பின்னிக் கொண்டாள். அவளுடைய மாமியார் சண்முகவள்ளி அளித்த பூவைவை அவளின் தங்கை ஆத்மிகா மற்றும் ஆதியின் தங்கை சுவர்னி இருவரும் அழகாக அவளின் பின்னல் முழுவதும் சுற்றி விட்டார்கள்.
அதிக ஒப்பனை இல்லாமல் ஒரு பொட்டை மட்டும் வைத்துக் கொண்டு வெளியே வர அதே நேரத்தில் ஆதியும் அவள் புடவை கட்டுவதை அறிந்து அவனும் சிவப்பு சட்டை அணிந்து சிவப்பு நிற கரையுடைய வேட்டி கட்டி இருந்தான்.
அவனைப் பார்த்ததும் அவள் முகத்தில் மத்தாப்புகள் பூக்க அதைப் பார்த்து அவனும் சிரித்தான். ஆதி சிரிப்பதே எப்பொழுதோ தான். அதற்காக முசுடு என்ன சொல்ல முடியாது. அவ்வளவாக சிரிக்க மாட்டான். அந்த குடும்பத்தின் மூத்த வாரிசு என்பதால் பொறுப்புகள் அவனுக்கு சிறு வயதிலிருந்து அதிகம். தன்னுடைய கல்லூரி படிப்பின் போது பிசினஸை கவனித்துக் கொள்ள பிசினஸில் இருந்த எதிரிகள், எப்போது அடுத்தவரின் முதுகில் குத்தலாம் என காத்திருக்கும் சில கழுகுகள், உள்ளுக்குள் ஒன்று வைத்து வெளியில் பேசும் மனிதர்களை கண்டு அவன் மனம் ஒரு மாதிரி கடினம் ஆகி போனது.
அதிலிருந்து குடும்பத்தினர் மட்டுமே அவன் சிரித்த முகத்தை காட்டுவான் பிசினஸ் உலகில் சீரும் வேங்கை ஆகவே இருந்தான். முதலில் அவனுக்கு திருமணத்தில் அவ்வளவாக ஈடுபடவே இல்லை. பிசினஸில் முழுவதும் கவனம் செலுத்துவதால் காதலிலும் பெரிதாக நாட்டமும் இல்லை காதல் வந்ததும் இல்லை. அம்மா மிகவும் கேட்கவே ஒத்துக்கொண்டான்.
பெண் தன் தந்தையின் தோழரும் தன் ரோல் மாடல் மாமாவின் பொண்ணும் என்பதாலும் அவனும் சந்தோஷமாகவே சம்மதம் சொன்னான். காதல் இருந்ததா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்லுவான். ஆனால் திருமணத்தில் அவளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை மற்றும் பாசத்தை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என உறுதியுடன் இருந்தான்.
என்னதான் மூவரும் நல்ல தோழர்கள் எனினும் அவர்களின் பிள்ளைகளான ஐவருக்கு அவ்வளவாக ஒட்டுதல் இல்லை. பெண்கள் மூவரும் அதாவது குணசேகரனின் பெண் ஸ்வனிதா அபிரஞ்சன் பெண்கள் ஆத்மிகா ஹர்ஷினி மூவரும் நல்ல தோழிகள். நாகராஜனுக்கு ஒரே மகன் சர்வேஷ்.
சர்வேஷ் மற்றும் ஆதித்யா வர்மன் அவ்வளவாக பேசிக்கொள்வதில்லை சிறுவயதில் ஏற்பட்ட ஒரு மன கசப்பால் இருவரும் பிரிந்து உள்ளார்கள். திருமணத்துக்கு முன்பு இருவரும் அவ்வளவாக பேசிக்கொள்ளவில்லை ஏனோ அதில் ஆதித்யாவுக்கு அவ்வளவாக விருப்பமும் இல்லை.
அதேபோல தான் ஹர்ஷினிக்கும் இருவரின் பொதுவான பழக்கவழக்கங்கள் இருவருமே நன்கு அறிந்தவர்கள் தான். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை உடன் இருந்தே அறிந்து கொள்ளலாம் என அவ்வளவாக இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. அது மட்டும் இல்லாமல் திருமணம் சீக்கிரம் நிச்சயக்கப்பட்டதால் இருவருக்குமே தலைக்கு மேல் வேலை இருந்தது. திருமணத்திற்கு இருபது நாட்கள் முன்புதான் அவர்கள் தங்களின் வேலையை முடித்தார்கள்.
இருபது நாட்களுக்கு பிறகு அவர்களின் விருப்பப்படி திருமண மற்றும் ரிசப்ஷன் உடைகள் நகைகளை எடுத்தார்கள். அதற்கு முன்பே வாங்க வேண்டிய பொருட்கள் செய்ய வேண்டிய வேலைகளை பெரியவர்கள் செய்தார்கள்.
ஆதிக்கு திருமணம் முடிந்ததிலிருந்து அவளின் மீது ஈர்ப்பு வருவதை உணர்ந்து இருந்தான். அது திருமணம் ஆனதால் உண்டானதாக அவனுக்கு தெரியவில்லை ஏதோ அடிமனத்தில் ஏற்கனவே இருந்தது மீண்டும் வளர்வதைப் போலவே தோன்றியது.
அதுவும் ஒவ்வொரு தடவையும் திருமணம் முடிந்ததிலிருந்து அவள் தன்னை பார்க்கும் பார்வையில் உள்ள காதல் அவள் முகத்தில் மின்னி மறையும் வெட்கம் அனைத்தும் அவனை சுண்டி இழுத்தது அவள் புறம்.
அவனுக்கே தன்னை நினைத்து வெட்கமாக இருந்தது இருந்தாலும் தன் மனைவி என்ற உரிமையை அவனை கர்வம் கொள்ள செய்ய அவளை விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் வந்த ஈஸ்வரன் போதும்டா கோயிலுக்கு போகணும் கொஞ்சம் அடக்கி வாசி எனக் கிண்டலாக உரைக்க அவனும் சிரித்துக்கொண்டே தலையை கோதி தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ள மணமக்கள் இருவரும் ஒரே காரில் பயணப்பட்டார்கள்.
அதே காரில் ஆதியின் தங்கையும் ஹர்ஷினியின் தங்கை ஆத்மிகா மற்றும் ஆதியின் தோழன் ஈஸ்வர் ஐவரும் அங்கிருந்து 20 நிமிடம் நேரத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றார்கள். அவர்களுக்கு முன் குடும்பத்திர் அனைவரும் அங்கு ஆஜராக அவர்கள் மணமக்களுக்கான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஐயர் வந்து மாலை கொடுக்க இருவரும் மாலையை மாற்றி விட்டு ஐயர் கொடுத்த குங்குமத்தை ஹர்ஷினியின் நெற்றிலும் உச்சி வகுட்டிலும் இட்டான்.
அதை ஹர்ஷினியும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள். தன் கையில் இருந்த குங்குமத்தை எடுத்து தன் மாங்கல்யத்தில் வைத்து கண்களில் ஒத்திக்கொண்டாள்.அதை புன் சிரிப்புடன் ஆதித்யா பார்த்துக் கொண்டிருந்தான் .
ஆனால் அவர்களுக்கு நிலைக்கப் போகும் இந்த மகிழ்ச்சி இன்னும் ஒரு மணி நேரமே என்பதை அறியாமல் போகிறார்கள்.இப்பொழுது ஆசையாக இட்ட குங்குமமும் கழுத்தில் தொங்கும் மாங்கல்யமும் இறங்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதை யார் அறிவாரோ.