ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே… 1

என் கர்வம் சரிந்ததடி சகியே…

ஜியா ஜானவி

 

1

இலக்கியப் புகழும், வரலாற்று பெருமையும் ,தொல்பொருள் சிறப்பும் மிக்க தமிழகத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் ஈரோடு..

 

பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர். 

பழங்கால கொங்கு மண்டலத்தில் மேல்கொங்கு மண்டலமாக விளங்கிய ஈரோடு…

என்னடா.. ஒரே ஈரோடு பற்றிய செய்திகளா இருக்கே என்று பார்க்கிறீர்களா.. ஆமாம், நம்ம ஹீரோ ஈரோடு தான்..

 

 

சங்க காலத்திற்கு பின்னர் கங்கர்கள் ஈரோடை ஆட்சி செய்து வந்து உள்ளார்கள். அவர்களை சோழர்கள் 9-ஆம் நூற்றாண்டில் முறியடித்து கொங்கு மண்டலத்தை ஆளத் தலைப் பட்டனர். சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலம் ‘அதிராசராச மண்டலம்’ என்று அழைக்கப்பட்டது.

 

அவர்கள் கிளையில் வந்தவர்கள் தான் ராஜன் வம்சத்தினர். பாரம்பரிய ராஜ வம்சம் அவர்கள்.. தங்கள் பெயரின் பின்னே வரும் ராஜன் அவர்களின் ராஜ அடையாளம். அந்த அடையாளம் அவர்களின் நடை, உடை , பாவனைகளில் மட்டும் அல்ல, அவர்களின் செயல்களிலும் , பேச்சிலும் வெளிப்படும் அந்த கர்வம்… ஆம் கர்வமே தான்..

 

அக்கால ராஜாக்கள் போல அரசாட்சி செய்யவில்லை என்றாலும் இப்போதைய அம்பானிகளை காட்டிலும் அவர்களது மேம்பட்ட வாழ்க்கை. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்திய அரசியலையே நிர்ணயம் செய்யும் செல்வாக்கு.. உலக முழுக்க அவர்களின் தொழில் பரவி இருந்தாலும் அவர்களின் வேர் என்று சொல்லும் பாரம்பரிய மாளிகை ஈரோடு தான்.. 

 

இப்போதைய வம்சத்தின் மூத்த தம்பதியர் ராஜராஜன் சுகுணா தேவியார்.. இன்றும் தன்னுடைய செருக்கு, ஆணவம், கர்வம் குறையாமல் ராஜ ஆளுமையுடன் இருக்கும் பெரியவர்.. இவருக்கு எவ்விதத்திலும் சளைக்காத பத்தினி சுகுணா தேவியார்.. 

 

இவர்களுக்கு இரு மகன்கள் மோகன ராஜன் மற்றும் மனோகர ராஜன்.. இருவரும் தங்கள் தொழிலை தனித்தனியாக தான் நடத்துகிறார்கள். இவர்கள் இருவரின் இருப்பிடமும் கோவை.

 

மோகனா ராஜன் , தமயந்தி தம்பதியருக்கு இரண்டு மக்கள்.. தேவேஸ்வர ராஜன் , மிருளாளிணி. தமயந்தி பெரும் தொழிலதிபரின் மகள், ஆனால் ராஜ வம்சம் இல்லை. வசதியில் சற்றும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை.. ஆனால் அதை தன் குணத்தில் காட்டாதவர், அன்பு கருணையின் பிறப்பிடம், அவரின் மகள் மிருளாளிணி அன்னையின் மறு உருவம்.. பெயரை போலவே மிருதுவானவள். தேவேஸ்வர ராஜன் சுருங்க சொன்னால் அடுத்த ராஜராஜன்..

 

 

 மனோகர ராஜன் , மனைவி ரூபாவதி தேவி. இவர் தன் அத்தை மகளையே மணந்தவர், இவர்களுக்கு ஒரே ஒரு மகன் நந்த ராஜன்.. பெயருக்கு ஏற்ற போல, கோபியர் புடை சூழ இருக்கும் பிருந்தாவன நந்தனை போன்றவன் தான். தாத்தா, அப்பாக்களுக்கு குறையாத திமிர், கர்வம் கூடவே தன் அழகின் மீது அதீத பெருமிதம்.

 

இவர்கள் குடும்ப வழக்கம் போல வெளிநாட்டில் தான் இன்ஜினீயரிங் முடித்தான். இன்ஜினியரிங் கற்றதை விட அங்குள்ள பழக்க வழக்கங்களை நன்றாக கற்று தேர்ந்தவன். பின் ஓராண்டு அவர்கள் கம்பனியில் வேலை பயிற்சி எடுக்க, அங்கேயும் பெண்கள் மீதான அந்த கிரெஷ் அவனுக்கு சற்றும் குறையவில்லை… மேலும் தன்னை சுற்றி வரும் அந்த பெண்களிலும் அவனுக்கு தன் மீதான கர்வமும் கூட்டி கொண்டே தான் சென்றது.. 

 

கம்பனிக்கு வருபவன், காலை சிறிது நேரம் அங்கு வேலை பார்க்கும் பெண்களை இவன் பார்ப்பான். பின் லேப் டாப்பில் விளையாடுவது மதியம் கிளம்பி வீட்டுக்கு சென்றுவிடுவான்.. வீட்டில் மதிய உணவு சாப்பிட செல்பவனை அவன் அன்னை ஏதோ பிள்ளை கம்பனியில் வேலை செய்து களைத்து வந்தவன் போலவே பாவித்து அவனுக்கு உணவு பரிமாறி, ஓய்வு எடுக்க சொல்லுவார். அவர் சொல்லவில்லை என்றாலும் அவன் அதை தான் செய்வான் என்று அறியாமல்.

 

மாலை எழுபவன் தன் நண்பர்களுடன் சுற்ற சென்று விடுவான்.. இப்போது உள்ள நவீன உலகில் கேளிக்கை விடுதிகளுக்கா பஞ்சம்.. தினம் ஒரு பப்.. தினம் ஒரு பெண் என்று அவன் உல்லாச வாழ்வில் திளைத்தான்.

 

மகனின் போக்கு மனோகருக்கு பயத்தையும், கவலையும் அளித்தது.. தான் சொல்லி கேட்பவன் இல்லை அவன்.. என்ன செய்வது என்று மனைவியிடம் புலம்புவார்.

 

ரூபாவதியோ,” என்ன அவனுக்கு இப்போ இருபத்தி இரண்டு வயசு தான் ஆகுது, அதுக்குள்ள அவன் தலையில் பெரிய சுமை எல்லாம் ஏத்தாதீங்க… கொஞ்ச நாள் சந்தோசமா இருக்கட்டும்… “

 

” அவன் வயசுல எல்லாம் நான் கம்பனி பொறுப்பு எங்க அண்ணன் கிட்ட கத்துக்கிட்டேன்.. “

 

” அதை தான் நானும் சொல்லுறேன் , நீங்க இவ்வளோ சம்பாதிச்சி வைச்சு இருக்கீங்க.. ஆனா அதை எங்கையாவது நாம அனுபவிக்கிறோமா… ஒரு வேர்ல்டு டூர் கூட இதுவரை போனது இல்லை.. அவனாவது இந்த வயசுல என்ஜாய் செய்யட்டும்” இப்படி சொல்லுபவர் தான் வருடத்திற்கு ஒரு முறை தன் அம்மா வீட்டோடு ஒவ்வொரு நாட்டுக்கும் சுற்றுலா சென்று விடுவார், கணவன் பற்றி எல்லாம் கவலை இல்லை.

 

” நீ.. இப்படியே சொல்லிகிட்டு அவனை இன்னும் நல்லா உசுப்பேத்தி விடு.. நல்லா வருவான் உன் பிள்ளை” 

 

” கண்டிப்பா.. நல்லா தான் வருவான்.. அப்போ வந்து என் பிள்ளைன்னு சொல்லுங்க அப்புறம் இருக்கு உங்களுக்கு” 

 

” ஏன், தேவா இப்படி தான் சுத்துறானா… அடுத்த மாதம் லண்டனில் தன் பிஜி முடிச்சிட்டு வர போறான்.. எல்லா பொறுப்பையும் அண்ணன் அவன்கிட்ட தான் தர போறார் .. ” என்று பெரு மூச்சு விட.. ரூபாவதிக்கு ஆத்திரம் அதி விரைவு வண்டியில் வந்தது..

 

” எப்படி நீங்க.. என் பிள்ளையோட.. அவ பிள்ளையை ஒப்பிடலாம்.. அவள் பிள்ளையும் என் பிள்ளையும் ஒண்ணா .” என்று கத்தினார், அவர் ராஜ வம்சம் என்கிற பெருமை எப்பவும் அவருக்கு உண்டு, அதனால் தமயந்தியை சற்று கீழாக தான் பார்ப்பார்.

 

“ஏய்.. அவன் தான் இந்த வம்சத்தின் மூத்த வாரிசு.. அது என்றைக்கும் மாறாது.. உன் பிள்ளையை விட, அவனால் தான் தொழில் முன்னேற போக போகுது. நீ சொன்னது அப்பா காதுக்கு போச்சு.. தங்கை மகள்ன்னு கூட உன்னை பார்க்க மாட்டார்.. ஞாபகம் வைச்சுக்கோ..” ஆம், ராஜராஜனுக்கு தேவா என்றால் தனி பிரியம் தான்.. தன்னை போலவே தோற்றத்திலும் குணத்திலும் இருக்கும் பேரன் மீது பெருமை வேறு.

 

ரூபாவதி அடங்கும் ஓரிடம் என்றால் அது ராஜராஜன் தான். இன்றும் கம்பீரம் கலந்த அவரின் ஆளுமை அனைவரையும் வாய் அடைக்க செய்து விடும்.

 

மனோகர் மகனை பற்றி ஒரு வார்த்தை சொல்ல விடமாட்டார் ரூபாவதி. அத்தனை பாசம் என்பதை காட்டிலும் வெறி என்றே சொல்லலாம். நந்தனுக்கு பிறகு அவர்களுக்கு வேறு குழந்தை தங்கவில்லை என்பதும் ஒரு காரணம்.. ரூபாவதிக்கு நந்தன் அந்த யசோதை நந்தன் மீது காட்டும் பாசத்தை விட அதீத பாசம் தான்.

 

 

அண்ணன் மகன் மீது மனோகருக்கு ஆச்சரியம் கலந்த பெருமை இப்போதெல்லாம்.. அண்ணணின் பொறுப்புகளை அவர் மகன் எடுத்துக்கொண்ட உடன் அவர்களின் வளர்ச்சி , முதலில் நிதானித்து பின் அசூர வளர்ச்சி தான். அவன் கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்திருந்தான். தொழில் வட்டாரங்களில் தேவ் ஜி என்று அவனின் நாமம் மிக பிரபலம்..

 

ரூபாவதியும் பார்த்து கொண்டே தானே இருக்கிறார். தன் மகனையும் அவர்களின் மகனையும் ஒப்பிட்டால், தன் மகனை சுற்றத்தார் மிக தாழ்வாக நினைப்பார்கள் என்ற எண்ணம் வர வர வலுக்க ஆரம்பித்தது..

 

தன் வாழ்க்கையில் முதன் முறையாக தன் கணவனின் வார்த்தைக்கு செவி சாய்த்தார் மகனுக்காக… தங்கள் மகனின் நடவடிக்கைகள் மாற, அவனை இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல, அவர்களின் தொழிலை திறன் பட நடத்த முதலில் அவனை செதுக்க வேண்டும் என்று மனோகர் கூறினார். அதிசயத்திலும் அதிசயமாக ரூபாவதி ஒப்பு கொண்டார்.

 

 

” தேவா.. காத்துப்பட்டா கூட இவன் மாறிடுவான்.. நான் தேவா கிட்ட பேசிட்டேன். நம்ம நந்தனுக்கு டிரெய்னிங் கொடுக்க சொல்லி, முதல்ல பிஜி முடிக்க சொல்லிட்டான்.. அதனால் அவனை பிஜி படிக்க அனுப்ப போறேன்” என்றார் கட்டளையாக.. 

 

” வர வர உங்களுக்கு உங்க அண்ணன் பையன் சொல்லுறது தான் வேத வாக்கா இருக்கு” என்று நொடித்து கொண்டார்.

 

” ஆமாம்.. தேவா வாக்கு எனக்கு வேத வாக்கு தான்.. நீ பெரிய ராஜா வம்சம் சொல்லிகிட்டு என்ன பிரயோஜனம்.. உன் பிள்ளையை ஒரு அரசனுக்கு உள்ள தகுதியோட உன்னால வளர்க்க முடிஞ்சுதா.. இல்லையே.. அதே அண்ணியை பார்.. அவர்கள் ராஜா வம்சம் இல்லை தான், ஆனால் பிள்ளைகள் இரண்டு பேரையும் எப்படி வளர்த்து இருக்காங்கன்னு..”

 

” அவள பத்தி எங்கிட்ட பேசாதீங்க” என்று உறுமியவரை, பார்த்து கேலி புன்னகை செய்து, ” உண்மை தான், இனி உன் கிட்ட சொல்லி என்ன செய்ய… இன்னும் ஒரே ஒரு வருசம்.. உன் பிள்ளை இப்படியே சுத்தி கிட்டு இருந்தான் வைச்சுக்கோ, நம்மை விட அவங்க பல மடங்கு அதிகாரத்திலும், அந்தஸ்த்திலும் முன்னேறிடுவாங்க.. நீ உன் ராஜா பெருமையை கட்டி கிட்டு அழ வேண்டியது தான்” இடம் பார்த்து தட்டினார் மனோகர் , மனைவியை அறிந்தவர் ஆக..

 

ரூபாவதி அவர் சொன்ன உண்மை உரைக்க சமைந்து நின்றார். இது தான் சமயம் என்று மனோகரும் தொடர்ந்தார்.

 

” அவனுக்கு வயசு இருபத்தி ஆறு தான் நடக்குது.. இப்போவே அவனுக்கு பெண் கொடுக்க நீ நான்னு போட்டி போடுறாங்க.. ஆனா உன் பிள்ளைக்கு… யோசிப்பாரு.. நம் சொந்தக்காரர்கள் கூட தேவாக்கு தான் கொடுக்க பிரியப்படுவாங்க… இதை விட முக்கியமாக ஒன்னு இருக்கு” என்று இடைவெளி விட்டார்..

 

” இன்னும் என்ன…” என்றார் மெல்லிய குரலில்…

 

” நான் உன்னை ஒரு வேர்ல்ட் டூர் கூட கூட்டி போகலைன்னு சொல்லி காட்டுவல.. உன் பையன் இதே போல சம்பாதனை இல்லாமல், செலவு மட்டும் செய்தான் என்றால், ஒரு நேஷனல் டூர் கூட எதிர் காலத்தில் போக முடியாது.. குந்தி தின்றால் குன்றும் மாளும்..இனி நீ தான் யோசிக்கணும்.. ” என்று அவரை நன்றாக குழப்பிவிட்டு சென்று விட்டார். மனைவி திருந்தினால் மட்டுமே மகனை வழிக்கு கொண்டு வர முடியும் என்று…

 

 

ரூபாவதி என்ன பேசினார் என்று மனோகர் எதும் அறியவில்லை.. நந்தனை வழிக்கு கொண்டு வந்து விட்டார் அவர்.

 

 

அதன் முதற்கட்டமாக அவனை பிஜி படிக்க அனுப்பினார். எங்கே வெளி நாடுகளுக்கு படிக்க அனுப்பினால் இன்னும் கெட்டு போக அதிக வாய்ப்பு உண்டு என்று கருதி கோவையிலேயே மிக பெரிய கல்லூரியில் தன் மகனுக்கு சீட்டை வாங்கினார், அதன் உரிமையாளர் தேவா தான் என்று மறைத்து விட்டார். ஆனால் படிப்பவன் எங்க இருந்தாலும் படிப்பான், கெட்டு போக நினைப்பவன் எவ்வளோ ஒழுக்கமான கல்லூரியாக இருந்தாலும் அவனை என்ன செய்ய முடியும்.. தனி மனித ஒழுக்கம் பிறப்பிலும், வளர்ப்பிலும், தன் சுய கட்டுப்பாட்டில் மட்டுமே.. 

 

நந்தனுக்கு பிறப்பு மட்டுமே அதனை தந்தது, வளர்ப்பும் சுய கட்டுப்பாடும் சேர்ந்து அதனை விரட்டி விட்டு இருந்தது. கல்லூரியில் இன்னும் சுதந்திரமான சுற்றி திரிந்தான்.. கட்டுப்பாடற்ற காளையாக… 

 

முதல் வருடம் இப்படியாகவே கழிந்தது நந்தனுக்கு… எவ்வித கற்றலும் இல்லை.. ஒரே சுற்றல் மட்டுமே.. ஆனால் கல்லூரிக்கு தவறாமல் ஆஜர் ஆகிவிடுவான் அவன். பின்னே வீட்டில் இருந்தால் அம்மாவின் தொணத்தொண பேச்சை கேட்க வேண்டி வரும் . கல்லூரி தான் அவன் கோட்டை… அவனை சுற்றி எப்போதும் இருக்கும் அல்லகைகள் .. கூடவே பணக்காரன், அழகன் என்று அவன் மீது விழுந்து பழக காத்திருக்கும் சில பெண்கள் என அவனை ஒரு நவீன கால ராஜாவாய் உணர வைத்த இடம் அல்லவா.. 

 

படிக்கவில்லை என்றாலும் பேப்பர் சேஸ்ஸிங் செய்தாவது தேர்ச்சி பெற்று விடுவான். பின் தந்தையிடம் யாரு பேச்சு வாங்க.. அதை விட அன்னை… இப்போது எல்லாம் அவர் ஒரே தேவாவின் பேச்சு தான்.. அவன் அப்படி செய்கிறான் தொழிலை.. இப்படி ஈட்டுகிறான் பொருளை என்று. தேவா… தேவா.. தேவா… அந்த பெயரே அவனுக்கு கசந்தது…

 

இந்த பெண்களுக்கு எப்படி இப்படி தொடர்ந்து பேச முடிகிறது சலிக்காமல் ஒரே டாப்பிக்கை… நம்மால் பத்து நிமிடங்களுக்கு மேல் உட்கார இயலாது.. என்று நினைப்பவன் தான் நந்தன். 

 

ஆனால் அவனே ஒரு பெண்ணிற்காக ஒரே இடத்தில் தவம் இருக்க போகிறான்.. அவளின் பேச்சை சுற்று சூழல் மறந்து, ஏன் தன்னை மறந்து கேட்க பெரும் அவா கொள்ள போகிறான் என்று சொன்னால் நம்மை என்ன சொல்லுவான்… லூசப்பா நீ என்று பார்ப்பானோ.. ???

 

பொறுத்து தான் பார்ப்போமே!!!!

 

 

கர்வம் வளரும்..

2 thoughts on “என் கர்வம் சரிந்ததடி சகியே… 1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top