அத்தியாயம் 1
“கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..” என்று ஐயர் மந்திரம் ஓத, தன் அருகில் அமர்ந்திருந்த ஹாசினியின் கழுத்தில் மங்களநாணை கட்டி தன் சரி பாதியாக ஏற்றுக்கொண்டான் ஹரிஷான்த். அவர்களது திருமணம் முடிந்த சில நிமிடங்களில்,
“அடுத்த ஜோடி.. மணப்பொண்ணை அழைச்சுண்டு வாங்கோ..” என்று ஐயர் மீண்டும் குரல் கொடுக்க, மணவறையில் அமர்ந்திருந்த ஹர்ஷவர்தனோ சட்டென எழுந்தான். கேள்வியாய் பார்த்த அர்ஜுனையும் தன் தந்தையையும் பார்க்காது,
“அய்யோ இருங்க ஐயரே.. எனக்கு அவசரமா வருது.. போயிட்டு வந்து தாலி கட்டுறேன்..” என்றவாறே அங்கிருந்து ஓட, அவன் பின்னோடு சென்றான் அவனது தம்பி சிவசூர்யா. மணப்பெண்ணான விளானி, மணவறையில் அமர்ந்திருக்க, அவளை திருமணம் செய்ய வேண்டியவனோ, காம்பௌண்ட் சுவற்றில் ஏற தாவிக் கொண்டிருந்தான்.
“என்ன உயரம் பத்தமாட்டேங்குதா? நான் வேணா ஏணியோ இல்ல ஸ்டூலோ போடவா?”
“அது.. அது வந்து சும்மா.. இங்க செக்யூரிட்டி எல்லாம் டைட்டான்னு செக் பண்ணேன்.. இப்ப வந்துடுறேன்..” என்றவாறே குளியலறைக்குள் ஓடினான் ஹர்ஷவர்தன். குளியலறைக்கு வெளியே நின்றிருந்த சிவசூர்யாவோ,
“என்ன முக்குனாலும் நினைக்குறது நடக்காது.. ஒழுங்கு மரியாதையா வந்து அண்ணி கழுத்துல தாலி கட்டு.. ஏற்கனவே நீ பண்ண வேலைக்கு, அண்ணனும் அப்பாவும் உன் மேல கொலைவெறில இருக்காங்க.. ஒழுங்கா வெளிய வர்றியா? இல்ல கதவை உடைக்கவா?” என்று சத்தமிட, பழியாடாய் வெளியே வந்தான் ஹர்ஷவர்தன். அவனை கோழி அமுக்குவதை போல் அமுக்கிய சிவசூர்யா, மணமேடைக்கு இழுத்துச் செல்ல, தன் அருகில் தங்கபதுமையாய் அமர்ந்திருந்த விளானியை சிறிதும் பாராது, ஐயர் கொடுத்த மங்களநாணை கடனே என்று மாட்டுக்கு மூக்காணங்கயிறு இடுவது போல் கட்டினான் ஹர்ஷவர்தன்.
“மாப்பிள்ளை பொண்ணு ரெண்டு பேரும் சேர்ந்து அக்னி குண்டத்தை சுத்தி வாங்கோ..” என்று ஐயர் கூற, ஹரிஷான்த்தின் கையை சுண்டு விரலை ஹாசினி பற்றியபடி ஒருபுறம் வலம் வர, மற்றொருபுறம் வேண்டா வெறுப்பாக விளானிக்கு தன் சுண்டு விரலை நீட்டினான் ஹர்ஷவர்தன். அவனது சுண்டு விரலை பிடிக்காது, அவனது சட்டையின் நுனியை பிடித்து கொண்டாள் விளானி. அதனை பார்த்த மலர்கொடிக்கு தலையே சுற்றியது.
‘இனி இவ என்னன்ன கூத்தெல்லாம் பண்ண போறாளோ?’ என்று மலர்கொடி நினைத்த மறுநிமிடம், ஹர்ஷவர்தன் வேஷ்டியின் நுனியை தன் காலால் விளானி மிதிக்க, கூடியிருந்த அத்தனை பேர் முன்னிலையிலும், அவனது வேஷ்டி கழன்று விழுக, வெறும் ஷார்ட்ஸோடு நின்றிருந்தவனை பார்த்த அவனது தந்தை அமிர்தனும் அர்ஜுனும் ஓடி வந்து ஹர்ஷவர்தனை மறைத்தவாறு நின்று வேஷ்டியை சரி செய்ய, எதுவும் அறியாது பிள்ளைபோல,
“நான் வேணும்னா எதுவும் பண்ணலமா.. தெரியாம கால் பட்டுடுச்சு..” என்று மலர்கொடியை பார்த்து முணுமுணுத்தாள் விளானி. உன்னை நான் அறிவேன் என்று நினைத்தபடி தன் மகளை முறைத்துப் பார்த்தாள் மலர்கொடி. அதன்பிறகு இருஜோடிகளின் எதிரே தட்டு நிறைய அப்பளங்கள் கைக்கப்பட்டன.
“இப்போ இதை எடுத்து ஒருத்தர் தலைல ஒருத்தர் வைச்சு உடைக்கணும்..” என்று அனுராகா கூறிய மறுநிமிடம், விளானியின் தலையில் ஹர்ஷவர்தன் ஓங்கி அடிக்க, அவளுக்கு பொறிகலங்கி கண்ணீர் வந்தது. ஹரிஷான்த் மற்றும் விளானி அமைதியாக ஒருவர் மீது ஒருவர் அப்பளப் உடைத்து விளையாடி கொண்டிருக்க, ஹர்ஷவர்தன் மற்றும் விளானி ஜோடியோ, குத்துச்சண்டை வீரர்கள் போல் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். இறுதியாக இருஜோடிகளையும் மணக்கோலத்தில் வீட்டிற்கு அழைத்து வர, அவர்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தனர் மலர்கொடி மற்றும் அனுராகா. சாந்தி முகூர்த்தத்திற்காக இருவரையும் தயார் செய்து கொண்டிருந்தார் கலாவதி.
“இங்கப்பாருங்க.. பசங்க ரெண்டு பேரும் தங்கமான பசங்க.. ஏதோ, போதாத காலம் இப்படி எல்லாம் நடந்து போச்சு.. அதையே, மனசுல வைச்சுக்கிட்டு குடும்பம் நடத்துனா, அது சரியா வராது.. அவனுங்க ஆம்பள பசங்க.. கொஞ்சம் அப்படி இப்படி இருக்க தான் செய்வாங்க.. நீங்க தான் பொறுத்து போகணும்.. முக்கியமா உனக்கு தான்..” என்ற கலாவதி விளானியின் புறம் திரும்ப,
“வேணாம்.. தாய்கிழவி.. என் வாயை கிழறாம போயிடு.. தானே செம காண்டுல இருக்கேன்.. அப்புறம் அவனுக்கு பதிலா உன்னைய தூக்கி எண்ணெய் சட்டிக்குள்ள போட்டு பொரிச்சுடுவேன்.. ஜாக்கிரதை..” என்று தன் ஒற்றை விரலை காட்டி, கண்களை விரித்து பேசிய விளானியை பார்த்த மலர்கொடி,
“பாட்டி.. இவளை பார்க்க எனக்கே பயமாயிருக்கு.. பாவம்.. ஹர்ஷு.. என்ன பாடு பட போறானோ?” என்று புலம்பியபடியே, அமைதியாக அமர்ந்திருந்த ஹாசினியை காட்டி,
“இங்க பாரு இவளும் உன் கூட தான பொறந்தா.. எவ்ளோ அமைதியா.. நாங்க சொல்றதை கேட்டு நடக்குறா.. நீயுந்தான் இருக்கியே.. எந்த நிமிஷத்துல என்ன பண்ணுவன்னு தெரியாம வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்குற மாதிரி இருக்கேன்..” என்றபடியே விளானியின் தலையில் மல்லிகை சரத்தை வைத்தாள் மலர்கொடி.
“ஏன் சொல்ல மாட்டீங்க? இந்த ப்ராடு சின்ன வயசுல இருந்தே ஹரி அத்தானை லவ் பண்ணிட்டுருந்தா.. சான்ஸ் கிடைச்சதும்.. மேரேஜ்கு உடனே ஓகே சொல்லிட்டா.. விளம்பரத்துல வர்ற மாதிரி.. ஒன்னு வாங்குன ஒன்னு ஃப்ரீங்குற கணக்குல.. இவ கல்யாணத்தோட சேர்த்து, என்னையவும் இவக்கூடவே பார்சல் பண்ணீட்டீங்க.. இப்ப இவளோட சேர்த்து கம்ப்பேர் பண்றீங்க.. மிஸ்ஸஸ் அர்ஜுன்.. இதெல்லாம் நல்லாயில்ல சொல்லிட்டேன்..” என்ற விளானியின் முதுகில் ஒன்று வைத்த மலர்கொடி,
“காலைல உன் டாடி கேட்கும் போது.. இந்த வாய் எங்க போச்சு.. அவர்கிட்ட எல்லாத்துக்கும் ஓகே சொல்லிட்டு இப்போ.. நாங்க தான் உன்னோட கையை காலை கட்டி மணவறையில் உட்கார வைச்ச மாதிரி பேசுற.. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன.. வாயில கோந்தை வைச்சு அடைச்சுடுவேன்..” என்று கூற, காலையில் நடந்த அத்தனையும் நிழல்படமாக விளானியின் கண்முன்னே வந்து போனது.
“அக்கா.. எந்திரிக்கா.. முகூர்த்தத்துக்கு இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு.. நீயும் படுத்து கும்பகர்ணி மாதிரி தூங்கிட்டுருக்க.. எந்திரிக்கா..”
“போ.. அகில்.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்குறேனே? என் செல்லம்ல.. பட்டுக்குட்டில..”
“எனக்கு தெரியாது.. மம்மி வந்தாங்க.. தொலைஞ்ச நீ..”
“என்னை மட்டும் எதுக்கு எழுப்புற.. ஹாசினியை எல்லாம் எழுப்பமாட்டியே?”
“ஒழுங்கா எந்திரிச்சுரு.. இல்ல?”
“இல்லன்னா என்னடா பண்ணுவ?” என்றவாறே எழுந்த விளானியின் முன் நின்றிருந்த அர்ஜுனை பார்த்ததும்,
“டாடி.. நீங்க.. நான் உங்களை சொல்லல.. அந்த மலைகுரங்கை தான் சொன்னேன்.. எங்க அவன்?” என்றவாறே அறையின் வெளியே பார்க்க, தன் இருகைகளையும் தலைக்கு மேலே அகில் அழகு காட்ட,
“இருடா.. உன்னை வந்து வைச்சுக்குறேன்..” என்று முணுமுணுத்தாள் விளானி.
“விளா.. உன்கிட்ட பேசணும்..”
“எதைப்பத்தி டாடி?”
“உனக்கு எங்க மேல நம்பிக்கை இருக்கா?”
“ஏன் டாடி இப்படி எல்லாம் கேட்குறீங்க? இப்ப என்ன பண்ணணும் அதை மட்டும் சொல்லுங்க.. உங்க மேல கடவுளுக்கும் மேல நம்பிக்கை இருக்கு..”
“அப்போ.. நீ இன்னைக்கு மேரேஜ் பண்ணிக்கணும்..”
“வாட்? நானா? மேரேஜா? யாரை? எப்போ? எதுக்கு?”
“இப்ப தான் என்னைய நம்புறேன்னு சொன்ன.. அதுக்குள்ள இத்தனை கேள்வி கேட்குற?”
“அதுக்காக மேரேஜ்.. சரி டாடி.. மேரேஜ் பண்ணிக்குறேன்.. யாரை?”
“ஹரிஷான்த்தோட தம்பி.. ஹர்ஷவர்தன்..”
“வாட்? இன்னைக்கு தானே அவங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ்.. அக்காக்கூட கிளம்பாம இருந்தாளே டாடி..”
“இப்ப எதைப் பத்தியும் பேச நேரமில்லை.. நான் அமிர்தனுக்கு வாக்கு கொடுத்துட்டேன்.. என் பொண்ணுங்க அவனோட பசங்களை கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு.. ஹாசினி ரெடியாகி கல்யாண மண்டபத்துக்கு மலர்கூட ஆல்ரெடி போயிட்டா.. இப்ப உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா இல்லையான்னு மட்டும் சொல்லு..”
“டாடி இப்ப தான் காலேஜ் படிச்சு முடிச்சுருக்கேன்.. அதுக்குள்ள கல்யாணமா?”
“ஹர்ஷவர்தன் நல்ல பையன்.. அவனுக்கு நீ வேலைக்கு போறதுல்ல எந்த வித தடையும் இருக்காது..” என்ற அர்ஜுன், விளானியின் அருகில் அமர்ந்து, அவளது தலையை கோதியவாறே,
“உனக்கு பிடிக்கலைன்னா.. பிரச்சினை இல்லடா.. நான் வேற அரேன்ச்மெண்ட் பண்ணிக்குறேன்.. எனக்கு உன்னோட முடிவு தான் முக்கியம்..” என்றவனை கூர்ந்து பார்த்தவள்,
“நான் ரெடியாகுறேன் டாடி..” என்றவளை பெருமையாக பார்த்த அர்ஜுன்,
“விளாக்குட்டி அவங்க ரெண்டு பேரும் அம்மாயில்லாம வளர்ந்தவங்க.. ஹரி வாயே திறக்கமாட்டான்.. ஹர்ஷு கொஞ்சம் விளையாட்டு பையன்.. சிவா காரியகார பையன்.. சாந்தினியை பத்தி தான் உனக்கே தெரியுமே.. நீங்க ரெண்டு பேரும் ஒன்னா தானே படிக்குறீங்க.. ரெண்டு குடும்பமும் கிட்டத்தட்ட நாலு தலைமுறையா நல்ல ப்ரெண்ட்ஸ்.. உனக்கும் அவங்களை நல்லா தெரியும்.. என் கண்ணு முன்னாடியே இருப்பீங்க.. ஹர்ஷு பண்ணதை மனசுல வைச்சுக்காத விளா.. அவன் ரொம்ப திறமையான பையன்..” என்று கூற,
“காது வலிக்குது டாடி.. இங்கப்பாருங்க ரத்தம் கூட வருது.. காலையிலேயே ப்ளேடு போடாதீங்க டாடி.. நான் கிளம்பணுமா? வேணாமா?” என்ற விளானியின் தலையில் செல்லமாக ஆட்டியவன்,
“வெளில பியூட்டிஷியன் வெயிட் பண்ணிட்டுருக்காங்க.. அவங்க கதவை தட்டும் போது திறந்து விடு.. ரெடியாகிட்டு மாடிக்கு ஒரு கால் பண்ணு..” என்றவாறே அங்கிருந்து எழுந்து சென்றான் அர்ஜுன். தனக்காக எல்லாம் செய்யும் தந்தையின் மீது நன்றி உணர்வு அதிகமாகியது விளானிக்கு.
“என்னோட அப்பாக்காக நான் எது வேணா செய்வேன்.. மேரேஜ் பண்ணிக்க மாட்டேனா? விட்றா விட்றா சூனாபானா.. நமக்கு இதெல்லாம் ஜுஜுபி..” என்று முணுமுணுத்த விளானிக்கு தெரியவில்லை, வாழ்க்கையில் யாருக்காக எதை வேண்டும் என்றாலும் தியாகம் செய்யலாம்.. ஆனால் திருமணம் மனதுக்கு பிடித்திருந்தால் மட்டுமே செய்ய வேண்டும் என்று..
காலையில் நடந்ததை நினைத்துப் பார்த்த விளானிக்கு பெருமூச்சு ஒன்று வந்தது. அதை பார்த்த கலாவதி,
“எதுக்குடி இந்த ஏக்க பெருமூச்சு விடுற?” என்று கேட்க,
“இனிமே உன்னைய நான் எப்ப கிழவி கொடுமை படுத்தபோறேன்? காலைல நீ சாமி பாட்டை அளவிடும் போது, அதனோட வயரை கட் பண்ணி விடுவேனே.. அதை இனிமே உனக்கு யார் பண்ணுவா? நீ விரதம் இருக்கும்போது சிக்கன் சிக்ஸ்டி ஃபை பொரிச்சு யார் உன் கண்ணு முன்னாடியே சாப்பிடுவா? இனிமே உனக்கு யாரு கிழவி பாகற்கா சூப் வைச்சு.. ரசம்னு பொய் சொல்லி கொடுப்பா? யார் உனக்கு இதெல்லாம் செய்வா? அதை நினைச்சேன்.. பெருமூச்சு தானா வந்துடுச்சு..” என்ற விளானியை வெட்டவா? குத்தவா? என்பது போல் பார்த்தார் கலாவதி.
“மலரு.. இவளோட பெட்டி படுக்கையை எல்லாம் இன்னைக்கே கட்டி வை.. நாளைக்கு காலைல இவ அவளோட புரஷங்கூட அவ ஊருக்கு போயாகணும்..” என்ற கலாவதியை சிரித்துக் கொண்டே பார்த்த விளானி,
“வாய்ப்பில்ல ராஜா.. வாய்ப்பில்ல.. எனக்கு காலேஜ் டிசி கிடைக்க ஒரு வாரமாகும்.. அடுத்த வாரம் தான் அவனோட ஊருக்கு போகப் போறேன்.. அதுவரைக்கும் உன்னைய இம்சை பண்ணிக்கிட்டே தான் இருப்பேன்.. ஹஹஹஹ..” என்றா வில்லன் போல் சிரித்தவளின் கையில் பால் சொம்பை கொடுத்த மலர்கொடி, தனது மகள்கள் இருவரையும் அவர்களது அறைக்குள் அனுப்பி விட்டு, தன் அறையை நோக்கிச் சென்றாள். வீட்டில் அத்தனை உறவினர்களையும் கவனித்து, கல்யாண வேலைகள் அத்தனையையும் இழுத்துப் போட்டு பார்த்தவள், கலைத்து போய் திரும்பியதை பார்த்த அர்ஜுன், தன் மனைவியை ஏதுவாக படுக்க வைத்து, அவளுக்கு கால் அமுக்கிவிட்டு மாசாஜ் செய்துவிட, அவனை கண்ணெடுக்காது பார்த்துக் கொண்டிருந்தாள் மலர்கொடி.
“என்ன அப்படி பார்க்குற?”
“என் புருஷனை நான் எப்படி வேணா.. எவ்வளவு நேரம் வேணா பார்ப்பேன்.. உங்களுக்கென்ன கஷ்டம்?”
“பாரு.. பாரு.. நல்லா பாரு.. அப்புறம் அதுக்கான விளைவையும் சமாளிக்க முடியும்னா நல்லா பாரு.. அந்த நேரத்துல கை வலிக்குது.. கால் வலிக்குதுன்னு சொன்ன.. நான் பாவம் பார்க்க மாட்டேன்..”
“உங்களை யாரு பாவம் பார்க்க சொன்னா?” என்று மலர்கொடி கூறியது தான் தாமதம், மங்கையவளை ஆழிப்பேரலையாய் தனக்குள் சுருட்டிக் கொண்டான் அர்ஜுன். தூவானம் விட்டாலும் விடாத சாரல் மழையாய் ஒரு ஜோடி நிம்மதியாய் தங்களது தாம்பத்யத்தில் சயனித்திருக்க, இங்கே அறைக்குள் இருக்கும் இளஞ்ஜோடிகளோ, எதிர் எதிர் துருவங்களாக நின்றிருந்தன. புயலுக்கு முன் அமைதி எனும் விதமாக, இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கோபத்தை இரு ஜோடிகளும் காட்டத் தொடங்க, அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று பயத்தில் மேகத்தின் பின்னால் ஒளிந்து கொண்டாள் இரவுவானின் மகள்.
hasini nd Hari voda love story edhum illayaaa……..❤️❤️❤️❤️❤️❤️❤️
Very interesting ud
Nice
👌👌👌👌👌👌👌
Wow previous story oda continuation already Arjun and malar fav Jodi ipo next Jodi’s super sis… waiting for next episode