30
கல்லூரிக்கு விடுமுறை விட்டதை அறியாத தேவா இரண்டு நாட்களாக வைஷாலி சைட்டுக்கு வரவில்லை என்று அவளை தேடி கல்லூரி பக்கம் ஏதேச்சையாக செல்வது போல செல்ல , அங்கே யாருமற்ற கல்லூரியே அவனை வரவேற்றது.
அங்குள்ள பாதுகாப்பு பணியாளர்களை விசாரிக்கும் போது தான் கல்லூரிக்கு பத்து நாட்கள் விடுமுறை என்று அவனுக்கு தெரிந்தது. பத்து நாளா… என்ற எண்ணம் மேலங்கியது.
வேலையில் மனம் செல்லவில்லை.. எல்லோரிடமும் எரிந்து விழுந்தான்… கேட்ட கேள்விகளையே திருப்பி கேட்டு வேலையாட்களை குழப்பினான்… வேலை சரியில்லை என ஆட்களை விரட்டினான்… கோபம்.. கோபம் மட்டுமே.. ஒரு கட்டத்தில் எப்படி அவள் சொல்லாமல் செல்லலாம் என்று அவள் மீதும் கோபம்… ஏன் அவள் சொல்ல வேண்டும், அவளுக்கு உன்னோடான பிணைப்பு என்ன என்ற மனதின் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.. ஆனால் அவள் மீதான உரிமை உணர்வு அவனுக்கு அதிகரிக்க அதிகரிக்க… மொத்தமாக அவள் அவனுள் வந்து விட்டாள் என்று உணர்ந்த அந்த நொடி, மெல்லிய நாண சிரிப்புடன் தன் தலையை கோதி கொண்டவன், அடுத்த கணம் சஞ்சய் வீடு நோக்கி தான் விரைந்தான்.
மறைவாக இருந்தபடியே சஞ்சய் விட்டை கண்காணித்தான்.அவர்கள் செல்லும் இடமெங்கும் இவனும் சுற்றித் திரிந்தான். யாரும் அறியாது இருக்க ஹெல்மட்டுடனே… அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அதே தளத்தில் இவனும் அறை எடுத்து தங்கி கொண்டான்.
முதலில் அவள் சந்தோஷமாக பெற்றோருடனும் நண்பர்களுடன் பொழுதை கழிப்பதை பார்த்து சிறு மனச்சுணக்கம்.
தன்னை போல அவள் உணரவில்லையா ?? அவளை தான் பாதிக்கவில்லையா?? அவளிடம் தனக்காக தேடல் இல்லையா?? அவளின் கண்களில் தான் கண்ட நேசம் பொய்யோ?? என்னை பித்தாக்கும் அந்த காதல் அவளைத் தாக்கவில்லையா??
என்று பதிலில்லா கேள்விகளுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கடந்த இரு நாட்களாக அவள் மனச்சோர்வுடன் சுற்ற.. அதைப் பார்த்து ஒரு சின்ன சந்தோசம் தேவாவை தொற்றிக் கொள்ள…புத்தாண்டு பிறக்க இருக்கும் தருணம் அனைவரும் உற்சாகத்தில் இருக்க.. இவள் மட்டும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சோகத்தில் திளைக்க.. தேவாவின் மனமோ இவளை நினைத்து குதூகலிக்க…
அவளைத் தேடி சென்று இதோ சொல்லிவிட்டான் தன் காதலை…
வைசாலி தன் காதலை செயலில் காட்டிய அந்த நொடி தேவா தன் நிலையில் இல்லை. அவன் மனமும் கட்டுப்பாடில்லாத பறவைபோல சிறகை விரித்து வான் முழுதும் பறந்து கொண்டிருக்க அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
பெற்றோர், சுற்றோர், நண்பர்கள் அனைவரும் அக்கணத்தில் மறைந்து அவனும் தானும் மட்டுமே இவ்வுலகத்தில் ஜீவித்திருக்க… தன்னைப் போலவே தன்னவனும் தன்னை விரும்பி இருக்கிறான் என்ற செய்தியே உவப்பாக இருக்க.. அதிலும் தன்னை தேடிவந்து காதல் சொல்லி விட்டான் என்ற எண்ணமும் அவளை அளவிலா இன்பத்தில் மூழ்க செய்தது.. அந்த ஆனந்தத்தில் கண்கள் குளமாக ஈஸ்வர் என்று மெல்ல அழைத்தாள் பெண்.
அனைவரும் அவனை தேவா.. ராஜன் என்று அழைத்து இருக்க, முதல் முதலில் தன்னவளின் தனக்கான பிரத்யேக அழைப்பு இந்த ஈஸ்வர்… ஒரு கணம் பேச்சற்று போனான் தேவா.. முதல்முதலாக மிக நெருக்கமான அவள் அழைப்பில்… உடல் முழுவதும் ஒரு வித சிலிர்ப்பு இழையோட…கண்களை மூடி அந்த சுகத்தை தனக்குள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டான்.
இக்கணமே அவளை தன்னவளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வுகளின் உந்துதலில் அவள் காதருகே சென்று ” ஏண்டி சொல்லாம போன.. ஒரு வாரமா பித்து பிடித்த மாதிரி ஆகிடுச்சு ” என்றான் நெருக்கமாக நின்று.
காதில் ஒலித்த கரகரத்த குரலில் அவனின் தேடுதலை , அவள் மீதான காதலை அவன் அவளுக்கு உணர்த்த.. கண்களில் காதல் வழிய அவனை பார்த்தாள் வைஷாலி.
“இப்படி பார்க்காதடி.. மோகினி பிசாசு.. இந்த கண்கள் என்னை உனக்குள்ள இழுக்குதடி ” என்று கிறக்கமாக கூற.. அதில் அவள் கர்வமாக உணர்ந்து தன் கீழ் உதட்டு நெளிய சிரித்தாள்.
” நீங்களும் தான் என்னை தேடலை ” என்று சிணுங்கியபடி அவள் கூற…
அவள் சிணுங்களில் தொலைந்த மனதை ரசித்தப்படி ” தேடலைனு தெரியுமா உனக்கு ?? ” என்ற தேவா, அவள் பின்னால் தான் சுற்றித் திரிந்தவற்றையெல்லாம் கூற..
அவனின் பதிலில் அவளுக்கு இனிய சாரல்கள், தன்னை அவன் தேடியிருக்கிறான் என்று. அதை அவள் கண்கள் பிரதிபலிக்க.. மீண்டும் அதில் முத்தங்கள் வைத்தான் தேவா.
“தேடினீங்களா !”என்று ஆச்சரியமாக வினவ.. தன் கன்னம் குழி தெரிய மெல்லிய சிரிப்புடன் ஆமோதித்தான் அவன்.
அவன் கன்ன குழியில் தன் விரல் கொண்டு நாணத்துடன் அவள் தொட.. அவள் தீண்டலில் அவன் மனம் மயங்கியது.
” இனி என்கிட்ட சொல்லாம நீ எங்கேயாவது போ , அப்புறம் இருக்குடி உனக்கு ” என்று சற்று வன்மையாகவே அவள் கன்னத்தைக் கிள்ளினான் தேவா.
” இனி தங்களிடம் சொல்லிக்கொண்டே செல்கிறேன் பிராணநாதா ” என்று அவள் கிண்டலாக கூற.. அந்த நேரத்தில் எந்த தேவதைகள் ததாஸ்து சொன்னதோ.. வருங்காலத்தில் நிகழப் போவதை அறியாமல் தங்களுக்கு சிரித்துக் கொண்டனர் இருவரும்.
அவள் சிரிப்பை பார்த்துக் கொண்டிருந்தவன் அதற்குமேல் தாங்காமல் அவள் இதழ்களை இழுத்து சுவைத்தான். வெகுநேரம் அவளை சோதிக்காமல் அவளை விடுவித்தவன் ” ஷாலு இதுக்கு மேல இங்க இருக்க வேணாம் , போகலாம் ” என்று கூறி மீண்டும் அவளுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிக்கொண்டு அவ்விடத்தை விட்டு மறைந்தான்.
பின் வந்த நாட்களில் சைட்டில் பார்த்தவனை, தன் மோதிரத்தைக் காட்டி “எப்போது இதை கண்டுபிடிச்சீங்க?” என்றாள் ஆவலாக..
“நீ தொலைச்ச , மறுநாள் காலை சீக்கிரமே எழும்பி வந்து இதைக் கண்டு புடிச்சுட்டேன். ஆனா உன் ஞாபகமா என்கிட்ட இருக்கட்டும்னு தான் உன்கிட்ட தரல” என்றான் கண்களில் குறும்புடன்..
“அப்புறம் ஏன் நேத்து கொடுத்தீர்களாம் ” சிணுங்கலுடன் வைஷூ..
” இனி இந்த மோதிரம் பார்க்கும் போதெல்லாம், உன் டார்லிங் கொடுத்ததாகவே இருந்தாலும் , போட்டது நானில்லையா அதனால என் ஞாபகம் தான் உனக்கு வரும். அதான் ” என்றான் கண்களில் காதல் தேக்கி..
“சரியான கள்ளன் நீங்க ” என்றவளின் கை பிடித்து, ” உன் காதலை களவாண்ட கள்வன்.. உன் பழுப்பு பாவையில் என்னை தொலைத்த கள்வன்.. உன் இதழை சுவைத்த கள்வன்.. உன்னையும் களவாட போகிற கள்வன் ” என்று அவள் நெற்றி முட்டி கூற, அவன் கூறிய விளக்கத்தில் அந்திவானம் என சிவந்து போனது வைஷாலியின் முகம்.
இப்போதெல்லாம் தன்னவனை பார்க்கவேண்டும் பேசவேண்டும் என்ற எண்ணங்களின் தவிப்பில் தன் படிப்பிலும்.. பணியிலும்.. நண்பர்களிடம் பேச்சிலும்.. எதிலும் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினாள் வைஷாலி.
எல்லாம் இந்த காதல் படுத்தும் பாடு என்று தனக்குள்ளே சொல்லி சிரித்துக் கொள்வாள். அவள் பெற்றோரை பற்றி எல்லாம் அவளுக்கு பயம் இல்லை அவர்களும் காதல் திருமணம் என்பதும், ஈஸ்வரை கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையும் அவளின் காதலுக்கு உரம் சேர்த்தது..
அவர்களின் கட்டிடத்தைப் போல அவர்கள் காதலும் வேகமாக வளர்ந்துகொண்டே வந்தது.
அவள் மீதான ஈர்ப்பு இப்போதெல்லாம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது தேவாவிற்கு. அவளை காணாவிடில் தவிர்த்து போகிறான். அவை இல்லா நேரங்களில் உணவு ருசிப்பதில்லை.. நண்பர்கள் ரசிப்பதில்லை.. நேரமும் கடப்பதில்லை அவனுக்கு..
அவளை காணும் போதோ இதயம் துள்ளுகிறது. அருகில் இருக்கும் போதெல்லாம் அவள் விரல்களை தன் விரல்களுக்குள் பொதித்து பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு பிரவாகமாக பொங்குகிறது. இதற்குப் பெயர் உயிர் காதல் என்றால் வைஷாலி மீது அவனுக்கு உயிர் காதல்.
அதீத காதலை தேவா காட்டினாலும் மற்ற காதலர்களை போல வெளியில் சுற்ற.. அவளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து வாங்கி தர.. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் அவனுக்கு வரவே இல்லை. அவன் வளர்ந்த ஹைபை சொசைட்டியில் பெண்கள் பின்னால் சுற்றுவது, அது மனைவியை என்றாலும் பார்த்து பார்த்து செய்வது எல்லாம் கிடையாது. அவரவர்கள் தேவையை அவர் அவரே பார்த்துக் கொள்வார்கள். அவன் அன்னை கூட தனக்கு தேவையானதை தானே வாங்கிக் கொள்வார் தந்தையை எதிர்நோக்கி இருப்பதில்லை.
ஆனால் இதற்கு நேர் மாறாக இருந்தாள் வைஷாலி தன் தந்தையின் காதலை அன்னையின் மீது பார்த்தே வளர்ந்ததால் அவளது எதிர்பார்ப்பு எல்லாம் அவ்வாறு இருந்தது. சின்ன சின்ன விஷயங்கள் கூட அவன் தனக்காக பார்த்து செய்ய வேண்டுமென்று அவள் மனம் ஏங்கத் துவங்கியது. அவன் வாங்கி தருவதாக சொல்லும் நியூ மாடல் போனை விட சாயங்கால வேளையில் அவள் வரும்போது “ஏண்டா டயர்டா இருக்க” என்று ஒற்றை வார்த்தையை அவளுக்கு தேவையா இருக்க.. ஆனால் தேவாவிற்கு அதுவெல்லாம் வருவேனா என்றது.
இருவரும் இருவேறு துருவங்களாய்.. ஆனால் எதிர் எதிர் துருவங்கள் தான் ஒன்றையொன்று ஈர்க்கும் என்பது தானே பொது விதி..
இவர்கள் காதல் செய்யும் இடங்கள் பெரும்பாலும் அவர்கள் கட்டிவரும் பில்டிங் அருகிலேயே அல்லது இவள் ஹாஸ்டல் இன் அருகில் உள்ள மர பெஞ்சில் அமர்ந்து தான்.
தேவாவிற்கு இதுவெல்லாம் வரவில்லை என்று புரிந்த வைஷாலியே மெல்லமெல்ல அவள் ஆசைகளை கூற ஆனால் அவனோ “வாட் இஸ் சில்லி திங்ஸ் ” என்றான் கொஞ்சம் கோபமாகவே. அவள் மனம் அதில் சுருண்டு விடும்.
ஒரு நாள் தனக்கு ஆடை வாங்க வேண்டும் என்று வற்புறுத்தி அவனை வெளியே அழைத்து சென்றாள் வைஷாலி.
ஆனால் அங்கே வந்தவனோ.. அதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை ஏன் அவளுக்கும் தனக்குமே சம்பந்தம் இல்லை என்பது போல ஒரு ஓரமாக நின்று தன் மொபைலை நோண்டி கொண்டிருக்க..
அவள் ஒவ்வொரு ஆடையாக அவனிடம் காட்டி எது பொருத்தமாக இருக்கும் என்று கேட்க அவனுக்கோ அது தெரிந்தால் தானே, ” உனக்கு பிடிச்சது எடுத்திட்டு வா” என்று சொல்லோடு நகர்ந்து விட்டான்.
முதல் முறையாக அவனுடன் வந்து இருக்கிறாள் அவன் சொன்னது அவள் மனதிற்கு வலியை தர முணுக்கு என்று கண்ணில் தோன்றிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.
அதன் பிறகு வெளியே அவனை கூப்பிடவே அவள் மனதிற்கு ஒப்பவில்லை. ஒரு வாரம் கழிந்த நிலையில் அவள் நண்பர்களெல்லாம் அந்த ஞாயிற்றுக்கிழமை படத்திற்கு போகலாம் என்று வைஷாலிடம் கூற அவளுக்கும் உள்ளுக்குள் மனதில் ஆசை தான். ஆனால் தன்னவனை விட்டு எப்படி செல்வது. அவனும் பாவம் தனியாக தானே இருப்பான் என்று பெண் மனம் அவனுக்காக ஏங்க , அவனை கூப்பிட்டாள் படத்திற்கு செல்ல..
முதலில் அவனுக்கும் ஒரு மாறுதலுக்காக சரி என்றவன் , படத்திற்கு வந்து அமர்ந்த பத்தாவது நிமிடமே, அதில் காட்டிய லாஜிக் இல்லா மேஜிக்கில் நொந்துபோய் அவளை அரிக்க ஆரம்பித்துவிட்டான் போகலாம் போகலாம் என்று. அதில் வைஷாலி பத்ரகாளி ஆக மாறி அவனை இழுத்துக் கொண்டு வெளியில் வந்து விட்டாள்.
இதைக் கேட்ட நந்தாவும் கார்த்திக்கும் விழுந்து விழுந்து சிரிக்க..
“ஆனாலும் அண்ணா நீங்க இப்படி சொதப்பி இருக்க கூடாது.. நமக்கு பிடிக்கலனாலும் அவங்களுக்காக புடிச்ச மாதிரி நாம நடிக்கத்தான் வேண்டும். ஆனாலும் அண்ணி உங்கள சும்மா விட்டு இருக்க மாட்டார்களே !!” என்று அவன் யோசனையாக கூற..
கார்த்திக்கும் “அப்படியாடா.. சொல்லு மச்சி சொல்லு.. இப்ப தான் கதை ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு ” என்று கலாய்க்க..
“என் கஷ்டம் உங்களுக்கு எல்லாம் குதுகலமா வாடா இருக்கு ” என்று இருவரையும் மொத்தினான் தேவா.
” என் பாசமலர் லவ் பண்ணது உனக்கு அவ்வளவு கஷ்டமாவா இருந்தது? இரு டா.. பார்த்ததும் முதல் வேலை, வைஷூ கிட்ட போட்டுக் கொடுக்கிறேன் ” என்றான் கார்த்திக்.
‘” அடேய் நல்லவனே.. ஏன்டா ஏன்.. இப்பவே மலை இறக்க என்ன பண்ண போறேன்னு தெரியல.. இதுல இது வேற சேர்த்து சொன்ன எனக்கு டைவர்ஸ் கன்ஃபார்ம்.. அப்புறம் உனக்கு கல்யாணம் ஆகாமலே டைவர்ஸ் ஞாபகம் வச்சுக்கோ” என்று தேவா மிரட்ட , கார்த்திக் தன் வாயைப் பொத்திக்கொண்டு இனி பேசவில்லை என்று தலையை ஆட்டினான்.
“சரி சொல்லுங்கண்ணா…வெளில வந்து என்ன பண்ணாங்க??” என்று ஆவலாக நந்தன் கேட்க…
” என்ன முறைச்சுக்கிட்டே வந்தாள், ஹாஸ்டல் போற வரைக்கும் என் கூட பேசல.. அடுத்த ஒரு வாரத்துக்கும் என்கூட பேசவே இல்ல.. அப்புறம் நானா போனேன் அவ கிட்ட பேச ஒரே ஒரு கண்டிஷன் போட்டா பாரு ”
“என்ன.. என்ன.. ” என்று இருவரும் குதுகலமாக கேட்க..
” அடுத்து வந்த ஒருவாரமும் அந்த மாதிரி வித விதமான படத்துக்கு கூட்டிட்டு போயி வைச்சி செஞ்சிட்டா ” என்று சோகமாக கூறினான் தேவா. முன்னைக் காட்டிலும் அதிகமாக சிரித்தார்கள் கார்த்திக்கும் நந்தனும். அழ முடியாமலே அடித்தாள் தேவாவை.
அவர்கள் கட்டி வரும் கட்டிடத்திற்கு அருகிலேயே தேவாவிற்கு என்று ஒரு அறை இருக்க அதில் தான் அவர்கள் சந்தித்தார்கள் பெரும்பாலும்.. காதலும்.. ஊடலும் கலந்து செல்லும் அங்கே..
இருவரும் பேசிக்கொண்டே செல்ல அப்போது வைஷலி தேவாவை பார்த்து ” நாம் ஒரு நாள் எலிஃபேண்டா கேவ் போகலாமா ” என்றாள்.
ஊர் சுற்ற அதிக பிரியம் இல்லாத, அதேசமயம் அது தன் ஸ்டேடஸ்க்கு உகந்ததல்ல என்ற சிறு கர்வமும் அவனிடம் உண்டு. அவள் தன் விருப்பத்தை சொன்னவுடன், ம்ப்ச் என்று சலித்தவன் ” இதலாம் தான் லவ்வா? இது தான் வாழ்க்கையா? ” என்றான்.
அவனின் எண்ணங்களெல்லாம் தன் தொழிலில் மிகப்பெரிய உயரத்தை தொட வேண்டும் என்று.. இந்த மாதிரி சிறிய சிறிய விஷயங்களில் அவன் ரசிப்பதில்லை. ஆனால் அந்த சிறு சிறு விஷயங்கள் தான் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பதை அக்கணம் அவன் அறியவில்லை. ஆனால் அறியும் போதோ!!
” இதுதான் லவ்.. இதுதான் வாழ்க்கை. உனக்கு தேவையானது நீ வாங்கிக்க எனக்கு தேவையான நான் வாங்கிக்கிறேன் இப்படி ஒட்டாம வாழுறதா வாழ்க்கை?? உங்க ரசனை புரிஞ்சிகிட்டு நான் செய்யணும் என் ரசனைக்கு நீங்க செய்யணும். இது தான் லவ் அண்ட் கேர்.
இந்த மாதிரி நிறைய இருக்கு ” என்று அவள் கூற..
அவள் சொற்கள் அவன் முகத்தில் விருப்பமின்மையை காட்டியது.. அதில் அவளுக்கு லேசாக கோபம் துளிர்க்க.. “அப்போ எப்ப பார்த்தாலும் கிஸ் பண்றது, ஹக் பண்றது தான் லவ்வா.. இது வெறும் லஸ்ட் ” என்று கோபமாக அவள் கூறிவிட, தங்கள் காதலை அவள் கொச்சைப்படுத்தி விட்டாள் என்று நினைத்த மாத்திரத்தில் ரௌத்திரம் பொங்க ஏய் என்று கத்திவிட்டான் தேவா.
ஆனால் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்ன வார்த்தை சொல்லி விட்டாள் என்று.. வைஷாலி மீது தேவாவுக்கு இருப்பது அதீத காதல் தான். ஆனால் அதை அவன் காட்டும் முறை வேறு அவள் எதிர்பார்க்கும் முறை வேறு..
முதல் விரிசல் இங்குதான் ஆரம்பித்தது அவர்களுக்கு..
இனி இங்கு அவள் இருந்தால், அவளிடம் வேறு ஏதும் கோபமாக பேசி விடுவோம் இல்லை கை நீட்டி விடுவோம் என்று எண்ணி ” நீ ஹாஸ்டலுக்கு போ ” என்றான் ஆழ்ந்த குரலில்..
தான் பேசியது தவறோ.. என்று சிறு உறுத்தல் வைஷாலியிடமும்.. ஆனாலும் அவளின் ஈகோ அவனிடம் மன்னிப்பு கேட்க தடுக்க அவனைப் பார்த்துக் கொண்டே இறங்கியவள் படியில் தவறி கீழே விழுந்தாள்.
அவளின் சத்தத்தில் விரைந்து வந்தவன் கீழே கிடப்பதைப் பார்த்து பதறிப் போய் அவளை தூக்கி நிறுத்த இடது காலில் தோல் வலண்டு போய் ரத்தம் கசிந்தது..
தன்னிடமுள்ள முதலுதவி சிகிச்சை பெட்டியிலிருந்து மருந்துகளை எடுத்து அவளுக்கு போட்டவன் அவளை நடக்க வைக்க முயல அவளால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை..
அவள் இடையில் கையை கொடுத்து தூக்கியவன் அவனை முறைத்தவாறே “இதையும் லஸ்ட்னு சொல்லி விடாதே” என்றான் வலி மிகுந்த குரலில்..
அவனின் வலியை பெண்ணவள் உணர தன் வலி மறந்து போனது அவளுக்கு.. அவன் தூக்குவதற்கு ஏதுவாக தன் கைகளை அவன் கழுத்தில் மாலையென போட்டுக் கொள்ள, சுமக்கும் அவனையே பார்த்துக்கொண்டு வந்தாள். அவனோ முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு.. அவளை ஹாஸ்பிடல் வரை தூக்கிக் கொண்டு வந்தவன், அங்கிருக்கும் மரப்பெஞ்சில் அவளை அமரவைக்க முயல அவன் கன்னத்தில் கடித்து வைத்து பாய் என்றாள்.
நீர் பூத்த நெருப்பாக கோபம் இருந்தாலும் அவளின் குறும்பில் ” மோகினி பிசாசு.. உன் பிரண்ட கூப்பிட்டு ஹாஸ்டலுக்குள் பத்திரமா போ” என்று அவன் தள்ளி நின்று கொண்டு , அவள் தோழி உடன் செல்வதைப் பார்த்த பின்னே தன் இடத்திற்கு சென்றான்.
கர்வம் சரியும்..
Very nice epi sis
So nice
Romance in decent way