32
ஷாலு என்று கதறி தீர்த்தவன் , அடுத்த நொடி கார்த்திக்கை தள்ளிவிட்டு காரை எடுத்தான். அசுரவேகத்தில் செலுத்தியவன் போனில் சொன்ன இடத்திற்குச் சென்றதும் தான் நிறுத்தினான். ஆனால் அவன் கால்கள் இறங்க மறுத்து காரிலேயே வேரோடி நின்றது.
கார்த்திக் தான் முதலில் இறங்கி அங்கிருந்து காவல்துறை அதிகாரிகளை விசாரித்தான். பிறகு தேவாவை அழைத்து கார் விபத்துக்குள்ளான இடத்தை நோக்கி செல்ல.. தேவாவின் இதயம் விட்டுவிட்டுத் துடித்தது. நந்தனோ தேவாவின் கையை இறுக பற்றிக்கொண்டு வெளுத்த முகத்தோடு வந்தான்.
மூவரும் சென்று காரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் உள்ளிருக்கும் ஆள் தெரியாத வண்ணம் அப்பளம் போல நசுங்கி இருந்தது அவனின் லம்பார்கிணி.
அவர்கள் அருகே வந்த ஒரு காவல் துறை அதிகாரி ” சார் இது உங்க வண்டி தானே?”
தேவாவுக்கு தொண்டைக்குழியை விட்டு வார்த்தை வெளிவரவில்லை. ஆனால் அவனின் உயிர் இப்போது எப்படி இருக்கிறாள் என்று தெரிவது அவசியம் அல்லவா, என்று கடினப்பட்டு வார்த்தையே வெளிக்கொணர்ந்தான்.
” இந்த.. இந்த.. காரில் இருந்த.. அவங்க.. அவங்களுக்கு.. என்ன ஆச்சு ” என்று வெளிவரத் துடிக்கும் அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டே கேட்க..
” தெரியல சார்.. எங்களுக்கு இன்ஃபர்மேஷன் வந்த நான் பார்க்கும் போது , கார் இந்த நிலைமையில் தானிருந்தது. உள்ள ஆள் இருக்காங்களா இல்லையானு பாக்க முடியல”என்று கையை விரித்தார்.
“என்னது.. என்று அதிர்ந்த தேவா ஷாலு என்று கார்த்திகை கட்டிக் கொண்டு கதற ஆரம்பித்தான்..
” சர் ஆழாதீங்க.. ப்ளீஸ் ” என்றவர் “உங்களுக்கு இன்பார்ம் பண்ணிட்டோம். அதே மாதிரியே பொக்லைனுக்கு இன்ஃபார்ம் பண்ணி இருக்கோம் சார்.. அது வந்தா அதான் கட் பண்ணி உள்ள ஆள் இருக்காங்களா ? என்ன நிலையில் இருக்காங்கன்னு? பார்க்க முடியும்” என்றார். அவர் சொல்லும் தோரணையே உள்ளே ஆள் இருந்தாலும் அவர் உயிரோடு இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று கூறியது.
அதற்குமேல் பேசாதீர்கள் என்று கையை உயர்த்திய தேவா உடல் நடுங்க தொப்பென்று அங்கேயே அமர்ந்தான்.
கார்த்திக் காவல்துறை அதிகாரியுடன் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, நந்தன் அண்ணன் அருகிலேயே அமர்ந்து அவன் முழங்கையில் தன் கையை கோர்த்துக்கொண்டு தன் தலையை அதில் பதித்திருந்தான். அதில் தெரிந்த ஈரமே அவனும் அழுகிறான் என்று புரிந்தது.
கார்த்திக் வந்து விபத்து பகுதியில் இருந்து சற்று தள்ளி அழைத்துவந்தான் தேவாவையும் நந்தனையும். அவனுக்கும் என்ன பேசுவது என்று புரியவில்லை.
“எல்லாம் என்னால தான்.. நான் மட்டும் அண்ணன் கதையை கேட்காமல் இருந்தால், இந்நேரம் சீக்கிரம் வந்து இருக்கலாம் , அண்ணியை காப்பாத்திருக்கலாம் ” என்று நந்தன் அழுக ஆரம்பிக்க…
பாசமலர் கார்த்திக் அவன் பாசமும் குறையவில்லை என்று” நானும் உன் கிட்ட சண்டை போடாம இருந்திருக்கலாம் டா.. நீயும் உடனே வைஷூவை தேடி கிளம்பி வந்திருப்ப ” என்று தன் பங்கிற்கு அவனும் தன் மேல் பழியை போட்டு கொள்ள…
” இல்லடா இல்ல.. நான்தான் அவளை சரியாவே அப்போத்திருந்து புரிஞ்சுக்கவே இல்ல.. அந்த தீனா பத்தி தெரிஞ்சும் நான் கொஞ்சம் மெத்தனமா இருந்துட்டேன்… நானே அவள கொன்னுட்டேன் டா ” என்று அழுது புலம்பயவன்.. “அவ இல்லன்னா நான் இருக்க மாட்டேன் டா ” என்று மீண்டும் கதறி அழ கார்த்திக் அவனை அணைத்துக் கொண்டான்.
இவ்ளோ பெரிய விபத்திலிருந்து வைஷாலி பிழைத்து இருப்பாள் என்ற ஒரு சதவீத நம்பிக்கை கூட அவர்களுக்கு இல்லை. ஆனாலும் பார்க்கலாம் என்று அங்கேயே நின்றுயிருக்க…
எதேச்சையாக திரும்பிய தேவாவின் கண்கள் அவர்கள் வந்த காரின் பேன்ட்டை பார்க்க, அதிர்ச்சியாகி பின் உதடுகள் மெல்ல ” மோகினிப் பிசாசு ” என்று உதிர்த்தது..
அவனின் மோகினி பிசாசில் கார்த்திக்கும் நந்தனும் ‘என்ன சொல்கிறான் இவன்?’ என்று திரும்பி பார்க்க , அவர்களும் விழி விரிய பார்த்தனர் அதே இடத்தை…
அங்கே காரின் பேன்ட்டில் ஒரு கால் மீது மறு காலை போட்டு, அதில் கையை ஊன்றி தன் தாடையை பதித்தவாறு அமர்ந்திருந்து இவர்களை தான் பார்த்து கொண்டிருந்தாள் தேவாவின் செல்ல மோகினி பிசாசு.
சந்தோஷ மிகுதியில் மூவரும் அவளிடம் ஓடி வர, காரிலிருந்து குதித்தவள், ” நாட் பேட் மூணு பேரும் நல்லாவே அழுறீங்க.. யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்.. எல்லாருக்கும் செத்ததுக்கு அப்புறம் கிடைக்கும் எனக்கு உயிரோடு இருக்கும்போதே கிடைத்து இருக்கு ” என்று அவள் சிலாகித்து கூற..
இவ்வளவு நேரமும் அவளை இழந்து விட்டோம் என்ற தவிப்பில் இருந்தவன், அவளை கண்ட நொடி தவமிருந்தவன் கடவுளை கண்டது போல் அகமகிழ்ந்தான். போன சுவாசம் திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில் அணைத்துக் கொண்டான் தன்னவளை..
“என்ன ஆச்சு ? எப்படி நடந்தது ? “என்று கேட்க.. “நான் காரை எடுத்து வேகமாக வந்துட்டு இருந்தேனா.. முதல ஒன்னுமே தெரியல.. இருக்க இருக்க வேகம் போகப் போக எனக்கு ஒருமாதிரி மூச்சு முட்டுது, தலையெல்லாம் கிறுகிறுனு ஆகிட்டு வாந்தி வேற வர்ற மாதிரி இருந்தது.. அப்போ இந்த பக்கத்துல எந்த வண்டியும் வரல.. ஓரமா வண்டிய நிறுத்திட்டிட்டு கார் கதவைத் திறந்து உட்கார்ந்த நிலையிலேயே வண்டியில் இருந்து தண்ணீர் எடுத்து மூகத்தை கழுவினேன். அப்போ பின்னாடி பயங்கரமா எதோ ஒரு இடிக்கிற மாதிரி இருந்தது. நிலை தடுமாறி தொப்புனு கீழே விழுந்து பக்கத்தில் இருந்த செடிகள் கிட்ட உருண்டு போய்ட்டேன். என்ன சரிப்படுத்தி எழுந்து பார்த்தா பின்னாடி ஒரு பெரிய டேங்கர் வண்டி, நான் வந்த காரை இடித்து தள்ளிச்சு.. அதோட மட்டும் இல்லாம திரும்பவும் காரு மேல டேங்கர் லாரியை விட்டு ஏத்தினாங்க.. எனக்கு அப்படியே படப்படப்பா வந்துருச்சா அந்தப் புதற்கிடையே உக்காந்துட்டேன் ”
அவள் சொல்ல சொல்ல கேட்டவன் அந்த நிலையில் வைஷூ எப்படி பயந்திருந்திருப்பாள் என்று நினைத்து எதில் இருந்தோ காப்பவன் போல அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
விடுங்க என்று அவனை தள்ளியவள். மேலும் தொடர்ந்தாள் ” அப்புறம் போலீஸ் எல்லாம் வந்தாங்க எனக்கு அப்போதும் வெளியே வர கொஞ்சம் பயமாகவே இருந்தது. அப்புறம் உங்க பேச்சு குரல் கேட்டு தான் அங்கிருந்து வெளியில் வந்தேன் ” என்றாள்.
அவள் சொல்ல சொல்ல அவள் மேனியும் அந்த நிகழ்ச்சியை நினைத்து வெடவெடவென நடுங்கியது. மனைவியின் பயத்தை கண்டவன், அந்த நொடி அதற்கு காரணமானவனை அடித்து நொறுக்கும் வேகம் வந்தது.
அவளை ஆதுரமாக அணைத்து ” ஒன்னும் இல்லடா ஒன்னும் இல்லை ” என்று முதுகை தடவி கொடுக்க, சற்று ஆசுவாசமாக உணர்ந்தவள், அவனே அரண் என தேவா மார்பில் தஞ்சம் கொண்டாள்.
வைஷூமா என்று கார்த்திக் வர , அண்ணி என்று நந்தனும் அருகில் வந்தான்..
நந்தனின் அண்ணியில் அவள் ஆதிர்ந்து விழித்து, தன் கணவனை பார்த்தாள். அவன் நமட்டு சிரிப்புடன் ஆமாம் என்று தலையசைத்தான்.
தேவாவின் அணைப்பில் இருந்தவளை தேவாவோடு சேர்த்து கார்த்திக் அணைத்துக்கொள்ள, பார்த்துக் கொண்டிருந்த நந்தனும் நானும் என்று கூறி அவனும் அந்த மூவரும் வட்டத்தில் நால்வராகினான்.
இந்த மூவரின் பாசத்தில் முட்டி, சுவாசம் தட்டி அவள் மூர்ச்சையாகி கீழே விழ.. ஷாலு.. வைஷூ.. அண்ணி.. என்று மூவரும் பெருங்குரலெடுத்து கத்த.. அதற்குள் அங்கு வந்த காவல்துறை அதிகாரி கார்த்திக்கை விசாரிக்க, கார்த்திக் நடந்தது அனைத்தும் கூறினான்.
கார்த்திக் காரை எடுக்க வைஷூவை வைத்துக் கொண்டு தேவா பின்னால் அமர, நந்தன் முன்னால் அமர கார் அருகில் உள்ள மருத்துவமனை நோக்கி விரைந்தது.
வைஷாலி உள்ளே அனுமதித்து விட்டு மூவரும் மூன்று திசையில் நடைபயின்றுக் கொண்டிருக்க, வெளியில் வந்த மருத்துவருக்கு மூவரில் யாரிடம் செய்தி சொல்ல என்று பெருத்த யோசனை..
மருத்துவரை கண்ட மாத்திரத்தில் அனைவரும் அவரை சூழ்ந்துகொண்டு என்னாச்சு என்னாச்சு டாக்டர் என விசாரித்தனர். அவங்க கணவன் யாரு என்று டாக்டர் விசாரிக்க ஒரு பயத்துடனே தேவா நான் என்று கூறினான்.
அவனின் பயந்த முகத்தைப் பார்த்த மருத்துவர் ” குட் நியூஸ் தான்.. மிஸ்டர் அவங்க கன்சீவா இருக்காங்க ” என்றார்.
தேவா எப்படி உணர்ந்தான் என்று வடிக்க வார்த்தையில்லை..
சட்டென்று கார்த்திக்கும் நந்தனும் அவனைத் தூக்கிக்கொண்டு கத்த மருத்துவமனையே களேபரம் ஆனது. அது சிறிய மருத்துவமனை ஆகையால் தன் சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள அப்பொழுது உள்ள நிலையில் இனிப்பு வாங்கி தர இயலாது என்று கூறி தன்னால் முடிந்த ஒரு பெரிய தொகையை அந்த மருத்துவமனையின் விரிவாக்கத்திற்காக கொடுத்தான் தேவேஷ்வர ராஜன் தன் வாரிசினை வரவேற்க..
இன்னொரு புறம் கார்த்தியும் அதைப்போல் பணத்திற்கான காசோலையை நீட்டினான். புரியாமல் பார்த்த தேவாவை ” மச்சி பொண்ணுக்கு தலைப்பிரசவம் பொறந்த வீட்ல தான் பார்க்கணும், அதனால இப்போதிலிருந்து என் மருமக பிள்ளை பொறக்குற வரைக்கும் எல்லா செலவும் என்னோடது” என்றான்.
இவன் என்னடா புது பிட்ட போடுறான் என்று தேவா வைசாலி நந்தன் அவனை பார்க்க..
தேவாவின் அருகிலிருந்த வைஷாலியை தன் பக்கம் இழுத்தவன் அவள் தோள் மீது கை போட்டுக் கொண்டு மற்ற இருவரையும் பார்த்து ” நான் கார்த்திக் சந்திரன்.. இவள் வைஷாலிதேவி சந்திரன்.. எங்கள் சந்திரன் குடும்பத்தின் பெண் வாரிசு ” என்றான். என்னடா ஷாக்கு மேல ஷாக்கா கொடுக்குறீங்க..
” வைஷாலியின் அப்பா ஜெயச்சந்திரன் என் சித்தப்பா. எங்க பாட்டிக்கு அவரோட லவ் பிடிக்கல.. அதனால அவர் வீட்டை விட்டு வெளியே போய் சித்திய கல்யாணம் பண்ணிக்கிட்டு கோயம்புத்தூர் வந்துட்டாரு. நாங்க திருப்பூரில் இருந்து கோயம்புத்தூர் வந்து இப்போ ஒரு ஆறு வருஷம்தான் ஆகுது.
அன்னைக்கு உன் பர்த்டே பாராட்டில சித்தியை பார்த்துட்டு தான் அப்பா இந்த விஷயத்தை என்கிட்ட சொன்னார்” என்றான் வைஷாலியை பாசமாக பார்த்துக்கொண்டே…
அனைவரும் காரில் திரும்பிக் கொண்டிருக்க , அப்போது நந்தன் “எனக்கு ஒரே ஒரு டவுட் .. அண்ணிய அவ்ளோ லவ் பண்ண தான் சொன்னீங்க.. மூணு வருஷமா அவங்க நினைப்பிலேயே இருந்ததா சொன்னிங்க.. அப்புறம் எப்படி வாணிஸ் குரூப் பெண் கல்யாணம் பண்ண சம்மதீச்சிங்க?” என்று நாரதர் கலகத்தை வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்க.. வைஷூ தேவாவை முறைத்து பார்க்க.. அவளைப் பாவமாக பார்த்தவன், தன் தம்பியை முறைத்து ” ஏன்டா ஏன் உனக்கு என்னடா நான் பாவம் பண்ணினேன் ” என்றவன் தன் மனைவியை தன் அருகே இழுத்து வைத்து “வைஷூமா அது தாத்தா சொன்னது, ஆனா அதற்காகவெல்லாம் அந்த பொண்ணை நான் கல்யாணம் பண்ணி இருப்பேனா.. தாத்தாவை எப்படி சமாளிக்கிறது எனக்கு தெரியும்.. ஏன் இத்தனை வருஷத்துல எவ்வளவு ஆஃபர்ஸ் வந்துச்சு அதையெல்லாம் நான் தவிர்க்கல, எனக்கு மனைவின்னா அது என் ஷாலு தான் ” என்று காதலாக மனைவியை பார்த்தான். அதற்குள் கார்த்திக்கும் நந்தனும் “பப்ளிக்.. பப்ளிக்..” என்க அங்கே மீண்டும் ஒரு சிரிப்பலை..
வீட்டிற்கு வந்தபோது தமயந்தியும் மோகனும் இவர்களுக்காக காத்திருக்க மனைவியோடு சேர்ந்து பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கி சந்தோசமான விஷயத்தை பகிர்ந்து கொண்டான் தேவா. அவர்களும் அவர்களை ஆசீர்வதித்து, தங்கள் பேர பிள்ளையின் வரவில் மகிழ்ச்சி அடைந்தனர்.
அடுத்து வந்த நாட்களில் வீட்டில் மட்டுமல்ல அலுவலகத்திலேயும் மனைவியை பின்னால் , வேலை செய்ய விடாமல் அரண் போலவே சுற்றிக் கொண்டிருந்தான் தேவா. அவள் பார்த்துக்கொண்டிருந்த ப்ராஜக்டை தானே முன்வந்து செய்து வந்தான் நந்தன். ஃபீல்டு ஒர்க்கா ? நானா? என்றவன் , இப்போது மொத்த ப்ராஜெக்டையும் அண்ணனின் துணையோடு , அண்ணியின் அறிவுரையோடு வெற்றிகரமாக செய்து முடித்தான்.
ஏழாவது மாதம் வைஷாலிக்கு தொடங்கியிருக்க பெறும் வயிற்றோடு ஆடி அசைந்து ஆழித்தேர் என வலம் வரும் மனைவியை கண் எடுக்காமல் பார்த்துகொண்டிருந்தான் தேவா.
அவன் முதுகில் பட்டென்று ஒரு அடி அடித்து பிள்ளையை கண் வைக்காதே டா என்று அதட்டிவிட்டு சென்றார் தமயந்தி..
அவர் சென்றதை உறுதி படுத்தியவன்,
அவளைப் பின்னிருந்து அணைத்து இன்றைக்கான முத்த கணக்கை ஆரம்பித்து வைத்தான். சூல் கொண்ட பெண்ணின் வதனமானது முன்பை விட அபரிமிதமான அழகில் ஜொலிக்க அவளை நெருங்கி நெருங்க முடியாத நிலையை நினைத்து தவித்துக் கொண்டிருந்தான் தேவா.
ஆனாலும் அவளின் இதழ்களோடு இதழ்கள் போடும் யுத்தங்களையும்.. அவளை அணைத்துக் கொண்டு உறங்கும் போது அவள் மேனியில் விளையாடும் அவன் விரல்களையும் நிறுத்திக் கொள்ளவில்லை.
ஏழாம் மாதம் வளைகாப்பு செய்து அவளை கூட்டி செல்ல வந்த சபர்மதி நமசிவாயத்தை கண்டு முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான் தேவா. அவனுக்கு மேல் முறைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தான் கார்த்திக்.
காலம் பாடம் கற்பிக்க.. சின்ன மருமகளை தன் வீட்டிற்கு அழைத்தார் கார்த்திக்கின் பாட்டியும் ராஜராஜனின் தங்கையுமான வைஷ்ணவி தேவி.. கூடவே வைஷாலிக்கு செய்யும் முறையையும் செவ்வனே செய்திருந்தார். என்னதான் கணவன் பெரும் பணக்கார வீட்டில் பிறந்திருந்தாலும் அவர் வீட்டிற்குச் செல்ல சபர்மதி ஒத்துக்கொள்ளவில்லை. முதல் காரணம் தன் கணவன் கட்டிய வீட்டிலேயே இருக்க வேண்டும், அடுத்து தந்தையை தனியாக விட மனமில்லை. அதனால் அவர்கள் வீட்டிலேயே இருக்க வைஷூவை அங்கே அழைத்து செல்ல எண்ணினார். ஆனால் கார்த்திக் தன்னுடன் அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல விரும்பினான். அதற்குத்தான் மச்சானும் மச்சானும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒருவழியாக வைஷூவிற்கு ஒன்பதாவது மாதம் வளைகாப்பு போட்டு சபர்மதியோடு இருக்கவும் , அதன் பின் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் தன் தந்தை உறவுகளோடு இருக்கவும் ஒருமனதாக எல்லோராலும் முடிவு எடுக்கப்பட.. அப்போதும் அனைவரையும் முறைத்துக்கொண்டே அமர்ந்திருந்தான் தேவா.. பின்னே மூன்று மாதங்கள் எப்படி மனைவியையும் குழந்தையையும் பிரிந்து இருப்பது.
அவனைப் பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்த நந்தன் ” அண்ணா நீங்கள் மூணு மாசத்துக்கு அண்ணியோடு அங்கே ஷிப்ட் ஆகி விடுங்க ” என்று ஐடியா கொடுக்க “தம்பி டா ” என்று அவனை அணைத்துக்கொள்ள , பார்த்து இருந்தவர்கள் பார்வை இவனுங்க திருந்தவே மாட்டானுங்களா என்று..
முதல் நாள் காலை வைஷூவிற்கு வளைகாப்பு செய்து அன்று இரவே கார்த்திக் மிருவிற்கான நிச்சயதார்த்த விழாவும் , மறுநாள் அவர்களுக்கு கல்யாணம் என்றும் முடிவு செய்யப்பட்டது. எல்லாம் தங்கை அதிகமாக அலையக் கூடாது என்று எண்ணத்தில் கார்த்திக்கின் திட்டம் தான்.
அன்று கார்த்திக் கோவமாக பேசியதிலிருந்து முறுக்கிக்கொண்டு திரிந்தவளை ” புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு வந்திருச்சு.. அழுமூஞ்சி உன் அலும்பு தாங்கல டி ” என்றவன் அவள் இடையோடு அணைத்து , அவள் முகத்தை தன் நோக்கி உயர்த்தி, கீழ் உதட்டை இரு விரல்களால் பிடித்தவன் , அவள் மிரண்டு பார்க்க ” இங்க பாரு நான் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தலாம்னு ப்ளானுல இருக்கேன்.. நீ குடும்பம் நடத்தி அப்புறம் கல்யாணம் பண்ணலாம்னு ப்ளானை மாற்றாதே ” என்றவன் அவளின் இதழை தன் இதழால் அழுந்த ஒற்றியெடுத்து விட்டே தான் நகர்ந்தான். பிறகு எங்கே அவள் மறுக்க…
சந்திரன் ஃபேமிலி அண்ட்
ராஜன் ஃபேமிலி வெல்கம்ஸ் யூ என்று போர்ட்க்கு கீழே தேவேஷ்வர ராஜன்.. வைஷாலி தேவி சந்திரன்.. என்ற பெயர் இருக்க அதை பார்த்துக்கொண்டிருந்த தேவாவிற்கு கார்த்திக் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தது.
” மச்சி இந்த ஒரு முறை மட்டும் விட்டுக் கொடு டா.. எங்க வீட்டு பொண்ணுக்கான அங்கீகாரத்தை நாங்க கொடுக்கணும். அதுக்கு இந்த கல்யாணத்துல வைஷாலியை என் தங்கைனு எல்லாருக்கும் காண்பிக்கணும் ” என்றவனை மறுத்துப் பேச முடியாமல் தேவாவும் ஒத்துக் கொண்டான்.
எல்லோரும் சந்தோசமாக இருக்கும் இந்த நேரத்தில் மனவருத்தத்துடன் ஒருவர் இருந்தார் என்றால் அவர் ரூபாவதி தான்.வைஷாலி தன் சின்ன அண்ணனின் மகள் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இப்போது அவர்கள் குடும்பத்தோடு இவர்கள் குடும்பம் ஒன்றோடு ஒன்று சம்மந்தியாகி விட தான் மட்டும் தனித்து இருப்பது போல ஒரு பிரமை அவருக்கு. முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டே இருந்தார். ஆனால் ஒரே சந்தோசம் மகனின் மாற்றம். அதைத்தானே மனோகரும் எதிர்பார்த்தார். அந்த வகையில் தேவா மற்றும் வைஷாலியை அவருக்கு நிரம்பவே பிடித்தது.
முதல் நாள் வைஷாலியின் வளைகாப்பு சொந்தபந்தங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தோடு இனிதே முடிந்தது.
மறுநாள் கார்த்திச் சந்திரன் மிருளாளிணி தேவி திருமண வைபோகம் அமோகமாக நடந்தேற, மிருவின் கழுத்தில் ஏறிய மங்கல நாணில் மூன்றாவது முடிச்சை போட்டாள் வைஷாலி நாத்தனாராக…
வளைகாப்பு முடிந்து பத்து நாட்கள் கழித்து வைஷூ வீட்டு மொட்டை மாடியில் பால் நிலவு ஒளிரும் வேளையில் மெத்தை விரிப்பில் தன் மீது மனைவியை சாய்ந்து இருக்க, அவளை அணைத்தவாறு அமர்ந்திருந்தான் தேவா.
இந்த மூணு வருஷத்திலே என்னை மிஸ் பண்ணலையா நீ? என்று தேவா வருத்தமாக கேட்க.. இல்லையே என்றாள் அவனின் மனையாட்டி சந்தோஷமாக..
அடிப்பாவி என்று அவன் முறைக்க.. அவன் கை பற்றி தன் வயிற்றில் பொதித்தவள், ” நான் உங்களை மறந்தால் தானே.. மிஸ் பண்ண..?’” என்றாள் வைஷூ கண்கள் மின்ன…
கர்வம் சரியும்..
Super sis 💞
Semmaa
Sema